என்ற புராணப்பாடல் ஒன்று உள்ளது. இதன் மூலம் இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோயில் அருகில் யாராவது இறந்து விட்டால், பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப் படும். ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை. எமதர்மனே இங்கு �க்ஷத்திர பாலகராக இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. மேலும் கோயில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது. பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்தபடியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர வேண்டிக்கொள்கிறார்கள்.ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி தேடிக்கொள்ளலாம். இதற்கு "ஆத்ம தர்ப்பணம்' எனப்பெயர். மேலும் இத்தலத்து தீர்த்தத்தை பருகினால் மரண அவஸ்தைப்படுகிறவர் களுக்கு சிரமம் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர் களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் (சிவாயநம) கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.
சண்ட ராகு
மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமிர்தம் வழங்கிய போது, அதை ஸ்வர்பானு என்ற அசுரன் ஒருவன் தேவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டான். இதனால் கோபமடைந்த மகாவிஷ்ணு தன் கையில் இருந்த அகப்பையால் (சட்டுவம்) அவனை வெட்டினார். இருந்தாலும் அமுதம் பருகிய அவர்களது உயிர் பிரியவில்லை. விஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்ட அவர்கள் நவக்கிரக மண்டலத்தில் ராகு, கேது என்னும் பெயரில் இடம் பெற்றனர். இந்த கிரகங் களுக்கு தனித்தனி வடிவம் தரப்பட்டது. இத்தலத்தில் இருவரையும் ஒரே வடிவமாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பை "சண்ட ராகு' என்பர். இவருக்கு தனி சன்னதி உள்ளது.
தல வரலாறு
எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார். திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார். அதற்கு எமனும், ""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,''என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் �க்ஷத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.
குப்த கங்கை
ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,''என வேண்டினாள். அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,''என்றார். அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப் படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை ஞாயிறு
தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப் பெறலாம்.
இரண்டாம் நாளே தீர்த்தவாரி
எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப் படும். அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சி நாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.
இன்று சந்திர கிரகணம்
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும். கிரகணத்தை ஒட்டி இந்தக் கோயிலை சிறப்பு தரிசனம் செய்வோம்.
ஸ்ரீ வாஞ்சியம் கோயில் புராணம் தல மஹிமை
|
தீராத நோய்களையும் தீர்க்க திருவுளங்கொண்ட இறைவன் மந்திரமும்,
தந்திரமும், மருந்துமாகி ஸ்ரீ வைத்தியநாதர் என்னும் திருப்பெயர் தாங்கி,
வைத்தியநாதனாக எழுந்தருளிய திருத்தலம் வைத்தீஸ்வரன் கோயில்.
இடம் - தலப்பெயர்கள்:
புள்ளிருக்குவேளூர், சடாயுபுரி, வேதபுரி, கந்தபுரி, பரிதிபுரி,
அங்காரகபுரம், அம்பிகாபுரம் எனப் பல்வேறு பெயர்களைக் கொண்ட வைத்தீஸ்வரன்
கோயில் நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ளது.
இறைவன் - இறைவி திருநாமங்கள்:
இத்தலத்து இறைவன், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி என்னும் திருப்பெயருடனும்,
இறைவி ஸ்ரீ தையல்நாயகி என்னும் திருப்பெயருடன் அருள்பாலிக்கின்றனர்.
சிவ துரோகம் செய்த தட்சனின் உடலும், தலையும் ஒன்று சேர அருளியது, அங்கார
பகவானை பீடித்திருந்த சரும நோய் நீக்கியது உள்ளிட்ட ஏராளமான அருள்புகழ்
கொண்டது இத்திருத்தலம்.
இத் திருத்தலத்தில் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ
செல்வமுத்துக்குமார சுவாமி, ""எவ்வாறு துதிப்பேன்'' என மயங்கிய
குமரகுருபர அடிகளுக்குப் ""பொன்பூத்தகுடுமி'' என அடியெடுத்துக்
கொடுத்துப் பிள்ளைத்தமிழ் பாட அருளினார் எனத் தல வரலாற்றில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
வழிபட்டவர்கள்:
சடாயு, வேதம் (ரிக்), முருகப்பெருமான், சூரியன், அங்காரகன், பிரம்மன்,
சதானந்தர், ராமர், கலைமகள், பூமகள், துர்க்கை, சிவசன்மன், துருவாசன்
முதலானோர் வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம்.
திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள், காளமேகப்
புலவர், ராமலிங்க சுவாமி ஆகியோர் இத்தலத்து இறைவனைத் தரிசித்துப்
பாடல்கள் பாடியுள்ளனர்.
