நற்றமிழ் – 11 (25.11.2009)
14. புணர்ச்சி
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் பொருத்தமுற இணைவது புணர்ச்சி.
இது இருவகைப்படும் :
i. வேற்றுமைப் புணர்ச்சி
ii. அல்வழிப் புணர்ச்சி
i. வேற்றுமைப் புணர்ச்சி
இரண்டாம் வேற்றுமை உருபு முதல் ஏழாம் வேற்றுமை உருபு வரையுள்ள வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) இருமொழிகளுக்கிடையில் மறைந்தாயினும் (தொகை) வெளிப்பட்டாயினும் (விரி) இருப்பின் வேற்றுமைப் புணர்ச்சியெனப்படும். தொகை – உருபு மறைந்துள்ளது; விரி - உருபு வெளிப்படையாக உள்ளது; அவை ஆறு; எடுத்துக்காட்டுகள் வருமாறு:
__________________________________________________________
வரிசை தொகை விரி
எண்
__________________________________________________________
1 பால் குடித்தான் - பாலைக் குடித்தான்
(2-ஆம் வேற்றுமை உருபு ‘ஐ’)
2 கல் எறிந்தான் - கல்லால் எறிந்தான்
(3-ஆம் வேற்றுமை உருபு ‘ஆல்’)
3 அண்ணன் மகள் - அண்ணனுக்கு மகள்
(4 – ஆம் வேற்றுமை உருபு ‘கு’)
4 மலை வீழருவி - மலையின் வீழருவி
(5 – ஆம் வேற்றுமை உருபு ‘இன்’)
5 கண்ணன் குழல் - கண்ணனது குழல்
(6 – ஆம் வேற்றுமை உருபு ‘அது’)
6 வீடு புகுந்தான் - வீட்டின்கண் புகுந்தான்
(7 – ஆம் வேற்றுமை உருபு ‘கண்’)
_________________________________________________________
ii. அல்வழிப்புணாச்சி:
(அ) தொகாநிலைத் தொடர், நிலைமொழி வருமொழிகளின், அல்லது இருமொழிகளின் இடையில் வேறு எழுத்தோ, சொல்லோ, அசையோ ஏதும் இராது.
(எ –டு) முருகன் பாடினான் (இடையில் வேறு சொல் எதுவும் இல்லை)
தொகா நிலைத் தொடர்
1. எழுவாய்த் தொடர் : பொன்னன் வந்தான்
2. விளித்தொடர் : பொன்னா! வா.
3. பெயரெச்சத்தொடர் : வந்த மன்னன்; பெரிய மன்னன்
4. வினையெச்சத்தொடர் : வந்து போனான்
5. தெரிநிலை வினைமுற்றுத்தொடர் : வந்தான் பொன்னன்
6. குறிப்பு வினைமுற்றுத்தொடர் : நல்லன் கண்ணன்
7. இடைச்சொல் தொடர் : மற்றொன்று
8. உரிச்சொல் தொடர் : நனிபேதை
9. அடு்க்குத் தொடர் : பாம்பு பாம்பு
(ஆ) தொகைநிலைத் தொடர் :
1. வேற்றுமைத் தொகை :
மேலே 13.1(புணாச்சி)- இல் கட்டத்திற்குள் விளக்கப் பட்டுள்ளது.
2. வினைத் தொகை :
ஊறுகாய் (ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும்காய் என மூன்று காலங்களுக்கும் பொதுவாய் உள்ளது). இது காலம் கடந்த பெயரெச்சம் என்றும் வழங்கப்பெறும்.
3. பண்புத் தொகை : கருங்குதிரை = (கருமை + குதிரை) பனைமரம் (இரு பெயரொட்டுப் பண்புத்தொகை)
4. உவமைத் தொகை :
மதிமுகம் (மதி போன்ற முகம்) உவமை யுருபு மறைந்திருக்கிறது)
5. உம்மைத் தொகை :
கபிலபரணர் (கபிலரும் பரணரும்) ‘உம்’ மறைந்திருக்கிறது)
6. அன்மொழித் தொகை :
பொன்வளை (வந்தாள்). (இது பொன்னால் ஆன வளையைக் குறிக்காமல் அதனை அணிந்துள்ள பெண்னைக் குறிக்கிறது. தொகை, நிலையான தொடரில் உள்ள சொற்களுக்கும் அப்பாற்பட்ட வேறொரு பொருளைக் குறிக்கிறது. எனவே அன்மொழி).
15. மரபு:
“எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே” – நன்னூல்
அறிவுடையோர் எந்தச் சொல்லால், எந்தப் பொருளை, எந்த வழியால் சொன்னார்களோ அவ்வாறே சொல்லுதலே மரபு எனப்படும்.
(எ-டு) கிளிப்பிள்ளை
ஆட்டுக்குட்டி
யானைக்கன்று
வாழைக்கன்று
இவற்றை, ‘கிளிக்குட்டி’ என்றோ ‘ஆட்டுக்கன்று’ என்றோ எழுதுவது தவறு. அது மரபுக்கு முரணாகும்.
(……..பேராசிரியர் முனைவர் தி. முத்து - கண்ணப்பன், அவர்களின் “தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்……)
நற்றமிழ் – 12 நாளை (26.11.2009) வரும்….
“வல்லெழுத்துக்கள் (க், ச், த், ப்) மிகுமிடங்களும் மிகா இடங்களும்” எனும் தலைப்பில்….