நவம்பர் 26, ஐராவதம் மகாதேவன் அவர்களின் நினைவுநாள்.
நன்றி: தினமணி
-------------------------------------------------------------------
தமிழும் ஐராவதம் மகாதேவனும்!
அறிஞர் ஐராவதம் மகாதேவன் என்றதும் பெரும்பாலும் தொல்லியல், ஆரியர் வருகைக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம், புகளூர்த் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைப் பேசி, மிகக் குறைவாகவே தினமணி பற்றிக் குறிப்பிட்டு விட்டுவிடுகிறார்கள்.
ஆனால், தினமணி ஆசிரியராக அவர் நிகழ்த்தியவை உள்ளபடியே பெரும் சாதனைகள். தமிழ் உரைநடையில் நல்ல தமிழையும் ஒழுங்கையும் அறிமுகப்படுத்தி, அவர்தான் காரணம் என்பதைக்கூட அறியாமலேயே, இன்று அனைவராலும் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் எத்தனையோ புதுமைகளுக்குக் காரணமானவராக வாழ்ந்திருப்பவர் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன்.
எவ்வித ஆர்ப்பாட்டங்களோ, கூச்சலோ இல்லாமல் தினமணியின் வாயிலாகத் தமிழில் மிகச் சிறந்த மாற்றங்களும் மேம்பாடும் ஏற்படக் காரணமாக இருந்தவர் அவர்.
‘தினமணி என்றால் ஏ.என். சிவராமன், ஏஎன்எஸ் என்றால் தினமணி’ என்றிருந்த காலத்தின் முடிவாகத்தான் ஆசிரியப் பொறுப்பேற்றார் ஐராவதம் மகாதேவன். தஸ்தாவேஜுவை ஆவணம் என்றும் சட்டசபையை சட்டப்பேரவை என்றும் எழுதியதற்காகக் கண்டிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலமும் மாறியது.
தினமணியில் ஆசிரியப் பொறுப்பேற்றவுடன் ஐராவதம் மகாதேவன் செய்த முதல் வேலை, பெரியார் சீர்திருத்த எழுத்தை நடைமுறைப்படுத்தியதுதான். தினமணியின் இந்த மாற்றம், அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆசிரியராக ஐராவதம் மகாதேவன் அனுப்பிய, 1987 ஆகஸ்ட் 22 ஆம் தேதியிட்ட, முதல் குறிப்பே பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் பற்றித்தான். இனியும் தும்பிக்கை (அல்லது கொம்பு) போட்ட எழுத்துக்களை எழுதிக் கொண்டிருந்தால் குழந்தைகளோ, இளைஞர்களோ இவற்றைப் படிக்க மாட்டார்கள்; வெறும் கல்வெட்டாய்வாளர்கள் மட்டும்தான் படிக்கக் கூடியதாக இருக்கும், எனவே, உடனடியாகப் பெரியார் சீர்திருத்த எழுத்துக்களுக்குத் தினமணி மாறுகிறது என்று அறிவித்தார்.
அச்சுக்கோப்பு கணினிமயமாகத் தொடங்கிய நிலையில், அடுத்து சில ஆண்டுகளில் தினத்தந்தி மாறியது. ஒவ்வொன்றாகப் பெரியார் எழுத்துகளுக்கு மாறத் தொடங்கின. ஒட்டுமொத்த இதழியல் உலகமும் தயங்கிக்கொண்டிருந்தபோது, மாபெரும் மாற்றத்தை நோக்கித் துணிந்து முதல் அடியை எடுத்துவைத்தவர் ஐராவதம் மகாதேவன்.
அன்று தொடங்கிய திருத்தங்களையும் மாற்றங்களையும் கடைசி வரை தொடர்ந்தார். அவர் செய்த மாற்றங்களைப் பலர் பின்பற்றினர், சிலர் கேலி செய்தனர். இன்று அவருடைய மாற்றங்களும் அவரும் நிலைத்திருக்கின்றனர், மற்றவர்கள் யாரென்றுகூட தெரியவில்லை.
