பொடிக்கவிகள்!

42 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jul 18, 2009, 7:19:13 PM7/18/09
to Min Thamizh
தமிழில் கொடிக்கவி உண்டு; சீட்டுக்கவியும் உண்டு; பொடிக்கவி என்று உண்டா?

எனும் கேள்வி, தலைப்பைப் பார்த்தவுடன் எழுவது இயற்கைதான். உண்மையில் பொடிக்கவிகளும் தமிழில் இருக்கத்தான் செய்கின்றன.

மனிதர்கள் வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள். அதிலும் கவிஞர்களுக்கென்றே சில நூதனப் பழக்கங்கள் இருப்பதுண்டு. அவற்றுள் மூக்குப்பொடி போடும் பழக்கம் ஒன்று. மூக்குப்பொடிப் போடும் பழந்தமிழ்க் கவிராயர்களுள் ஒருவர், பழனிப்பதியில் வசித்த மாம்பழக்கவிச்சிங்க நாவலர்.

கவி பாடுவதில் வல்லவர். இவர்,
ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தில், மன்னர் பொன்னுசாமித்தேவர் முதலியோர் இருக்கும் அவையில், தமிழ் குறித்துப் பேசும்போது, எவரும் அறியாத வண்ணம், வெகு சாமர்த்தியமாய்ப் பொடி டப்பியில் இருந்து பொடியை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம்.

ஒருநாள், அவரது பொடிடப்பியை, மன்னர் எடுத்து வைத்துக்கொள்ள, அறியாத புலவர் பொடிடப்பியைத் தேடத் தொடங்கினார். அதனைக் கண்ணுற்ற மன்னர், "புலவரே பிரசங்கத்தின் இடையில், நீங்கள் தேட முயன்ற காரியம், இன்னதெனச் சொல்லுக" என்றதும்,

"புரவலர் பெருமானே, உமது அருமைச் சமூகத்தில் அஞ்சாது அறிவிக்கும் அளவிற்கு, அது அத்துணைப் பெரிய காரியம் இல்லை" என்றார் புலவர்.

உடனே மன்னன், "அது, "பொடி"க்காரியமோ?" என்றார்.

"ஆம்" என்றார் புலவர்.

மன்னன், "முருகனின் மீது ஒரு வெண்பாவில் ஐந்து பொடி வருமாறு பாடினால், தங்களின் காரியத்தை அனுகூலப்படுத்தலாம்" என்றார்.

உடனே புலவர், 

"கரும்பொடி மாவஞ்ச வெறிகைப்பொடி சில்வெற்பர் 
 தருங்கொம் பொடிசை தெய்வத்தையல் - விரும்புபுய 
 வான்பொடியா நின்ற கதிர்மானு மயிலோ எனையாள் 
 தேன்பொடியார் பூம்பதந் தந்தே."


என்று பாடிமுடித்தார் புலவர்.

  • கரும்பொடி
  • கைப்பொடி
  • தருங்கொம்பொடி
  • வான்பொடி
  • தேன்பொடி
என ஐந்து பொடிகள் அடங்கிய பாடலின் பொருள் இதுதான்.

"கரும்பை ஒடித்துத் தின்னும் (மா) யானைகள் அஞ்சும் படியாக வீசும் "பொடிசில்" என்னும் ஒருவிதக் கையாயுதத்தைக் கொண்ட மலைக்குறவர் தரும் கொம்பு போன்ற வள்ளி தேவியுடன், இசைந்த தெய்வ குஞ்சரி விரும்பும் பன்னிருபுயங்களைக் கொண்டவரே, வானைப் பொடிக்கின்ற - சுடுகின்ற சூரியனைப் போன்ற வடிவேலரே, தேனின் மகரந்தப்பொடி பொருந்தும் உமது தாமரைப் பூம்பாதம் தந்து என்னை ஆண்டருள்" என்று பொருள்.

இப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் பொன்னுசாமித் தேவர், தங்கத்தால் அமைந்த நவரத்தினம் பதித்த விலை உயர்ந்த பொடிடப்பி ஒன்றினைப் பரிசாகத் தந்து மகிழ்ந்தார்.

இதுபோல், இன்னொருவரது வரலாற்றிலும் மூக்குப்பொடி சிறப்பிடம் பெறுகிறது.

அவ்வரலாற்று நிகழ்வு பின்வருமாறு:-

உ.வே.சா.வுக்கு குடந்தைக் கல்லூரியில் தமிழாசிரியப்பணி கிடைக்க உதவிய வித்துவான் தியாகராசச் செட்டியார், பொடி போடும் பழக்கம் உடையவர். அவரது மாணாக்கர், சோமசுந்தரம் பிள்ளை என்பவர், திருவானைக்காவில் ஒரு பொடிக்கடை வைத்திருந்தார். அவர் நடத்தி வந்த பொடிக்கடைக்குக் கூட்டம் அதிகம். சுடச்சுடப் புதுப்பொடியை வாங்கிப் போடுவதற்கென்றே பலர் அங்கே கூடுவார்கள்.
பொடி தரும் லாபத்தின் ஒரு பகுதியைச் சிவ தருமத்துக்கெனச் செலவிட்டு வந்தார் சோமசுந்தரம். தினமும் காவிரியில் குளித்துவிட்டுத் திரும்பும் தியாகராசச் செட்டியார், இவரது கடைக்கு வருவது வழக்கம். வேலைக்காரன் ஒருவன், ஒருமுறை பொடிப்பட்டை ஒன்றை இவரருகில் வைத்துவிட்டு, போட்டுப் பார்ப்பதற்காக வேறொரு பட்டையிலும் கொண்டுவந்து கொடுப்பான். செட்டியார் அதையும் போட்டுக் கொண்டு சற்று நேரம் ஒன்றும் போசாமல் இருப்பார். அந்தப் பொடியின் இனிமையை வேறொரு தடையும் இன்றி அனுபவிப்பதுதான் அந்த மெளனத்தின் காரணம்.

