கோயம்புத்தூர் ‘பெரியார் அறிவுலகம்’ — நூலகம், அறிவியல், பகுத்தறிவு இணையும் அறிவுக் கோயில்
- எம்.ஜே. பிரபாகர்

முன்னுரை:
ஒரு நூலகம் என்பது வெறும் புத்தகங்களைச் சேமித்து வைக்கும் கட்டடம் மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கும், சிந்தனை மாற்றத்திற்கும், பண்பாட்டு முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக விளங்கும் ஓர் அறிவு நிலையமாகும். அந்த வகையில், கோயம்புத்தூர் நகரில் உருவாக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம், நூல் வாசிப்பையும் அறிவியல் கல்வியையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் முக்கியமான பொதுக் கல்வி வளாகமாகத் திகழ்கிறது.
காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள இந்த அறிவுலகம், தந்தை பெரியார் ஈ.வெ.ரா. வலியுறுத்திய பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி, அறிவியல் மனப்பான்மை ஆகிய கருத்துகளை நினைவூட்டும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது.
2026 அக்டோபர் 16 அன்று தற்போதைய முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் திறந்து வைத்தார். இந்த வளாகம், கோயம்புத்தூரின் கல்வி மற்றும் அறிவியல் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க புதிய முயற்சியாகும்.
பெரியார் அறிவுலகத்தின் உருவாக்கமும் பின்னணியும்
தமிழ்நாட்டில் பொது நூலகங்களை விரிவுபடுத்துவது என்பது வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், கல்வி வாய்ப்புகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கான ஒரு சமூக முயற்சியாகவும் அமைகிறது. பொருளாதார வசதியுள்ளவர்களுக்கு மட்டுமன்றி, சாதாரணக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள், ஆய்வாளர்கள், தொழில்முனைவோர், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் தரமான அறிவு வளங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே இத்தகைய நூலகங்களின் அடிப்படை நோக்கமாகும்.
இந்தப் பின்னணியில் கோயம்புத்தூரில் கடந்த தி மு க ஆட்சியில் அன்றைய முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அரசால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட பெரியார் அறிவுலகம், நூலகம், அறிவியல் மையம், கோளரங்கம், மின்னூலகம் உள்ளிட்ட வசதிகளை ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கிறது.
இத்திட்டத்திற்குச் சுமார் ரூ.301.71 கோடி செலவிடப்பட்டுள்ளது. சுமார் 6.98 ஏக்கர் நிலத்தில், ஏறத்தாழ 1.98 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவில், தரைத்தளத்துடன் ஏழு தளங்களைக் கொண்ட வளாகமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரம்மாண்டமான கட்டமைப்பின் உண்மையான வெற்றி அதன் தோற்றத்தில் மட்டுமல்ல; அது மக்களிடையே ஏற்படுத்தும் அறிவு வளர்ச்சியிலும், வாசிப்புப் பழக்கத்திலும், சமூக விழிப்புணர்விலும் அமைய வேண்டும்.
கட்டடக் கலை மற்றும் நூலகத்தின் சிறப்பம்சங்கள்
பெரியார் அறிவுலகத்தின் கட்டட அமைப்பு, நவீன நூலகம் ஒன்றின் தேவைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை நினைவூட்டும் வெளிப்புறத் தோற்றம், பல தளங்களைக் கொண்ட அமைப்பு, வாசிப்புக்கான தனித்தனி பிரிவுகள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.
“பெரியார் நூலகக் கட்டிடத்தை நிர்மானித்த பொறியாளர்”
பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ (Thanthai Periyar Grand Library & Science Centre) கட்டிடத்தை வடிவமைத்ததன் மூலம் இந்திய அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள பெருமைக்குரிய பெண் கட்டடக் கலைஞர் டாக்டர் பொன்னி ஆஸ்கர் (Ponni Oscar Concessao) ஆவார்.
