(ஜானதன் ஃபிராங்க்ளின் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)
நிலப்பரப்பில் இருந்து தொலைதூரத்தில், பசிபிக் பெருங்கடலின் மையத்தில், மார்ஷல் தீவுகளின் (Marshall Islands) கடற்காயலில் சென்று கொண்டிருந்த அந்தப் படகில் இருந்த கடலோரக் காவல்படையினர் தமது படகின் மேல்தளத்தில் சுருண்டு படுத்திருந்த அந்த உருவத்தை வெறித்துப் பார்த்தனர். அவர் பலநாட்கள் கடலில் தனித்துவிடப்பட்டவர் என்ற மறைக்கமுடியாத உண்மையை அவரது தோற்றம் காட்டியது. சிக்குப்பிடித்துப் புதர் போல மேல்நோக்கி மண்டியிருந்த தலைமுடியும், சீரற்று வளைந்த முடிக்கற்றையுடன், பலநாட்களாகச் சவரம் செய்யப்படாத ஒழுங்கற்ற தாடியும் கொண்டிருந்தார் அந்த மனிதர். மணிக்கட்டுகள் சிறுத்துப்போய், கணுக்கால்களும் வீங்கியிருந்த நிலையில் கொஞ்சமும் நடமாடாத முடியாதவராக அவர் இருந்தார். யாருடைய கண்களையும் சந்திக்க விருப்பமின்றிப் பார்வையைத் தவிர்த்து அவ்வப்பொழுது முகத்தையும் மூடிக் கொண்டார்.
எல் சல்வடோர் (El Salvador) நாட்டைச் சேர்ந்த 36 வயதான ‘ஹோஸே சல்வடோர் ஆல்வரெங்கா’ (José Salvador Alvarenga) என்ற மீனவர் தனது உதவியாளரான இளைஞருடன் பதினான்கு மாதங்களுக்கு முன்னர் மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து ஒரு சிறிய படகில் தனது பயணத்தைத் துவக்கினார். இப்பொழுது அவர் கரை ஒதுங்கிய இடத்திற்கு அருகில், மார்ஷல் தீவுகளின் தென்முனையில் இருக்கும் ஏபான் ஆட்டல் (Ebon Atoll) என்ற ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். புயலில் சிக்கி, தான் புறப்பட்ட இடத்திலிருந்து 6,700 மைல்களுக்கு அப்பால், கடலில் 438 நாட்கள் அலைக்கழிக்கப்பட்டு மீண்டிருக்கிறார்.
பசிபிக் கடலில் படகில் மிதந்தவண்ணம், நிலவு குறைவதையும் வளர்வதையும் ஓராண்டுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆல்வரெங்கா, தனிமையையும், மனச்சோர்வையும், அவ்வப்பொழுது தோன்றிமறையும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்களுடனும் போராடிக் கொண்டிருந்தார். ஆனால், காட்டுவிலங்குகளுடன் வாழ்வது போன்ற கற்பனையுலகில், மனப்பிரமைகளுடன், மிகத்தனிமையில் வாழ்ந்த அந்த வாழ்க்கை, கரைதிரும்பிய பின்னர் உலகப்புகழ் பெற்று, அனைவரும் ஆர்வத்துடன் அறிய விரும்பும் மனிதராக வாழப்போகும் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு அவரைத் தயார் செய்யவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு, ஆல்வரெங்கா பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அவரது குச்சி உடலை மறைத்த தொள தொளத்த பெரிய பழுப்புநிற சட்டையணிந்து, காவல்துறையினரின் படகில் இருந்து மெதுவாகவும், ஆனால் பிறர் உதவியின்றி இறங்கினார். நலிந்து ஒட்டி உலர்ந்த உடலுடன், நோய்ப்படுக்கையில் இருந்தவர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை எதிர்பார்த்த கூட்டத்தினரிடம் அவநம்பிக்கை அலைமோதியது. ஆல்வரெங்கா விரைவில் ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு, படம் எடுத்த ஒளிப்படக் கருவிகளை நோக்கிக் கையசைத்தார். பலருக்கு அவரது தோற்றம் ‘காஸ்ட்அவே’ என்ற கடலில் தனித்துவிடப்பட்ட நாயகனாக ‘டாம் ஹான்க்ஸ்’ நடித்த ஹாலிவுட் படத்தின் பாத்திரத்தை நினைவூட்டியது. தாடியுடன் கரைமீண்ட மீனவரின் படம் விரைவில் எங்கும் பரவியது, சுருக்கமாக, ஆல்வரெங்கா என்ற பெயர் அனைவருக்கும் தெரிந்த பெயராகப் பேசப்பட்டது.