இந்தச் சூழலில்தான், செட்டியாரைப் பார்ப்பதற்கு வருகிறார் உ.வே.சா. அதுசமயம் நடந்த காட்சியை அவர் பின்வருமாறு விளக்குகிறார், பாருங்கள்.

"செட்டியார், சோமசுந்தரம் பிள்ளையின் கடையில் உட்கார்ந்தார். நானும் அருகில் அமர்ந்தேன். பொடியின் மணம் மூக்கைத் துளைத்தது. வேலைக்காரன் ஒரு பொடிப் பட்டையை செட்டியாரிடம் சமர்ப்பித்தான். அந்தப் பட்டையைப் பக்குவப்படுத்துவதற்கே ஒரு தனித்திறமை வேண்டும்போல் இருந்தது. அந்தப்பட்டை உள்ளே இருந்த பொடியின் மணம் சிறிதாவது வெளியே போகாதபடி வெள்ளை வாழை நாரால் இறுக அடிமுதல் நுனிவரையில் நெருக்கமாகச் சுற்றப்பட்டிருந்தது. அந்த நாரைச் சுற்றியிருப்பதிலே ஓர் ஒழுங்கு காணப்பட்டது. பொடி போடாதவர்களும், அந்தப் பட்டையின் அழகை உத்தேசித்து, அதை வைத்துக்கொள்ளலாம் என்று தோன்றும். பொடிக்கடை சம்பிரதாயப்படி தியாகராசச் செட்டியார் போட்டுக் கொள்வதற்குப் புதுப்பொடியை நீட்டிய வேலைக்காரன் எனக்கும் கொடுக்க வந்தான். அதன் அருமையை அறியத் திறனில்லாத நான், "வழக்கமில்லை" என்று சொல்லிவிட்டேன். அவ்விடத்தில் பேசிக்கொண்டிருந்த நான், "பொடியின் இனிமையை நுகர்ந்த புலவர் ஒருவர் முன்பு ஒரு பாடல் இயற்றியிருக்கிறார்" என்று கூறி, 

"ஊசிக் கழகு முனைமுறி யாமை; உயர்ந்த பர 
 தேசிக் கழகுஇந் திரியம் அடக்கல்; திரள்நகில்சேர் 
 வேசிக்கழகு தன் மேனி மினுக்கல்; மிகப்பெருத்த 
 நாசிக்கழகு பொடியென்று சொல்லுவர் நாவலரே"


என்ற பாடலைச் சொன்னேன்.

உடனே, சோமசுந்தரம்பிள்ளை இந்தப் பாடலை மறுபடியும் கேட்டு இன்புற்றார். இதனைக் கேட்ட செட்டியார்

இந்தச் செய்யுள் பொதுவாக அல்லவோ இருக்கிறது?

நம் சோமசுந்தரத்தையும் இவர் கடைப்பொடியையும் சிறப்பித்து ஒரு பாடல் செய்யலாமே! என்றார்.

பின்னர் தியாகராசரும், உ.வே.சா.வும் இணைந்து ஒரு பாடலைப் பாடினர்.

அப்பாடல்,

"கொடியணி மாடம்ஓங்கிக் குலவுசீர் ஆனைக்காவில்
 படியினில் உள்ளார் செய்த பாக்கியம் அனையான் செங்கைத்
 தொடியினர் மதனன் சோமசுந்தரன் கடையில் செய்த
 பொடியினைப் போடாமூக்குப் புண்ணியம் செய்யா மூக்கே!"


என்பதாக அமைகிறது.

இப்பாட்டைத் தனியே அச்சிட்டுப் பல இடங்களில் ஒட்டச் செய்ததோடு, எல்லோருக்கும் கொடுத்து வந்தார் சோமசுந்தரம் பிள்ளை.

சராசரி மனிதருக்குத் தும்மலைத் தரும் மூக்குப்பொடி, புலவர்களுக்குக் கவிதைகளை அல்லவா தந்துவிட்டிருக்கிறது.

புரவலர்களையும் இணைத்துத் தங்கத்தில் பொடிடப்பி செய்துதரச் செய்திருக்கிறதே!


சி. சேதுபதி

நன்றி:- தினமணி


N. Ganesan

unread,
Jul 18, 2009, 8:34:09 PM7/18/09
to மின்தமிழ்

On Jul 18, 6:19 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> தமிழில் கொடிக்கவி உண்டு; சீட்டுக்கவியும் உண்டு; பொடிக்கவி என்று உண்டா?
>

2 சீட்டுக்கவிகள், 2 பாரதிகள்:
இலக்குமண பாரதி (~ 1800), சுப்ரமண்ய பாரதி (1919)
http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages