ஏஐ எஜமானரா? வேலையாளா? - செயற்கை நுண்ணறிவு
- ஆயிஷா நடராஜன்
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
நவம்பர் 22, 2025
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் அண்மையில் சிற்பி 90 கருத்தரங்கம் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வியாளர் ஆயிஷா நடராஜன் பேசியதன் சுருக்கம்..
‘இந்த நூற்றாண்டில் புரட்சி என்பது வீதிகளின் வழியே வரப்போவ தில்லை; ஆனால், அது செயற்கை நுண்ணறிவு வழங்கும் அல்காரிதம் வழியாக வரும்’ என்பார் பிரிட்டன் நாட்டின் இடதுசாரி எழுத்தாளர் மார்க் பிஷர். ‘ஒரு தேர்தலை நினைத்துப் பாருங்கள்! அங்கே ஒரு வாக்காளர்கள் வெறும் எண்கள்; வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்பவர்கள் ஏஐ அல்காரிதம். இதுதான் இன்றைய தேர்தல்’ என்பார் எரிக் பாம்ஸ். ‘இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலக வரைபடம் என்பது, நீங்கள் எவ்வளவு இணையம் என்கிற உலகத்திற்குள் ஆக்கிரமித்திருக்கிறீர்கள் என்பதை வைத்துதான் உன்னுடைய எல்லை நிர்ணயிக்கப்படும்’ என்பார் -நோம் சாம்ஸ்கி.
175 புத்தகங்கள் நான் இதுவரை எழுதியிருக்கிறேன். 175 ஆவது புத்தகமான ‘ரோபோட் யுத்தம்’ என்ற நூலை சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சி யில் வெளியிட்டோம். அப்போது, அங்கிருந்த மாணவர்களிடையே, உலகை மாற்றிய 10 பேர்களின் பெயர்களை கேட்டேன். மொத்தம் 120 மாணவர்களின் பதில்கள் கிடைத்தன. ஆனால், ஒரு காகிதத்தில் 10 நபர்களின் பெயர்கள் விடைகளாக கிடைத்தன. அதை கொடுத்த மாணவியின் பெயர் தேன்மொழி. அவர் தமிழ்நாட்டிலிருந்துதான் அங்கு போயிருக்கலாம் அல்லது அங்க போன தமிழருக்கு பிறந்தி ருக்கலாம். அவரின் பதில்கள் ‘லீ, பிரின், ஜிம்மி, கிரிஸ், பிசாஸ், ஷெப்பர்ட், பிராங்க், கவூம், சபீர், ஆலன். இதுகுறித்து தேடியபோது, கடைசியில் ஏஐ தான் வெற்றி பெற்றது. இந்த 10 பெயர்களையும் ‘சாட் ஜிபிடி (chat GPT)-யிடம் கொடுத்தேன். அதன் விபரங்கள் கிடைக்கப் பெற்றன. அறிவியல் என்பது வளர்ந்து கொண்டே இருப்பதுதான்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? மனிதனைப் போலவே சிந்திக்கும் நுண்ணறிவு தேவைப்படும் பணிகளை செய்யக்கூடிய இயந்திரங்கள் கருவிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் கணினி அறிவியல் துறை.
செயற்கை நுண்ணறிவு என்பதற்கும், முன்பு குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? WWW முதல் Email வரைக்கும் எல்லா வற்றிற்கும் புரோகிராமிங் (Programming) வேண்டும். இன்றைக்கு அதையே நாம் Machine Learning மூலம் Automation ஆக்கிக் கொண்டிருக்கிறோம். மனிதர்களைப் போலவே எந்திரங்களையும் பயிற்றுவிக்க முடியும். மனிதனைப் போலவே மொழியைப் புரிந்து கொள்ளவும், எதிர் வினையாற்றவும் முடிகிறது. ‘கிளாட்’ என்கிற கணினிக்கு சமீபத்தில் ஒரேயொரு வார்த்தை கொடுத்து 17 மொழிகளில் எதிர் பதில் கேட்ட தற்கு, மிகத் தெளிவாக சொல்ல முடிந்தது.