யாரால் கடலில் 14 மாதங்கள் தனித்து உயிர்வாழ முடியும்? ஹாலிவுட் கதாசிரியர்களால் மட்டுமே எல்லாம் மகிழ்ச்சிகரமாக இனிதே முடிந்தது என்று திரைக்கதை வசனம் எழுத முடியும். பத்திரிக்கையாளர்களுக்கு இவர் உயிர் பிழைத்த கதையை நம்பி ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. துப்பறிந்ததில், ஆல்வரெங்கா படகில் கடலுக்குச் சென்றதற்குச் சாட்சிகள் பலர் இருந்தனர். அவரைக் காப்பாற்றுமாறு அவர் எழுப்பிய எஸ்ஓஎஸ் அபயக்குரல் செய்திகளுக்குச் சான்றுகள் இருந்தன. மெக்சிகோவில் இருந்து புறப்பட்ட அதே படகுடன் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவர் கரை ஒதுங்கிய பொழுது, அவர் உறுதியுடன் ஆணித்தரமாகப் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார். மருத்துவமனை அறையின் கதவில் கூட அவரைத் தனித்துவிடும்படி செய்தியாளர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு செய்தி எழுதி வைத்திருந்தார். பிறகு, எல் சல்வடோரில் உள்ள தனது வீட்டில் கார்டியன் பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்த பொழுது, மிகவும் விரிவாக, தான் கடலில் ஓராண்டுக்கும் மேலாகத் தத்தளித்து, கொடுமையான துன்பங்களை எதிர்கொண்டு, உயிர்பிழைத்து கரைமீண்ட கதையை விவரித்தார். இதோ அவரது கதை …
கடந்த 2012 ஆண்டின் நவம்பர் மாதம் 18ஆம் தேதியன்று, ஒரு பெரும் புயலால் தாக்கப்பட்டதற்கும் மறுநாள், தனது காலின்கீழ் படகில் குளம் போல் நிரம்பும் கடல்நீரை ஆல்வரெங்கா பொருட்படுத்தவில்லை. ஒரு அனுபவமற்ற படகோட்டிக்கு வேண்டுமானால் அந்தச் சூழ்நிலை அச்சம் தந்திருக்கும். அலை மோதி படகு தத்தளிக்கும் பொழுது, பதற்றத்தில் அலையின் போக்கில் படகைச் செலுத்துவதில் கவனச் சிதறல் ஏற்பட்டிருக்கும். ஆல்வரெங்கா அனுபவசாலியான ஒரு கடலோடி, ஆபத்தைக் கையாள்வதிலும், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்தவர். தனக்கு உதவியாக உடன் வந்துள்ள, ‘எசீக்கில் கோர்டபா’ (Ezequiel Córdoba) என்ற அனுபவமற்ற இளைஞரின் உதவியுடன், கரையின் 50 மைல் தொலைவிலிருந்து, மெதுவாகக் கவனமாகக் கரையை நோக்கிப் படகைச் செலுத்த துவங்கினார்.
கொந்தளித்துப் படகில் மோதிய கடலலைகள் குடம் குடமாக நீரைப் படகில் வாரிக் கொட்டியது, படகு மூழ்குமோ அல்லது கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆல்வரெங்கா படகை செலுத்துவதில் கவனமாக இருக்க, கோர்டபா பதறிப் பதறி படகில் நிறையும் நீரை வாரி மொண்டு கடலில் வீசிக் கொண்டிருந்தார், அவ்வப்பொழுது நோகும் தோளுக்குச் சற்றே ஓய்வு கொடுத்துவிட்டு நீரை வெளியேற்றுவதைத் தொடர்ந்தார்.
இருபத்தைந்து அடி நீளத்திலும், ஆறடி அகலத்திலும், எந்த ஒரு உயரமான கட்டுமானமோ, கண்ணாடியோ, இயங்கும் விளக்கோ எதுவுமின்றி இருந்த ஆல்வரெங்காவின் படகு, கடலோடு கடலாக, கிட்டத்தட்ட தெளிவாகக் கண்டறிய முடியாத வண்ணம் இருந்தது. படகின் தளத்தில் குளிர்சாதனப் பெட்டியின் அளவு கொண்ட தொட்டி ஒன்றில் இரண்டு நாளாகப் பிடித்த சுறா, சூரை, மகிமஹி மீன்கள் நிறைந்திருந்தன. பிடித்த மீன்களைக் கரைக்குக் கொண்டு சென்றால், ஒரு வாரத்திற்குக் கவலையின்றி வாழத் தேவையான பணம் கிடைக்கும்.
ஆல்வரெங்காவின் படகில் பெட்ரோல் 70 கேலன்கள், குடிநீர் 16 கேலன்கள், தூண்டில் இரையாக 50 பவுண்ட் சார்டின் மீன்கள், 700 தூண்டில் கொக்கிகள், பல மைல் நீளத்திற்குத் தூண்டில் கயிறுகள், ஒரு மண்டா ஈட்டி, மூன்று கத்திகள், நீர் வாரி வாளிகள் மூன்று, நீர்ப்புகா பிளாஸ்டிக் உறையினுள் கைபேசி ஒன்று, நீர்ப்புகா பாதுகாப்பு அற்ற நிலையில் புவியிடத்தை அறிய உதவும் ஜிபிஎஸ் கருவி ஒன்று, அரையளவு மின்கல மின்சக்தி கொண்ட இரு-வழி வானொலி ஒன்று, படகின் மோட்டாரைப் பழுது பார்க்க அத்தியாவசியக் கருவிகள் ஒருசில, மற்றும் 200 பவுண்ட் பனிக்கட்டிகள் உட்படத் தேவையான பொருட்கள் பல நிரம்பியிருந்தன.
