ஏறக்குறைய மூன்று மாதங்கள் கழித்து இலக்கியம் பற்றி எழுதப்போகிறேன். ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்த மல்லல் மூதூர் மதுரை, சங்கச் சொல்வளம், பத்துப்பாட்டு உவமைக் காட்சிகள், அகநானூறு - படவிளக்கவுரை ஆகியவை சவலைக் குழந்தைகளாகக் கைகளை நீட்டி “என்னைத் தூக்கு, தூக்கு” என்று அழைப்புவிடுக்கின்றன. அவற்றில் எதை முதலில் கையிலெடுப்பது என்ற எண்ணம் என்னை மயக்கியது. இறுதியில் புதிதாக ஒன்றனைத் தொடங்கலாம் என்று சிறுபாணாற்றுப்படையினை ஆரம்பித்திருக்கிறேன். இதனால் ஏனையவை அப்படியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க மாட்டா. அவற்றையும் பின்னொரு நாளில் ஒவ்வொன்றாகக் கையிலெடுப்பேன்.
சிறுபாணாற்றுப்படை – சிறுபாணன் செல்வழி – ஒரு படவிளக்க உரை
ஆறு என்பது வழி. ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல். இன்ன வழியிற் சென்றால் அல்லது இன்னாரைச் சந்தித்தால் இன்னின்ன நன்மைகள் கிடைக்கும் என்று ஒருவரை வழிப்படுத்தும் இலக்கியம் ஆற்றுப்படை எனப்படும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள பத்து நெடும்பாடல்களில் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள். அவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை. பத்துப்பாட்டு நூல்களுள் முதல் நான்குமே ஆற்றுப்படை இலக்கியங்கள்தாம். மலைபடுகடாம் இறுதியில் உள்ளது. இவற்றுள் மலைபடுகடாம்தான் மிகச் சிறந்தது என்பர். எனவேதான் உச்சகட்டமாக அது பத்துப்பாடல்களுள் இறுதியில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுவர். எனினும் என்னை மிகக் கவர்ந்தது சிறுபாணாற்றுப்படைதான். சிறப்பான உவமை அழகும், மிகச் சிறந்த வருணனை அழகும், சீரிய சொல்லாட்சியும், சிலிர்க்கவைக்கும் காட்சிப்படுத்துதலும் இப் பாடலின் சிறப்பு அம்சங்கள்.
யாழ் என்பது சங்க காலத்தில் பெரிதும் வழங்கிய ஓர் நரம்பிசைக் கருவி. இன்றைய வீணையின் முன்னோடி இது என்பர். இதன் உருவத்தையும், கட்டமைப்பையும் பொருத்து இது வில் யாழ், மகர யாழ், செங்கோட்டியாழ், மயில்யாழ் என பலவகைப் படும். இருப்பினும் இதில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கையைப் பொருத்து இது சிறிய யாழ், பெரிய யாழ் எனவும் அழைக்கப்படும். 7 நரம்புகளைக் கொண்டது சிறிய யாழ். இது சீறியாழ் எனப்படும். 21 நரம்புகளைக் கொண்டது பெரிய யாழ். இது பேரியாழ் எனப்படும். சீறியாழைக் கொண்டு இசையமைத்துப் பாடுவோர் சிறுபாணர் என்றும் பேரியாழைக் கொண்டு இசையமைத்துப் பாடுவோர் பெரும்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களை ஒரு மன்னன் அல்லது வள்ளலிடத்தில் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் இவரின் பெயராலேயே அழைக்கப்பட்டன.
பத்துப்பாட்டில் மூன்றாவதாக அமைந்திருக்கும் பாடல் சிறுபாணாற்றுப்படை. இதனை இயற்றியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இடைக்கழி நாடு சென்னையிலிருந்து புதுச்சேரி போகும் வழியில் கல்பாக்கம் அருகில் உள்ள பகுதி. இப்பகுதி இன்றைக்கும் அதே பெயரால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள நல்லூர் சாலையோரத்தில் உள்ளது. அங்கு இந்தப் புலவருக்கு ஒரு சிறு கோயிலும் மணிமண்டபமும் உள்ளன. இவரின் இயற்பெயர் தத்தன். மரியாதையாக தத்தனார் என்று அழைக்கப்படும். சங்க இலக்கிய மரபில் நல் என்ற அடைமொழி பெயருக்கு முன்னால் சேர்க்கப்பட்டு நல் தத்தனார் என்றாகி நத்தத்தனார் ஆனது எனலாம்.
இந்தப் பாடலின் தலைவன் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் என்பான், ஓய்மாநாடு என்பது திண்டிவனம் பகுதியாகும். திண்டிவனத்தின் ஒரு பகுதியாக இப்பொழுது விளங்கும் செங்கம் என்ற இடம்தான் சங்ககாலத்தில் நல்லியக்கோடனின் தலைநகராக இருந்தது.
வறுமையில் உழலும் ஒரு சிறுபாணன் யாராவது ஒரு சிறந்த வள்ளலிடம் சென்று, அவரைப் பாடி மகிழ்வித்து பரிசில் பெற்று வரலாம் என்ற நினைப்பில் தன் குடும்பத்தாருடன் கால்போன வழியே சென்றுகொண்டிருக்கிறான். அப்போது எதிரில் இன்னொரு சிறுபாணனைச் சந்திக்கிறான். புதியவன் மிகுந்த செல்வச் செழிப்பில் இருக்கிறான். தானும் வறுமையில் இருந்ததாகவும், நல்லியக்கோடனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று மீள்வதாகவும், வறுமைநிலைப் பாணனும் நல்லியக்கோடனிடம் சென்றால் மிகுந்த செல்வம் பெறலாம் என்று கூறி அவனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததுவே இந்தப் பாடல்.
269 அடிகள் கொண்ட இப் பாடலில் பாணனுடன் வரும் விறலியரின் அழகை வெவ்வேறு கோணங்களில் அழகிதாக விவரிக்கும் புலவரின் பாங்கு பின்னாளைய பாதாதிகேச வருணனைக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடியாகத் திகழ்கிறது. புலவர் காலத்து, மூவேந்தரின் தலைநகர்களான வஞ்சி, மதுரை, உறந்தை ஆகிய ஊர்களையும், அவர் காலத்து கடையெழு வள்ளல்களின் சிறப்பையும் விதந்தோதும் வரலாற்றுப் பெட்டகமாகவும் இப்பாடல் திகழ்கிறது. ஓய்மாநாட்டுக் கடற்கரையின் நெய்தல்வளம், உள்நாட்டுக் காடுகளின் முல்லை வளம், நதியோர நாட்டின் மருதவளம் எனப் பல்வகை வளங்களைப் பாங்குற வருணிக்கிறது இப் பாடல். பாணனின் கையிலிருக்கும் சீறியாழை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புத வரிகள் மெய்சிலிர்க்கவைப்பவை. அக் காலத்து மன்னர்களின் கலையார்வம் மிக்க வள்ளன்மையால் கலைஞர்கள் சிறப்புப் பெற்றமையே இப்பாடலின் உட்பொருளாயினும், அதைப் புலவர் சொல்லியிருக்கும் அழகும், அவரின் அற்புதமான நடையும், கவித்துவமும் இப் பாடலை ஓர் உன்னதமான இலக்கியமாக ஆக்கியிருக்கின்றன.
வட்டிலில் வந்துவிழப்போகும் பொருள்களின் அட்டவணை (Menu Card) வந்துவிட்டது. இனிப் பொருள்கள் ஒவ்வொன்றாக வரும்.
ப.பாண்டியராஜா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்படையீர்,ஏறக்குறைய மூன்று மாதங்கள் கழித்து இலக்கியம் பற்றி எழுதப்போகிறேன். ஏற்கனவே எழுதிக்கொண்டிருந்த மல்லல் மூதூர் மதுரை, சங்கச் சொல்வளம், பத்துப்பாட்டு உவமைக் காட்சிகள், அகநானூறு - படவிளக்கவுரை ஆகியவை சவலைக் குழந்தைகளாகக் கைகளை நீட்டி “என்னைத் தூக்கு, தூக்கு” என்று அழைப்புவிடுக்கின்றன. அவற்றில் எதை முதலில் கையிலெடுப்பது என்ற எண்ணம் என்னை மயக்கியது. இறுதியில் புதிதாக ஒன்றனைத் தொடங்கலாம் என்று சிறுபாணாற்றுப்படையினை ஆரம்பித்திருக்கிறேன். இதனால் ஏனையவை அப்படியே அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க மாட்டா. அவற்றையும் பின்னொரு நாளில் ஒவ்வொன்றாகக் கையிலெடுப்பேன்.
சிறுபாணாற்றுப்படை – சிறுபாணன் செல்வழி – ஒரு படவிளக்க உரை
ஆறு என்பது வழி. ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல். இன்ன வழியிற் சென்றால் அல்லது இன்னாரைச் சந்தித்தால் இன்னின்ன நன்மைகள் கிடைக்கும் என்று ஒருவரை வழிப்படுத்தும் இலக்கியம் ஆற்றுப்படை எனப்படும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள பத்து நெடும்பாடல்களில் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படை இலக்கியங்கள். அவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை. பத்துப்பாட்டு நூல்களுள் முதல் நான்குமே ஆற்றுப்படை இலக்கியங்கள்தாம். மலைபடுகடாம் இறுதியில் உள்ளது. இவற்றுள் மலைபடுகடாம்தான் மிகச் சிறந்தது என்பர். எனவேதான் உச்சகட்டமாக அது பத்துப்பாடல்களுள் இறுதியில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுவர். எனினும் என்னை மிகக் கவர்ந்தது சிறுபாணாற்றுப்படைதான். சிறப்பான உவமை அழகும், மிகச் சிறந்த வருணனை அழகும், சீரிய சொல்லாட்சியும், சிலிர்க்கவைக்கும் காட்சிப்படுத்துதலும் இப் பாடலின் சிறப்பு அம்சங்கள்.
யாழ் என்பது சங்க காலத்தில் பெரிதும் வழங்கிய ஓர் நரம்பிசைக் கருவி. இன்றைய வீணையின் முன்னோடி இது என்பர். இதன் உருவத்தையும், கட்டமைப்பையும் பொருத்து இது வில் யாழ், மகர யாழ், செங்கோட்டியாழ், மயில்யாழ் என பலவகைப் படும். இருப்பினும் இதில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கையைப் பொருத்து இது சிறிய யாழ், பெரிய யாழ் எனவும் அழைக்கப்படும். 7 நரம்புகளைக் கொண்டது சிறிய யாழ். இது சீறியாழ் எனப்படும். 21 நரம்புகளைக் கொண்டது பெரிய யாழ். இது பேரியாழ் எனப்படும். சீறியாழைக் கொண்டு இசையமைத்துப் பாடுவோர் சிறுபாணர் என்றும் பேரியாழைக் கொண்டு இசையமைத்துப் பாடுவோர் பெரும்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களை ஒரு மன்னன் அல்லது வள்ளலிடத்தில் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் இவரின் பெயராலேயே அழைக்கப்பட்டன.
பத்துப்பாட்டில் மூன்றாவதாக அமைந்திருக்கும் பாடல் சிறுபாணாற்றுப்படை. இதனை இயற்றியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இடைக்கழி நாடு சென்னையிலிருந்து புதுச்சேரி போகும் வழியில் கல்பாக்கம் அருகில் உள்ள பகுதி. இப்பகுதி இன்றைக்கும் அதே பெயரால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள நல்லூர் சாலையோரத்தில் உள்ளது. அங்கு இந்தப் புலவருக்கு ஒரு சிறு கோயிலும் மணிமண்டபமும் உள்ளன. இவரின் இயற்பெயர் தத்தன். மரியாதையாக தத்தனார் என்று அழைக்கப்படும். சங்க இலக்கிய மரபில் நல் என்ற அடைமொழி பெயருக்கு முன்னால் சேர்க்கப்பட்டு நல் தத்தனார் என்றாகி நத்தத்தனார் ஆனது எனலாம்.
இந்தப் பாடலின் தலைவன் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் என்பான், ஓய்மாநாடு என்பது திண்டிவனம் பகுதியாகும். திண்டிவனத்தின் ஒரு பகுதியாக இப்பொழுது விளங்கும் செங்கம் என்ற இடம்தான் சங்ககாலத்தில் நல்லியக்கோடனின் தலைநகராக இருந்தது.
வறுமையில் உழலும் ஒரு சிறுபாணன் யாராவது ஒரு சிறந்த வள்ளலிடம் சென்று, அவரைப் பாடி மகிழ்வித்து பரிசில் பெற்று வரலாம் என்ற நினைப்பில் தன் குடும்பத்தாருடன் கால்போன வழியே சென்றுகொண்டிருக்கிறான். அப்போது எதிரில் இன்னொரு சிறுபாணனைச் சந்திக்கிறான். புதியவன் மிகுந்த செல்வச் செழிப்பில் இருக்கிறான். தானும் வறுமையில் இருந்ததாகவும், நல்லியக்கோடனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று மீள்வதாகவும், வறுமைநிலைப் பாணனும் நல்லியக்கோடனிடம் சென்றால் மிகுந்த செல்வம் பெறலாம் என்று கூறி அவனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததுவே இந்தப் பாடல்.
269 அடிகள் கொண்ட இப் பாடலில் பாணனுடன் வரும் விறலியரின் அழகை வெவ்வேறு கோணங்களில் அழகிதாக விவரிக்கும் புலவரின் பாங்கு பின்னாளைய பாதாதிகேச வருணனைக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடியாகத் திகழ்கிறது. புலவர் காலத்து, மூவேந்தரின் தலைநகர்களான வஞ்சி, மதுரை, உறந்தை ஆகிய ஊர்களையும், அவர் காலத்து கடையெழு வள்ளல்களின் சிறப்பையும் விதந்தோதும் வரலாற்றுப் பெட்டகமாகவும் இப்பாடல் திகழ்கிறது. ஓய்மாநாட்டுக் கடற்கரையின் நெய்தல்வளம், உள்நாட்டுக் காடுகளின் முல்லை வளம், நதியோர நாட்டின் மருதவளம் எனப் பல்வகை வளங்களைப் பாங்குற வருணிக்கிறது இப் பாடல். பாணனின் கையிலிருக்கும் சீறியாழை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புத வரிகள் மெய்சிலிர்க்கவைப்பவை. அக் காலத்து மன்னர்களின் கலையார்வம் மிக்க வள்ளன்மையால் கலைஞர்கள் சிறப்புப் பெற்றமையே இப்பாடலின் உட்பொருளாயினும், அதைப் புலவர் சொல்லியிருக்கும் அழகும், அவரின் அற்புதமான நடையும், கவித்துவமும் இப் பாடலை ஓர் உன்னதமான இலக்கியமாக ஆக்கியிருக்கின்றன.
வட்டிலில் வந்துவிழப்போகும் பொருள்களின் அட்டவணை (Menu Card) வந்துவிட்டது. இனிப் பொருள்கள் ஒவ்வொன்றாக வரும்.
ப.பாண்டியராஜா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
>>இப்பதிவை மரபு விக்கியில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன். (கீதா - பார்த்துக் கொள்கின்றீர்களா)தொடர்ந்து எழுதி வாருங்கள். நம் மரபு விக்கியில் இதனைப் பதிந்து வைப்போம்.அன்புடன்சுபா>>மிக்க நன்றி சுபா அம்மா.வழக்கம்போல் படங்கள் நிறைய வருமே. அவற்றையும் சேர்த்தால்தான் விளக்கங்கள் முழுமை பெறும். படங்களையும் சேர்க்கமுடிந்தால் மிகவும் நல்லது. கீதா அம்மைக்கு இது பணிவான வேண்டுகோள்.ப.பாண்டியராஜா
இலக்கியத்தொண்டிற்காகப் பாராட்டுகிறேன்.
உருவகம், உவமை
இது தொடக்க நிலைக்காரர்களுக்காக. இதைப்பற்றி அறிந்தவர்கள் மேலும் படிக்கவேண்டாம்.
உவமை (Simile) என்பது பொதுவான பண்புகள் கொண்ட இரண்டு பொருள்களை ஒப்பிட்டுப் பேசுவது. சிங்கம் போன்ற மறவன் என்கிறோம். இது உவமை. ‘போன்ற’ என்ற சொல் இங்கே உவம உருபு. சில வேளைகளில் சிங்க மறவன் என்றும் சொல்கிறோம். இங்கே உவம உருபு தொக்கிநிற்கிறது எனவே இதனை உவமைத் தொகை என்கிறோம்.
‘போர்ச்செய்தியைக் கேட்ட அந்த மறவன் சிங்கம் போல் சீறியெழுந்தான்’ - என்பதுவும் உவமையே. இதனையே வேறு விதமாக, ‘போர்ச்செய்தியைக் கேட்ட அந்தச் சிங்க மறவன் சீறியெழுந்தான்’ என்றும் சொல்லலாம்.
தாமரை போன்ற முகத்தைத் தாமரை முகம் என்று சொல்கிறோமே அதுவும் இந்த வகை உவமையே.
உருவகம் (Metaphor) என்பது பொதுவான பண்புகள் கொண்ட இரண்டு பொருள்களில் ஒன்றனை இன்னொன்றாகவே பாவித்துச் சொல்வது. ‘போர்ச்செய்தியைக் கேட்ட அந்த மறச்சிங்கம் சீறியெழுந்தது’ என்ற கூற்றில் மறவனைச் சிங்கமாகவே பார்க்கிறோம். ‘சீறியெழுந்தான்’ என்ற வினைமுற்றே ‘சீறியெழுந்தது’ என்று மாறிவிட்டது பார்த்தீர்களா! இதுதான் உருவகம் - ஒன்றனை இன்னொன்றாகவே பார்ப்பது. தாமரை முகம் என்பதற்குப் பதில் முகத்தாமரை என்றால் அது உருவகம்.
உருவகம் பெரும்பாலும் நீட்டிப்புக்குரியது. ‘போர்ச்செய்தியைக் கேட்ட அந்த மறச்சிங்கம் சீறியெழுந்தது. பகை நரிகள் பதறியோடின’ என்பதில் பகைவர்கள் நரிகளாய் உருவகப்படுத்தப்படுகிறார்கள். இடையில் உவமையும் வரலாம். ‘கல் விட்டெறிந்த காக்கைக் கூட்டம்போல் பகை நரிகள் பறந்தோடின’ என்பதில் உவமை உருவகத்துக்கு அழகு சேர்க்கிறது.
நமக்குத் தெரிந்த இன்னொரு உருவகம் மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
இங்கே உருவகம்:-
நிலம் - மடந்தை (பெண்)
கடல் - ஆடை
பரதகண்டம் - வதனம் (முகம்)
தெக்கணம் - நுதல்
திராவிடம் - திலகம்
பார்த்தீர்களா! உருவகங்களை உங்கள் திறமையைப் பொருத்து எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டித்துக்கொண்டே போகலாம்.
‘நீராரும் கடலாடை நிலமடந்தை’ என்னாமல், நீராரும் கடலுடுத்த நிலமடந்தை’ என்கிறார் பார்த்தீர்களா! பூமியுருண்டையையும், ஆங்காங்கே தெரியும் கண்டங்களையும், அவற்றைச் சுற்றிக் கவ்விப் பிடித்துக்கொண்டதுபோல் சூழ்ந்துகொண்டிருக்கும் கடல்நீர்ப் பரப்பையும் கற்பனைசெய்து பாருங்கள். அங்கேதான் புலவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.
இதேபோல் இன்னொரு நிலமடந்தையைக் காட்டுகிறார் சிறுபாணாற்றுப்படைப் புலவர். அவர் எத்துணை உயரம் உயர்ந்திருக்கிறார் என்று அங்குக் காண்போம்.
ப.பாண்டியராஜா
ஒரு முக்கிய திருத்தம்.
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனின் தலைநகர் செங்கம் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறு. அவனது தலைநகர் கிடங்கில். திண்டிவனத்தின் ஒரு பகுதி. எனவே, அந்தப் பத்தியை மாற்றி வாசியுங்கள்:
இந்தப் பாடலின் தலைவன் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் என்பான், ஓய்மாநாடு என்பது திண்டிவனம் பகுதியாகும். திண்டிவனத்தின் ஒரு பகுதியாக இப்பொழுது விளங்கும் கிடங்கில் என்ற இடம்தான் சங்ககாலத்தில் நல்லியக்கோடனின் தலைநகராக இருந்தது.
என்னுடைய நினைவாற்றலை (?) நம்பக்கூடாது, அவ்வப்போது சரிபார்க்கவேண்டும் என்பது மீண்டும் உறுதியாகிறது.
தவறுக்கு மன்னிக்க.
ப.பாண்டியராஜா
மாநில மடந்தை
மிகவும் அழகான ஓர் உருவகத்துடன் தன் பாடலைத் தொடங்குகிறார் சிறுபாணாற்றுப்படைப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இந்தப் பெரிய நிலவுலகத்தை ஒரு மடந்தையாகப் பார்க்கிறார் அவர். தம் பாடலின் தொடக்கக் காட்சியாக அவர் நம் கண்முன் காட்டுவது நெடுந்தொலைவில் நீண்டுகிடக்கும் ஒரு நெடிய மலைத்தொடர். அந்த மலைத்தொடரை மாநில மடந்தையின் பருத்த தோள்களாகக் காட்டுகிறார் அவர்.அந்த மலையினின்றும் இழிந்து வருகிறது ஓர் காட்டாறு. மலை முகடுகளினின்றும் தாவிக் குதித்து வரும் இந்தக் காட்டாறு, அந்த நில மடந்தையின் மார்புகளினின்றும் கீழே விழுந்து அசைந்துகொண்டிருக்கும் முத்து மாலையைப் போன்று இருக்கிறதாம். தாவிவிழும் அந்தக் காட்டாறு இருமருங்குப் பாறைகளிலிலும் முட்டிமோதி அல்லல்பட்டு, பின்னர் நெடுந்தொலைவு பயணம்செய்து நாட்டுக்குள் வரும்போது முற்றிலும் காய்ந்துபோன ஆறாக மாறிநிற்கிறது. கருமணல் நிறைந்த காய்ந்துபோன காட்டாறு நிலமடந்தையின் கூந்தல் விரிந்து கிடப்பதைப் போல் பரந்து கிடக்கிறது. கரையோரத்து மரங்களில் குயில்கள் குத்திக்குடைவதால் உதிர்ந்த பூக்கள் அந்த மணற்கூந்தலில் சூடிய மலர்களாய்க் காட்சியளிக்கின்றன. ஆற்றின் ஓரங்களில் அலையலையாய்க் கிடக்கும் நுண்ணிய கருமணல், நிலமடந்தையின் தலைப்புறத்தில் நீண்டு சுருண்டுகிடக்கும் மயிர்ச்சுருளாய்த் தெரிகின்றன.இதோ இந்த உருவகத்தைப் புலவரின் சொற்களில் படியுங்கள்:-
மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போலச்
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்றுக்
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப் பூஞ் செம்மல் சூடிப் புடை நெறித்துக்
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல்
இதன் அடிநேர்ப் பொருள்:
(பச்சை)மணியாகிய மலையே தோள்களாகவுள்ள பெரிய நிலமாகிய மகளின்
அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல,
ஓடுகின்ற நீர் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
இடிகரையில் உள்ள மணமிக்க பொழிலிடத்தே குயில்கள் (அலகால்)குடைந்து உதிர்த்த
புதிய பூக்களாகிய வாடலைச் சூடி, (தம்)பக்கங்களில் அறல்பட்டு, 5
தலைமயிர் விரித்ததைப் போன்ற கரியநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்,
இனி, இந்த உருவகத்தை ஒவ்வொரு அடியாகவும், ஒவ்வொரு சொல்லாகவும் எடுத்து அசைபோடுவோம்.முதல் இரு அடிகளை முற்றிலும் வேறாக உரைகாரர்கள் பிரித்துக் கூறுவர்.‘பணைத்தோள் மாநில மடந்தை, மணிமலை அணிமுலைத் துயல்வரும் ஆரம்போல’ என்று மணிமலையை அணிமுலைக்கு உருவகமாகக் கொள்வர். ஒரு பாடலில் எடுத்த எடுப்பில் முதல் அடியை ஒடித்து மடக்கி இவ்வாறு பொருள்கொள்ளும் வண்ணம் ஒரு புலவர் பாடியிருப்பாரா என்பது ஐயமே. மேலும் இவ்வாறு கொள்வது உருவகத்தின் ஒட்டுமொத்தப்பார்வைக்கு உகந்ததாக இல்லை என்பது என் கருத்து. எனவேதான் மணிமலை என்பது பணைத்தோளுக்கு உருவகமாகக் கொள்ளப்பட்டுள்ளது. பணை என்பதற்கு மூங்கில் என்ற பொருள் இருந்தாலும், இங்கு பருமை என்ற பொருளே பொருத்தம் எனத் தோன்றுகிறது. பச்சை மரங்களால் போர்த்தப்பட்ட மலைத்தொடரை மணி மலை என்கிறார். மணி என்பது எந்த விலையுயர்ந்த கல்லாகவும் இருக்கலாம். இங்கு அது மரகத மணி.
மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇய - அகம் 14/4
என்று அகநானூற்றில் வருவதைக் காணலாம். எனவே பச்சை மரகதத்தைப் பதித்தது போன்ற பச்சைப்பசேலென்ற நெடிய மலையே நிலமடந்தையின் தோள்களாம். இதனையே உருவகமாக,
மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை
என்கிறார் புலவர். இதோ (பச்சை மரகத)மணி மலையைப் பாருங்கள்.
இங்கே இந்த மலைத்தொடரை அடுத்திருக்கும் மலை முகடுகள்தான் மங்கையின் முலைகள் என்பதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அது உருவகத்தின் நீட்டிப்பாகவே அமைகிறது. இவ்வாறு சொல்வது ஏகதேச உருவகம் ஆகும் என்பர்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார் – குறள் 1:10
என்ற குறளில் பிறவியைப் பெருங்கடல் என்றவர், இறைவன் அடியே அதனை நீந்திக் கடக்க உதவும் தெப்பம் என்று கூறவில்லை. இதைப்போலவேதான் நெடுமலையைத் தோளாகச் சொன்னவர் அதனை அடுத்திருக்கும் சிறுகுன்றுகளை மார்புகளாகச் சொல்லவில்லை.
மலை முகடுகளை மார்புகளாகச் சொல்லாமற் சொன்னவர், அந்த மார்பிலாடும் ஆரமாக ஆற்றினைச் சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். மாறாக அதனை ஓர் உவமம் ஆக்குகிறார். முதலில், ஒரு தொலைவுக் காட்சியாக, மார்பிலிருந்து தொங்கும் மாலையை மலைகளினூடே பாய்ந்துவரும் காட்டாறாகச் சொன்ன புலவர், பின்னர் அண்மைக்காட்சியாக அதே ஆற்று மணற்பரப்பை மடந்தையின் கூந்தலுக்கு (கதுப்பு விரித்தன்ன) உவமையாக்குகிறார். ஏதேனும் ஓரிடத்தில் இதனை உருவகம் ஆக்கியிருந்தால் அடுத்த இடத்தில் அது உருவக நீட்சியாக இல்லாமற் இடர்ப்படும் என்றே, ஆற்றினைப்பற்றிய இரண்டு இடங்களிலும் புலவர் அதனை உவமைகளாகக் கூறியுள்ளார் எனலாம்.
புலவர் காட்டாற்றை, ‘அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல‘ என்று கூறுகிறார். துயல்வருதல் என்பது முன்னும் பின்னும் ஆடுதல். இந்தச் சொல்லுக்கு இங்கு என்ன வேலை? மார்பின் இருபக்கங்களினின்றும் இறங்கித் தொங்கி முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்கும் மாலையைப் போன்ற காட்டாறு எப்படியிருக்கும்? ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். இது தொலைவுக்காட்சி. எனவே தூரத்து மலையில் இப்படி ஒரு காட்சியைப் புலவர் பார்த்திருக்கவேண்டும். அவர் பார்த்த காட்சி என்னவாக இருக்கும்? அடுத்தடுத்த இரண்டு மலைச்சரிவுகளிலிருந்து இறங்கி வரும் இரண்டு காட்டாறுகள் அடிவாரத்தில் ஒன்றாய் விழுந்து, பின் எழுந்து முன்பக்கமாய்ச் சிறிது ஓடித் தாவிக்குதிக்கிறது என்று கற்பனைசெய்துகொள்ளலாம். இதோ பாருங்கள் ஒப்புமையை:-ஆக, இவ்வாறு குதித்துக் குதித்து வரும் காட்டாறினையே புலவர் துயல்வரும் மாலைக்கு உவமையாகக் கூறியிருக்கிறார் எனலாம்.
அடுத்து, செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாறு என்பதை, செல் புனல் உழந்த கான்யாறு, சேய்வரல் கான்யாறு என இரண்டாகப் பிரிக்கலாம். பாறையிடுக்குகளில் அடித்துக்கொண்டும், மோதிக்கொண்டும் வரும் ஆற்றையே செல் புனல் உழந்த என்கிறார். உழந்த என்றால் வருந்திய என்று பொருள். தொலைதூரத்திலிருந்து அந்த ஆறு வருவதாகப் புலவர் கூறுகிறார். சேய் என்பது சேய்மை என்ற பொருளில் மிகுந்த தொலைவைக் குறிக்கும். மலையை விட்டிறங்கி வெகுதூரம் கடந்து வந்த ஆற்றின் கரையில் இப்போது பாணன் நிற்கிறான்.
அதனைக் கொல்கரை என்கிறார் புலவர். ஆற்றில் பெருவெள்ளம் வரும்போது கரையை மோதிச் சாய்த்துக்கொண்டு செல்லும். அப்போது வெகுவாய்க் கரைந்துபோன கரை சாய்கின்ற நிலையில் குத்திட்டு நிற்கும். அதுவே கொல்கரை. அதனை இடிகரை என்றும் சொல்வர். இதுதான் கொல்கரை.
இந்தக் கொல்கரையின் ஓரத்தில் மரம் இருந்தால் அதன் பூக்கள் எங்கு விழும்? ‘கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த புதுப் பூஞ் செம்மல் சூடி’ என்கிறார் புலவர். இந்தக் கொல்கரை ஓரத்தில் ஒரு பொழிலே இருக்கிறதாம். பொழில் என்பது சோலை. அந்தச் சோலை மரங்கள் பூத்துக்குலுங்க, அவற்றின் கிளைகளிலமர்ந்த குயில்கள் அந்தப் பூக்களில் இருக்கும் தாதுவை உண்பதற்காகத் தம் அலகை அவற்றினுள் விட்டுக் குடைந்து குடைந்து பார்க்கிறதாம். அதனால் அந்தப் புதுப்பூக்கள் கீழே ஆற்றுமணலில் உதிர்ந்துகிடக்கின்றன. முதல்நாள் காலையில் மலர்ந்த பூக்கள் மறுநாள் தாமாக வாடிக் கீழே உதிரலாம். ஆனால் இந்தப் புதுப்பூக்கள் தாமாக உதிரமாட்டா. குயில் கொடுத்த குடைச்சலினால் அவை உதிர்ந்துவிழுகின்றன. இப்படி மணற்பரப்பில் விழுந்த பூக்களை நிலமடந்தை தன் கூந்தலிற் சூடிக்கொண்டிருப்பதாகப் பார்க்கிறார் புலவர். புதுப்பூஞ் செம்மல் என்கிறார் அவர். செம்மல் என்பது வாடிய பூவினைக் குறிக்கும். எனவே இது முரண் போலத் தோன்றவில்லையா? மரத்திலிருக்கும்போது அவை புதுப்பூக்கள்தாம். கீழே உதிர்ந்ததும் மரத்தோடு அவை இருந்த தொடர்பு அற்றுப்போனதினால் இயற்கையாகவே அவை வாடத் தொடங்கும். அத்துடன் பொசுக்குகின்ற ஆற்றுமணலில் அந்தப்பூக்கள் எத்துணை நேரம்தான் புதுமையாக இருக்கமுடியும்? ஆற்றுமணல் பொசுக்குகின்றதா? இல்லையே! அதைப்பற்றிப் புலவர் இதுவரை ஒன்றும் சொல்லவில்லையே எனலாம். அடுத்த அடிகளில் அதுபற்றித்தான் புலவர் கூறப்போகிறார். வெப்பம் – கொடிய வெப்பம் – அதுவேதான் இங்கு புலவர் கூறவந்த உண்மைப்பொருள். அதற்கு முன்னோட்டமாக செம்மல் என்ற சொல்லால் வரவிருக்கும் கொடும் வெப்பத்தைக் கோடிட்டுக்காட்டுகிறார் புலவர். என்னே அவர் மதிநுட்பம்!
ஆற்றில் வெள்ளம் அளவுக்கதிகமாய் ஓடும்போது கரைகளைத் தழுவிக்கொண்டு போகும். இது காட்டாறுதானே! வெள்ளம் சிறிது நேரத்தில் வற்றிப்போகும். பின்னர் கரையின் இருபக்கங்களிலும் சிறிதளவு நீர் ‘சலசல’-வென நெடுநேரத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கும். அப்போது மணற்பரப்பிலிருக்கும் சிறுசிறு தடைகளைத் தாண்டிப் போவதால் அவை எம்பி எம்பிக் குதித்துப் போகும். அதனால் அந்த மணற்பரப்பே அலையலையாய் மாறிவிடும். இதனையே புடை நெறித்து என்கிறார் புலவர். புடை என்றால் பக்கம் – sides. நெறித்தல் என்பது சுருள் சுருளாக அல்லது அலையலையாக ஆகுதல். காட்டாற்று வெள்ளம் ஓடுவதை எவ்வளவு உன்னிப்பாகப் பார்த்திருக்கிறார் புலவர் பாருங்கள்! சரி, அவ்வாறு பார்த்ததை இங்கு ஏன் சொல்லவேண்டும்? காரணம் இருக்கிறது.
