மின் செய்தி மாலை பிப்ரவரி 18 ----ஏ. சுகுமாரன்
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பிரும்மாண்ட மனித சங்கிலி தொடர் !
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தப்படும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தப்பட்டது. சென்னை தாம்பரத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி நடந்தது. இந்திய கம்ïனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. அவைத்தலைவர் கண்ணப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, பா.ஜ.க. கலை இலக்கிய பிரிவு மாநில பார்வையாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், இலங்கை எம்.பி. சிவாஜி லிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருச்சியில் ம.தி.மு.க பொதுச்செயலா:ளர் வைகோ தலைமையில் மனித சங்கிலி அணிவகுப்பு நடந்தது.
தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை!விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன்
தமிழக பட்ஜெட்டின் முக்கிய பகுதிகள் !
2009-2010-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. ரூ.100 கோடிக்கு புதிய வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* கூட்டுறவு பயிர் கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால் வட்டி ரத்து.
* விவசாயிகளை கொண்ட சுய உதவிக்குழு எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* வெள்ளம் பாதித்த 12 மாவட்டங்களில் நிலவரி ரத்து.
* 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு மானியம்.
* 5,500 கால்நடை முகாம்கள் நடத்தப்படும்.
* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5 ஆயிரம் உயர் கலப்பின மாடுகள்.
* திண்டுக்கல் மாவட்டம் கோத்தயம் கிராமம் நல்ல தங்காள் ஓடையில் ரூ. 7 கோடியில் அணை.
* சென்னை நகரில் வெள்ளப் பெருக்கை தடுக்க ரூ. 1448 கோடியில் திட்டம்.
* 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைபள்ளிகளாகவும், 100 உயர்நிலைபள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப் படும்.
* 2500 நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.50 கோடியில் கம்ப்ïட்டர்.
* 5 ஆயிரம் ஊராட்சி பள்ளிகள் ரூ. 85 கோடியில் சீரமைப்பு.
* பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை, இலவச மூக்கு கண்ணாடி.
* சென்னையில் சர்வதேச தரத்தில் நவீன நூலகம் பின் தங்கிய மாவட்டங்களில் புதிய அரசு கல்லூரி.
* திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய அரசு என்ஜினீயரிங் கல்லூரி.
* நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய 4,500 மருத்துவ முகாம்.
* சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் ரூ. 5 கோடியில் எம்.ஆர்.ஐ. கருவி.
* பொது மருத்துவமனையில் ரூ. 4 கோடியில் `கேத் லேப்'
* மத்திய ஜெயில் உள்ள இடத்தில் ரூ. 70 கோடியில் பொது மருத்துவமனை புற நோயாளி பிரிவு, ரூ. 400 கோடியில் ரத்த வங்கி.
* நீரிழிவு, சிறுநீரக நோயாளிகள் `டயாலிசிஸ்' சிகிச்சை செய்ய மாவட்டந்தோறும் கருவிகள்.
* ஸ்ரீபெரும்புதூர், திருப்பூரில் தொழிலாளர்கள் தங்க தங்குமிடம்.
* சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கு 1 ஏக்கருக்கு மேல் நிலம் கொடுத்தால் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை.
* மேலும் 25 லட்சம் பேருக்கு கலர் டி.வி.
* 1000 கிலோ மீட்டர் சாலைகள் இருவழி பாதையாக மேம்படுத்தப்படும்.
* 194 பெரிய, சிறிய பாலப் பணிகள் முடிக்கப்படும்.
* 12,500 கிலோ மீட்டர் சாலை மேம்படுத்தப்படும்.
* வண்டலூர்-நசரத்பேட்டை-நெமிலிச்சேரி இடையே 30 கிலோ மீட்டர் சாலை.
* புதிதாக 51/2 லட்சம் ஊரக குடியிருப்புகளுக்கு மின்சாரம்.
* 3,500 புதிய பஸ்கள் வாங்கப்படும்.
* காரைக்குடி, சாத்தூர், மன்னார்குடி, பொள்ளாச்சி, கொடைக்கானல், பெரியகுளம், பழனி,
கீழக்கரை, சிவகாசி, மேலூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம்.
* 140 பேரூராட்சிகளில் ரூ. 70 கோடியில் அடிப்படை வசதி.
* சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா.
* 8 ஆயிரம் ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி.
* 30 கூட்டு குடிநீர் திட்டம், 50 நகர குடிநீர் திட்டம்.
* ஊரக பகுதிகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் கான்கிரீட் வீடுகள்.
* நகர்ப்புற பகுதியில் 21 ஆயிரம் வீடுகள்.
* 29 புதிய சமத்துவபுரங்கள்.
* அனைத்து மாவட்டங்களிலும் ஊரக வேலை வாய்ப்பு திட்டம்.
* புன்செய் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு வரி 15 ரூபாய் என இருப்பது ரூ. 2 ஆக குறைக்கப்படும். நன்செய் நில வரி ரூ. 50 என இருப்பது ரூ. 5 ஆக குறைக்கப்படும்.
* 4 லட்சம் பெண்களுக்கு மகப்பேறு உதவி திட்டம்.
* 6 லட்சம் பேருக்கு எரி வாயு அடுப்பு.
* 50 ஆயிரம் புதிய சுய உதவிக்குழு அமைக்கப்படும்.
* அரவாணிகளுக்கு ரூ. 1 கோடியில் தொகுப்பு வீடு.
* கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம்.
* சிறு வணிகர்களுக்கு நல வாரியம்.
* 10 ஆயிரம் சிறுபான்மையினருக்கு ரூ. 30 கோடி கடன்.
28 தமிழ்ச்சான்றோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் அன்பழகன் அறிவித்தார்.
சட்டசபையில், அமைச்சர் அன்பழகன் நேற்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கவியரசு கண்ணதாசன், மு.வரதராசனார்
இந்த ஆண்டு குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா, கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசஞ்செட்டியார், மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கர தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், ராய.சொக்கலிங்கனார், டாக்டர் மு.வரதராசனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலிïர்கேசிகன், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி, சின்ன அண்ணாமலை, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகுசுந்தரம், புலவர் த.கோவேந்தன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, திருக்குறள்மணி அ.க.நவநீதகிருட்டிணன், லட்சுமி, வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஜமதக்னி மற்றும் ஜெ.ஆர்.ரங்கராஜு ஆகிய 28 தமிழ்ச்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு, அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையருக்கு பரிவுத்தொகை வழங்கப்படும்.
வால்பாறை, கல்லணை, ஏற்காடு, திருவானைக்காவல், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிக்கல், வேளாங்கண்ணி மற்றும் நாகூர் ஆகிய சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படும். மேலும் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் சாலைகள் மேம்படுத்துவதற்காக இந்த வரவு-செலவுத்திட்டத்தில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கட்டுமான திட்டங்களுக்கு தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது !
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக, சமூக நல செலவுகளுக்காக இந்த நிதியாண்டில்தான் (2009-10), முதல்முறையாக ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் கூறினார்.
2009-2010-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அது பற்றி அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த ஆண்டில்தான் முதல்முறையாக பொதுநல செலவினங்களுக்கு பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம். பொருளாதார தேக்க நிலை இருந்து வரும் நேரத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக 2009-10 நிதியாண்டில் முதல் முறையாக மூலதனச் செலவுகளுக்காக (கேபிட்டல் எக்ஸ்பென்டிச்சர்), அதாவது, சாலைகள், குடிநீர் வசதி, வீட்டு வசதி, பாலங்கள், மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பல திட்டங்களுக்காக 10 ஆயிரத்து 72 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை! சென்னையில் கன்னட கவிஞர் சர்வஜ்னா சிலை !பட்ஜெட்டில் அறிவிப்பு
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் கன்னட கவிஞர் சர்வஜ்னாவின் சிலையும் விரைவில் நிறுவப்படும் என்று, பட்ஜெட் உரையில் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
சட்டசபையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, அமைச்சர் அன்பழகன் நேற்று தாக்கல் செய்து பேசியதாவது:-
விரைவில் வள்ளுவர் சிலை
சென்னையில் கன்னட கவிஞர் சர்வஜ்னாவின் சிலையை நிறுவ வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் கருணாநிதி ஒப்புதல் அளித்தார். இதையொட்டி, இந்த பெருந்தன்மையை உணர்ந்து பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு ஒத்துழைப்பு தர கர்நாடக முதல்-மந்திரி இசைவளித்து உள்ளார்.