ஆல்வரெங்கா பயணத்திற்காகப் படகை, தனது நம்பிக்கைக்குரிய நண்பரும், வழக்கமாகத் தனக்கு உதவும் தோழர், ‘ரே பெரெஸ்’ (Ray Perez) உதவியுடன் தயார் செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரால் வர இயலாமல் போனது. கடற்பயணத்தை நிறுத்த விரும்பாத ஆல்வரெங்கா பதிலுக்குக் கோர்டபாவை உதவிக்கு ஏற்பாடு செய்து கொண்டார். ‘பின்யாட்டா’ (Piñata) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட 22 வயதான கோர்டபா அந்தக் கடற்காயல் பகுதியின் மறுமுனையில் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த கிராமத்தின் கால்பந்தாட்டக் குழுவின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற புகழ் பெற்றவர் கோர்டபா. ஆல்வரெங்காவும் கோர்டபாவும் அன்றுவரை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதுமில்லை, சேர்ந்து வேலை பார்த்ததும் இல்லை.
ஆல்வரெங்கா பதட்டத்துடன் படகை லாவகமாக, மெதுவாகக் கரையை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தார். நீர்ச்சறுக்கு விளையாடுபவர் அலைகளினூடே நேர்த்தியாக வழுக்கிச் செல்வது போலப் படகைச் செலுத்தினார். வானிலை மோசமடையத் துவங்கியதும் கோர்டபாவின் உறுதி குலையத் தொடங்கியது. சில நேரங்களில் படகில் நிரம்பும் நீரை வாரி வீச மறுத்துவிட்டு, படகின் கம்பியை இருகரங்களாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுப்பதும் அழுவதுமாக இருந்தார். இந்த வேலைக்காக அவர் 50 டாலர் ஊதியத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். தடகள விளையாட்டு வீரர் போன்ற உறுதியான திடகாத்திரமான உடல்வாகு கொண்ட கோர்டபாவினால் எந்தக் குறையும் சொல்லாமல் 12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய முடியும். ஆனால் நீரை வாரி வீசி மோதும் அலைகளில், தத்தளிக்கும் படகில் கரை நோக்கிச் செல்லும் அந்தப் பயணம்? தங்களது சிறு படகு உடைந்து நொறுங்கி, அவர்கள் சுறா மீன்களுக்கு இரையாகப் போகிறார்கள் என்று அவர் உறுதியாக நம்பத் தொடங்கியதால் அச்சத்தில் அலறத் தொடங்கினார்.
இப்பொழுது புயல் மிகத் தீவிரமாகிவிட, கரையோர துறைமுகத்தின் அதிகாரிகள் மீன்பிடி படகுகளைக் கடலுக்குள் செல்ல அனுமதிக்காத நிலைமையாக மாறிவிட்ட நேரம்; அந்தச் சூழ்நிலையில் கடலில் படகின் சுக்கானை இறுகப்பிடித்தபடி அமர்ந்திருந்த ஆல்வரெங்காவோ மிக உறுதியுடன் கரை நோக்கி படகைச் செலுத்தினார். கடைசியாக மழை மேகம் கொஞ்சம் விலகி, கடலின் மூட்டம் நீங்கி கரைவரை பலமைல்களுக்குத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. காலை 9 மணி போலத் தொடுவானத்தில் கரையின் மலை தெரிந்தது. கரையில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத் தொலைவில் இருந்த பொழுது அவர்களது படகின் மோட்டார் இயந்திரம் பழுதாகி, திக்கித் திணறி உயிரை விட்டது. ஆல்வரெங்கா தனது முதலாளி வில்லி (Willy) யை ரேடியோவில் தொடர்பு கொண்டார்.
“வில்லி! வில்லி! வில்லி! எனது படகின் மோட்டார் பழுதாகிவிட்டது.”
கரையோரத்தில் தனது படகிலிருந்து முதலாளி வில்லி குரல் கொடுத்தார், “அமைதியாய் இருப்பா, எங்கிருக்கிறாய் உன் ஜிபிஎஸ் காட்டும் இடம் எது, சொல்லு.”
“எங்கள் ஜிபிஎஸ் வேலை செய்யவில்லை, கருவி பழுதாகிவிட்டது”
“நங்கூரத்தைப் போடு” என்றார் வில்லி.
“எங்களிடம் நங்கூரமும் இல்லை” என்றார் ஆல்வரெங்கா. கிளம்பும் முன் படகில் நங்கூரம் இல்லாததை அவர் கவனித்திருந்தார், இருந்தும் ஆழ்கடலுக்குப் போவதால் அதற்குத் தேவையிருக்காது என்று அதனைப் பொருட்படுத்தவில்லை.
“சரி, நாங்கள் வந்து உன்னை மீட்கிறோம்” என்றார் வில்லி.
“சீக்கிரம் வாருங்கள், நான் மிகவும் ஓய்ந்து போய்விட்டேன்,” என்று பதிலுக்குக் கத்தினார் ஆல்வரெங்கா. இதுதான் கரையில் இருந்தவர்கள் கடைசியாக அவர் குரலைக் கேட்டது.
படகின்மீது பேரலைகள் மோதத் துவங்க ஆல்வரெங்காவும் கோர்டபாவும் இணைந்து வேலை செய்யத் தொடங்கினர். காலைச் சூரிய ஒளியில், அவர்கள் அளவு உயரமுள்ள பெரிய அலைகள் அவர்களை நோக்கி வருவதைப் பார்த்தார்கள். அவர்கள் மீது அவை மோதிப் பிரிந்தது. இருவரும் அந்தத் திறந்த படகின் ஓரத்தில் சாய்ந்து, இறுக பற்றிக் கொண்டு உருண்டுவிழாமல் சமாளித்தார்கள்.
அலைகளின் போக்கு கணிக்க முடியாத வகையில் மாறிக்கொண்டே இருந்தது. பேரலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி அறைந்து, நடுவானில் ஒருங்கிணைந்து, சக்தியெல்லாம் ஒன்று திரட்டி, பெரும் சுவர் போல் உயர்ந்து எழும்பி சிறிது நேரத்திற்கு மிக உச்சத்திற்கு அவர்களைத் தூக்கியது. மூன்று மாடி உயரத்திற்குத் தூக்கிய பிறகு, உயரத்தில் இருந்து விழும் எலிவேட்டர் போலத் திகிலை ஏற்படுத்தும் வண்ணம் உடனே தடாலெனக் கீழே போட்டது. அவர்களது கடற்கரைக் காலணிகள் தரையில் நிலைத்து நிற்க உதவாமல் வழுக்கியது.
ஆல்வரெங்காவிற்குக் காரணம் புரிந்தது, குறைந்தது 500 கிலோ அளவிற்குப் புதிதாய்ப் பிடித்த மீன்களின் பாரம்தான் படகை நிலைகொள்ளாமல் அலைக்கழிக்கிறதென்று. அவருக்குத் தனது முதலாளி வில்லியைக் கலந்தாலோசிக்க நேரமுமில்லை. தனது உள்ளுணர்வு சொல்வது போல நடக்க எண்ணிய அவர் பிடித்த மீன்கள் அத்தனையையும் கடலில் கொட்ட முடிவெடுத்தார். அவர்கள் ஒவ்வொரு மீனாகக் குளிர்ப்பதனப் பெட்டியில் இருந்து இழுத்து வந்து, அந்த உயிரற்ற மீன்களைக் கடலில் வீசி வீசி எறிந்தார்கள். இப்பொழுது கடலில்தவறி விழுந்தால் அதைவிட ஆபத்து வேறேதும் இல்லை, தூக்கி வீசிய மீன்களின் இரத்த வாடையால் சுறாக்கள் ஈர்க்கப்பட்டிருந்தால் அவர்களை வந்து தாக்கும்.
ஆத்திரம் அடைந்த ஆல்வரெங்கா மீனைக் கொல்வதற்காகப் பயன்படுத்தும் கனமான தடியை எடுத்து பழுதாகிப்போன மோட்டார் இயந்திரத்தை ஓங்கி ஓங்கி அடித்தார். அடுத்துப் படகில் இருந்த அதிகப்படி பனிக்கட்டிகள், பெட்ரோல் ஆகியவற்றை எடுத்துக் கடலில் வீசினார்கள். ஆல்வரெங்கா 50 மிதவைகளை இணைத்துக் கட்டி ஒரு தற்காலிகக் கடல் நங்கூரமாக அதனைக் கடலில் வீசி மிதக்கவிட்டு, அதன் இழுவையினால் படகை கொஞ்சம் நிலை நிறுத்தினார். ஆனால் காலை 10 மணி போல ரேடியோவும் பழுதாகிவிட்டது. புயல் தொடங்கிய முதல் நாளின் நண்பகலிலேயே இந்த அலைக்கழிப்பு இன்னமும் ஐந்து நாட்களுக்காவது தொடரும் என அவர் நினைத்தார். ஜிபிஎஸ் கருவி பழுதாகிப் போனது பெரிய சிரமத்தைத் தந்தது. பழுதான மோட்டார் ஒரு பேரழிவு, இப்பொழுது தொடர்பு கொள்ள ரேடியோவும் இல்லாமல் அவர்கள் சுயமாக எதையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
புயல் அந்த மதியம் முழுவதும் அவர்களைப் படகில் தேங்கும் நீரை வாரி வாரி வெளியேற்ற வைத்து நிலைகுலைய வைத்தது. ஒரே வேலையை, அதே தசைகளுக்கு வேலைக் கொடுத்து மீண்டும் மீண்டும் மணிக்கணக்காகச் செய்தும், பாதி அளவு நீரை மட்டுமே அவர்களால் வெளியேற்ற முடிந்தது. இருவருமே கலைத்து மயங்கும் நிலைக்குப் போனாலும், ஆல்வரெங்காவிற்குக் கோபமும் தாளவில்லை. மீண்டும் தடியைக் கொண்டு பழுதாகிப் போன மோட்டாரை அடித்து நொறுக்கினார், வேலை செய்யாத ஜிபிஎஸ் கருவியையும், ரேடியோவையும் சீற்றத்துடன் கடலில் விட்டெறிந்தார்.
