அன்புள்ள தமிழ் அன்பர்களே:
தமிழ் மரபு அறக்கட்டளையின் 10வது ஆண்டுவிழா நிகழ்வின் ஒரு அங்கமாக நான் மலேசியா சென்று உரையாற்றிய அன்றுதான் மலேசியா `புதிய` தமிழ் வாழ்த்தை அறிமுகப்படுத்தியது. மலேசியத்தமிழர், கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் இயற்றிய அவ்வாழ்த்துப்பா நமது மண்ணின்குரல் வழியாக முதல்முறை உலக அரங்கில் ஒலித்தது.
நிலைபெறநீ வாழியவே!
ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது
இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ
குரல்: துருவன், பாபு லோகநாதன்
காப்பியனை ஈன்றவளே!
காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின்
தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து
தரணியெங்கும் வாழ்பவளே!
எங்களெழில் மலைசியத்தில்
சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய்
இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில்
புரட்சிவலம் வருபவளே!
செவ்வியலின் இலக்கியங்கள்
செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும்
ஆளுகின்ற புதியவளே!
குலங்கடந்து நெறிகடந்து
நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும்
நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே
நிலைபெறநீ வாழியவே!
மேடையில் வைத்து கவிஞரிடம் கேட்டேன், ‘இதற்குப் பொருளுரையும் தாங்களே வழங்கினால் நன்றாக இருக்குமென்று’ ஐயா அவர்கள் இன்று எமக்கு இவ்வாழ்த்தின் விரிவான பொருளுரையை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எம் நன்றிகள். இப்பாடலை நம்மில் யாராவது பொருள் மாறாமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியுமா?
புலம்பெயர்ந்த தமிழருக்காகப்
புதியவொரு தமிழ்வாழ்த்து
வாழ்த்துப்பாடலின் கருத்துவிளக்கம்
காப்பியனை ஈன்றவளே
காப்பியன் என்ற சொல் தொல்காப்பியரைக் குறிக்கிறது. தொல்காப்பியம் மொழிக்கும் இலக்கியத்துக்கும் இலக்கணம் கூறும் நூல். அந்த இலக்கணத்தின் செம்மை, அதற்குப் பல்லாயிரம் ஆண்டு முன்னரே தோன்றிவளர்ந்து பண்பட்டது தமிழ், என்பதை உறுதிசெய்கிறது. இது தமிழின் தொன்மைக்கும் செம்மைக்கும் சான்றாகிறது. (தொல்காப்பியம் = தொல் + காப்பு + இயம் - தொன்மரபுகளைக் காக்கும் இயல்பினது)
வழக்கையும் செய்யுளையும் முந்திய நூல்களையும், எழுத்து சொல் பொருள் என்ற மூன்று கோணங்களில் ஆராய்ந்து மூவகை இலக்கணங்களையும் முழுமையாக விளக்கியிருக்கிற தொல்காப்பியரின் ஆய்வறிவாற்றல், அக் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச்சான்றோரது அறிவாற்றலுக்கும் சான்றாகிறது.
எனவே, ‘தொல்காப்பியன்’ என்ற சொல், தமிழின் தொன்மைக்கும் செம்மைக்கும் தமிழ் முன்னோரின் அறிவாற்றலுக்கும் குறியீடாகக் கொள்ளத் தக்கது.
