கடலோடு! கண்ணா! கடலோடு! அலை - 1

12 views
Skip to first unread message

N. Kannan

unread,
Jun 3, 2026, 1:14:22 AM (7 days ago) Jun 3
to மின்தமிழ்
வணக்கம். கொஞ்ச நாள் முன்பு டாக்டர் சுபாஷிணி என்னிடம் என் அறியல் வாழ்வு பற்றி எடுத்துரைக்குமாறு கூறினார். குறிப்பாக கடல்சார் அனுபவம் பற்றி தமிழ் நூல்கள் அதிகமில்லை, தமிழ் மரபு அறக்கட்டளை போற்றும் திருவாளர் நரசய்யா அவர்கள் தனது கடலோடி எனும் நூலின் மூலம் கடலோடி நரசய்யா என அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டி என் அனுபவங்களை எழுத்தச் சொன்னார். அதுவும் சரிதான், என் தமிழ் முகம்தான் அதிகமாகத் தெரியும், அறிவியல் முகம் தெரியாது எனக்கருதி அவர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஒரு தொடர் முகநூலில் எழுதிவருகிறேன். இதை இங்கும் பகிரலாம் என முனைவர் தேமொழி சொல்வது சரிதான். வெறும் அறிவியல் மட்டும் சொன்னால் எடுக்காது. எனவே என்னளவிலான ஓர் சரிதம் போல் சொல்லத்தலைப்படுகிறேன்.

நான் மின் தமிழில் எழுதி ஆண்டுகள் பலவாயின. நிறைய புதிய முகங்கள். சேதி போய் சேரட்டும்.

கடலோடு! கண்ணா! கடலோடு! அலை - 1

நான் மருதநிலத்துக்காரன். தீராநதியோரம். வயலும் வாழ்வும் என வாழ்ந்தவன். கடல் பார்த்ததில்லை. என்னைவிட மோசம் அந்த தஞ்சாவூர்காரன் சோமு. அவன் மதுரை வந்துதான் மலை பார்த்தான். சுவாமி மலை என்பது மலையே அல்ல. குன்று கூடக் கிடையாது. ஒரு கல்மேடு என்று சொல்லலாம். அவனுக்கு எங்கள் நாகமலை பெரிதாகத் தெரிந்தது. இன்னும் பெரியமலைகள் தமிழகத்தில் உண்டு என்பது அவனுக்குத் தெரியாது! ஆனால் எனக்கோ கடல் எவ்வளவு பெரியது என்று தெரியாது! நான் திருச்செந்தூர் போகும்வரை!

அறுபடை வீடுகளைக் காண வேண்டும் எனும் சுற்றுலாவில் திருச்செந்தூர் வந்தது என் அதிர்ஷ்டம். திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை மிக அருகில். அடிக்கடி போய் வருவது. ஆனால், கடற்கரையில் ஒரு படைவீடு இருப்பது அதிசயமாகப் பட்டது. ஏனெனில், முருகன் குறிஞ்சித் தலைவன். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது பிரசித்தி.

சித்தி கூடத்தான் போனேன். அம்மா வீட்டை விட்டு வெளியே வரமாட்டாள். படி தாண்ட பத்தினி. உண்மையில் அவளுக்கு நான் எப்படி மகனாகப் பிறந்தேன்? அவள் ஆசைகள்தான் என்னை உலகைக் காண அலையவிட்டதோ? தெரியவில்லை. அம்மாவோட நான் போன ஒரே பயணம் திருப்புவனத்திலிருந்து கல்லல் வரை. வைகை ஆத்தை கடந்து பூவந்தி போய்தான் பஸ்சை பிடிக்கணும்! அந்தக்காலத்து பஸ்! முன்னாடி ஒரு கம்பி கொண்டு சுத்தனும். அப்பத்தான் கிளம்பும். இப்ப மாதிரி சாவி கொடுத்து ஸ்டார்ட் செய்ய முடியாது. சுத்தோ சுத்துணு சுத்தியபின் புகையைக் கக்கிவிட்டு ஒரு வழியா ஸ்டார்ட் ஆகும். அம்மா புடவைத் தலைப்பை பிடித்துக் கொண்டு, அவள் மேல் சாய்ந்து கொண்டு பயணிப்பது சுகம். அம்மா பவுடர் எல்லாம் போட மாட்டாள். மஞ்சள், சில மூலிகை கலந்த பொடி. அம்மா வாசனை பிடிக்கும். சித்தி நேர் எதிர். சித்திக்கு ஊர் சுத்தப்பிடிக்கும், பவுடர் போடுவாள்.

திருச்செந்தூர் கடலில் குளிக்க வேண்டும் என்றார்கள். பயமாக இருந்தது. அலை பெரிதாக அடித்தது. கடலுக்குள் இழுத்துக் கொண்டு போய் விடுமோ என்று பயம். நல்ல வெய்யில் வேறு. காலை வைத்தால் சில்லென்றது! இதில் எப்படி மூழ்கிக்குளிக்க? ஆத்துல, குளத்தில குளிக்கிற மாதிரி இல்ல. கால் மண்ணை வேறு வாரி இழுத்துக்கொண்டு போனது. பயமாக இருந்தது. எப்படி குளிப்பது? சித்தி கையைப் பிடித்துக்கொண்டு மூழ்கினேன். ஆழம் போக பயம். சித்தி அதுக்கு மேலே! தலையெல்லாம் மணல்! குளித்து வெளியே வந்தால் ஏதோ மணல் குளியல் செய்தது போல் மணல். ஜட்டிக்குள்ளே மணல் போனால் இம்சை! சிறு துகள் எல்லா இடத்திலும் போய் உட்கார்ந்து இருந்தது. சித்தி புடவையோடு குளித்ததால் அதை உலர்த்த வேண்டியிருந்தது. நான் ஒரு முனையை பிடித்துக் கொள்ள, துச்சாதனன் இல்லாமலே சித்தி துணியை உருவி லாவகமாக உணர்த்தினாள். நல்ல வெய்யில் இருந்ததால் உடனே உலர்ந்து விட்டது!