சூரியன் மறைந்தது, புயல் தொடர்ந்தது, ஆல்வரெங்காவையும் கோர்டபாவையும் குளிர் வாட்டியது. பெரிய குளிர்ப்பதனப்பெட்டி அளவில் இருந்த, பனிக்கட்டியை உருகாமல் வைக்கும் பனிப்பெட்டியைப் புரட்டிப் போட்டு அதற்குள் இருவரும் சென்று முடங்கிக் கொண்டனர். நனைந்து சொட்டும் ஈரத்துடன், குளிரில் விரைத்துப் போன கைகளை அவர்களால் மடக்க முடியவில்லை. ஒருவரை ஒருவர் தழுவி கொண்டு, தங்கள் கால்களால் மற்றவர் உடலை அரவணைத்துக் கொண்டு தங்களைச் சுருட்டிக் கொண்டனர். ஆனால் புயல் மேலும் நீரைப் படகில் கொட்டவே படகு மேலும் மூழ்கும் நிலைக்குப் போனது. இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பனிப்பெட்டியில் இருந்து வெளிவந்து வேக வேகமாக நீரை வாரி வெளியேற்றினார்கள். முன்னேற்றம் கொஞ்சமாக இருந்தாலும், மெதுவாக அவர்கள் காலடியில் குளம் போல் நிரம்பியிருந்த நீரின் அளவு குறையத் தொடங்கியது.
இருள் சூழ்ந்ததால் அவர்கள் உலகம் சுருங்கியது, சக்தி வாய்ந்த புயல் கரையைக் கடக்கும் பொழுது, மீனவர்கள் இருவரையும் மேலும் கடலின் உட்புறமாகத் தொலைவுக்குத் தள்ளிவிட்டது. அவர்கள் ஒருவேளை முதல்நாள் மீன்பிடித்த பழைய இடத்திற்கே வந்துவிட்டனரோ? அவர்கள் வடக்கே ‘அகபுல்கோ’ (Acapulco) நோக்கிப் போகிறார்களா அல்லது தெற்கே ‘பனாமா’ (Panama) நோக்கிப் போகிறார்களா? நட்சத்திரங்கள் மட்டுமே வழிகாட்டியாக இருக்க, வழக்கமாகச் செய்வது போலத் தொலைவைக் கணக்கிட இயலாது போனார்கள்.
—————————————————————-
குறிப்பு:
“438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் உண்மைக் கதை” என்ற இக்கட்டுரை வெளியாகவிருக்கும், ’438 Days: An Incredible True Story of Survival at Seas’ என்ற நூலின் சுருக்கம். நூலின் ஆசிரியரும், கார்டியன் செய்தித்தாளின் செய்தியாளருமான திரு. ஜானதன் ஃபிராங்க்ளின் அவர்கள் எழுதி கார்டியனில் வெளியான அவரது ஆங்கிலக் கட்டுரை, கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கட்டுரைக்கு உதவிய பதிவு:
Lost at sea: the man who vanished for 14 months
http://www.theguardian.com/world/2015/nov/07/fisherman-lost-at-sea-436-days-book-extract?
Jonathan Franklin, Saturday 7, November 2015
நூல்:
Title: 438 Days: An Incredible True Story of Survival at Sea
Author: Jonathan Franklin
Publisher:Pan Macmillan, 2015
ISBN: 1509800166, 9781509800162
குறிப்பு:
"திரைமீளர்கள்" என்றால் "கடலோடிகள்" அல்லது "மீனவர்கள்" என்று பொருள். கடலின் திரையுடன் போராடி உயிர் மீண்டு வரும் மீனவர்களை "திரைமீளர்" என்று அழைப்பது வழக்கம், தமிழகத்தில் காயல் பகுதியில் வாழ்ந்த கடலோடிகள் திரைமீளர் என்று அழைக்கப்பட்டனர்.
நன்றி: சிறகு - http://siragu.com/?p=19004438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை
கடலில் வீசி எறிந்துவிட்டதால், தூண்டிலோ தூண்டில் இரையோ இல்லாமல், மீன்பிடிப்பதற்கு ஆல்வரெங்கா ஒரு துணிச்சலான முறையைக் கையாண்டார். சுறாக்கள் வருகின்றனவா என்பதில் எச்சரிக்கையுடன் ஒரு கண் வைத்துக்கொண்டே, படகின் ஓரத்தில் மண்டியிட்டு அமர்ந்து, இருகைகளையும் தோள்வரை நீரில் கவனமாக நீட்டினார். தனது மார்பு படகின் பக்கவாட்டில் அழுந்தியிருக்க, கைகளை அசைக்காமல் சிறிது இடைவெளிவிட்டுக் காத்திருந்தார். ஏதேனும் ஒரு மீன் அவரது இருகரங்களுக்கு இடையே அகப்பட்டால், விரைவாக அமுக்கி, அதன் செதில்கள் மீது நகத்தால் அழுந்தப் பிடித்துக் கொள்வார். பல மீன்கள் தப்பிவிட்டன, ஆனாலும் ஆல்வரெங்கா விரைவில் இவ்வாறு மீன் பிடிப்பதில் திறமைசாலியாகிவிட்டார், மீனைப்பிடித்து அது கடிக்கும்முன் படகினுள் வீசலானார்.
