chithan
unread,Oct 9, 2009, 6:27:03 AM10/9/09Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
இலக்கிய விசாரம் *எங்கே பக்திக் கவிதை?*
*திருப்பூர் கிருஷ்ணன்.* *இலக்கியம் வேறு. வாழ்க்கை வேறு. வாழ்க்கையில்
ஒன்று வந்தால் இன்னொன்று போய்விடுகிறது. இலக்கியத்தில் அப்படிப் போகாது.
போகவேண்டிய தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் போகக் கூடாது.
அம்மிக்கல்லுக்குப் பதிலாக வாழ்க்கையில் மிக்சி வந்தது. அம்மிக்கல்லும்
போயிற்று. அம்மி கொத்தும் தொழிலாளிக்கு வேலையும் போயிற்று. வாஷிங்
மிஷின் வந்தாயிற்று. வீட்டுப் பணி செய்யும் பல வேலைக்காரிகள் தங்கள்
ஊதியத்தில் வேட்டு வைத்த வாஷிங் மிஷினை இன்றளவும் சக்களத்தியைப்
பார்ப்பது போன்ற கடுப்புடன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
துவைக்கிற கல்லை இனி மியூசியத்தில் தான் காணமுடியும். கிரைண்டர்
வந்தும் கூட ஏதோ ஆட்டுக்கல் தப்பித்தது என்றால் கிரைண்டருக்குள்ளேயே
சாமர்த்தியமாக உட்கார்ந்துகொள்ளும் நாசூக்கு தெரிந்ததால் அது பிழைத்தது.
(ஆட்டுக்கல்லில் குழவி சுற்றும். கிரைண்டரிலோ ஆட்டுக்கல்லே சுற்றுகிறது!
குழவி தன் பெயருக்கேற்ப சமர்த்துக் குழந்தை மாதிரி தேமே என்றிருக்கிறது.
காலம் தலைகீழாக மாறிக்கொண்டு தான் வருகிறது!) ஆனால் வாழ்க்கை போல் அல்ல
இலக்கியம். இலக்கியத்தில் வடிவங்கள் மாறுகிறபோது ஒரு புதுவடிவம் வந்தால்
ஒரு பழைய வடிவம் போகவேண்டும் என்பதில்லை. நவீன விஷயங்களைப் பழைய
வடிவத்திலும் கூடச் சொல்ல முடியுமே? ஹோட்டல் பில் பற்றி, எடை பார்க்கும்
மிஷின் பற்றியெல்லாம் தமிழில் அழகிய மரபுக் கவிதைகள் வந்திருக்கின்றன.
(இந்த மரபுக் கவிதைகள் கணையாழியில் பிரசுரமாகியிருக்கின்றன.) நவீன
விஷயங்கள் பலவற்றை மரபுக் கவிதையில் படைத்துக் கொண்டிருந்தவர்களில்
முக்கியமானவர் கவிஞர் சுரதா. திருத்தக்க தேவர் காலத்தில் சீவக
சிந்தாமணி மூலம் விருத்தப்பா வந்ததென்றால் ஆசிரியப்பா அதற்காக அடியோடு
மறைந்துவிடவில்லை. கடற்கரைக் கவியரங்கம் நடத்தும் கவிஞர் பொன்னடியான்
உள்பட எத்தனையோ கவிஞர்கள் அழகிய ஆசிரியப் பாக்களை இன்றும் கூட
எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். புதுக்கவிதையும் ஹைக்கூவும் வந்தால்
வெண்பா விடைபெற்றுக் கொண்டுவிட வேண்டுமா என்ன? வெண்பா அதுபாட்டுக்குத்
தன்னாட்சி அந்தஸ்து பெற்றுத் தனிப் பல்கலைக் கழகம் நடத்திக்
கொண்டிருக்கிறது! தமிழகத்தில் மிகச் சிறப்பாக வெண்பா எழுதும்
புகழேந்தியின் வாரிசுகள் இன்றும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
இதையெல்லாம் கட்டியம் கூறித் தொடங்குவதன் காரணம் என்னவென்றால் நம்முடைய