இந்தியக் கட்டடக் கலைத் துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதித்து வரும் முன்னணி பெண் ஆளுமைகளில் டாக்டர் பொன்னி ஆஸ்கர் மிகவும் முக்கியமானவர். கல்வி, நிர்வாகம், விண்வெளி அறிவியல் மற்றும் நவீன பொதுக்கட்டடங்கள் எனப் பல்வேறு பரிமாணங்களில் தனது தனித்துவமான வடிவமைப்புத் திறனால் உலகளாவிய புகழ்பெற்றவர் தான் பொன்னி ஆஸ்கர்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விப் போராட்டம்
சென்னையைச் சேர்ந்த பொன்னி ஆஸ்கர், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT - அப்போதைய REC) தனது இளங்கலை கட்டடப் பொறியியல் படிப்பை (B.Arch) பயின்றார். “இவர் கல்லூரியில் சேர்ந்த காலகட்டத்தில் அங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற சூழல் நிலவியது. கல்லூரி நிர்வாகம் இவருக்கு அனுமதி மறுத்த போதிலும், அதனை எதிர்த்துத் தீவிரமாகப் போராடி அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வெற்றி பெற்றவர்.”
தொடர்ந்து அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி மற்றும் உலகளாவிய கட்டடக் கலை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
இவரும் இவரது கணவர் ஆஸ்கர் கொன்சாவோ இணைந்து 'Oscar & Ponni Architects' என்ற புகழ்பெற்ற நிறுவனத்தை இருவரும் நடத்தி வருகின்றனர்.
முக்கிய சாதனைகளும் மைல்கற்களும்
டாக்டர் பொன்னி ஆஸ்கர் தனது கணவருடன் இணைந்து பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பிரம்மாண்டக் கட்டடங்களை வடிவமைத்துள்ளார்:
தெலங்கானா மாநில புதிய தலைமைச் செயலகம்:
இந்தியாவின் மிக நவீன மற்றும் பிரம்மாண்டமான மாநிலத் தலைமைச் செயலகங்களில் ஒன்றான தெலங்கானா தலைமைச் செயலகத்தை வடிவமைத்ததில் இவர்களின் பங்கு முக்கியமானது. இதன் மூலம் இந்தியாவின் மிக முக்கியமான அரசுத் தலைமைச் செயலகத்தை வடிவமைத்த பெண் ஆர்க்கிடெக்ட் என்ற பெருமையைப் பெற்றார்.
இஸ்ரோவின் ககன்யான் திட்டம்:
விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான இஸ்ரோவின் பெருமைமிகு 'ககன்யான்' திட்டக் கட்டமைப்புகளிலும் இவர் தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக வழங்கியுள்ளார்.
பெரியார் அறிவுலகம், கோயம்பத்தூர்:
கோவை காந்திபுரம் பகுதியில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள அறிவுக்கோயிலான 'பெரியார் அறிவுலகம்' இவரின் சமீபத்திய மிகச்சிறந்த படைப்பாகும்.
கோயம்பத்தூர் பெரியார் அறிவுலகமும் பொன்னி ஆஸ்கரின் வடிவமைப்பும்
கோயம்பத்தூரில் புத்தக வடிவில், நவீன அறிவியல் அற்புதங்களுடன் அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகம் மற்றும் அறிவியல் மையம் ஆசியாவின் மிகச்சிறந்த அறிவுசார் மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப, ஒரு திறந்த புத்தகத்தின் வடிவத்தை ஒத்ததாக இந்நூலகம் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 7 தளங்களைக் கொண்டுள்ள இக்கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகப் பிரிவு, குழந்தைகள் நூலகம், போட்டித் தேர்வர்களுக்கான அரங்கம், வரலாற்று ஆவணப் பகுதிகள், டிஜிட்டல் நூலகம், ஆசியாவிலேயே முதன்முறையாகக் கொண்டுவரப்பட்ட 'ஸ்பேஸ் லிப்ட்' (Space Lift) வசதி மற்றும் விண்வெளி கோளரங்கம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இத்தகைய பிரம்மாண்டமான பன்முகக் கட்டடத்தை மிக நேர்த்தியாகவும், எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் வடிவமைத்துத் தந்துள்ளதன் மூலம் கோவையின் புதிய அடையாளத்தை உருவாக்குவதில் பொன்னி ஆஸ்கர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
கட்டடக் கலைத் துறையில் இவர் செய்த சாதனைகளுக்காக பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உள்ளிட்ட பல தலைவர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ள பொன்னி ஆஸ்கர், பெண் பொறியாளர்கள் மற்றும் பெண் ஆர்க்கிடெக்டுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் ஊக்க சக்தியாகவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.