“தான் மலர்ந்தன்றே தமிழ்” என்ற அழகிய சொற்றொடர் வருவது பரிபாடல் என்ற சங்க இலக்கியத்தில். தானாக மலர்ந்த தமிழ். தமிழை யாரும் படைக்கவில்லை என்று சங்ககாலத்திலேயே சொல்லிவிட்டார்கள். இதற்கு இன்னொரு அர்த்தம், நமக்குள் தானாக மலர்வதுதான் தமிழ். சங்க இலக்கியங்களை இலக்கணம், உரைகள் போன்ற கவச கேடயங்களைப் போட்டுக் கொண்டு போருக்குச் செல்லும் ராணுவ வீரர்கள் போல் அணுகாமல் சாதாரணமாக ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் அணுகினால் அவற்றின்
தமிழ் நம்முள் தாமாக மலரும்.
‘கற்பு’ என்ற சங்ககால வார்த்தை அதன் மேல் திணிக்கப்பட்ட இலக்கண வரையறைகளால் சூரையாடப்பட்டிருக்கிறது. கற்பு என்றால் என்ன என்று கேட்டால்…களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என்று அகத்திணையை இரண்டாகப் பிரிக்கலாம் என்று லேசாக ஆரம்பிப்பார்கள். களவு என்றால் திருமணத்துக்கு முந்தைய காதல் வாழ்க்கை, கற்பு என்றால் திருமணத்துக்குப் பிந்தைய மோதல் வாழ்க்கை என்று தொல்காப்பியத்துக்குள் செல்வார்கள்… அதன்பிறகு ஹார்ட் டிஸ்க் நிரப்பி வழியும் அளவுக்குப் பிரிவுகள், பிரிவுகளுக்கான விளக்கங்கள் கொடுத்து இதெல்லாம் தெரியாமல் சங்க இலக்கியங்களை வாசிக்க வந்துவிடாதே என்று ஓட ஓட விரட்டுவார்கள். ஆனால், இவ்வளவையும் வைத்துக் கொண்டு சங்க இலக்கியங்களையும், அவற்றின் உரைகளையும் வாசித்தால் எல்லாமும் ஒரு பெண்ணைக் கற்போடு வாழச்சொல்வதாக, கற்புடைய பெண்களைப் புகழ்வதாக இருக்கும். இதைச் சொல்லதான் கற்புக்கு இத்தனை இலக்கணங்களா என்று தோன்றும். கணவன் ஒருவன் மனைவியை விட்டுவிட்டு பரத்தையரிடம் செல்வதை கற்பில் வரும் ஓர் இலக்கணப் பிரிவு என்று இலக்கணம் வகுத்தவர்கள் மனைவி ஒருத்தி கணவனை விட்டுவிட்டுப் பல் டாக்டரைப் பார்க்கச் செல்வதற்கு ஒரு பிரிவும் இல்லை என்று கால் சட்டையின் இரண்டு காலி பாக்கெட்டுகளையும் வெளியே எடுத்துப் போட்டு போஸ் கொடுப்பதைப் பார்க்கும் நிலை.
கற்பு என்றால் என்ன என்று இதே பரிபாடலில் உள்ளது.
“…சிறந்தது காதல் காமம்
காமத்து சிறந்தது
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்தலின் சிறந்தது கற்பே அது தான்”
அதாவது, “காதலால் வரும் காமம் சிறந்தது. காமத்தில் சிறந்தது விருப்பமுடையோர் மனமொத்து உடலால் இணைவது. கற்பு அதுதான்.” (‘புலத்தலின் சிறந்தது’ - சண்டை போடுவதைவிடச் சிறந்தது - என்பதை விட்டுவிட்டேன்.)
முற்போக்குச் சிந்தனை கொண்ட சிலர் இவை பரத்தையர் பற்றி பரிபாடலில் வரும் வரிகள், இந்த வரையறை out of context, கற்பு என்றால் திருமண ஒழுக்கம் என்பதுதான் சங்க இலக்கியம் சொல்வது என்பார்கள். அவர்கள் பேச்சைக் கேட்பதும், கேட்காமல் போவதும் உங்கள் விருப்பம். மேலும், ‘மெய்யுறு புணர்ச்சி’ என்பது களவியலில் வருவது. திருமணத்திற்கு முந்தைய காதல் வகை. பரிபாடல் எழுதியவர் அதை ஏன் கற்பு என்கிறார் என்ற இலக்கண ஆராய்ச்சிகளையும் தள்ளி வைத்துவிடுவோம். இதயத்துக்கு நல்லது. (இதே பரிபாடலில் அதற்கான விளக்கமும் உள்ளது. வேறு ஒருமுறை எழுதுகிறேன்.)
