
சங்க இலக்கியங்களில் பொங்கல் குறித்த செய்திகள் உள்ளனவா என்ற தேடலில் கிடைத்த செய்திகள் இக்கட்டுரையில் இடம் பெறுகிறது. இத்தேடலுக்கு உறுதுணையாக நின்றது
முனைவர். ப.பாண்டியராஜா அவர்கள் உருவாக்கிய
தமிழ் இலக்கியத் தொடரடைவு தளம் [
http://tamilconcordance.in/index.html].
இலக்கியப் பொங்கல் : பொங்கல் வெண்மழை (நெடு 19, அகம் 217),
பொங்கல் இளமழை (ஐங் 276) என மழை கொட்டி முடித்த பஞ்சு போன்ற வெண்மேகத்தையும்;
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண்காழ் (அகம் 129) என்று வெடித்து இருக்கும் வெண் பஞ்சையுமே பொங்கல் என்ற சொல்லுடன் தொடர்பு கொண்டதாக சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. இதிலிருந்து
நுரைபோல பொங்கும் வெண்பஞ்சு போன்ற தோற்றம் கொண்டது 'பொங்கல்' என்ற சொல்லின் விளக்கமாகக் கொள்ளலாம், பொங்கி எழுவது பொங்கும் அலை போன்றவற்றையும் பொங்கு, பொங்கி என்ற சொற்கள் குறிப்பிடுகின்றன.
மாமூலனார் எழுதிய பாடல் (அகநானூறு -393) ஒன்று வரகரிசிப் பால் பொங்கல் செய்யும் முறையை விளக்குவதையும் காண முடிகிறது. 393. புழுக்கிய பொங்க அவிழ் புன்கம்பால் பொங்கல்
. . . முதைச் சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டுக்
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி 5
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறைச் செவ் வயின் தெறீஇ
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்பச்
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் 10
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவாக்
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் 15
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம்
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் . . .
[ —அகநானூறு -393 பாலை; மாமூலனார்]பாடலின் பொருள் விளக்கம்:புதுக்கொல்லையில் தழைத்து, ஈரிய இலையின் நீண்ட இதழையுடைய வரகின் கவர்த்த கதிருடன் கூடிய தட்டைகளைத் தொகுத்த பொலியில், மாடுகட்டிப் போரடித்து, மாடுகளின் கவர்த்த குளம்பால் துவைக்கப் பட்ட பல கிளைகளினின்று உதிர்ந்த வரகினை, இடம் அகன்ற பாறையில் செவ்விய களத்து மேட்டில் குவித்து, அவற்றைத் தூற்றி, வரிகள் பொருந்திய பருத்த தோள்களை உடைய தந்தையும் தமையன்மாரும் சுமந்து கொண்டுவந்து அளிக்க, நீண்ட செவிகளையுடைய தாயார், பண்ணைக்கீரையின் வெள்ளிய பழத்தின் அரிசியை ஒப்ப, அவற்றைத் திரிகையால் திரித்து உமியைப் போக்கி, சுளகினால் கொழித்த வெண்மையான அரிசியை, சிறந்த பூண் அமைந்த உலக்கையினால் மாற்றிமாற்றிக் குத்தி உரலில் இட்டுத் தீட்டிய, உரலின் குழி நிறைந்த அரிசியை, அங்குள்ள பெரிய சுனையின் நீரோடு முகந்து, மண்ணாற் செய்த பானையில் கற்களை அடுக்கியமைத்த அடுப்பில் ஏற்றி, கொத்துக்கள் நிறைந்த கொன்றையின் நிறைந்த பூந்தாது போல, குடவர் ஆக்கிய விளங்குகின்ற அவிழாகிய பொங்கல் சோற்றை, மதர்த்த நல்ல பசுவின் பாலுடன் கூட்டிப் பகிர்ந்து தருவர்.
குறிப்பு: இந்தப் பொங்கலைப் பொங்கல் நாளன்று செய்தார்கள் என்ற குறிப்பு பாடலில் கொடுக்கப்படவில்லை. பொருள் தேடி வேற்றுப் புலம் செல்லும் வழிப்போக்கர்களின் பசி தீர்க்க குடவர் மக்கள் வரகரிசிப் பால் பொங்கல் செய்து பரிமாறுகிறார்கள். ஆக, வரகரிசிப் பால் பொங்கல் செய்முறை விளக்கமாக இது அமைகிறது.
"பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி"
இனிய தைப்பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் 14/1/2026