இவ்வாறு ஓரங்களில் அரித்துக்கொண்டு ‘சலசல’ - வென்று ஓடும் நீரால் ஒரு மாயம் நேரிடுகிறது. ஆற்றுவெள்ளம் அடித்துக்கொண்டுவரும் இரும்புத் துகள்கள் அந்த மணலின் மேற்பரப்பில் படிந்து அந்த ஆற்று மணலையே கருமணலாக மாற்றிவிடுகின்றன. இதனையே அவர் அறல் என்கிறார். தொடர்ந்து ‘சலசல’-வென்று ஓடுவதால் மணலில் உள்ள சின்னஞ்சிறு கற்களும் ஒதுக்கப்பட்டு அந்த மணல் நுண்மையான தன்மை அடைகிறது. இதனை நாம் குறுமணல் என்கிறோம். புலவரோ நுணங்கு அறல் என்கிறார். நுணங்குதல் என்பது நுட்பமாதல். இந்த மணல் மேலாகக் கருமையாக இல்லாமல், அடிவரை கருமை படிந்துபோயிருப்பதால் காழக நுணங்கு அறல் என்கிறார். இவ்வாறு அலையலையாய்க் கிடக்கும் கருமணல் நிலமடந்தை தன் கூந்தலை விரித்துவிட்டிருப்பதைப் போல் இருக்கிறதாம். பெண்களில் சிலருக்கு கூந்தல் முழுக்கவே அலையலையாய் இருக்கும் (Curls). அவ்வாறு அமையாத மகளிருக்குக்கூட, அவர்கள் தலை மயிரை விரித்துப்போட்டிருந்தால் காதோர முடிகள் சுருண்டுகொண்டிருக்கும். புடை நெறித்து என்று புலவர் சொன்னதன் பொருள் இப்போது புரிகின்றதா? (மணலிலுள்ள அறலைக் கூர்ந்து கவனியுங்கள்)
இப்போதுதான் வைரச் சுரங்கத்துக்குள் நுழைந்திருக்கிறோம். என் காலில் இடறியவை இவை. எடுத்துக் காட்டியிருக்கிறேன். கையினால் தோண்டிப்பார்த்தால் ? தோண்டிப்பாருங்களேன்.
இடறல் தொடரும்.
ப.பாண்டியராஜா
வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
மாநில மடந்தை
மிகவும் அழகான ஓர் உருவகத்துடன் தன் பாடலைத் தொடங்குகிறார் சிறுபாணாற்றுப்படைப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இந்தப் பெரிய நிலவுலகத்தை ஒரு மடந்தையாகப் பார்க்கிறார் அவர். தம் பாடலின் தொடக்கக் காட்சியாக அவர் நம் கண்முன் காட்டுவது நெடுந்தொலைவில் நீண்டுகிடக்கும் ஒரு நெடிய மலைத்தொடர். அந்த மலைத்தொடரை மாநில மடந்தையின் பருத்த தோள்களாகக் காட்டுகிறார் அவர்.அந்த மலையினின்றும் இழிந்து வருகிறது ஓர் காட்டாறு. மலை முகடுகளினின்றும் தாவிக் குதித்து வரும் இந்தக் காட்டாறு, அந்த நில மடந்தையின் மார்புகளினின்றும் கீழே விழுந்து அசைந்துகொண்டிருக்கும் முத்து மாலையைப் போன்று இருக்கிறதாம். தாவிவிழும் அந்தக் காட்டாறு இருமருங்குப் பாறைகளிலிலும் முட்டிமோதி அல்லல்பட்டு, பின்னர் நெடுந்தொலைவு பயணம்செய்து நாட்டுக்குள் வரும்போது முற்றிலும் காய்ந்துபோன ஆறாக மாறிநிற்கிறது.கருமணல் நிறைந்த காய்ந்துபோன காட்டாறு நிலமடந்தையின் கூந்தல் விரிந்து கிடப்பதைப் போல் பரந்து கிடக்கிறது. கரையோரத்து மரங்களில் குயில்கள் குத்திக்குடைவதால் உதிர்ந்த பூக்கள் அந்த மணற்கூந்தலில் சூடிய மலர்களாய்க் காட்சியளிக்கின்றன. ஆற்றின் ஓரங்களில் அலையலையாய்க் கிடக்கும் நுண்ணிய கருமணல், நிலமடந்தையின் தலைப்புறத்தில் நீண்டு சுருண்டுகிடக்கும் மயிர்ச்சுருளாய்த் தெரிகின்றன.
இதைப்போலவேதான் நெடுமலையைத் தோளாகச் சொன்னவர் அதனை அடுத்திருக்கும் சிறுகுன்றுகளை மார்புகளாகச் சொல்லவில்லை.
மலை முகடுகளை மார்புகளாகச் சொல்லாமற் சொன்னவர், அந்த மார்பிலாடும் ஆரமாக ஆற்றினைச் சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். மாறாக அதனை ஓர் உவமம் ஆக்குகிறார். முதலில், ஒரு தொலைவுக் காட்சியாக, மார்பிலிருந்து தொங்கும் மாலையை மலைகளினூடே பாய்ந்துவரும் காட்டாறாகச் சொன்ன புலவர், பின்னர் அண்மைக்காட்சியாக அதே ஆற்று மணற்பரப்பை மடந்தையின் கூந்தலுக்கு (கதுப்பு விரித்தன்ன) உவமையாக்குகிறார். ஏதேனும் ஓரிடத்தில் இதனை உருவகம் ஆக்கியிருந்தால் அடுத்த இடத்தில் அது உருவக நீட்சியாக இல்லாமற் இடர்ப்படும் என்றே, ஆற்றினைப்பற்றிய இரண்டு இடங்களிலும் புலவர் அதனை உவமைகளாகக் கூறியுள்ளார் எனலாம்.
புலவர் காட்டாற்றை, ‘அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல‘ என்று கூறுகிறார். துயல்வருதல் என்பது முன்னும் பின்னும் ஆடுதல். இந்தச் சொல்லுக்கு இங்கு என்ன வேலை? மார்பின் இருபக்கங்களினின்றும் இறங்கித் தொங்கி முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்கும் மாலையைப் போன்ற காட்டாறு எப்படியிருக்கும்? ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். இது தொலைவுக்காட்சி. எனவே தூரத்து மலையில் இப்படி ஒரு காட்சியைப் புலவர் பார்த்திருக்கவேண்டும். அவர் பார்த்த காட்சி என்னவாக இருக்கும்? அடுத்தடுத்த இரண்டு மலைச்சரிவுகளிலிருந்து இறங்கி வரும் இரண்டு காட்டாறுகள் அடிவாரத்தில் ஒன்றாய் விழுந்து, பின் எழுந்து முன்பக்கமாய்ச் சிறிது ஓடித் தாவிக்குதிக்கிறது என்று கற்பனைசெய்துகொள்ளலாம். இதோ பாருங்கள் ஒப்புமையை:-
இவ்வாறு ஓரங்களில் அரித்துக்கொண்டு ‘சலசல’ - வென்று ஓடும் நீரால் ஒரு மாயம் நேரிடுகிறது. ஆற்றுவெள்ளம் அடித்துக்கொண்டுவரும் இரும்புத் துகள்கள் அந்த மணலின் மேற்பரப்பில் படிந்து அந்த ஆற்று மணலையே கருமணலாக மாற்றிவிடுகின்றன. இதனையே அவர் அறல் என்கிறார். தொடர்ந்து ‘சலசல’-வென்று ஓடுவதால் மணலில் உள்ள சின்னஞ்சிறு கற்களும் ஒதுக்கப்பட்டு அந்த மணல் நுண்மையான தன்மை அடைகிறது. இதனை நாம் குறுமணல் என்கிறோம். புலவரோ நுணங்கு அறல் என்கிறார். நுணங்குதல் என்பது நுட்பமாதல். இந்த மணல் மேலாகக் கருமையாக இல்லாமல், அடிவரை கருமை படிந்துபோயிருப்பதால் காழக நுணங்கு அறல் என்கிறார். இவ்வாறு அலையலையாய்க் கிடக்கும் கருமணல் நிலமடந்தை தன் கூந்தலை விரித்துவிட்டிருப்பதைப் போல் இருக்கிறதாம். பெண்களில் சிலருக்கு கூந்தல் முழுக்கவே அலையலையாய் இருக்கும் (Curls). அவ்வாறு அமையாத மகளிருக்குக்கூட, அவர்கள் தலை மயிரை விரித்துப்போட்டிருந்தால் காதோர முடிகள் சுருண்டுகொண்டிருக்கும். புடை நெறித்து என்று புலவர் சொன்னதன் பொருள் இப்போது புரிகின்றதா? (மணலிலுள்ள அறலைக் கூர்ந்து கவனியுங்கள்)
சிறுபாணாற்றுப்படை 1.அ
மலையிலிருந்து புறப்பட்டு வரும் காட்டாற்றின் பரந்த கருமணற்பரப்பைப் பார்த்தோம். வேனிற்காலத்துக் காலை வெயிலில் அந்த மணற்பரப்பு இரும்பைப் போல் சூடேறிக்கிடக்கிறது. ஆற்றோரத்திலிருக்கும் பரல் கற்கள் வெப்பத்தோடு நடப்போரைப் பதம்பார்க்கக் காத்துக்கொண்டிருக்கின்றன.
இந்தச் சூட்டையும் பொருட்படுத்தாது சில கால்கள் ஆற்றுக்குள் இறங்கி நடக்கின்றன. அவை யாருடையவை? பார்ப்போம்.
மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போலச்
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்றுக்
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப் பூஞ் செம்மல் சூடிப் புடை நெறித்துக்
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல்
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து
வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப
வேனில் நின்ற வெம் பத வழிநாள்
காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்பப்
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ
இரும்பின் வெப்பம் போன்ற தன்மைத்தாகி, மெல்ல நடந்து சென்று,
சூடான வெயிலின் வெப்பம் ஏறிய சுடுகின்ற பரல்கள் (கால்களைக்) கிழிப்ப,
இளவேனிற்பருவம் நிலைபெற்ற வெம்மையான நிலைக்கு அடுத்த(முதுவேனிற்)காலத்தில்
காலை ஞாயிற்றின் கதிர் வெம்மையைச் செலுத்துதலால், 10
பாலைத் தன்மை நிலைபெற்றமையால் தோன்றிய பாலையாகிய, நீண்ட வழியையுடைய,
காட்டு நிலத்தின் தொடக்கத்திலுள்ள (கடப்ப)மரத்தின் கோடுகோடான நிழலில் தங்கி -
நிலமடந்தையின் விரித்த கூந்தல் போல காட்டாற்றுக் கரிய நுண்மணல் அலையலையாய்க் காட்சியளித்தாலும், அடிக்கின்ற வெயிலில் அது வெப்பமேறிய இரும்புத்தகடாய்க் கிடந்தது. அது காலை நேரம். முற்பகல்வேளையில்கூட வெயில் தகதகத்தது. அப்படியென்றால் அது என்ன பருவம்? அது வேனில் பருவம்.
தமிழர்கள் பருவங்களை ஆறாய்ப் பகுத்தனர். கார், கூதிர் (குளிர்), முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று ஓராண்டுக் காலத்தை அவர்கள் ஆறு காலங்களாகப் பகுத்தனர். மேனாடுகளில் காலவேறுபாடு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் அவர்கள் ஓர் ஆண்டை நான்கு காலங்களாகத்தான் பிரித்தனர். தமிழகத்தில் பருவவேறுபாடு அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாது. சிலர் வேடிக்கையாகக் குறிப்பிடுவர்:- ‘தமிழகத்தில் மூன்றே காலங்கள்தாம்; வெயில் காலம், அதிக வெயில் காலம், மிக அதிக வெயில்காலம்’ என்று (hot, hotter and hottest seasons)’. எனினும் இயற்கையின் மாற்றங்களை உன்னிப்பாய்க் கூர்ந்து கவனித்து, தமிழர்கள் பருவங்களை ஆறு எனப் பகுத்தனர். ஒவ்வொரு பருவத்துக்கும் இரண்டே மாதங்கள்தான். வருடமுழுவதும் வெயிலடிக்கிற ஒரு நாட்டில் இரண்டு மாதத்துக்கொருதரம் பருவம் மாறுவதாகக் கணக்கிட்டிருக்கும் தமிழரின் நுண்ணறிவு வியக்கவைக்கிறது. குளிர்காலம் முடிந்ததும் பனி அடிக்கும். அது இருட்டுவதற்கு முன்னரேயே தொடங்கிவிடும். மாலையிலேயே குளிர் தெரியும். அதுவே முன்பனிக்காலம். பின்னர் பனி தொடங்கும் நேரம் இரவில் தள்ளிக்கொண்டே போகும். சில நாட்களுக்குப்பின் அதிகாலையில் மிகவும் குளிரும். விடிந்த பின்னரும் குளிருக்கு இதமாக வெயிலில் அமர்ந்திருப்போரைக் காணலாம். அது பின்பனிக்காலம். பின்பனியும் முடிந்து வெயிற்காலம் தொடங்கும் பருவம் இளவேனில் காலம். அப்போது அடிக்கும் வெயில் உடம்புக்கு இதமாக இருக்கும். அதாவது வெயிலின் வெம்மை பதமாக இருக்கும். அதனையே புலவர் வெம்பதம் என்கிறார். இளவேனில் முடிந்து முதுவேனில் தொடங்கும்போது காலையில்கூட வெயில் சுரீரென்று அடிக்கும். அதன் பின்னர் பகல்முழுக்க ஒரே வெயில்தான். அதனையே புலவர் வேனில் நின்ற வெம்பத வழிநாள் என்கிறார். வழிநாள் என்பது அடுத்து வரும் நாள் – following day. ஆக இளவேனிலுக்கு அடுத்த நாள்தான் – முதுவேனில் தொடங்கும் நாள் - நம் புலவர் குறிப்பிடும்நாள். நம் பாடலின் கதையும் தொடங்கும் நாள் – அதாவது ஆனி முதல்நாள். கடும் வெப்பத்தின் தொடக்க நாள்.
நெற்கதிர்களை வட்டமாகப் பரப்பி, பூட்டிய மாடுகளை அவற்றின் மேல் ஓட்டுவார்கள். அவை நடை மெலியும்போது சாட்டையால் அடித்து ஊக்குவார்கள். புலவர்கள் இதனைக் கடாவுறுத்தல் என்பார்கள். இங்கே கதிரவன் தன் கதிர்களை இவ்வாறு கடாவுறுக்கிறதாம். அதனால் வெப்பக் கதிர்கள் வேகமாக வந்து கடுமையாகத் தாக்குகின்றன. இதனால், இரும்புத்துகளாய்க் கிடக்கும் கருமணல் வெப்பமேறிய இரும்புத்தகடு போல் ஆகிவிடுகிறதாம். அயில் உருப்பு அனைய ஆகி என்கிறார் புலவர். அயில் என்பது இரும்பு. உருப்பு என்பது வெப்பம்.
இந்தப் பொசுக்குகின்ற மணலில் எவ்வாறு நடப்பது? மணலோ காய்ந்துபோன குறுமணல். கால் வைத்தால் பொதக்கென்று உள்ளே போகும். எனவே காலை ஊன்றி வைக்காமல் மேலாக வைத்து வைத்து நடக்கவேண்டும். அதாவது ‘பொத்துனாப்புல’ நடக்கவேண்டும். இதனையே புலவர் ஐது நடந்து என்கிறார். ஐ என்றால் மென்மை என்று பொருள். ஐது நடப்பது slender walk. அவர்கள் இந்த குறுமணற் பரப்பைக் கடக்கிறார்கள்.
இதைக் கடந்து கரையேறும் முன் அங்கே பரந்து கிடக்கும் பரல் கற்களைத் தாண்டிப் போகவேண்டும். நெடுந்தூரம் ஆற்றில் உருண்டு இவை நாட்டுக்குள் வரும்போது வழவழப்பான கூழாங்கற்களாய் மாறிவிடும். இதுவோ மலையை ஒட்டிய காட்டாற்றுப் பகுதி. இந்தப் பரற்கற்கள் இன்னும் கூர்மையாகவே இருக்கின்றன. போதாக்குறைக்கு வெயிலினால் ஏறிய வெப்பம் வேறு. இவற்றின் மீது எவ்வளவுதான் ஐது நடந்தாலும் இந்தச் சூடான கற்கள் காலைப் பொசுக்குவது மட்டுமன்றி, பாதங்களைக் கிழித்தும்போடுகின்றன. வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப என்கிறார் புலவர்.
அப்பாடா! ஒருவழியாக அவர்கள் அக்கரை போய்ச் சேர்ந்துவிட்டார்கள். கரையேறிப் பார்த்தால் கண்ணுக்கெட்டியவரை பொட்டல்வெளி. அதில் ஒரு பாதை நீண்டு நெளிந்து செல்கிறது. இதனைத்தான் புலவர் பாலை நின்ற பாலை நெடுவழி என்கிறார்.
அப்பாடா! ஒருவழியாக அவர்கள் அக்கரை போய்ச் சேர்ந்துவிட்டார்கள். கரையேறிப் பார்த்தால் கண்ணுக்கெட்டியவரை பொட்டல்வெளி. அதில் ஒரு பாதை நீண்டு நெளிந்து செல்கிறது. இதனைத்தான் புலவர் பாலை நின்ற பாலை நெடுவழி என்கிறார்.
இந்த வறண்ட பாலைநிலத்தின் தொடக்கத்தில் (சுரன் முதல்) அவர்கள் நிற்கிறார்கள். சுரம் என்பது வறண்ட நிலப்பரப்பு. முதலில் ஆற்றைக் கடந்த வருத்தம் தீரச் சிறிது ஓய்வெடுத்துச் செல்லலாமே என்று அவர்கள் சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். முதலில் அவர்கள் நின்றிருந்த ஆற்றுப் பக்கத்துக் கொல்கரையில் ஒரு நறும்பொழிலே இருந்தது. ஆற்றைத் தாண்டி மறுபக்கம் வந்தபின் ஒரே வறட்சி. ஒரே ஒரு காய்ந்த மரா மரம் அங்கு நின்றுகொண்டிருக்கிறது. மராமரம் என்பது ஆச்சா மரம் எனும் sal tree. இதன் பெயர் Shorea Robusta. நெடுநெடுவென்று மிக உயரமாக வளரும். உச்சியில் கிளைகள் பரந்திருக்கும். பாலை நிலக் கடுமையையும் தாங்கக் கூடியது. இந்த வேனில் காலத்தில் இலைகளெல்லாம் உதிர்ந்து மரம் மொட்டையாக நிற்கிறது. குச்சி குச்சியாய் நின்றுகொண்டிருக்கும் அந்த மரத்தின் நிழல் கொழுமையாகவா இருக்கும்? வற்றிப்போன கிளைகளின் நிழல் வரி வரியாகத்தானே இருக்கும். இதனையே புலவர் வரி நிழல் என்கிறார். இந்த வரிநிழலில் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். இதுதான் வரி நிழல்.
யார் இந்த ‘அவர்கள்’? முதலில் இயற்கைக் காட்சிகளையே காட்டிக்கொண்டுவருகிறார் புலவர். மலையே தோள்களாயுள்ள மாநில மடந்தை – அவள் மார்பினில் ஆடும் மாலை போன்று குதித்துவரும் வெள்ளருவி. அதனை அண்மையில் காணும்போது காய்ந்துபோன காட்டாறு – கரை மரத்தின் குயிலுதிர்த்த காய்ந்துபோன புதுப்பூக்கள் – விரித்துவிட்ட கூந்தல் போன்று அகன்று பரந்து வரும் கருமணல் – அதன் ஓரத்தே அலையலையாய் நெறித்துக்கிடக்கும் காழக நுணங்கறல் – இவ்வாறு காட்டிய புலவர் வேறு மனிதர்களைக் காட்டவில்லை.
அவர் முதலில் காட்டுவது கொதிக்கின்ற குறுமணலில் குறுநடை போடும் இரு கால்கள். பரந்துகிடக்கும் பரல்கற்களில் பட்டுக் கிழிந்த பட்டுப் பாதங்கள். அசைவுதீர அசைந்திருக்கும் ஓர் உருவம். இந்தக் காலத்துக் கைதேர்ந்த திரைப்பட இயக்குநரைக் காட்டிலும் வெகு திறமையாகக் கதையை நமக்கு அறிமுகம் செய்து, கதைமாந்தரைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கதைக்குள் கொண்டுவரும் புலவரின் கலைநுணுக்கம் நம்மை வியப்பிலாழ்த்துகிறது.
பின்னர்தான் சிறிது சிறிதாக அந்தக் காலுக்குரியவரைக் காட்டுகிறார் புலவர். அவர் நம் கண்முன்னே விரித்துக்காட்டும் காட்சி ஓர் அழகோவியம். அந்த அழகுக் காட்சியை அவர் காட்டுகிற அழகே அழகு!
.. தொடரும்
ப.பாண்டியராஜா
சிறுபாணாற்றுப்படை 2
மலையிலிருந்து புறப்பட்டு வரும் காட்டாற்றின் பொசுக்குகிற கருமணற்பரப்பில் பொத்திப் பொத்தி நடந்து செல்லும் கால்களைப் பார்த்தோம். வேனிற்காலத்துக் காலை வெயிலில் அந்த ஆற்றோரத்திலிருக்கும் பரல் கற்கள் வெப்பமேறிப்போய் கால்களைப் பதம்பார்க்க, அடுத்த கரையேறி, அங்கிருக்கும் மராமரத்து வரிநிழலில் இளைப்பாறும் உருவத்தையும் பார்த்தோம்.
அந்தக் கால்களுக்குரிய உருவம் யாருடையது?
முதலில் கார்மேகம் போன்ற ஒரு கரிய படிவம் நம் கண்முன் தெரிகிறது. நம் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு இழுக்க, கரும்படிவம் முன்னோக்கி நகர, வானத்திலிருந்து மெல்ல இறங்கிவரும் மழைமேகமோ என்று நாம் எண்ணுகிறோம். இல்லை, இல்லை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அது ஒரு பெண்ணின் விரித்துப்போட்ட கருங்கூந்தல்! மருட்டுவது போலன்றி, பார்ப்போருக்கு அருள்செய்வது போல் தோன்றுகிறது. எண்ணெய் பூசாத பரட்டைத் தலைக் கூந்தல் அல்ல அது. நன்றாக எண்ணெய் தடவியதால் பளபளவென்று கருமையாகக் காட்சியளிக்கிறது அந்தக் கார்மேகக் கூந்தல். புலவர் கூறுகிறார்,
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி
நெய் கனிந்து இருளிய கதுப்பின் -
‘தட தட’-வென்று ஓங்கியடித்துக்கொண்டுவரும் மழையைக் கொண்டுவரும் மேகத்தைப்போல் அல்லாமல், மெதுவாக மழையைக் கொண்டுவந்து மென்மையாக இறங்கும் மேகத்தைபோல் அழகுகொண்டு, பார்ப்போருக்கு அருள்செய்வதுபோன்ற, எண்ணெய்பூசிக் கருமையாகக் காட்சிதரும் கூந்தல் -
மெதுவாக இறங்கித் தரைவரை தாழ்ந்து வரும் மேகமே ‘ஐது வீழ் இகு பெயல்’. அவ்வாறு மேலிருந்து கீழிறங்கும் மழை மேகம் போல் அவளின் கூந்தல் உச்சந்தலையிலிருந்து இறங்கித் தாழத் தொங்குகிறது. மழை மேகம் போன்று என்று சொல்லாமல் அந்த மேகத்தின் அழகினை இந்தக் கூந்தலும் கொண்டிருக்கிறது என்கிறார் புலவர். ஆனால் தொலைவிலிருந்து பார்க்கும்போது வானத்துக்கும் பூமிக்குமாய் நிற்கும் அந்த மழைமேகம் பார்ப்போரை மருட்டுவதாக இருக்கும். அப்படியின்றி, இந்தக் கருங்கூந்தல் பார்ப்போரை மகிழ்விக்கக் கூடிய பொலிவுடன் விளங்கியதாம். யாராவது ஒருவர் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டால், “அவர் முகத்தில் அருளே இல்லை” என்று இன்று பேச்சுவழக்கில் நாம் கூறுவதை, புலவர் அன்று இலக்கியவழக்கில் கையாண்டிருக்கிறார் எனலாம். மகிழ்ச்சிப் பொலிவுடன் விளங்குகிறது அந்தக் கூந்தல்..
இன்றைக்கும் படிக்காத கிராமத்துப்பெண்கள் பொதுவாகத் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொள்வதில்லை. எனவேதான் சங்க காலத்தில் ஒரு ஏழைப் பெண் தலைக்கு எண்ணெய் தடவினால் அது புலவர் பாடும் பொருளாகிறது. அந்த எண்ணெயையும் செழும்பத் தேய்த்திருக்கிறாள் அவள். நெய் கனிந்து என்கிறார் புலவர். நெய் என்பது இங்கு எண்ணெய். நெய்பூசாத தலைமயிர் செம்பட்டைபாய்ந்துபோயிருக்கும். ஆனால் இது வழக்கமாக நெய் பூசப்படும் தலை. அதனால் தலைமயிர் இருண்டுபோயிருக்கிறதாம். அதுவே நெய் கனிந்து இருளிய கதுப்பு.
இப்பொழுது நம் பார்வை இன்னும் பின்னிழுக்கப்பட்டு, ஒருக்களித்துச் சாய்ந்துகிடக்கும் ஒரு பெண்ணுருவம் நம் கண்முன் தோன்றுகிறது. அடடா! அந்த வனப்பும் அழகும் ஒரு மயிலை நினைவூட்டுகின்றன. மயிலே நாணிப்போகுமாம் அந்த வனிதையின் வனப்பைப் பார்த்து.
கதுப்பு என
மணி வயின் கலாபம் பரப்பி பல உடன்
மயில் மயில் குளிக்கும் சாயல்
கூந்தலைப் போன்று, நீலமணி பதித்ததன்ன நீலக்கண்களைக் கொண்ட தோகையை விரித்து ஆடும் மயிற்கூட்டத்தின் மயில்கள் வெட்கி மறைந்துகொள்ளும் அளவுக்கு மென்மையான சாயல் –
குளி என்பதற்கு மறைந்துகொள் என்ற ஒரு பொருள் உண்டு.
நீண்டுதொங்கும் மயில் தோகையை மகளிரின் கூந்தலுக்கு உவமிப்பது வழக்கம்தான். எனினும் நீலமணி பதித்த மயில் கூந்தல் என்பது எத்துணை பொருத்தம் என்பதைப் படத்தில் பாருங்கள். பச்சைநிறத் தோகையில் நீலக் கண்கள் இருப்பதைத்தான் மணி வயின் கலாபம் என்கிறார் புலவர். இங்கே கதுப்பு – கலாபம் தோற்றதுக்கான உவமை – நிறத்துக்கு அல்ல.
இப்பொழுது நாம் பார்க்கும் கோணம் மாறி, சாய்ந்து அமர்ந்திருப்பவளின் பாதங்கள் நமக்குத் தெரிகின்றன. ஓடிக்களைத்த நாய் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்குமே. அந்த நாக்கைப் போல இருக்கிறதாம் அவளின் பாதங்கள்.
சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின்
சாய்ந்து (தளர்வடைந்து) வருந்துகின்ற நாயின் நாக்கினைப் போன்ற, ஆனால் நல்ல அழகைத் தனதாக்கிக்கொண்ட ஒளிவிடும் அணிகலன்கள் ஒன்றுகூட இல்லாமலிருக்கும் பாதங்கள் –
நாயின் நாவின் நிறத்துக்கும் உருவத்துக்கும் ஒப்புமை இது. ஓடிக்களைத்த நாய்தான் (சாஅய் உயங்கு நாய்) நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டிருக்கும். சாய் என்பதற்குத் தளர், சோர்வடை என்று பொருள். இந்தப் பெண்ணுமே தளர்ந்து சோர்வடைந்துபோய்த்தானிருக்கிறாள். உயங்கு என்பதற்கு வருந்து, துவண்டிரு என்று பொருள். ஓடிக்களைத்த நாய் போல் இவள் நடந்து களைத்திருக்கிறாள். அவ்வாறு இருக்கும் சில நாய்களின் நாக்கிலிருந்து நீர் ஒழுகிக்கொண்டிருக்கும். அக் காட்சி காண்பதற்கு இனிமையாக இராது. அப்படியின்றி, அந்த நாயின் நாக்கின் நல்ல அழகையே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக, உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ என்கிறார் புலவர். அசைதல் என்பதற்குத் தங்குதல் என்று இங்கே பொருள் கொள்ளலாம்.
இப்போது நம் பார்வையை மேலே இழுக்கிறார் புலவர். அந்தப் பெண்ணின் இரண்டு தொடைகளில் மேலே கிடக்கும் ஒரு தொடையின் அமைப்பு நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
அடி தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின்
அந்தப் பாதங்களைத் தொடர்ந்து, இழுத்துக்கொண்டே, நிலத்தில் தோய்கின்ற பெரிய பெண்யானையின் பருமனான துதிக்கையைப் போன்று, ஒருங்கே நெருங்கி இணைந்த தொடைகள் –
நடந்து வரும் யானை துதிக்கையை நீளமாகத் தொங்கப்போட்டுக்கொண்டு வரும். மேலும் அது நிலத்தை மிக ஒட்டி உரசுவதுபோலிருக்கும். அப்போது அந்தத் துதிக்கை நீளமாகவும், திரட்சியாகவும் அகலமாகவும் இருக்கும். இதனையே நீள் திரள் தடக்கை என்கிறது நெடுநல்வாடை (170). நம் புலவரோ ‘ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தடக் கை’ என்கிறார். தந்தங்களால் தடையுறா வண்ணம் காட்சியளிக்கும் துதிக்கை என்பதற்காக பிடி தடக்கை என்கிறார் புலவர். பிடி என்பது பெண்யானை. பெரிய யானை என்பதற்காக இரும்பிடி என்கிறார். இரும் என்பதற்குக் கரிய என்றும் பொருள் உண்டு. யானை கருப்பாகத்தானே இருக்கும். எனவே இங்கு இரும் என்பதற்கு மிகப் பெரிய என்ற பொருள் பொருத்தமானது. பெரிய யானையின் துதிக்கையும் பெரியதாகவேதான் இருக்கும். இருப்பினும் ஐயத்திற்கிடமின்றி தடக்கை என்கிறார் புலவர். தடம் என்பது அகலம். ஈர்ந்து நிலம் தோயும் என்பதால் நீளம் குறிக்கப்பட்டது. இரும்பிடி என்பதால் பருமன் குறிக்கப்பட்டது. தடக்கை என்பதால் அகலம் குறிக்கப்பட்ட்து. இவ்வாறு ஒரு முப்பரிமாண கோணத்தை நமக்குக் காட்டுகிறார் புலவர்.
தொடைகளை அடுத்து அவளின் பின்புறமாக நம் பார்வையை இழுத்துக்கொண்டு மேலே சென்று தலைஉச்சியைக் காட்டுகிறார் புலவர்.
அப்பெண்ணின் நீண்ட பருத்த தொடையைப் போன்று ஓங்கி வளர்ந்த மலைவாழை மரத்தின் பூவைப் போல, அப் பெண்ணின் கொண்டை அலங்காரம் அமைந்திருக்கிறது.
குறங்கு என
மால் வரை ஒழுகிய வாழை, வாழை
பூ என பொலிந்த ஓதி -
அந்தத் தொடைகளைப் போன்று, பெருமையுடைய மலைகளில் வளரும் வாழை மரத்தின் வாழைப்பூவைப்போன்ற அழகுள்ள கூந்தல் முடிப்பு –
ஓதி என்பது பொதுவாகப் பெண்களின் கூந்தலைக் குறித்தாலும், இச் சொல்லைக் குறிப்பிடும்போது புலவர்கள் இதனை வாழைப்பூவுக்கு ஒப்பிடுகிறார்கள். எனவே இது தூக்கி முடியப்பட்ட ஒருவகைக் கொண்டை அமைப்பு எனலாம்.
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன – நற் 225:3,4
என நற்றிணையில் வருவதையும் காணலாம்.
அடுத்து, நமது பார்வையைத் தோளுக்குக்கீழே சற்று இறக்கி, அணிகலன்களுக்குள்ளே புதைந்து கிடக்கும் அவளின் அழகிய மார்புகளைக் காண்பிக்கிறார் புலவர்.