ஈன்றவளே என்ற சொல், மேற்கூறிய மூன்று சிறப்புக்களின் தாயாகத் தமிழை உருவகப்படுத்திக் காட்டுவதாகும்
காப்பியங்கள் கண்டவளே
(இங்கே, காப்பியம் என்ற சொல் காவியம் என்ற பொருளுடையது)
இந்தத் தொடர், சிலப்பதிகாரம் முதலாகத் தொடர்ந்து படைக்கப்பட்ட சிறப்புக்களுக்குரிய பல காப்பியங்களுக்கு உரிய மொழியாகத் தமிழ் விளங்குவதைச் சுட்டுகிறது. தமிழர் தொன்றுதொட்டுப் பல்வேறு நெறிகளை ஏற்றுப் பின்பற்றி வாழ்ந்திருக்கின்றனர். அந்த நெறிகளைச் சார்ந்த காப்பியங்களையும் இயற்றியுள்ளனர். ஐம்பெருங் காப்பியங்களுள் சிலப்பதிகாரம் பொதுவாகக் கொள்ளத் தக்கது; மணிமேகலை பௌத்தக் காப்பியம்; மற்றவை சமணக் காப்பியங்கள். பின்னர்த் தோன்றிய கம்பராமாயணம் வைணவக் காப்பியம்; பெரிய புராணம் சிவநெறிக் காப்பியம்; சிறாப்புராணம் இசுலாமியக் காப்பியம்; தேம்பாவணி கிறித்துவக் காப்பியம். எனவே காப்பியங்கள் என்ற தொடர், தமிழ், காப்பியங்களின் எண்ணிக்கையால் பெற்றிருக்கும் வளத்தை மட்டுமன்றி, அவை பன்னெறி சார்ந்தவையாக இருக்கும் தனிச்சிறப்பையும் குறிக்கிறது.
கலைவளர்த்த தமிழகத்தின்
கலை என்ற சொல் இங்கே, இலக்கியக் கலையுடன், இசையும் கூத்துமாகிய கலைகளையும் குறிக்கிறது. எல்லா இனத்தவரிடமும் இசையும் கூத்தும் உள்ளன. ஆனால், அவற்றை மொழியின் கூறுகளாகவே கொண்டு, அவற்றையும மொழியுடன் சேர்த்தே முத்தமிழாக வளர்த்தது தமிழர் மரபு. இந்தச் சிறப்பினைச் சுட்டுவது இந்தத் தொடர்.
தமிழகம் என்ற சொல், கடற்கோள்களுக்கு முந்திய, பரந்து விரிந்த பண்டைத் தமிழகத்தைக் குறிக்கிறது.
தலைநிலத்தில் ஆள்பவளே
தலைநிலம் என்ற தொடர் இருபொருள் பொதிந்தது. நாட்டுக்குத் தலைநகரம் என்பதுபோல், உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களை எல்லாம் உள்ளடக்கிய தமிழ்கூறு நல்லுலகத்துக்குத் தலையாய நிலம் என்பது ஒரு பொருள். பண்டைத் தமிழகத்தை முழுவுடலாகக் கொண்டு, கடற்கோள்களால் மறைந்துவிட்ட நிலப்பரப்பை அதன் உடற்பகுதியாகவும், எஞ்சியிருக்கும் இன்றைய தமிழகத்தை தலைப்பகுதியாகவும் காட்டுவது இத் தொடரின் மற்றொரு பொருள்.
ஆள்பவளே என்ற சொல், உலகின் மற்ற பல பகுதிகளில் தமிழ் வழங்கினாலும், ஆட்சி அதிகாரம் பெற்று உரிமையுடன் விளங்குவது தமிழகத்திலேயே என்பதைக் குறிக்கிறது. கடற்கொள்களால் அழிந்த நிலத்தோடு அழிந்துவிடாமல் எஞ்சியுள்ள நிலத்தில் இன்னும் தமிழ் ஆட்சிசெய்கிறது என்பது இதன் குறிப்புப்பொருள்.
தாய்ப்புலமையால் புவியில்
தாய்ப்புலமை என்பது, உலகின் பிறமொழிகளிலுள்ள புலமைக் கூறுகளுக்கெல்லாம் தாயாக விளங்கும் தகைமை உடையது தமிழ் என்பதைக் குறிக்கிறது.