இருந்தாலும், ‘கற்பு’ என்றால் ‘விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி - விருப்பமுடையோர் மனமொத்து உடலால் இணைவது’ என்பது கற்பு என்ற வார்த்தையை consensual sex என்ற வரையறைக்குள் சுருக்கிவிடுவதாக உள்ளது. இந்த கற்புக்குள் இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து செல்வோம்.
வாய்ப்பேச்சு பேசும் புலவர்களே கேளுங்கள். நான் சொல்லவில்லை. பரிபாடலின் கற்பு பற்றிய வரையறை இப்படிதான் ஆரம்பிக்கிறது - “வாய்மொழி புலவீர் கேண்மின் சிறந்தது காதல் காமம், காமத்து சிறந்தது…”. அதற்கும் முன் இன்னொரு வரி வருகிறது. “நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மீன்…” நான்கு மறைகளையும் வாய்ப்பேச்சால் விளக்கும் புலவர்களே கேளுங்கள் என்று அர்த்தம். நான்கு மறைகள் என்றால் நான்கு வேதங்கள் என்றும், அவை அந்த காலத்தில் எழுதப்படாமல் வாய்மொழியாக இருந்ததால் இந்த வரிகள் என்றும் வைத்துக் கொள்வோம். இப்போது ஒரு குறுந்தொகைப் பாடலைத் துணைக்குக் கூப்பிடுவோம்.
“…எழுதாக் கற்பினின் சொல் உள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும்?” (குறுந்தொகை 156) ‘எழுதாக் கற்பு’ என்பது எழுதப்படாத கல்வி, அறிவு (எழுதப்படாத வேதங்கள் என்றும் அர்த்தப்படுத்துகிறார்கள்). “எழுதாக் கற்பினின் சொல் உள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும்?” என்றால் எழுதப்படாத உங்கள் அறிவில் பிரிந்த காதலர்களைச் சேர்க்க மருந்து கிருந்து உள்ளதா என்று நக்கலாகக் கேட்கும் பாடல் இது.
எழுதாக் கற்பு. இங்கே கற்பு என்பதைக் கல்வி, அறிவு என்று எடுத்துக் கொண்டால்… இப்போது பரிபாடலில் வரும் கற்புக்கான வரையறையை மறுபடி வாசியுங்கள். “காதலால் வரும் காமம் சிறந்தது. காமத்தில் சிறந்தது விருப்பமுடையோர் மனமொத்து உடலால் இணைவது. பிரச்சனை செய்யாமல் இதை ஏற்றுக் கொள்வதுதான் கல்வி, அறிவு (கற்பு).”
“தொலையா ‘கற்ப’ நின்” – பதிற்றுப்பத்து 43
“தொலையா ‘கற்ப’ நின்” – பதிற்றுப்பத்து 80
//அழியாத கல்வியினையுடையவனே//
“நல்லது கற்பித்தார்” – கலித்தொகை 112
//நன்றாகவே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்//
“கற்பித்தான் நெஞ்சு அழுங்க” – கலித்தொகை 149
//கற்பித்த ஆசிரியனின் நெஞ்சம் நோகும்படி//
கற்பு என்ற வார்த்தை கற்பித்தல், கற்றல் என்ற வார்த்தைகளுடன் தொடர்புடையது என்று இலக்கணம் எழுதியவர்களுக்கும் அவற்றுக்கு விளக்கம் எழுதியவர்களுக்கும் பல நூறு ஆண்டுகளாகவே தெரியும். ஆனாலும், ட்ரிக்காக “கணவனும், மனைவியும் தாங்கள் கற்றபடி, பிறர் அவர்களுக்குக் கற்பித்தபடி வாழ்வது கற்பு”, என்று சொல்லிவிட்டார்கள். திருமணம் முடிந்தவர்களுக்கு ‘பிறர்’ என்ன கற்பிப்பார்கள்? அடுத்து என்ன விசேஷம் என்பார்கள். அதற்கு அடுத்து என்ன விசேஷம் என்பார்கள். வீடு வாங்கியாச்சா என்பார்கள். வாயில் ஈஎம்ஐ நுரை தள்ளிக் கொண்டிருக்கும் போது உன் பெண்ணுக்கு கல்யாண வயது வந்துவிட்டதே என்பார்கள். அப்புறம் அந்த பெண்ணுக்கும் கற்பிப்பார்கள். இப்படி இவர்கள் கற்பித்தபடி வாழ்வது கற்பு!