ஓதி
நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை
அந்தக் கூந்தல் முடிப்பினில் சூடிய, செறிந்த கிளைகளைக் கொண்ட வேங்கையின் புதுப்பூவை விரும்பி மகிழ்ச்சியுடன் வண்டுகள் ஒலிக்கும் பூந்தாதுகள் இருக்குமே அந்தப் பூந்தாதுகள் உதிர்ந்துகிடக்கும், புதிதாய் அரும்புவிட்டிருக்கும் கோங்க மரத்தின் ஒளிரும் மொட்டுகளையும் இகழும், அணிகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கும் வெம்மையான முலைகள் -
சுணங்கு என்பது மலர்களில் உள்ள பூந்தாது. இங்கு வேங்கை மரத்து மலர். வேங்கை என்பது ஒரு வகைக் காட்டுமரம். Indian Kino Tree எனப்படும். இதன் பெயர் Pterocarpus marsupium. இது மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டது. எனவே அதன் தாது (Pollen) மஞ்சள் நிறமுடையது. சுரும்பு எனப்படும் ஒருவகைத் தும்பி வேங்கை மலர்களினின்றும் தேனெடுக்க வரும்போது இந்தப் பூந்தாதுக்களை உழப்புவதால் இந்தப் பொடிகள் வெளியில் சிதறிவிழுகின்றன. அப்படி விழும் பூந்தாது வேங்கை மரத்தின் அருகிலிருக்கும் கோங்கு மரத்தின் புதிதாய்த் தோன்றியிருக்கும் மொட்டுக்களின் மீது படிகின்றது. பிதிர்தல் என்பது உதிர்தல். யாணர் என்பது புதியாய்த் தோன்றுதல். அதனை fresh எனலாம். கோங்கு என்பது ஒருவகைக் காட்டுமரம் (Cochlospermum religiosum). அதன் புதிய மொட்டுகள் பூக்கும் பருவத்தில் மின்னுவதைப் படத்தில் பார்த்தீர்களா! அதுதான் அவிர் முகை. அவிர்தல் என்றால் ஒளிர்தல். இந்த முகையின் மீது சுணங்கு (பூந்தாது) உதிர்ந்து கிடந்தால் எப்படி இருக்கும்? இந்தச் சுணங்கு உதிர்ந்த கோங்கின் அவிர் முகையை எள்ளி நகையாடுவதைப் போல் இருக்கிறதாம் அணிகளுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் அந்த இளம் மங்கையின் மார்பகங்கள்
கோங்கு முகைகள் பச்சை நிரத்தில் ஓரளவு மஞ்சள்பூத்திருக்கும். அதன் மீது வேங்கை மலரின் மஞ்சள்நிற தாது உதிர்ந்து விழுந்ததால், மஞ்சள் நிறப் பொடியால் மறைந்தும் மறையாமலும், தாதுவின் நிறத்தால் மினுமினுத்துக்கொண்டும் இருக்கிறது கோங்கின் முகை. கோங்கின் முகை மங்கையின் மார்புக்கு உவமை என்றால், அதன்மீது உதிர்ந்துகிடக்கும் சுணங்கு, அந்த மார்பகத்தை மறைத்துக்கிடக்கும் அணிகலன்களுக்கு உவமை ஆகிறது (பூண் அகத்து ஒடுங்கிய). அப்படியென்றால் அவள் பொன்னால் செய்த பூண் அணிந்துகொண்டிருந்தாளா? அவளது கால்களோ அணிகலன்கள் இல்லாமல் வெறுமையுடன் இருப்பதை மேலே பார்த்தோம். எனவே, வறுமையில் வாடும் நிலையிலுள்ள பெண் அவள். அப்படிப்பட்டவள் மார்பில் என்ன பூண் அணிந்துகொண்டிருப்பாள்? செல்வர் வீட்டுப்பெண்கள் பொன் வளையல்கள் அணிந்திருக்கும்போது, சாதாரண குடும்பத்துப் பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். அதைப்போல இந்த மங்கையும் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் சாதாரணக் கல் பதித்த நகைகளோ, பாசிமாலைகளோ அணிந்திருக்கலாம்.
வேங்கை மரம் என்பது மிக உயரமாய் வளரக்கூடியது. சுமார் 60 அடி வரை கூட அது வளரும். கோங்கு மரமோ குட்டையான மரம். சுமார் 25 அடி மட்டுமே வளரக்கூடியது. எனவே உயரமான வேங்கைமரத்துப் பூக்களின் தாது உதிர்ந்து விழும்போது அருகில் குட்டையாக இருக்கும் கோங்கு மரத்தின் மொட்டுகளின்மீது படிவது இயற்கைதானே!
இந்த நீண்ட உவமையை இரண்டாகப் பிரிக்கலாம்.
பூந்தாதைக் குறிக்கும் சுணங்கு என்ற சொல்லுக்குப் பெ\ண்களின் மேனியில் காணப்படும் அழகுத்தேமல் என்ற பொருளும் உண்டு. எனவே,
ஓதி
நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி
களி சுரும்பு அரற்றும் சுணங்கின்
என்பது வரையிலான அடிகளில் அந்தப் பெண்ணின் தோளுக்குக் கீழே, மார்புக்குச் சற்று மேலே உள்ள பகுதியில் படர்ந்திருக்கும் அழகுத் தேமலைப் புலவர் குறிப்பதாகக் கொள்ளலாம். ‘களி சுரும்பு அரற்றும் சுணங்கின்’ என்ற தொடருக்கு ‘மகிழ்ந்திருக்கும் வண்டுகள் ஒலிக்கும் சுணங்கு(பூந்தாது) போன்ற சுணங்கு (அழகுத்தேமல்)’ என்று பொருள் கொள்ளவேண்டும். இப் பாடலில் இவ் விரண்டையும் ஒரே சொல்லால் குறித்திருப்பது புலவரின் திறத்தைக் குறிக்கிறது எனலாம்.
இந்தப் பூந்தாதுகள் பொன்னிறத்தன. சற்றே மாநிறமுள்ள மகளிர் இந்தப் பொன்னிறத் தாதுவைத் தம் மேனியில் பூசிக்கொள்வர்போலும். அல்லது, இளம் மகளிரின் மேனியில் ஏற்படும் ஒரு வகை மினுமினுப்பு இந்தப் பூந்தாது போன்று மின்னுகிறது என்று புலவர் பாடியிருக்கலாம்.
அடுத்து மார்பின் மேல்பகுதியினின்றும் நம் பார்வையைச் சற்றுக் கீழிறக்கி அந்தப் பெண்ணின் எடுப்பான மார்பகங்களைக் காட்டுகிறார் புலவர் எனலாம். இந்த மார்பகத்தின் மேலும் அந்தச் சுணங்கு படர்ந்திருக்கிறது. அது இந்த வேங்கை மரத்துப் பூந்தாது, அடுத்திருந்த கோங்கு மரத்தின் இளமொட்டுகளின் மேல் உதிர்ந்துகிடப்பதுபோல் இருக்கிறதாம்.
சுணங்கு பிதிர்ந்து
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை
காட்சிப்படுத்துதல் கலையில் மிகச் சிறந்த நம் புலவர், தாம் காணும் காட்சியை நாமும் காணும்வண்ணம் அப்படியே நம் கண்முன் காட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். அத்துடன் நில்லாமல் அக் காட்சியை நாம் உணரும் வண்ணமும் செய்வது புலவரின் தனித் திறமை. பூணகத்து ஒடுங்கிய வெம் முலை என்று அவள் மேனியின் வெப்பத்தை நாம் உணர்கின்ற வகையில் பாடியிருக்கும் புலவரின் நுண்மாண்நுழைபுலம் போற்றுதற்குரியதன்றோ! சில மேனாட்டுத் திரையரங்குகளில் மலர்களைக் காட்டும்போது அவற்றின் நறுமணத்தையும் நாம் நுகரும் வண்ணம் அரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் புலவர் செய்துவிட்டுப்போயிருக்கிறார்.
அடுத்து, மார்பினின்றும் நம் பார்வையைச் சற்றே மேல் நோக்கி நிமிர்த்துகிறார் புலவர். சிறிதே திறந்திருக்கும் சிவந்த உதடுகளுக்குள்ளே சின்னஞ்சிறு பற்கள் பளிச்சிடுகின்றன. வெயிலின் கடுமையால் உலர்ந்துபோன அந்த உதடுகளை எச்சில்கூட்டி ஈரப்பதமாக்குகிறாள் அந்தப் பெண். வாயில் ஊறும் உமிழ்நீரில் குளித்து பற்களும் ஈரப்பதமாக இருக்கின்றன.
முலை என
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின்அந்த முலைகளைப் போன்று, பெரிய குலைகளையுடைய பனையில் வளரும் நுங்கில் உள்ள இனிய சுவைநீரே தாழ்ந்துபோகும் அளவுக்கு எச்சில் ஊறிய பற்கள் –
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர் - குறள் 113:1
என்ற வள்ளுவரும், இதைப் பார்த்துத்தான் இப்படி எழுதியிர்ப்பார் போலும். மார்பிலிருந்து பற்களைக் காட்ட, இடையில் நுங்கு வழியே நம்மை அழைத்துச் செல்கிறார். அந்த திரண்ட மார்புகளைப் போல் உருண்டிருக்கும் நுங்குகளைச் சொல்லி அதனுள் இருக்கும் சுவைநீரின் இனிமையையே பழித்து நிற்கும் தன்மைத்தான உமிழ்நீருக்குள் ஊறிக்கிடக்கும் பற்களைக் காட்டுகிறார் புலவர்.
அந்தச் சிறிய பற்களைப் பார்த்ததும் புலவருக்கு முல்லை அரும்புகள் நினைவுக்கு வருகின்றன.
எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை -
அந்தப் பற்களைப் போல, குல்லைப் பயிர்கள் வளர்ந்திருக்கும் அழகிய வெளியில் குவிந்திருக்கும் அரும்புகள் சற்றே வாய் அவிழ்ந்திருக்கும் முல்லை –
மணங்கமழும் காட்டுச் செடிகளைக் குல்லை என்பார்கள். அந்த குல்லைச் செடிகள் வளர்ந்துகிடக்கும் பரந்த நிலமே குல்லை அம் புறவு. புறவு என்பது பச்சைப் பசேலென்ற புதர்கள் கொண்ட புல்வெளி. அந்த மணம்பரப்பும் செடிகளினூடே வளர்ந்து படர்ந்து கிடக்கும் முல்லைக் கொடியின் மூடிய மொட்டுகள் அவிழத்தொடங்கும் நிலையில் காடே கமகமக்கும்.
முல்லை சான்ற கற்பின் மெல் இயல்
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் -
அந்த முல்லையின் பெயர்கொண்ட முல்லைக் கற்பினையும், மெல்லிய இயல்பினையும், இளைமையான் மானின் பார்வையையும், ஒளிபொருந்திய நெற்றியையும் கொண்ட விறலியர் –
என்று தம் வருணனையை முடிக்கிறார் புலவர். முல்லைத் திணையின் உரிப்பொருள் இருத்தல். விட்டுப்பிரிந்த கணவனோ காதலனோ வீடு திரும்பும் வரையில் பொறுமையுடன் இருத்தல். அதாவது மனத்தின் துயரங்களை அடக்கிக்கொண்டு ஆற்றியிருத்தல். இங்கே, ஏழ்மைநிலையிலும் அதனை இனிதாக ஏற்றுகொண்டு வளப்பமான வாழ்வுக்குக் காத்திருக்கும் விறலியை முல்லை சான்ற கற்பினள் என்பது எவ்வளவு பொருத்தமானது!
முல்லை சான்ற கற்பின் மெல் இயல்
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
என்ற முத்தாய்ப்பான அடிகள் இவ்வளவு நேரமும் பகுதி பகுதியாய் காட்டிக்கொண்டிருந்த பெண்ணின் உருவத்தை முழுவதுமாய் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.
இங்கே ஓர் ஐயம் எழலாம். புலவர், தொடக்கத்தில் மழைமேகம் போல் கீழே இறங்கி விழும் விறலியின் கூந்தலைத் தோகை போன்ற கதுப்பு என்றார். பின்னர் அதே விறலியின் கூந்தலை வாழைப்பூ போன்ற (தூக்கி முடிந்த) ஓதி என்றார். இது முரண்பாடாக இல்லையா?
சில பெண்கள் தம் கூந்தலைச் சில பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவையும் வெவ்வேறான தலையலங்காரங்களாகச் செய்வர். குறிப்பாக, கூந்தலை மூன்று பாகங்களாகப் பிரித்து அவற்றில் நடுவிலுள்ளதை உயர்த்தி நிறுத்திய கொண்டையாகவும், மற்ற இரண்டுபாகங்களையும் கொண்டையின் இரண்டு பக்கங்களிலும் தாழ்ந்து இறங்கும் விரிகூந்தலாகவும் போட்டுக்கொள்வர். அப்படிப்பட்ட கூந்தலமைப்பில் தாழ்ந்து இறங்கும் விரிந்த கூந்தலை முதலிலும், உயர்த்தி முடித்த கொண்டையை அடுத்ததாகவும் புலவர் வருணித்துள்ளார் எனலாம். இந்தப் படங்கள் இதனை ஓரளவு விளக்கும்.
இப்பொழுது, புலவரின் வருணனையை முழுவதுமாகப் பாருங்கள்.
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என
மணி வயின் கலாபம் பரப்பி பல உடன் 15
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என 20
மால் வரை ஒழுகிய வாழை வாழை
பூ என பொலிந்த ஓதி ஓதி
நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி 25
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல் இயல் 30
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
அடிநேர் உரை:-
மெல்லிதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையின் எழிலினைக்கொண்டு, மருட்சியடைந்து,
எண்ணெயினால் குழைந்து இருண்ட கூந்தலினையும்; கூந்தலைப் போன்று,
(நீல)மணி போன்ற கண்களையுடைய தோகைகளை விரித்து, பலவும் ஒருசேர்ந்த 15
மயில்கள் - அம்மயில்கள் (நாணி)மறைந்துகொள்ளும் மென்மையினையும்; ஓடியிளைத்து
வருந்துகின்ற நாயின் நாக்கினுடைய நல்ல அழகினை(த் தனதாக) வருத்தி,
ஒளிரும் அணிகலன்கள் (இல்லாது)பொலிவழிந்த அடியினையும்; அடியினோடே தொடர்புடைத்தாய்,
இழுக்கப்பட்டு நிலத்தில் படியும் கரிய பெண்யானையின் பெரிய கையைப் போல
திரண்டு, ஒருங்கே நெருங்கி இணைந்த தொடைகளையும்; தொடை போன்று 20
பெருமையையுடைய மலையில் வளரும் வாழை - அவ்வாழையின்
பூவைப்போல் பொலிவு பெற்ற மயிர்முடிப்பினையும்; அம் மயிரினில்(சூடுகின்ற)
செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர் (என நினைத்து)விரும்பி,
கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்; அப் பூந்தாதுகள் சிதறிக்கிடக்கும்
புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து, 25
அணிகளுக்குள் ஒடுங்கிக்கிடக்கும் வெம்மையான முலைகளையும்; (அம்)முலைகளைப் போன்ற
பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள
இனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்; அப்பற்களைப் போல
(கஞ்சங்)குல்லையாகிய அழகிய முல்லை நிலத்தில் குவிந்த அரும்புகள் மலர்ந்த
முல்லை சூடுதற்கமைந்த கற்புடைமையும்; மெல்லிய இயல்பினையும்; 30
மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியர் -
முல்லை, மல்லிகைச் சரங்களுக்கு மூன்றுவிதப் பண்புகள் உண்டு. முதலாவது அவற்றின் அழகிய வெண்மை நிற உருவத்தோற்றம். அடுத்து அவற்றினின்றும் வீசும் நறுமணம். மூன்றாவதாக அவற்றை அடுக்கடுக்காக எடுத்துத் தொடுத்துக் கட்டியிருக்கும் நேர்த்தி. அதிலும் மதுரை மல்லிகையின் மதுரைக் கட்டு அமைந்த சரத்துக்கு ஈடு இணை தமிழகத்தில் இல்லை என்பர்.
இந்தக் ‘கேசாதி பாத–பாதாதி கேச’ வருணனையின் அழகும் மூன்று விதமானது. ஈண்டு, முதலாவது சொற்கள். புலவர் பயன்படுத்தியிருக்கும் சொற்களின் பொருத்தத்தின் அழகுதான் என்னே! அடுத்தது உவமங்கள். அந்தச் சொற்கள் காட்டும் உவமங்கள் உணர்த்தும் நேர்த்திதான் என்னே! மூன்றாவது அந்த உவமங்களைத் தொடுத்திருக்கும் கட்டுமானம். அந்த உவமங்களைஒன்றன் பின் ஒன்றாக, ஒன்றைத் திடர்ந்து ஒன்றாக, அடுக்கடுக்காகப் புலவர் அவற்றைத் தொடுத்துச் சேர்த்திருக்கும் கட்டமைப்பின் கவின்தான் என்னே!
கொடுக்கப்பட்டுள்ள பாடத்தில், வெவ்வேறு உவமங்கள் வெவ்வேறு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன. அந்த உவமைகள் ஒன்றோடொன்று பின்னப்பட்டிருப்பதை உற்றுப் பாருங்கள். அந்த இடங்கள் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன. ஓர் உவமையின் இறுதி அடுத்த உவமையின் தொடக்கமாக அமைந்திருக்கும் அழகைக் கவனியுங்கள். பின்னாளைய அந்தாதிகளுக்கு இது முன்னோடியாக இல்லையா!
மூன்று முடிச்சு திரைப்படத்தில் வரும் வசந்தகால நதிகளிலே என்ற பாடல் இவ்வாறு கோத்துக்கோத்து வருவதைக் காணலாம்.
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்
இருபதாம் நூற்றாண்டுக் கவிப்பேரரசின் பாடலுக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நல்லூர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுப்படை விறலியின் வருணனை ஒரு முன்னோடியாகக் காணப்படுவது விந்தையே!

சிறுபாணாற்றுப்படை 3
மலையிலிருந்து புறப்பட்டு வரும் காட்டாற்றின் பொசுக்குகிற கருமணற்பரப்பில் பொத்திப் பொத்தி நடந்து செல்லும் கால்கள் விறலியின் கால்கள் எனப் பார்த்தோம்.
அந்தப் பெண் தனியாகவா வந்திருப்பாள்? நம் பார்வையைப் புலவர் இன்னும் பின்னுக்கிழுக்க, ஒரு விறலியர் கூட்டமே அங்கு தென்படுகிறது.
அவர்களை
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர்
என்கிறார் புலவர். அவர்களின் பார்வையில் மானின் பார்வை இருப்பது போன்ற ஒரு மருட்சி தெரிகிறது. இருப்பினும் அவர்களின் நெற்றியோ பொலிவுடன் விளங்குகிறது.
ஒரு விறலியின் பல தோற்றங்களைக் காட்டிக்கொண்டுவந்த புலவர் நத்தத்தனார் இறுதியில் அவளின் முகத்தை அண்மைக்காட்சியாகக் காட்டுவது மட்டுமன்றி, அருகிலிருப்போரையும் காட்டுகிறார்.
நடந்து நடந்து இளைத்துப்போன அந்த விறலியரின் நல்ல மெல்லிய சிறிய பாதங்களை, இசையறிவற்ற இளைஞர்கள் மெல்ல வருடிவிடுகிறார்கள்.
நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவர
பாணன் யாழிசைப்பதில் தேர்ந்தவன். விறலியரோ பாடலுடன் ஆடலிலும் வல்லவர்கள். இவர்களுக்குப் பணிவிடை செய்யவும், கனமான பொருள்களைத் தூக்கிவரவும் சிலர் இவர்களுடன் வருகிறார்கள். இவர்கள் வலிமையுள்ளவர்கள். ஆனால் இசையறிவு இல்லாதவர்கள். இவர்களே கல்லா இளைஞர். இவர்கள் அந்த விறலியரின் சிறிய மெல்லிய அடிகளை இதமாக அமுக்கிவிடுகிறார்கள்.
இவர்களின் துன்பத்தை ஓரளவு போக்கவும், அந்த வறண்ட சூழ்நிலையைச் சற்றே வளப்பமானதாக மாற்றவும் சிறுபாணன் தன் சீறியாழைச் சற்றே மீட்டுகிறான்.
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இட வயின் தழீஇ
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க
தங்கத்தால் வார்த்த கம்பியினைப் போன்ற முறுக்கு அடங்கின நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடப்பக்கத்தில் தழுவி, நைவளம் என்னும் பண் முற்றுப்பெற்ற இனிமை தெரிந்த பாலை என்னும் பண்ணை இயக்க வல்ல யாழினை இசைப்பதில் கைதேர்ந்த பாணன், முறைப்படி இயக்குகிறான்.
சங்க காலத்து யாழ் ஒரு நரம்பிசைக் கருவி. அதில் உலோகத்தாலான இழைகள் இருக்கமாட்டா. உண்மையாகவே ஒரு விலங்கின் உடம்பிலுள்ள நரம்புகளை இழுத்துக் கட்டியே நரம்பிசைக் கருவிகளைச் செய்தார்கள். அதனால்தான் இன்றைக்கும் அதனை நரம்பு என்கிறோம். இந்த நரம்புகள் பொன் நிறத்தில் இருக்கும். எனவேதான் பொன் வார்ந்தன்ன நரம்பு என்கிறார் புலவர். நகைகள் செய்வதற்குப் பொன்னைக் கம்பியாக வார்க்கிறார்கள் அந்த வார்ப்புப் போல இந்த நரம்பு இருக்கிறது என்கிறார் புலவர்.
புரி என்பது முறுக்கு. படத்தில் இரண்டு இழைகள் புரியாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் ஒவ்வொரு இழையும் வளைந்தும் திருக்கிக்கொண்டும் செல்வதைப் பார்க்கலாம். இந்தத் திருக்குதான் புரி. இந்த இரண்டு இழைகளையும் பிரித்துத் தொங்கவிட்டால் அவை சற்று நேரம் தமக்குத்தாமே சிறிது நேரம் சுழன்று பின்னர் நிற்கும். அதுவே புரி அடங்குதல். மிருகங்களின் உடம்பில் பலவாறாக வளைந்தும் முறுக்கிக்கொண்டும் ஓடும் நரம்புகளை எடுத்து பதப்படுத்திய பின்னர் அவற்றின் புரியையும் எடுத்துவிட்டு யாழின் இழைகளாகக் கட்டுவர். இந்தப் பாணன் வைத்திருப்பது சிறிய யாழ். அதாவது ஏழு நரம்புகளை மட்டுமே கொண்ட யாழ். சிறிய யாழ் சீறியாழ் எனப்படுகிறது.
யாழின் நரம்புகளை மேலே இழுத்துக்கட்டும் இடம் கொம்பு அல்லது கோடு எனப்படும். இந்தச் சீறியாழின் கோடு பெரும்பாலும் கருப்பாக இருக்கும் போலும். எனவே கருங்கோட்டுச் சீறியாழ் என இலக்கியங்கள் இதனைச் சிறப்பித்துக் கூறுகின்றன.
கரும் கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப - நெடு 70
மருதம் பண்ணிய கரும் கோட்டுச் சீறியாழ் - மலை 534
அரும் துறை முற்றிய கரும் கோட்டுச் சீறியாழ் - அகம் 331/10
களங்கனி அன்ன கரும் கோட்டுச் சீறியாழ் - புறம் 127/1
களங்கனி அன்ன கரும் கோட்டுச் சீறியாழ் - புறம் 145/5
வணர் கோட்டுச் சீறியாழ் வாடு புடை தழீஇ - புறம் 155/1
வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ் - புறம் 285/3
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ் - புறம் 302/5
கரும் கோட்டுச் சீறியாழ் பணையம் இது கொண்டு - புறம் 316/7
எனப் பல பாடல்களில் கருங்கோட்டுச் சீறியாழ் பேசப்படுவதைப் பார்க்கலாம். வாங்கு, வணர் என்பன வளைந்த என்ற பொருள் தரும். இரு மருப்பு என்பது கருமையான கொம்பு.அந்தப் பாணன் நம்மில் பெரும்பாலோரைப் போல வலதுகைப்பழக்கம் உள்ளவன் போலும். எனவேதான் அவன் யாழை இடப்பக்கம் தழுவிக்கொண்டிருக்கிறான் – வலக்கையால் மீட்டுவதற்கு எளிதாக. சிலவகை யாழ்கள் ஒரு குறிப்பிட்ட பண்ணையே இசைக்குமாறு அமைக்கப்பட்டிருந்தன. முல்லைப்பண்ணைப் பாடும் யாழ் முல்லை யாழ். அதைப் போல குறிஞ்சி யாழ், மருதயாழ் ஆகியவையும் உண்டு. நம் பாணன் கையில் வைத்திருப்பது பாலையாழ். நைவளம் என்பது ஒருவகைப் பாடலின் பண். நம் பாணன் யாழ் இசைப்பதில் கைதேர்ந்தவன். முறைப்படி அவன் யாழை இனிதாக இயக்குகிறான்.
மெய்ம்மறந்து இசைத்துக்கொண்டிருந்த பாணன் சிறிதே ஆளரவம் கேட்டுத் திரும்பிப்பார்க்கிறான். அங்கு ஒருவன் பெரும் செல்வத்துடன் நின்றுகொண்-டிருக்கிறான். அவன் யார்?
.. தொடரும்
ப.பாண்டியராஜா
புரி,யாழ்,கருத்தோடு என்று அருமையான விவரிப்பு. இசையறியா ஆடவர் பாதம் பிடித்துவிடுவதை பாக்கியம் என்று உவப்புடன் செய்திருப்பர்!இசையறியாதவர் வேறெதையும் நினைப்பார்கள்?! நன்றி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ சிறுபாணாற்றுப்படை 4
மலையிலிருந்து புறப்பட்டு வரும் காட்டாற்றின் பொசுக்குகிற கருமணற்பரப்பைக் கடந்துவந்த பாணர் குடும்பம், அக்கரையில் இருக்கும் ஒரு வரிநிழல் மரத்தடியில் தங்கி ஓய்வெடுக்கிறது. கல்லா இளைஞர் விறலியரின் காலடிகளைத் தடவிக்கொடுக்க, களைப்பையும் பசியையும் மறக்க சிறுபாணன் தன் சீறியாழை எடுத்து இயக்குகிறான்.
அந்த வழியே சென்றுகொண்டிருந்த வேறொரு சிறுபாணன், அதே மரத்தடிக்கு வருகிறான். அங்கிருப்போர் நிலைமையினைப் புரிந்துகொண்ட புதியவன், நமது சிறுபாணனைப் பார்த்துப் பேசத்தொடங்குகிறான்.
நமது பாணனோ புதியவனை வியப்புடன் பார்க்கிறான். புதியவன் ஒரு பாணனைப் போல் தோன்றினாலும் நிறைய யானைகளையும், பெரிய தேர்களையும் கொண்டு பெரும் செல்வனாகக் காட்சியளிக்கிறான். “இவனுக்கு இத்துணை செல்வம் எப்படிக் கிடைத்தது?” என்ற வியப்புடன் அவனை ஏறிட்டுப்பார்க்கிறான். வறுமைப் பாணனின் மனவோட்டத்தைப் புரிந்துகொண்ட புதிய பாணன், “நான் சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தரிடமிருந்தோ அல்லது அன்று வாழ்ந்த கடையெழு வள்ளல்கள் எனப் போற்றப்பட்ட வள்ளண்மை மிக்க சிற்றரசர்களிடமிருந்தோ பொருள் பெற்று வரவில்லை” என்று கூறத் தொடங்குகிறான்.
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ
துனிகூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப
முனிவு இகந்திருந்த முதுவாய் இரவல!
இயங்காத உலகத்தில் புரவலரை விரும்பி,
வெறுப்பேறிய மிக்க வருத்தத்துடன் வறுமையினால் உந்தப்பட்டுவந்து
நடைவருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே, 40
நமது சிறுபாணனின் யாழிசையைக் கேட்ட புதியவன், அந்தச் சிறுபாணன் யாழிசைப்பதில் வல்லவன் என்பதைப் புரிந்துகொண்டவனாய் அவனை முதுவாய் இரவல என்று விளிக்கிறான்.
முதுவாய் என்பதற்கு முதுமை வாய்க்கப்பெற்ற என்ற பொருள் கொள்ளலாம். முதுமை என்பது இங்கு வயதில் முதிர்ச்சி என்பதைவிட, இசைப்பதில் முதிர்ச்சி என எடுத்துக்கொள்ளலாம். யாழிசையில் தன்னைப்போலவோ, தன்னைக்காட்டிலுமோ சிறந்தவனாகத் தோன்றும் அந்த வறுமைநிலைப் பாணனை ஒரு நல்ல வள்ளலிடத்திற்கு வழிநடத்தவேண்டும் என்ற அவா அந்தப் புதியவனுக்குத் தோன்றியது இயற்கையே அல்லவா!
நமக்குத் தேவையானது எதுவும் கிடைக்காவிட்டாலோ, நாம் நினைத்தது எதுவும் நடக்காவிட்டாலோ, இந்த உலகமே நிலைகுத்திப் (ஸ்தம்பித்துப்) போனதைப் போல் உணர்வோம் இல்லையா! அதாவது, நமக்குத் தேவையான விதத்தில் இந்த உலகம் இயங்கவில்லையானால் அதனை இயக்கமே அற்றுப்போன உலகமாகத்தான் நம் காண்கிறோம். பசிக்குப் புசிக்க ஒன்றுமில்லை. நடுக்காட்டில் நிற்கிறது பாணன் குடும்பம். எனவேதான் புதியன் இயங்கா வையத்து என்று கூறுகிறான். அந்நேரத்தில் பாணனின் நிலையை வருணிக்க துனி, எவ்வம், துயர் என்ற மூன்று சொற்களைப் பயன்படுத்துகிறார் புலவர். துனி என்பது வெறுப்பின் உச்ச நிலை. எவ்வம் என்பது துன்பத்தின் உச்ச நிலை. இவற்றின் உச்ச நிலையில் ஏற்பட்ட துயரம் அவனை “எங்காவது சென்று பொருள் சேர்க்கும் வழியைப்பார்” என்று தூண்டுகிறது. துனிகூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப – என்ற சொற்களில் புதைந்துகிடக்கும் துயரச் சூழ்நிலையை உணர்ந்து பாருங்கள். ஆனால், இத்துணை துயரையும் பொறுத்துக்கொண்டு அந்தப் பாணன் யாழை மீட்டிக்கொண்டிருப்பதைக் கேட்டதாலேயே புதியவன் கூறுகிறான், “முனிவு இகந்திருந்த முதுவாய் இரவல”. அவன் முனிவு இகந்திருந்ததற்கும் அவனது முதிர்ச்சியான பக்குவமடைந்த உள்ளம்தான் காரணம் என்று சொல்லாமற் சொல்கிறானோ இந்தப் புதியவன்.
இயற்கையிலேயே செல்வம் மிக்க ஒருவரைப் பார்க்கும்போது அவருக்கு எப்படி அத்துணை செல்வம் கிட்டியது என்று நாம் எண்ணுவதில்லை. ஆனால், திடீரென்று ஒருவன் பெரும்பணக்காரன் ஆனால், அவனது முகத்தோற்றமும், நடவடிக்கைகளுமே நமக்குக் காட்டிக்கொடுத்துவிடும் “இவன் ஒரு புதுப்பணக்காரன்” என்பதை. அந்தப் புதுப்பணக்காரனும், “எனக்கு எப்படி இவ்வளவு சொத்து கிடைத்தது என்று நினைக்கிறீர்களா” என்று தானாகவே தனக்கு சொத்துக் கிடைத்த வழியைப் பற்றிப் பேசத் தொடங்குவான். அந்த இயல்பான மனித மனவோட்டத்தைப் புரிந்துகொண்ட புலவரும், புதியவன் தனக்குச் செல்வம் கிடைத்தவிதத்தைப் பற்றிச் சொல்லுகிறாற்போல் பாடல் புனைந்துள்ளார்.
வஞ்சியை ஆளும் குட்டுவனிடமிருந்து பெருமளவு பரிசில் பெற்று மீண்டிருப்பான் போலும் என்று அந்தப் பாணன் எண்ணுவானோ என்று நினைத்த புதியவன் கூறுகிறான், “குட்டுவனின் வஞ்சி மாநகரத்தையே பரிலாகப் பெற்றிருந்தாலும் என்னிடமிருக்கும் இந்தப் பெருஞ்செல்வத்துக்கு அது ஈடாகாது” என்று கூறிய புதியவன், அதற்காக வஞ்சியை இகழ்ந்து கூறாமல், வஞ்சியின் மிகுந்த வளத்தைக் கூறி, அதனினும் இது மேலானது என்று தன் செல்வத்தின் அளவை மிகுத்துக் கூறுகிறான்.
கொழு மீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை,
பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர,
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா,
குளவிப் பள்ளி பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான், ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன்
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே,
கொழுத்த மீன் வெட்டுப்படும்படி நடந்து, வளவிய இதழையுடைய
செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து, 45
காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும்
மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் - பகைவருடைய
வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த
கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய
(பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்;
வஞ்சிமாநகரின் பெருவளத்தைக் கூறவந்த புதுப்பாணன், அப் பெருவளத்தின் ஒரு சிறு பகுதியை நயம்பட உரைக்கிறான். அந்தச் சிறுபகுதி, குன்றுகள் நிறைந்த சேரநாட்டின் நீர்வளம் ஆகும்.
எருமைமாடு நீர்ப்பகுதியைப் பெரிதும் விரும்பக்கூடியது. எனவே அதனை நீர்வளத்தின் குறியீடாகக் கொள்கிறார் புலவர். கழனிகளுக்குப் பாய்வதற்காக நீரோடும் வாய்க்காலில் ‘சதக் சதக்’-கென்று உழப்பியபடி நீர்வழியே நடந்துசெல்கிறது எருமை. பாய்ந்துவரும் நீரில் எதிர்நீச்சல் போட்டபடி கொழுத்தமீன்கள் எதிரில் நீந்தி வருகின்றன. அவை ஒன்றிரண்டாயிருந்தாலோ, சின்னஞ்சிறிசாயிருந்தாலோ எருமையின் கால்களில் படாமல் ஒதுங்கிப் போயிருக்கும். எக்கச்சக்கமான கொழுத்த மீன்கள் எதிர்நீச்சல் போட்டபடி வர, அவற்றில் சில எருமையின் கால்களில் சிக்கி, கால்களின் திண்ணிய குளம்புகளால் மிதிபட்டுச் சிதைந்துபோயினவாம். கொழுமீன் குறைய ஒதுங்கி என்ற மூன்றே சொற்களில் எத்தனை கருத்துகளைப் பொதிந்துவைத்திருக்கிறார் புலவர் பாருங்கள். ஒதுங்கி என்ற சொல், அகன்ற கால்வாயின் ஓரமாக நடந்து என்ற பொருள் தருகிறது. அப்படி ஓரமாக நடக்கும்போதே மீன்கள் மிதிபட்டால், நடுத்தண்ணீரில் எத்தனை மீன்கள் போய்க்கொண்டிருந்திருக்கும்!
