இத் தொடரின் இறுதிப் பகுதி..
குறிப்பு: இப்பகுதியில் குறிப்பிடப்படும் எட்டயபுரம் அரணமனை "எட்டயபுரத்தை நோக்கி" என்ற பயணத் தொடரில் நான் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களில் காணலாம்.
-சுபா
இதுதான் எட்டையபுரத்தாரோடு எங்களுக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு. இந்தத் தொடர்பு மேலும் வளர்ந்த செய்தியினைக் குறிப்பிடுமுன் எட்டையபுரம் சமஸ்தானத்தைப் பற்றிய சில பொதுத் தன்மைகளை இங்கு அறிவிக்க வேண்டியது என் கடமையெனக் கருதுகிறேன்.
எட்டப்பர் பரம்பரை
வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்தது எட்டப்பர் பரம்பரை என்று நாம் எல்லோரும் பேசி வருகிறோம். எப்போதோ நடந்த பழைய நிகழ்ச்சி; ஆனால் அந்த எட்டப்பர் பரம்பரையில் பின்னால் தோன்றிய பல அரசர்கள் தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கும் செய்துள்ள சிறந்த சேவையை நாம் நன்றியுணர்வோடு என்றென்றும் போற்றக் கடமைப் பட்டிருக்கிறோம். இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் தமிழ்ப் புலவர்களை ஆதரிப்பதில் எவ்வாறு புகழ் பெற்று விளங்கினார்களோ அதேபோன்று தமிழ்ப் புலவர்களையும், கலைஞர்களையும் ஆதரிப்பதில் தாத்தா மகாராஜாவும் அவரது முந்திய பரம்பரையினரும் முன்னணியில் நின்றார்கள் எனக் கூறுவது சிறிதும் மிகையாகாது.
தமிழை வளர்த்த தெலுங்கர்கள்
பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட வீரபாண்டியக் கட்ட பொம்மனைப் போலவே எட்டையபுரத்தை ஆண்ட மன்னர்களும் கம்பளத்து நாயக்கர் பரம்பரையைச்சேர்ந்தவர்கள். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். இசை, நடனம், நாடகம், சித்திரம், சிற்பம் ஆகிய நுண்கலைகளையெல்லாம் சேர-சோழ பாண்டிய மன்னர்கள் ஆதரித்து வளர்த்தார்கள் என்பதற்குச் சான்றாக விளங்கக் கூடியவர்கள் எட்டையபுர மன்னர்கள்.
கடிகை முத்துப்புலவர், நமச்சிவாயப் புலவர், சீறாப் புராணம் பாடிய உமறுப்புலவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் முதலிய எத்தனையோ தமிழ்ப் புலவர்கள் எட்டையபுரத்தின் ஆதரவில் வளர்ந்தவர்கள். முத்துசாமி தீட்சிதர், சுப்பராம் தீட்சிதர், இராமச்சந்திர பாகவதர், புஷ்பவனம் ஐயர், காஞ்சிபுரம் நாயனாபிள்ளை, கஞ்சிராமான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளை, நாதசுரம் மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை, செம்பொன்னார் கோயில் ராமசாமிப் பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, நடேச நாயனக்காரர், பக்கிரி நாயனக்காரர், காரைக்குடி வீணை சாம்பசிவய்யர் முதலிய மகா வித்வான்களெல்லாம் எட்டையபுரம் மன்னர்களின் ஆதரவைப் பெற்றவர்கள். நாடகத் துறையில் கல்யாணராமையர் முதல் எம்.ஆர்.கோவிந்தசாமிப் பிள்ளை, எஸ்.எஸ்.விசுவநாத தாஸ், சின்னமகாதேவ ஐயர், சின்னசாமி ஐயர், வேலு நாயர், அனந்த நாராயண ஐயர், கிட்டப்பா சகோதரர்கள் முதலிய கலைஞர்களுக் கெல்லாம் எட்டையபுரத்தார் பரிசு வழங்கிப் பாராட்டியிருக்கிறார்கள். கன்னட நாடகப் பெரும் புலவரான குப்பி வீரண்ணாவையும் அவரது குழுவினரையும் கூட மொழிவேற்றுமையின்றிப் பாராட்டிய பெருமை எட்டையபுரத்தார்க்கு உண்டு.
ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்பர்
ஜெகவீரராம வெங்கடேசுர எட்டப்ப மகாராஜா தாத்தா மகாராஜாவின் தமையனார் புதல்வர். இவர் தாம் பாரதியால் பாடப்பெற்றவர். மிகச் சிறந்த கலைஞர்; தமிழிலும் தெலுங்கிலும் புலமை பெற்றவர். இவர் காலத்தில்தான் வல்லிபரதம் முதலிய நாடக நுல்கள் எழுதப் பெற்றன.
குமார எட்டப்பர்
தாத்தா மகாராஜா எனக் குறிப்பிடப் பெற்ற குமார எட்டப்ப மகாராஜா இவருடைய சிறிய தந்தையாவார். தமையனாரின் புதல்வரான வெங்கடேசுர எட்டப்பருக்குச் சந்ததியில்லாததினால் பட்டம் சிறிய தந்தையின் பரம்பரைக்கு வந்தது. தாத்தா மகாராஜாவின் கலையுணர்வைப்பற்றி முன்னரே கூறியிருக்கிறேன். அவரது இளைய புதல்வரான காசி மகாராஜாவைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டியது என் கடமையாகும்.
காசிவிசுவநாத பாண்டியன்.
காசிப் பாண்டியன் எட்டப்பர் பரம்பரையில் தோன்றிய மன்னர்களுக்கெல்லாம் சிகரம்போன்று விளங்கியவர்; எங்கள் நாடக வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவர். இவரைப்பற்றிய செய்திகளும் பிறவும் நாங்கள் நேராக அறிந்தவையென்றே சொல்லவேண்டும். தாத்தா மகாராஜா மிகச் சிறந்த கலையுள்ளம் படைத்தவர் என்றால் காசி மகாராஜாவைத் தகப்பன்சாமி என்று குறிப்பிடலாம். ஆம் தந்தையைப்போல பன்மடங்கு கலையுணர்வு படைத்தவர் காசிப் பாண்டியன்.
காசிராஜாவின் கலைத்திறமை
காசிப்பாண்டியன் ஓவியக் கலையில் கைதேர்ந்த நிபுணர். அவரது மாளிகை முழுவதும் அவர் கையால் எழுதப்பெற்ற அற்புதச் சித்திரங்கள் அழகு செய்தன. அரண்மனைகளிலிருந்து சின்னஞ்சிறு நாடக அரங்குகளிலெல்லாம் உருண்டுயரும் தர்பார், நந்தவனம், காடு, வீதி முதலிய திரைகளை அவரே எழுதினார் என்பதை அறிந்தபோது எங்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது.
விரிந்த உள்ளம் படைத்த அக்கலைஞர் பிற ஓவியக்கலைஞர்களை ஆதரிக்கவும் தயங்கவில்லை. பெரிய பெரிய சித்திரக் கலைஞர்களை யெல்லாம் வரவழைத்து அவர்களைப் படங்கள் எழுதச் சொல்லிப் பரிசுகள் வழங்கிப் பாராட்டுவது அவரது இயல்பாக இருந்தது.
இசைத்துறையிலும் அபாரமான ஞானமுடையவர் அவர். வீணை, ஆர்மோனியம் முதலான இசைக் கருவிகளை அவரே நன்றாக வாசிக்கக் கேட்டிருக்கிறேன்.
போனகிராப்
கிராமபோன் இசைத் தட்டுக்கள் வராத காலம் அது. “போனகிராப்” என்னும் ஒரு கருவியை வைத்து, மெழுகினால் இசைத்தட்டுக்கள் தயாரித்து அதில் கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளையின் வாத்திய இசை, காஞ்சிபுரம் நாயனா பிள்ளையின் வாய்ப்பாட்டு முதலியவற்றை யெல்லாம் பதிவுசெய்து வைத்திருந்தார். அந்தத் தட்டு வட்டவடிவமாக உருண்டையாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். எங்களுக்குப் போட்டுக் காட்டுவதற்காக அதற்குத் தேவையான ஊசி கிடைக்கவில்லை. விலை உயர்ந்த நீலக்கல்லில் அதற்காக ஒரு ஊசியைத் தயாரித்துப் போட்டுக் காட்டினார்.
கலைக்கூடம்
காசி ராஜாவின் மாளிகை ஒரு கலைக்கூடமாகவே காட்சி யளித்தது. எங்கு பார்த்தாலும் சித்திரங்கள்; சிற்பங்கள்; இசைக் கருவிகள், நாள் முழுவதும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.