திருநாவுக்கரசர் இத் திருத்தலத்துக்கு எழுந்தருளிய வரலாற்றுக்
குறிப்புகள் இல்லாவிட்டாலும், தேவாரத்தில் ஐந்தாம் திருமுறையில்
திருக்குறுந்தொகை "அடங்கல் முறையில்' திருநாவுக்கரசரால் இத்தலத்தின்
சிறப்புகள் பாடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சடாயு குண்டம்:
சடாயுவின் வேண்டுகோள்படி ராமபிரான் இத் திருத்தலத்தில் (விபூதி
குண்டத்தில்) சிதையடுக்கிச் சடாயுவின் உடலைத் தகனம் செய்த இடம்,
இக்கோயிலில் "சடாயு குண்டம்' என்ற பெயருடன் உள்ளது.
சித்தாமிர்த தீர்த்தம்:
பிறந்தாலும், இறந்தாலும் போக மோட்சங்கள் அருளும் தலமாகப் போற்றப்படும்
இத்தலத்தில் 6 தீர்த்தங்கள் உள்ளன. அதில், முதன்மையானது சித்தாமிர்தத்
தீர்த்தம்.
சதானந்த முனிவரின் சாபம் காரணமாக, இத் தீர்த்தத்தில் தவளை, பாம்புகள்
இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
சித்தாமிர்த தீர்த்தம் தவிர, கோதண்ட தீர்த்தம், கெüதம தீர்த்தம், வில்வ
தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அங்கசந்தான தீர்த்தம் ஆகியனவும் இத்
தலத்தில் உள்ளன. மேலும், ஆதி வைத்தியநாதர் கோயில் அருகே உள்ள "வேம்பு'
தலவிருட்சமாக உள்ளது.
பூஜைகள்:
இத்திருக்கோயிலில், தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும்
கார்த்திகைத் திருநாள், கந்த சஷ்டி போன்ற விசேஷ நாள்களில் மட்டுமே
ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும்.
அர்த்தஜாம பூஜையின்போது ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம்
நடைபெற்ற பின்னரே, சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். இதற்கு "புழுகாப்பு'
எனப் பெயர் வழங்கி வருகிறது. மேலும், இத்தலத்தில் புழுகாப்பு தரிசனம்
மிகவும் சிறப்புமிக்கதாகக் கூறப்படுகிறது.
செவ்வாய் மற்றும் கிருத்திகை தினங்களிலும், உற்சவ காலங்களிலும்
முருகப்பெருமானுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. கிருத்திகை
தினங்களில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு நவரத்ன கவசமும்
அணிவிக்கப்படுகிறது.
பிற நாள்களில் சுவாமிகளுக்குத் தங்கக் கவசம் அணிவித்துத் தரிசிக்க
விரும்புவோர், முன்னதாகவே அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும்.
அங்காரகத் தலம்:
நவக்கிரகங்களில் ஒருவரான (செவ்வாய்) அங்காரகனைப் பீடித்திருந்த சரும
நோயை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி தீர்த்தருளியதால் இத்தலம் அங்காரகத் தலமாகப்
போற்றப்படுகிறது. செவ்வாய்க்கிழமைதோறும் ஆட்டுக்கிடா வாகனத்தில்
அங்காரகன் பிரகார உலா நடைபெறுகிறது.
திருக்கயிலாயப் பரம்பரைத் தருமபுர ஆதீனத்தின் பரிபாலனத்துக்கு உட்பட்டது
இத்திருக்கோயில்.
வழித்தடம்:
சென்னையிலிருந்து தல யாத்திரை வருபவர்கள், கடலூர் - சிதம்பரம் -
சீர்காழி வழியாக வைத்தீஸ்வரன் கோயிலை அடையலாம். திருச்சியிலிருந்து
வருவோர், தஞ்சாவூர் - கும்பகோணம் - மயிலாடுதுறை வழியாக வைத்தீஸ்வரன்
கோயிலை வந்தடையலாம். இந்த இரண்டு வழித் தடங்களிலும் தொடர்ந்து பேருந்து
போக்குவரத்துகள் உள்ளன. (தற்போது ரயில் போக்குவரத்து
நிறுத்தப்பட்டுள்ளது).
இத்திருத்தலத்தைச் சுற்றி, சத்திரங்கள், மடங்கள், கட்டளை விடுதிகள் பல
உள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய தனியார் விடுதிகளும் உள்ளன.
நாடி ஜோதிடமும் பிரபல்யம். ஆனால் ஒன்றும் சரியாக இருப்பதில்லை. நான் பல
பேரை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறேன். இந்த நாடி வணிக ஸ்தலமாக இந்த
திருத்தலத்தை மாற்றி உள்ளது.
Thanks Dinamani Aanmikam