யாமறிந்த புலவரிலே! - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

2,746 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Nov 15, 2008, 6:18:21 PM11/15/08
to Min Thamizh
ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணி!
 
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்;
  • சுப்பிரமணிய பாரதியார்
  • கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
  • பாவேந்தர் பாரதிதாசன்
  • நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
ஆகிய நால்வருமாவர். அவருள்;
  • பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்;
  • பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்;
  • நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர்.
ஆயின்,
  • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும்.
 

"அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும்.

கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் என புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.

 
"தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
 தினமும் கேட்பது என் செவிப்பெருமை." எனப் புகழ்மொழி சூட்டுவார் நாமக்கல் கவிஞர்.

"இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துக்களைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

 
"உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
 உருவெடுப்பது கவிதை
 தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
 தெரிந்துரைப்பது கவிதை."

என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.

தேசிக விநாயகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 சூலை 27ம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார்.

ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

 
பழந்தமிழ்ப்பண்பும், தமிழ் மணமும், புதுமைக் கருத்துக்களும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பு "மலரும் மாலையும்" என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது.
  • ஆசியஜோதி
  • உமர்கய்யாம் பாடல்கள்

ஆகிய இருகவிதை நூல்களும் ஆங்கில நூல்களைத் தழுவி எழுதப் பெற்றவை. நாஞ்சில் நாட்டில் நிலவிய மருமக்கள் தாய முறையினை எள்ளி நகையாடும் முறையில் எழுதப் பெற்ற நூல் "நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்" என்பதாகும். "தேவியின் கீர்த்தனங்கள்" கவிமணி இயற்றிய இசைப்பாடல்களின் தொகுப்பாகும். "கவிமணியின் உரை மணிகள்" என்ற நூல் அவரால் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகும்.

கவிமணி ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று ஆய்வுநூல் "காந்தளூர் சாலை" ஆகும். தேசிக விநாயகம் பிள்ளையின் கவிபாடும் புலமையைப் பாராட்டிச் சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 1940ல் "கவிமணி" என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. மலரும் மாலையும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின்
  • நாட்டுப்பற்று
  • மொழிப்பற்று
  • இறைவழிபாடு
  • சாதிபேதம் கடிதல்
  • குழந்தைகளிடம் கொண்ட பற்று
ஆகியவற்றை அறியலாம்.
 
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் குதூகலித்த பாரதிக்கு சுதந்திர இந்தியாவில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. ஆயின் கவிமணி விடுதலை பெற்ற இந்தியாவில் ஏழாண்டுகள் வாழும் பேறு பெற்றார். "பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நமது கடமை என்றும், உரிமை வாழ்வின் பயனை நினையாது வாதினை விளைவித்துச் சண்டை செய்வது தேவையற்றது," என்றும் வலியுறுத்தினார். நம் நாட்டு மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் வேண்டும்.
 
"உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் அந்நியரை நம்பி வாழ்தல் கூடாது."
 
"பலதொழில்கள் செய்து பஞ்சப் பேயினைத் துரத்த வேண்டும்."
 
"அண்ணல் காந்தியினை அடியொற்றி வாழ்வோம்," என்பதைக் கீழ்காணும் கவிதை வலியுறுத்தும்.
 
"ஆக்கம் வேண்டுமெனில்- நன்மை
 அடைய வேண்டுமெனில்
 ஊக்கம் வேண்டுமப்பா - ஓயாது
 உழைக்க வேண்டுமப்பா
 
 உண்ணும் உணவுக்கும் - இடுப்பில்
 உடுக்கும் ஆடைக்கும்
 மண்ணில் அந்நியரை நம்பி
 வாழ்தல் வாழ்வாமோ?
 
 உண்ணும் உணவுக் கேங்காமல்
 உடுக்கும் ஆடைக் கலையாமல்
 பண்ணும் தொழில்கள் பலகாண்போம்
 பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்
 அண்ணல் காந்திவழி பற்றி
 அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்."