அப்படி அந்த எருமை வாய்க்கால் ஓரத்தில் நடப்பதற்குக் காரணம், வரப்போரத்தில் முளைத்துப் பூத்து நிற்கும் செங்கழுநீர்ப் பூக்களை மேயத்தான். செழும்ப நீர் இருக்கும் காரணத்தால் செங்கழுநீர்ச் இலைகள் கொழுவியவனவாக இருக்கின்றனவாம். வள் இதழ் கழுநீர் என்கிறார் புலவர் – நீர்வளத்தை உறுதிப்படுத்தும் சொற்களில். எருமையின் வாயைப் பார்த்திருக்கிறீர்களா? மிக அகன்று கிடக்கும். கயவாய் எருமை என்கிறார் புலவர். சிறிய வாயில் ஒன்றிரண்டு பூக்களே சிக்கும். அகன்ற வாயில் நிறையப்பூக்களைக் கொத்துக்கொத்தாக வைத்துக்கொண்டிருக்கிறதாம் அந்த எருமை. எருமையை வருணிக்க வேறு எத்தனையோ உறுப்புகள் இருக்க, எருமையின் கயவாயை நம் கண்முன் காட்டுவதின் நோக்கம் புரிகிறதா?
வாய்கொள்ளும் அளவுக்கு ‘வெடுக் வெடுக்’-கென்று பூக்களாகப் பார்த்துப் பிடுங்கி வாய்க்குள் அடக்கிக்கொண்ட எருமை, மெல்லக் கரையேறுகிறது. அப்போது அங்கு விளைந்து நிற்கும் மஞ்சள் செடிகளின் மெல்லிய இலைகள் எருமையின் மயிர்நிறைந்த முதுகினைத் தடவிக்கொடுக்கிறதாம். எருமையின் மேல்முதுகு ஓரளவு வழுவழுப்பாக இருக்கும். சரிந்து விழும் வயிற்றுப்பகுதியின் அடிப்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் அடர்த்தியாக மயிர் முளைத்திருக்கும். கரையேறும் எருமையின் அடிவயிற்றையும், கீழ்வயிற்றையும் மஞ்சள் செடியின் இலைகள் தடவிக்கொடுக்கின்றனவாம். மயிர்ப்புறம் தைவர என்கிறார் புலவர். சேறு நிறைந்த பகுதியில் வழக்கமாகப் படுத்துக்கிடக்கும் எருமை, பசியெடுத்தவுடன் எழுந்து வாய்க்காலோரத்தில் மேய வருகிறது. அப்போது அதன் அடிவயிற்றிலும், இரண்டுபக்கக் கீழ்வயிற்றிலும் சேறு நிறைய ஒட்டிக்கிடக்கும். சேற்றிலிருக்கும் சிறு பூச்சிகள் உடம்பில் ஊறிக்கொண்டிருக்கும். அப்போது எருமைக்கு ஒருவித நமைச்சலெடுக்கும். அந்த அரிப்பை நீக்கும்வண்ணம் இந்த மஞ்சள் இலைகள் சுகமாகத் தடவிக்கொடுக்கின்றனவாம். மஞ்சள் மெல் இலை மயிர்ப்புறம் தைவர என்பதிலுள்ள நுணுக்கத்தைக் கவனியுங்கள்.
இவ்வாறு கரையேறிய எருமை எங்குச் செல்கிறது? ஒரு பலா மரத்தின் நிழலுக்குச் செல்கிறது. மலைநாட்டில் பலாமரங்கள் இருப்பது இயற்கையே. புலவர் இங்கு வெறும் பலவின் நீழல் என்று சொல்லாமல், பைங்கறி நிவந்த பலவின் நீழல் என்கிறார். பைங்கறி என்பது பசுமையான மிளகுக்கொடிகள். சேர நாட்டின் வளப்பத்துக்கு இது இன்னுமொரு குறியீடு.
இப்போது எருமை தன் வாயிலிருந்து தொங்கிகொண்டிருக்கும் அத்தனை பூக்களையும் ஒருசேர வாய்க்குள் இழுத்து நன்றாக அரைக்கிறது. பூத்தும் பூக்காத செங்கழுநீர்ப் பூக்களிலிருக்கும் விளைந்தும் விளையாத தேன் அந்தப் பகுதியையே மணக்கச் செய்கிறது. சரி, அங்காவது எருமை படுத்து அசைபோட முனைகிறதா? இல்லை. விளையா இளங்கள் மணக்க மென்றுகொண்டே அந்த நிழலைக் கடந்து அருகில் கொத்தாக வளர்ந்து கொடியாகச் சுருண்டுகிடக்கும் காட்டுமல்லிகைப் புதரையே தன் படுக்கையிடமாகக் கொள்கிறதாம். வாயெல்லாம் செங்கழுநீர்ப்பூக்களின் மணம். தொண்டைவரை அவற்றின் இளங்கள்ளின் மெல்மணம். இப்போது மேனியெங்கும் காட்டுமல்லிகைப்பூவின் நறுமணம். இவ்வாறு மேனியெங்கும் சகதி நிறைந்து காண்பதற்கு இனிமையற்ற ஓர் எருமையை வைத்து, ஓர் அழகிய சூழலை உருவாக்கி, ஒரு நறுமணப்பந்தலையே அமைத்துக்காட்டுகிறார் புலவர்.
சோழமன்னர் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையை ஆள, பாண்டியர் தென்கிழக்கு, தெற்குக் கடற்கரையை ஆள, சேரர்கள் மேற்குக் கடற்கரையை ஆண்டனர். எனவேதான் அவரைக் குடபுலம் காவலர் என்கிறார் புலவர். மருமான் என்றால் வழித்தோன்றல் என்ற பொருள் உண்டு. எழு உறழ் திணிதோள் என்பது குட்டுவனின் உடல்வலிமையைச் சுட்டும். இயல்தேர் என்பது அவனின் படைபலத்தைக் குறிப்பிடும். இவ்வாறாகக் குட்டுவனின் இருவித வலிமைகளை ஒரு தொடரில் அடக்கிக் காட்டுகிறார் புலவர். இந்தக் குட்டுவன் வடபுலத்தாரை இமயம் வரை வென்று, இமயமலையில் தன் வில்கொடியைப் பொறித்தவன் என்கிறார் புலவர். இவனுடைய தலைநகரான வஞ்சி இப்பொழுது எங்கு உள்ளது என்பதில் கருத்துவேறுபாடு உண்டு. அது இன்றைய தமிழ்நாட்டுக் கரூர் என்றும், இன்றைய கேரளத்தின் ஒரு உள்நாட்டுப் பகுதி என்றும் கருத்துகள் உண்டு. எப்படியிருப்பினும் அது பாய்கின்ற நீர் சூழ்ந்த அகழியையும், அதையொட்டிய வாயிலையும் உடையதாயிருந்தது என்பது புலவரின் வருபுனல் வாயில் வஞ்சி என்ற தொடர் சுட்டுகிறது. அந்த ஊர் ஓர் ஆற்றங்கரையில் அமைந்து, அந்த ஆற்றுநீர் வற்றாமல் நகரின் அகழிக்கு வந்துகொண்டே இருந்தது என்பதைத்தான் இத் தொடர் குறிப்பிடுகிறது எனலாம்.
வஞ்சியின் செழிப்பைக் கூறவந்த புலவர், வஞ்சிமாநகரின் செல்வச் சிறப்பைக் கூறியிருக்கலாம். வஞ்சியின் சிறப்பை அவர் கூற நினைத்திருந்தால் அதனை ஆளும் குட்டுவனின் வீரத்தைப் புகழ்ந்து கூறியிருக்கலாம். இதை விட்டுவிட்டு ஒரு எருமையின் கதையை இங்குக் கூறக் காரணம் என்ன?
எருமைகள் மிக்க வலிய ஆற்றல் கொண்டவை. கட்டாந்தரையில் ஏர் பாய்ச்சினால்கூட கடினமாக இழுத்து உழுது முடிக்கக்கூடியவை. எழு உறழ் திணி தோள் குட்டுவன் போல.
எத்தனை பெரிய முள்வேலிகள் மறித்தாலும் தம் கொம்புகளால் தட்டிவிட்டுச் செல்லக்கூடியவை - இயல் தேர் குட்டுவன் போல.
அந்தக் குட்டுவன் வட புல இமயத்தில் வாங்கு வில் பொறிக்கச் சென்றபோது பகைவர் யாரும் எதிர்க்காமலா இருந்திருப்பார்கள்? கொழுத்த மீனைப் போன்ற அந்தப் பேரரசர்கள் எருமையின் காலடியில் பட்டுச் சிதைந்துபோன மீனைப்போலச் சின்னாபின்னமாகிவிட்டனர்.
தேனிருக்கும் மலர்ந்த பூக்களாகப் பார்த்துப் பார்த்துப் பிடுங்கி வாயில் வைத்து அடக்கிக்கொள்ளுகிறது எருமை – பகைநாட்டினரின் சிறந்த செல்வங்களையெல்லாம் வேண்டிய அளவு எடுத்துக்கொண்ட குட்டுவனைப்போல.
கரையேறிய எருமை மிளகுக் கொடிகள் படர்ந்த பலா மரத்தில் நிழல்வழியே நடந்து செல்கிறது - குட்டுவனின் படைவலிமையக் கண்ட பகைவர் அவனுடன் நட்பு பாராட்ட அவரின் திறைச் செல்வத்துடன் சேர்ந்த நல்லுறவு என்னும் இனிய நிழல்வழியே சேரன் கடந்து சென்றதைப் போல.
குட்டையான மஞ்சள் இலைகள் மயிர்ப்புரத்தை மெல்லத்தடவிக்கொடுக்க நடக்கிறது எருமை – பல சிற்றரசர்கள் வலியவந்து வணங்கிப் போற்ற அந்த சிறப்பையும் ஏற்றுக்கொண்ட சேரனைப் போல.
விளையா இளங்கள் நாற மென்றுகொண்டே குளவி பள்ளிப் பாயல் கொள்ளும் அந்த எருமை – இத்தனை வெற்றி மயக்கத்துக்குப் பின்னும் வட புலத்திலேயே தங்கிவிடாமல், வெற்றிகளை அசைபோட்டுக்கொண்டே மீண்டும் தன் நாடு திரும்பி இனிய நல்லாட்சி வழங்கிக்கொண்டிருக்கும் குட்டுவனைப் போல.
இவ்வாறாக சொல்ல வந்த ஒரு செய்தியை நேரிடையாகச் சொல்லாமல், அதற்குத் தொடர்பற்ரதுபோல் தோன்றும் வேறொரு செய்தியைக் கூறி, அந்தச் செய்தியின் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் சொல்லவந்த செய்தியின் நிகழ்ச்சிகளோடு ஒன்றுக்கொன்றான தொடர்புகள் (one-to-one correspondence) ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் உள்ளுக்குள் பொதிந்த உவமங்களாகக் கூறுவது உள்ளுறை உவமம் என்னும் அழகிய கலையாகும். இதில் சங்கப் புலவர்கள் கைதேர்ந்தவர்கள். எந்தவிதமான செயற்கைத்தனமும் இழையோடாமல், வெகு இயல்பான முறையில் இதனைக் கையாளுவதில் மிக்க திறம்படைத்தவர்கள். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது தேவையற்றதாகவோ, சொல்லவந்த செய்திக்குத் தொடர்பில்லாமலோ தோன்றும் இடங்களில் பெரும்பாலும் இந்த உள்ளுறை உவமத்தை அவர்கள் கையாண்டிருப்பதைக் காணலாம்.
இயல்பிலேயே வஞ்சிநகரம் வளம்செறிந்த சேரநாட்டின் தலை நகரம். அதிலும் குட்டுவன் வடபுலம் சென்று அங்கிருக்கும் செல்வத்தையெல்லாம் திறையாகவோ, கைப்பற்றியோ கொண்டுவந்து வஞ்சியில் குவித்துவைத்துள்ளான். அப்படிப்பட்ட வஞ்சியுமே என் இப்போதைய செல்வத்துக்கு ஈடாகாது என்கிறான் புதியவன்.
பெரிப்ளூஸ் என்னும் யவன நூலில், பாண்டியர் மேற்குக் கடற்கரையில் Nelcynda என்ற நகரத்தைத் தங்கள் ஆளுகைக்குட்படுத்தி வைத்திருந்தனர் என்ற செய்தி கிடைக்கிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தான் பதவிக்கு வந்ததும் முதன்முதலாக அந்த ஊரைச் சேரர்வசமிருந்து கைப்பற்றுகிறான் என்ற செய்தி மதுரைக் காஞ்சியில் காணக்கிடக்கிறது. எனவே இங்குக் குறிப்பிடப்படும் சேரன் குட்டுவன் இந்த நெடுஞ்செழியனுக்கும் முற்பட்டவன் எனத் துணியலாம்.
வணக்கம் ஐயா,
திருப்பூவணத்தில் இரவில் மதுரைக்கு வெல்லம் ஏற்றிச் செல்லும் ஒழுகை வண்டிகளையும்,
அதிகாலையில் மதுரையிலிருந்து பலசரக்குகளை ஏற்றிவரும் ஒழுகை வண்டிகளையும் வேடிக்கை பார்த்துள்ளேன்.
டிராக்டர், சிறிய லாரிகள் வந்த பின்னர் மாட்டு வண்டிகள் காணாமல் போயின.
ஆனாலும் பெண்கள் மாட்டு வண்டி ஓட்டுவதும், அவர்கள் கூந்தலை ஐந்தாகப் பிரித்து உலர்த்துவதும் புதிய செய்தி.
(இது ஐம்படைத் தாலியை நினைவூட்டுகிறது).
பாண்டி அரசர்களின் கொடையைப் பாண்டியராசா கூறுவது சிறப்புடைத்து.
--
சிறுபாணாற்றுப்படை - 6
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் மிகுந்த பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன். வழியில் பசியோடு குடும்பத்துடன் மரத்தடியில் இளைப்பாறிக்-கொண்டிருக்கும் வறிய பாணனை நோக்கித் தொடர்ந்து கூறுகிறான்.
இந்த அளவுக்குப் பெரும் செல்வம் இவனுக்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்று அந்த வறிய பாணன் எண்ணக்கூடும் என்ற நோக்கில், குடபுலம் ஆளும் சேரனின் வஞ்சியில்கூட எனக்கு இவ்வளவு செல்வம் கிடைத்திருக்காது என்று கூறிவிட்டு, பின்னர் தென்புலம் காக்கும் பாண்டியனின் மதுரையிலும் எனக்கு இந்த அளவுக்குச் செல்வம் கிடைத்திராது என்றும் கூறுகிறான்.
அடுத்து, குணபுலம் காக்கும் செம்பியன் எனப்படும் சோழனின் உறையூரிலும் எனக்கு இந்த அளவுக்குச் செல்வம் கிடைத்திராது என்று கூறும் முகத்தான் சோழநாட்டின் வளத்தையும் சோழமன்னனின் வீரத்தையும் புகழ்ந்து கூறுகிறான் அந்தப் புதிய பாணன்.
சோழமன்னனின் தலைநகர் உறந்தை எனப்படும் உறையூர். அங்கு வாழ்பவர் அந் நகரைவிட்டு அடுத்த நகருக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் அறவே அற்றவராய் இருக்குமளவுக்கு வளம் செறிந்த ஊர் அது. ஓடாப் பூட்கை உறந்தை என்று புலவர் அந் நகரைச் சிறப்பித்துக் கூறுகிறார். அதனை ஆளும் செம்பியன் என்ற சோழனின் தேர்ப்படை மிக்க வலிமையுடையது. அவனை என்ன சொல்லிப் புகழலாம் என்று புலவர் எண்ணிப்பார்க்கத் தேவையில்லாத அளவுக்கு மிகுந்த புகழ் பெற்றவன் செம்பியன். நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன் என்கிறார் புலவர். பகைவரின் கோட்டையைச் சிதைத்தழிக்கும் வல்லமை பெற்றது செம்பியனின் தொடிவிளங்கு தடக்கை. அவை என்ன சாதாரணக் கோட்டைகளா? அண்ணாந்துபார்த்தால் உச்சி தெரியாத அளவுக்கு உயரமானவை அவை. வானத்தில் தோன்றும் இடி வந்து தன் முதுகைச் சொறிந்துவிட்டுப்போகுமாம்! அந்த அளவுக்கு உயரமும், இடியினால்கூட அழிக்கமுடியாத திண்மையும் கொண்ட அந்த கோட்டைமதில்கள் ஆழங்காண முடியாத அளவுக்கு அடிமட்டம் வெகுகீழே உள்ள அகழிகளையொட்டி இருப்பதால் அடியும் முடியும் தெரியாதனவாய், வானத்திலிருந்து தொங்குகிறதைப் போல் தோன்றுமாம். ஓங்கு எயில் கதவம் உருமுச் சுவல் சொறியும் தூங்கு எயிலையும் தூர்த்துப்போட்டவன் செம்பியன். உருமு என்பது இடி. சுவல் என்பது முதுகு.
இத்தகைய செம்பியன் கிழக்குத்தமிழகத்தைக் காக்கும் மன்னரின் வழிவழி வந்தவன். இத்தகைய வீரம் செறிந்த செம்பியனின் உறந்தை நகர் தள்ளா விளையுள் கொண்ட தாழ்விலாச் செல்வம் தரும் குளிர்ந்த வயல்களைக் கொண்டது. அங்குள்ள பொய்கைகளில் இளம்பெண்களின் எழுச்சிமிக்க மார்பகம் போல எழுந்துநிற்கும் தாமரை முகைகள் நெகிழ்ச்சியடைந்து அழகிய பெண்களின் முகம்போல மலர்ந்து நிற்கின்றன. அத் தாமரை மலர்களின் செம்பொன் நிறமுள்ள பொகுட்டுகளில், வண்டுகள் தம் இனிய துணைகளுடன் தம் மெல்லிய இறகுகளால் சீகாமரம் என்ற பண்ணிசையைப் போல ஓசை எழுப்பியவாறு தேனுண்டு மகிழும். அத் தாமரை மலர்கள் தாமாக நெகிழவில்லை! பொய்கைக் கரையில் நீண்டு வளர்ந்திருக்கும் நெடிய செங்கடம்பு மரத்தின் மலர்களினின்றும் உதிரும் சிவப்பு நிறத்தாதுக்கள் கூம்பியிருக்கும் தாமரையை மலரச் செய்வதோடு, மலர்ந்த பூவின் நடுவிலிருக்கும் பொன்னிறப் பொகுட்டின் மீதும் உதிர்ந்து அந்தப் பொன்னிறப் பொகுட்டுக்குச் சிவப்புநிறமேற்றியதால் அப் பொகுட்டு செம்பொன்கொட்டை போல் தோன்றுகிறதாம்.
பொய்கைகளும் அவற்றில் வண்டுகள் மொய்க்கும் நறுமணம் வீசும் மலர்களும் நிறைந்த நாடு என்று சொல்லிவிட்டுப்போகாமல், கடம்பமரத்தின் தாதுக்கள் உதிர்வதால் மலரும் தாமரை என்று புலவர் சொல்வதன் நோக்கம் என்ன? தாமரை மலரில் வண்டுகள் தம் இன்துணையுடன் ஊதி மகிழ்வதுபோல் சோழமக்கள் சோழநாட்டின் பெருவளத்தை நுகர்ந்து மகிழ்கின்றனர் என்று கூறவருவதே புலவரின் நோக்கம் இல்லையா? சோழமன்னனின் சிறப்புடைய நல்லாட்சி என்ற செங்கடம்பு மலர்த்தாது சோழநாடு என்னும் செந்தாமரை மலர்மொட்டில் சொரிந்து விழுவதால் சோழநாடு பொலிவுடன் மலர்ந்து திகழ்கிறது என்றும் புலவர் கூறுவதாகக் கொள்ளலாம்.
இத்தகைய கற்பனை வளமிக்க ஒரு காட்சியால் சோழனின் நல்லாட்சியைப் பெருமையுடன் விவரிக்கும் புலவர் இந்த விவரணையில் எத்துணை நுட்பமாகத் தாம் கூறவந்த பொருள்களை நம் கண்முன் காட்டுகிறார் பாருங்கள். நறுநீர்ப் பொய்கை என்கிறார். நெடுநாள் தங்கிய நீர் வற்றிப்போகும்போது அந்த நீர்நிலையே ஒவ்வாத மணமுள்ளதாகும். அவ்வாறன்றி அவ்வப்போது புதுநீர் புகுந்து நானாவித நறுமலர்கள் பொலிவுடன் மணம்வீசுவதால் அதனை நறுநீர்ப் பொய்கை என்கிறார் புலவர். பொய்கை என்பது இயற்கையாக அமைந்த ஒரு நீர்நிலை. அதினின்றும் நீர் வெளியேறிப்போகாவண்ணம் நீரை அடைத்து நிற்பது அடைகரை. இந்த அடைகரையில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது ஒரு கடம்பு மரம். கடம்புமரத்தின் கிளைகளும் இலைகளும் மிகவும் செறிவாக இருப்பன. இதனையே துறுநீர்க் கடம்பு என்கிறார் புலவர். துறுத்தல் என்பது அடர்ந்திருத்தல். நீர் என்பது நீர்மை, அதாவது, தன்மை. இங்குப் புலவர் கூறுவது செங்கடம்பு மரம். இந்த மரம் மிகுந்த செறிவான இலைகளைக் கொண்டது. இந்தச் செங்கடம்பு மரம் கொத்துக்கொத்தாய் நீளமாகப் பூக்கும். எனவே இதன் மலரைத் துணை ஆர் கோதை என்கிறார் புலவர். கோதை என்பது மலர்மாலை.
இந்த மரத்தின் கீழே இருப்பது அந்தப் பொய்கையின் உண்துறை, அதாவது, குடிநீர் எடுக்குமிடம். அங்கே சிறிதுதூரமே உள்ளே சென்று பெண்கள் நீர்மொண்டு வருவர். எனவே சற்று ஆழமான பகுதியில் நீர்த்தாவரங்கள் பூத்து நிற்கும். பொதுவாக இப்படிப்பட்ட ஒரு காட்சியையே ஓவியமாக வரைந்து வீடுகளில் தொங்கவிட்டிருப்பர். ஆனால் புலவர் ஓவியங்களில் காணப்படுவது போன்ற அழகிய உண்துறை – ஓவத்தன்ன உண்துறை - என்று இங்கு ஒரு மாறுபட்ட உவமையைக் கையாள்கிறார். ஓவியர்கள் ஒரு காட்சியை வரையும்போது சரியான, தேவையான பொருள்களையே குறைகளில்லாத முறையில் மிகவும் அழகிதான காட்சியாக வரைவர். அப்படிப்பட்ட அழகிதான ஒரு காட்சியாக அமைந்தது அந்தப் பொய்கையின் உண்துறை என்கிறார் புலவர். கோவம் எனப்படும் இந்திரகோபம் என்பது மிகவும் சிவந்த நிறமுள்ள ஒரு சிறிய பூச்சி. அப்படிப்பட்ட சிவந்த நிறமுள்ள அந்தச் செங்கடம்ப மலரின் தாதுவைக் கோவத்தன்ன கொங்கு என்கிறார் புலவர். இளம்பெண்களின் மார்பகத்தைத் தாமரை மொட்டுக்கும், அழகிய பெண்களின் முகத்தைத் தாமரை மலருக்கும் ஒப்பிடுவர் புலவர். ஆனால் இங்கோ புலவர் வருமுலை அன்ன வண்முகை என்றும், திருமுகம் (போன்று) அவிழ்ந்த தாமரை என்றும் கூறுவது அவரது மாற்றுவமைப் பண்பை உறுதிப்படுத்துகிறது.
பெண்கள் குடிநீர் மொண்டுகொண்டு, எட்டுகின்ற மலரைப் பறித்து, வீட்டில் வழிபாட்டுக்காக எடுத்துச் செல்வர் இல்லையா! அதனாலேயே இதனைத் தெய்வத் தாமரை என்கிறார் புலவர். களங்கமற்ற (சிவந்த) உள்ளங்கையில் அரக்கைத் தோய்த்தால் எப்படி இருக்கும்? அவ்வாறு இருந்ததாம் சிவந்த தாமரை மலரிதழ்களில் சிவந்த செங்கடம்பு மலர்த்தாது விழுந்துகிடக்கும் காட்சி. விரிந்த தாமரை மலரின் நடுவில் பொன்னிறத்தில் அதன் பொகுட்டு இருக்கும். இங்குதான் வண்டுகள் தேனுண்ண வரும். மலர்ந்த தாமரை மலரில் தொடர்ந்து விழுந்த செந்நிறக் கடம்புத்தாது அந்தப் பொகுட்டைச் செம்பொன் நிறத்ததாக மாற்றிவிட்டதாம். ஆக, சொல்லவந்த காட்சியை அப்படியே நம் மனக்கண்முன் படம்பிடித்துக் காட்டுவதில் புலவர் எத்துணை தேர்ச்சிபெற்று விளங்குகிறார் என்று வியக்கத்தோன்றவில்லையா! இந்த எட்டு அடிகளுக்குள் ஆறு உவமைகளைப் பொதித்து, அவற்றில் இரண்டை உருவகமாகவும், மூன்றனை மாற்றுவமமாகவும் கையாண்டிருக்கும் புலவரின் வருணனைத் திறம் மீண்டும் மீண்டும் படித்து இன்புறற்பாலது.
இத்துணை சிறப்புமிக்க சோழநாட்டை ஆளும் வீரமிக்க செம்பியனின் உறந்தையிலும்கூட இந்த அளவுக்கு மிகுந்த செல்வம் கிட்டியிராது என்று செல்வம் உள்ள சிறுபாணன் வறிய பாணனிடம் கூறுகிறான்.
இதோ புலவரின் சொற்களிலேயே இந்த அழகிய பகுதியைப் படியுங்கள்:
நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்
வரு முலை அன்ன வண் முகை உடைந்து
திரு முகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன
சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை
குண புலம் காவலர் மருமான் ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும்
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக் கை
நாடா நல் இசை நல் தேர் செம்பியன்
ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே
அடிநேர் உரை
நறிய பொய்கையின் அடைத்த கரையில் நின்று வளர்ந்த
செறிந்த நீர்மையையுடைய கடம்பின் இணைதல் நிறைந்த மாலை (போன்ற பூ),
ஓவியம் போன்ற (அழகுடைய)(நீர்)உண்ணும் துறையின் பக்கத்தே 70
(சிவப்பு நிறத்) தம்பலப்பூச்சியை ஒத்த தாதுக்கள் சேர்ந்து உதிர்தலால்,
எழுகின்ற (பெரிய)முலையை ஒத்த வளவிய முகை நெகிழ்ந்து,
அழகிய முகம் (போல)மலர்ந்த தெய்வத் (தன்மையுடைய)தாமரையிடத்து,
அழுக்கில்லாத உள்ளங்கையில் சாதிலிங்கம் தோய்ந்ததைப் போன்ற
சிவந்த இதழ் சூழ்ந்த செம்பொன்(னால் செய்ததைப்போன்ற) பொகுட்டின்மிசை, 75
(தன் உயிர்க்குக்)காவலாகிய இனிய பெடையைத் தழுவி, சிறகுகளை அசைத்துக்கொண்டு,
விருப்பம் மருவின தும்பி சீகாமரம் (என்னும் பண்ணை)இசைக்கும்
குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய
கிழக்குப் புலத்தின் காவலையுடைய குடியிலுள்ளான் - பகைவரின்
உயர்ந்த மதிலின் கதவில் உருமேறு (தன்)கழுத்தைத் (திணவால்)தேய்க்கும் 80
(வானத்தே)தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கும் பெருமையையுடைய கையினையும்,
(புலவர்) தேடாத நல்ல புகழினையும், நல்ல தேரினையும் உடைய சோழன் - அவனது
(தன் குடிகள் தன்னைவிட்டு)அகலோம் என மேற்கொண்ட உறுதியையும் உடைய உறந்தையும் சிறிதே;
அடுத்து – கடையெழு வள்ளல்கள் – இனி வரும்.
ப.பாண்டியராஜா
ஐந்தாகப்பிரித்த தலையலங்காரம் /முடி _ஐம்பால் எனப்பட்டது.
ஐம்படைத்தாலி _சிறுவர் கழுத்தணி.
--
<span style="font-family:"L
சிறுபாணாற்றுப்படை 68 - 83
(வானத்தே)தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கும் பெருமையையுடைய கையினையும்,
(புலவர்) தேடாத நல்ல புகழினையும், நல்ல தேரினையும் உடைய சோழன் - அவனது
(தன் குடிகள் தன்னைவிட்டு)அகலோம் என மேற்கொண்ட உறுதியையும் உடைய உறந்தையும் சிறிதே;
அடுத்து – கடையெழு வள்ளல்கள் – இனி வரும்.
ப.பாண்டியராஜா
சிறுபாணாற்றுப்படை - 7
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் மிகுந்த பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன். வழியில் பசியோடு குடும்பத்துடன் மரத்தடியில் இளைப்பாறிக்-கொண்டிருக்கும் வறிய பாணனை நோக்கித் தொடர்ந்து கூறுகிறான்.
இந்த அளவுக்குப் பெரும் செல்வம் இவனுக்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்று அந்த வறிய பாணன் எண்ணக்கூடும் என்ற நோக்கில், குடபுலம் ஆளும் சேரனின் வஞ்சியில்கூட எனக்கு இவ்வளவு செல்வம் கிடைத்திருக்காது என்று கூறிவிட்டு, பின்னர் தென்புலம் காக்கும் பாண்டியனின் மதுரையிலும் எனக்கு இந்த அளவுக்குச் செல்வம் கிடைத்திராது என்று கூறுகிறான். அடுத்து, குணபுலம் காக்கும் செம்பியன் எனப்படும் சோழனின் உறையூரிலும் எனக்கு இந்த அளவுக்குச் செல்வம் கிடைத்திராது என்றும் கூறுகிறான்.
அடுத்து, அக் காலத்து கடையெழு வள்ளல்கள் என்று சிறப்பித்துக்கூறப்படும் ஏழு வள்ளல்களாகிய சிற்றரசர்களிடம் சென்றிருந்தாலும் இந்த அளவுக்குச் செல்வம் கிடைத்திராது என்று பாணன் கூறுவதாகக் கூறி, அந்த ஏழு வள்ளல்களின் சிறப்பையும் புலவர் எடுத்துக்கூறுவது இப் பாடலை ஒரு வரலாற்றுக் கருவூலமாக மாற்றுகிறது.
முதலில் பாணன் மழையில் நனைந்த மயிலுக்குப் போர்வை ஈந்த பேகனைப் பற்றிக் கூறுகிறான்.
மலைவளம் காண்பதற்காகப் பேகன் தன் நாட்டு மலைகளில் சுற்றித்திரிகிறான். ஏறக்குறைய மலையின் உச்சிக்கே சென்றுவிடுகிறான். மலையுச்சி சரிந்து கீழிறங்கிச் சற்றுச் சமவெளியாய் இருக்கும் பகுதி கவான் எனப்படும். அப்பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது மழைபிடித்துக்கொள்கிறது. எனவே மழைக்கு மன்னன் தன்னுடன் வந்தோருடன் ஒரு மறைவிடத்தில் ஒதுங்குகிறான். ஏறக்குறைய மலையுச்சியாய் இருப்பதாலும், மழையில் சற்று நனைந்ததாலும் பேகனுக்குக் குளிரத் தொடங்குகிறது. எனவே உடன்வந்தோர் அவனுக்கு ஒரு விலையுயர்ந்த சால்வையைப் போர்த்திவிடுகிறார்கள். அப்போது வெளியில் அவர்கள் ஓர் இனிய காட்சியைக் காண்கிறார்கள். மழையைக் கண்டால் மயில் கூட்டம் மகிழ்வுடன் தோகைவிரித்தாடும் அல்லவா! அவ்வாறு ஒரு மயில் அங்கே மழையில் இன்பமாய் நனைந்தவாறே தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. தான் மட்டும் மழையில் நனையாமல் மறைந்து இருக்கும்போது, மயில் மட்டும் ஒதுங்க இடமில்லாமல் மழையில் நனைகிறதே என்று எண்ணிய பேகன், சட்டென்று மயிலருகே ஓடிப்போய் தான் போர்த்தியிருந்த சால்வையை எடுத்து, மயிலுக்குப் போர்த்திவிடுகிறான். உண்மையில் அது மயிலுக்குத் துயரமான நிலை அல்லவென்றாலும், தன் நாட்டில் ஒரு பறவைகூடத் துயரப்பட்டுவிடக்கூடாது என்று எண்ணும் பேகனின் அருள்நெஞ்சம் அவனுக்கு இறவாப் பெரும்புகழ் ஈட்டித்தருகிறது. பேகன் ஒன்றும் சாமானியக் குடியில் பிறந்த மன்னன் அல்லன். பண்டைத் தமிழகத்தில் மிகச் சிறந்தோங்கிய குடிகளுள் ஒன்றான ஆவியர்குடி என்ற குடிப்பிறந்தோன் அவன். அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் என்று அவனைச் சிறப்பித்துக் கூறுகிறார் புலவர். அப்படிப்பட்ட பெருங்குடியிற் பிறந்த ஒரு மன்னன் தன் பெருமையைச் சிறிதும் எண்ணாது, ஒரு சிறுவனைப் போல் ஓடோடிச் சென்று ஒரு காட்டு மயிலுக்கு இரக்கம் காட்டியது பேகனின் சிறப்புமிக்க கொடைமடத்தைக் காட்டுகிறது அல்லவா! அப்படிப்பட்ட வள்ளல்கூடத் தனக்கு இத்துணை செல்வத்தை வாரி வழங்கியிருக்கமாட்டன் என்று பாணன் கூறும்போது, பின்னர் பாணனுக்கு எங்கிருந்து இத்துணை செல்வம் கிட்டியிருக்கும் என்று பழைய பாணன் மேலும் மேலும் வியப்படைவதை நம் மனக்கண்ணால் பார்க்கமுடிகிறதல்லவா!