கோர்டபா மீன் வெட்டும் கத்தியினால் திறமையாக மீனைச் சுத்தம் செய்து வெட்டி, விரலளவு சிறு துண்டங்களாக்கி வெய்யிலில் காயவைத்தார். இருவரும் மீன்களையே மாற்றி மாற்றித் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆல்வரெங்கா பச்சைமீனையும் காய்ந்த மீனையும் சேர்த்தே விழுங்கத் தொடங்கினார். வித்தியாசம் தெரியாத அளவிற்கு அவருக்குச் சுவையே தெரியாமல் மரத்துப்போய்விட்டது, அதனால் சுவை பற்றி அவர் கவலைப்படவில்லை. மிகவும் அதிர்ஷ்டம் இருந்தால் அவர்களால் ஆமைகளைப் பிடிக்க முடிந்தது. சிலசமயம் தானே பறந்து வந்து படகில் விழும் பறக்கும் மீன்களும், அவர்களுக்குக் கிடைத்தன.
சிலநாட்களுக்குள் ஆல்வரெங்கா தனது சிறுநீரைக் குடிக்கப் பழகிக் கொண்டார், கோர்டபாவையும் அவ்வாறு செய்யச் சொல்லி ஊக்கமூட்டினார். மிகவும் உப்பாக இருந்தாலும் குமட்டவில்லை. சிறுநீர்கழித்து அதைக்குடித்து மீண்டும் மீண்டும் அவ்வாறே தொடர்ந்து செய்ததால் உடலுக்குத் தேவையான நீர் சிறிது கிடைத்தது. சொல்லப்போனால் உண்மையில் அவர்கள் நீரற்ற வறட்சியால் சாகாமல் இருக்க உதவியது. ஆல்வரெங்கா கடல்நீரைக் குடிப்பதால் உள்ள அபாயத்தை நன்கு தெரிந்தவர். எனவே மிகவும் தாகமாக இருந்தாலும் தங்களைச் சூழ்ந்துள்ள கடல் நீரிலிருந்து ஒரு கோப்பை நீரைக் கூட அவர்கள் குடிப்பதைத் தவிர்த்தார்கள்.
மிகவும் பசியாக இருந்தபொழுது தனது நகங்களையே சிறுசிறு துண்டுகளாகக் கடித்து சாப்பிடவும் தொடங்கினார். ஜெல்லிமீன்கள் கிடைத்தால் அவற்றை அப்படியே அள்ளி முழுதாக விழுங்கினார். முதலில் தொண்டையின் முன்பகுதியை எரித்தாலும் பின்னர் பழகிப் போனது, அவ்வளவு மோசமாக இல்லை.
சுமார் 14 நாட்கள் கடலில் தவித்த பிறகு, ஆல்வரெங்கா பனிக்கட்டிப் பெட்டியில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது ஸ்ப்ளாட், ஸ்ப்ளாட், ஸ்ப்ளாட் என்ற ஓசை கேட்டது. சந்தேகமில்லாமல் அது பெட்டியின் மீது தாளகதியில் விழும் மழைத்துளிகளின் ஓசைதான். ‘பின்யாட்டா’, (கோர்டபாவின் செல்லப்பெயர்)’பின்யாட்டா’, ‘பின்யாட்டா’ என்று கூக்குரலிட்டுக்கொண்டு ஆல்வரெங்கா பெட்டியிலிருந்து வெளியே பாய்ந்தார். அவரது உதவியாளர் கோர்டபாவும் உறக்கம் நீங்கி அவருடன் சேர்ந்து கொண்டார். கடந்த ஒருவாரமாக ஆல்வரெங்கா திட்டமிட்டிருந்தபடி நீர் சேகரிப்புத் திட்டத்தை செயல்படுத்த இருவரும் படகின் தளத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடினார்கள். கோர்டபா ஐந்து கேலன் கொள்ளும் சாம்பல் வண்ண வாளி ஒன்றைத் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்து வானத்தை நோக்கிப் பிடித்து நீர் சேகரிக்கத் தொடங்கினார்.
கருமேகங்கள் அவர்கள் தலைமீது உயரே குவிந்தது, பலநாட்களாகச் சிறுநீரையும், ஆமையின் இரத்தத்தையும் குடித்து, தாகத்தால் இறந்துவிடும் நிலைக்குச் சென்ற அந்த இருவர் மீதும் கடைசியாக மழை கொட்டத் தொடங்கியது. வாயைத் திறந்து விழும் மழைத்துளிகளைக் குடிக்கத் துவங்கினர், உடைகளைக் களைந்து அருமையாகக் கொட்டும் மழையில், நல்லநீரில் குளித்தார்கள். ஒருமணி நேரத்திற்குள் வாளியில் ஒரு அங்குலம் நீர் நிரம்பியது. இருவரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை நீரைக் குடித்துக் கொண்டிருந்தார்கள். முதலில் கிடைத்த நீரை தாராளமாகக் குடித்தாலும், பிறகு எச்சரிக்கையாகத் தேவையான அளவு மட்டுமே குடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்கள்.