ஏஐ ஆட்டோமோசன் இன்றைக்கு, பொறியியல் துறையில் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை செய்துவிடுகிறது. மனிதன் செய்ய வேண்டியதில்லை. ஆபத்தான பணிகளை எல்லாம் அதுவே செய்துவிடும். நாம் ஒரு பொருளை பற்றி மனிதர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே, நமது செல்போனில் அதுபற்றிய விளம்பரங்கள் வந்துவிடும். இது ஏஐ எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு அன்றாட வாழ்வின் ஒரு உதாரணம். சாட் ஜிபிடியுடன் நீண்ட நேர உரையாடலுக்கு பிறகு, சிறிது நேரம் நாம் நிறுத்திவிட்டால், நாம் அடுத்து கேட்கபோகும் கேள்வியை சாட் ஜிபிடி தந்துவிடுகிறது. இது மிகவும் ஆபத்தானது. ஓட்டுநர் இல்லாத கார்கள், அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள், விமான நிலையத்தை நடத்தும் ஏஐ கருவிகள், போர் தந்திரங்களையும் வழங்குகிறது. இன்றைக்கு அதுதான் உலகம். தொழில் நுட்பங்கள் என்ன! அவற்றைக் கண்டறிந்தவர்களையும் போற்றுவோம். அடிப்படை தொழில்நுட்பம்
1. ஆழ்ந்த கற்றல் (deep learning) big dataவிலிருந்து சுயமாகக் கற்றுக்கொளும் எந்திரம், பல அடுக்குகளைக் கொண்ட டிஜிட்டல் நரம்பியல் நெட்வொர்க் பற்றிய துணைப்புலம். ஒரு இயந்திரம் எப்படி கற்றுக்கொள்கிறது என்று ஆராய்ந்தபோது, அமெரிக்காவினுடைய டைம் பத்திரிகை ‘இன்றைய தினத்தில் ஏஐ’ என்ற தலைப்பில் சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. அதில், ஏஐ எப்படி பாரதி மாதிரி கவிதை, கண்ணதாசன் மாதிரி கவிதை கொடுக்கிறது என்றால், அதெல்லாம் நாம் ஏற்கெனவே இணையத்தில் வைத்துள்ளோம். இன்னும் ஆராய்ந்தபோது, ஏஐ எண்கள் மூலம் கற்றுக்கொள்கிறது. இதன்மூலம் ஏஐ மறைத்து வைத்திருப்பது கணிதத்தைதான். இந்த ஆழத்தை கற்றல் என்பதை அறிமுகம் செய்தவர் ஜெஃப்ரி ஹின்டன். கனடா நாட்டைச் சேர்ந்த இவர், 1986 ஆண்டு டொராண்டோ பல்க லைக்கழகத்தில் இருந்த பொழுது உலகத்திலேயே முதலில் ஏஐ-யில் பிஎச்டி முடித்தார். படிப்பை முடித்துவிட்டு தச்சு வேலையை கற்றுக் கொண்டு, அதை அப்படியே இயந்திரத்திற்கு சொல்லிக்கொடுத்துள்ளார். இதன்பின் 3டி இயந்திரம் மூலம், இவர் சொல்லிக் கொடுத்த இயந்திரம் ஒரே நாள் ஆயிரம் துணிகளை நெய்துவிட்டது. திடீரென கூகுள் நிறுவனத்திலிருந்து விலகிவிட்ட இவர், ‘எனக்கு பயமாக இருக்கிறது. நான் இதை தொடங்கி வைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என்றார்.
2. இயந்திர கற்றல் (Machnie Learning) இயந்திர கற்றல் என்ற முறையை கொண்டு வந்தவர் ஆர்தர் சாமுவேல். கென்சாஸை சேர்ந்த இவர், டெக்ஸ்டிங் (Texting) என்பதையும், சீட்டு விளையாட்டையும் கொண்டு வந்தவர்.
