வட்டெழுத்தில் கழிகோறு என்று கோழிக்கோட்டின் (Calicut, Kerala) பேர் எழுதப்பட்டுள்ளது, இது அண்மைக்காலக் கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒரு கல்வெட்டு. கழிக்கோடு கழிக்கோறு என எழுதியுள்ளனர், Alveolar ṯ என்னும் முந்து-த்ராவிட (Proto-Dravidian) ஒலியனை (Phoneme) எவ்வாறு தமிழ் எழுத்தில் எழுதுவது என்று பார்த்து -ட்-/-ற்-/-ழ்- எழுத்துக்களால் குறித்துள்ளனர் பண்டைத் தமிழர்கள். பறபற என்பது இறக்கை படபட என அடித்தல். எனவே பறத்தல் (= paṯattal), பறவை (= paṯavai) காரணப்பெயர்கள். நடுதல் நாற்று, இதிலும் Alveolar ṯ உள்ளது அல்லவா? அதேபோல், தொடுத்தல் (நிரை ஆக்குதல்) - இதிலும் Alveolar ṯ உளது. எனவே, தொறு/தொழு என்பது குட்டிகள், கன்றுகள் போடும் நாலு காலி விலங்குகளின் நிரைகளுக்குப் பெயராக கல்வெட்டில் வருகிறது. பருப்பினால் செய்வதை அடுத்தால் பருப்படம்/பப்படம் (> வப்படம் என்போம்). அப்பளம் என ஆகிறது. அதேபோல் தொடு- > தொறு-/தொளு- An Alveolar ṯ phenomenon என கருதுகிறேன். கொடு என்பதை குடு என்பது போல, கன்னடத்தில் தமிழின் தொறுவைத் துறு என்கின்றனர். துறுவை/துருவை. ஓங்கோடு என்னும் கல்வெட்டுப் பெயர் ஓங்கோளு (Ongole) என தென் ஆந்திரத்தில் விளங்குகிறது. தளவாய்புரச் செப்பேடு மீயாட்சி என்பதை மீயாள்சி என்பது அப்படம்/அப்பளம், தொறு/தொளு (< தொடுத்தல், where Alveolar ṯ is present) போலத்தான்.
தொடுத்தல் (toṯuttal) = நிரையாக்குதல் என்னும் வினைச்சொல்லில் இருந்தே தொறு/தொழு என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் பிறந்தன என்படற்கு அரிய ஆட்சியைச் சங்க நூல்களிலும், அதற்கு உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் விளக்கமும் சான்றாதலைக் கண்டேன். அதனைப் பாருங்கள்,
விடேஎன், தொடீஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டுங்
கடுவய நாகுபோ னோக்கிக் தொடுவாயில்
நீங்கிச் சினவுவாய் மற்று; (கலித்தொகை: முல்லைக்கலிப் பாட்டு)
நச்சினார்க்கினியர் உரை:
எ - து: அதுகேட்டவள், யான் நின்னைப் போகவிடேன் ; தன்னைத் தீண்டுதற்குச் செல்லுமவர்களை இடையே விலக்கி எதிரே மிக்குச்செல்லுங் கடிய வலியினையுடைய நாகுபோலே செறுத்துநோக்கித் தொழுவின் வாயிலி னின்றும் போந்து நின்று பின்னைச் சினப்பா யென்றான். எ - று.