எடுத்துக்காட்டு 1: உலக மொழியாக விளங்கும் ஆங்கிலத்தில் நீut, sலீut, பொன்ற வினைச்சொல் அடிகளின் இறுதியில் மீக்ஷீ என்ற பின்னொட்டைச் சேர்த்தால், அவை நீuttமீக்ஷீ, sலீuttமீக்ஷீ. எனப் புணரும்போது, t என்ற மெய் இரட்டுகிறது. ஆனால், லீமீணீt, மீணீt போன்ற வினைச்சொற்களில் சேர்ந்தால் t என்ற மெய் இரட்டுவதில்லை. இந்தப் புணர்ச்சி வேறுபாட்டுக்கு அம் மொழியின் இலக்கணம் காரணங்கண்டு விளக்கவில்லை. ஆனால், தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம்,
“...குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்...” (எழுத்தியல் 160)
என்ற நூற்பாவில் இதற்கு விளக்கமளிக்கிறது. நீut, sலீut, பொன்ற வினைச்சொற்களில், t என்ற மெய், குறிலுக்குப்பின் வருவதால் இரட்டுகிறது; ஆனால், லீமீணீt, மீணீt பொன்ற வினைச்சொற்களில், அதே t என்ற மெய், நெடிலுக்குப்பின் வருவதால் இரட்டவில்லை என்ற தெளிவான காரணத்தை இந்த நூற்பாத் தருகிறது.
எடுத்துக்காட்டு 2: அரபி மொழியில் அல் + நூர் என்ற தொடர் அன்னூர் என்று புணர்கிறது; இதற்குஅரபி இலக்கணம் காரணங்காட்டி விளக்கவில்லை. தமிழில், நல் + நூல் என்ற தொடர் அரபி மொழியில் புணர்வது போலவே நன்னூல் என்று புணர்வதற்குத் தொல்காப்பியம் தெளிவான விதி கூறுகிறது.
இத்தகைய பல கூறுகள் தமிழில் உள்ளன. எனவே, தமிழ் தனது வழக்குகளுக்கு மட்டுமன்றி, உலகின் பிற மொழிகளின் வழக்குகளுக்கும் விதியும் காரணமும் கூறும் அளவுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே புலமைச் செம்மை பெற்றிருந்தது. இதன்படி தமிழ், தாய்ப்புலமையுடைய மொழி என்பது மிகையன்று.
தனிப்பெருமை கொண்டவளே
இத் தொடர், தமிழ், மற்ற மொழிகளுக்கு இல்லாத பல தனிச்சிறப்புகளையும் அவற்றின் விளைவாக உலகில் தனிப் பெருமையையும் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இன்றைய மொழி அறிவியலான மொழியியலின் பார்வையில், தமிழ் ஒலியன்களும் மாற்றொலிகளும் மிகுந்த சிக்கனத்துடனும் ஒலியியல் முறைசார்ந்த புணர்ச்சிக் கோட்பாடுகளுடனும் அமைந்திருப்பதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொல்காப்பியத்தில் எழுத்தொலிகளும் அவை பிறக்கும் முறையும் ஒலியுறுப்புகளின் செயற்பாடும், இன்றைய மொழியியல் வல்லுநர்கள் வியக்கும் அளவுக்குச் சரியாகவும் நுட்பமாகவும் விளக்கப்பட்டிருப்பதும் தனிப்பெருமைக்குரிய தமிழ்ச்சிறப்பே.
தமிழரொடு புலம்பெயர்ந்து தரணியெங்கும் வாழ்பவளே
தமிழர் பண்டு குடியேறிய நாடுகளில் மட்டுமன்றி, இன்று புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் வழங்கிவருகிறது. மதிப்பும் செல்வாக்கும் மிக்க உலக மொழியான ஆங்கிலம் முதன்மை பெற்றுள்ள நாடுகளில்கூடத் தமிழ் ஒலிக்கிறது. பிரான்சு, கனடா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளில் தமிழ்ச்சங்கங்கள் இயங்குகின்றன; தமிழ் இலக்கிய விழாக்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு தமிழர் எங்குச் சென்றாலும் அங்கெல்லாம் தமிழும் சேர்ந்துசென்று உலகெல்லாம் பரவி வாழ்வதை இத் தொடர் குறிக்கிறது.
