"இந்து அறநிலையத்துறை தேவையா?"
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடமிருந்து, இந்தியாவை ஆளும் பொறுப்பை,1858 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் மன்னராட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. முதலாவதாக, இந்தியர்களின் மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இது, "இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு" என்று இங்கிலாந்து மகாராணியார் இக்கொள்கையை அறிவித்தார்.
இதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கொள்கையைப் பிரிட்டிஷ் அரசு கைவிட நேர்ந்தது. இதற்குக் காரணம் 1925 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசாங்கம் நிறைவேற்றிய இந்து அறநிலையத்துறைச் சட்டம்தான். இந்தச் சட்டத்தை அன்று சென்னை மாகாணத்தின் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றியவர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட நீதிக் கட்சியினர்.
தென்னிந்தியாவில் களப்பிரர் ஆட்சிக் காலம் வரை (கி.பி. 300-550) கோயில்கள் என்று எதுவும் இல்லை. (ஜைன) சமணப் பள்ளிகளும், பௌத்த விகாரைகளும், ஆசீவக மடங்களும் தான் இருந்தன. இவற்றில் சமணத் தீர்த்தங்கரர்கள், புத்தர்களின் சிலைகள் நிறுவப் பட்டாலும் உருவ வழிபாடு நடைமுறையில் இல்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தென்னிந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்த பல்லவர்கள் ஏற்றம் பெற்றனர். மெல்ல மெல்ல, பல பகுதிகளிலும் பல்லவரது ஆட்சி அமைந்தது.

பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்தின் போதுதான் பார்ப்பனர்களின் உள்நுழைவும் அதிகமாக ஏற்பட்டது. அப்போதிலிருந்து தொடங்கிய சமண, பௌத்த சமயங்களுக்கு எதிரான களம், பக்தி இலக்கியக் காலத்தில் பெரிய அளவில் வளர்ந்தது. சமண, பௌத்தப் பள்ளிகளும், மடங்களும் சைவ, வைணவ சமயத்தினர் என்று சொல்லிக் கொண்டவர்களால் கைப்பற்றப்பட்டுக் கோவில்களாக மாற்றப்பட்டன. ஏற்கனவே கற்பனையில் இருந்த கடவுள்களுக்கு உருவம் கொடுத்து அதற்கு வழிபாடுகளும் நடத்தத் தொடங்கிவிட்டனர்.
பல்லவர் ஆட்சிக் காலத்தில் தமிழகம் பார்ப்பனிய மயமாகிக் கொண்டிருந்தது. தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் எதிரான செயல்கள் மெல்ல மெல்ல அரசின் நடைமுறைகள் ஆகத் தொடங்கின. பக்தி இலக்கியக் காலத்தில் தமிழுக்கு முன்னுரிமை கிடைத்தாலும், கற்பனைப் புராணக் கதைகளும், மூடநம்பிக்கைச் செயல்களும் மக்களைக் குழப்பி வந்தன.
பல்லவர்களுக்குப் பிறகு வந்த பிற்காலச் சோழர்கள் (கி.பி. 9 - 12), பிற்காலப் பாண்டியர்கள் (கி.பி. 13 - 15) ஆட்சிக் காலங்களிலும் இதே நிலையே நீடித்தது. சமயங்கள் சைவம், வைணவம், சாக்தேயம் (சக்தி), காணபத்யம் (கணபதி), கௌமாரம் (முருகன்), சௌரவம் (ஞாயிறு) என்று சன்மார்க்கமாக (ஆறு மார்க்கங்களாக) வளர்ச்சிநிலை பெற்றன.
கி.பி. 16 ஆம் நூற்றாண்டு தொடங்கிய விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் அனைத்துக் கோயில்களிலும் பார்ப்பனர் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட்டு, கோவில்கள், மன்னர்களின் வழியாகப் பார்ப்பனர் வசம் கொண்டு வரப்பட்டன. இதே காலத்தில் ஐரோப்பியர் வருகைகளும் நிகழ்ந்தன.
அதிகாரம் இல்லாத மன்னர்கள் காலத்துக் கோவில்களில் பார்ப்பனர்களின் கொள்ளையும், ஊழல்களும் அதிகரிக்கவே, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியரின் ஆட்சிக் காலத்தில், கி.பி. 1817 ஆம் ஆண்டு முதல், அரசாங்கம் தனது வருவாய்த்துறை மூலம், கோயில் அறக்கட்டளைகளை நிர்வகிக்கத் தொடங்கியது.
1858 ஆம் ஆண்டில் கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்து, பிரிட்டிஷ் மன்னராட்சி நிர்வாகம் ஏற்பட்டபோது, மதத்தில் தலையிடாக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி 'மத அறக்கட்டளைகள் சட்டம் 1863' ( The Religious Endowment Act, 1863) சட்டம் இயற்றப்பட்டுக் கோயில்கள் மீண்டும் கொள்ளையர் (பார்ப்பனர்) வசமாயின.