ஆழ்வார்கள் நாயன்மார்கள் வழிவந்த பக்திசார்ந்த கவிதை மரபு என்ன ஆயிற்று
என்ற கேள்வியை எழுப்பத்தான். வான்கலந்த மாணிக்கவாசகரின் பக்திப் பாடல்கள்
ஊன்கலந்து உயிர்கலந்து இனிப்பதாக வியந்து பாராட்டிய வள்ளலார், பக்தி
இலக்கியத்தின் செழுமைக்குச் செய்த பங்களிப்பு மகத்தானது. ஆனால் அவர்,
பாரதியார் போன்றோரெல்லாம் அந்த மரபின் இறுதி விழுதுகளா? பக்திக் கவிதை
மரபில் உலகத் தரம் வாய்ந்த பக்திக் கவிதைகளை எழுதிய வள்ளலாரின் வாரிசுகள்
இன்று எத்தனைபேர் இருக்கிறார்கள்? நமக்கு உடன்பாடோ இல்லையோ, இன்றும்
பக்தி உணர்வு இருந்துகொண்டு தான் இருக்கிறது என்பதை சமுதாயத்தில்
பரவலாகப் பார்க்கிறோம். அப்படியானால் பக்திசார்ந்த கவிதை இலக்கியமும் வளர
வேண்டுமே? சமூகத்தின் பிரதிபலிப்புத் தானே இலக்கியம்? ஆனால் அப்படி
அந்தத் துறை அதிகம் வளர்ந்ததாகத் தெரியவில்லை. செய்யுளாக
இல்லாவிட்டாலும் பாடலாக அது கொஞ்சம் பரிணமித்திருக்கிறது. `புல்லாங்குழல்
கொடுத்த மூங்கில்களே, சின்னஞ்சிறு பெண்போலே` போன்ற பாடல்கள்
எண்ணிக்கையில் குறைவானாலும் உயர்ந்த பக்தி உணர்வை வெளிப்படுத்தும் இன்றைய
பாடல்களாய்த் திகழ்கின்றன. `இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று
சொல்லுவதில்லை` என்ற நாகூர் ஹனீபாவின் உன்னதமான பக்திப் பாடலை
ரசிக்காதவர்கள் யார் இருக்கமுடியும்? உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் பல அரிய
பக்திக் கவிதைகளைப் படைத்தார். அவர் சில ஆண்டுகள் முன்பு
காலமாகிவிட்டார். கரந்தை ஜி.தாமோதரன் என்கிற ஓர் அன்பர் காஞ்சீபுரத்தில்
இருந்துகொண்டு அமைதியாகப் பல உயர்தர பக்திப் பாடல்களை எழுதித் தாமே தம்
கணீரென்ற குரலில் பாடியும் வருகிறார். பக்திக் கவிதை மரபில் ஓர் ஆபத்து
இருக்கிறது. கவிதையாற்றல் சிறிதும் இல்லாதவர்கள் பலர் கூட, ஆர்வக் கோளாறு
காரணமாக பக்திக் கவசத்தைப் போட்டுக் கொண்டு சக்கையான தோத்திரப் பாடல்களை
எழுதித் தள்ளிவிடுகிறார்கள். எந்த விதத்திலும் இலக்கிய அந்தஸ்து பெற
லாயக்கில்லாத அந்த வறட்டு வரிகள் இசையமைக்கப்பட்டுப் பாடப்படும்
விடுகின்றன. கண்ணதாசனது சுகமான பக்தி வரிகளைக் கேட்ட காதுகளில் இந்தச்
சக்கை வரிகள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகின்றன. என்ன செய்வது? தகுதி
இருக்கிறதோ இல்லையோ ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும்
செய்யலாம். நாம் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். என்றாலும்
கீர்த்தனை மரபில் புதிய புதிய பக்திச் சிந்தனைகளை உள்ளடக்கிய பாடல்கள்
ஒன்றிரண்டு வருகின்றன. கடந்த காலத்தைச் சார்ந்த ஊத்துக்காடு வெங்கட
சுப்பையர், பாபநாசம் சிவன் போன்றோரை இலக்கிய அன்பர்கள் மறக்க முடியுமா?
`ஆடாது அசங்காது வா` என்ற கீர்த்தனையில் கண்ணனின் நடையைப் பார்த்து
முருகனின் வாகனமான மயில் ஒரு பீலியைப் பரிசாகத் தந்தது என்று கண்ணனின்
தலையில் சூடப்பட்டுள்ள மயில் பீலிக்குப் புதிய கற்பனை விளக்கம்
அளிக்கிறார் ஊத்துக்காடு. அவரின் அற்புதமான பக்தி மனத்தின்
வெளிப்பாடல்லவா அது! அத்தகையோரின் வாரிசுகள் மிகச் சிலர் இப்போதும்
பக்திக் கீர்த்தனை மரபை ஓரளவு வளர்த்து வருகிறார்கள். சுஜாதா
விஜயராகவனின் `நீல கண்டரே வாரும்!, அடிவாங்கிப் பாரும் ஐயா!` போன்ற
பாடல்கள் அத்தகையவை. சிவனைச் சென்னைக்கு வந்து மாசுபட்ட காற்றை
சுவாசிக்குமாறு வேண்டுகிறார் அவர். அப்படி வந்தால் ஆலகால விஷத்தால்
கழுத்து மட்டும் நீலமான அவர் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் உடல்
முழுதும் நீலமாவது நிச்சயம் என்று உத்தரவாதம் தருகிறார்! இன்னொரு
கீர்த்தனையில் சிவனை குடிகாரப் பெண்ணின் கணவனாக வந்து அடிவாங்கிப்
பார்க்குமாறு கனிவோடு வேண்டுகிறார்! கீர்த்தனைகள் இருக்கட்டும்,
வள்ளலார் போல் இன்று படித்து அனுபவிக்கக் கூடிய உன்னதமான பக்திக்
கவிதைகளை எழுதுபவர்கள் எத்தனை பேர் தேறுவார்கள்? தோத்திரச் சக்கையை எழுத
ஆயிரம்பேர் இன்றுண்டு. அந்தந்த சீசனுக்குத் தகுந்தபடி எழுத்து வணிகம்
நிகழ்த்தும் தோத்திரப் பாடலாசிரியர்களின் வரிகளைத் தெய்வங்களால் மட்டுமே
தான் பொறுத்துக் கொள்ள முடியும். அதனால் தான் தைரியமாக தெய்வங்களைப்
பற்றி மட்டுமே அவர்கள் எழுதுகிறார்கள். தெய்வங்கள் இத்தகைய வரிகளைக்
கேட்டு இப்படியும் தமிழில் எழுத இயலுமா என்ற திகைப்பில் தான் கல்லாயிற்றா
என்பதைத் துப்புத்துலக்க ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்தால் நல்லது! பக்தி
என்ற வலுவான போர்வையின் மூலம் இந்த அசிங்கம் மூடப்பட்டு விடுகிறது. நாம்
பக்தி மரபு தொடரவில்லையே என்று ஆதங்கப்படுவது வள்ளலார் போன்றோரின்
உண்மையான பக்தி மரபைப் பற்றித்தான். பக்திசார்ந்த வணிக மரபைப்
பற்றியல்ல. பல மகான்களின் வாழ்க்கைச் சரித்திரங்களை எழுதிய ரா.கணபதி,
ஆலயக் கட்டுரைகள் எழுதிய பரணீதரன், கல்கியின் புதல்வி `அமரதாரா` புகழ்
அமரர் ஆனந்தி போன்றோர் பக்திசார்ந்த உரைநடை இலக்கியத்தை வளர்த்தார்கள்.
ஆனால் பக்திசார்ந்த கவிதை இலக்கியம் வள்ளலார் மரபில், மகாகவி பாரதியார்
மரபில் அதிகம் வளரவில்லை. புதுக்கவிதைகளில் கூட ஆங்காங்கே ஒன்றிரண்டு
பக்திக் கவிதைகள் வந்ததுண்டு. அவற்றை யாராவது தொகுத்திருக்கிறார்களா
தெரியவில்லை. நோபல் பரிசுபெற்ற (அந்தப் பரிசைத் தாம் காலமான பிறகு களவு
கொடுத்துவிட்ட!) தாகூரின் கீதாஞ்சலியே கூட பக்தி இலக்கிய
வகைப்பட்டதுதான். பக்திக் கவிதை மரபு தொடர வேண்டும். புதுக்கவிதையாகக்
கூட பக்தி இலக்கியம் தழைக்கக் கூடும். பக்திக் கவிதை மரபு
தொடரவேண்டியதன் காரணம் என்னவென்றால், வாழ்க்கை போல் அல்ல இலக்கியம்.
ஒன்று வந்தால் இன்னொன்று விடைபெறுவதற்கு. ஒன்று வந்தால் அதுவும்
இருக்கும். ஏற்கெனவே உள்ள இன்னொன்றும் இருந்துகொண்டே இருக்கும். அதுதான்
இலக்கியம். ************************************