எங்களெழில் மலேசியத்தில் சிங்கைதன்னில் ஈழமண்ணில்
எங்களெழில் என்ற தொடர், தமிழர், தாம் குடியேறிப் பின்னர்க் குடிமக்களாகிவிட்ட நாடுகளைத் தங்கள் நாடாகவே கருதிவாழும் பற்றைக் குறிக்கிறது. மலேசியா சிங்கை ஈழம் ஆகிய மூன்று நாடுகளும், தமிழர் தனிக் குமுகாய அடையாளத்துடன் அரசியல், கல்வி, வாணிகம் எனப் பல்வேறு துறைகளிலும் உரிமையும் பங்கும் பெற்று வாழும் நாடுகளாகும். இந் நாடுகளில் எல்லாத் துறைகளிலும் தமிழுக்கும் இடம் உண்டு. எனவே, இம் மூன்று நாடுகளும் தனியே சிறப்பித்துக் குறிப்பிடப்படுகின்றன.
இந்தத் தமிழ்வாழ்த்து மலேசியாவில் உருவானதால், இந்த அடியில், மலேசியா முதலிலும் அதனை அடுத்துள்ள அண்டை நாடான சிங்கை இரண்டாவதாகவும், தமிழகத்தை அடுத்த ஈழம் மூன்றாவதாகவும் இடம்பெற்றுள்ளன. மலேசியாவில் பாடப்படும்போது, இந்த அடியைப் பாடலில் உள்ளபடியே,
“எங்களெழில் மலைசியத்தில் சிங்கைதனில் ஈழமண்ணில்
என்று மலேசியாவை முதன்மைப்படுத்திப் பாடலாம். முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை வாய்க்கும்; முதற்சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வாய்க்கும். இதே அடியைச் சிங்கையில் பாடுவதாயின்,
“எங்களெழில் சிங்கைதனில் மலைசியத்தில் ஈழமண்ணில்”
என்று சிங்கையை முதன்மைப்படுத்திப் பாடலாம். முதற்சீரிலும் இரண்டாம் சீரிலும் எதுகை வாய்க்கும்; முதற்சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வாய்க்கும்.. இதையே இலங்கையில் பாடுவதாயின்,
“எங்களெழில் ஈழமண்ணில் சிங்கைதனில் மலைசியத்தில்”
என்று ஈழத்தை முதன்மைப் படுத்திப் பாடலாம். முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை வாய்க்கும்; முதற்சீரிலும் இரண்டாம் சீரிலும் மோனை வாய்க்கும்.
எனவே, இந்த அடியின் மேற்கண்ட மூன்று வடிவங்களிலும் எதுகை மோனைகளில் குறையிராது. நான்கு சீர்களுமே விளங்காய்ச் சீர்களாதலின் ஓசையும் கெடாது; இசையிலும் சிக்கல் நேராது.
இம் மூன்று நாடுகளிலும் பாடுதற்குப் பொருந்துமாறே இந்த அடி புனையப்பட்டுள்ளது.
இலக்கியமாய் வழக்கியலாய் இனக்காவல் தருபவளே
எந்த நாட்டிலும், இலக்கியத்திலும் வழக்கிலும் பயன்பாட்டில் உள்ள மொழியே வலிமையுடன் தொடர்ந்து வாழும். இத்தகைய மொழிவலிமை அம் மொழிக்குரிய இனத்தின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாத தேவையாகும். மேற்கூறிய மூன்று நாடுகளிலும், தமிழ், தமிழ மக்களிடையே அன்றாட வாழ்க்கை மொழியாக வழங்கிவருகிறது. தமிழுக்கென்றே தனிப்பள்ளிகள் உள்ளன. பல்கலைக் கழகம் வரை தமிழ்கற்க வாய்ப்புண்டு. ஒலிஒளி ஊடகங்களில் தமிழுக்கு இடமுண்டு. தமிழ் நாளேடுகளும் கால இதழ்களும் வெளிவருகின்றன. எழுத்தாளர்களும் கவிஞர்களும் உள்ளனர்; இலக்கிய அமைப்புகள் செயற்படுகின்றன. எனவே, இந் நாடுகளில் தமிழ், இலக்கியத்திலும் வழக்கிலும் வாழ்ந்து தமிழரின் இன அடையாளத்துக்குக் காவலாய் விளங்குவதை இந்த அடி குறிக்கிறது.