இந்த ‘ஆ’காரத்தை ஒழித்துக் கட்டுங்கள், ஆங்கிலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று எழுதுகிறார்கள் என்றால் தமிழிலும் எதற்காக?” என்ற அவர், தமிழில் கேரளம், கேரளத்தில், ஆந்திரம், ஆந்திரத்தில் என்றெழுதுங்கள் என்றார். நவோதயா பள்ளிகளை நவோதய பள்ளிகள் என்றார். அவருடைய ஆர்வப் பகுதியான தொல்பொருள் துறையைத் தொல்லியல் துறை என்றழைக்கச் சொன்னார். உயர்ந்த பின் மட்டம் வேண்டாம், உயர்நிலை என்று குறிப்பிடுங்கள் என்றார்; உயர்நிலைக் குழுக் கூட்டம்!
வடமொழியில் ‘ஜெ’ என்ற எழுத்தே கிடையாது, ‘ஜ’ மட்டும்தான், அல்லது ‘ஜே’ உண்டு என்று குறிப்பிட்ட அவர், ஜெயேந்திரர் அல்ல ஜயேந்திரர், ஜெயவர்த்தன அல்ல ஜயவர்த்தன என்றார். இதே ஒழுங்கில் ஜெயலலிதாவின் பெயரையும் ஜயலலிதா என்று தினமணியில் குறிப்பிட, ‘நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால், ஜெயலலிதா என்றே வழக்கமாகிவிட்டது, நானும் அவ்வாறுதான் எழுதுகிறேன், குறிப்பிடுகிறேன், அதையே பின்பற்றவும்’ என்று ஜெயலலிதா கேட்டுக்கொள்ளவும், தமிழகத்தில் அவரவர் எழுதும் விதத்திலேயே பெயர்களை எழுதுவதென்ற முடிவுக்கு வந்தார்.
ஒரு மொழியில் ஒரு பெயரை அல்லது ஒரு சொல்லை எவ்வாறு உச்சரிக்கிறார்களோ அதன்படியே தமிழிலும் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, ஹிந்தி போன்றவற்றில் அவரே புலமை பெற்றிருந்ததால் அவரால் எளிதாகச் சொல்லவும் முடிந்தது.
இவ்வாறாகத்தான், காலம்காலமாக அம்பேத்கார் என்றே அறிந்துவந்த பெயரை, உச்சரிப்பின்படி அம்பேத்கர் என்பதே சரி என்று மாற்றிக் குறிப்பிட்டார் ஐராவதம் மகாதேவன் (24.9.1987). ரே என்றொரு பெயரில்லை, ராய் என்பதே சரி, சத்யஜித் ராய், சித்தார்த்த சங்கர் ராய் என்று தெளிவுபடுத்தினார் அவர்.
டில்லி என்பதைக்கூட ஹிந்தியில் உச்சரிப்பதைப் போல தில்லி என்று மாற்றி எழுதவைத்தார். எத்தனையோ வட இந்தியப் பெயர்களை இப்போதும்கூடக் கொஞ்சமும் வெட்கமோ, கூச்சமோ இன்றி நாம் தவறாகவே சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஐராவதம் எப்போதுமே சொல்வார், எந்தவொரு பெயரானாலும் சொல்லானாலும் வேர்ச் சொல்லைக் கண்டறியுங்கள், அதையொட்டித் தமிழில் எழுதுங்கள் என்பார். அவர் இருந்த வரையிலும் புதிதாக அறிமுகமாகும் ஒவ்வொன்றையும் எவ்வாறு எழுத வேண்டும் என உடனுக்குடன் தெரிவித்துவிடுவார்.
திபீந்தர் சிங் என்றெழுதிக் கொண்டிருந்த ராணுவத் தளபதியின் பெயரைப் பொருள்புரிந்து தேவீந்தர் சிங் என்றெழுத வைத்தார். சுராஜ்கண்ட் என்பது சூரஜ்குண்ட், அதாவது சூரியகுண்டம் என்றார்.
இந்த சத்தீஸ்கர் என்ற பெயர் என்னென்ன பாடோ பட்டுக்கொண்டிருந்தது. ஐராவதம்தான் சத்தீஸ்கட் அல்லது சத்தீஸ்கர் என்று குறிப்பிட்டு, இதன் பொருள் முப்பத்தாறு கோட்டைகள் என்றும் விளக்கினார். 'கர்' என்றால் இங்கே கோட்டை.
தமிழில் பதட்டம் என்றொரு சொல்லே இல்லை, பதறுதலிலிருந்து வருவது பதற்றம் என்று தினமணியில் மாற்றிக் காட்டினார். பெரும்பாலோர் மாறவேயில்லை. முதலில் தினத்தந்தி மாறியது, பிறகு ஒவ்வொருவராக பதற்றம் என மாற்றினர்.
