நற்றமிழ் – 10 24.11.2009
11. வினைமுற்று
தொழில்/கருத்து/பொருள் முற்றுப் பெற்றிருப்பது. மொழிக்கு முக்கியமான
உறுப்பு.
குறைந்து நில்லாமல் பொருள் முடிந்து நிற்கும். பெயரை மட்டுமே ஏற்கும்.
வேற்றுமையை ஏற்காது.
வினைமுற்று, பொதுவாக 1. செய்பவன், 2. கருவி, 3. நிலம், 4. செயல்,
5. காலம், 6. செய்பொருள் – இவ்வாறினையும் தரும்.
தைத்தான் - வினைமுற்று
இவ்வினைமுற்றில் மேலே கூறிய ஆறும் உள்ளன.
(எ – டு) 1. செய்பவன் - தையல்காரர்
2. கருவி - தையற்பொறி
3. நிலம் - அறை/கூடம்
4. செயல் - தைத்தல்
5. காலம் - இறந்தகாலம்
6. செய்பொருள் - சட்டை
வினைமுற்று இருவகைப்படும்:
1. தெரி நிலை வினைமுற்று
2. குறிப்பு வினைமுற்று
1. தெரிநிலை வினைமுற்றில், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
ஆகியவற்றில் ஏதாவது ஒன்று தெளிவாய்த் தெரியும்.
(எ –டு ) 1. தைத்தான் 2. தைக்கிறான் 3. தைப்பான்
இவை படர்க்கை வினைமுற்றுகள் ‘தைத்தேன்’ ‘தைத்தாய்’ எனத் தன்மை, முன்னிலை வினைமுற்றுகளுக்கும் முறையே இவ்வாறே வரும்.
2. குறிப்பு வினைமுற்றில் காலம் குறிப்பாகவே காணப்படும்.
(எ – டு) அவன் சிறியன்
அது பெரிது
இது நல்லது
இவற்றில் முக்காலங்களில் ஏதும் தெளிவாய் இல்லை; குறிப்பாகவே உள்ளது அல்லவா? காலம் குறிப்பாகக் காணப்படுவதால், இது குறிப்பு வினைமுற்று எனப்படுகிறது. எப்படி?
‘நேற்றுச் சிறியன்’ இறந்தகாலம்
‘இன்று சிறியன்’ நிகழ்காலம்
‘நாளைச் சிறியன்’ எதிர்காலம்
இவ்வாறே பிறவும்.
வேறு, இல்லை, உண்டு என்பனவும் குறிப்பு வினைமுற்றுகளே. இவற்றில் காலம் குறிப்பாகவே உள்ளது. இவை ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாகவே வரும்.
(எ – டு) அவன் (ஆண்பால்)
அவள் ( பெண்பால்)
அவர்கள் (பலர்பால்) வேறு இல்லை உண்டு
அது (ஒன்றன்பால்)
அவை (பலவின் பால்)
வியங்கோள் வினைமுற்று:
இது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால். பலவின் பால் ஆகிய ஐந்து பால்களுக்கும் பொதுவாய் வரும். மரியாதைக்கட்டளை, வாழ்த்து, சாபம், வேண்டிக் கொள்ளல் ஆகிய பொருள்களில் வரும்.
இதன் விகுதி அ, க, அல், இய, இயர், இ, உம், முதலியன:
(எ –டு) வாழிய - அ
வாழ்க - க
விடல் - அல்
வாழிய - இய
வாழியர் - இயர்
வாழி - இ
வரவும்/வேண்டும் - உம்
எச்சம்
எச்சம் என்றால் குறைவானது, முழுமை/நிறைவு பெறாதது என்பது பொருள்.
எச்சம் இருவகைப்படும்
1. வினையெச்சம்
2. பெயரெச்சம்
12. வினையெச்சம்
இவற்றில் நிலைமொழி முற்றுப்பெறாத வினைச்சொல்லாய் இருக்கும்.
அடுத்துவரும் (வருமொழி) வினைமுற்றைச் சார்ந்து பொருள்
முற்றுப்பெறவருவது வினையெச்சம்.