பொங்கிவளர் அறிவியலின் புத்தாக்கம் அத்தனைக்கும்
பொங்குதல் என்ற சொல், அளவும் விரைவும் மிகைபடுவதைக் குறிக்கிறது. பொங்கிவளர் என்பது, மிகுதியாகவும் விரைவாகவும் நிகழும் வளர்ச்சியைக் குறிக்கிறது. இவ்வாறு மிகுந்தும் விரைந்தும் வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தால், ஒவ்வொரு நாளும் புதுப்பது மின்னியல் கண்டுபிடிப்புகளும் நுண்கருவிகளும் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. இவ்வாறான புதிய ஆக்கங்கள் அனைத்தையும் இத் தொடர் சுட்டுகிறது.
பொருந்தியின்று மின்னுலகில் புரட்சிவலம் வருபவளே
பழைமையான எதுவும் புதுமையான ஆக்கங்களுக்கு ஒத்துவருவதில்லை என்பது பொதுவான நிலை. ஆனால், மிகப்பழைய தமிழோ, மேற்கூறியவாறு மிகுந்தும் விரைந்தும் வளர்ந்துருவாகும் புதிய அறிவியல் ஆக்கங்களுக்கு எல்லாம் ஈடுகொடுத்துப் பெருஞ்சிக்கல் ஏதுமின்றி இயல்பாகப் பொருந்திப் பயன்படுகிறது. மிகப் பழைய தமிழ், மிகப் புதியவையான இணையம், கைப்பேசி போன்ற கருவிகளின்வழி மின்னுலகில் உலவுவது இங்கே புரட்சிவலம் என்று குறிக்கப்படுகிறது.
செவ்வியலின் இலக்கியங்கள் செழித்திருந்த பொற்காலம்
தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய செவ்வியல் இலக்கியங்களே அதன் செம்மொழித் தகைமைக்குக் காரணமாய் விளங்குகின்றன. எனவே, தமிழ் மொழியும் இலக்கியமும் செழித்திருந்த அந்தக் காலமே தமிழுக்குப் பொற்காலம். இதனையே இந்த அடி சுட்டுகிறது
தமிழிலுள்ள செவ்வியல் இலக்கியங்கள், முன்னோர் சேர்த்துவைத்த அரிய செல்வமென்றே குறிக்கத் தக்கனவாகும். தமிழில் அவ்வாறு சேர்த்துவைக்கப்பட்ட இலக்கியவளம் செய்யுள் வடிவத்திலேயே இருக்கிறது. அந்த வளமே இன்று தமிழுக்கும் தமிழருக்கும் செம்மாப்பைத் தருவதாய் உள்ளது. இந்தச் செம்மாப்புக்கு காரணமாய் அமைவது பழங்காலத் தமிழும் இலக்கியமுமேயாகும். இவற்றையே இந்த அடி சிறப்பித்துக் குறிப்பிடுகிறது.
அவ்வியலில் வேரூன்றி அறிவுயர்ந்த தற்காலம்
அவ்வியல் என்ற சொல், பழந்தமிழின் செவ்வியல் தகைமையையே குறிக்கிறது. இன்றைய தமிழும் தமிழ் இலக்கியமும் அந்தப் பழங்காலச் செவ்வியல் தகைமையில் வேரூன்றியே வளர்ந்திருக்கின்றன. முற்காலத்தில் அறம், காதல், வீரம், கலை போன்ற துறைகளே முதன்மைபெற்றிருந்தன. தற்கால உலகம், அறிவுக்கே முதன்மையளித்து அறிவுசார்ந்த துறைகளில் உயர்வடைந்து வருகிறது. கலைசார்ந்த அன்றைய கவிதை வடிவத்தைவிட, அறிவார்ந்த உரைநடை வடிவமே தற்காலத்தில் மதிப்பிலும் பயன்பாட்டிலும் முதன்மை பெற்று விளங்குகிறது. இந்தக் கருத்தையே இந்த அடி குறிக்கிறது.
