வழுந்தூர் கவி வேந்தனும், வெண்பா புகழேந்தியும்!

2 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Nov 8, 2009, 2:48:46 AM11/8/09
to Min Thamizh
கவிஞர்களின் கற்பனைக் குதிரைகளுக்கு கட்டுகளே இல்லை. நாலு கால் நிஜக் குதிரையின் மீதேறி பயணிப்போரின் நிலைமை சில நேரங்களில் பரிதாபமாகிவிடும். கவிஞர்களின் கற்பனைக் குதிரைகளின் மீதேறி பயணிப்போருக்கோ எப்போதும் இன்பம்தான்.   

உள்ளதை உள்ளபடியே கூறினால் அது வெற்றுரை.

அது கவிஞர்களின் வேலை இல்லை.

தங்கத்தைக் கம்பிபோலாக்கி அதை அப்படியே அணிந்து கொண்டால் பார்ப்போரைக் கவராது. மாறாக, அதை வளைத்தும், நவரத்தினங்களைப் பதித்தும், கோர்த்தும் அழகிய ஆரமாக்கி அணிந்தால் எத்தனை அழகு!  பொதுவாகத் தாங்கள் பார்த்த இயற்கை நிகழ்வுகளைக் கூறச் சொன்னால் அனைவரும் உள்ளது உள்ளபடி உரைப்பர். கவிஞர்களோ தங்கள் மன உணர்வுகளுக்கு ஏற்ப, கற்பனைத் திறனையும், குறிப்புகளையும் கலந்து, நயம்படச் சொல்லுவர். 

இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளில் சிறந்த உணர்வுகளைக் கற்பிக்கும் முறை கவிஞர்களிடம் உண்டு. கவிஞர்களிடத்திலேயே அத்தகைய திறமைகள் உண்டென்றால், கவிச் சக்கரவர்த்தியிடம் கேட்கவும் வேண்டுமா? 

கம்ப ராமாயணத்தில், அயோத்தியா காண்டம், கைகேயி சூழ்வினைப் படலத்தில் ஒரு காட்சி.  கூனியின் கூற்றுக்குக் காதுகளைக் கொடுத்த கைகேயி, அவளது சூழ்ச்சிக்கு இரையாகிவிட்டாள். விளைவு, நாடாள வேண்டிய இராமன் காட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை. அரியணையில் வீற்றிருந்து ஆளுவதை விட்டு, ஆரண்யம் சென்று வாட வேண்டியதையும் கலக்கமின்றி ஏற்றுக் கொள்கிறான் கமலப்பூ முகத்தான். 

ஆனால், வரங்களே சாபங்களாகிவிட்டதால், வேந்தன் தசரதனோ கைகேயியின் வற்புறுத்தலையும், கொடுமையையும் தாள முடியாமல் தரை மீது மயங்கி விழுகிறான். 

நடுநிசிப் பொழுதில் மன்னன் மாளிகையில் நிகழ்ந்த கொடுமையான மாற்றங்களை அறியாத நகரத்து மாந்தர், "அதிகாலைப் பொழுது ஆனந்தப் பொழுதாக இருக்கும்" என எண்ணி நிம்மதியாய் நித்திரை கொள்கின்றனர். 

அயோத்தி நகரத்துக் கோழிகளோ, கைகள் போன்ற தங்கள் சிறகுகளைப் படபடவென வயிற்றில் அடித்துக் கொள்கின்றனவாம். ஏன்? 

http://www.dinamani.com/Images/article/2009/11/7/8vazhuthur.jpg

கைகேயியின் கொடுமைகளை அறிந்த அக்கோழிகள் மனம் கலங்கி, ஊரார் எல்லோரும் இப்படி உண்மையை உணராமல் உறங்குகின்றனரே என்று ஏங்கி, துன்பம் தாளாமல் சிறகுகளால் தங்கள் வயிற்றில் அடித்துக் கொள்கின்றனவாம். இது முறையோ என்றபடி "குய்யோ, முறையோ" எனக் கூறி ஊராரை அழைக்கின்றனவாம். 

நாட்டை ஆளும் சக்கரவர்த்தி மயங்கி விழுந்தார். பாட்டை ஆளும் கவிச் சக்கரவர்த்தியோ கோழிகளின் கூவலுக்குப் புதுப்பொருள் கற்பித்து நம்மை மயங்கச் செய்கிறார்.

அதை இப்படிச் சொல்கிறார்.

"... ....வண்டு தங்கிய தொங்கன் மார்பன்
 மயங்கி விம்மிய வாறெல்லாம்
 கண்டு நெஞ்சு கலங்கி யஞ்சிறை
 யான காமர் துணைக்கரம்கொண்டு
 தம்வயி றெற்றி எற்றி
 விளிப்ப போன்றன கோழியே..." (பா - 51)
 

பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலத்தில் ஒரு காட்சி.  

நகரத்து வீதிகள் எங்கும் குறுக்கும், நெடுக்குமாக அழகுமிக்க கொடிகள் கட்டப்பட்டுள்ளன. அவை தங்கள் கைகளை ஆட்டி செந்தாமரைக் கண்ணனாம் இராமனை "வருக, விரைந்து வருக" என அழைப்பது போல இருக்கிறதாம் கம்பருக்கு.