கடலில் பலவாரங்கள் கடந்த பிறகு, ஆல்வரெங்காவும் கோர்டபாவும் திறமையான குப்பைப்பொறுக்கிகளாகத் தேறிவிட்டனர். கடலில் தங்களைக் கடந்து மிதந்து செல்லும் பலவகை பிளாஸ்டிக் குப்பைகளை வேறுபடுத்தி பிரிக்கக் கற்றுக் கொண்டார்கள். தங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு காலியான தண்ணீர் பாட்டில்களையும் எடுத்து சேகரித்துக் கொண்டனர். நிரம்பியிருந்த பச்சைநிறக் குப்பை மூட்டை ஒன்று அவர்கள் வழியே மிதந்து வந்த பொழுது அதனைப்பற்றி, படகின் தளத்தில் இழுத்துப் போட்டு அந்த மூட்டையின் பிளாஸ்டிக் உரையைக் கிழித்தார்கள். அதனுள் ஒரு பையில் மென்று துப்பிய சூயிங்கம் ஒரு கற்றை கிடைத்தது. வாதம் பருப்பு அளவுக்கு ஆளுக்கொரு துண்டாக அதனைப் பிய்த்து மென்று உணவை அசைபோடும் உணர்வை அனுபவிக்கக் கிடைத்த செல்வமாகக் கருதி பெருவிருந்தாகக் கொண்டாடினார்கள். சமையல் எண்ணெய்யில் ஊறியிருந்த அடுக்கின் கீழே பெரும் புதையலாக, அரை முட்டைக்கோசு, கொஞ்சம் கேரட்டு, ஒரு லிட்டர் ஊசிப்போன நாற்றமடிக்கும் புளித்த பால் ஆகியவை கிடைத்தன. இருந்தும் அதைக் குடித்தார்கள். அதுதான் முதன்முதலாகப் பல நாட்களுக்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் கிடைத்த உணவு. ஊறிப்போன கேரட்டுகளை கிடைத்தற்கரிய செல்வமாகப் போற்றினார்கள்.
ஆமையைப் பிடித்து உணவாக உண்டவர்களுக்கு, பலநாட்களுக்குத் தேவையான உணவு சேமிப்பில் கிடைத்தவுடன், அந்தப் பெரிய கடலில் கொஞ்சம் ஆறுதலும் மனஅமைதியும் கிடைத்தது. தங்களது அன்னையரைப் பற்றி பேசத் தொடங்கினார்கள். அவர்களிடம் மோசமாக நடந்து கொண்டதற்கு வருந்தினார்கள். மிகவும் மோசமான மகன்களாக தங்கள் அம்மாவிடம் நடந்து கொண்டதற்காக கடவுளிடம் மன்னிப்பு கோரினார்கள். அவர்களைக் கட்டித்தழுவி முத்தமிட முடியுமா என்று கற்பனை செய்தார்கள். கடினமாக உழைத்து தங்கள் அம்மாக்கள் இனி வேலையே செய்யத் தேவையிருக்காத அளவிற்கு அவர்களைக் காப்பாற்றப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் காலம் கடந்துவிட்டது.
கடலில் இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆல்வரெங்கா பறவைகளையும், ஆமைகளையும் பிடிக்கவும், சாப்பிடவும் பழகிக் கொண்ட பொழுது, கோர்டபாவிற்கோ உடல்நலமும் மனநலமும் மோசமடையத் தொடங்கியது. அவர்கள் இருவரும் ஒரே படகில் இருந்த பொழுதும் அவர்கள் பயணம் வேறுதிசையில் இருந்தது. கோர்டபா கடற்பறவையின் இறைச்சியைச் சாப்பிட்டபிறகு உடல்நலமில்லாது போனது, அதனால் இனி சாப்பிடப்போவதில்லை என்ற விபரீத முடிவை எடுத்து எந்த உணவையும் சாப்பிட மறுத்தார். அவர் தனது இரு கைகளினால் தண்ணீர் பாட்டிலை இறுகப் பிடித்திருந்தாலும் அதனை வாய்க்கருகில் கொண்டுபோகும் ஆர்வமோ சக்தியோ அவருக்கு இல்லை. பறவை இறைச்சியின் சிறு துண்டங்களையும் சிலசமயம் ஆமை துண்டங்களையும் ஆல்வரெங்கா அவருக்கு உண்ணக் கொடுத்தார். கோர்டபா வாயை இறுக மூடிக் கொண்டார். அவரது மனத்துயரம் அவரது உடல் செயல்பாட்டை நிறுத்தத் தொடங்கியது.
இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். கோர்டபா உயிர் பிழைத்தால் எல் சல்வடோர் சென்று ஆல்வரெங்காவின் பெற்றோரைச் சந்திப்பது என்றும், ஆல்வரெங்கா உயிர்பிழைத்தால் மெக்சிகோவில் உள்ள ‘சியாபாஸ்’ (Chiapas) நகருக்குச் சென்று, கிறிஸ்துவ போதகரான பாதிரியார் ஒருவரை மறுமணம் செய்து கொண்டவரும், தெய்வபக்தி நிறைந்தவருமான கோர்டபாவின் அம்மாவைச் சந்திப்பது என்றும் முடிவு செய்து கொண்டார்கள். கோர்டபா தனது அம்மாவிடம் உயிர் பிரிவதற்கு முன்னர் விடை பெற முடியாமல் போனதற்கு வருந்தியதாகவும், இனி அவருக்காக ‘டமாலீஸ்’ (tamales) சமைக்கத் தேவையிருக்காது என்றும், கோர்டபாஇறந்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொண்டு அவர் கடவுளிடம் சென்றுவிட்டார் என்று ஆறுதல் அடையும்படியும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
“நான் சாகப் போகிறேன், நான் சாகப் போகிறேன், என் முடிவு நெருங்கிவிட்டது” என்று ஒருநாள் காலை கோர்டபா கூறினார்.