அழகழகாய் உரைநடையும் ஆளுகின்ற புதியவளே
கவிதையே இலக்கியத்துக்குரிய வடிவம் என்ற நிலையிலிருந்த தமிழ், அந் நிலை மாறி, உரைநடை செல்வாக்குப் பெற்று விளங்கும் இக் காலத்தில், கவிதைக்கு ஈடான அழகுடனும் கலைநயத்துடனும் உரைநடையையும் ஆளுவதற்கும் இடமளித்துப் புதிய பொலிவுடன் விளங்குவதை இந்த அடி குறிக்கிறது.
குலங்கடந்து நெறிகடந்து நிலவரம்பின் தடைகடந்து
குலம் என்ற சொல் தமிழரிடையே காணும் குலப்பிரிவுகளை மட்டும் குறிப்பதன்று; கல்வித்தகுதி, செல்வ நிலை, அதிகாரவலிமை போன்ற பல நிலைகளில் மக்களிடையே காணும் வேறுபாடுகளையும் குறிக்கிறது. நெறி என்ற சொல், தமிழர் பின்பற்றும் பல்வேறு சமய நெறிகளையும் கொள்கைகளையும் குறிக்கிறது. நிலவரம்பு என்ற சொல், மாநிலம் நாடு என எல்லைவகுத்துப் பிரிக்கப்படும் நிலப்பகுதிகளைக் குறிக்கிறது. இக் காலத்தில் இவை, மக்களைப் பிரிக்கும் வலிமையான எல்லைகளாகவும் வேறுபாடுகளாகவும் விளங்குகின்றன. ஆனால், மக்களைப் பிரிக்கும் இந்த எல்லைகளும் வேறுபாடுகளும் அவர்களிடையே வழங்கும் தமிழில் பிரிவை ஏற்படுத்துவதில்லை. எனவே, இந்த எல்லைகளும் வேறுபாடுகளும் ஏற்படுத்தும் தடைகளை எல்லாம் கடந்து, தமிழ் பொதுமை நிலையில் விளங்குவதை இந்த அடி குறிக்கிறது.
கோமகளாய்த் தமிழர்மனம் கொலுவிருக்கும் தமிழணங்கே
கோமகள் என்ற சொல் அரசி என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. கொலுவிருக்கும் என்ற சொல் உரிமையுடன் ஆட்சிசெய்யும் தகைமையைக் குறிக்கிறது. மேற்கூறிய எல்லைகளுக்கும் வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டதாகத் தமிழ்கூறு நல்லுலகம் முழுவதிலும் வாழும் தமிழர் அனைவரின் மனங்களிலும் சிறப்புரிமையுடன் அமர்ந்து ஆட்சிசெய்யும் அரசியாகத் தமிழை உருவகப்படுத்துகிறது இந்த அடி. இதிலுள்ள அணங்கு என்ற சொல் பெண்மையின் மிகவுயர்ந்த நிலையைக் குறிக்கும் சிறப்புப் பொருளுடையது.
நிலவினுக்கே பெயர்ந்தாலும் நினதாட்சி தொடருமம்மா
நிலவு நிலவுக்கோளையே குறிக்கிறது. இந்த மண்ணுலகில் வாழும் மனிதன் வேறு யாதேனும் ஒரு கோளில் குடியேறி வாழக்கூடும் என்றால், அவ்வாறு அவன் சென்றுவாழக்கூடிய முதற்கோள் நிலாவாக இருக்கலாம். இந்தக் கருத்து, வெறுங்கற்பனை என்ற நிலையைத் தாண்டி, அறிவியல் உரிய வளர்ச்சியை அடையும்போது நிகழக்கூடிய மாற்றமே என்னும் நிலையை இக் காலத்தில் அடைந்துவிட்டது. அவ்வாறு மனிதன் நிலவில் வாழும் காலம் வருமாயின், தமிழரும் நிலாக்கோளில் குடியேறி வாழ்வர். அந்த நிலையிலும் தமிழர் மனங்களில் தமிழ் ஆட்சிசெய்யும்; அதன்வழி தமிழின் ஆட்சி, நிலாவுலகிலும் தொடரும் என்ற ஆவலையும் நம்பிக்கையையும் வாழ்த்தையும் வெளிப்படுத்துகிறது இந்த அடி.