இதையடுத்து, தமிழகத்தில் வாழும் கன்னடர்களும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களும் நீண்டகாலமாக கண்டுவரும் கனவு நிறைவேறிடும் வண்ணம், பெங்களூருவில் அய்யன் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் கவிஞர் சர்வஜ்னாவின் சிலையும் விரைவில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்லுறவு
மாநிலத்துக்கு மாநிலம் இதுபோன்று நல்லுறவு செழித்தோங்கி வளர வேண்டம் என்பதே இந்த அரசின் விருப்பமும் நோக்கமும் ஆகும்.
புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஏக்கங்கொண்ட கண்ட கனவை நனவாக்க நாளும் உழைத்துவரும் இந்த அரசு, நாடும் வீடும் நலம் பெறவும், இனமும் மொழியும் ஏற்றம் பெறவும், மதச்சார்பின்மை போற்றி, மத நல்லிணக்கம் நிலை பெறவும், அண்ணாவின் அரிய எண்ணமும், நமது கலைஞரின் சிறப்பான செயல்பாடுகளும் நிறைவேறவும், தமிழக மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பார்கள் என்ற நல்ல நம்பிக்கையோடு இந்த அரசு, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் துணையுடன் அளப்பரிய பணிகளை ஆற்றி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.
ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் ரூ.30 ஆயிரம் கடன் ! எப்போ திருப்பித்தர இருக்கீங்க ?
இந்தியா கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த பொது கடன் ரூ.34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடியாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய மக்கள் தொகை 115 கோடியே 40 லட்சம் ஆகும். இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதவாக்கில், ஒவ்வொரு இந்திய குடிமகனின் சராசரி கடன் ரூ.30 ஆயிரம் ஆக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய புள்ளியியல் நிறுவன கணக்குப்படி, ஒரு இந்தியனின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.38 ஆயிரம் மட்டுமே. எனவே, ஒவ்வொரு இந்தியனுக்கும் அவனது 10 மாத சம்பளத்தொகை, கடனாக உள்ளது.
இலங்கை ராணுவம் தாக்குதலை நிறுத்தினால், உடனே விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்யத் தயார் !
இலங்கை ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக அவர்களது ஆதரவு கட்சி தெரிவித்து உள்ளது.
இலங்கையில் முல்லைத் தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்ச கட்டப் போர் நடந்து வருகிறது. முல்லைத் தீவு மாவட்டத்தில் எஞ்சி உள்ள பகுதிகளையும் கைப்பற்றி விட்டால் விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்து விடலாம் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறது. ஆனால் ராணுவத்தின் கனவை தகர்த்து விடும் முயற்சியில் விடுதலைப் புலிகள் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு போரை நிறுத்த வேண்டும், அமைதி பேச்சு நடத்த வேண்டும் என்று ஐ.நா.சபை உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை வலியுறுத்தி வருகின்றன. போரை நிறுத்தினால் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று விடுதலைப் புலிகளும் அறிவித்தனர். ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்தால்தான் போரை நிறுத்த முடியும் என்று அதிபர் மகிந்தா ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இந்த நிலையில், ராணுவம் தாக்குதலை நிறுத்தினால், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்யத் தயார் என்று விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணி தெரிவித்து உள்ளது. இது பற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவரான நல்லதம்பி ஸ்ரீகாந்தா நிருபர்களிடம் கூறியதாவது:-
``அரசாங்கம் எங்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் போர் நிறுத்தம் செய்து, பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று விடுதலைப் புலிகள் எங்களிடம் தெரிவித்து உள்ளனர். ஆகவே வன்னிப் பகுதியில் உள்ள ஏராளமான அப்பாவி தமிழ் மக்களின் உயிர் காப்பாற்றப்பட, அவர்கள் மேன்மையடைய அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்து, பேச்சு வார்த்தைக்கு முன்வருமாறு எங்கள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ் எம்.பி. மறுப்பு
இதற்கிடையே, வன்னிப் பகுதியில் உள்ள அப்பாவித் தமிழர்கள், போர் முனையில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு வருவதை விடுதலைப் புலிகள் தடுக்கிறார்கள் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டை தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் பாராளுமன்ற தலைவர் வி.சம்பந்தன் எம்.பி. மறுத்து உள்ளார்.