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் … சிறு 84 – 87
என்ற நான்கு அடிகளில் புலவர் பேகனின் பெருஞ்சிறப்பை வியந்து போற்றுவதைக் காண்கிறோம்.
அடுத்து முல்லைக்குத் தேர் ஈந்த பறம்புமலை அரசன் பாரியைப் பற்றிக் கூறுகிறார் புலவர். பாரி மன்னன் காட்டு வளத்தைக் காண, ஒரு நெடுவழியில் பயணம் செய்கிறான். அவனது காடு செறிந்த மரங்களையுடையது என்று சொல்ல வந்த புலவர்,
சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடுவழி
என்கிறார். அந்த நெடுவழியின் ஓரத்தில் நாகமரங்கள் செழித்து வளர்ந்திருக்குமாம். அவற்றின் மணமிக்க மலர்களில் தேனுண்ண வரும் வண்டுகளால் சிதறிவிழும் தேன்துளிகள் நெடுவழியில் போவோர் மீது தெறித்துவிழுமாம். அத்தகைய நெடுவழியில் சென்றுகொண்டிருந்த மன்னன் பாரி, அருகிருந்த பறம்பு மலைச் சாரலிலிருந்து பேரளவில் விழும் வெள்ளிய அருவி நீரின் பெருத்த ஒலியைக் கேட்கிறான். தன் தேரைப் பாதையோரத்தில் நிறுத்திவிட்டு அருவியைக் காணச் செல்கிறான். நெடுவழியின் ஓரத்தில் ஒரு சிறிய செடியின் மீது ஏறிப் படர்ந்திருந்த ஒரு முல்லைக்கொடியின் ஒரு பகுதி மேலும் வளர்ந்து, பற்றிக்கொள்ள கொழுகொம்பு இல்லாததால் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது. அப்போழுது வாகாய்ச் சிக்கிய தேரின் பக்கத் தூண்களில் ஒன்றைப் பற்றிக்கொண்டு, அதனை இறுகச் சுற்றியும் கொள்கிறது. இப்போது அருவியைக் கண்டு மகிழ்ந்த பின்னர் தேருக்குத் திரும்பிய மன்னன் திகைத்துப்போகிறான். அவன் நினைத்திருந்தால் அந்தக் கொடியை அறுத்து எறிந்திருக்க முடியும். அதைச் செய்ய அவனது மனம் இடம்தரவில்லை. அல்லது, கொடியைச் சுளுவாகக் கழற்றி அந்த செடியின் மீதே படரவிட்டிருக்கமுடியும். ஆனால் அவ்வாறு செய்யும்போது கொடி அறுந்துவிட்டால் என்ன செய்வது? எனவே மன்னன் தேரை அங்கேயே விட்டுவிட்டு, உடன்வந்தோர் தேரில் ஏறி ஊருக்குத் திரும்புகிறான். மயில் துயரப்படுமோ என்று இரக்கப்பட்ட வள்ளல் பேகனைப் போலவே, கொடி அல்லலுறுமோ என வேதனைப்பட்ட மன்னன் பாரியின் செய்கையை,
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரியும்
என்ற அடிகள், ஒரு நீண்ட கதையைச் சுருக்கமாகக் கூறிமுடிக்கும் புலவரின் திறத்தையும், மன்னனின் ருவள்ளண்மையையும் ஒருசேரப் பறைசாற்றி நிற்கின்றன. சிறு வீ முல்லை – பெரும் தேர் என்ற சொற்கள் ஒரே அடியில் வந்து உருவ முரணைத் தந்து நம்மை மகிழ்விக்கின்றன. அதேநேரத்தில் ஒரு சிறிய கொடிக்கு அவ்வளவு பெரிய தேரை விட்டுக்கொடுத்த மன்னனின் இரக்க குணத்தையும் பெரிதாய் பறைசாற்றுகிறது.
இவ்வாறு நகரமுடியாக் கொடிகளிடத்தும் இரக்கம் காட்டும் பாரி, ஏழைப் பாணனிடம் எவ்வளவு இரக்கம் காட்டுவான்! எனினும் அவனிடமும் அத்துணை செல்வம் கிடைத்திருக்காது என்று பாணன் கூறுகிறான்.
அடுத்து, காரி எனப்படும் மலையமான் திருமுடிக்காரியின் வள்ளண்மையை எடுத்துக்கூறுகிறார் புலவர் நல்லூர் நத்தத்தனார். பகைவர்களை வென்ற காரி, வையகமே மருண்டு ஒதுங்கும்படி வேகமாகத் தன் புரவியில் வருகிறான். குதிரையின் பிடரி மயிர்கள் வேகமாக இருபக்கமும் ஆடுகின்றன. அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணி உரத்த ஒலியெழுப்பி அனைவரையும் ஓடி ஒதுங்கச் செய்கிறது. காரியின் வலது கரம் நீட்டிய வேலை ஒங்கி உயரத் தூக்கிப் பிடித்திருக்கிறது. அவனது புடைத்த தோள்களில் பூண்கள் இறுகக் கவ்விப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. அப்பொழுது சாலை ஓரத்தில் ஓர் இரவலர் கூட்டம் நின்றுகொண்டிருப்பதைத் தொலைவிலிருந்து பார்த்த காரி, அவர்களின் அருகே வரும்போது, தன் வலதுகை வேலை இடக்கைக்கு மாற்றி, தன் கழுத்திலிருந்த முத்து மாலைகளைக் கழற்றி, “பிடித்துக்கொள்ளுங்கள்” என்று கனிவுடன் கூறியவாறே அந்த இரவலர்களை நோக்கி வீசி எறிகிறான். அப்போது அவன் தோள்களில் கவ்வியிருந்த தொடிகள் கழன்று அவன் நீண்ட கைகளில் இறங்கி விழுந்து நிற்கின்றன.
அத்தகைய வெற்றிக்களிப்பிலும் அவனது வீர நெஞ்சம் இரவலர்க்கான ஈர நெஞ்சமாய் மாறும் காட்சியைப் புலவர் வெகு அழகாகச் சித்தரித்துள்ளார்.
கறங்குமணி
வாலுளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கைக் காரியும் --- சிறு 91 – 95
இத்தகைய ஈர நெஞ்சமுள்ள காரியிடத்தும் தனக்கு அத்துணை செல்வம் கிட்டியிராது என்று பாணன் சொல்கிறான். கொடுக்கும்போதெல்லாம் கைகளை நீட்டுவதால் காரியின் இறுக்கமான தொடி எனப்படும் தோள்வளைகள் கழன்று கீழே மணிக்கட்டில் வழுக்கி விழுவதைக் கழல்தொடித் தடக்கை என்ற தொடரால் எத்துணை நுண்ணிதாகக் குறிப்பிடுகிறார் புலவர் பாருங்கள்!
அடுத்து ஆய் அண்டிரன் எனப்படும் வேள் ஆய் என்ற வள்ளல் அரசனைப் பற்றிப் பாணன் கூறுகிறான். நாகன் என்ற ஒரு பெருஞ்செல்வன் ஒளிவிடும் நீலமணிகளைக் கொண்ட அணிகலன்கள் அணிந்தவன். அவன் ஒரு மிக விலையுயர்ந்த, நல்ல வேலைப்பாடுகள் கொண்ட ஓர் ஆடையை ஆய்க்கு வழங்குகிறான். பெருஞ்செல்வன் வழங்கிய வெகுமதி எப்படியிருக்கும்! அந்த அரும்பெறல் ஆடையைப் பெற்றுக்கொண்டு அரசன் வந்துகொண்டிருக்கிறான். அவனது இடக்கையில் ஒரு பெரிய வில் இருக்கிறது. தன் தோள்களில் சந்தனம் பூசியிருக்கிறான். நேரமானதால் அந்தச் சந்தனம் புலர்ந்துபோய் மேனியில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. வழியில் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் இறைவன் உருவை அரசன் காண்கிறான். மேலே எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் திறந்த வெளியில் இருக்கும் இறைவனைப் பார்த்தவுடன் மன்னனின் மனம் இளகிப்போய்விடுகிறது.
ஆர்வத்துடன், “இறைவா, இதைப் பெற்றுக்கொள்” என்ற இனிய மொழிகளைக் கூறி அந்த விலையுயர்ந்த வெகுமதி ஆடையை இறைவன்மேல் போர்த்திவிடுகிறான் மன்னன்.
நிழல் திகழ்
நீல நாக நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும் – சிறு 94 - 99
என்கிறார் புலவர். விலையுயர்ந்த ஆடையை மனமுவந்து மன்னன் கொடுத்ததை அமர்ந்தனன் கொடுத்த என்ற இரண்டு சொற்களால் குறிப்பிடும் நேர்த்தியைக் கவனித்தீர்களா? அமர்தல் என்பது விரும்புதல். அத்தகைய இளகிய மனம்படைத்த ஆய் மன்னனிடம்கூட தான் வைத்திருக்கும் அளவு பெருஞ்செல்வம் கிடைத்திராது என்று பாணன் கூறுகிறான்.
அடுத்ததாக, பாணன் அதிகன் எனப்படும் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற வள்ளலைப் பற்றிக்கூறுகிறான். இந்த மன்னன் ஒளிதிகழும் நெடுவேலைக் கொண்டவன். பகைவரிடம் குன்றாத சினத்தைக் கொண்டவன். ஆர்ப்பரிக்கும் கடலைப் போன்ற பெரும்படையைக் கொண்டவன். இருப்பினும் இரவலர்பால் மிகுந்த இரக்கம் கொண்டவன். ஒருமுறை அவனுக்கு ஓர் அரிய நெல்லிக்கனி கிடைத்தது. உண்டால் அமிழ்தத்தைப் போல் இனிக்கும் தன்மைகொண்ட அந்த நெல்லிக்கனி பெருமையுடைய அவனுடைய மலையில் கமழுகின்ற பூக்களையுடைய சரிவிலே மிக்க அழகிதான ஒரு நெல்லி மரத்தில் பழுத்து விளைந்தது. உண்பவருக்குப் பெருநன்மை உண்டாக்கக்கூடிய அந்த அரும்பெரும் நெல்லிக்கனியைத் தானைத் தலைவனான தான் உண்ணாமல், தமிழ்ப்பாட்டியாம் ஔவைக்கு ஈந்து மகிழ்ந்தவன் இந்த அதிகன்.
சிறிதளவுகூட சுயநலம்பேணாமல், தமிழ்பால் மிகுந்த பற்றும், இரவலர்மேல் மிகுந்த இரக்கமும் கொண்ட இந்த அதிகன் தண்டமிழ்ப் பாவலராம் பாணர்களிடமும் எத்துணை அளவு இரக்கம் பாராட்டுவான். எனினும் அவனிடமும்கூட இத்துணை அளவு செல்வம் தனக்குக் கிடைத்திராது எனப் பாணன் கூறுகிறான்.
மால்வரைக்
கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஔவைக்கீந்த
உரவுச் சினம் கனலும், ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் – சிறு 99 – 103
என்று அதிகனின் வள்ளண்மையைச் சிறப்பித்துக்கூறுகிறார் புலவர். அமிழ்து தரும் இன்பத்தைத் தரும் இனிமையான கனி என்பதை அமிழ்துவிளை தீங்கனி என்ற அழகிய அடைச் சொற்களால் குறிப்பிடும்போது, அத்துணை இனிய கனியினையும் அரசன் தான் உண்ணாமல் ஓர் ஏழைப் புலவருக்குக் கொடுத்தான் என்பது அரசனின் கொடைத்திறத்தை இரட்டிப்பாக காட்டவில்லையா!
அடுத்து நிறைய மலைகளையுடை ஒரு நாட்டைச் சேர்ந்த நள்ளி என்ற வள்ளலைப் பற்றியும் பாணன் குறிப்பிடுகிறான். போர்முனைகளில் பெருவலி காட்டக்கூடிய பேராற்றல் மிகுந்தவன் நள்ளி. அவனது செறிந்து விளங்கும் உயர்ந்த மலைகளில் மேகங்கள் தூறிக்கொண்டே இருக்கும்.
நீண்டு உயர்ந்த மலைமுகடுகளில் மேல்காற்று எப்போதும் நிலைகொண்டிருக்கும்.
முனைவிளங்கு தடக்கை
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளி – சிறு 105-107
என்று நள்ளியை வெகுவாகச் சிறப்பித்துக் கூறுகிறார் புலவர். துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு என்ற அடியின் எதுகைச் சிறப்பு எத்துணை இயல்பாக அமைந்திருக்கிறது பார்த்தீர்களா?
இவனுக்கு நெருக்கமானோர் இவனிடம் மனம் திறந்த உண்மையான நட்புக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் அனைவரும் மகிழும்படி, அவரின் இல்லறத் தேவைகளுக்காக, வேண்டும் அளவு செல்வத்தை வாரிக்கொடுக்கும் வள்ளல் இந்த நள்ளி.
கரவாது
நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம்
முட்டாது கொடுத்த – சிறு 103 - 105
வள்ளல் என்று நள்ளியை உயர்த்திக் கூறுகிறார் புலவர். அப்படிப்பட்ட நள்ளியுமே இந்த அளவு செல்வத்தை வாரிக்கொடுத்திருக்கமாட்டான் என்கிறான் இந்தப் பாணன்.
இறுதியாக ஓரி என்ற வள்ளலைக் குறிப்பிடுகின்றான் பாணன். இவனது குதிரை மிகுந்த அழகிய பிடரி மயிரைக் கொண்டது. அதனாலேயே அது ஓரிக்குதிரை எனப்பட்டது. இவன் கொல்லிமலைக்குத் தலைவன். காரி என்னும் பெயரையுடைய முள்ளூர் மன்னன் கரிய குதிரையைக் கொண்டவன்.
இந்தக் காரிக்குதிரை காரியும் ஓரியும் பகை காரணமாகப் பன்முறை போரிட்டனர். இந்த ஓரி ஒரு சிறந்த வள்ளலாகத் திகழ்ந்தான். தன்னிடம் கூத்தாடிப் பரிசில் கேட்டுவரும் கோடியர் என்ற கோத்தாடியருக்கு, பூத்துக்குலுங்கும் முதிர்ந்த சுரபுன்னை மரங்கள் நிறைந்த சிறிய மலைகளையுடைய குறும்பொறை என்ற பகுதியைக் கொடையாக வாரி வழங்கினான்.
நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த
காரிக்குதிரை காரியொடு மலைந்த
ஓரிக்குதிரை ஓரியும் – சிறு 107 – 111
என ஓரியின் வீரத்தையும், வள்ளல்தன்மையையும் சிறப்பித்துக்கூறுகிறான் பாணன். அப்படிப்பட்ட ஓரியிடமும்கூட இத்துணை பெருஞ்செல்வம் தனக்குக் கிட்டியிராது என்றும் பாணன் கூறுகிறான்.
ஆக, முடியுடை மூவேந்தரும் தரமுடியாத, வாரி வழங்கும் எழு வள்ளல்களும் ஈயமுடியாத அத்துணை பெருஞ்செல்வம் பாணனுக்கு வேறு எவரிடமிருந்து கிடைத்திருக்கும்?
-- தொடரும்
<a style="margin-right: 1em; margin-left: 1em;" onmousedown="this.href='https://lh3.googleusercontent.com/-KYkuzg5v9BM/Vo6LS0qxLkI/AAAAAAAACuM/Ibna
சிறுபாணாற்றுப்படை - 8
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் மிகுந்த பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன். வழியில் பசியோடு குடும்பத்துடன் மரத்தடியில் இளைப்பாறிக்-கொண்டிருக்கும் வறிய பாணனை நோக்கித் தொடர்ந்து கூறுகிறான்.
இந்த அளவுக்குப் பெரும் செல்வம் இவனுக்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்று அந்த வறிய பாணன் எண்ணக்கூடும் என்ற நோக்கில், குடபுலம் ஆளும் சேரனின் வஞ்சியில்கூட எனக்கு இவ்வளவு செல்வம் கிடைத்திருக்காது என்று கூறிவிட்டு, பின்னர் தென்புலம் காக்கும் பாண்டியனின் மதுரையிலும் எனக்கு இந்த அளவுக்குச் செல்வம் கிடைத்திராது என்று கூறுகிறான். அடுத்து, குணபுலம் காக்கும் செம்பியன் எனப்படும் சோழனின் உறையூரிலும் எனக்கு இந்த அளவுக்குச் செல்வம் கிடைத்திராது என்றும் கூறுகிறான். அடுத்து, அக் காலத்து கடையெழு வள்ளல்கள் என்று சிறப்பித்துக்கூறப்படும் ஏழு வள்ளல்களாகிய பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகிய சிற்றரசர்களிடம் சென்றிருந்தாலும் இந்த அளவுக்குச் செல்வம் கிடைத்திராது என்றும் பாணன் கூறுகிறான்.
இறுதியாகத் தனக்கு நல்லியக்கோடனிடம்தான் அத்துணை பெருஞ்செல்வம் கிடைத்ததாகப் பாணன் கூறுகிறான்.
எடுத்த எடுப்பிலேயே பெரும்போடு போடுகிறான் பாணன். மேல் குறிப்பிட்ட ஏழு அரசவள்ளல்களுமே தமிழ்நாட்டுக் கொடைக்கடன் என்னும் பெரும்பாரத்தைத் தம் நுகத்தடியாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஏழுபேரும் சேர்ந்து நின்று தாங்கிக்கொண்டிருக்கும் ஈகை என்னும் செம்மையான நுகத்தடியினைத் தான் ஒருவனாக நின்று தாங்குகின்றான் நல்லியக்கோடன் என்கிறான் அந்தப் பாணன்.
எழு சமம் கடந்த எழு உறழ் திணிதோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்
என்று நல்லியக்கோடனைச் சிறப்பித்துக் கூறும் புலவரின் அடிகள் பொன்னுக்கு நிகரானவை. எழு என்ற சொல்லை வைத்துப் புலவர் விளையாடியிருக்கும் நேர்த்தியைக் கவனியுங்கள். எழுகின்ற போர்களையெல்லாம் சடுதியில் கடந்துசென்றவர்கள் அந்த எழுவர் – எழு சமம் கடந்த என்கிறார் புலவர். சமம் என்பது போர். தாமாகப் போரை நாடிச் செல்லாமல் தமக்கு எதிராக எழுகின்ற போர்தான் எழுசமம். கோட்டைக் கதவு தெறித்துப் பிளக்காமல் அதனைக் காத்து நிற்கும் பெரும் குறுக்குக் கட்டைதான் எழு. அந்த எழுவைப் போன்ற திண்ணிய தோள்களைக் கொண்டவர்கள் அந்த ஏழுபேர். இங்கு அந்த எழுவரின் ஈரம் மட்டுமல்ல, வீரமும், வலிமையும் விதந்து சொல்லப்படுகின்றன. இந்த எழுவரும் தமக்குத்தாமே பூண்டுகொண்டிருக்கிற கொடைக் கடன்தான் ஈகைச் செந்நுகம். செந்நுகம் என்பது செம்மையான் நுகம். ஒரு இரட்டை மாட்டு வண்டியில் உள்ள நுகத்தடிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கும். அது செந்நுகமாக இருக்க இரண்டு பக்கங்களிலும் அந்த எழுவரும் நிற்கவேண்டும். நடுவில் ஒருவரும், பக்கத்துக்கு மூவருமாக எழுவர் அந்த செந்நுகத்தகத்தைத் தாங்கிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்படியின்றி ஒருவர் மட்டும் தாங்கும் செந்நுகம் என்றால் அந்த ஒருவர் நடுவில் நின்று அந்த நுகத்தைத் தாங்கவேண்டும். எனவே அவர் அனைத்துப் பாரங்களையும் தாங்கவேண்டும். இவ்வாறு ஏழு அரசர்களும் சேர்ந்து இந்த ஈகைப் பாரத்தைப் பங்கிட்டுக்கொண்டு தாங்கி நிற்கிறார்கள். இந்த எழுவரும் பங்கிட்டுத் தாங்கும் இந்த உலக ஈகைப் பாரத்தை நல்லியக்கோடன் ஒருவனாகவே தாங்குகிறான் என்கிறார் புலவர். விரிகடல் வேலி வியலகம் விளங்க என்கிறார் அவர். அது இந்த உலகத்தின் மொத்த கொடைப் பாரம். இதனை ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள் நல்லியக்கோடனது என்கிறார் புலவர். அந்த எழுவரின் எழு உறள் திண்தோள் போலவே, இவனுக்கும் இருப்பது உரன் உடை நோன் தாள் என்கிறார் புலவர். உரன் என்பது மனத்திண்மை. நோன்தாள் வலிமையான விடாமுயற்சி. எழு உறழ் திணி தோள் எழுவர் – உரன் உடை நோன் தாள் ஒருவன் - என்ன அழகிய ஒப்புமை பாருங்கள். அந்த ஏழு பேரும் ஒன்று சேர்ந்தாலும் அவருக்கு இவன் இளைத்தவன் அல்ல என்கிறார் புலவர். இந்த அழகிய நான்கு அடிகளில் எத்துணை நயங்கள் பொதிந்து கிடக்கின்றன பாருங்கள்.
இந்த நல்லியக்கோடனின் தலைநகரம் இன்றைய திண்டிவனத்தின் ஒரு பகுதியாக விளங்கும் கிடங்கில் என்ற ஊராகும். அதனாலேயே இவன் கிடங்கில் கோமான் என்று போற்றப்படுகிறான். இவன் ஓவியர் குடியில் பிறந்தவன். எனவே ஓவியர் பெருமகன் என்றும் அழைக்கப்படுகிறான். இவனது முன்னோர்களாகிய ஓவியர்கள் திண்டிவனப் பகுதியில் இருக்கும் மா இலங்கை என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர். அவர்களிலெல்லாம் இவன் மிகச் சிறந்தவன் என்று அடுத்து நல்லியக்கோடனைச் சிறப்பித்துக்கூறுகிறான் பாணன்.
நறுவீ நாகமும், அகிலும் ஆரமும்
துறையாடு மகளிர்க்குத் தோள்புணையாகிய
பொருபுனல் தரூஉம் போக்கரு மரபின்
தொன்மாஇலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா இலங்கை மன்னருள்ளும்
மறுவின்றி விளங்கிய வடு இல் வாய் வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்
களிற்றுத் தழும்பிருந்த கழல்தயங்கு திருந்தடிப்
பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கைப்
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை
நல்லியக்கோடனை --- சிறு 116 – 126
நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும்
(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
(கரையை)மோதுகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற அழித்தற்கு அரிய முறைமையுடைய,
பழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரை தோன்றிய காலத்திலேயே (தனக்குப்)பெயராகவுடைய
நல்ல பெருமையையுடைய இலங்கை(யை ஆண்ட) அரசர் பலருள்ளும், 120
குற்றமின்றி விளங்கிய, பழி இல்லாத, (தன் தொழில் நன்கு)வாய்க்கும் வாளினையுடைய
மிக்க புலி(போன்ற) வலிமையினையும் உடைய ஓவியர் குடியில் தோன்றியவனும்,
யானை(யைச் செலுத்துதலால் உண்டான) தழும்பு கிடந்த, வீரக்கழல் அலையாடும், திருத்தமான அடியினையும்,
பிடியானைத் திரளை வழங்கும் (ஓயாது)பெய்தலையுடைய மழை (போன்ற)பெரிய கையினையும் உடையவனும்,
பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய125
நல்லியக்கோட(ன் என்னும் மன்ன)னைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன்
என்பது இதன் பொருள்.
ஓவியர்குடியின் மன்னர்கள் ஆண்ட மாஇலங்கை என்னும் ஊர் அனைவரும் அறிந்த தொல் மா இலங்கையைப் போன்றது. எனவேதான் அதனை தொன்மாஇலங்கைக் கருவொடு பெயரிய என்று புலவர் அழைக்கிறார். தொன்மா இலங்கை உருவான காலத்திலேயே அதன் பெயரைக் கொண்ட என்பது இதன் பொருள். அந்தத் தொன்மா இலங்கையில் அரக்கர்கள் வசித்ததால், இந்த மாஇலங்கையை நன்மாஇலங்கை என்கிறார் புலவர். இந்த நன்மாஇலங்கையில் பாயும் ஆற்றில் நீராடும் மகளிருக்கு மலையிலிருந்து அடித்துக்கொணரப்படும் நறுவீ நாகமும், அகிலும், சந்தனமும் தெப்பமாகப் பயன்படுகின்றனவாம். இவையெல்லாம் விலையுயர்ந்த மரங்கள். செல்வர்கள் வீட்டில் பயன்படுத்தும் பலவித வாசனைப் பொருள்களுக்குப் பயன்படுபவை. அப்படிப்பட்ட இந்த மதிப்புமிக்க மரங்கள் நீராடும் மகளிருக்குத் தெப்பமாகப் பயன்படுகின்றன என்பது அந்த நாட்டின் மிகுந்த நீர்வளத்தையும், மலைவளத்தையும் ஒருசேரக் குறிப்பதாகும்.
இந்த மாவிலங்கை நகரை ஆண்ட மன்னர் பலருள் சிலர் சில தவறுகள் இழைத்திருக்கலாம். ஆனால் நல்லியக்கோடன் மறுவின்றி விளங்கியவன் என்கிறார் புலவர். அவன் வாளெடுத்துப் போர்புரிந்தால் எதிரில் யாரும் நிற்கமுடியாது என்பதை வாய் வாள் பெருமகன் என்ற கூற்றால் குறிப்பிடுகிறார். புலி போன்ற வலிமையுடைவன் என்பதை உறுபுலித் துப்பின் என்ற சொற்களாற் குறிக்கிறார். புலி வலிமை மிக்கது. அதிலும் மிக்க வலிமை மிக்க புலியே உறுபுலி என்பது. அப்படிப்பட்டவன் நல்லியக்கோடன் என்கிறார். இதன்மூலம் அம் மன்னனின் புகழையும், சிறப்பையும், வீரத்தையும் ஒருங்கே குறிப்பிடுகிறார் புலவர். நல்லியக்கோடன் யானையைச் செலுத்துவதில் வல்லவன். யானையின் கழுத்தில் அமர்ந்து கால்களை இருபுறமும் தொங்கப்போட்டு, அந்தக் கால்களால் சமிக்கை காட்டி அதனை நடத்துவர். இப்படிச் செய்வதால் நல்லியக்கோடனின் கால்கள் தழும்பேறிப்போயிருந்தனவாம். களிற்றுத் தழும்பிருந்த கழல் தயங்கு திருந்தடி என்கிறார் அவர். கால்களால் அவ்வாறு யானையைச் செலுத்தும்போது கால்களில் அணிந்துள்ள கழல்கள் ஏறி இறங்கியவண்ணம் இருக்கும் என்பதனையும் குறிப்பிட புலவர் மறக்கவில்லை. தயங்குதல் என்பது மேலும் கீழும் ஆடுதல். எத்துணை கூர்த்த நோக்கு பாருங்கள்!
இவ்வாறு யானையை அடக்கிச் செலுத்தும் வல்லமை பெற்ற மன்னன், பெண்யானைகளைக் கூட்டங்கூட்டமாகப் பரிசிலாக வழங்குவானாம். பிடிக்கணம் சிதறும் என்கிறார். சிதறுதல் என்பது வாரி வழங்குதல். அவ்வாறு அவன் தன் கரங்களால் யானைக் கூட்டங்களை மழைபோல் மிகுதியாகக் கொடுத்தலால் அவனது கைகளைப் பெயல்மழைத் தடக்கை என்று புகழ்கிறார் புலவர். பலவித இசைக்கருவிகளையுடைய இரவலர்கள் பல்லியக்கோடியர் எனப்படுகிறார்கள். இயம் என்பது இசைக் கருவி. பல்லியம் என்பது பலவித இசைக்கருவிகளின் தொகுதி. இன்றைய Orchestra போல. இந்தப் பல்லியக்கோடியருக்குப் புரவலனாக இருப்பவன் பெரும் புகழையுடைய நல்லியக்கோடன் என்று வாயார அவனைப் புகழ்ந்து தள்ளுகிறார் புலவர். பல்லியக்கோடியர் – நல்லியக்கோடன் – எத்துணை அழகான எதுகை பார்த்தீர்களா?
இனி இந்த நல்லியக்கோடனைப் பார்ப்பதற்கு முன் தானிருந்த வறிய நிலையையும், அந்த நல்லியக்கோடனை நாடி அவன் சென்ற வழியின் தன்மையையும், அங்கு வாழும் மக்களின் பண்புகளையும், அங்கு அவனுக்குக் கிடைத்த பலவித உணவுகளையும் புதிய பாணன் எடுத்தியம்புகிறான்.
-- தொடரும்
ப.பாண்டியராஜா
சிறுபாணாற்றுப்படை - 9
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் மிகுந்த பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன். வழியில் பசியோடு குடும்பத்துடன் மரத்தடியில் இளைப்பாறிக்-கொண்டிருக்கும் வறிய பாணனை நோக்கித் தொடர்ந்து கூறுகிறான்.
இந்த நல்லியக்கோடனைப் பார்ப்பதற்குமுன் தானிருந்த வறிய நிலையை எடுத்தியம்புகிறான் புதிய பாணன்.
பல் இயக் கோடியர் புரவலன், பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு,
தாங்க அரு மரபின் தன்னும், தந்தை
வான் பொரு நெடு வரை வளனும் பாடி
முன் நாள் சென்றனம் ஆக -
நல்லியக்கோடனை நீவிர் எவ்வாறு அணுகவேண்டும் என்று ஆற்றுப்படுத்துவதைத் தவிர்த்து, தான் அம் மன்னனை அணுகியவிதத்தை இந்தப் பாணன் இங்கு எடுத்தியம்புகிறான்.
பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலன் ஆகிய பெரிய புகழையுடைய
நல்லியக்கோட(ன் என்னும் மன்ன)னைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன்
(பிறரால்)பொறுத்தற்கரிய (குடிப்பிறந்தோர்க்குரிய)முறைமையினையுடைய தன்னையும், (அவன்)தந்தையுடைய
வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி,
சில நாட்களுக்கு முன்னே யாம் சென்றேமாக –
நல்லியக்கோடனை அறிமுகப்படுத்தும்போதே, அவனைப் பல்லியக் கோடியர் புரவலன் என்று கூறுகிறான். கோடியர் என்பர் கூத்தர் – நடனமாடுபவர். அவர்களுக்கேற்ற வகையில் யாழிசைப்பவரே பாணர். எனவேதான் இந்தப் பெரும்பாணன் நல்லியக்கோடனிடம் பரிசுகள் பெற்றுத் திரும்புகிறான். இவ்வாறு கலைஞர்களை ஆதரிப்பதில் அவன் பெரும் புகழ்பெற்றவன் என்று கூறும் முகமாகவே பேரிசை நல்லியக்கோடன் என்கிறான் பாணன். அம் மன்னனிடமிருந்து எப்படியாவது பரிசில் பெறவேண்டும் என்ற கொள்கையுடன் அவனை அணுகாமல், அவனை நயந்த கொள்கையோடு அணுகவேண்டும் என்பது பாணனின் குறிப்பு. நய என்பதற்கு, கனிவை வெளிப்படுத்து, விரும்பு, பாராட்டு என்றெல்லாம் பொருள் உண்டு. இது அத்தனையும் கொண்டு மன்னனை அணுகவேண்டும் என்பதுவும் பாணனின் குறிப்பு எனக்கொள்ளலாம்.
மன்னனைக் கண்டவுடன் முதலில் அவனையும் அவனது முன்னோரையும் வாழ்த்திப் பாடவேண்டும் என்கிறான் பாணன். தாங்கரு மரபின் தன்னையும் என்ற கூற்றில், மன்னனின் சிறப்புமிக்க மரபையும், பின்னர் மன்னனின் சிறப்பியல்புகளையும் பாடவேண்டும் என்கிறான் பாணன். பின்பு மன்னனின் நாட்டையும் பாடவேண்டும் என்று கூறவந்தவன் தந்தை வான் பொரு நெடுவரை வளனும் பாடி என்கிறான். முதலில் பிறப்பைக் கூறி, பின்னர் அவனது இருப்பைக்கூறி, அதன்பின்னர் நடப்பையும் கூறுங்கள் என்கிறான் அவன். நாம் முதலில் ஒருவரிடம் பேசும்போது, முதலில் அவரது தந்தை போன்ற பெரியவர்களின் சிறப்பை எடுத்துக்கூறும்போதே அவர் மகிழ்ந்துபோவார். பின்னர் அவரையும் சிறப்பித்துக்கூறி, பின்னர் அவரின் இருப்பிடம் பற்றிப் புகழ்ந்து பேசினால் அவரின் மனத்தை மகிழ்விக்கலாம் என்ற நுணுக்கமான உளவியல் கருத்தை விவரிக்கும் புலவரின் திறம்தான் என்னே!