முல்லைக்கலியின் இப்பாட்டு:
தொடுத்தல் என்னும் வினைச்சொல் தரும் தொறு/தொழு என்னும் கால்நடை வேளாணியல் சொற்கள் அரதப் பழசானவை. 8000 (அ) 10000 ஆண்டுப் பழைமை கொண்டன, அவற்றில் உள்ள Alveolar ṯ phenomenon இஃது. அதனை விளக்கும் கலித்தொகையின் முல்லைக்கலியும், நச்சினார்க்கினியரும் நம் போற்றுதலுக்குரியோர். தொடுத்தல்/தொழுதல்/தொறுதல் என்னும் பெயர்கள் முதலில் கூட்டமான ஆநிரைக்கு அமைந்தன. பிறகு உழவுத் தொழில்செய்யும் கூலியாட்கள் கூட்டமாகச் செய்யும் பணிக்கு தொழுதல்/தொண்டுசெய்தல், கி.பி. 5-ஆம் நூற்றாண்டு நிலவுடைமைச் சமுதாயப் பக்தி இலக்கியத்தில் தொழுதல்/தொண்டு என்று பொருள் விரிவு பெற்றுள்ளது. தொடு-/தொறு/தொழு- ஆநிரைக்கும், உழவுக்கு முதலில் ஏற்பட்டு பக்தகோடிகள் தொழுதல்/தொண்டுக்கு பொருள்விரிவால் அமைவது தமிழ் வளர்ந்த வரலாற்றின் ஓர் ஏடு.
கச்சிராப்பாளையம் வேடியப்பனுக்கு நடுகல்லில் வட்டெழுத்துக் கல்வெட்டு: விழுப்புரம் வீரராகவன் - மங்கையர்க்கரசி பதிப்பித்துள்ள நடுகல் கல்வெட்டு:
"கடைவெண் மலைக் கோட்டு
வேட்டுவரு இருவாய்
தொளுக் கொண்டு பட்டான்
கம்பாடரு மகன் சாமிக்கல்"
இந்த நடுகல்லில் உள்ள செய்தி:
கடைவெண்மலைக்கோடு என்னும் இடத்து வேட்டுவர்கள், இருவாய் என்னும் ஹார்ன்பில் புள்ளின் பெயரைக் குலச்சின்னமாய்க் கொண்டவர்களின் ஆநிரை கவரச்சென்றபோது இறந்துபட்டவனுக்கு எழுப்பிய நடுகல் என்பதே,
இருவாய்/இருவாசி/இருவாச்சி நிலத்தைக் கல் கரடு நீக்கப் பயன்படும் adze-axe. ஒருமுனை மண்வெட்டி போலும், மறுமுனை கூர்மையான வசி போலும் இருக்கும். இதனைக் கொண்டு ஹார்ன்பில் பறவைகளும், இருவாட்சி முல்லையும் உவமையாகுபெயராகப் பேர்பெறுகின்றன.
நிலத்தைக் கல்லப் பயன்படுவது இருவாசி/இருவாச்சி/இருவாட்சி/இருவாய் (adze-axe, a.k.a pick-axe).அதற்கு முன்னர் மரம், செடிகளை வெட்டி நீக்கப் பயன்படுவது மழு. வடமொழியில் மழுவைப் பரசு என்பர். மழுவாள் நெடியோன் தமிழர் தெய்வங்களுள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுபவன் (மதுரைக் காஞ்சி). 2800 - 2500 ஆண்டுகள் பழமையான இரும்புக்காலச்சிற்பங்களுள் முதன்மையான கடவுள். மழு வடமொழியில் பரசு. பெரிய மழு ஏந்தி இருக்கும் இந்தியாவின் பழமையான லிங்கம் குடிமல்லத்தில் உள்ளது. இப்போதைய பெயர் பரசுராமேசுவரர். ”மழுவாள் நெடியோன்” மகர யக்ஷனின் மேல் நிற்கும் தாழைசூடி வருணன் கி.மு. 3-ஆம் நூற்றாண்டில், காலப்போக்கில் விடங்கர் என்னும் இலிங்க வடிவம் சிவனுக்கு ஆகிறது. மழு என்னும் மரங்கள், செடி கொடி சிறை ஒதுக்கப் பயன்படுவது. மழு என்ற சொல்லின் தாதுவேர் என்ன? பார்ப்போம். அதிலும் Alveolar ṯ phenomenon இலங்குகிறது.
"மழுவாள் நெடியோன்” சிற்பம் - 2800 - 2500 ஆண்டுப் பழைமை:
நா. கணேசன்