கவிமணி தமிழுக்குத் தொண்டாற்றிய புலவரைப் போற்றுகிறார். தமிழ்நூல்களின் சிறப்புகளைக் கூறுகிறார். தமிழ்மொழி வளரப் பழைமையோடு புதுமையையும் வரவேற்கின்றார். தமிழில் புதுப்புதுத் துறைகளைத் தோற்றுவித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

  • "அறிவின் எல்லை கண்டோன், உலகை அளந்து கணக்கிட்டோன்," என வள்ளுவரையும்,
  • "நெல்லிக்கனியைத் தின்றுலகில் நீடுவாழும் தமிழ்க் கிழவி," என ஔவையாரையும்,
  • "இந்திர சாலமெல்லாம் கவியில் இயற்றிக் காட்டிடுவான்," எனக் கம்பரையும்,
  • "பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேயடா அந்த கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா," எனப் பாரதியையும்

போற்றிக் கவியாரம் சூட்டுகிறார்.

மனத்தூய்மையின்றிச் செய்யும் இறைவழிப்பாட்டினால் பயனில்லை என்பது கவிமணியின் கருத்து. இதனை வலியுறுத்தும் பாடல்:

 
"கண்ணுக் கினியன கண்டு - மனதைக்
 காட்டில் அலைய விட்டு
 பண்ணிடும் பூசையாலே - தோழி
 பயனொன்றில்லையடி
 உள்ளத்தில் உள்ளானடி - அது நீ
 உணர வேண்டும் அடி
 உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்
 உள்ளேயும் காண்பாயடி."

கவிமணி தம் கவிதைகளில் சாதிபேதங்களைச் சாடுகிறார். "சாதியிரண்டொழிய வேறில்லை," என்றார் ஔவையார். சாதி இறைவனால் வகுக்கப்படவில்லை. மக்களின் கற்பனையே. பிறர்க்காக உழைப்பவர் உயர்ந்தவர். தன்னலம் பேணுவோர் தாழ்ந்தவர். இதனை,

 
"மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த
 மாநிலத் தோங்கும் குலத்தினராம்
 தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
 தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா."

எனப் பாடுகிறார்.

கவிமணி ஒரு தலைசிறந்த குழந்தைக் கவிஞர். இவர் குழந்தைகளுக்காகத் தாய்மார் பாடும் தாலாட்டுப் பாடல்களையும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிய அழகிய பாடல்களையும் பாடியுள்ளார். காக்கை, கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்துப்பாடும் பாடல்கள் சுவைமிக்கன.

 
காக்காய்! காக்காய்! பறந்து வா
கண்ணுக்கு மை கொண்டு வா
கோழி! கோழி! கூவி வா
குழந்தைக்குப் பூக்கொண்டு வா
 
கோழி! கோழி! வா வா
கொக்கொக்கோ என்று வா
கோழி! ஓடி வாவா
கொண்டைப்பூவைக் காட்டு வா

சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது.

சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கணவாகக் காண்கிறாள். "Dreamed a strange dream" என்பதை "எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்" எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார். இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

 
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!
 
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 78 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து 26.09.1954ல் இம் மண்ணுலக வாழ்வினை நீத்தார். வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.
 
முனைவர். ப.சுப்பிரமணியன்
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)
 

தாரகை

unread,
Jul 8, 2010, 8:08:06 PM7/8/10
to Kannan Natarajan, Min Thamizh
தமிழ்மணி - காந்தியக் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்திஜி தூவிய விதை நாமக்கல்
கவிஞராகத் தோன்றியது'' என்று மூதறிஞர் இராஜாஜி பாராட்டியுள்ளார். பாரதி,
வ.உ.சி., நாமக்கல் கவிஞர் முதலான தமிழ்மொழிக் காவலர்கள் இராஜாஜி வாழ்ந்த
காலத்தில் வாழ்ந்தவர்கள்.