பெரிய கூடத்தின் முற்ற வெளியில் பல்வேறு வகையான பறவைகள் கூட்டங் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்தன. அவைகள் இயல்பாகப் பறந்து திரிவதற்குரிய வகையில் ஆங்காங்கு செயற்கையான மரங்கள், செடி கொடிகள் அமைக்கப் பட்டிருந்தன. பறவைகள் வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்குவதற்காகக் கூடுகளும் இருந்தன. அவை வெளியே போக இயலாதபடி மேலேயும் முற்ற வெளியைச் சுற்றியும் சிறு கம்பி வலை போட்டிருந்தது. பொதுவாகக் குறிப்பிட வேண்டுமானால் அவரது மாளிகையை ஒரு கண்காட்சிச் சாலையாகவே குறிப்பிடலாம்.
குளிர் பதன வசதிகள்.
பெரிய அரண்மனைக்கு வெளியே தனியே அவர் சில ஆண்டுகள் வசித்துபோது அவருக்காக ஒரு மாளிகை கட்டப் பெற்றது. குளிர்பதனக் கருவிகள் இல்லாத காலமல்லவா? அந்த மாளிகையில் கோடை காலப் பாதுகாப்புக்காக அவர் செய்திருந்த ஏற்பாடுகள் புதுமையாகவும் கலைநுணுக்க முடையனவாகவும் இருந்தன. மேல் கூரையில் தண்ணீர்க் குழாய்களைக் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டிருந்தார். குழாய்களில் சிறுசிறு ஓட்டைகள் இருந்தன. அதன் வழியாக எப்போதும் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். மேலே சாக்குத் துணிகளைப் போட்டு மேல் கூரை எப்போதும் ஈரமாகவேயிருக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தது. மாளிகையின் உட்புறம் ஒவ்வொரு கதவையும் திறந்து வைத்துத் துணியினால் அவற்றிற்குத் திரையிட்டு அத்திரைகள் மேலே உயரவும் கீழே இறங்கவும் வகை செய்திருந்தது. திரையின் அடியில் தகரத்தால் செய்த நீண்ட பெட்டிகள் அரையடி உயரத்தில் இருந்தன. அவற்றில் தண்ணீர் நிரப்பப் பெற்றிருந்தது. திரைகளை அவ்வப்போது கீழே இறக்கி ஈரம் உலர்ந்து விடாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளியே வெப்பமான காற்று வீசினாலும் காற்று ஈரத்திரைகளின் மீது பட்டு குளிர்ச்சியாக உள்ளே வரும் முரையில் கலை நுணுக்கத்தோடு அமைந்திருந்தது. அதே சமயத்தில் தளத்தில் எங்கும் ஈரம் படாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நிழற்படம் நிபுணர்
காசிப் பாண்டியன் நிழற் படங்கள் எடுப்பதிலும் நிபுணராக இருந்தார். அவர் எடுத்த பழைய புகைப் படங்கள் சில இன்னும் எங்களிடம் இருக்கின்றன. ஆசிரியர் எம்.கந்தசாமி முதலியார், எம்.கே.இராதா, கே.கே.பெருமாள், கே.பி.காமாட்சி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சகஸ்ரநாமம் முதலிய பல கலைஞர்களோடு மகாராஜா எடுத்த படங்கள் அவை, அவற்றை யெல்லாம் பார்க்கும்போது எங்களுக்குப் பழைய இனிய நினைவுகள் வருகின்றன.
மொழிப் புலமை
தாய் மொழியாகிய தெலுங்கு, தீந்தமிழ், ஆங்கிலம் மூன்று மொழியிலும் காசிராஜா புலமை பெற்றிருந்தார். கன்னடம், மலையாளம் இரு மொழிகளையும் பேசவும் தெரிந்து கொள்ளவும் திறமை பெற்றிருந்தார்.
‘தயாளன்’ என்னும் நாடகம் அவராலேயே எழுதப் பெற்றது, அச்சிலும் வந்துள்ளது. அவர் 1930-இல் சொந்தமாக ஒரு நாடகக் குழுவை நடத்திய போது தயாளன் நாடகமாக நடிக்கப் பெற்றது. 1937-இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கூட்டுறவோடு தயாளன் திரைப் படமாகவும் எடுக்கப் பெற்றது. பிரபல நடிகர் பி.யூ.சின்னப்பா கதா நாயகனாக நடித்த படம் அது. தயாளன் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற ஒரு சரித்திர நாடகம். அரசரின் மொழிப் புலமையை வெளிப் படுத்தக்கூடிய நாடகமாக அது அமைந்திருந்த்து.
தேவராச ஜெகதீச தியேட்டரிக்கல் கம்பெனி.