பரிசில் பெற்றுத் திரும்பும் பாணன் மிகவும் சிறப்பாக உடை அணிந்திருப்பான்தானே! நாமும் அவனைப்போல் இருந்தால்தான் நமக்கும் அத்தகைய பரிசில் கிடைக்கும்; வறிய நிலையில் இருக்கும் தனக்கும் பரிசில் கிடைக்குமோ என்று பழைய பாணன் ஐயுறலாமன்றோ! அத்தகைய ஐயத்தை நீக்கும் வண்ணம், புதிய பாணன் தான் முன்பிருந்த வறிய நிலையை எடுத்துக்கூறுகிறான். இது பழைய பாணனுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டும் அல்லவா!
---------- ---------------- ------------------- இந்நாள்
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
இன்று,
திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி
கறக்கப்படாத பாலினையுடைய முலையை உண்ணுதலை(த் தன் பசி மிகுதலால்) பொறுத்தலாற்றாது,
ஈன்றணிமையையுடைய நாய் ஒலியெழுப்பும் புன்மையுடைய அடுக்களையில்,
புதிய பாணனின் முந்தைய வறுமையை விளக்கப்போந்த புலவர் முதலில் நம்மை அவனுடைய அட்டுப்படிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே ஒரு நாய் படுத்திருக்கிறது. அப்போதுதான் குட்டிகளைப் போட்டிருக்கிறது. அந்தக் குட்டிகள் இன்னும் கண்ணைக்கூடத் திறக்கவில்லை. திறவாக் கண்ண சாய் செவிக் குருளை என்கிறார் புலவர். பிறந்த குட்டிகள் தாயின் மடியைத் தேடிப் பால்குடிக்க முயலும். ஆனால் ஒருவேளைகூட தன் குட்டிகளுக்குக் கொடுக்க நாயின் மடியில் பால் இல்லை. கறவாப் பால் முலை என்கிறார் அவர். பால் கிடைக்காத குட்டிகள் என்ன செய்யும்? நாய் மடியின் காம்புகளைப் பிடித்து இழுக்கும். அப்போது நாய்க்கு வலிக்கத்தானே செய்யும். வலியைப் பொறுக்கமாட்டாத தாய்நாய் தனக்குள் உறுமிக்கொள்ளும். நோனாது புனிற்று நாய் குரைக்கும் என்கிறார் புலவர். புனிற்று நாய் என்பது அப்போதுதான் ஈன்ற நாய். ஈன்ற நாய் படுத்துக்கிடக்கும் அளவுக்கு இழிந்த நிலையில் உள்ள அடுப்படியைப் புல்லென் அட்டில் என்கிறார் புலவர்.
வறுமையின் நிலையை நமக்கு உணர்ந்த புலவர் தேர்ந்தெடுத்த காட்சியைக் கவனித்தீர்களா? ஈன்ற குட்டிக்குப் பால்கொடுக்கக்கூட நாய்க்குச் சத்தில்லை என்றால், அந்த வீட்டின் நிலை எப்படி இருந்திருக்கும். அதையும் கூறுகிறார் புலவர்.
காழ் சோர் முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன - உட்துளை(கொண்ட) காளான்:
சிற்றூர்களின் இன்னமும் ஏழைகள் தம் குடில்களுக்குச் செம்மண் வைத்துத்தான் சுவர் எழுப்புவர். அவ்வாறு எழுப்பும்போது ஈரமான சுவர் சாய்ந்துவிடாமல் இருக்க, சுவற்றின் ஊடே நெடிய மூங்கில் கழிகளை நிறுத்தியிருப்பர். நாளாக ஆக, சரியான பராமரிப்பு இல்லாவிட்டால், சுவரில் உள்ள செம்மண் கொஞ்சங்கொஞ்சமாக உதிரத்தொடங்கும். இதனைத் தடுக்கச் சுவரில் சாணி மெழுகி, வெள்ளையடிப்பர். இதற்கு முடியாத ஏழைகள் வீட்டுச் சுவர் மழையில் கரைந்து, காய்ந்தபின் உதிரத்தொடங்கும். காழ் சோர் முது சுவர் என்கிறார் புலவர். காழ் என்பது கழிகள். முதுசுவர் என்பது மிகப் பழையதான சுவர். சோர்தல் என்பது சாய்ந்து நிற்றல். இவ்வாறு வெளித்திரியும் கழைகளைக் கரையான் அரிப்பது இயற்கைதானே. கூட்டமாய் அவை அந்தக் கழைகளை அரித்துவிட்டனவாம். கணச் சிதல் அரித்த என்கிறார் அவர். கணம் என்பது கூட்டம். சிதல் என்பது கரையான். எனவே சுவர் மட்டுமன்றி, அந்தச் சுவருக்கு வலுவூட்டும் கழிகளும் வலுவிழந்து நிற்கின்ற பரிதாபமான நிலை. எனவே மண் குவியல் குவியலாக உதிர்ந்து விழுந்திருக்கிறது. அண்மையில் பெய்த மழையில் அந்த செம்மண் குவியல்களில் காளான்கள் முளைத்தெழுந்திருக்கின்றன என்கிறார் புலவர். பூழி பூத்த புழல் காளாம்பி என்கிறார் அவர். பூழி என்பது புழுதி – இங்கே செம்மண் சுவரிலிருந்து கரைந்தும் உதிர்ந்தும் விழுந்த மண். காளான்களின் தண்டுகள் உள்துளை உள்ளவை. எனவேதான் புழல் காளாம்பி என்கிறார் புலவர்.
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக் கை கிணைமகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட
மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்,
வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து,
கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்,
அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு;
முதலில் வீட்டுள் நிலையையும், பின்னர் வீட்டுக்கு வெளியிலுள்ள நிலையையும் எடுத்துரைத்த புலவர் அடுத்து அங்குள்ள ஒரு பெண்ணைக் காட்டுகிறார். அவள் கிணைமகள். கிணை என்பது கையில் பிடித்து இசைக்கும் ஒருவகைத் தோல்கருவி. இந்த வறுமையிலும் கையில் ஒரு சங்கு வளையல் அணிந்திருக்கிறாள் அவள். வளைக்கைக் கிணைமகள் என்கிறார் புலவர். எத்தகைய ஏழ்மை நிலைமையில் இருப்பினும் தமிழ்மகள் தன்னாலியன்ற ஒரு வளையைக் கையில் அணிந்திருப்பாள் – அவள் வெறுங்கையளாயிருக்கமாட்டாள் – என்ற தமிழர் வழக்கை இங்கு உணர்த்துகிறாரோ புலவர்? உடம்பையே மெலிவிக்கும் பசியினால் வாடிய அவளின் வயிறு ஒட்டிப்போயிருக்கிறதாம்! ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் என்கிறார் புலவர். ஆனால் நகம் மட்டும் அவளுக்கு நன்றாக வளர்ந்திருக்கிறதாம்! இந்த நகத்தை வைத்து அவள் என்ன செய்கிறாள்? வீட்டுக்கு வெளியே குப்பைமேட்டில் தானாக வளர்ந்துகிடக்கும் கீரைகளைக் கிள்ளிக் கொணர்கிறாள். இந்தக் கீரையைத் தண்டும் வேருமாக அவள் பிடுங்கியெடுத்துக் கொண்டுவரவில்லை. அப்படிக் கொண்டுவந்திருந்தால் அவளுக்கு நிறையக் கீரை கிடைத்திருக்கும். ஆனால் மறுவேளைக்கு அங்கு ஒன்றும் இருக்காதே. எனவே அந்தக் கீரைச் செடியின் கிளைக்ளை இணுங்கிக் கீரை பறித்து வருகிறாள் அவள். வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை என்பதில் உள்ள குறைத்த என்பதை ஊன்றிக் கவனிக்கவேண்டும். அண்மையில்தான் மழை பெய்திருக்கிறது. அந்த மழையில் முளைத்த புதிய தளிர்களை அவள் கிள்ளிக் கொண்டு வருகிறாள். அங்கிருக்கும் செற்றைகளைச் சேர்த்துக்கொண்டுவந்து அடுப்புப் பற்றவைக்கலாம். வெந்த கீரைக்குச் சுவை சேர்க்க உப்புக்கு அவள் எங்கே போவாள். அதனை விலைக்கு அல்லவா வாங்கவேண்டும்? எனவே உப்பில்லாமலேயே கீரையை வேகவைக்கிறாள். குப்பைக்கீரை உப்பிலி வெந்ததை என்கிறார் புலவர். இவ்வாறு இவர்கள் வெந்த கீரையைமட்டுமே உண்ணுவதை அக்கம்பக்கத்திலுள்ளோர் பார்த்துவிட்டால் என்ன ஆகும்? தம்மைப்பற்றி இழிவாக எண்ணமாட்டார்களா? இந்த நினைப்பில் கதவை அடைத்துக்கொண்டு குடும்பமாகச் சேர்ந்து உண்கிறார்களாம். மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து என்ற சொற்களில் ஏழ்மையிலும் அவர்களுக்கு இருக்கும் மான உணர்வை எத்துணை நயமாக வெளிக்கொணர்கிறார் புலவர் பார்த்தீர்களா!
இங்கே, வேகவைத்த கீரையை அக் குடும்பம் மொத்தமாக உண்பதை இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும் என்று குறிப்பிடுகிறார் புலவர். மிசைதல் என்றால் என்ன? பொதுவாக அரைக்கீரை, மகிழிக்கீரை போன்றவற்றை வேகவைத்து மத்து கொண்டு கடைந்து உண்பார்கள். அவ்வாறு கடைந்த கீரை கொழகொழப்பாக இருக்கும். அதனை, சேர்த்த விரல்களால் எடுத்து வாயில் வைத்து உறிஞ்சிக் குடிப்பார்கள். இவ்வாறு உறிஞ்சி உண்ணுவதே மிசைதல்.
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங்குறை
-------------- ---------------- --------------- ---------------------
தான் ஞெலிதீயின் விரைவனன் சுட்டுநின்
இரும்பேரொக்கலொடு தின்ம் எனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி – புறநானூறு 150:9 -14
என்ற புறநானூற்று அடிகளைப் பாருங்கள். நெய் இழுது போன்ற கொழுப்புச் சேர்ந்த இறைச்சித் துண்டத்தை நெருப்பில் சுட்டு, வெந்த துண்டத்தை, அதனைச் சுற்றியிருக்கும் இளகிய கொழுப்புடன் வாயில்வைத்து உறிஞ்சி உட்கொள்ளுவது, அமிழ்தத்தை உறிஞ்சி உட்கொள்ளுவது போல இருக்கும் என இந்தப் புறப்பாடல் கூறுகிறது. அதைப்போலத்தானே இங்கும் வறிய பாணர் குடும்பம், குழைத்த கீரைக் கடைசலை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறது. என்ன பொருத்தமான சொல் பாருங்கள்!
இத்தகைய கொடும்பசி இப்பொழுது இல்லாமற் போக என்னுமுகத்தான் பாணன் கூறுகிறான் “அழிபசி வருத்தம் வீட”. “பார்த்தாயா பாணனே, உன்னைக்காட்டிலும் மிக அதிகமான வறுமைத் துயரத்தில் ஆழ்ந்திருந்தவன் நான். நல்லியக்கோடனிடம் சென்று வந்தபின் இப்போது எப்படி இருக்கிறேன்!” என்று கூறும் முகத்தான் புலவர் காட்டும் வறுமைக் காட்சி நெஞ்சை உருக்குவதுமில்லாமல், புலவரின் காட்சிப்படுத்தும் திறத்தைக் கண்டு மனத்தை வியக்கவைக்கவும் செய்கிறது இல்லையா?
மீண்டும் வறுமைப் பாணனை நடப்பியலுக்குக் கொண்டுவருகிறான் அந்தப் புதியவன்.
பொழி கவுள்
தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின்
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி
யாம் அவணின்றும் வருதும்
(மதம்)வீழ்கின்ற கதுப்பினையும்,
கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய பக்கத்தினையும்
சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று
யாம் அவ்விடத்தினின்றும் வருகின்றோம்,
நல்லியக்கோடனால் தனக்குக் கொடுக்கப்பட்ட யானைகளையும், பெரிய தேரையும் வறுமைப் பாணனுக்குக் காட்டுகிறான்.
தறுகண் பூட்கை – சிறுகண் யானை என இயற்கையாய் அமைந்த எதுகை அழகையும், சிறுகண் – பெரும்தேர் என்று அழகிதாய் அமைந்த முரண்சுவையையும் கவனித்தீர்களா? சங்கப் பாடல்களுக்குச் சிறப்புச் செய்வன இப்பேர்ப்பட்ட இயல்பாய் அமைந்த அழகுகள்தாம்.
குப்பைக்கீரையை உப்பில்லாமல் கடைந்து அடைத்த வீட்டில் உண்ட அந்த நிலை எங்கே – இப்போது பெருமிதத்தோடு மணிகள் ஒலிக்க நடக்கும் யானைகளோடு பலரும் பார்க்கத் தேரில் பவனி வரும் நிலை எங்கே – என்று தன் வாழ்வில் நடந்த மாபெரும் மாற்றத்துக்குக் காரணமாயிருந்த நல்லியக்கோடனிடம் நீயும் செல் என்று வறுமைப் பாணனை வழிப்படுத்துவதே இனிவரும் வரிகள்.
-------------- ------------------- -------------------- நீயிரும்
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்
நீங்களும்
இவ்விடத்தே உம்மை விரும்பி இருக்கின்ற கரிய பெரிய சுற்றத்தோடேயும்,
பெருமை(கொண்ட) நெஞ்சோடேயும் (அவ் வள்ளல்பால்)செல்வீராயின்
எனவே, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயமின்றி, ஏற்பாரோ ஏற்கமட்டாரோ என்ற கூச்சமின்றி, “நான் கலைஞன் – பாடுகிறேன் – நீ என் பசியைப் போக்கு” என்ற பெருமிதம் கொண்ட உள்ளத்தோடு நல்லியக்கோடனிடம் செல் என்கிறான் அந்தப் புதியவன். நீ மட்டுமல்ல, உன்னைச் சுற்றியிருக்கும் இந்தப் பெருங்கூட்டமும் அத்தகைய பெருமித உள்ளத்தினராய் அவனிடன் செல்லுங்கள் என்கிறான் அவன். செம்மல் உள்ளமொடு செல்குவிர் என்பது எத்துணை நம்பிக்கையும், புத்துணர்வும் ஊட்டும் சொற்களாய் அமைந்திருக்கின்றன பார்த்தீர்களா?
அடுத்து, அந்த நல்லியக்கோடனை நாடி அவன் சென்ற வழியின் தன்மையையும், அங்கு வாழும் மக்களின் பண்புகளையும், அங்கு அவனுக்குக் கிடைத்த பலவித உணவுகளையும் புதிய பாணன் எடுத்தியம்புகிறான்.
-- தொடரும்
ப.பாண்டியராஜா
முதலில் வீட்டுள் நிலையையும், பின்னர் வீட்டுக்கு வெளியிலுள்ள நிலையையும் எடுத்துரைத்த புலவர் அடுத்து அங்குள்ள ஒரு பெண்ணைக் காட்டுகிறார். அவள் கிணைமகள். கிணை என்பது கையில் பிடித்து இசைக்கும் ஒருவகைத்
சிறுபாணாற்றுப்படை - 10
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் மிகுந்த பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன். வழியில் பசியோடு குடும்பத்துடன் மரத்தடியில் இளைப்பாறிக்-கொண்டிருக்கும் வறிய பாணனை நோக்கித் தொடர்ந்து கூறுகிறான்.
அந்த நல்லியக்கோடனை நாடி அவன் சென்ற வழியின் தன்மையையும், அங்கு வாழும் மக்களின் பண்புகளையும், அங்கு அவனுக்குக் கிடைத்த பலவித உணவுகளையும் புதிய பாணன் எடுத்தியம்புகிறான்.
புதிய பாணன் முதலில் சொல்வது நெய்தல் பெருவழி பற்றி. இந்தப் பாணர்கள் ஒரு முல்லைநிலக் காட்டாற்றின் கரையில் சந்தித்தனர் என முன்பு கண்டோம். அங்கிருந்து கடற்கரையை நோக்கிச் செல்லும் வழியில் செல்லுமாறு அந்தப் புதியவன் பழைய பாணனைப் பணிக்கிறான். பின்னர் கடற்கரைவழியே நடந்துசென்றால் எயிற்பட்டனம் என்ற ஒரு கடற்கரைப் பட்டனத்தை அடைவீர்கள் என்றும் கூறுகிறான்.
முதலில் பாணன் காட்டும் நெய்தல்நெடுவழியைப் பாருங்கள்.
அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர,
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 146 – 151
அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்,
(இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னோ என்று மருளப் பண்ணவும்,
முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,
நெடிய தாளையுடைய புன்னை நித்திலம் (போல அரும்புகள்) வைக்கவும்,
கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏற, 150
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்
என்பது இதன் பொருள்.
முதல் நான்கு அடிகளில் நான்கு அழகிய உவமைகளை வைத்து ஒரு மிக அழகிய கடற்கரைக் காட்சியை நம் கண்முன் நிறுத்துகிறார் புலவர். ஆனால் அந்த நான்கு உவமைகளிலுமே அவர் எந்த உவம உருபையும் வைக்கவில்லை. அலைநீர்த்தாழை வெண்மையாகப் பூக்கும். அது அன்னம்போல் இருந்ததாகச் சொல்லவந்த புலவர் அலைநீர்த்தாழை அன்னம் பூப்பவும் என்றுதான் கூறுகிறார். அந்த தாழம்பூ அன்னமாகவே தோன்றியதாம். நெய்தல் நிலச் செருந்தி மரம் பொன்னிறப்பூக்காய்க் கொத்துக்கொத்தாய்ப் பூக்கும். அது தமனியமோ என்று மருட்டுகிறதாம். தமனியம் என்றால் பொன் என்று பொருள்.
செருந்தி இளவேனிற்காலத்தில் பூக்கக்கூடியது. அந்த இளவேனிற்காலத்தில் முதல்நாளில் பூத்த பூக்கள் என்கிறார் புலவர். சில நாள் கழித்து அந்தப் பூக்கள் வாடிவிட, அப்போது வந்த பூக்களுடன் அவையும் தோன்றும் காட்சி சிறப்பாக இராது என்ற நோக்கில் தலைநாள் செருந்தி என்கிறார் புலவர்.
முண்டகம் என்பது கழிமுள்ளி. கடற்கரையை ஒட்டிய கழி ஓரங்களில் வளரக்கூடியது. இதன் காய் பச்சையாக இருக்கும். இதுவே முற்றிய பிறகு கருநீல நிறத்தில் நீலமணிபோல இருக்கும். இதனைச் சுட்டிக்காட்டும் வண்ணம் கடுஞ்சூல் முண்டகம் என்கிறார் புலவர். புன்னை மரங்கள் நீண்ட அடிமரத்துடன் உயரமாக இருக்கும். அதனையே நெடுங்கால் புன்னை என்கிறார் புலவர். இந்த நெடுந்தாள் புன்னை நித்திலம் வைப்பவும் என்கிறார் புலவர். இந்தப் புன்னை மரத்தின் பூக்கள் நிறம் மாறி இருக்கும். ஆனால் அதன் மொட்டுகள் வெண்மையாக முத்துப்போல் இருக்கும். எனவேதான் நித்திலம் வைப்பவும் என்று மிகச் சரியாகப் புலவர் கூறியிருப்பதை ஊன்றிக்கவனிக்கவேண்டும்.
இந்தக் கடற்கரை வழியே செல்லும்போது அந்த நெடுமணற்பரப்பைக் கானல் வெண்மணல் என்று அழகிதாய்க் குறிப்பிடுகிறார். அவ்வாறு நடந்துவரும்போது ஒருபக்கம் நீண்ட நிலப்பரப்பும், மறுபக்கம் பரந்த நீர்ப்பரப்பும் கிடக்க, அந்தக் கடல் நீர் அலையலையாக எழுந்து தரையை முட்டிச் செல்வதை, கடல் உலாய் நிமிர்தர என்று குறிப்பிடும் புலவரின் சொற்கள் அப்படியே அந்தக் கடற்கரைக் காட்சியை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தவில்லையா? எனவேதான் இந்த அழகிய கடற்கரைப் பெருவழியைப் பாடல் சான்ற நெய்தல் நெடுவழி என்று குறிப்பிடுகிறார் புலவர்.
இந்த நெடுவழியே நடந்துசென்றால் முதலில் வருவது ஒரு கடற்கரைப் பட்டினம். அதன்பெயர் எயில்பட்டினம். எயில் என்றால் கோட்டை மதில் என்று பொருள். இந்தக் கோட்டையைச் சுற்றி நீர்நிறைந்த ஆழமான அகழி இருக்கும் அல்லவா! அதனாலேயே இதனை மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய பட்டினம் என்கிறார் புலவர். பின்னர் அங்கு வாழும் நெய்தல் நில மக்களின் வாழ்க்கையையும் அவரிடம் பாணருக்குக் கிடைக்கும் உணவுகளையும் புதிய பாணன் தான் சந்தித்த பழைய பாணனுக்குக் கூறுகிறான்.
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர் படுவின் பட்டினம் படரின்
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்
கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள்
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து
நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப
கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான்
தளை அவிழ் தெரியல் தகையோர் பாடி
அறல் குழல் பாணி தூங்கியவரொடு
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர் – சிறு 152 - 163
(நீல)மணி (போலும்)கழி (சூழ்ந்த)ஊர்களையுடையதும், மதிலின் பெயர்கொண்ட,
குளிர்ந்த நீர் மிக்க குளங்களையுடைத்தாகிய, (எயில்)பட்டினத்தே செல்வீராயின் -
உயர்ந்து நிற்றலையுடைய ஒட்டகம் (படுத்து)உறங்கிக் கிடந்ததைப் போல,
மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால் 155
கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி, பெரிய தோளினையும்,
திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்,
(கூர்)முனையுள்ள வேல்(போன்ற) பார்வையினையும் உடைய நுளைமகளால் அரிக்கப்பட்ட,
பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட,
கிளைகளில் பூக்களையுடைய தோட்டங்களையுடைய கிடங்கில் (என்னும் ஊர்க்கு)அரசனாகிய 160
அரும்பு அவிழ்ந்த மாலையையுடைய அழகுடையோனைப் பாடி,
தாள அறுதியை உடைய குழலோசையின் தாளத்திற்கேட்ப ஆடின மகளிரோடே,
உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்:
எயில்பட்டினம் ஓர் ஆற்றங்கரையில் அமைந்த கடற்கரைப் பட்டினம். ஓங்கி உயர்ந்த மலைகளில் பிறந்து, முல்லைநிலக் காடுகளில் குதித்தோடி, மருதநில வயல்களை மகிழ்வித்து, இறுதியில், நெய்தல் நில உப்பங்கழிகளை நிறைத்த பின்னர் கடலில் சங்கமமாகும் அந்த ஆறு. கடலில் கலக்கும் இடத்தில் எந்த ஆறும் கடலின் அலைகளை எதிர்கொள்ளும். அதனால் அதன் வேகம் தணிந்து பல திசைகளில் பரந்து ஓடும். அப்போது, தான் இதுவரை அடித்துக் கொண்டுவந்த மரங்களை கரைகளில் ஒதுக்கும். இந்த எயில்பட்டின ஆறும் அவ்வாறே செய்கிறது. அந்த மரங்கள் எல்லாம் மணம் மிக்க அகில் மரங்கள். கண்டவர் எவரும் உடனே கவர்ந்து சென்றுவிடுவார்கள். ஆனால், பல அகில் மரங்கள் தினந்தோறும் கரையொதுக்கப்படுவதால், அவை குவிந்து கிடக்கின்றன. இதனைக் கண்ட புலவர் பாடுகிறார்,
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்
கரும் புகை செந்தீ மாட்டி” - சிறு 154-156
உயர்ந்து நிற்கும் ஒட்டகம் (படுத்து)உறங்கிக் கிடந்ததைப் போல,
மிகுந்து வரும் அலை கொண்டுவந்த மணமுள்ள (அகில்)மர விறகால்
கரும் புகையுடைய சிவந்த நெருப்பை மூட்டி,
ஒட்டகம் தூங்கிக்கிடப்பதைப் போல மரக்கட்டைகள் குவிந்து கிடந்தன என்கிறார் புலவர். ஒட்டகம் தமிழ்நாட்டைச் சேர்ந்த விலங்கு அல்ல. இன்றைக்குச் சில கோயில்களில் ஒட்டகங்கள் உண்டு. சங்க காலத்தில் மன்னர்களிடம் ஒட்டகங்கள் இருந்திருக்கலாம். அவை தூங்குவதைப் புலவர் பார்த்திருக்கிறார். ஒட்டகம் மற்ற விலங்குகளைப் போல் தூங்குவது இல்லை.
படத்தைப் பாருங்கள். ஒட்டகம் தலையை நீட்டித் தரையில் வைத்துக் கொண்டு தூங்கும். அதன் முதுகுப்புறம் மணலைக் குவித்தது போல் கூம்பு வடிவில், ஆனால், கரடு முரடாக இருக்கும். ஆற்று நீரால் மேலும் மேலும் கொண்டுவந்து ஒதுக்கப்படும் மரக்கட்டைகள் ஒன்றன் மீது ஒன்றாய்க் கிடக்கும். அவற்றில் மிகவும் நீளமான கட்டைகளே அடியில் கிடக்கும். சிறிய கட்டைகள் அவற்றின் மேல் நிலைகொண்டு படுத்திருக்கும். மிகச் சிறிய கட்டைகள் உச்சியில் கிடக்கும். அதற்கு மேல் விழும் நீளமான கட்டைகள் புரண்டு விழுந்து அடுத்தடுத்துக் கிடக்கும். எல்லாமே ஆற்றை ஒட்டி நீளவாக்கிலேயே கிடக்கும். இதனைக் கண்ட புலவருக்கு, அவர் என்றைக்கோ அரண்மனையில் பார்த்த ஒட்டகங்கள் நினைவிற்கு வந்து, எவ்வளவு பொருத்தமான உவமை நமக்குக் கிடைத்திருக்கிறது!
அகில் ஒரு மணமுள்ள மரம். சந்தன மரத்துக்கு ஒப்பானது. இதன் காய்ந்த கட்டையைச் சிறுசிறு துண்டாக்கி, அவற்றில் நெருப்பு மூட்டி, அதன் புகையில் பெண்கள் தங்கள் தலைமயிரை உலரவைப்பார்கள். அவ்வளவு மதிப்பு மிக்க அகில் மரம் இங்கே விறகாகப் பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு வளம் மிக்க நாடு என்பதைப் புலவர் இங்கே குறிப்பால் உணர்த்தியிருக்கின்றார். இவ்வாறாகக் குறிப்பால் பொருளுணர்ந்து மகிழ்வதையே இலக்கிய இன்பம் என்கிறோம். இவ்வாறான குறிப்புப் பொருள்கள் சங்க இலக்கியத்தில் நிறைய உண்டு.
ஆறு கொண்டுவந்த அகில் கட்டைகள் ஈரப்பதத்துடன் இருக்கும். அவற்றை அப்படியே கள்ளைக் காய்ச்சுவதற்கு விறகாக எரிக்கின்றனர் அவ்வூர் மக்கள். அப்போது அவற்றினின்று வரும் புகை கறுப்பாகவே இருக்கும். இருப்பினும் நிறையக் கட்டைகள் சுற்றிலும் எரிவதால் நெருப்பு கொழுந்துவிட்டு எரியும். தீக்கொழுந்துகள் சிவப்பாகத்தானே இருக்கும். ‘கரும் புகை செந்தீ மாட்டி' என்று தம் வருணனையை வண்ணமயமாக்குகிறார் புலவர். பொதுவாகப் புலவர்கள் தாங்கள் கூறவரும் காட்சிகளைப் புகைப்படம் போல் படம்பிடித்துக் காண்பிப்பர். எனவேதான் இவர்களைச் சொல்லோவியர்கள் என்கிறோம். அந்த ஓவியத்தையும் ஒரு கறுப்பு-வெள்ளைப் படமாக இன்றி, ஒரு வண்ணப்படமாக நம் கண் முன் நிறுத்துகிறார் புலவர். அதிலும் கறுப்புப் புகையில் தெரியும் சிவப்புத் தீ என்ற தொடர் அவ்வளவு அழகான முரண்சுவையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டு மகிழலாம்.
இந்தக் கள்ளினைக் காய்ச்சுவது யாராம்? ஒரு நுளைமகள் என்கிறார் புலவர். நுளையர் என்பார் ஒருவகை மீனவர். பெரும் தோள், மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து, நுதி வேல் நோக்கின் நுளைமகள் என்கிறார் புலவர். உழைப்பாளிகள் அல்லவா? அதனால்தான் தோள்கள் பெரிதாக இருக்கின்றன. அவள் முகத்தைப் பார்த்துத் திங்களே ஏங்குமாம்! ஏன்? திங்களின் பரப்பில் களங்கம் உண்டே! அவ்வாறான களங்கம் இன்றி இருந்ததாம் இந்த நுளைமகளின் முகம். மாசறு திருமுகம் என்கிறார் புலவர். அவளின் பார்வை வேலின் நுனியைப் போலக் கூர்மையானதாம்! நுதி வேல் நோக்கு என்கிறார் அவர். நுதி என்பது நுனி.
இந்த நுளைமகள் அகில்கட்டைகளை எரித்துக் காய்ச்சி வடிகட்டிய தேறலை, விருந்தினராகச் செல்லும் பாணருக்கு அந்தப் பரதவர் கொடுப்பராம். தேறல் என்பது தெளிவான கள். இது நாள்பட நாள்பட அதன் சுவை மிகுந்திருக்கும். எனவேதான் பழம்படு தேறல் என்கிறார் புலவர். பழம்படு தேறல் பரதவர் மடுப்ப என்கிறார் அவர். மடுத்தல் என்பது அருந்தச்செய்தல். ஒருவர் குனிந்து இரு கைகளையும் சேர்த்துப் பரப்பி வாயருகே குவித்துவைத்து நிற்க, அந்த உள்ளங்கையில் ஒரு நீர்ப்பொருளை ஊற்ற, அது வாய்க்குள் நுழையுமாறு உள்ளங்கைகளை சாய்த்து அவரை அருந்தவைத்தலே மடுத்தல். களைத்துவருவோருக்கு முதலில் நீர் அருந்தக் கொடுப்பது இன்றைக்கும் வழக்கம். நீர் அருந்தினால் தாகம் தீரும். கள் அருந்தினால் தாகம் தீர்வதோடு, புத்துணர்வும் ஏற்படும் அல்லவா! என்ன அருமையான விருந்தோம்பல் அன்றைக்கு இருந்தது பார்த்தீர்களா?
தாகம் தீர்ந்து, புத்துணர்வும் பெற்ற பாணர்கள் மகிழ்ச்சிப்பெருக்கில் பாடத் தொடங்குகிறார்கள். அவர்கள் யாரைப் பாடுவார்கள்? அந்நாட்டு மன்னனைத்தான். மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அல்லவா? கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான் தளை அவிழ் தெரியல் தகையோர் பாடி என்கிறார் புலவர். கிடங்கில் என்பது ஓய்மாநாட்டுப் பெருநகர்களில் ஒன்று. எனவேதான் நல்லியக்கோடனைக் கிடங்கில் கோமான் என்கிறார் புலவர். தெரியல் என்பது மாலை. தளை அவிழ் தெரியல் என்பது மலர்ந்த பூக்களைக் கொண்ட மாலையைக் குறிக்கும். தாள வகையோடு இசைக்கும் புல்லாங்குழலின் இசைய அறல் குழல் பாணி என்கிறார் புலவர். இந்தத் தாள இசைக்கு ஏற்றவாறு விறலியர்கள் ஆடுகின்றனர். இந்த ஆட்டம் முடிந்ததும், வறுத்த மீன் சுடச்சுட அவர்களுக்கு வீடுதோறும் கிடைக்கும் என்கிறார் அவர். வறல் குழல் சூட்டொடு வயின்வயின் பெறுகுவிர் என்பது பாணர்கள் எந்தவீட்டுக்குச் சென்றாலும் செல்லுமிடமெல்லாம் அவர்களுக்கு இந்த உணவு தட்டாமல் கிடைக்கும் என்பதைக் குறிக்கும். இங்கு குழல் என்பது குழல்மீன் எனப்படும் ஒரு வகை மீன்.
இனி, அடுத்தடுத்து வேறுவகை நிலங்களின் வழியாகச் செல்லும்போது பாணர்கள் காணும் மக்களையும், அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் உணவுவகைகளையும் அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.
-- தொடரும்
ப.பாண்டியராஜா
சிறுபாணாற்றுப்படை - 11
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் மிகுந்த பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன். வழியில் பசியோடு குடும்பத்துடன் மரத்தடியில் இளைப்பாறிக்-கொண்டிருக்கும் வறிய பாணனை நோக்கித் தொடர்ந்து கூறுகிறான்.
அந்த நல்லியக்கோடனை நாடி அவன் சென்ற வழியின் தன்மையையும், அங்கு வாழும் மக்களின் பண்புகளையும், அங்கு அவனுக்குக் கிடைத்த பலவித உணவுகளையும் புதிய பாணன் எடுத்தியம்புகிறான்.
