(வெருளி நோய்கள் 466-470 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 471-475
ஊர்தி விற்பவர் தொடர்பாக (வாங்குநருக்கு) ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் ஊர்தி விற்பனையாளர் வெருளி.
ஊர்தி விற்பவர் ஊர்தி விற்பவர் தவறான அல்லது பொய்யான அல்லது மிகையான தகவல்களைக் கூறி ஏமாற்றுவார், அவரை நம்பி எங்ஙனம் ஊர்தியை வாங்குவது எனப் பேரச்சம் கொள்கின்றனர்.
00
ஊர்திகள் தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் ஊர்தி வெருளி.
amaxa or hamaxa, ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு வண்டி எனப் பொருள்.
00
ஊர்திக் கொட்டில் கழுவிடம் (garage sink ) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊர்திக் குழிசி வெருளி.
00
ஊர்திக் கொட்டில் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊர்திக் கொட்டில் வெருளி.
00
ஊர்திச் சங்கு(siren) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊர்திச் சங்கு வெருளி.
ஊர்திச் சங்கு(siren) எழுப்பும் பேரொலி கேட்டுப் பெரிதும் இடரோ இன்னலோ வருவதாக வெருளி கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 30 September 2025 அகரமுதல
(நாலடி நல்கும் நன்னெறி 14: நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – தொடர்ச்சி)
நாலடி நல்கும் நன்னெறி 15
கேடு எண்ணாதே! பொய் சொல்லாதே!
தான்கெடினும், தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க – வான்கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல்
(நாலடியார், பொறையுடைமை, 80)
தான் கெடினும் – தான் கெடுவதாக இருந்தாலும், அஃதாவது தனக்குக் கேடு வருவதாக இருந்தாலும்; தக்கார் கேடு எண்ணற்க – அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோருக்குக் கேடு செய்ய எண்ணாதே; தன் உடம்பின் ஊன் கெடினும் – தனதுடம்பின் தசை பசியால் வற்றிப் போனாலும் உண்ணார் கைத்து உண்ணற்க – நுகரத்தகாதவரது தரும் உணவை உண்ணாதே; வான் கவிந்த – வானம் சூழ்ந்த; வையகமெல்லாம் பெறினும் – வையகம் முழுமையும் பெறுவதாயிருந்தாலும் ; உரையற்க – சொல்லாதே ; பொய்யோ டிடை மிடைந்த சொல் – பேச்சினிடையில் பொய் கலந்த சொற்களை;
தம் இல்லத்தில் உணவு உண்ணாதவர் தரும் உணவை உண்ணக் கூடாது எனச் சிலர் விளக்கம் தருகின்றனர். வள்ளலோ சான்றோரோ உணவு தரும் பொழுது அதற்கு முன்னர் அவர் தன் வீட்டில் உணவு உண்டிருக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? எனவே, நுகரத்தகாத, பண்பால் கீழோரானவர் தரும் உணவு எனக் கொள்ளுவதே பொருத்தமாகும்.
பிறனுக்குக் கேடு செய்வதைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது என்பதைத் திருவள்ளுவரும்,
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. (திருக்குறள், ௨௱௪ – 204)
என்கிறார்.
தீயனவற்றை எண்ணலும் தீது என்பதே தமிழ் நெறி. எனவேதான் பிறருக்குக் கேடு செய்யாதே என்று சொல்லாமல் செய்கைக்கு அடிப்படையான கேடு செய்யும் எண்ணமும் வரக்கூடாது என்கிறது நாலடியார்.
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன், மெய் கூறுவல்;
எனத் தான் யாருக்காகப் பரிசு பெறவந்திருக்கிறாரோ அந்தச் சுற்றத்தார் வாழ்வதற்காகக்கூடப் பொய் கூற மாட்டேன் என்கிறார் புலவர் மருதன் இளநாகனார்(புறநானூறு 139).
அதுபோல்தான் நாலடியாரும் வாழ்வற்காகப் பொய் சொல்லக் கூடாது என்கிறது.
நாமும் யாருக்கும் எதற்காகவும் கேடு எண்ணாமலும் உலகமே நமக்குக் கிடைத்தாலும் பொய் பேசாமலும் வாழ்வோம்.
(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): தொடர்ச்சி)
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3
? தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்காவிட்டால் தமிழ்ப்பகைவர்கள் கை ஓங்கும் என்பது போல் கூறுகிறீர்களே! எப்படி? ஓர் எடுத்துக் காட்டு கூறுங்களேன்.
# தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளியும் தமிழின் சிறப்புகளைக் குறைத்தும் தமிழைப் பழித்தும் பேசியும் எழுதியும் வருபவர்கள்தாம் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் மாநாட்டின் மூலம் தவறான முடிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக மொழியியல் அமர்வில் எழுத்துச் சிதைவு பற்றிய உரை நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலர் இருக்கப் பொறியியல் படித்து விட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம், செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் முதலான தமிழ் வளர்ச்சி அமைப்புகளில் முதன்மைப் பொறுப்பு வகிக்கும் செல்வாக்கு பெற்ற பொறியாளர் ஒருவர், இம்மாநாட்டின் மூலம் எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் என்னும் பெயரில் எழுத்துச் சிதைவிற்கு வழிவகுக்கத் திட்டமிட்டுள்ளார். எனவே, தமிழன்பர்கள் புறக்கணித்தால், அனைவரின் முடிவு எனக் கூறித் தமிழ் எழுத்துச் சிதைவிற்கு ஆணை பிறப்பிக்கச் செய்ய அல்லது முதற்கட்டமாக அதற்கான குழு அமைக்க முடியும். தமிழன்பர்கள் பங்கேற்று ஒன்று திரண்டு எதிர்த்தால்தான் அதனைத் தடுக்க இயலும். எனவேதான் நானும் இவ்வமர்வில் ‘வரிவடிவச் சிதைவு வாழ்விற்கு அழிவு’ என்னும் தலைப்பில் கட்டுரை அளிக்கின்றேன். மாநாட்டிற்கு முன்பே உலகளாவிய எதிர்ப்பைத் தமிழன்பர்கள் காட்டிவருவதால்தான் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் கருத்தமர்வுத் தலைப்பை மாற்றி மொழியியல் தலைப்பின் கீழ் அவற்றைக் கொண்டு வந்துள்ளனர். இம்மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடைபெறுவதால் இணைய வழி இணையற்ற தமிழை நாம் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இவை தவிர தமிழ் அழிப்பாளர்களைக் காலம் வரலாற்றில் இருந்து அகற்றும் என்ற நம்பிக்கை இருந்தால் நாம் இம்மாநாட்டில் பங்கேற்பது குறித்துத் தவறாக எண்ண மாட்டோம்.
? நன்மைகள மட்டும் கூறுகிறீர்களே. அப்படியானால் செம்மொழி அறிந்தேற்பால் எதிர்பார்த்த நன்மைகள் அடைந்து விட்டோம் என்கிறீர்களா?
# அவ்வாறல்ல. உலகின் மூத்தமொழியான உயர்தனிச் செந்தமிழுக்கு அறிந்தேற்பு கிடைத்தது என்றால் என்னென்ன நன்மைகள் விளையும் என எதிர்பார்த்தோமோ அவற்றில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேறவில்லை; இனியாவது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் நாம் செயல்படுவோம்.
? எதிர்பார்த்து நடைபெறாமல் போனவற்றில் சிலவற்றைக் கூறுங்களேன்.
#
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
++