‘கற்பு’ என்ற வார்த்தை சங்க இலக்கியங்களில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், தெய்வங்கள் என்று எல்லோருக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆண்களுக்கு ‘கற்பு’ எப்படி சங்க இலக்கியங்களில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது? பாரதியார், “கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”, என்று பாடியிருக்கிறார். சங்க இலக்கியங்களுக்கு உரை எழுதிய ஆண்மக்கள் ஆண்களுக்கு ‘கற்பு’ என்ற வார்த்தை வந்த இடங்களிலெள்ளாம் ஆண்களின் திருமண ஒழுக்கம், ஏக பத்தினர் என்றெல்லாம் உரையெழுதாமல் ‘கற்பு’ என்பதன் நியாயமான அர்த்தத்தில், அதாவது கற்றல், அறிவு, திறமை என்று உபயோகித்திருக்கிறார்கள்.
“உலகம் தாங்கிய மேம்படு ‘கற்பின்’ வில்லோர்” – பதிற்றுப்பத்து 59
//உலகத்து உயிர்களைத் தாங்குகின்ற, மேம்பட்ட ‘கல்வியறிவையுடைய’ வில்வீரர்களுக்கு//
“ஆஅய் எயினன் இகல் அடு ‘கற்பின்’ மிஞிலியொடு தாக்கி தன் உயிர் கொடுத்தனன்” – அகநானூறு 396
//ஆய் எயினன் என்பவன் போரில் வெல்லும் ‘பயிற்சியையுடைய’ நன்னனின் படைத்தலைவனான மிஞிலியுடன் போரிட்டு தன் உயிர் கொடுத்தான்//
“ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு தொறும்” – அகநானூறு 106
//ஒளிர்கின்ற வாட்படையினையுடைய வெற்றி பொருந்திய பாண்டியன் குற்றமில்லாத ‘படைப்பயிற்சியுடன்’ தான் மேற்கொண்டு சென்ற போர்க்களங்களில் வாகைசூடும்போதெல்லாம்//
“பல் மாண் ‘கற்பின்’ நின் கிளை முதலோர்க்கும்” – புறநானூறு 163
எல்லாம் கற்றல், அறிவு, திறமை போன்ற அர்த்தங்களில் உரைகளில் வருவது. ஆனால் இதே கற்பு என்ற வார்த்தை பெண்களுக்கு உபயோகிக்கப்பட்ட இடங்களில் மட்டும் உரையெழுதிய பெருமக்கள் கற்பொழுக்கம், திருமண ஒழுக்கம் என்று இலக்கண இன்ஃப்ளூயென்சர்களால் உந்தப்பட்டிருக்கிறார்கள்.
காலங்காலமாக சொல்லப்படும் விளக்கங்களையும், உரைகளையும் தள்ளி வைத்துவிட்டுக் கற்றல், அறிவு, திறமை போன்ற அர்த்தங்களை ‘கற்பு’ என்ற வார்த்தை பெண்கள் சம்பந்தப்பட்டு எங்கெல்லாம் சங்க இலக்கியங்களில் வருகிறதோ அங்கெல்லாம் போட்டால் அப்படியே பொருந்தும். முன்னால் பின்னால் உள்ள வார்த்தைகளால் எந்த முரணும் வராது என்பது ஆச்சரியமானது.
இந்த பரிசோதனையில் இறங்கும் முன்… முனைவர் பாண்டியராஜாவின் tamilconcordance, சங்கம்பீடியா தளங்கள் இது போன்ற எனது குழந்தைத் தனமான, குழந்தையின் ஆர்வம் கொண்ட அணுகுமுறைகளைக் கூட சாத்தியமாக்கியிருக்கின்றன. சங்க இலக்கியங்களில் கற்பு, கற்பு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் எங்கெல்லாம் வருகின்றன என்று சொடுக்கினால் லிஸ்ட் வந்துவிடுகிறது. அந்த வார்த்தைகள் வரும் பாடல்களுக்கு என்ன உரை இருக்கிறது என்பதும் அடுத்த சொடுக்கில் அங்கேயே வந்துவிடுகிறது. இந்த வசதி நம் முந்தைய தலைமுறை தமிழ் ஆர்வலர்களுக்குக் கிட்டாதது. பத்து ஆண்டுகள் பிடிக்க வேண்டிய ஒரு சிறு ஆய்வை பத்தே நிமிடத்தில் முடிக்க முடிந்தது. இது வெறும் ஆய்வுதான். எக்ஸ்பரிமென்ட். எந்த வகையிலும் ஆராய்ச்சியல்ல. தமிழாராய்ச்சி செய்யும் தகுதியும் எனக்கில்லை என்பதையும் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். பப்ளிக். பப்ளிக்.
பெண்கள் சம்பந்தப்பட்டு கற்பு என்ற வார்த்தை சங்க இலக்கியங்களில் உபயோகிக்கப்பட்ட இடங்களில் ஒரு பேட்டர்ன் தென்படுகிறது. ஒவ்வொன்றாகக் கடந்து செல்வோம். எல்லா இடங்களிலும் ‘கற்பு’ என்ற வார்த்தையை ‘அறிவு’ என்ற வார்த்தையாக மாற்றுவோம்.
——
முதலாவது, ‘கற்பு’ என்ற வார்த்தைக்கு முன் பல இடங்களில் ‘மாசு இல்’, ‘மறு இல்’, ‘மறு அறு’, ‘செயிர் தீர்’ போன்ற வார்த்தைகள் வருகின்றன. இவை எல்லாவற்றுக்கும் ஒரே அர்த்தம்தான். மாசற்றது. இதில் ஒரு காமெடி இருக்கிறது. ‘கற்பு’ என்ற வார்த்தைக்கு உரையெழுதிய சிலர் ‘மாசற்ற தன்மை’ என்ற அர்த்தத்தில் எழுதியிருக்கிறார்கள். கற்புள்ள பெண் என்றால் மாசற்ற பெண் என்று அர்த்தமாம். அப்படி என்றால் ‘கற்பு’க்கு முன்னால் ஏன் சங்கப்புலவர்கள் ‘மாசு இல்’ போட்டு ‘மாசு இல் கற்பு’ என்று எழுத வேண்டும்? ‘But ஆனால்’ என்பது போல. ‘மாசு இல் அறிவு’ என்றால் பொருந்தும். மாசு பிடித்த அறிவைத் தள்ளி வைத்துவிட்டு குழந்தை போல மாசற்ற அறிவுடன் ‘கற்பு’க்கு அறிவைப் போட்டு வாசிப்போம்.
“மறு இல் ‘கற்பின்’ வாள் நுதல் கணவன்” – திருமுருகாற்றுப்படை 6
//மாசற்ற அறிவையும், ஒளியுடைய நெற்றியினையும், உடையவளின் கணவன்//
“மாசு இல் ‘கற்பின்’ மடவோள் குழவி” – நற்றிணை 15
//மாசற்ற அறிவுடைய இளையவள் ஒருத்தி தன் குழந்தையை…//
“மாசு இல் ‘கற்பின்’ புதல்வன் தாய் என” – அகநானூறு 6
//மாசற்ற அறிவுடைய மகனுக்குத் தாயே என்று//
“அஞ்சு வரு மூதூர் திரு நகர் அடங்கிய மாசு இல் ‘கற்பின்’…” – அகநானூறு 114
//அச்சம்தரும் மூதூரிலுள்ள
செல்வம் நிறைந்த வீட்டிலிருக்கும் மாசற்ற அறிவுடைய…//
“மறு அறு ‘கற்பின்’ மாதவர் மனைவியர் நிறைவயின் வழாஅது நின் சூலினரே” – பரிபாடல் 5
//மாசற்ற அறிவுடைய அந்த முனிவர்களின் மனைவியர் நிறைவாக இருந்து உன்னைக் கருக்கொண்டனர்//
“செயிர் தீர் ‘கற்பின்’ சேஇழை கணவ” – புறநானூறு 3
//மாசற்ற அறிவினையுடைய சிறந்த அணிகலன் அணிந்தவளுக்குக் கணவனே!//
——
இரண்டாவது, ‘கற்பு’ என்ற வார்த்தை பெண்கள் சம்பந்தப்பட்டு வரும் பெரும்பாலான இடங்களில் ‘நுதல்’ எனப்படும் நெற்றியும் கூடவே வருகிறது. அதுவும், ‘வாள் நுதல்’ எனப்படும் வாள் போல கூர்மையான, ஒளி பொருந்திய நெற்றி. அறிவுக் கண் உள்ள இடம்? நெற்றிக்குப் பின்னேதானே அறிவு தரும் மூளை இருக்கிறது. உரைகளில் அறிவைப் பொருத்திப் பார்ப்போம்.