நிறைகுறையாச் செம்மொழியே நிலைபெறநீ வாழியவே
நிறை என்பது முழுமை என்ற பொருளில் இங்கே ஆளப்பட்டுள்ளது. நிறைகுறையா என்ற தொடர், முழுமை நிலையிலிருந்து குறைவுபடாத என்ற கருத்துடையது. உலகளவில் செம்மொழியாக மொழியறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ள லத்தீனம், கிரேக்கம், இபுறு, சீனம், சமற்கிருதம், தமிழ் ஆகிய ஆறு மொழிகளுள் தமிழின் நிலை தனிச்சிறப்புக்குரியது. செம்மொழிக்குரிய இன்றியமையாத தகுதிகள் என்று அறிஞர்கள் வகுத்துள்ள செம்மை, தொன்மை, பொதுமை, தாய்மை, தூய்மை போன்ற பல்வேறு தன்மைகளில், மற்ற மொழிகள் எல்லாம் ஒன்றிரண்டு குறைந்தவையாகவே உள்ளன. ஆனால், தமிழ், அந்தத் தகுதிகள் அத்தனையும் மொத்தமாக, முழுமையாகப் பெற்று விளங்குகிறது. இதனையே நிறைகுறையாச் செம்மொழியே என்ற தொடர் குறிக்கிறது.
நிலைபேறு என்பது உலகம் உள்ளவரை அழியாமல் நிலைபெற்றிருப்பதைக் குறிக்கும். இந்தப் பெரும் பேறுடையதாகத் தமிழ் என்றென்றும் சிறப்புடன் வாழவேண்டும் என்பதே ‘நிலைபெறநீ வாழியவே’ என்ற தொடரின் கருத்தாகும்.
பாட்டும் பயனும்
இந்தத் தமிழ்வாழ்த்து, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இயற்றப்பட்டது. இது, தமிழகத்துக்கு வெளியில், குறிப்பாக மலேசியாவில், பாடுதற்குரியதாக இருத்தல் வேண்டும்; புலம்பெயர்ந்து வாழும் தமிழரையும் அந் நாடுகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்; அறிவியல் தமிழ் பற்றியும் உரைநடை இலக்கியம் பற்றியும் குறிப்பிடவேண்டும் என்பன எழுத்தாளர் சங்கத்தின் வேண்டுகோள்கள். எனவே, இவற்றைக் கருத்திற்கொண்டே இப் பாடல் இயற்றப்பட்டது.
மேற்கூறிய கூறுகளுடன், தமிழின் வரலாற்றுச் சிறப்பு, இலக்கண இலக்கியச் செம்மை, உலகளாவிய நிலை, நிறைவான செம்மொழித் தகைமை, புதுமைகளுக்குப் பொருந்தும் ஆற்றல், எல்லாக் காலத்துக்கும் ஏற்றதாகும் இயல்பு, நிலைபேறு, தமிழரிடையே தமிழுக்குரிய தனிச்சிறப்பிடம் ஆகியனவும் இப் பாடலில் இடம்பெற்றுள்ளன. இசைப்பாடலுக்குத் தேவையான எளிமையும், அதேவேளை, தமிழ் வாழ்த்துக்குத் தகுதியான சொல்லாட்சியும் இதில் பேணப்பட்டுள்ளன.
தமிழர்கள், இந்தத் தமிழ் வாழ்த்தை, வாய்க்கும்போதெல்லாம் பாடினால், பாடும்போதெல்லாம் பொருளுணர்ந்து மனங்கலந்து பாடினால், வாழ்த்து வலிமைபெறும்; வாழ்த்த வாழ்த்த, வாழ்த்திய படியெல்லாம் தமிழ் வாழும். வாழ்த்தி வாழ்த்தி மகிழ்வோம்! நிறைகுறையாச் செந்தமிழ் நிலைபெற வாழ்க!
அன்புடன்,
செ. சீனி நைனா முகம்மது,
பினாங்கு, மலேசியா.
>>>>>>
இடுகை: நா.கண்ணன்
--
"Be the change you wish to see in the world." -Gandhi