தமிழ் மன்னர்கள் கட்டி வைத்த கோவில்களில், பார்ப்பனர்கள் உள்நுழைந்து, தங்கு தடையின்றிச் செய்த கொள்ளைகளும், ஊழல்களும் உண்மையான பக்தர்களின் மனதைப் புண்படுத்தவே, அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் (1874, 1876, 1884, 1894) அரசாங்கத்திடம் முறையிட்டனர். அரசாங்கம் தன் தலையிடாக் கொள்கையின் விளைவாகக் கோயில் கண்காணிப்புக் குழுக்களை மட்டுமே நியமித்தது. ஆனால், இதனையும் பார்ப்பனர்கள் ஏற்கவில்லை.
பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த கண்காணிப்புக் குழுவைப் பார்ப்பனர்கள் ஏற்காத நிலையில், பார்ப்பனர்களின் கோவில் கொள்ளைகளைக் கட்டுப்படுத்தக் கோரி, 1905 ஆம் ஆண்டு பெல்லாரியில் நடந்த சென்னை மாகாண மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் என்னாவது என்ற பயத்தில் பார்ப்பனர்களே, 1907 இல் 'தரும இரட்சண சபா' என்னும் அமைப்பைத் தொடங்கி, கோயில்களின் நிதி மோசடிகளை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
முறையிடுவதும் பார்ப்பனர்; வழக்கு நடத்துவதும், எதிர்வாதம் செய்வதும் பார்ப்பனர்; தீர்ப்பு வழங்குவதும் பார்ப்பனர். இதன் விளைவு? கோவில் அறக்கட்டளைகளில் இருந்த பார்ப்பனர் அல்லாதார் வெளியேற்றப்பட்டு, முழுவதும் பார்ப்பனர்களே நிர்வகிக்கும் (கொள்ளையடிக்கும்) நிலை ஏற்பட்டது. கோவில் முறைகேடுகள் குறித்து யாரேனும் நீதிமன்றங்களை அணுகினால் 'திட்ட வழக்குகள்' (ஸ்கீம் சூட்டுகள் - scheme suits) மூலம் தாங்கள் விரும்பும் திட்டங்களைப் பெற்றுத் தாங்கள் செய்யும் முறைகேடான செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்று வந்தனர்.
இந்நிலை குறித்து அன்றைய சென்னை நாளிதழான "மெட்ராஸ் மெயில்" தனது தலையங்கத்தில் இப்படி எழுதியது: "மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டிஷ் அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளதைப் பின்பற்றி வருகிறது. ஆனால், கோவில்களின் அறங்காவல் குழுவினரின் நடைமுறை மனநிறைவு தருவதாக இல்லை. அவர்கள் செய்கிற தவறுகளால் அந்த நிர்வாகங்கள் அதிகமாகக் கண்காணிக்கும் படியான நிலைக்கு ஆளாகியுள்ளன. பெரும்பாலான அறக்குழுக்களின் நிர்வாகச் சீர்கேடுகளும், மோசடிகளும் மிகவும் இழிவாக இருக்கின்றன" என்று குறிப்பிட்டது அப்பத்திரிகை (மெட்ராஸ் மெயில், 13. 1. 1920).
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் இந்தியாவில் மன்னர் ஆட்சியே நிலவி வந்தது. மக்கள் பங்கெடுக்கும் தேர்தல் அரசியல் முறை இல்லாத அக்காலத்தில், இந்தியாவில் மக்களாட்சி முறையை அறிமுகப்படுத்தும் நோக்கில், ஒரு சீர்திருத்த முறை 1919 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் என்று அது அழைக்கப்பட்டது.
மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டத்தின் விளைவாக, மாகாணங்களிலும் சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்டு இரட்டை ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்படையில் 1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று அமைச்சரவையை அமைத்தது. இந்த நீதிக்கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக, 1916 ஆம் ஆண்டு தான் சென்னையில் தோற்றம் பெற்றது.

பிரிட்டிஷ் ஆட்சியில் நிர்வாகம், நீதிமன்றம், கோயில்கள், வணிகம் என்று அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருந்த பார்ப்பனர்களைப் போல், பார்ப்பனர் அல்லாதவர்களுக்கும் வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கப்பட்டது தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். இவ் வியக்கத்தின் பிரச்சார ஊடகமாக ஜஸ்டிஸ் (Justice) என்ற பத்திரிகை தொடங்கப்பட்டு நாளடைவில் அந்தப் பேரிலேயே அது ஜஸ்டிஸ் பார்ட்டி (Justice Party) என்று அழைக்கப்பட்டது. அதுவே தமிழில் நீதிக்கட்சி என வழங்கலாயிற்று.
நீதிக்கட்சி தொடங்கப் பட்டதற்கும், பெரியாருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. (1938 ஆம் ஆண்டில், முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு எர்ரவாடா சிறையிலிருந்த போதுதான், பெரியார், நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, 1944 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார்).
நீதிக்கட்சியில் எல்லாருமே பழுத்த பக்திமான்கள் ஆகவே இருந்தனர். கோவில்களில் பார்ப்பனர்களின் அட்டூழியங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத நீதிக்கட்சியின் பக்திமான்கள் தான், இந்து அறநிலையத் துறை சட்ட மசோதாவை, சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டு வந்தனர்.
(தொடரும்)