“நாணொடு மிடைந்த ‘கற்பின்’ வாள் நுதல்” – அகநானூறு 9
//நாணத்தோடு கலந்த அறிவும், ஒளிபொருந்திய நெற்றியினையும்//
“மனை மாண் ‘கற்பின்’ வாள் நுதல் ஒழிய” – அகநானூறு 33
//வீட்டை மாண்புறவைக்கும் அறிவையும், ஒளிரும் நெற்றியையும் உடையோளைப் பிரிந்து//
“‘கற்பு’ இறைகொண்ட கமழும் சுடர் நுதல்” – பதிற்றுப்பத்து 70
//அறிவு குடிகொண்ட, மணங்கமழும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய//
“ஒலிந்த கூந்தல் அறம் சால் ‘கற்பின்’ குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல்” – பதிற்றுப்பத்து 31
//செழிப்பான கூந்தலையும், அறம் சார்ந்த அறிவினையும், காதிலிருக்கும் (?) குழைக்கு விளக்கு போல வெளிச்சம் தரும் ஒளிவிடும் நெற்றியையும்…//
“காமர் கடவுளும் ஆளும் ‘கற்பின்’ சேண் நாறு நறு நுதல் சேஇழை” – பதிற்றுப்பத்து 65
//எல்லாரும் விரும்பும் கடவுளரையும் ஆளும் அறிவுடைய, மிக்க தொலைவுக்கும் மணக்கும் நறிய நெற்றியையுடைய//
“மறம் கடிந்த அரும் கற்பின் அறம் புகழ்ந்த வலை சூடி சிறு நுதல்” – புறநானூறு 166
//வீரத்தை மிஞ்சிய பெறுவதற்கரிய அறிவினையுடையவள், அறத்தைப் புகழ்பவள், நெற்றியணி சூடிய சிறிய நெற்றியினையுடையவள்//
“நாண் அலது இல்லா ‘கற்பின்’ வாள் நுதல் மெல் இயல் குறுமகள் உள்ளி” – புறநானூறு 196
//நாணம் ஒன்றைத்தவிர வேறு ஒன்றாலும் மறைக்க இயலாத அறிவினையும், ஒளிரும் நெற்றியையும்,
மென்மையான இயல்பினையும் உடைய என் குறுமகளை நினைத்து //
இந்த குறுமகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த குறுமகளும் ‘கற்பு’ என்ற வார்த்தை வரும் பல இடங்களில் வருவாள். அறிவுள்ள பெண்ணுக்குச் செல்லப்பெயர்!
——
மூன்றாவது, ‘கடவுள் கற்பு’ என்ற சொல்லாடல் பெண்கள் பற்றிய கற்பு வரும் இடங்களில் வருகிறது. இது ஒரு தெய்வீக அறிவாக, devine wisdom போல் இருக்கலாம். தெய்வீக அறிவை உரைகளில் பொருத்துவோம்.
“கடவுள் ‘கற்பின்’ அவன் எதிர் பேணி” – குறுந்தொகை 252
//தெய்வ அறிவால் அவனுக்கு எதிர்சென்று உபசரித்து//
“கடவுள் ‘கற்பின்’ மடவோள் கூற” – அகநானூறு 314
//தெய்வ அறிவுடைய மடவோள் கூற//
“கடவுள் ‘கற்பொடு’ குடிக்கு விளக்கு ஆகிய புதல்வன் பயந்த” – அகநானூறு 184
//தெய்வ அறிவோடு, குடிக்கு விளக்காக அமைந்த புதல்வனைப் பெற்ற// (இங்கே ‘கற்பு’/அறிவு என்பதை அந்த சிறுவனுக்கான அறிவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.)