3. இயற்கை மொழி செயலாக்கம் (NLP - LLM) நம்முடைய கட்டளைகளை ஆராய்ந்து, தரவு களை சரிபார்த்து எதிர்வினை, பதில் எல்லாவற்றை யும் ஏஐ முன்வைக்கிறது. இதற்கு பெயர் அல்காரிதம். இதற்கு பின்னால் இருக்கும் ஜெஃப்ரி ஹின்ட னுக்கு ஏஐக்காக முதன்முறையாக நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது மூன்று இந்தியர்களுக்கு நோபல் பரிசு கொடுக்காமல், மறுக்கப் பட்டிருக்கிறார்; மறக்கப் பட்டிருக்கிறது; இந்தியர்களை இருட்டடிப்புச் செய்கிறார்கள் என்று ஆனந்த விகடனில் எழுதினேன். அந்த அந்த மூன்று பேரில் அல்காரிதம் என்ற வார்த்தையை உலகிற்கு கொடுத்த நரேந்திர கர்மார்க்கர், உலகிலேயே முதல் ஏஐ டீச்சர் உருவாக்கியவர். இரண்டாவது அசீஸ் வஸ்வானி. ஒரு மொழியை நமக்கு தேவை யான மொழிக்கு மிக எளிதாக மாற்றக்கூடிய முதல் எல்எல்எம் மாற்றியை (LLM transformer) உலகிற்கு கொண்டு வந்தவர் இவர். நோம் சாம்ஸ்கி (Noam Chomshy) என்பவர், அசீஸ் வஸ்வானியை எல்எல்எம் ஜீனியஸ் என்று அழைத்தார்.
4. அடித்தள மாதிரிகள் (Foundation Modules) ஏஐ செயலிகள், மாதிரிகளை எல்லாம் வாங்கி வைத்துக்கொள்கிறோம். முதன்முதலாக ஏஐ செய லியை உருவாக்கிய பெருமை ராஜ் ரெட்டி என்கிற இந்தியரைச் சேரும். இவர் ஏஐ செயலிகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டது. டரிங் பரிசு பெற்றார். தமிழ்நாட்டில் காட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர். கோவையில் படித்து, அமெரிக்காவில் வேலை செய்யும் போது, Speech Recognation என்ற அல்காரிகத்தை கொடுத்தவர் ராஜ்ரெட்டி.
5. ஆண்டாலஜி (Ontology) ஆண்டாலஜி என்பது கலைக் களஞ்சியத்திலி ருந்து, அண்மைக் காலத்தில் நடந்தது வரை அனைத்தையும் புரிந்துகொண்டு, சாட்ஜிபிடிக்கு கொடுத்து விடுகிறது. இந்த விஷயத்தில் Cybernetics மூலம் Domainsயை கொண்டு வந்த வர் ஜான் மெக்கார்தே. இவர் முதன்முதலில் மனிதனுக்கு காமன் சென்ஸ் ஏஐ-யை கொண்டு வந்தார். ஏஐ-யை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்
6. செயற்கை நரம்பியல் வலையமைப்பு செயற்கை நரம்பியல் வலையமைப்பு அல்லது செயற்கை நியூரான்கள் என்று அழைக்கப் படும் முனைகளின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு உயிரியல் மூளையிலுள்ள நியூரான்களை தளர்வாக அமைக்கும் மாதிரியை கொண்டது. இந்த வடிவங்களை அடையாளம் காண இயந்திரத்திற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவுடன் புதிய தரவுகளின் அடிப்படையில் இயந்திரங்கள், தனக்கு தானே நியூரான் வலை யமைப்பை உருவாக்கி கொள்ள முடியும். இதனை அறிமுகம் செய்தவர் பிராங்க் ரோசன்பல்ட் (Frank Rosenblatt). டிரோன்களை முதன் முதலில் உரு வாக்கி கணினியுடன் இணைந்தவர். தனது சொந்த ஆய்வின்மூலம் சோதனை செய்து, அதற்காக தனது உயிரை கொடுத்தவர்.
7. செயற்கை பொது நுண்ணறிவு (Artificial General Intelligence - AGI) செயற்கை பொது நுண்ணறிவு என்பது மேம்படுத்தப்பட்ட ஏஐ படிநிலை ஆகும். இது ஒரு தத்து வார்த்த இலக்காக இருந்தாலும், பல துறைகளில் ஏற்கனவே புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு பல்துறை திறன் கொண்ட ஏஐ அமைப்பாகும். இதன்மூலம் சாதாரண பணிகளை மனிதன் செய்ய தேவையில்லை. இதனை உலகிற்கு அறி முகப்படுத்தியவர் மார்வின் மின்ஸ்கி (Marvin Minsky). சோவியத் யூனியன் ராணுவத்தில் பணி புரிந்தவர். முதன் முதலாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை என்பதை அறிமுகப்படுத்தியவர் இவரே.