புதிய பாணன் முதலில் சொல்வது நெய்தல் பெருவழி பற்றி. இந்தப் பாணர்கள் ஒரு முல்லைநிலக் காட்டாற்றின் கரையில் சந்தித்தனர் என முதலில் கண்டோம். அங்கிருந்து கடற்கரையை நோக்கிச் செல்லும் வழியில் செல்லுமாறு அந்தப் புதியவன் பழைய பாணனைப் பணிக்கிறான். பின்னர் கடற்கரைவழியே நடந்துசென்றால் வரும் எயிற்பட்டனத்தை ஒட்டிய நெய்தல்நிலப் பகுதிகளையும், அங்கு வாழும் மக்களையும், அங்குக் கிடைக்கும் உணவுகளையும் பற்றிக் கூறிய பாணன், கடற்கரையைவிட்டு உள்நாட்டுப் பக்கம் திரும்பிச் சென்றால் வரும் முல்லை நிலத்தைப் பற்றி அடுத்துக் கூறுகிறான்.
முதலில் பாணன் காட்டும் முல்லை நிலத்தைப் பாருங்கள்.
பை நனை அவரை பவழம் கோப்பவும்
கரு நனைக் காயாக் கண மயில் அவிழவும்
கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும்
செழும் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்
முல்லை சான்ற முல்லை அம் புறவின்
பசிய அரும்புகளையுடைய அவரை, பவழம்(போல் பூக்களை முறையே) தொடுக்கவும்,
கரிய அரும்புகளையுடைய (காயாக்கள்)கூட்டமான மயில்களின் (கழுத்துகளைப் போலப்)பூப்பவும்,
கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம்(போலும் பூவைத் தன்னிடத்தே) கொள்ளவும்,
செழுமையான குலையினையுடைய காந்தள் கைவிரல் (போலப்)பூக்கவும்,
கொல்லையிலுள்ள நெடிய வழியில் (இந்திர)கோபம்(என்னும் தாம்பலப்பூச்சி) ஊர்ந்து செல்லவும்,
முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லை(க்கொடி படர்ந்த)அழகிய காட்டில்,
என்பது இதன்பொருள்.
இதற்கு முன்பு நெய்தல் நில வருணனையில், அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் என்று தொடங்கும் அழகிய அடிகளைப் போலவே முல்லைநில வருணனைத் தொடக்கத்தில் அழகிய உருவகங்களைக் காண்பிக்கிறார் நம் புலவர். இங்கேயுள்ள ஐந்து உவமைகளிலும் உவம உருபுகள் இல்லை. எனவே இவற்றையும் உருவகங்களாகவே எடுத்துக்கொள்ளலாம்.
அவரையின் அரும்புகள் பவளமாய்க் கோத்துக்கிடந்தனவாம்;
காயாம்பூக்கொத்துகள் கூட்டமான மயில்களாய் அவிழ்ந்துகிடந்தனவாம்.
முசுண்டைப்பூ கொட்டானாய் மலர்ந்துகிடந்ததாம்;
காந்தள் கைவிரலாய்ப் பூத்துநின்றதாம்;
கொல்லைநெடுவழி இந்திரகோபமாய் ஊர்ந்துசென்றதாம்.
இதைக்காட்டிலும் அழகிய முல்லைநில வருணனையைக் காண்பது அரிது.
அவரைப் பூவில் பல வகையுண்டு. பவளத்திலும் பலவகை நிறங்கள் உண்டு. ஆனால் அவரை பூத்திருப்பது ஒரு பவளமாலை போல் இருந்ததாகப் புலவர் கூறியிருக்கிறார். இது உருவத்துக்கு மட்டுமன்றி நிறத்துக்கும் ஒத்து வரலாம். பவளம்போல் கோப்பவும் என்னாமல் பவளம் கோப்பவும் என்று புலவர் கூறியிருப்பதுதான் சிறப்பு. இதைப் போலவே ஏனை உவமங்களும் அமைந்திருக்கின்றன.
காயாம்பூக்கள் அரும்புகள் அவிழ்ந்த நிலையில் மயில் கழுத்து நிறத்தில் இருப்பன. அவை கொத்துக்கொத்தாகப் பூக்கும் தன்மையவாதலால் கணமயில் போல் இருந்ததாகப் புலவர் கூறுகிறார். கணமயில் என்பது மயில்கூட்டம்.
முசுண்டைக் கொடி தடித்த தண்டுகள் உடையது. எனவேதான் இதனைக் கொழுங்கொடி முசுண்டை என்கிறார் புலவர். இவற்றின் பூக்கள் வெள்ளையாக ஒரு கொட்டான் போல் இருக்கும். எனவேதான் புலவர் முசுண்டை கொட்டம் கொள்ளவும் என்கிறார். கொட்டம் என்பது பனையோலையால் செய்யப்பட்ட சிறிய பெட்டி.
காந்தள் என்றாலே கைவிரல்தான் யாருக்கும் நினைவுக்கு வரும். இது கொத்துக்கொத்தாக மலரக்கூடியது. எனவேதான் செழுங்குலைக் காந்தள் என்கிறார் புலவர். இது பூத்து விரியும்போது குவித்துவைத்த கைவிரல்களைப் போலிருக்கும். பெரும்பாலும் எண்ணிக்கையிலும் ஐந்து இதழ்களைக் கொண்டிருக்கும். எனவேதான் காந்தள் கைவிரல்போல் பூத்திருக்கிறது என்று சொல்லவந்தவர் கைவிரலாகவே பூத்திருப்பதாகச் சொல்லுகிறார்.
அடுத்த அடிதான் சற்று யோசிக்கவைக்கிறது. கொல்லை நெடுவழி கோபம் ஊரவும் என்ற அடிக்கு, கொல்லையிடத்து நெடிய வழிகளிலே இந்திரகோபம் ஊராநிற்பவும் என்று பொருள்கொள்கிறார் நச்சினார்க்கினியர் ஏனையோரும் இதனைப் போன்றே உரை கூறியிருக்கின்றனர். கோபம் என்பது தம்பலப்பூச்சி. Red velvet insect என்பர். இலக்கியங்கள் இதனை ஈயல்மூதாய் என்கின்றன. மழைக்காலத்தில் ஈசலைப் போன்று தோன்றும் இந்தப் பூச்சி நல்ல சிவப்பு நிறமுள்ளது. எனவேதான் இவை கார்காலத்து முல்லைநிலத்து வருணனைகளில் இடம்பெறுகின்றன. இந்தச் சிறிய பூச்சிகள் முல்லைநிலத்துச் சாலைகளில் ஊர்ந்து திரிவதில் என்ன சிறப்பு இருக்கமுடியும்? புலவர் ஏன் அதனை இங்குக் குறிப்பிடுகிறார்? அதிலும், ஏனைய நான்கு அடிகளும் அழகிய உருவகங்களாக அமைந்திருக்க, இந்த இறுதி அடி அவற்றுக்கு உச்சமான ஓர் உருவகமாக அமையவேண்டும் என்றுதானே எதிர்பார்ப்போம். அவ்வாறிருக்கையில் கற்பனை வளம் செறிந்த நான்கு உருவகங்களை அடுத்து, எந்தவிதமான கற்பனை வளமுமற்ற ‘பூச்சிகள் ஊர்ந்துதிரிந்தன’ என்ற ஒரு தட்டையான கூற்றைப் (flat statement) புலவர் கூறுவாரா? எனவே, முந்தைய நான்கு உருவகங்களைப் போலவே இந்தக் கூற்றும் ஒரு உருவகமாக இருக்கவேண்டும்.
பைந்நனை அவரை பவளம் கோப்பவும் என்ற கூற்றை, பைந்நனை அவரை பவளம் போலக் கோப்பவும் அல்லது பைந்நனை அவரை பவளமாய்க் கோப்பவும் என்றுதானே கொள்கிறோம்? இதனை அடுத்துவரும் மூன்று கூற்றுகளையும் இவ்வாறே கொள்கிறோம் அன்றோ? எனவே, கொல்லை நெடுவழி கோபம் ஊரவும் என்ற கூற்றை, கொல்லை நெடுவழி கோபம் போல் ஊரவும் என்றோ, கொல்லை நெடுவழி கோபமாய் ஊரவும் என்றோதான் கொள்ளுதல் சிறப்பு. கொல்லை நெடுவழி எப்படி ஊரும்? கொல்லைப் பெருவழி என்னாமல், கொல்லை நெடுவழி என்று புலவர் கூறுவதைக் கவனிக்கவேண்டும். இந்த நீண்ட வழி ஓர் ஒற்றையடிப் பாதையாக அல்லது அதைக் காட்டிலும் சற்று அகலமானதாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு வழி நீண்டு சென்றால், அது வளைந்து வளைந்து செல்லாதோ? அவ்வாறு வளைந்து வளைந்து செல்லும் நெடுவழி முல்லைநிலத்தது என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். முல்லைநிலம் ஒரு செவ்வல் பூமி, அதாவது செம்மண் பூமி. இதைத்தான் செம்புலம் என்கிறது ஒரு குறுந்தொகைப் பாட்டு. இந்தச் செம்புலத்தில், இரு பக்கங்களிலும் பயிர் பச்சைகள் முளைத்திருக்க, அவற்றுக்கு ஊடே ஒரு சிவந்த பாதை வளைந்து வளைந்து சென்றால், அது செந்நிறமான கோபப் பூச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாய் வளைந்து வளைந்து ஊர்வதுபோல இருக்கும் இல்லையா? பாதையில் நாம்தான் செல்கிறோம். எனினும் இந்தப் பாதை இங்கு செல்கிறது என்றுதானே கூறுகிறோம். அதனை ஒட்டியே கொல்லை நெடுவழியில் கோபப் பூச்சிகள் ஊர்வது போல வளைந்துவளைந்து செல்கின்றன என்பதையே, கொல்லை நெடுவழி கோபம் ஊரவும் என்று புலவர் கூறுகிறார் எனக் கொள்வதால், முந்தைய நான்கு அடிகளோடு இந்த ஐந்தாவது அடியும் ஒத்துப்போகிறதைக் காணலாம். அத்துடன் இது புலவரின் கற்பனை வளத்துக்குச் சிறப்புச் சேர்ப்பதுபோலும் அமைகிறது இல்லையா?
இத்துணை அழகிய முல்லைநிலத்தை, முல்லைசான்ற முல்லைஅம் புறவு என்கிறார் புலவர். புறவு என்பது புஞ்செய்க்காடு. முல்லை அம் புறவு என்பது அழகிய முல்லைநில வெளி என்ற பொருள்படும். முல்லை சான்ற முல்லைநிலம் என்பதன் பொருள் என்ன?
நமது நாட்டில் இப்போது திருமணம் முடித்தவர்கள் சிலர் தேனிலவு செல்வது வழக்கம். பெரும்பாலும் அவர்கள் எங்கே செல்கிறாற்கள்? கொடைக்கானல், உதகமண்டலம் ஆகிய குறிஞ்சிநிலப் பகுதிகளுக்குச் செல்கிறார்கள். குறிஞ்சித்திணை என்பது புணர்தலும், புணர்தல் நிமித்தமும் ஆகிய உரிப்பொருளைக் கொண்டது என அறிவோம். புணர்தல் என்பது காதலன், காதலி தனிமையில் சந்தித்துக்கொள்வது. இதற்கு இந்தக் குறிஞ்சி நிலப்பரப்பு ஒத்துவருவதால்தான் புணர்தலுக்குக் குறிஞ்சி எனக்கொண்டார்கள் நம் முன்னோர். முல்லைநிலத்தில் பெரும்பாலும் இடையர்கள் இருப்பர். காட்டுவெள்ளாமை நடக்கும். இங்கு, காலையில் ஆடுமாடு மேய்க்கச் சென்றோர் மாலையில் திரும்பி வருவர். வீட்டில் விட்டுவிட்டுப்போன இளங்கன்றுகள் தம் தாய்ப்பசுக்களின் வரவுநோக்கி ஆவலுடன் காத்திருக்கும் நேரம் இந்த மாலைப் பொழுது. எனவேதான் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரக் காத்திருக்கும் தலைவியின் நிலையை முல்லை ஒழுக்கம் என்றார்கள் நம் முன்னோர். இந்தக் காத்திருப்பையே தலைவன் வரும்வரை ஆற்றியிருத்தல் என்கிறது அக இலக்கணம். எனவேதான் முல்லை சான்ற முல்லை அம் புறவு என்று புலவர் கூறுகிறார் எனலாம்.
இந்த அழகிய முல்லைநிலக் காட்சிகளைக் கண்டவாறே செல்லும் பாணன் குடும்பம், மாலைநேரத்தில் வழியிலுள்ள வேலூர் என்ற ஊரை அடையும் என்கிறார் புலவர். பின்னர் அவர்களுக்கு அங்குக் கிடைக்கும் இனிய முல்லைநில உணவையும் அடுத்த சில அடிகளில் குறிப்பிடுகிறார் புலவர்.
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி
திறல் வேல் நுதியின் பூத்த கேணி
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு
தேமா மேனி சில் வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் – சிறு 170 - 177
முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து, 170
ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து,
வெற்றி (தரும்)வேலின் நுனி போலப் பூத்த கேணியையுடைய
வலிமை மிக்க வேலால் வெற்றி (பொருந்திய)வேலூரைச் சேரின் -
மிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடி(யில் இருக்கின்ற)
எயிற்றியர் ஆக்கிய இனிய புளிங்கறியிட்ட வெண்மையான சோற்றை, 175
தேமாவின் தளிர்(போலும்) மேனி(யையும்), சில வளை(யினையும் உடைய நும்)மகளிரின் திரளோடு
ஆமானின் சூட்டிறைச்சியோடு (நும் பசி தீர)மனநிறைவடையப் பெறுகுவீர்,
என்பது இதன் பொருள்.
விடர் என்பது மலைப் பொந்து. இந்த மலைப்பொந்துகளில் அருவிநீர் விழுந்து பொங்கி எழுவதையே விடர் கால் அருவி என்கிறார் புலவர். காலுதல் என்பது குதித்து வெளிவருதல். இந்த அருவியையுடைய மலையில் சூரியன் மறைந்துபோகும் மாலைநேரம் அது. மாலையில் ஞாயிறு ஒளி மங்கிப்போவதைச் சுடர் கால்மாறி என்கிற புலவரின் சொல்நயம் போற்றுதற்குரியது. முல்லைநிலத்தில் ஊரையொட்டிக் குளங்கள் மிகுதியாக இருக்கும். இவற்றையே கேணிகள் என்கிறார் புலவர். மாலைக் காலமல்லவா! கேணிகளில் இரவுநேரப் பூக்கள் மலரும் நேரம் அது. வேல்நுனியைப் போன்று கூம்பியிருந்த மலர்கள் இப்போது பூக்கத் தொடங்குகின்றன. இந்தக் குளங்களைத் தாண்டிய பாணன் குடும்பம் ஊரையொட்டிய எயினர் குடிலை அடைகின்றனது.
முல்லைநிலத்தின் வழியே நடந்து சென்ற பாணர் முதலில் எப்படி எயினர் குடிலை அடைகின்றனர்? எயினர் என்போர் பாலைநில மக்கள். மழைவளமற்ற பாலைநிலத்தில் ஒன்றும் விளையாது. ஆடுமாடு வளர்ப்பதுவும் கடினம். எனவே அங்கு இயற்கையாகக் கிடைக்கும் புல்லரிசி, விலங்குணவு போன்றவற்றை அங்குள்ளோர் உண்டுவாழ்வர். இவர்களே எயினர் எனப்படுவர். எனவே வேலூரை ஒட்டி வாழ்ந்த ஓர் இடையர் குடும்பமன்றி, அங்கு எயினர் பிழைப்புநடத்தும் ஒரு குடும்பத்தைச் சேர்கின்றது அந்தப் பாணர்குடும்பம் எனக் கொள்ளலாம்.
மாலைநேரமாயினும், பகல்முழுக்க அடித்த வெயிலின் தாக்கத்தால் குடிசைக்குள்ளும் வெக்கை மிகுதியாக இருக்கிறது. இந்த வெக்கையால் வீட்டுக்குள் புழுக்கம் மிகுந்திருக்கிறது. இதனால் உள்ளிருப்போர் வெகுவாக வருந்துகின்றனர். இதையே புலவர்,
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை, எயிற்றியர்
என்கிறார். உலைதல் என்பது வருந்துதல். உருப்பு என்பது வெப்பம். அவிர்தல் என்பது தகதகத்தல். சூடாக்கப்பட்ட தோசைக்கல்லிலிருந்து அனலாய் அடிக்குமே ஒரு வெப்பம் – அதுவே அவிர்தல். குரம்பை என்பது எயினரின் குடிசை. அப்போது அங்கே எயினர் இல்லைபோலும். பகற்பொழுதில் அவர்கள் முயல் வேட்டை போன்றவற்றில் ஈடுபடச் சென்றிருப்பார்கள். இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்கள். அவர்களுக்காகச் சுடான உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இன்புளி வெம் சோறு என்கிறார் புலவர். வெம் சோறு என்பது சூடான உணவு. அளவாகப் புளியிட்டுச் செய்த குழம்பாதலால் இன்புளி என்கிறார் புலவர். முன்னிரவில் குடும்பமாக அமர்ந்து முழு உணவாக இதனை எயிற்றியர் உண்பார்கள். அந்தச் சோற்றை இந்தப் பாணர்குடும்பத்துக்கு அன்புடன் பரிமாறுவர் அந்த எயிற்றியர் என்கிறார் புலவர். எயினர்கள் கொன்றுவந்த ஆமானின் இறைச்சியைச் சுட்டு இதனுடன் உண்ணக் கொடுக்கிறார்கள்.
எயிற்றியர் வெயிலுக்கு அஞ்சாமல் வேலைசெய்பவர்கள். எனவே அவர்கள் மேனி கருத்தவர்களாயிருப்பர். பாணர் வீட்டுப் பெண்களோ அப்படிப்பட்டவர் அல்லர். எனவேதான் அவர்களின் மேனியைத் தேமா மேனி என்கிறார் புலவர். தேமாவின் தளிர்போன்ற மேனியர் அந்தப் பாணன் வீட்டுப் பெண்கள். ஆனால் வறுமையின் காரணமாகக் கைகளில் ஒருசில வலையல்களே அணிந்திருக்கிறார்கள். இந்த மங்கையர் கூட்டத்தையே சில்வளை ஆயம் என்கிறார் புலவர்.
இனி, அடுத்தடுத்து வேறுவகை நிலங்களின் வழியாகச் செல்லும்போது பாணர்கள் காணும் மக்களையும், அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் உணவுவகைகளையும் அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.
-- தொடரும்
ப.பாண்டியராஜா
அன்புடையீர்,
<span lang="TA" style="font-family: "Latha",
அன்புடையீர்,
இத்துடன் சிறுபாணாற்றுப்படை -11 வெளிவருகிறது. விடாமல் படித்துப் பின்னூட்டம் இடும் தேமொழி அம்மைக்கு மிக்க நன்றி.
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி
திறல் வேல் நுதியின் பூத்த கேணி
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்
<span lang="TA" style="font-family: "Latha",
<span lang="TA" style="font-family: "Latha",
வழக்கம்போல் பிற்பகுதி முழுமையாக வரவில்லை. எனவே, அதனைத் திரும்ப அனுப்புகிறேன். இதுவும் வரவில்லையென்றால் இணைப்பு அனுப்பவேண்டியதுதான்.
<font color="#000000" face="Times New R
சிறுபாணாற்றுப்படை - 12
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் மிகுந்த பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன். வழியில் பசியோடு குடும்பத்துடன் மரத்தடியில் இளைப்பாறிக்-கொண்டிருக்கும் வறிய பாணனை நோக்கித் தொடர்ந்து கூறுகிறான்.
அந்த நல்லியக்கோடனை நாடி அவன் சென்ற வழியின் தன்மையையும், அங்கு வாழும் மக்களின் பண்புகளையும், அங்கு அவனுக்குக் கிடைத்த பலவித உணவுகளையும் புதிய பாணன் எடுத்தியம்புகிறான்.
புதிய பாணன் முதலில் சொல்வது நெய்தல் பெருவழி பற்றி. இந்தப் பாணர்கள் ஒரு முல்லைநிலக் காட்டாற்றின் கரையில் சந்தித்தனர் என முதலில் கண்டோம். அங்கிருந்து கடற்கரையை நோக்கிச் செல்லும் வழியில் செல்லுமாறு அந்தப் புதியவன் பழைய பாணனைப் பணிக்கிறான். பின்னர் கடற்கரைவழியே நடந்துசென்றால் வரும் எயிற்பட்டனத்தை ஒட்டிய நெய்தல்நிலப் பகுதிகளையும், அங்கு வாழும் மக்களையும், அங்குக் கிடைக்கும் உணவுகளையும் பற்றிக் கூறிய பாணன், கடற்கரையைவிட்டு உள்நாட்டுப் பக்கம் திரும்பிச் சென்று முல்லைநிலக்காடுகள் வழியாகப் பயணம் செய்து வழியில் உள்ள வேலூர் என்ற ஊரைச் சேரலாம் என்கிறான். அங்கு அவனுக்குக் கிடைக்கும் உணவு வகைகளைப் பற்றி முந்தைய கட்டுரையில் கண்டோம்.
இனி, வேலூரைக் கடந்து, வயல்வெளிகள் நிறைந்த மருத நிலத்தைச் சேர்ந்த ஆமூர் என்ற ஊரைச் சேர்கிறது பாணனின் குடும்பம். அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் உபசரிப்பைப் பற்றி இங்குக் காண்போம்.
முதலில் புலவர் காட்டும் ஓர் அழகிய மருதநிலக் காட்சியைப் பாருங்கள்.
நல்லியக்கோடனின் ஓய்மாநாட்டின் மருதநில வளத்தைச் சிறப்பித்துக் கூறப் புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் எடுத்துக்கொண்ட காட்சி சற்று மாறுபட்டது.
முதலில் ஒரு குளத்தைக் காட்டுகிறார் புலவர். அதன் கரையில் ஒரு காஞ்சி மரம் நிற்கிறது. அந்த மரத்தின் கிளையில் ஒரு மீன்கொத்திப்பறவை அமர்ந்திருக்கிறது. தகுந்த நேரம் பார்த்து அது நீருக்குள் பாய்ந்து ஒரு மீனைக் கொத்தி மீள்கிறது.
நறும் பூங் கோதை தொடுத்த நாள் சினைக்
குறும் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல் – சிறு 175 – 178
நறிய பூக்கள் மாலை தொடுத்த(தைப் போன்று மலர்ந்துள்ள) பருவம் வாய்த்த கொம்புகளையும்,
குறிய தாளினையும் உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,
(தான்)நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தை(க் கூர்ந்து) பார்த்து, நெடும்பொழுதிருந்து புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
முதலில் குளத்தை நிலை அரும் குட்டம் என்கிறார் புலவர். ஆண்டுமுழுக்க நீர் இருக்கும் என்று கூறவில்லை அவர். வேனில் காலத்தில் வற்றிப்போய், மழைக்காலத்தில் நிரம்பிவழியும் நிலையற்ற தன்மைகொண்டது அது என்கிறார். பாணர்கள் நடந்துசெல்லும் காலம் இளவேனிற்காலம். மழைக்காலத்தில் நிரம்பிய குளம் வற்றத் தொடங்கியுள்ளது. மிகவும் ஆழமற்ற குளத்தில் மீன்கள் நீருக்குள் நீந்தித்திரிவது கண்ணுக்கு எளிதில் தெரியும். குளத்தின் கரையில் ஒரு காஞ்சிமரம். காஞ்சிமரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? ஆற்றுப்பூவரசு என்பார்கள். கரையை ஒட்டி இருக்கும் அதன் அடிமரம் குட்டையானது. குறுங்கால் காஞ்சி என்கிறார் புலவர். குளத்துக்கரையில் குட்டையாக இருக்கும் மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தால் நீருக்கு வெகுஅருகில் இருக்கலாம் அல்லவா? மீன்களும் வெகு தெளிவாய்த் தெரியும் அல்லவா? அத்துடன் அவர் அந்தக் காஞ்சிமரத்தை விடவில்லை. காஞ்சிமரத்தின் பூக்களை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். காஞ்சியின் பூக்கள் கிளைகளை ஒட்டிப் பூப்பவை. அதன் பூக்களே ஒரு மாலையைத் தொடுத்தது போல் இருக்கிறதாம். நறும்பூங்கோதை தொடுத்த நாள் சினை என்கிறார்.
குறுங்கால் காஞ்சியையும், நறும்பூங்கோதை தொடுத்த நாள்சினையையும் படத்தில் பாருங்கள். நாள் சினை என்பது மிகவும் இளைய கிளை. படத்தில் கிளையையும் பாருங்கள். தான் பார்த்த காட்சியை அப்படியே தம் மனத்தில் இருத்தி, அதை அப்படியே நம் மனக்கண்முன் கொண்டுவந்து காண்பிக்கும் திறத்தில் சங்கப்புலவர்கள் இவ்வுலகில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பது உண்மைதானே! காஞ்சிப்பூவே ஒரு மாலையாய்த் தோன்றுகிறதை கோதை தொடுத்த என்ற சொற்களில் எத்துணை அற்புதமாய்ச் சித்தரித்திருக்கிறார் புலவர் பாருங்கள்.
இந்தக் காஞ்சி மரத்தின் ஒரு கிளையில் பறவை அமர்ந்துள்ளது. பொறுமையாகக் காத்திருக்கிறது. குட்டம் நோக்கி நெடிது இருந்து என்கிறார் புலவர். வைத்த கண் எடுக்காமல் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது மீன்கொத்தி. ஒரு மீன் நீரின் மேற்பரப்புக்கு வருகிறது. நீருக்குள்ளேயே கிடப்பதால் ஒருவித வாடை அடிக்கும் மீனைப் புலவுக் கயல் என்கிறார் அவர். புலவு என்பது புலால் நாற்றம். ஒரே பாய்ச்சலில் நீருக்குள் பாய்ந்து மீனைக் கொத்திக்கொண்டு மேலே மீண்டும் வந்து அமர்கிறது அந்தப் பறவை. இப்பொழுது நம் கவனம் எங்கு இருக்கும்? மீனைப் பிடித்து வந்திருக்கிறதா என்று பறவையின் வாயைப் பார்ப்போம். பொன்வாய் மணிச் சிரல் என்கிறார் புலவர்.
பொன்வாய் என்பது golden beak. மணிச்சிரல் என்பது kingfisher like a blue diamond. இந்த இரண்டும் எவ்வளவு உண்மை என்பதைப் படத்தில் பாருங்கள்.
இத்துடன் புலவர் நிறுத்தியிருந்தால் இந்தக் காட்சியில் ஒன்றுமில்லை. இதற்கு மேல் அவர் காட்டும் காட்சியின் நீட்சியில் அவர் தன் கற்பனையின் முழுத்திறத்தையும் காட்டுகிறார்.
நீருக்குள் பாய்ந்து மீனைக் கொத்தி, அதனோடு மீண்டும் நீருக்கு வெளியில் வருகிறபோது, மீன்கொத்தியின் காலில் இருக்கும் கூரிய நகம் நீர் மட்டத்திலிருந்த ஒரு தாமரை இலையில் பட்டு அதனைக் கிழிக்கிறது. அதனால் அக் கொடியில் பூத்த தாமரை மலரை வெகுவாக ஆட்டங்கொள்கிறது. அப்போது அந்த வெள்ளைத்தாமரை மலரில் வண்டுகள் மொய்த்திருக்கின்றன. திடீரென்று மலர் ஆடத்தொடங்கியதும், அந்த வண்டுகள் ‘குப்’-பென்று மேலே எழுகின்றன. அப்போது மூடியிருந்த வெள்ளைத்தாமரை மெதுவாக வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. இக்காட்சி நிலவினைச் சேர்ந்த பாம்பு அதனைவிட்டு மெல்ல மெல்ல நீங்குவது போல் தோன்றுகிறது. இப்பொழுது படியுங்கள்:-
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல்
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள் போது
கொங்கு கவர் நீலச் செம் கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும்
மருதம் சான்ற மருதத் தண் பணை
புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்
பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பசிய இலையினுடைய
முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
தேனை நுகர்கின்ற நீல நிறமும் சிவப்பும் கல்ந்த கண்ணையுடைய வண்டுக் கூட்டம்
திங்களைச் சேர்கின்ற (கரும்)பாம்பை ஒப்பத் தோன்றும்,
மருத ஒழுக்கம் நிலைபெறுவதற்கமைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயலினையுடையதும்,
மீனைக் கொத்துவதற்காகப் பறவை பாய்ந்து நீருக்குள் மூழ்குவதையும், பின்பு மீனைப் பிடித்த பறவை மீண்டும் நீருக்கு மேலே வருவதையும் படத்தில் காணலாம்.
பறவை நீருக்குள் மூழ்கும்போது நீரில் ஏற்படும் சலசலப்பைப் பாருங்கள். அதனால் அருகிலிருக்கும் தாமரைக் கொடி எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்று எண்ணிப்பாருங்கள். அப்போது கொடியிலுள்ள நீண்ட தண்டினைக்கொண்ட தாமரை மலர் ஆட்டங்காணும் அல்லவா? அதனால் அதனை முழுதுமாய் மறைத்து மொய்த்திருக்கும் வண்டுக்கூட்டம் கலையக்கூடும் அல்லவா? ஆனால் நீரை விட்டு வெளிவரும் பறவை நீரில் மிகச் சிறிய அளவு பாதிப்பையே உண்டாக்குகிறது. இதனால் முதலில் ஆட்டங்கண்ட தாமரை மலரும் மீண்டும் சிறிதளவு ஆடிய பின் நிலைக்கு வந்துவிடும். ஆனால் இங்கு புலவர் கூறுவதை உன்னிப்பாய்ப் பாருங்கள். மீண்டு எழும் பறவையின் கூரிய நகங்கள் (வள் உகிர்) தாமரை இலையை ஆழமாகக் கிழித்துவிடுகிறதாம். வடு ஆழ் பாசடை என்கிறார் புலவர். பாசடை என்பது பசிய இலை. ஆக ஓரத்தில் இலேசாகக் கிழிக்காமல், இலை நடுவே ஆழமாகக் குத்திக் கிழிக்கிறதாம் பறவையின் நகம். இதனால் அந்தக் கொடியே பெரிதும் இழுபட்டு மீண்டிருக்கும். இதனால் முதலில் ஓரளவு ஆட்டங்கண்ட வெண்தாமரை மலர் இப்போது பெரிதளவு ஆட்டங்கொடுக்கும் அல்லவா? அதனால் அதன்மீது மொய்த்திருக்கும் வண்டுக்கூட்டம் சட்டென்று மலரை விட்டு நீங்கி மேலே எழும். அதனால் முன்பு வண்டுகள் மொய்த்ததால் மூடப்பட்டிருந்த தாமரை இப்போது வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. இது சந்திரகிரகணத்தன்று, முதலில் மறைந்த முழுநிலா மீண்டும் சிறிது நேரங்கழித்து வெளிவருவது போல் இருக்கிறது என்று புலவர் கூறவருகிறார் என்று நினைப்போம் இல்லையா? அதுதான் இல்லை!!
புலவர் கூறும் உவமையை நன்கு உற்றுப்பாருங்கள்.
கொங்கு கவர் நீலச் செம் கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும்
என்கிறார் அவர். அதாவது, தாமரையில் தேனெடுத்துக்கொண்டிருந்த சிவந்த கண்களையுடைய ஆண்வண்டுகள், சந்திரனைச் சேர்ந்த பாம்பைப் போலிருக்கும் என்கிறார் அவர். அரவு சேர் மதியின் என்று, அதாவது, பாம்பு சேர்ந்த சந்திரனைப்போலிருக்கும் என்று அவர் கூறவில்லை. வெள்ளைத் தாமரைப்பூ நிலவுக்கு உவமை. வண்டுகள் பாம்புக்கு உவமை. வண்டுகள் எப்படிப் பாம்பு ஆகும்? இதற்கு, முதலில் சந்திர கிரகணம் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமையும்போது சந்திரகிரகணம் ஏற்படுகிறது. நாம் நடக்கும்போது நம் மீது சூரிய ஒளி பட்டால் நமது உடல் ஒரு நிழலை உருவாக்குகிறது அல்லவா? அதுபோல சூரிய ஒளியால் பூமிக்கும் ஒரு நீண்ட நிழல் உருவாகும். அது ஒரு கூம்புவடிவத்தில் இருக்கும். இதனைப் பூமியின் நிழல்கூம்பு (cone of shadow) என்பார்கள். பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரன் சில வேளைகளில் இந்த நிழற்கூம்பிற்குள் நுழைய நேரிடும். அச்சமயம் அது முழுநிலா (பௌர்ணமி)க் காலமாக இருக்கும். வட்டமாக இருந்த முழுநிலா, நிழலுக்குள் நுழைந்ததும் அதன்மீது இருள்கவியத் தொடங்குகிறது. இதையே மறைப்பு அல்லது கிரகணம் என்கிறோம். சிலவேளைகளில் முழுநிலவு முழுவதும் மறைந்துபோக நேரிடும். சிறிதுநேரம் கழித்து, நிழலைவிட்டு சந்திரன் வெளியே வரும். இதனையே கிரகணம் விலகுகிறது என்பர். இந் நிகழ்ச்சியைக் கண்ட நம் முன்னோர், நிலவை ஒரு பெரிய பாம்பு வந்து விழுங்குவதாகவும், அதனால் நிலவு மறைவதாகவும், பின்னர் பாம்பு அந்த நிலவை உமிழ்ந்துவிட முழுநிலவும் தெரிவதாகவும் கூறினர். இந்தப் பாம்புதான் இங்கு புலவர் குறிப்பிடும் அரவு.