"... ...செழுமணி கொடிகள் என்னும்
 கைகளை நீட்டி, அந்த
 கடிநகர் கமலச் செங்கண்
 ஐயனை ஒல்லைவா என்று
 அழைப்பது போன்ற தம்மா..." (பா - 1)


என்கிறார். 

நள்ளிரவில் கோழிகள் சிறகுகளைப் படபடவென அடித்தபடி கூவுவதும், கொடிகள் காற்றில் ஆடுவதும் இயற்கை. அவற்றில் தன் கருத்தை நயம்பட ஏற்றி உரைக்கும் கம்பரின் திறனுக்கு இவை ஒரு குடம் அமுதத்துக்கு சான்றுகளாய்த் தித்திக்கும் இரு துளிகள். 

நாடறிந்த கதை நளன் கதை.

அப்பழைமை வாய்ந்த கதையைத் தமிழில் "நளவெண்பா" எனப் பாடி, நிலைத்த புகழ்பெற்றார் புகழேந்திப் புலவர். 

நம்பி வந்த நங்கையை நடுநிசியில் கானகத்தில் கைவிட்டு நழுவுகிறான் நளன். தனியனாய்ப் பொறி கலங்கி, நெறி மயங்க, கண்போன போக்கில் கால்கள் போகின்றன.  காடுகளைக் கடந்து ஒரு நாள் கடற்கரை வழியே நடந்து செல்கிறான். மணல்வெளியில் திரியும் நண்டுகள் மனிதர்களைக் கண்டதும் வளைகளுக்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றன. இது இயற்கை தான். இங்கும், நளனைக் கண்டதும் நண்டுகள் தங்கள் இயல்பைக் கடைப்பிடிக்கின்றன.  தன்னை மட்டுந்தான் கண்டு நண்டுகள் இவ்வாறு ஓடி ஒளிந்து கொள்கின்றன எனக் கருதுகிறான் நளன். அதற்கு ஒரு புதுக் காரணத்தையும் கண்டுபிடிக்கிறான். 

காதலால் வளைத்த வளைகரத்தாளை வனத்திலே கைவிட்டுவிட்டு வரும் இந்த பாதகனைப் பார்க்கக் கூடாது என்று தான் நண்டுகள் இவ்வாறு செய்கின்றனவோ எனக் கருதுகிறானாம் நளன். 

அது மட்டுமா! மனைவியைப் பிரிந்த அம்மன்னன், அலைகள் வந்து கரை மோதி விளையாடும் கடலின் அழகை, தன்னந்தனியனாய் நின்று காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை நினைத்து மனம் புழுங்குகிறான். ஓயாத அலைகளைப் போல தன் இதயக் கடலிலும் துன்ப அலைகள் ஓயவில்லையே என எண்ணுகிறான்.

".... ... தீவாய்
 அரவகற்றும் என்போல ஆர்கடலே மாதை
 இரவகற்றி வந்தாய்கொல் இன்று" (அயோத்தி வாசம், பா - 356)
 

என, கடலைப் பார்த்து, "கருங்கடலே, என்னைப்போல நீயும் உன் காதலியை நள்ளிரவில் பிரிந்தாயோ?" என்கிறான் நளன். 

ஓடி ஒளிவது நண்டுகளின் இயல்பு; ஓயாத அலைகள் கடலின் இயல்பு.

இங்கு நளனின் மன ஓட்டத்தை அவற்றின் மேல் புகுத்திப் பாடுகிறார் புகழேந்தி.

அவர்தம் கற்பனை வளத்தையும் என்ன சொல்லிப் பாராட்டுவது? 

"வெண்பாவிற் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன்" என தமிழ்கூறு நல்லுலகம் மதிப்புரை நவில்வது எத்தனை உண்மை!

மா.ஆறுமுககண்ணன்

நன்றி:- தினமணி

srirangammohanarangan v

unread,
Nov 8, 2009, 3:00:03 AM11/8/09
to mint...@googlegroups.com
திரு கண்ணன் நடராஜன்,    அழகான    ஒரு   கட்டுரையை  எடுத்துப்  போட்டிருக்கிறீர்கள்.   நன்றி.

தாரகை

unread,
Nov 8, 2009, 4:10:10 AM11/8/09
to மின்தமிழ்
அரங்கனாரின் ஊக்கமே, இவ்வித தமிழ்மணிக் கட்டுரை ஆக்கங்களை மின்தமிழ்க்
கோட்டத்திற்கு மீள் பதிவுச் செய்தல் - அடியேனுக்கு ஏற்பட்ட தாக்கம்.

On 11월8일, 오후6시00분, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

Tthamizth Tthenee

unread,
Nov 8, 2009, 10:36:51 AM11/8/09
to mint...@googlegroups.com
திரு கண்ணன் நடராஜன் அவர்களே  மிக அருமையான கட்டுரை
 
மிக்க மகிழ்ச்சி
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
8-11-09 அன்று, தாரகை <thar...@gmail.com> எழுதினார்:
Reply all
Reply to author
Forward
0 new messages