"நாமக்கல் கவிஞர்" என்று மக்களால் பாராட்டப்பட்ட வெ.இராமலிங்கம் பிள்ளை,
மிக மிக எளிய சொற்களால் கவிதை பாடி, காந்தியக் கொள்கையைத் தமிழ்நாட்டில்
பரப்பிய ஒரே கவிஞர் என்று சொல்லலாம். காந்திமகான் மறைந்தவுடன் ஒவ்வொரு
வாரமும் தினமணியில் காந்திக்கு அஞ்சலி செலுத்தி 52 வாரங்கள்
இசைப்பாடல்கள் எழுதினார். அவர் எழுதிய கவிதைத் தொகுதியில் "காந்தி மலர்"
என்ற நாற்பது கவிதைகளுக்கு மேல் காந்தியடிகளை வாழ்த்தி எழுதியுள்ளவை
தொகுக்கப்பட்டுள்ளன.

http://www.dinamani.com/Images/article/2010/7/3/3tmani.jpg

சேலம் மாவட்டத்தில், 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெங்கட்ராமன் -
அம்மணி அம்மாள் தம்பதிக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு முன்
பிறந்தவர்கள் எழுவரும் பெண் குழந்தைகள். இவருக்கு பெற்றோர் இட்டபெயர்
இராமலிங்கம். தாயார், கருப்பண்ணன் என்ற பெயரிட்டே அழைத்தார். இவரது
குடும்பம் நாமக்கல்லில் வாழ்ந்து வந்ததால், "நாமக்கல் கவிஞர்" என்றே
அழைக்கப்பட்டு புகழ் பெற்றார்.

இராமலிங்கத்தின் தாயார் அவருக்குச் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே
அறிவுரைகள் கூறினார். காந்தியடிகளின் தாயார் காந்தியாரிடம் பெற்ற சத்திய
வாக்குகளைப் போல அவை அமைந்தன.

"நீ என்ன வேணுமானாலும் செய். ஆனால், பொய் மட்டும் சொல்லாதே; போக்கிரி
என்று பெயர் எடுக்காதே. இந்த இரண்டைத் தவிர வேறு நீ எது செய்தாலும்
பரவாயில்லை'' என்ற முதல் அறிவுரைப்படி இராமலிங்கம் கடைசி வரை செவ்வனே
நடந்து கொண்டார்.

புலால் உணவில் விருப்பம் கொண்ட கவிஞர், பிற்காலத்தில் திருக்குறளைப்
படித்தும், சமயச் சொற்பொழிவுகள் பல கேட்டும் புலால் உண்பதை நிறுத்திக்
கொண்டார்.

கவிதையில் இயற்கையாகவே நாட்டம் கொண்ட இராமலிங்கம், இளமையிலேயே சித்திரக்
கலை கைவரப் பெற்றார். பள்ளியிலும், பொது வாழ்விலும் அவர் நல்ல
சித்திரக்காரர் என்றே அறிமுகமானார். பாராட்டுதலையும், பரிசுகளையும்
பெற்றார்.

தந்தை வெங்கட்ராமன், காவல் துறையில் தலைமைக் காவலராகப் பதவி வகித்ததால்,
தன் மகனையும் காவல்துறையில் பணியாற்றச் செய்ய வேண்டும் என்று பெருமுயற்சி
எடுத்துக் கொண்ட அவரது எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது.

புகைப்படம் போல் அதே வடிவில் தோற்றமிருக்குமாறு வரையும் திறமைபெற்ற
கவிஞர், நாடகக் கலையிலும் நாட்டமுடையவர். அப்போது நாமக்கல்லில் வாழ்ந்து
வந்த பிரபல நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா, கவிஞருக்குப் பிள்ளைப் பிராய
நண்பர். அவரின் நடிப்பையும், குரல் வளத்தையும் கண்டு வியந்த கவிஞர்,
நாடகத்தில், எஸ்.ஜி.கிட்டப்பாவுக்குப் பல பாடல்கள் எழுதிக் கொடுத்தார்.
எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகத்தைப் பார்க்கப் பார்க்க இராமலிங்கத்துக்கும்
நாட்டு நடப்பில் நாட்டம் ஏற்பட்டது.

1904இல் வைஸ்சிராயாக இருந்த கர்ஸன், வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார்.
இந்தப் பிரிவினை அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த பாரத மக்களைச் சுதந்திர
வேட்கை கொள்ளச் செய்தது.