தமிழில் மட்டும்தான் ‘ன’கரம் உண்டு, பிற மொழிகளில் இல்லை. எனவே, வடமொழி, வேற்றுமொழிச் சொற்களில் ‘ந’வைத்தான் பயன்படுத்த வேண்டும் (ராஜினாமா வேண்டாம், ராஜிநாமா, வினாயகர் கூடாது, விநாயகர்). தேவைப்பட்டால் சொல்லின் ஈற்றில் ‘ன’வைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பார், ஜனங்கள், சேனை.
எவ்வளவோ மாற்றங்கள் நடந்தாலும் விடாது தொடர்ந்த லோக்சபா, ராஜ்யசபா, பார்லிமென்ட், சபாநாயகர் என்பதை எல்லாம் ஒரே நாளில் ஒழித்துக்கட்டிவிட்டு, மக்களவை, மாநிலங்களவை, பேரவைத் தலைவர், அவைத் தலைவர் என்ற சொற்களை அறிமுகப்படுத்தினார்.
அதிகாரி என்ற உருதுச் சொல்லை முதன்முதலாக ஐராவதம் மகாதேவன்தான் அலுவலர் எனத் தமிழில் எழுதப் பழக்கினார். மாவட்ட வருவாய் அலுவலர், வட்டார வழங்கல் அலுவலர்... பேச்சில் இல்லாவிட்டாலும் எழுத்தில் இன்றைக்குப் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது, அதிகாரிக்குப் பதிலாக அலுவலர் என்ற சொல். மாவட்ட ஆட்சியரும்கூட அப்படிவந்தவர்தாம்.
சஸ்பென்ஷன் என்ற சொல்லுக்குத் தமிழில் இடைநீக்கம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். சிலர் கேலி செய்வதாக அவரிடம் குறிப்பிட்டபோது, அவர்களுக்கு ஏன் அவ்வாறு புத்தி செல்கிறது? என்றவர், அப்படியானால், இனிப் ’பணியிடை நீக்கம்’ என்று மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். ஆனால், இன்று அதுவே தானாக இடைநீக்கமாகி நிலைத்தும்விட்டது.
ஆங்கிலத்தில் பெரும்பான்மை இல்லாத அவைகளை ஹங் பார்லிமென்ட், ஹங் அசெம்பிளி என்பார்கள். அதை அப்படியே தமிழ்ப்படுத்தித் ’தொங்கு நாடாளுமன்றம்’, ’தொங்கு சட்டமன்றம்’ என்று எழுதுவார்கள், கூறுவார்கள். ஆனால், அவர் மட்டும் பொருள் புரியும் வகையில் அனைவரும் அறிந்த புராணக் கதையொன்றின்படி திரிசங்கு மக்களவை, திரிசங்கு சட்டப்பேரவை எனக் குறிப்பிட்டார்.
ஆசிரியராக இருந்த காலத்தில் ஐராவதம் மகாதேவன் எழுதிய தலையங்கங்கள், அவருடைய சொற்களில் ஆசிரிய உரைகள், மிகப் புகழ்பெற்றவை, சமரசம் இல்லாதவை, தொலைநோக்கு கொண்டவை, புரட்சிகரமானவை.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம். அன்றிருந்த சூழ்நிலையில், இந்த வேலைநிறுத்தம் தவறு என்று ஆசிரிய உரையில் துணிந்து எழுதினார்.
தினமணியில் ஐராவதம் மகாதேவன் செய்த மாற்றங்கள் அனைத்தையும் பின்னாளில் மற்ற இதழ்களும் அவர்கள் அறியாமலேயே கடைப்பிடிக்கத் தொடங்கினர்.
அவரைப் பற்றியும் அவருடைய தமிழ்க் கொடையைப் பற்றியும் எழுதுவதற்கு இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன.
இவர் கைத்தறித்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த (1962-67) காலத்தில்தான், மாவட்டத்துக்கு ஒரு நூற்பாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியவரான அவருடைய ஆட்சிப் பணிச் செயல்பாடுகள் அற்புதமானவை.
ஐராவதம் மகாதேவன் செய்த எவையுமே தினமணிக்காக மட்டுமே செய்த மாற்றங்கள் அல்ல, தமிழுக்காகச் செய்த மாற்றங்கள், தமிழின் மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகள்!