அவர் கூறுகையில், ``விடுதலைப் புலிகள் வசம் உள்ள வன்னிப் பகுதியில் இருந்து அப்பாவி பொது மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுக்கிறார்கள் என்று அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வன்னிப் பகுதியிலிருந்து வெளியேறி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு வந்துள்ளனர். மக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுக்கிறார்கள் என்றால் எப்படி இவ்வளவுபேர் வெளியேறி வந்து இருக்க முடியும்'' என்று கேட்டார்.
அமெரிக்க மாகாண சபையில் வேத மந்திரம் !
அமெரிக்காவின் கொலராடோ மாகாண பிரதிநிதிகள் சபையின் கூட்டம் டென்வர் நகரில் இன்று(புதன்கிழமை) பண்டைய சமஸ்கிருத வேத மந்திர பிரார்த்தனையுடன் தொடங்கப்படுகிறது. சமஸ்கிருத மந்திரங்களை இந்து ஆன்மிக தலைவரான ராஜன்ஜெட் ஓதுகிறார். பின்னர் இதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் அவர் வாசிப்பார்.
இதுகுறித்து ராஜன்ஜெட் கூறுகையில், `ஓம் என்று தொடங்கி போலியில் இருந்து நிஜத்துக்கு வருவோம், இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வருவோம், இறப்பில் இருந்து மரணமற்ற வாழ்க்கைக்கு வருவோம் என்னும் பொருள் கொண்ட சமஸ்கிருத வேத மந்திரம் ஓதப்படும். இறுதியில் ஓம் என்று முடிக்கப்படும்' என்று தெரிவித்தார்.
அமெரிக்க மாகாண சபைகள் சிலவற்றில் இந்து சமய மந்திரங்கள் ஓதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கச்சா எண்ணெய் விலை 37 டாலருக்கு கீழ் சரிவு!
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிïயார்க் எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 76 சென்ட் குறைந்து 36.75 டாலராக சரிவடைந்து காணப்பட்டது.
அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பெட் ரோலியப் பொருள்களுக்கான தேவைப்பாடு குறைந்து போயுள்ளது. அமெரிக்காவில் பல்லா யிரக்கணக்கானோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பெட்ரோ லியப் பொருள்கள் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் கையிருப்பும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
சென்ற ஆண்டு ஜுலை மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 147.27 டாலராக மிகவும் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததை தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தன. இந்தநிலையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 30 டாலருக்கும் கீழ் குறையும் நிலையில், மேலும் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதாக எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அறிவித்துள்ளன.
மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தால் ஒரே நாளில் முதலீட்டாளர்
நஷ்டம் ரூ.1 லட்சம் கோடி !
சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் உலக நாடுகளின் பங்குச் சந்தையை பின்தொடர்ந்து நம்நாட்டின் பங்குச் சந்தைகள் தொடர் வீழ்ச்சியைக் கண்டு வந்தன.
எனினும், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு பங்குச் சந்தைக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதனால், கடந்த 2 வாரங்களாக பங்குச் சந்தை வர்த்தகத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டு வந்தது.
ஆனால், எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கும் வகையில் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் இடம்பெறவில்லை. இதையடுத்து, பட்ஜெட் தாக்கலான 16ம் தேதியன்று மட்டும் மும்பை பங்குச் சந்தையில் 329 புள்ளிகள் சரிந்தன.
அதன்மூலம் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. சென்செக்ஸ் குறியீட்டைச் சேர்ந்த 30 நிறுவனங்களுக்கு மட்டும் மொத்த பங்கு மதிப்பில் ரூ.48,400 கோடி சரிவு ஏற்பட்டது.
திங்கட்கிழமை ஒருநாளில் சென்செக்ஸ் வீழ்ச்சியால் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.30.71 லட்சம் கோடியில் இருந்து ரூ.29.79 லட்சம் கோடியாகக் குறைந்து விட்டது.
இதற்கிடையே, பங்குச் சந்தை மீண்டும் நிமிர ஒரே எதிர்பார்ப்பாக இருந்த மத்திய இடைக்கால பட்ஜெட்டும் ஏமாற்றம் அளித்த நிலையில், இனி தொடர் சரிவை சந்திக்கக்கூடும் என்று பங்கு வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்
வீரட்டானஞ் சேர்துமே ! திருக்கோவலூர்வீரட்டம்
கோவலூர் என்பது ஊரின் பெயராகவும், வீரட்டம் என்பது கோயிலின் பெயராகவும் அமைந்துள்ளன. வீரட்டம் என்றால் வீரத்தைக் காட்டிய இடம். இச்செய்தி ``கோவலூர்தனுள் - வீரட்டானஞ் சேர்துமே`` என்னும் இக்கோயிலுக்குரிய திருஞான சம்பந்தர் தேவாரப் பகுதியால் அறியக்கிடக்கின்றது. இத்தகைய தலங்கள் எட்டாகும். அவைகளுள் இது ஒன்று. இது அந்தகாசுரனைக் காய்ந்த இடம். இச்செய்தியை,
அவுணரிற் கள்வ னான அந்தகற் காய்ந்து மூன்று
புவனமும் கவலை தீர்த்த புண்ணியன் புரமீ தாகும்
என்னும் பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணத்தின் அர்ச்சனைப் படலமும் வலியுறுத்தும்.
இறைவரது திருப்பெயர்:- வீரட்டநாதர். இறைவியாரது திருப்பெயர்:- சிவானந்தவல்லி.
தீர்த்தம் பெண்ணையாறு. இது பெண்ணையாற்றின் தென் கரையில் இருக்கிறது. (திருக்கோவலூர் என்னும் தொடர்வண்டி நிலையத்தில் வடக்கே 1/2 கி.மீ. தூரத்திலுள்ள திருஅறையணி நல்லூரை அடைந்து, அங்கிருந்து பெண்ணையாற்றைக் கடந்து தென் கரையிலுள்ள இத்தலத்தை அடையலாம்) இது நடுநாட்டுத் தலங்கள் இருபத்திரண்டில் பதினொன்றாவது ஆகும். பண்ணுருட்டியிலிருந் தும்,
திருவண்ணாமலையிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிலையத்துக் வடபால் கோயில் உள்ளது. மலாடர் கோமா னாகிய மெய்ப்பொருள் நாயனார், தம்மோடு பலமுறை போர்புரிந்து, தோற்ற முத்தநாதனால், வஞ்சனையால் உயிர்க்கு இறுதி நேர்ந்த இடத்தும் ``மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள்`` எனும் உறுதியால், அவனைக் காத்துக் கூத்தப்பெருமான் திருவடி நீழல் அடைந்த பதி இது வாகும். இத் திருக்கோயிலுக்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகம் ஒன்று ஆக இரு பதிகங்கள் இருக்கின்றன.
கல்வெட்டு:
இக்கோயிலில் 79 கல்வெட்டுக்களின் படிகள் எடுக்கப்பட் டிருக்கின்றன. அவைகள் சோழர்களது காலத்தவை. அவற்றுள் 52 கல்வெட்டுக்கள் இவை:- பரகேசரி 1, இராஜகேசரி1, இராஜராஜன் 10, இராஜேந்திரன் 8, இராஜாதிராசன் 1, ராஜேந்திரதேவன் 1, வீரராஜேந்திரன் 1, அதிராஜேந்திரன் 1, குலோத்துங்கன் 6, விக்கிரமன் 1, குலோத் துங்கன்-II 1, இராஜாதிராஜன் 2, குலோத்துங்கன்-III 3, இராஜராஜன்-III 3, நிச்சயிக்கப்படாதது குலோத்துங்கன் 4, இவைகள் தவிர பல்லவர்கள் 3, இராஷ்டிரகூடன், கன்னரதேவன் 3, பராந்தகன் 2.