அரவிந்தர், சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நெüரோஜி, கோகலே, பாலகங்காதர
திலகர் போன்றவர்களின் சொற்பொழிவுகள் பத்திரிகைகளில் வெளிவரும். கவிஞர்
அவற்றைப் படித்தார். அவருக்கு நாமக்கல் நாகராஜ ஐயங்கார் என்ற
தேசப்பற்றுமிக்கவர் இளமைப் பருவம் முதல் இறுதி வரை உற்ற
நண்பராயிருந்தார். இவற்றைப் படித்த இருவரும் முழு மூச்சுடன் தேசத்
தொண்டில் இறங்கினர். கவிஞர் பேச்சுத் திறத்தால் திருச்சி மாவட்டத்தில்
பிரபலமாகிவிட்டார். திலகரும், காந்தியடிகளும் மக்களிடையே தேசப்பற்றுக்
கனலை வளர்க்கத் தொடங்கினர். காந்தியடிகளின் அஹிம்சை, சத்தியாக்கிரகம்
என்ற இரு கொள்கைகளும் கவிஞரை ஈர்த்தன. அதுமுதல் முழுக்க முழுக்கக்
காந்தியக் கவிஞராக மாறிவிட்டார்.

வேதாரண்யம் கடற்கரையில் உப்புக் காய்ச்சுவதற்கான பாதயாத்திரையை இராஜாஜி
தலைமையில், பாரதியாரின் பாடல்களைப் பாடிக்கொண்டே தொண்டர்கள் அணிவகுத்து
நடைப்பயணம் சென்றனர். அப்போதுதான் நாமக்கல் கவிஞர் எழுதிய "கத்தியின்றி
இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும்
யாரும் சேருவீர்", என்ற பாடலையும் தொண்டர்கள் உற்சாகத்தோடு பாடிக்கொண்டே
சென்றனர். பிற்காலத்தில் அந்தப் பாடலை எழுதியவர் மகாகவி பாரதியாரோ என்ற
ஐயம் ஏற்படும் அளவுக்கு அந்தப் பாடலும், எழுதிய கவிஞரும் புகழ் பெற்றனர்.

1932ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட நாமக்கல்
கவிஞர், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில்
அடைக்கப்பட்டார்.

1937ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர்
சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து கவிஞரின் காங்கிரஸ் பணி தீவிரமானது.

காரைக்குடிக்கு பாரதியார் வந்திருப்பதாக அறிந்த நாமக்கல் கவிஞருக்கு
பாரதியாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஓவியம் வரைவதிலும்
கெட்டிக்காரர் என்று பாரதியாருக்கு நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தினர்.
கவிதையும் எழுதுவார் என்று குறிப்பிட்டனர். கவிதை ஒன்று சொல்லுமாறு
பாரதியார் கேட்டார்.

எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்காக தாம் எழுதிக் கொடுத்த "தம்மரசைப் பிறர்
ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்", என்ற பாடலைப்
பாடத் தொடங்கினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், "பலே பாண்டியா!
பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. "தம்மரசைப் பிறர் ஆள
விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...", பலே, பலே இந்த
ஓர் அடியே போதும்'' என்று பாராட்டித் தட்டிக் கொடுத்தார்.

காங்கிரஸ் இயக்கத்துக்குக் கவிஞரின் கவிதைகள் பெரிதும் உறுதுணையாக
இருந்தன. காங்கிரஸ் கவிஞர், தேசத் தொண்டர் என்றெல்லாம் தமிழகத்
தேசியவாதிகளால் பாராட்டப்பட்ட கவிஞருக்கு வாழ்வளித்தது ஓவியக்கலையே. தன்
வறுமையை வெளியே புலப்படுத்தாமல் கெளரவமாக வாழ்க்கையைக் கம்பீரமாக
நடத்தியவர் கவிஞர். அவர் கவிதையின் பெருமையை உணர்ந்த தேசபக்தர் சின்ன
அண்ணாமலை அவருடைய நூல்களை வெளியிடத் தொடங்கிய பிறகுதான் கவிஞர்
வாழ்க்கையில் மெல்ல மெல்ல வறுமை விலகத் தொடங்கியது. தேவகோட்டை தியாகி
சின்ன அண்ணாமலை, சென்னைக்குக் குடியேறி, "தமிழ்ப்பண்ணை" என்ற புத்தக
வெளியீட்டகத்தைத் தொடங்கினார்.