8. சாட் பாட் (Chatbot) இது குரல் அல்லது உரை வழியே மனித உரையாடலை உருவகப்படுத்தும் ஒரு ஏஐ தொழில்நுட்பம். இவை எளிமையாக ஸ்க்ரிப்ட் அடிப்படை யிலான நிரல்களில் இருந்து சிக்கலான வினாக்களை புரிந்துகொண்டு பதிலளிக்க இயற்கை மொழி செயலாக்கத்தை பயன்படுத்துகிறது. இவைகளை நமது செல்போன்களில் உதவியாளராக வைத்து கொள்ள முடியும். இதனை கொண்டு வந்தவர் ஜோசப் விசன்பாம் (Joseph Weizenbaum).
9. கணினி விஷன் (Computer Vision) இது படங்கள், வீடியோக்கள் அல்லது மனிதர்களின் முகங்களை சரியாக நினைவில் வைத்திருந்து அடையாளப்படுத்துகின்ற நுட்பமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். தற்போது பெரும்பாலான இடங்களில் முகங்களை அடையாளம் காண்கின்ற வருகைப் பதிவேடுகள் வந்துவிட்டன. பொருள் கண்டறிதல், பட வகைப்பாடு, முக அங்கீகாரம் ஆகியற்கை உள்ளடக்கிய தொழில்நுட்பமாகும். இதனை கண்டறிந்தவர் விக்டர் கிளஸ்கோவ் (Victor Glushkov).
10. குவாண்டம் கணினியியல் (Quantum Computing) இது கணினிகளின் உடனடி எதிர்காலமாகும். மூர்ஸ் விதியின் அடிப்படையில் சிப்ஸ் என்று அழைக்கப்படும் வில்லைகள் கணினி உள்ளே அதிகரித்துவிட்டதால், இனி அணுக்களையே பயன்படுத்தி கணினியியல் வேலை செய்யவுள்ளது. குவாண்டம் இயலின் சூப்பர்பொசிஷன் என்பதை பயன்படுத்தி இது இயக்கப்படவுள்ளது. சாதாரண தற்போதுள்ள கணினிகளை விட கணக்கீட்டை பல லட்சம் முறை விரைவாக செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குவாண்டம் கணினியியலின் தந்தை என்று போற்றப்படுபவர் டேவிட் டெசியுஸ் (David Deutsch)
ஏஐ-யும், மருத்துவமும் இன்று ஏஐ தொழில்நுட்பம் எக்ஸ்ரே ஸ்கேன், எம்ஆர்ஐ மூலம் சில விநாடிகளில் ஆய்வு செய்து நோயை கண்டறிந்து சொல்லிவிடுகிறது. மெஷின் லேர்னிங் மாதிரிகள் மூலம் நீரிழிவு, புற்றுநோய் போன்றவை முன்கூட்டியே கணிக்கப்பட்டு, தடுக்க முடிகிறது. துல்லிய அறுவைச் சிகிச்சைகள் செய்வதற்கு டாவின்சி அறுவைச் சிகிச்சை முறை போன்ற ரோபாட்கள் செய்யும் அறுவை சிகிச்சைகள் வந்துவிட்டன. பத்தாண்டு காலத்தில் தயாரிக்க முடியும் என்ற வகை மருந்துகளை யெல்லாம் ஒரு சில மணி நேரங்களில் தயாரித்து கொடுத்துவிடுகிறது. ஏஐ-யும், கல்வியும் தனிப்பட்ட கற்றல் உருவாகி வளர்த்தெடுப்பதற்கு ஏஐ பயன்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட ஆசிரியர் போலவே அது செயல்படுகிறது. மாணவர்களின் சிந்தனை முறை யும் கற்றல் பழக்கத்தையும் மதிப்பிடுவதில் உதவு கிறது. ஏஐ வழியே மதிப்பிட்டால் தேர்வுகளே தேவையில்லை.
இன்று ஏஐ ஆசிரியர்கள் உள்ளன. ஏஐ-யும், விவசாயமும் பயிர்களின் ஆரோக்கியம் மற்றும் நீர் தேவையை சென்சார் மற்றும் டிரோன்கள் மூலம் ஏஐ கண்காணிக்கிறது. விவசாயத்திற்கு ரோபோடிக் கருவிகள் வந்துவிட்டன. மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு கொண்டிருப்பவர்களுக்கு, கடலில் அகப் படும் மீன்களை கொண்டு கரையில் அது என்ன விலைக்கு போகும் என்பதை தீர்மானிக்க ஏஐ உதவுகிறது. ஏஐ-யும், நிர்வாகம் மற்றும் பொதுச் சேவை அரசு சேவைக்கான சாட் பாட்கள் வந்து விட்டன. குற்றங்களை கண்காணித்தல், குற்ற வரைபடம், போக்குவரத்து கட்டுப்பாடு ஆகிய வற்றை முன்கூட்டியே ஏஐ கண்காணிக்கிறது. பேரிடர்களை முன்னறிவிக்கும் அமைப்புகள் வழியே ஏஐ அரசுக்கு உதவுகிறது. தரவு வெளிப்படத் தன்மை மூலம் ஏஐ இன்று பெருமளவு ஊழலை குறைத்திருக்கிறது. திரைப்படத்துறை, இலக்கி யத்துறை சார்ந்து படைப்பாற்றல் அம்சங்களிலும் ஏஐ உதவுகிறது. ஏஐ-யும், தொழில் மற்றும் ஆற்றல் துறையும் இயந்திரங்கள் பழுதடைவதற்கு முன்பே ஏஐ முன்னெச்சரிக்கை வழங்குகிறது. ஆலைகளில் மின்சாரம் உட்பட ஆற்றல் பயன்பாட்டை குறைக்கிறது. சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை சம நிலைப்படுத்தும் ஸ்மார்ட் கிரிட் அமைப்புகளை உருவாக்க ஏஐ உதவுகிறது. சுரங்க
ஏஐ தொழில்நுட்பத்தின் விளைவுகள்; சம்பவம் ஒன்று, 2021இல் இங்கிலாந்தில் ஒருவர் ரெப்ளிக்கா எனும் சாட்பாட்டுடன் பேசிக்கொண்டே இருக்கிறார். அப்போது, ‘நீ உலகம் முழுவதும் பேசப்பட வேண்டும் என்றால் நான் சொல்வதை கேட்க வேண்டும்’ என்று அந்த ரெப்ளிக்கா கூறியது. அது சொன்னதை கேட்ட அவர், பங்கிங்ஹாம் அரண்மனையிலிருந்த ராணி எலிசபத்தை கொலை செய்ய முயன்றுள்ளார். இது ஏஐ சாட் பாட் என்ன செய்யும் என்பதற்கு உதாரணமாகும்.
சம்பவம் இரண்டு யுவல் நோகா ஹராரி என்பவர் கூறியதிலிருந்து 2017இல் மியான்மரில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினர் ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவித்தார்கள் 10 நாட்களில். இது எப்படி சாத்தியம் என ஆராய்ந்தபோது, அந்த இனக்குழுவினரின் செல்போன்களில் அவர்களுக்கு எதிரான கருத்துகளை ஒரு வெறிபிடித்த புத்த பிட்சுவின் குரல் முகநூல் மூலம் திரும்பத்திரும்ப வழங்கிக் கொண்டே இருந்தது.
சம்பவம் மூன்று அமெரிக்காவில் டிரம்ப்பின் வெற்றி. கேம்பிரிட்ஜ் அனால்டிக்கா என்னும் நிறுவனத்து டன் டிரம்ப் இணைந்து, எலான் மஸ்க் உதவியுடன், ஒரு அல்காரிகத்தை உருவாக்கி, ஏஐ மூலம் டிரம்ப்பை பற்றி மிக நுணுக்கமான கருத்துகளை மக்களிடையே பரப்பி வெற்றி பெற வைத்தது. ஏஐ மூலம் ஒருவரை வெற்றியடையவும், தோல்வியடையவும் வைக்க முடியும். ஏஐ மனிதர்களுக்கு மாற்றாகுமா? இந்தியா 1955 ஆம் ஆண்டு டிஜிட்டல் யுகத்திற் குள் அடியெடுத்து வைத்தது. இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் கொல்கத்தாவில் HEC-2M என்ற வகை கணினி இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அப்போது வங்கிகள் முதல் பள்ளி கள் வரை தங்கள் வேலை போகப் போகிறது என்று அனைவரும் அஞ்சினர். அந்த கணினியை திறந்து வைக்க வந்த அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ‘கணினி ஏஐ அனைத்தும் நமக்கு மாற்று அல்ல; அவை நமக்கும் வேலைக்காரனாக தான் எப்போது இருக்கும்’ என்றார்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்