(எ – டு) ஆடிக் காட்டினான் ‘ஆடி’ என்பது வினைச்சொல். ஆனால், முற்றுப் பெறவில்லை. குறைந்து நிற்கிறது; ‘காட்டினான்’ என்ற வினை முற்றுச் சொல்லைச் சார்ந்துதான் முற்றுப் பெறுகிறது. எனவே, இது (ஆடி) வினையெச்சம்.
ஆடிக்காட்டினான் (இறந்தகால வினையெச்சம்)
ஓடப் பார்க்கிறன் (நிகழ்கால வினையெச்சம்)
செய்யின் மகிழ்வேன் (எதிர்கால வினையெச்சம்)
வினையெச்சம் இருவகைப்படும்
வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்று இருவகையாக உள்ளன. அவ்வாறே வினையெச்சமும்
1. தெரிநிலை வினையெச்சம்
2. குறிப்பு வினையெச்சம்.
என இருவகைப்படும்.
(எ –டு ) செய்து பார்த்தேன். இது தெரிநிலை வினையெச்சம். காலம் தெரிகிறது. (இறந்தகாலம்)
மெல்ல நடந்தாள். இது குறிப்பு வினையெச்சம். காலம் குறிப்பாய் உள்ளது.
13. பெயரெச்சம்
நிலைமொழி முற்றுப்பெறாத வினைச் சொல்லாய் இருக்கும். அடுத்து வரும் பெயர்ச்சொல்லைச் சார்ந்து பொருள் முற்றுப்பெற வருவது பெயரெச்சம்.
(எ –டு) ஓடிய குதிரை. ‘ஓடிய’ என்பது முற்றுப் பெறாத வினைச்சொல்; ‘குதிரை’ என்ற பெயர்ச் சொல்லைச் சார்ந்துதான் பொருள் முற்றுப் பெறுகிறது; அதனால் ‘ஓடிய’ என்பது இறந்தகாலப் பெயரெச்சம்.
பாடுகின்ற பாட்டு (நிகழ்காலப் பெயரெச்சம்)
பிறக்கும் பிள்ளை (எதிர்காலப் பெயரெச்சம்)
பெயரெச்சமும், தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும்.
(எ – டு) வந்த செல்வம் (தெரிநிலைப் பெயரெச்சம்)
இதில் ‘வந்த’ என்ற சொல் முற்றுப் பெறாத, வினைச்சொல்; காலம் தெளிவாய்த் தெரிகிறது (இறந்தகாலம்) ‘செல்வம்’ என்ற பெயர்ச் சொல்லைச் சார்ந்து தான் முற்றுப் பெறுகிறது. ஆகவே, இது தெரிநிலைப் பெயரெச்சமாகும்.
இல்லாத பொருள் (குறிப்புப் பெயரெச்சம்)
இதில் ‘இல்லாத’ என்ற சொல் முற்றுப்பெறாத வினைச்சொல். காலம் தெளிவாய்த் தெரியாமல் குறிப்பாகவே உள்ளது. ‘பொருள்’ என்ற பெயர்ச் சொல்லைச் சார்ந்துதான் முற்றுப்பெறுகிறது. எனவே இது குறிப்புப் பெயரெச்சமாகும்.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் :
பெயரெச்சச் சொல்லின் இறுதி எழுத்து மறைந்து விடும். எதிர்மறைப் பொருளில் வரும்.
(எ – டு ) நில்லா உயிர் – கேளாச் செவி. ‘நில்லாத’ என்ற சொல்லின் இறுதி எழுத்தாகிய ‘த’ மறைந்துவிட்டது. அவ்வாறே ‘கேளாத’ என்ற சொல்லின் இறுதி எழுத்தாகிய ‘த’ மறைந்துவிட்டது. இவை எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றன. எனவே, இவை இரண்டும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாம்.
(……..பேராசிரியர் முனைவர் தி. முத்து - கண்ணப்பன், அவர்களின் “தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்……)
நற்றமிழ் – 11 நாளை (25.11.2009) வரும்…. 14. “புணர்ச்சி” எனும் தலைப்பில்….