பள்ளிக்காலத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. கழகம் இதன் பின்னால் இருந்ததால் அது தேர்தலில் வெற்றி கண்டது. அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால், அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. அண்ணா மாண்டார். தமிழகமே ஸ்தம்பித்து போய் நின்றது. ஊர் ஊராக மக்கள் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள சென்னை சென்றனர். திருப்புவனத்திலிருந்து ஒரு பெரிய மாணவர் பட்டாளம் சென்னை சென்றது. திருப்புவனத்திலிருந்து மதுரைக்கு இரயிலில் யாரும் டிக்கெட் எடுப்பதில்லை. மதுரை ஸ்டேஷன் வருவதற்கு முன்பே அவுட்டரில் இறங்கினால் டிக்கெட் செக்கிங் கிடையாது. ஆனால், இப்போது சென்னை வரை போகணுமே? அண்ணன் சேதுராமன் கூட இருக்கும் தைர்யம்! கூட்டம் கூட்டமாக இருக்கின்ற டிரெயினில் எல்லாம் மாணவர்களும், பொது மக்களும். எல்லா டிரெயினையும் சென்னைக்கு விடு என்றார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் பாடு ததிங்கினதோம். எப்படியோ வண்டிகள் சென்னை நோக்கி பயணமாகின. யாரும் டிக்கெட் எடுக்கவில்லை. சென்னையை முதன் முறை பார்க்கிறேன். வித்தியாசமாக இருந்தது. எல்.ஐ.சி கட்டிடம் 14 மாடிகள் கொண்டு பிரம்மாண்டமாக இருந்தது. மவுண்ட் ரோடு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அப்பயணத்தில் நான் இரண்டாவது முறையாகக் கடலைப் பார்த்தேன். மெரினா கடற்கரை. இந்தக்கடல் கொஞ்சம் அமைதியாய் இருந்தது. ஆனால், பெரிதாக இருந்தது. பூமி உருண்டை என்பதை நிரூபிக்க கடலில் கப்பல் வருவதைக் காணச் சொல்வர். நாங்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து உலகம் உருண்டை என்பதை அறிந்தோம். எங்கோ புள்ளியாய் தெரிந்த கப்பல் மெல்ல, மெல்ல உருக்கொண்டு எங்கள் கண்ணில் பட்டது பேரதிசயமாகப் பட்டது!

அடுத்த பல ஆண்டுகளுக்கு கடலாடவில்லை. கல்லூரியில் விலங்கியல் துறை நடத்திய அறிவியல் பயணத்தில் நான் மண்டபம் கேம்ப் சென்றேன். அப்போதுதான் முதன் முறையாக ஒரு சின்ன போட் எடுத்துக் கொண்டு இப்போது மன்னார் வளைகுடா தேசிய உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை நேரடியாகக் காண புறப்பட்டோம். சின்ன சின்னதாக சில படகுகள். எனக்கு நீச்சல் தெரியும் என்றாலும் கடலில் தாவ பயம். நான் கற்ற நிச்சல் ஊர் கமலைக் கிணற்றில் கற்றது. அது எவ்வளவுத்தூரம் உதவும் எனத் தெரியாது (உதவாது என்பது கொரியக் கடலில் பின்னால் நீந்தியபோதுதான் தெரிந்தது). எனவே முயலவில்லை. உப்புத் தண்ணீரில் நீந்துவது எளிது என்று சக மாணவர்கள் சொன்னாலும் தைரியம் வரவில்லை. படகில் படுத்துக் கொண்டே கடல் அழகைக் கண்டேன். கடற்பாசி அழகாக இருந்தது. பலவகையான வர்ண மீன்கள். கையில் ஒரு சின்ன வலை. Specimen bank க்கு தேவைப்படும். ஒரு ஆக்டோபஸ் இருப்பதைக் கண்டு வலை வீசினேன். அகப்பட்டது. குட்டிதான். அப்படியே லாவகமாக எடுத்து கையில் வைத்திருந்த பாட்டிலில் போட்டேன். மூடி எடுத்து திருகும் முன் ப்ளக் என்று ஒரு சத்தம். பாட்டிலில் இருந்த ஆக்டோபஸ் ஒரு ஜெட் அழுத்தம் கொடுத்து வெளியே பாய்ந்துவிட்டது. ஆச்சர்யமாக இருந்தது. ஒரு நல்ல specimen போச்சே எனும் வருத்தம். ஆனால் நாம் பூமியில் தோன்றும் முன்பே தோன்றி வாழும் உயிரினங்கள் நம்மை விட புத்திசாலிகள் என்று உணர்ந்தேன். நட்சத்திர மீன்கள் அசையாமல் கிடந்தன. அள்ளிக் கொண்டோம். பாம்பன் பாலம் வழியாக ரயிலில் போனது நெஞ்சில் பதிந்தது. தனுஷ்கோடி புயலில் அழிந்துவிட்டது. இராமேஸ்வரம் வந்த ஜெமினி கணேசன், சாவித்திரி தம்பதிகள் தப்பிப்பிழைத்தது பழைய கதை!


--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
Reply all
Reply to author
Forward
0 new messages