“கடவுள் சான்ற கற்பின் சே இழை” – புறநானூறு 198
//தெய்வத்தன்மை அமைந்த அறிவினையும், சிவந்த ஆபரணத்தையும் உடைய//
——
நான்காவது, ‘முல்லை சான்ற கற்பு’ என்று ஒரு பெண்கள் சம்பந்தப்பட்ட கற்பு. குறுமகளும் இங்கே வருகிறாள். முல்லை சான்ற என்றால் முல்லை சூடுதற்காக அமைந்த. முல்லையைத் தலையில் சூடுவார்கள் என்று வைத்துக் கொண்டால் நுதல் போல, இங்கே தலை. அறிவு இருக்குமிடம். (கேட்டால் இது முல்லைத் திணை கற்பொழுக்கம் என்பார்கள். கேட்காமல் விட்டுவிடுவோம்.)
“முல்லை சான்ற ‘கற்பின்’ மெல் இயல்” – சிறுபாணாற்றுப்படை 30
“முல்லை சான்ற ‘கற்பின்’ மெல் இயல் குறுமகள்” – நற்றிணை 142
“முல்லை சான்ற ‘கற்பின்’ மெல் இயல் குறுமகள்” – அகநானூறு 274
//முல்லை சூடுதற்கமைந்த அறிவும், மெல்லிய இயல்பினையும் உடைய குறுமகள்//
இந்த மூன்று பாடல்களையையும் எழுதியவர் ஒரே புலவராக இருக்கலாம். ஒருவர் பெயர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். மற்ற இருவர் பெயர் இடைக்காடனார். இலக்கியம் இயற்றிய இடையர்கள்.
——
ஐந்தாவது, ஆறிய கற்பு (அமைதி கொண்ட அறிவு), அடங்கிய கற்பு (அடக்கம் கொண்ட அறிவு), ஆன்ற கற்பு (நிறைந்த அறிவு), மலிந்த கற்பு (பரந்து நிறைந்த அறிவு), இறந்த கற்பு (மிக உயர்ந்த அறிவு), நன்றி சான்ற கற்பு (நன்மை மிகுந்த அறிவு)… என்று பலவகை. இவற்றிலெல்லாம் திருமண கற்பொழுக்கம், கணவனைத் துதிக்கும் ஒழுக்கம் போன்ற அர்த்தங்கள் சற்றும் பொருந்தாது. கற்ற, அறிவுள்ள பெண்ணை, அவளது அறிவைப் பெருமையாகப் பேசும் சங்க இலக்கிய வரிகள்.
“ஆறிய ‘கற்பின்’ அடங்கிய சாயல் ஊடினும் இனிய கூறும் இன் நகை” – பதிற்றுப்பத்து 16
//அமைதிகொண்ட அறிவும், அடக்கமான சாயலும், ஊடிய காலத்திலும் இன்சொற்களைக் கூறும் இனிதான முறுவலும்//
“ஆறிய ‘கற்பின்’ தேறிய நல் இசை வண்டு ஆர் கூந்தல் ஒண்தொடி கணவ” – பதிற்றுப்பத்து 90
//அமைதிகொண்ட அறிவும், தெளிவாய் விளங்கும் நல்ல புகழையும் வண்டு மொய்க்கும் கூந்தலையும், ஒளிவிடும் தொடிகளையும் உடையவளுக்குக் கணவனே!//
“விளங்கு நகர் அடங்கிய ‘கற்பின்’ நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே” – குறுந்தொகை 338
//பொலிவுற்ற இல்லத்தில் அடக்கமான அறிவை உடைய தலைவியின் தனிமைத்துயர் நீங்கும்படி//
“அடங்கிய ‘கற்பின்’ ஆய் நுதல் மடந்தை” – புறநானூறு 249
//நிறைந்த அறிவும் அழகிய நெற்றியையும் உடைய பெண்//
“ஆன்ற ‘கற்பின்’ சான்ற பெரியள்” – அகநானூறு 198
//நிறைந்த அறிவால் உயர்ந்த பெரியவள்//
“பொறையொடு மலிந்த ‘கற்பின்’ மான் நோக்கின் வில் என விலங்கிய புருவத்து” – புறநானூறு 361