நாடகத் துறையில் காசி ராஜாவுக்கு ஏற்பட்ட அளவற்ற ஆர்வத்தினால் அவரே சொந்தமாக ஒரு சிறுவர் நாடகக் குழுவையும் தொடங்கினார். தேவராசர், ஜெகதீசன் என்ற தம் இரு புதல்வர்களின் பேரால் தேவராச ஜெகதீச தியேட்டரிக்கல் கம்பெனி எனக் குழுவுக்குப் பெயர் வைத்தார். டி.பி.சங்கர நாராயணன், பி.எஸ்.வெங்கடாசலம், எஸ்.பி.வீராசாமி, நடிகமணி டி.வி.நாராயணசாமி, எம்.எல்.சி முதலிய நடிகர்களெல்லாம் காசி ராஜாவின் நாடகக் குழுவில் பயிர்சி பெற்ற நடிகர்கள் ஆவர். நமது குழுவில் இருந்த சிறுவர்கள் அத்தனை பேருக்கும் கடுக்கன், கழுத்துச் சங்கிலி, காப்பு ஆகிய அணிகளை அரசரே தம் அன்பளிப்பாகச் செய்து போட்டது அவரது வள்ளல் தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது.
பிரகலாதா, மாருதி விஜயம், கபீர்தாஸ், ராமதாஸ், மனோகரன், வி.சி.கோபால ரத்தினம் எழுதிய ராஜபக்தி, தயாளன் முதலிய பல நாடகங்கள் அக் குழுவில் நடிக்கப் பெற்றன. குழுவினரின் நாடகங்கள் எட்டையபுரம் சுற்று வட்டாரத்திலும் சாத்தூர், மதுரை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி முதலிய நகரங்களிலும் நடைபெற்றன.
தம் குழுவுக்குத் தேவையான காட்சித் திரைகள் யாவற்றையும் காசிராஜா தம் கையாலேயே அழகுறத் தீட்டினார். குப்பி வீரண்ணா அவர்களைப் பின்பற்றிப் புதிய முறைகளிலே பல்வேறு காட்சித் தட்டிகளையும் தயாரித்தார். இதற்காக அந்த நாளில் அவர் செலவு செய்த தொகை ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கு மேலிருக்கலாம்.
ஸ்ரீ ராமச்சந்திர விலாஸ்
தம்முடைய நாடகங்களை நடத்துவதற்காக எட்டையபுரத்தில் வெளியேயுள்ள தமது மாளிகையின் அருகில் புதிதாக ஒரு பெரிய நாடக அரங்கையே அமைத்தார். பெரும் பொருட்செலவில் அமைக்கப் பெற்ற அவ்வரங்குக்கு ஸ்ரீ ராமச்சந்திர விலாஸ் தியேட்டர் என்று பெயர் சூட்டினார். அரங்குக்குத் தம் மாளிகையிலிருந்து வர உட்புற வழி யொன்றும், பொது மக்கள் வர வெளிப்புற வழியொன்றும் அமைத்திருந்தார்.
நாடகக் குழுவை நிறுத்தியபின் இக் கொட்டகையைத் திரைப்பட அரங்காக மாற்றினார். அப்போது தாம் குடும்பத்தினரோடு படம் பார்பதற்கு வசதியாக மேடையின் பின்புறச் சுவரை இடித்துவிட்டு பத்தடி உயரமும் பதினைந்தடி அகலமும் உள்ளதாக திறப்பு அமைக்கச் செய்தார். பொது மக்களுக்குத் தொல்லை கொடுக்காமல் தேவைப்பட்ட போது பின் புறத்தில் திறந்த வெளியில் அமர்ந்தபடியே தம் குடும்பத்தினரோடு படம் பார்த்து மகிழ்வது வழக்கம். நாங்களும் அவரோடு அமர்ந்து இந்த அற்புதத்தை ரசித்திருக்கிறோம்.
கலையார்வத்தின் கொடுமுடி
1925-இல் நாங்கள் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையிலிருந்து விலகினோம். சொந்தமாக ஸ்ரீ பால ஷண்முகானந்த சபையைத் தொடங்கினோம். 1925-இல் சாத்தூரில் எட்டையபுரம் இளையராஜா காசி பாண்டியன் எங்கள் நாடகங்களைக் காண வந்தார். வழக்கம்போல் அடிக்கடி நடிகர்களுக்குப் பரிசுகளும் வழங்கினார்.
ஒரு நாள் அவருடைய கலையார்வத்தின் கொடுமுடியாக-உச்சநிலையாக ஒரு அற்புதம் திகழ்ந்தது. அன்று மனோகரன் நாடகம், திடிரென்று ஒரு காட்சியில் தம் புதல்வர்கள் காதில் போட்டிருந்த வைரக் கடுக்கன்களைக் கழற்றி எனக்கும் சின்னண்ணாவுக்கும் பரிசளித்தார். மற்றொரு காட்சியில் தம் கையிலிருந்த விலையுயர்ந்த இரு வைர மோதிரங்களையும் எங்களுக்கு வழங்கினார். இன்னொரு காட்சி நடந்துக் கொண்டிருந்தபோது தம் மனைவி கழுத்திலிருந்த கெம்பு அட்டிகையைக் கழற்றச் செய்து வசந்த சேனையாக நடித்த சின்னண்ணா கழுத்தில் போட்டார். இவற்றை யெல்லாம்விட அவர் செய்த மற்றொரு செயல்தான் எங்களைப் பிரமிக்க வைத்தது.
வசந்த சேனையாக நடித்த சின்னண்ணா (டி.கே.முத்துசாமி) உடுத்திருந்த புடவை அவருடைய மனத்திற்குத் திருப்தியளிக்கவில்லை. அரசரின் காதற் கிழத்தி வசந்தசேனை இம்மாதிரிப் புடவையா உடுத்துக்கொள்வது என அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். தம் மனைவியின் காதில் ஏதோ சொன்னார். அந்த அம்மையார் வெளியே நின்றிருந்த காருக்குச் சென்று மற்றொரு சாதாரணப் புடவையை உடுத்துக்கொண்டு திரும்பி வந்தார். அவர்கள் முதலில் உடுத்திருந்த விலை உயர்ந்த பட்டுச் சரிகைப் புடவை சின்னண்ணாவுக்குப் பரிசாக வழங்கப் பெற்றது. அடுத்த காட்சியில் அதை உடுத்துக்க்கொண்டு வரும் படியாகக் கட்டளையும் பிறந்தது.
காசி பாண்டியனின் இந்தக் கலையார்வம் எல்லோரையும் பிரம்மிக்க வைத்தது. இனி அப்படியோரு கலை வள்ளல் தோன்றுவாரா என்றே எண்ணி யெண்ணிப் பார்க்கிறோம்.
இரசிகரைக் கவர்ந்த இரத்தினாவளி
1928-இல் இரண்டாவது முறையாக எட்டையபுரம் அரண்மனையில் நடிக்கும் பேறு எங்களுக்குக் கிடைத்தது, 1924-இல் மனோகரா சிறப்புப் பெற்றது. அதே போன்று இம்முறை பம்மல் சம்பந்தனாரின் “இரத்தினாவளி” நாடகம் சிறப்படைந்தது. ஒரேயொரு இரத்தினாவளி நாடகத்திற்காகத்தான் மதுரையிலிருந்து எட்டையபுரம் சென்றோம். ஆனால் எட்டையபுரத்தாரின் ரசனை எங்களை விடவில்லை. தாத்தா மகாராஜா, தங்க மகாராஜா, காசி மகாராஜா ஆகிய ஒவ்வொருவர் அரண்மனையிலும் இரத்தினாவளி சிறப்பாக நடைபெற்றது. அப்போது எம்.கந்தசாமி முதலியார் குழுவில் ஆசிரியராக இருந்தார். அவருக்கு அரசர் ஏராளமான சன்மானங்களைச் செய்தார். தம் சமஸ்தான முத்திரை பொறித்த தங்கப் பதக்கத்தை வழங்கினார். இரத்தினாவளியாக நடித்தவர் செல்வம் என்னும் இளைஞர். அவருக்குத் தாத்தா மகாராஜா இரு கைக் கொலுசுகளைப் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம். எம்.கே.ராதா, எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.கே.பெருமாள், எம்.ஆர்.சாமிநாதன் எல்லோரும் பரிசு பெற்றார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு காசி ராஜா வைரக் கற்கள் பதித்த தம் கைக் கடிகாரத்தையே பரிசாக வழங்கிப் பாராட்டினார்.
