இதுவும் நிகண்டுதான்.
நான் எடுத்துக்கொண்ட பன்னிரண்டாவது நிகண்டு.
நாநார்த்த தீபிகை
திருநெல்வேலி கவிராயர் முத்துசுவாமி பிள்ளையவர்கள் இயற்றியது.
தீபிகை என்றால் விளக்கு.
அதென்ன நாநார்த்த?
’பலவிதமான’ என்று சொல்வதற்குப் பதில் சிலர் ’நானாவிதமான’ என்று சொல்வார்களே, அந்த நானா-வைத்தான் இவர் நாநா என்கிறார்.
பலவிதமான சொற்களுக்குப் பொருள் சொல்லி விளக்குவதால் இது நாநார்த்த தீபிகை.
இது சுமார் 150 ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்டது. இதனைத் தேடியெடுத்து, உரையெழுதி 1936-இல் பதிப்பித்திருக்கிறார் ‘சென்னை சர்வகலாசாலை தமிழாராய்ச்சித்துறைத் தலைவர்’ திரு அனவரதவிநாயகம் பிள்ளை அவர்கள்.
இது மிகப்பெரும்பாலும் வடமொழிச் சொற்களைக் கொண்டது. அன்றைய காலகட்டத்தில் வடசொற்களைக் கலந்து பேசுவது மதிப்புமிக்கதாகக் கருதப்பட்டது.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று தருகிறேன்.
இட்டகந்தம் சுகந்தம் ஏலாவாலுகமும் ஆகும்
இட்டமே துலங்கச்செய்கை மகவினை இச்சை யோகம்
கிட்டம் வேர்வாதியாம் பன்னிருமலம் இருப்புக்கிட்டம்
குட்டமே தொழுநோய் ஆழம் சிறுகுளம் நறுங்கோட்டப்பேர்
ஆயிரக்கணக்கான வடசொற்களைப் பற்றி இவர் கூறினாலும், இரண்டே இரண்டு இடங்களைத் தவிர, வேறு இடங்களில் ஜ, ஸ, ஹ போன்ற கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்திருக்கிறார்.
பட்டு, நொச்சி ஆகியவை ஊர்ப்பெயர்கள் என்று கூறுகிறார். செங்கல்பட்டு, கிளிநொச்சி ஆகியவற்றுக்குக் காரணம் புரிகிறது.
தாட்டியம் என்றால் என்ன தெரியுமா? நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘அவன் தாட்டியமான ஆளு’ என்று என் அத்தை கூறுவார்.
மாட்டல் சொருகுதல் பொருத்தல் மாட்டுதல்
கோட்டி சல்லாபம் சவை கோட்டாலை ஆம்
#தாட்டியம் #அடிக்கத்தக்கது #தைரியம்
வீட்டுமன் தேவவிரதன் உருத்திரன்
என்கிறது ஒரு செய்யுள்.
‘அந்தக் கருகப்பிலையில ஒரு இணுங்கு கொடு’ என்று யாரேனும் காய்கறிக்கடையில் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?
இசித்தல் ஈழ்த்திடல் உரித்தல் இணுங்குதல் சிரித்தல் நாற்பேர்
என்கிறார் இவர்.
மொத்தம் 1102 செய்யுள்களைக் கொண்டது இந்நூல்.
இதற்குத் தொடரடைவு உருவாக்கப்பட்டு
tamilconcordance.in என்ற என் இணையதளத்தில் நிகண்டுகள் என்ற உட்பிரிவில் இது சேர்க்கப்பட்டுள்ளது.
இது என்னுடைய 114-ஆவது நூலுக்கான தொடரடைவு.
இனி அடுத்த தொடரடைவுச் செய்தியுடன் சந்திக்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா