நாட்குறிப்பு வரலாற்றின் தந்தை ஆனந்தரங்கம் பிள்ளை

70 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 29, 2024, 4:31:15 PM3/29/24
to மின்தமிழ்
தமிழிலக்கிய வரலாறில் ஆனந்தரங்கம் பிள்ளைத் தமிழ், ஆனந்தரங்கக் கோவை, ஆனந்தரங்கன் தனிப்பாடல் என்ற ஆனந்தரங்க வரிசைகளை அறியாதவர் வெகுகுறைவே எனலாம். ஆனந்தரங்கன் யார், என்ற கேள்விக்கு விடை எதுவென்றால்  நாட்குறிப்பு எழுதப்படும் ஒரு டைரிதான் பதிலாக இருக்கிறது.

ஆம். 18-ம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு காலத்திய ஆளுமை நிலவரம், சமூக மாற்றம், போர்த்தந்திரம், வணிகம், அரசியல் சூட்சுமம், மக்கள் கலாச்சாரம், அரசு தண்டனைகள், சட்ட நுணுக்கங்கள், தொழில் முறைகள் இன்னும் என்னென்ன அந்தக் காலக்கட்டத்தில் நடைமுறையில் வெளிப்படையாக இருந்தனவோ, அதையும், மறைபொருளாக இருந்தவையையும் அடுத்த நூற்றாண்டுக்கான ஆராய்ச்சிப் பொக்கிஷமாக தன்னுடைய 25 ஆண்டுகால இடைவிடாத டைரி குறிப்பால் நாட்டுக்கு அளித்த பெருந்தகைதான் ஆனந்தரங்கம் பிள்ளை.

மார்ச், 30, 1709-ல் சென்னை பெரம்பூரில் பிறப்பு. ஜனவரி 16, 1761-ல் புதுவையில் இறப்பு. இதுதான் ஆனந்தரங்கம் பிள்ளையின் வாழ்நாள் காலம். ஆனால், மூன்று நூற்றாண்டுகள் கழிந்தும் அவர் புகழ் நம் மண்ணை விட்டு போகாமல் இருக்க காரணமாக அமைந்தது, அவருடைய தன்னலமற்ற குறிப்பெழுதி வைக்கும் பணியே...

துய்ப்ளெக்ஸ் எனும் பிரெஞ்சு ஆளுநரின் மொழி பெயர்ப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கிய ஆனந்தரங்கம் பிள்ளை அந்தக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் உள்பட ஏராளமான பதிவுகளை நமக்கு அவருடைய டைரி மூலமாக வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார்.

உலகளவில் 'நாட்குறிப்பின் தந்தை' என்று போற்றப்படுகிறவர் சாமுவேல் பெப்பீஸ். அதை நினைவூட்டும் விதமாக, 'இந்தியாவின் பெப்பீஸ்' என்று அழைக்கப்படுகிறார் ஆனந்தரங்கம் பிள்ளை. 1736 முதல் 1761 வரை 25 ஆண்டு காலங்கள் இடைவிடாது தொடர்ந்தது இவருடைய குறிப்பெழுதும் பணி.

ஆனந்தரங்கம் பிள்ளை அன்றைய மெட்றாஸ் பட்டணத்திலிருந்து புதுவைக்கு சென்று அரசுப் பணியில் உதவியாளராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் படிப்படியாக உயர்ந்து அந்த நாட்டின் திவான்  ஆக பதவி உயர்வையும் எட்டினார். அதன் பின்னரும் விடாது டைரி எழுதும் பணியை முழுமைப்படுத்தினார். அங்கே இருந்தபடியே ஆனந்தப் புரவி எனும் பேரில் சொந்தமாக பாய்மரக் கப்பல் மூலம் வணிகத்தையும் தொடர்ந்திருக்கிறார். அன்றாட நிகழ்வுகளோடு தான் கேள்விப்பட்ட சம்பவங்களையும் சரிதானா, என்று உறுதி செய்து கொண்டு அவற்றையும் தன்னுடைய டைரியில் ஆவணப் படுத்தியிருக்கிறார்.

1749-ல் முசபர்சஸ் என்ற இந்திய மன்னர், ஆனந்தரங்கன் பிள்ளைக்கு 'மன்சுபேதார்' என்ற கவுரவ பட்டம் அளித்து அவரை செங்கல்பட்டு கோட்டைக்கு தளபதியாக்கினார். தளபதி ஆனபின், அவருக்கென 3 ஆயிரம் குதிரைகளையும் வழங்கினார். ஆளுநர் மாளிகைக்குள் எளிதில் யாரும் நுழைய முடியாத காலக்கட்டத்தில் ஆனந்தரங்கம் பிள்ளைக்கு என்று ஆளுநர் தனி அங்கீகாரம் கொடுத்திருந்தார். அதன்படி ஆளுநர் மாளிகைக்குள் செருப்பணிந்தபடி, பல்லக்கில் உள்ளே சென்று வர ஆனந்தரங்கத்துக்கு ஆளுநர் அனுமதி கொடுத்திருந்தார். மேலும், பொதுமக்கள் தொடர்பான வழக்கு விவகாரங்களை விசாரித்து தீர்ப்பளிக்கும் அதிகாரமும் அதில் ஒன்று.

ஆனந்தரங்கம் மறைவுக்குப் பின்னர் அவருடைய நாட்குறிப்புகள் 85 ஆண்டுகள் கழித்தே நாட்டுக்கு கிடைத்தது. கவிஞர் அரிமதி தென்னகன் உள்ளிட்ட பலர் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை போற்றும் விதமாக பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் படைத்துள்ளனர். புதுவை அரசு, அவருடைய ஆற்றலை போற்றும் விதமாக, குறைந்த விலைக்கு அவருடைய நாட்குறிப்பை அரசு வெளியீடாக கொண்டு வந்திருக்கிறது. பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் வானம் வசப்படும் (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) நூலானது, ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பைக் குறித்ததுதான்.

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டாலே, தெரிந்தவர்களிடம் டைரி கேட்டு வாங்கிக் கொள்ளும் பழக்கமுள்ள எத்தனை பேருக்கு அதை அன்றாடம் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.

டைரியில் அன்றாடம் எழுதும் பழக்கம் இருப்பது நல்ல விஷயம். ஆனந்தரங்கம் பிள்ளை போல நம்முடைய குறிப்பானது அடுத்த தலைமுறைக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணம் அப்போது  நமக்குள் தானாக வந்து விடும், சுயநலம் ஒழியும்... பரந்த மனப்பான்மை வளரும்...

பார்க்க: 
https://www.vikatan.com/literature/arts/57713-diary-of-the-father-anantarankam-memorial-day
டைரி வரலாற்றின் தந்தை ஆனந்தரங்கம் நினைவு தின சிறப்புக் கட்டுரை!
ந.பா.சேதுராமன்
ஜனவரி 15,  2016
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புதுச்சேரி வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பெறுபவர் ஆனந்தரங்கம் பிள்ளை. இவர் பிறந்த தினம் மார்ச் 30, 1709. பல திறமைகள் பெற்ற இவர், தன் காலத்திய வரலாற்றைப் பதிவு செய்து வைத்துப் போனவர். அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் உண்டு.

பாலமாய்த் திகழ்ந்தால் பல விதங்களில் பயன் உண்டு:
இந்திய மன்னர்கள் மற்றும் பிரெஞ்சு மேலதிகாரிகள் ஆகியோருக்கிடையே தனது மொழிப் புலமையால் ஒரு பாலமாக விளங்கினார். இதன் காரணமாக செங்கல்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். முசாபர்சங் என்ற மன்னர் இவருக்கு ஆயிரக்கணக்கில் குதிரைகளை வழங்கினாராம்.

சிறப்பான குறிப்பேடுகள் வரலாறுப் பக்கங்களில் மதிப்பை கூட்டும்:
தினசரி நாட்டு நடப்புகளை எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர் ஆனந்தரங்கம் பிள்ளை. ஒன்றிரண்டல்ல, சுமார் 25 ஆண்டுகளுக்கு இப்படி எழுதி இருக்கிறார். இதன் காரணமாக அந்தக் காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக மாற்றங்களை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நூல்கள் எழுதுவதால் மட்டுமல்ல நாட்குறிப்புகள் எழுதுவதாலும் வரலாறு செழுமை அடையும் என்பதை நிரூபித்தவர் இவர்.

எளிமை பெருமை:
அரசுப் பணியில் திவானாகப் பணி புரிந்தவர் இவரது தந்தை. சொந்தமாக ஒரு கப்பல் கூட வைத்திருந்தார் ஆனந்த ரங்கம் பிள்ளை. இவரது வாழ்க்கைமுறையை எளிமையானது என்று கூறிவிட முடியாது. ஆனால் இவரது எழுத்துக்கள் மிக எளிமையானவை. பொதுவாக பல மொழி அறிந்தவர்கள் தங்கள் மேதமையை காட்டும் விதத்தில் இலக்கிய பூர்வமாக கொஞ்சம் கரடுமுரடாக எழுதுவதுண்டு. இதில் விதிவிலக்காக இருப்பதால் ஆனந்தரங்கப் பிள்ளையின் எழுத்துக்கள் மேலும் மதிக்கப்படுகின்றன.

பன்மொழி அறிவு பல விதங்களில் பலன் தரும்:
பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலி என்பவர் இறந்தபோது அவரது இடத்தை நிரப்ப பன்மொழியறிவு கொண்ட ஒருவர் தேவைப்பட்டார். அந்தத் தகுதிகள் பெற்ற ஆனந்தரங்கம் 1747-ல் அப்பணியில் அமர்த்தப்பட்டார். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் ஆனந்தரங்கப் பிள்ளை. ​இதன் காரணமாக இவருக்கு அரசியல் செல்வாக்கு மிக அதிகமாக இருந்தது.

புதிய முயற்சிகள் இறவாப் புகழ் சேர்க்கும்:
ஆனந்தரங்கம் பிள்ளை வாழ்ந்த காலத்தில் நாட் குறிப்புகளைக் கொண்டு வாழ்க்கை மற்றும் நாட்டு நிகழ்வுகளைச் சொல்லும் பழக்கம் இல்லை. அந்த விதத்தில் இவரது நாட்குறிப்பை ஒருவகை புதுவகை தமிழ் இலக்கியம் என்றே கூறலாம். எனவே வரலாறு மட்டுமின்றி தமிழ் இலக்கிய உலகின் கவனத்தையும் ஈர்த்தார். இவரது நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் பிரபஞ்சனின் பிரபல புதினமான ‘வானம் வசப்படும்’ எழுதப்பட்டது.

பார்க்க: 
https://www.vikatan.com/literature/arts/life-lessons-we-need-to-learn-from-ananda-ranga-pillais-history
"பன்மொழி அறிவு பல விதங்களில் பலன் தரும்"- ஆனந்த ரங்கம் பிள்ளை வாழ்க்கை தரும் பாடங்கள்!
ஜி.எஸ்.எஸ்.
மார்ச் 30,  2022

தேமொழி

unread,
Mar 29, 2024, 5:44:49 PM3/29/24
to மின்தமிழ்
anantharangam.jpeg
18-ம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன் பிள்ளையின் நாட்குறிப்புகள் (06.09.1736 முதல் 12.01.1761 வரை )
பனிரெண்டு நூல்கள்

நம் நாட்டில் படிப்பறிவுள்ளவர்களில் பலர் “வரலாறு” என்பதை சரிவர புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கின்றனர். மக்களை ஏமாற்றும் வஞ்சகர்கள் இந்த இருள்பகுதியை செம்மையாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் நாட்டு மக்கள் ஏமாளிகளாக ஆகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட செய்திகளை மக்கள் எவ்விதம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விவாதம் நம்மிடையே உருவாக வேண்டும். இதற்கு துணை செய்யும் விதத்திலான பல நூல்கள் தமிழில் உள்ளன. இவற்றை படிக்கும் கல்வியாளர்கள் இச்செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழக வரலாற்றை அறிந்து கொள்வதற்கு கி.மு.500 தொடக்கம் பதிவாகியுள்ள பிராமி எழுத்துக்களில் தொடங்கி சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், வெளிநாட்டு அறிஞர்களின் பயணக் குறிப்புகள் போன்றவற்றைத் தொடர்ந்து கல்வெட்டுக்கள் செப்புப் பட்டையங்கள் பிற்காலங்களில் தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பிய பாதிரிமார்கள் பயணிகளின் குறிப்புகள் போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன.

ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் எழுதப்பட்ட “புளுடார்க்” போன்ற வரலாற்றுக் குறிப்புகள் நம்மிடையே இல்லை. அதே நேரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன்பிள்ளையின் தினசரி நாட்குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. ரங்கப்ப திருவேங்கடம்பிள்ளை (1760-1766), இரண்டாம் வீராநாயக்கர் நாட்குறிப்பு (1778 -1792 ) போன்றவர்களின் நாட்குறிப்புகளும் நமக்கு கிடைத்துள்ளன. இதில் ஆனந்தரங்கன்பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக வைத்து “வானம் வசப்படும்” என்ற மிக அருமையான நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

பழங்காலத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் எந்தெந்த வகையான பிரச்சனைகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் பெற்றார்கள் என்பதை இந்த நாட்குறிப்புகள் நமக்கு திரைப்படக் காட்சிகளைப் போன்று காட்டுகின்றன. நமக்கு தமிழ்நாட்டு அறிவை சிறப்பாகக் கொடுக்கும் இந்த நாட்குறிப்பை நீங்கள் எல்லாம் பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அதற்கான இணையதள இணைப்பை இவ்விடம் கொடுத்துள்ளேன். 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பேச்சுவழக்குத் தமிழ் உரைநடையாக இருப்பதால் படிப்பதற்கு கொஞ்சம் பொறுமையுடன் முயன்று படிக்க வேண்டும்.

குறிப்பு : இந்தத் தொகுதிகளில் பதினொன்று மட்டும் கிடைக்கவில்லை. கையில் இதன் PDF வைத்திருக்கும் நண்பர்கள் இணைப்பைக் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

ஆனந்தரங்கப் பிள்ளை நாட் குறிப்பு: 1-12
(பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்க)
https://www.tamildigitallibrary.in/tva-search?tag=ஆனந்தரங்கப்+பிள்ளை+நாட்குறிப்பு

பார்க்க:  
https://www.vinavu.com/2019/08/07/anandharangam-pillai-history-free-download/
தமிழ் மக்கள் வரலாறு – ஆனந்தரங்கன் நாட்குறிப்புகள்
பதினெட்டாம் நூற்றாண்டில் புதுவையில் வாழ்ந்த ஆனந்தரங்கன்பிள்ளையின் தினசரி நாட்குறிப்புகள் அக்கால மக்களுடைய வாழ்வை பதிவு செய்துள்ளது. அதனை அறிவோம் வாருங்கள்.
பொ. வேல்சாமி
ஆகஸ்ட் 7, 2019
Reply all
Reply to author
Forward
0 new messages