"அவளும், அவனும்" என்ற சிறு காவியத்தை நாமக்கல் கவிஞர் எழுதியிருப்பது
பலருக்குத் தெரியாது. காவியம் என்றால் காவியத்துக்கான அமைப்புடன் கடவுள்
வாழ்த்து, ஆற்றுப்படலம், நாட்டுப் படலம் என்ற இலட்சணங்களுடன் எல்லாம்
அமைய வேண்டும் என்ற காவிய இலக்கணத்தை மீறிய எளிய நடையில் அமைந்த கதைப்
பாடல் "அவளும், அவனும்" அந்த நாளில் இளைஞர்களால் பாராட்டப்பட்டது.

கவிஞராகவும் ஓவியராகவும் திகழ்ந்த கவிஞர், திருக்குறளுக்குப் புதிய உரை
எழுதியவர். பல்சுவைப் பாடல்கள் எழுதியவர். தவிர, அவர் சிறந்த
நாவலாசிரியர். அவருடைய தன் வரலாறான "என் கதை"யே நாவல் படிப்பதுபோல்
விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இவர் எழுதிய "மலைக்கள்ளன்",
"மரகதவல்லி", "கற்பகவல்லி", "காதல் திருமணம்" ஆகிய புதினங்கள்
வாசகர்களால் இரசித்துப் பாராட்டப்பட்டவை. இவரது மலைக்கள்ளன்
திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கதை இந்திய மொழிகள்
பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.

1949ஆம் ஆண்டு கவிஞர், சென்னை மாகாண அரசின் ஆஸ்தானக் கவிஞராக
நியமிக்கப்பட்டார். 1956ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி நிர்வாக
உறுப்பினரானார். 1956 முதல் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற மேலவை
உறுப்பினராக இருந்தார். 1971ஆம் ஆண்டு பாரத அரசு அவருக்கு "பத்ம பூஷண்"
விருது வழங்கிச் சிறப்பித்தது.

இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கிறது.
"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய
வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்", என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை
இன்று பெருமையாக முணுமுணுக்காதவர்களே கிடையாது.

84 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த தேசிய, காந்தியக் கவிஞர், காவிய ஓவியர்
நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை 1972ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ஆம் தேதி
சென்னையில், தாம் போற்றிய தமிழ்கூறு நல்லுலகைவிட்டு விண்ணுலகு அடைந்தார்.

கலைமாமணி விக்கிரமன்

நன்றி:- தினமணி

Geetha Sambasivam

unread,
Jul 9, 2010, 4:32:27 AM7/9/10
to mint...@googlegroups.com
ம்ம்ம்???  தலைப்பிலே தேசிக விநாயகம் பிள்ளைனு வந்திருக்கே? உள்ளடக்கமோ நாமக்கல் கவிஞர் பற்றியது. இரண்டு பேரும் வேறே வேறே இல்லையோ?

2010/7/9 தாரகை <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jul 9, 2010, 8:21:43 PM7/9/10
to mint...@googlegroups.com
ஆம். அதற்காகத் தான் 'இழையும், தலைப்பும்' இணைந்து வர வேண்டும்.
தலைவிதியை மாற்றமுடியாது என்போர், சிலர். தலைப்பை மாற்றக்கூட வழி
வைத்துள்ளேன், என்கிறார், கூகிளாண்டவர்.
இன்னம்பூரான்

2010/7/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

தாரகை

unread,
Jul 9, 2010, 8:55:03 PM7/9/10
to மின்தமிழ்
> ம்ம்ம்??? தலைப்பிலே தேசிக விநாயகம் பிள்ளைனு வந்திருக்கே? உள்ளடக்கமோ
> நாமக்கல் கவிஞர் பற்றியது. இரண்டு பேரும் வேறே வேறே இல்லையோ?

தயைகூர்ந்து மன்னிக்கவும்.

மின்தமிழில், நாமக்கல் கவிஞர் பற்றிய செய்திகள் முன்னரே வந்துள்ளதா என்று
ஆவணப்பகுதியில் தேடும்போது, கவிமணியின் பக்கத்தில் நாமக்கல் கவிஞர்
பற்றிய செய்தி என்று அறியாமல் - அது நாமக்கல் கவிஞர் பக்கம் என்ற
குழப்பத்தால் விளைந்த தவறு.

மன்னித்தருள்வீராக _/\_

Reply all
Reply to author
Forward
0 new messages