வேடமின்றி நடிப்பு
இம்முறை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் “சதியநுசூயா” முதலிய நாடகங்களும் நடைபெற்றன. அதில் வரும் “கர்வி பார்ஸ்” காசி மகாராஜாவுக்கு நிரம்பவும் பிடித்திருந்தது. சதியனுசூயா நடைபெற்ற மறுநாள் அனுபவானந்தனாக நடித்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கர்வியாக நடித்த சின்னண்ணா (டி.கே.முத்துசாமி), ஆத்மானந்தனாக நடித்த எம்.ஆர்.சாமிநாதன் மூவரையும் தமது அரண்மனைக்கு அழைத்துவரச் செய்தார். அவர்களின் சொந்த உடையிலேயே கர்விபார்சை நடிக்கச் சொல்லி ரசித்தார். பெண்ணாக வேடம் புனையாமல் ஒரு ஆண் பிள்ளை கர்வியாக நடித்ததை ரசித்த அந்தக் கலையுள்ளத்தை இப்போதும் எண்ணிப் பார்த்து வியப்படைகிறேன்.
கஷ்ட காலத்தில் கைகொடுத்தது
1931-இல் கும்பகோணத்தில் எங்கள் நாடகக் குழு மிகுந்த கஷ்ட நிலையில் தத்தளித்தது. எங்களை ஈன்றெடுத்த அருமை அன்னையார் காலராவினால் காலமானார். கையில் பொருளின்றி, கடன்கேட்க மனமின்றி, விடுபட வழியுமின்றி வேதனைக் கடலுள் ஆழ்ந்து கிடந்தோம். பல நாடக ரசிகர்களால் எங்களுக்குப் பரிசாக வழங்கப்பெற்ற தங்கப் பதக்கங்களும், நகைகளும் இருந்தன. எட்டையபுரத்தாரின் பரிசுகளும் சிறப்பாக காசிப் பாண்டியன் அளித்த வைரக் கடுக்கன், கெம்பு அட்டிகை, வைர மோதிரங்கள் முதலிய விளையுயர்ந்த பொருட்களும் இருந்தன. நினைவுக்காக இரு மோதிரங்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை யெல்லாம் விற்றுவிட நேர்ந்தது. அவைதாம் நாடகக் குழுவுக்கு உயிர் கொடுத்தன.
பரிவு காட்டிய பெருந்தகை
1935 நவம்பரில் நாங்கள் பங்குகொண்ட “மேனகா” படப் பிடிப்புக்குப் பின் ஏறத்தாழ ஆறு மாத காலம் நாடகக்குழு நடைபெறவில்லை. குழுவைக் கலைத்துவிட்டு நாகர்கோவிலில் தங்கி வேறு தொழிலில் ஈடுபட எங்கள் பெரியண்ணா டி.கே.சங்கரன் முயன்று வந்தார். எங்கள்பால் அன்பு கொண்ட சில பெரியவர்கள் மீண்டும் நாடகக் குழுவைத் தொடங்கும்படி வற்புறுத்தி வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் இருவர். ஒருவர் பெரியார் ஈ.வே.ராமசாமி; மற்றொருவர் இளையராஜா காசி பாண்டியன். அவர் கருணையோடு எங்களுக்கு உதவ முன் வந்தார். தாம் தமது நாடகக் குழுவைக் கலைத்து விட்டதாகவும் அதற்காகத் தயாரித்த காட்சிகளையும், உடைகளையும் தருவதாகவும் தொடர்ந்து நாடகக் குழுவை நடத்தும்படியாகவும் கூறினார். அவருடைய அறிவுரையின்படி அவர் அன்புடன் அளித்த காட்சிகளையும் உடை முதலான சில பொருட்களையும் ஏற்றுக் கொண்டோம். குழு தொடர்ந்து நடைபெற்றது. அந்த நேரத்தில் அவருடைய உதவி காலத்தில் செய்த பேருதவியாக இருந்தது.
மறுபிறவி
1936 மே மாதம் நாடகக் குழு மறுபிறவி எடுத்தது. விருதுநகரில் நடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. இம்முறை நாடகக் குழுவை நன்கு நடத்த வேண்டுமென்ற திட்டத்துடன் “பாலாமணி” படத்தில் நடிக்க முடிவு செய்தோம். எட்டையபுரம் காசிப் பாண்டியன் இதற்கு உதவினார். காட்சிகள் தயாரிப்பதற்கு வசதியாக நாடகக் குழுவை எட்டையபுரம் கொண்டு சென்றோம். இளையராஜாவின் சொந்தக் கொட்டகையாகிய இராமச்சந்திர விலாசில் சாமான்களைப் போட்டோம். மேற்கொண்டு புதிய காட்சிகளைத் தயாரிக்கவும் ஏற்பாடு.