இக்கல்வெட்டுக்களால் இக்கோயிலானது சோழர்களது முழுக்காலத்திலும் நன்கு புகழப்பெற்றிருந்தது என அறிகிறோம். இக்கல்வெட்டுக்களை வரிசைப்படுத்தி ஆராய்ந்தால் ஒரு சிறந்த சரிதப் பகுதியே கிடைக்கக்கூடும். இவ்வூரைச் சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடான ஜநநாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோவலூர் என்று கூறியிருக்கிறது. சுவாமி திருவீரட்டான முடையார் தேவர் என்றே கண்டிருக்கிறது. விளக்குத் தானங்கள் நிரம்பச் செய்யப்பட்டுள்ளன. அதற்காகவும், வழிபாட்டிற்காகவும் நிலங்கள் கொடுக்கப்பட்டன. இராஜராஜன் காலத்துப் பெரிய கல்வெட்டு ஒன்று, நீண்ட அகவற்பாவால் எழுதப்பட்டு இறுதியில் இரண்டு வெண்பாக்களும் ஒரு விருத்தமும் கூறி முடிக்கப்பட்டுள்ளது. அதில் பண்டைய வழக்கங்கள் பல கூறப்பட்டுள்ளன.
இக்கோயிலில் சோழமன்னர்களில் மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன், முதலாம் இராஜராஜன், பரகேசரிவர்மனாகிய உடையார் வீரராஜேந்திரதேவன், பரகேசரிவர்மனாகிய உடையார் அதிராஜேந்திரதேவன், ராஜகேசரிவர்மனாகிய உடையார் குலோத்துங்கசோழதேவன், இராஜகேசரிவர்மனாகிய திருபுவனச் சக்கரவர்த்தி இராசாதிராசதேவன் இவர்களின் காலங்களிலும், பாண்டியர்களில் மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர் இவர்களின் காலங்களிலும், கங்கபல்லவர்களில் விஜய நிருபதுங்கவிக்கிரமன், விஜயநந்தி விக்கிரமநந்திவர்மன் காலங் களிலும், ராஷ்டிரகூட வம்சத்துக் கன்னரதேவன் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
இத்திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலைக் கட்டியவர் மகதைப்பெருமாளின் மந்திரியாவர். அது குலோத்துங்க சோழரின் இருபதாம் ஆண்டில் கட்டப்பெற்றது. இக் கோயிலில் உள்ள மடைப்பள்ளி விக்கிரமசோழசேதிராயரின் மனைவியாரால் திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழனின் நான்காம் ஆண்டில் கட்டப் பெற்றதாகும்.
இக்கோயிலில் நுந்தாவிளக்குக்களுக்கு அளிக்கப்பெற்ற நிவந்தங்கள்தான் மிகுதியாகும். ஒரு விளக்கினுக்கு முப்பத்திரண்டு பசுக்களும், ஒரு எருதும்: நான்கு விளக்கினுக்கு நானூற்றெண்பது ஆடுகளும்: இருபத்துநான்கு விளக்குக்களுக்கு இரண்டாயிரத்து முன்னூற்று நான்கு ஆடுகளும் இவைபோன்று பலவாகக் கொடுக்கப் பெற்றுள்ளன. பரகேசரிவர்மனாகிய இராசேந்திரசோழதேவர் கல்வெட்டு இக்கோயிலுக்குரிய அணிகலன்களைக் குறிப்பிடுகின்றது.
இத்திருக்கோயில் கல்வெட்டினால் முதலாம் இராச ராசனுடைய மனைவியராகிய ஒலோகமாதேவியாரின்தாயாரின் பெயர் அமிர்தவல்லி என்று அறியக்கிடக்கின்றது. பரகேசரிவர்மனின் இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டு செம்பியன்மிலாடுடையாரைப் பற்றியும், மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மரின் இருபத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட்டு மிலாடுடையார் மகளைப்பற்றியும் விக்கிரம சோழன் கல்வெட்டு கீழையூர்மலையமான் விக்கிரமசோழசேதி ராயனைப் பற்றியும் குறிப்பிடுகின்றது. (See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902, No. 230-306, pages 15, 16, 17 and 18.)
நன்றி தேவாரம் . org
செய்திகள் தினமணி, தினத்தந்தி ,தினகரன் போன்ற செய்தி இதழ்களில் இருந்து
திரட்ட படுகின்றன .தலைப்புகள் நடை முதலியன மட்டும் மாற்றப்பட்டுள்ளன
அவைகளுக்கு நன்றி )
--
A.Sugumaran ,
AMIRTHAM INTL .....Source globally......
PONDICHERRY INDIA
MOBILE 09345419948