//பொறுமைக் குணங்களோடு பரந்து நிறைந்த அறிவும், மான் போன்ற பார்வையையும், வில் போல் வளைந்த புருவத்தையும்//
“இறந்த ‘கற்பினாட்கு’ எவ்வம் படரன்மின்” – கலித்தொகை 9
//மிக உயர்ந்த அறிவுடையவளுக்காக வருத்தம் கொள்ளாதீர்!//
“நன்றி சான்ற ‘கற்பொடு’ எம் பாடு ஆதல் அதனினும் அரிதே” – நற்றிணை 330
//நன்மை மிகுந்த அறிவோடு எம்மைப்போல் குலமகளிரின் பெருமையை அடைதல் அதனினும் அரிது.//
——
ஆறாவது, சிக்கலானது. பெரும்பாலான உரையாசிரியர்கள் சிக்கிக் கொண்டது. “அருந்ததி அனைய கற்பின்…” என்று ஐங்குறுநூறு பாடல் ஒன்றில் வருகிறது. இதை அருந்ததி கதையுடன் பொருத்தி, அந்த அருந்ததியை விண்மீனுடன் பொருத்தி, வேறு எங்கெல்லாம் விண்மீன் வருகிறதோ அங்கெல்லாம் அருந்ததியைப் பொருத்தி… அருந்ததி போன்ற கற்புடைய பெண் என்று உரை எழுதியிருக்கிறார்கள். விண்மீன் போன்று மின்னும் அறிவுடைய பெண் என்று எளிதாக எடுத்துக் கொள்வதை விட்டு விட்டு விண்வெளியெங்கும் சுற்றி பெண்ணின் கற்பைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள்.
“அருந்ததி அனைய ‘கற்பின்’…” – ஐங்குறுநூறு 442
//அருந்ததியைப் போன்ற அறிவினையுடைய//
மீதி பாடல்களில் வரும் வரிகளை நீங்களே வாசியுங்கள். இதில் எங்கேயாவது அருந்ததி வருகிறதா? ஆனால் உரைகளிலெல்லாம் அருந்ததி போன்ற என்று ஒரு பிட்டைச் சேர்த்திருப்பார்கள். அவற்றை நாம் தூக்கிவிட்டு அறிவைச் சேர்ப்போம். கூடவே கவனிக்க வேண்டியது நுதல்.
“சிறு மீன் புரையும் ‘கற்பின்’ நறு நுதல்” – பெரும்பாணாற்றுப்படை 303
//சிறு விண்மீனைப் போன்ற அறிவும், நறிய நெற்றியினையும்//
“மீனொடு புரையும் ‘கற்பின்’ வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தே” – பதிற்றுப்பத்து 89
//விண்மீனைப் போன்ற அறிவினையுடைய ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்ணுடன் அழகுற விளங்கி//
“வடமீன் புரையும் ‘கற்பின்’ மட மொழி” – புறநானூறு 122
//வடமீனைப் போன்ற அறிவினையும், மென்மையான மொழியினையும் உடைய//
“வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய ‘கற்பினாள்’” – கலித்தொகை 2
//வடமீன் போல வணங்கி வழிபடக்கூடிய பிறரால் போற்றுதற்குரிய அறிவினையுடையவள்//
வனத்தைப் பார்த்து நட்சத்திரங்களைப் பார்த்து கோள்களைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட பண்டைய உலகில் அறிவை வானத்து நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
இனிமேல் வருவதெல்லாம் அல்டிமேட்! கற்பு என்றால் பெண்களின் கற்றல், அறிவு, திறமை கச்சிதமாகப் பொருந்தும் பஞ்ச் வரிகள்.