வாயைத் திறந்து பாம்பு ஒரு வட்டமான பொருளை விழுங்கும்போது, அதன் வாய் பெரிதாகி, அந்தப் பொருளை மறைத்து நிற்கும். பாம்பின் தலைக்கும் கீழ்ப்பட்ட உடம்புப்பகுதி நீண்டு சிறுத்துக்கொண்டே போகும். இறுதியில் அதன் உடம்பு வால்பகுதியில் ஒரு கோடு போல் தோன்றும்.
வெள்ளைத் தாமரை மலரில் மொய்த்துக்கொண்டிருந்த வண்டுக்கூட்டம், திடீரென ஏற்பட்ட ஆட்டத்தால், ‘குப்’பென்று மேலே கிளம்பும். முதலில் எழும்பிய வண்டுகள் மேலே செல்லச்செல்ல அடுத்தடுத்து வண்டுகள் உயரக் கிளம்பும். மேலும் சில மலரில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும். இந்தக் காட்சிதான் புலவருக்கு நிலவைக் கவ்விய பாம்பாகத் தெரிந்திருக்கிறது. இதுதான் மதிசேர் அரவு.
இன்னொன்றுகூடச் சொல்லலாம். முன்னர்க் குறிப்பிட்ட நிழற்கூம்புதான் ஒரு பாம்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது எனலாம். கூம்பின் அடிப்பாகம் நிலவில் இருக்கும். பின்னர் அது நீண்டு சிறுத்துக்கொண்டே சென்று பாம்பின் வால்போல முடியும். அறிந்தோ அறியாமலோ, இந்த நிழற்கூம்பத்தான் நம் முன்னோர் பாம்பு என்று சொல்லியிருந்திருப்பார்கள் என நம்ப இடமிருக்கிறது.
எனினும் வெள்ளைத்தாமரையை விட்டு வெளிக்கிளம்பிய வண்டுகளின் அமைப்பு ஒரு கூம்புபோல் இருப்பதைக் கண்ட புலவர் அதனை மதி சேர் அரவுக்கு உவமித்திருப்பது கற்பனையின் உச்சகட்டம்.
அந்த வண்டுகளையும் வீணே விட்டுவிடவில்லை புலவர். நீலச் செங்கண் சேவல் என்கிறார். இங்கு நீல என்பதனை வண்டுகளுக்குக் கொண்டு நீலநிறமுடைய, சிவந்த கண்களையுடைய வண்டுகள் என்று உரைகள் கூறுகின்றன. ஆனால வண்டுகளின் கண்களை நன்கு உற்றுப்பார்த்தால் அவை நீலம் கலந்த சிவப்பு நிறத்தவையாக இருப்பதைக் காணலாம்.
சேவல் என்பது இங்கு ஆண் தேனீக்களைக் குறிக்கும். ஆனால் இன்றைய அறிவியலார் கூற்றுப்படி தேனீக்களில் வேலைக்காரத் தேனீக்கள் எனப்படும் பெண் தேனீக்கள்தான் தேனெடுக்க வெளியே வரும் என்றும், ஆண்தேனீக்கள் கூட்டுக்குள்ளேயே சோம்பியிருக்கும் என்றும் அறிகிறோம். எனினும் அன்றைய உலக நடப்பில் ஆண்களே பெரும்பாலும் வெளியில் சென்று பொருளீட்டப் போவார்கள் என்ற கருத்தையொட்டிப் புலவர் இவ்வாறு கூறியிருந்திருக்கலாம். எனினும் தேனீக்களில் ஆண், பெண் ஆகியவற்றில் ஏதோ ஓர் இனம் மட்டும்தான் தேனெடுக்க வெளியில் செல்கிறது என்ற அளவுக்கு அவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள் எனத் தெரியவருகிறது.
சரி, அந்தத் தாமரைப் பூ? இவ்வளவு சொன்ன புலவர் அந்தத் தாமரைப் பூவைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுவாரா என்ன? முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள் போது என்கிறார். தாமரைப் பூவின் தண்டில் சின்னஞ்சிறு மெல்லிய முட்கள் இருக்கும். அங்கிருந்து தொடங்குகிறார் புலவர். அரை என்பது பூவுக்கும் இலைக்கும் இடைப்பட்ட பகுதி. காம்பு எனலாம். போது என்பது மலர்கின்ற பருவத்திலுள்ள மொட்டு. நாள் போது என்பது அன்றைக்குக் காலையில் மலரும் பூ. முகிழ் என்பது மொட்டு. முகிழ் விரி நாள்போது என்னும்போது அந்த அதிகாலை வேளையில் மலர்ந்தும் மலராத நிலையிலிருக்கும் ஒரு இளம்பூவை எத்துணை அற்புதமாக நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டிவிடுகிறாற் புலவர்.
இந்தக் குளத்தை அடுத்து இருப்பது ஆமூர் எனப்படும் ஊர். அடுத்து அந்த ஆமுரில் உள்ள உழவரின் வீட்டில் பாணருக்குக் கிடைக்கும் உணவைப்பற்றிக் கூறுகிறார் புலவர்.
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர்
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை
பிடிக் கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்து
தொடிக் கை மகடூஉ மகமுறை தடுப்ப
இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு
கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்
சான்றோர் குறைவுபடாததும், அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும்
அழகிய குளிர்ந்த அகழியை உடையதும் ஆகிய, அவ்வள்ளலின் ஆமூரைச் சேர்திராயின் -
வெற்றியுண்டாக நடக்கும், (இழுத்தற்குரிய)வலி பொருந்திய கழுத்தினால்
மனஉறுதி கொண்ட வலிமையான எருத்தினையுடைய உழவரின் தங்கையாகிய,
பிடியின் கையை ஒத்த பின்னல் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகினையும்
தொடி(அணிந்த) கையினையும் உடைய பெண், தாய் பிள்ளை உறவு (கொண்டு)தடுக்க,
கரிய வயிரத்தையுடைய உலக்கையின் பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின
குற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை
கவைத்த காலினையுடைய நண்டின் கலவையோடு பெறுவீர்.
ஆமூர் ஒரு பெரிய நகரமாக விளங்கியதால், நகரைச் சுற்றிக் கோட்டை மதில் உண்டு. அரும் கடி வியல் நகர் என்கிறார் புலவர். கடி என்பது காவல். அந்தணர் என்போர் அறவோர் என்ற பொருளில் அந்தணர் அருகா என்பதற்குச் சான்றோர்கள் குறைவுபடாத என்ற பொருள் கொள்ளப்பட்டது. கோட்டை இருந்தால் அகழியும் இருக்குமன்றோ! அம் தண் கிடங்கு என்கிறார் புலவர். அங்குள்ள உழவர்கள் வயலில் உள்ள நண்டைப் பிடித்துவந்திருக்கிறார்கள். அந்த உழவரின் தங்கைமார் அதனைக் குழம்பு வைக்கிறாள். ஏன் தங்கை என்கிறார் புலவர்? பெரியவர்கள் எல்லாரும் – ஆண், பெண் உட்பட – வயலில் வேலைக்குச் சென்றிருப்பார்கள் அல்லவா? இந்தத் தங்கையும் மிகவும் சிறுமியோ? பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து மங்கை அவள். சிறுபுறம் என்பது முதுகு. அதில் பின்னிவிடப்பட்ட சடை விழுந்துகிடக்கிறது. எப்படிப்பட்ட சடையாம்? பெண்யானையின் துதிக்கை போன்று அத்துணை பருமன் உள்ளது அந்தச் சடை. போதாக்குறைக்கு வளையல்கள் வேறு நிறைய அணிந்திருக்கிறாள். தொடிக்கை மகடூ என்கிறார் புலவர். இவள் நிச்சயம் சிறுமி அல்ல. பருவமங்கை. எல்லாரும் வேலைக்குச் சென்றுவிட்டால், வீட்டிலிருந்து யார் சமைப்பது? வேலை முடிந்து வரும்போது வயிறார உண்ண வீட்டில் சமையலுக்கு ஓர் ஆள் வேண்டுமல்லவா? அதனால்தான் இந்தக் குமரியை வீட்டில் விட்டு, வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் உரன் கெழு நோன் பகட்டு உழவர் கூட்டம் வேலைக்குப் போயிருக்கிறது. உழவர்களுக்குச் சொத்து அவர்களின் மாடுதான். எனவேதான் அவர்கள் வலிமையான காளைகளை வைத்திருக்கிறார்கள். காளைகளை வாங்கும்போது அவற்றை நடக்கவிட்டுப் பார்த்து வாங்குவார்கள். அப்படிப் பார்த்து வாங்கிய இந்தக் காளைகளை வலம்பட நடக்கும் பகடு என்கிறார் புலவர். காளைகளை உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் முதலில் அவற்றின் கழுத்தில் நுகத்தடி பூட்டுவார்கள். சேறான வயலில் அழுந்தப் பிடிந்திருக்கும் கலப்பையை வலிந்து இழுப்பதற்கோ, வண்டியில் ஏற்றப்பட்டிருக்கும் மிதமிஞ்சிய சுமையைக் கடிந்து இழுப்பதற்கோ காளைகளின் கழுத்துப்பகுதி மிகவும் வலிமையுடையதாக இருக்கவேண்டும். எனவேதான் வலி புணர் எருத்தின் என்கிறார் புலவர். எருத்து என்பது கழுத்து. கழுத்து மட்டும் வலிமையானதாக இருந்தால் போதுமா? உடம்பு வலிமையுள்ளதாக இருக்கவேண்டாமா? உரன் கெழு நோன் பகடு என்கிறார் அவர். இந்த ஓர் அடியில் உழவரின் வாழ்க்கையையே வருணித்துவிடுகிறாரே புலவர்!
உழவரின் வீட்டில் அரிசிச்சோறுக்கா பஞ்சம்? நெல்லை அரிசியாக்கக் குற்றவேண்டுமல்லவா! அதனையும் விடவில்லை புலவர். அவைப்பு மாண் அரிசி என்கிறார். அவைத்தல் என்பது குற்றுதல். நன்றாகக் குற்றினால் உமி, தவிடு போன்றவை முற்றிலும் நீங்கும். இதனையே அவைப்பு மாண் அரிசி என்கிறார் அவர். இவ்வாறு அவைப்பதற்கு உரலும், உலக்கையும் வேண்டும். உரல் கருங்கல்லால் ஆனது. அதன் வலிமையைக் கூறவேண்டியதில்லை. உலக்கை? மரத்தால் ஆனது. இரண்டு பக்கமும் இரும்புப்பூண் போட்டிருப்பார்கள். இருங்காழ் உலக்கை இரும்பு முகம் என்கிறார் புலவர். வைரம் பாய்ந்த மரத்தால் ஆன உலக்கையின் முகப்புகளில் இரும்புப் பட்டை அடித்திருக்கிறார்கள். அப்புறம் அவைப்பு ஏன் மாண்புடையதாக இராது?
வேலைமுடிந்து வீட்டுக்கு வருவோருக்காக ஆக்கிவைத்திருக்கும் உணவைப் பசியோடு வரும் பாணர்களுக்குப் படைக்கிறாள் அந்த உழவர்தங்கை. அதுவும் எவ்வளவாம்? அமலை வெண்சோறு – ஒவ்வொருவருவருக்கும் தட்டு நிறைய – அமலை என்றால் வெகுவான திரள். சோற்றை அப்படியே அவர்கள் முன் கொட்டுகிறாள் அந்தக் குமரி. அதில் ஊற்றிக்கொள்ள? நண்டுக்குழம்பு தருகிறாள். பிளந்து கொண்டிருக்கும் நண்டுக்கால்களோடு எடுத்து ஊற்றுகிறாள். கவைத்தாள் அலவன் கலவை என்கிறார் புலவர்.
இவற்றுக்கிடையில் இன்னொரு தொடரையும் பயன்படுத்துகிறார் புலவர். மகமுறை தடுப்ப – தன் மக்களைக்கொண்டு முறைமையோடே போகாது விலக்குகையினாலே – என்ற பொருளில் உரைகள் அமைந்துள்ளன. இவளோ உழவர் தங்கை – திருமணமாகாதவள். அவளுக்கு ஏது மக்கள்? பாணர்கள் இவளின் வீடுதாண்டிப் போக நினைத்தாலும், இந்த உழவர் தங்கை, “அப்பா வாங்க, அம்மா வாங்க” என்று முறைசொல்லிக் கூப்பிட்டுத் தன்னை அவர்களுக்கு மகள் முறையாக்கிக்கொண்டு அவர்களை வேறு எங்கும் செல்லவிடாமல் தடுக்க என்று இதற்குப் பொருள் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. கிராமப்புறங்களில் இன்றைக்கும் இது தாய்-பிள்ளை உறவு எனப்படுகிறது.
இப்போது பாணர்கள் நல்லியக்கோடனின் தலைநகரை நெருங்கிவிட்டார்கள். அடுத்து அவர்கள் தலைநகருக்குள் நுழையும் காட்சிகளையும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பையும் அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.
கொங்கு கவர் நீலச் செம் கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும்
<p style="margin: 6pt 0in; tex
புலவர் கூறும் உவமையை நன்கு உற்றுப்பாருங்கள்.
கொங்கு கவர் நீலச் செம் கண் சேவல்
மதி சேர் அரவின் மானத் தோன்றும்
என்கிறார் அவர். அதாவது, தாமரையில் தேனெடுத்துக்கொண்டிருந்த சிவந்த கண்களையுடைய ஆண்வண்டுகள், சந்திரனைச் சேர்ந்த பாம்பைப் போலிருக்கும் என்கிறார் அவர். அரவு சேர் மதியின் என்று, அதாவது, பாம்பு சேர்ந்த சந்திரனைப்போலிருக்கும் என்று அவர் கூறவில்லை. வெள்ளைத் தாமரைப்பூ நிலவுக்கு உவமை. வண்டுகள் பாம்புக்கு உவமை. வண்டுகள் எப்படிப் பாம்பு ஆகும்? இதற்கு, முதலில் சந்திர கிரகணம் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமையும்போது சந்திரகிரகணம் ஏற்படுகிறது. நாம் நடக்கும்போது நம் மீது சூரிய ஒளி பட்டால் நமது உடல் ஒரு நிழலை உருவாக்குகிறது அல்லவா? அதுபோல சூரிய ஒளியால் பூமிக்கும் ஒரு நீண்ட நிழல் உருவாகும். அது ஒரு கூம்புவடிவத்தில் இருக்கும். இதனைப் பூமியின் நிழல்கூம்பு (cone of shadow) என்பார்கள். பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரன் சில வேளைகளில் இந்த நிழற்கூம்பிற்குள் நுழைய நேரிடும். அச்சமயம் அது முழுநிலா (பௌர்ணமி)க் காலமாக இருக்கும். வட்டமாக இருந்த முழுநிலா, நிழலுக்குள் நுழைந்ததும் அதன்மீது இருள்கவியத் தொடங்குகிறது. இதையே மறைப்பு அல்லது கிரகணம் என்கிறோம். சிலவேளைகளில் முழுநிலவு முழுவதும் மறைந்துபோக நேரிடும். சிறிதுநேரம் கழித்து, நிழலைவிட்டு சந்திரன் வெளியே வரும். இதனையே கிரகணம் விலகுகிறது என்பர். இந் நிகழ்ச்சியைக் கண்ட நம் முன்னோர், நிலவை ஒரு பெரிய பாம்பு வந்து விழுங்குவதாகவும், அதனால் நிலவு மறைவதாகவும், பின்னர் பாம்பு அந்த நிலவை உமிழ்ந்துவிட முழுநிலவும் தெரிவதாகவும் கூறினர். இந்தப் பாம்புதான் இங்கு புலவர் குறிப்பிடும் அரவு.
இப்போது பாணர்கள் நல்லியக்கோடனின் தலைநகரை நெருங்கிவிட்டார்கள். அடுத்து அவர்கள் தலைநகருக்குள் நுழையும் காட்சிகளையும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பையும் அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.
-- தொடரும்
சிறுபாணாற்றுப்படை - 13
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் மிகுந்த பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன். வழியில் பசியோடு குடும்பத்துடன் மரத்தடியில் இளைப்பாறிக்-கொண்டிருக்கும் வறிய பாணனை நோக்கித் தொடர்ந்து கூறுகிறான்.
அந்த நல்லியக்கோடனை நாடி அவன் சென்ற வழியின் தன்மையையும், அங்கு வாழும் மக்களின் பண்புகளையும், அங்கு அவனுக்குக் கிடைத்த பலவித உணவுகளையும் புதிய பாணன் எடுத்தியம்புகிறான்.
மருதநிலப் பகுதியைச் சேர்ந்த ஆமூர் என்ற ஊரில் பாணர்க்குக் கிடைக்கும் உணவைப் பற்றிச் சொன்ன புதிய பாணன், அடுத்து நல்லியக்கோடனின் கிடங்கில் நகரம் மிகவும் அண்மைத்தே என்றும் கூறுகிறான்.
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்றுக்
கருமறிக் காதின் கவை அடிப் பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போலப்
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர்ப் பணைத் தாள்
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே – சிறு 196 - 202
தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
நிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று,
பிணங்களை(க் காலால்) இடறிச் சிவந்த பெரிய நகங்களையும், பெருமையுடைய கால்களையும் உடைய
தலைமைச் சிறப்புடைய யானைகளின் (மத)அருவி (எழுந்த)தூசியை அணைத்துவிடுவதால் 200
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்,
தூரமானதும் அன்று, சிறிது அருகிலுள்ளதே,
கிடங்கில நகரில் ஏதேனும் ஒரு பக்கத்தில் ஏதேனும் ஒரு விழா எப்பொழுதும் நடந்தவண்ணம் இருக்கும் என்று கூறவந்த புலவர் சாறு அயர் மூதூர் என்கிறார். சாறு என்பது திருவிழா. அயர்தல் என்பது கொண்டாடுதல். மிகவும் பழமையான நகரம் என்பதனைக் குறிக்க அந் நகரை மூதூர் என்கிறார் புலவர்.
விழா நடக்கும்போது ஆடல்பாடல் நடக்கும். மக்களும் வாகனங்களும் அங்குமிங்கும் விரைந்து சென்றுகொண்டிருப்பர். எனவே தெருவில் புழுதி கிளம்புகிறது. விழாக்களில் கலந்துகொள்ள யானைகளை அழைத்துவருவர் அல்லவா? அந்த யானைகள் சில மதம்பிடித்த நிலையில் இருந்திருக்கின்றன. அவற்றின் கன்னங்களினின்றும் மதநீர் அருவியாய்க் கொட்டுகிறது என்றும், அந்த அருவிநீரினால் தெருப்புழுதி அடங்கிப்போயிற்று என்றும் புலவர் கூறுகிறார்.
அந்த யானைகள் போரில் கலந்துகொண்டவை. போரினில் மாண்ட வீர்ர்களின் பிணங்களைக் காலால் இடறியதால் அவற்றின் கால்நகங்கள் சிவந்துபோய் இருக்கின்றனவாம். இக் காட்சி பிணத்தை உண்டு சிரிக்கும் பேய்மகளின் பற்களைப் போலிருக்கின்றன என்று புலவர் இங்கே ஓர் உவமையைக் கூறுகிறார். பேய்கள் உருவத்தில் மிகப் பெரியவை என்று அன்றைய மக்கள் கற்பனைசெய்துவைத்திருந்தனர் போலும். யானையின் சிவந்த கால்நகங்கள், பேய்மகளின் பிணம் தின்று சிவந்த பெரிய பற்களைப் போலிருந்ததாகக் கூறுகிறார் புலவர்.
யானையின் நகங்களைப் போன்ற பற்கள் என்றவுடனே அந்தப் பேய்மகளின் அஞ்சத்தக்க பெரிய உருவத்தைக் கற்பனைசெய்துகொண்டிருப்போம். இதனை உறுதி செய்வதுபோலப் புலவர்,
தீப்பிழம்பு சாய்ந்ததைப் போன்ற நாவினையும், மின்னுகின்ற பற்களையும், வெள்ளாட்டின் காதுகளைப் போன்ற (தொங்கும்) காதுகளையும், கவைத்த பாதங்களையும் உடைய பேய்மகள் என்று பேயை வருணிக்கிறார்.
வாயை நன்றாகத் திறந்து, முழுவதும் வெளியே நீட்டிய நாக்கு என்பதற்குப் பதிலாக, சாய்ந்து நிற்கும் தீப்பிழம்பு என்று கூறும் புலவரின் உவமை, அதன் பயங்கரத் தன்மையையும், உருவத்தையும், நிறத்தையும் ஒன்றுசேர ஒப்பிட்டுக்காட்டவில்லையா?
அடுத்து, பேயின் காதைக் கருமறிக் காதின் என்கிறார் புலவர்.
கருமறி என்பது வெள்ளாடு. அதன் குட்டியும் ஆகலாம். கருமறிக்காதின் என்பதற்கு வெள்ளாட்டுக் குட்டிகளைக் காதணியாகத் தொங்கவிட்ட என்ற பொருள் கொள்ளப்படுகிறது. பேய் என்பது ஏறக்குறைய மனித உருவத்தின் தன்மையில், ஆனால், அச்சம்தரும் பெரும் தோற்றத்தைக் கொண்டது என்று இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே, வெள்ளாட்டுக் குட்டிகளை அது காதில் தொங்கவிட்டுக்கொண்டிருக்கும் என்பது மிகையான கூற்றாகத் தெரிகிறது.
விலங்குகளின் காது மடல்கள், மனிதர்களின் மடல்களைப் போல் அல்லாது, நீளமாகவும், பெரிதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலான விலங்குகளின் காதுகள் விறைப்பாக இருக்கும். வெள்ளாட்டின் காது நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும். பேயின் காதும் இவ்வாறு தொங்கிகொண்டிருக்கும் என்ற பொருளில்தான் கருமறிக்காதின் என்று புலவர் கூறியிருப்பதாகக் கொள்ளுதல் சிறப்பு எனத் தோன்றுகிறது.
மனித உருவம் போன்றே முகம், கை, கால்கள் கொண்டவையாகப் பேய்கள் இருப்பதாக நம்பப்படினும், அவற்றின் பாதங்கள் விலங்குகளின் பாதங்களைப் போல் கவைத்த அடிகளாய் இருக்கும் என்பதும் நம்பிக்கை.
பேய்களுக்கு மிகவும் பிடித்த உணவு, மனித உடலின் கொழுப்புப் பகுதியே என்பதுவும் ஒரு நம்பிக்கை. இறந்த மனித உடல்களைத் தூக்கி வாயில் கவ்வி, கொழுப்பை உறிஞ்சிக் குடிக்கும்போது பேய் சிரித்தால் என்ன ஆகும்? நிணத்தைப் பிய்ந்த்து எடுக்கும்போது ஒட்டிக்கொண்டுவந்த இறைச்சியில் வடியும் இரத்தம் பேயின் பற்களில் கறையாய்ப் படிந்து அந்த ஒளிறும் வெள்ளைப்பற்கள் சிவந்துபோய்க் காட்சியளிக்காதா? அதைப் போல் இருக்கிறதாம் – போர்யானையின் பிணங்களை இடறியதால் சிவந்துபோன பேர் உகிர்கள் என்கிறார் புலவர். உகிர் என்பது நகம்.
இக்கூற்றுகள் அக்காலத்திய மக்களின் நம்பிக்கையைப் புலப்படுத்துவன போல் இருப்பினும், யானைகளின் மதநீர் அருவிகளால் தெருப்புழுதி அடங்கியது என்பது மிகைக்கூற்றாகவே படுகிறது. சங்ககாலப் புலவர்கள் இயற்கையை இயற்கையாவே பார்த்துப் பாடியவர்கள். இல்லாததைச் சொல்லும் வழக்கம் அவர்களுக்கில்லை. எனினும் இத்தகைய மீக்கூற்றுகள் ஆங்காங்கே தென்படுகின்றன. இப்படித் தொடங்கிய போக்கு, பிறகாலத்துக் கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்களில் பெருமளவு பெருகிவிட்டது எனலாம்.
அடுத்து, புலவர் நல்லியக்கோடனின் அரண்மனை வாயிலைப் பற்றிக் கூறுகிறார்.
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 203 206
கிணைப்பொருநர்களுக்கோ, புலமையோர்க்கோ,
அரிய மறை (கற்றுணர்ந்த)நாவினையுடைய அறிவுடையோர்க்கோ,
கடவுள் - பெருமையுடைய (மேரு)மலை வாழும் - (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற
மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணுகி -
பொருநர்க்கும், புலவர்க்கும், அந்தணர்க்கும் அடையாத வாயில் அரசனின் வாயில் என்கிறார் புலவர். அந்தணர்கள் மதச்சடங்குகள் ஆற்றுவதற்கு எந்நேரமும் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கலாம். எனவேதான் அவர்களை அருமறை நாவின் அந்தணர் என்கிறார் புலவர். அது அரண்மனையின் தேவை. ஆனால் அரசனை நாடிவரும் இரவலர், புலவர் எவருக்கும் அடையாத வாயில் என்பதால் பொருநர்க்காயினும், புலவர்க்காயினும் என்று வேறு எந்தவித அடைமொழிகள் இன்றிப் புலவர் இங்குக் கூறுகிறார். நல்லியக்கோடனின் கலைஞரை ஆதரிக்கும் வள்ளண்மையும், அறிவோரை நாடும் அறிவுத்தேடலும் நமக்கு நன்கு புலப்படும்படி புலவர் இவ்வாறு கூறுகிறார் எனலாம். இவர்கள் வேறு எந்தவிதத் தயக்கமும் இன்றி அரண்மனை வாயிலை அணுகலாம் என்பதை அவன் அருங்கடைக் குறுகி என்ற தொடரால் குறிப்பிடுகிறார் புலவர். குறுகுதல் என்பது கிட்டே செல்லுதல்.
இரவலரைப் பார்த்ததும் கதவுகள் தாமாகத் திறக்கப்படும் என்றும், அவர்கள் என்றைக்கும் மூடிய கதவுகளை எதிர்நோக்கத்தேவையில்லை என்றும் ஓர் அழகிய உவமையால் குறிப்பிடுகிறார் புலவர். மால் வரைக் கடவுள் கண்விடுத்து அன்ன என்கிறார் அவர். கண்படை என்பது கண்ணைமூடி உறங்குதல். கண்விடுத்தல் என்பது கண்ணைத் திறந்திருத்தல். இதனால் நல்லியக்கோடனின் அரண்மனை கடவுள் மால் வரையைப் போலச் சிறந்து விளங்குகிறது என்றும் புலவர் கூறுவதாகக் கொள்ளலாம்.
வாசலைத் தாண்டிச்செல்லும் பாணர்கள் நேரே மன்னனிடம் செல்லலாம் என்றும் புலவர் கூறுகிறார். ஆனால் அரசனைச் சூழ இருப்போர் யார்யார் என்பதையும், அவர்கள் தம் தகுதிக்கேற்ப என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதையும் புலவர் மிகவும் சுவைபடச் சொல்லுகிறார்.
செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த
(அவ்வள்ளலின்)செய்ந்நன்றி அறிதலையும், சிற்றினம் சேராமையும்,
இன்முகம் உடைமையையும், இனியன் ஆதலையும்,
செறிந்து விளங்குகின்ற சிறப்பினையுடைய (பல கலைகளையும்) அறிந்தோர் புகழ,
முதலில் புலவர் கூறுவது அறிஞர்களைப் பற்றி. அவர்கள் செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் என்கிறார் அவர். இவர்கள் பலகலைகளையும் கற்ற செறிவான அறிவையுடையவர்கள். இவர்கள் எவ்வாறு அரசனைப் புகழ்கிறார்களாம்? செய்ந்நன்றி மறவாப் பேராண்மை மிக்கவன், அறிவும் ஒழுக்கமும் இல்லாத மாக்கள் கூட்டத்தைத் தனக்காகக் கொள்ளாதவன், நோக்கினாருக்கு எக்காலமும் இனிய முகத்தைக் காட்டுபவன், எல்லாருக்கும் இனியனாக இருப்பவன். இவைதாம் அறிஞர்தம் சிறப்பியல்புகள். அந்தச் சிறப்பியல்புகளை அரசனும் கொண்டிருப்பதாக அவர்கள் அரசனை வாழ்த்துகிறார்கள்.
அடுத்து அரசனை வாழ்த்துபவர்கள் போர்மறவர்கள்.
அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும்
ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும்
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த
(தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும், 210
(பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்,
வாள் வலியால் மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,
வயவர் என்போர் மறவர். வாள் மீக்கூற்றத்து வயவர் என்கிறாற் புலவர். வாள் வலியால் புகழப்படுபவர்கள் அவர்கள். இவர்கள் தம்மைப்பார்த்து அஞ்சி ஓடுபவருக்கு அருள் செய்பவர்கள். வீரம் தம்மிடம் இருப்பதால் வீணாக வெகுளி கொள்ளாதவர்கள். பகைவரின் அணியை உடைத்துக்கொண்டு புகுபவர்கள். ஒருவேளை தம்மைச் சார்ந்த படை தோற்கும் நிலையிலிருந்தால் அதனைத் தாங்கி வழிநடத்துபவர்கள். இத்தகைய பண்புகளைக் கொண்ட மறவர்கள், இந்தப் பண்புகளை மன்னரிடத்தும் கண்டு அவரை வாயாரப் புகழ்கிறார்கள்.
அடுத்து மன்னனை அடுத்திருந்த அரிவையர் அவனை ஏத்திப் பாடுகின்றனர். இவர்களை அரி ஏர் உண்கண் அரிவையர் என்கிறார் புலவர்.
கருதியது முடித்தலும் காமுறப்படுதலும்
ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும்
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த
(தான்)எண்ணியதை முடிக்கவல்ல தன்மையையும், பிறரால் விரும்பப்படுதலையும்,
ஒரே ஒரு வழியில்(மட்டும்)செல்லாமையையும், (பிறர் மனங்களின்)ஓட்டத்தைப் புரிந்துகொள்ளுதலையும்,
செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ, 215
இந்த அரிவையர் தான் எண்ணியதை முடிக்கும் திறனுள்ளோர். தாம் பிறரால் எப்போதும் விரும்பப்படவேண்டும் என்பதில் நாட்டமுள்ளோர். எனினும் தாம் விழையும் ஒருவர் வழிப்படுவதைவிட்டு வேறு எவருக்கும் வழிப்படாதவர் இந்த அரிவையர். பிறர் மனத்தில் ஓடும் எண்ணங்களை உணர்ந்துகாண்பதில் வல்லவர்கள். தங்களுடைய இத்தகைய சிறப்பியல்புகள் மன்னனிடத்தும் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்து இந்தச் சிறப்பியல்புகள் கொண்ட தமது அரசரை அவர்கள் வாழ்த்திப்பாடுகிறார்கள்.
இறுதியாகப் பரிசில்பெற வந்திருப்போர் அரசனைப் பாடிப் புகழ்கிறார்கள்.
அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த
அறிவு குறைந்தோர் முன்னே அறிவு குறைவுபடுதலையும், (அறிஞர் மாட்டு)அறிவு நன்குடைமையும்,
(புலவரின்)சிறப்பை அறிதலையும், குறையாமல் கொடுத்தலையும்(உள்ள அவனை)
பரிசில் (பெற்று வாழும்)வாழ்க்கையையுடைய பரிசிலர் புகழ்ந்துசொல்ல,
பரிசிலரில் பலதரப்பட்டோர் வருவர். அவர்களில் சிலர் சற்றே அறிவில் குறைந்தவராயிருக்கலாம். அத்தகையோரிடம் தனது மேம்பட்ட அறிவைக் காட்டாமல், அந்தப் பரிசிலரின் அறிவுத்திறத்திற்கு ஏற்றவாறு அறியாமைப்பட்டவனாய் மன்னன் நடந்துகொள்கிறான். ஆனால் ஒத்த அறிவு உள்ளவரிடம் மிக்க அறிவுடையவனாய் அரசன் விளங்குகின்றான். இரவலர் எப்போதும் வேண்டுவது அரசன் தன் தகுதியை அறியவேண்டும் என்பதே. இதுவே வரிசை அறிதல். இவ்வாறு பரிசிலரின் வரிசை அறிந்து அவர்களுக்கு வரம்பின்றிக் கொடுப்பவன் நல்லியக்கோடன். எனவேதான் பரிசில் பெற்று வாழ்வதையே வாழ்க்கையாகக் கொண்ட பரிசிலர் இவ்வாறு அரசனை வாழ்த்திப்பாடுகிறார்கள்.
இவ்வாறு விண்மீன்கள் போன்று சிறப்புமிக்க கூட்டத்தார் அரசனைச் சுற்றி இருக்க, அவர்களின் நடுவே அவன் ஒரு முழுநிலவாய் அமர்ந்திருக்கிறான் என்கிறார் புலவர்.
பல் மீன் நடுவண் பால் மதி போல
இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி – சிறு 207 - 220
பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று,
இனிய மகிழ்ச்சியைச் செய்யும் குழாமில் இருந்தவனை அணுகி - 220
இங்கும் புலவர் குறுகி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைப் பாருங்கள். எந்தவித அச்ச உணர்வும் இன்றி, அவர்கள் மன்னனிடம் மிக நெருங்கிச் செல்லலாம் என்பதே புலவர் குறிப்பு.
இவ்வாறு நெருங்கிவரும் புதிய இரவலரைக் கண்டதும் மன்னன் அவர்களை எப்படி வரவேற்பான்?