“பொருள் பொருள் ஆகுமோ நிலைஇய ‘கற்பினாள்’ நீ – கலித்தொகை 2
//செல்வம் சிறந்த செல்வம் ஆகுமோ
நிலைபெற்ற அறிவுடையவளான உனக்கு?//
“வறன் ஓடின் வையகத்து வான் தரும் ‘கற்பினாள்’” – கலித்தொகை 16
//வறட்சி பரவினால் உலகத்தில் மழையைக் கொண்டுவரக்கூடிய அறிவினையுடையவள்//
“‘கற்பினின்’ வழாஅ நன் பல உதவி பெற்றோன்” – அகநானூறு 86
//அறிவிலிருந்து வழுவாத உன்னிடமிருந்து (உன் அறிவை வைத்து) நல்ல பல உதவிகளைப் பெற்ற உன் கணவன்//
“‘கற்பு’ இணை நெறியூடு அற்பு இணை கிழமை” – பரிபாடல் 9
//அறிவு இணையும் நெறியுடன், அன்பும் இணையும் உரிமையுடன்//
“காணிய வம்மோ ‘கற்பு’ மேம்படுவி” – அகநானூறு 323
//காண்பதற்கு வருவாயோ அறிவினால் மேம்பட்டவளே!//
“கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல” – புறநானூறு 383
//அறிவுடைய பெண் தன் முதுகைத் தழுவிக் கிடக்க//
கற்புக்கான இலக்கணம் படைத்தவர்கள் சங்க இலக்கியங்களை நேர்மையாக ஆணாதிக்கச் சிந்தனையின்றி வாசித்திருந்தால் மாசற்ற கற்பு, கடவுள் கற்பு, ஆறிய கற்பு, அடங்கிய கற்பு, ஆன்ற கற்பு, நன்றி சான்ற கற்பு, முல்லை சான்ற கற்பு, மீனொடு புரையும் கற்பு… போன்ற வகைகளில்தான் கற்பை வகைப்படுத்தியிருப்பார்கள். அது இயற்கையாகவே அறிவு என்ற திசையில் பயணித்திருக்கும். அதற்கு வேறு எந்த அர்த்தம் இருந்தாலும் இலக்கணங்களில் சொல்லும் பெண்ணின் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட அர்த்தங்கள் ஜாக்கி சான் பேசுவதற்கு ஏலே மச்சான் என்று டப்பிங் பேசுவது போலதான் இருக்கின்றன. குறைந்த பட்சம், கற்பு என்பது ஒழுக்கம் என்றால் அது என்ன நெற்றியில் (நுதலில்) எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது என்றாவது யோசித்திருக்க வேண்டும்.
ஏன் கற்பு என்ற வார்த்தை சங்க இலக்கியங்களில் பெண்களோடு அதிகம் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது? ஏனென்றால்… கற்றல், அறிவு ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக சங்க காலத்தில் ஏன் இருந்திருக்கக் கூடாது? இலங்கியங்கள் படைத்திருக்கிறார்கள். அரசாங்கங்களுக்கிடையே தூது சென்றிருக்கிறார்கள். இமயமலை வரை காதலனைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். முன்பின் தெரியாத பாணர்களுடன் பயமின்றிப் பயணித்திருக்கிறார்கள். பசலை போன்ற பிரத்யேக பாலியல் உடலியல் விஷயங்களைப் பொதுவெளியில் தயக்கமில்லாமல் பேசியிருக்கிறார்கள். இப்படி அறிவுள்ள (கற்புள்ள) பெண்களை ஏன் சங்க இல்க்கியங்கள் புகழ்ந்திருக்கக் கூடாது? சங்க கால ஆண்கள் ஏன் அறிவார்ந்த பெண்களை நேசித்திருக்கக் கூடாது? கற்புள்ள (அறிவுள்ள என்ற அன்றைய அர்த்தத்தில்) பெண்களை விட கற்புள்ள (இன்றைய அர்த்தத்தில்) பெண்கள்தான் வேண்டும் என்று சங்ககால இளைஞர்கள் இருந்திருந்தார்கள் என்று இன்று நாம் கருதினால் அது அந்த இளைஞர்களையும் குறைத்து மதிப்பிட வைக்கும் சிந்தனை.
மற்றபடி, வழங்கமான டிஸ்க்ளெய்மர்: உரையாசிரியர்கள், தமிழறிஞர்கள் சொல்வதுதான் சங்க இலக்கியங்களுக்கு சரியான விளக்கங்கள்.
“வணங்கு உறு ‘கற்பொடு’” – அகநானூறு 73
//வணங்குதற்குரிய அறிவுடன்//