“சாவதைப்பற்றி நினைக்காதே, இருவரும் கொஞ்ச நேரம் தூங்குவோம்” என்று ஆல்வரெங்கா அவர் அருகில் சென்று படுத்தபடி கூறினார்.
“எனக்குச் சோர்வாக இருக்கிறது, குடிக்கத் தண்ணீர் வேண்டும்,” என்று கோர்டபா முனகினார். அவருக்கு மூச்சுத்திணற ஆரம்பித்தது. ஆல்வரெங்கா ஒரு பாட்டிலில் இருந்த தண்ணீரை அவர் வாயில் ஊற்றினார், ஆனால் கோர்டபாவினால் விழுங்க முடியவில்லை, மாறாக, அவருக்கு சிறு சிறு வலிப்பு வந்து உடல் குலுங்கியது. அவர் உடல் துடித்து முறுக்கேற கோர்டபா வேதனையுடன் அரற்றினார். உடனே அதிர்ச்சி அடைந்த ஆல்வரெங்கா, “என்னைத் தனியே விட்டுப் போகாதே, வாழ்வதற்காகப் போராடு, நான் இங்கே தனியே என்ன செய்வது?” என்று அவர் முகத்தருகில் குனிந்து அலறினார்.
கொஞ்ச நேரத்தில் விழிகள் திறந்தவாறு இருக்க கோர்டபா இறந்து போனார். தோழன் இறந்துவிட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் “இப்பொழுது எப்படி இருக்கிறது?” என்று கோர்டபாவிடம் கேட்டார் ஆல்வரெங்கா. கோர்டபாவிடம் இருந்து பதிலில்லை.
கோர்டபாவின் உடலை அலை அடித்துச் சென்றுவிடாமல், தண்ணீர் படாமல் இருக்க நிமிர்த்தி வைத்துவிட்டு ஆல்வரெங்கா பலமணிநேரம் அழுதார்.
மறுநாள் காலை படகின் முனையில் சாய்ந்து இருந்த கோர்டபாவின் உடலை வெறித்துப் பார்த்து, “இப்பொழுது எப்படி இருக்கிறது? நன்றாகத் தூங்கினாயா? என்றார்.
“நான் நன்றாகத் தூங்கினேன், நீ நன்றாகத் தூங்கினாயா? காலை உணவு சாப்பிட்டாயா?” என்று தன் கேள்விக்கு இறந்துவிட்ட கோர்டபா பதிலளிப்பது போலத் தானே உறக்க பதிலளித்துக் கொண்டார். இருந்த தனது ஒரே தோழனும் இறந்துவிட்டதை எதிர்கொள்ள முடியாமல் அவர் இன்னும் இறக்கவில்லை என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது ஆல்வரெங்காவிற்கு சுலபமாக இருந்தது.
கோர்டபா இறந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, நிலவொளி அற்ற இரவில் ஆல்வரெங்கா இறந்த உடலுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, திடீரென கனவில் இருந்து விழித்தது போல தான் ஒரு உயிரற்ற உடலுடன் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். கோர்டபாவின் கால்களைக் கழுவிவிட்டார். தனக்கு உதவும் என்று அவருடைய சட்டையையும், காற்சட்டையும் உருவி எடுத்து, மண்டையோடும் குறுக்காக எலும்புகளும் வரைந்திருந்த சிவப்பு நிற சட்டையைத் தான் அணிந்து கொண்டு, கோர்டபாவின் உடலைக் கடலில் போட்டார். கோர்டபாவின் உடலைச் சறுக்கி நீரில் தள்ளிய பொழுது ஆல்வரெங்காவும் மயங்கி படகில் சரிந்தார்.
சில நிமிடங்கள் கழித்து உணர்வு வந்த பொழுது ஆல்வரெங்காவிற்கு அச்சமாக இருந்தது. பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லாது நான் தனியே என்ன செய்வேன் என்ற கவலை அவருக்கு எழுந்தது. ஏன் எனக்குப் பதிலாக கோர்டபா இறந்தார். அவரை மீன் பிடிக்க அழைத்து வந்தது என் தவறு என்று கோர்டபாவின் சாவிற்கு தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டார்.
ஆனால் அவருக்கு வாழ வேண்டும் என்ற எண்ணமும், தற்கொலை செய்து கொள்வதற்கு அச்சமும் (தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்று அவரது அம்மா உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள்) இருந்ததால், வாழ வழி தேடி ஏதேனும் கப்பல் அந்த வழியே வருகிறதா எனக் கடற்பரப்பை ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினார். சூரிய உதயமும், சூரியன் மறைவும் உதவியாக இருந்தது, தொடுவானம் ஓவியம் போல மாறி சூரிய ஒளியும் தாங்கக் கூடியதாக இருந்தது. ஆல்வரெங்காவின் பார்வை கூர்மையடைந்து தொடுவானத்தில் தோன்றும் ஒரு சிறிய புள்ளியையும் கப்பல் என அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அது நெருங்கி நெருங்கி பெரும் ஓசையுடன் வரும் பொழுது, அது வழக்கமாக பசிபிக்கடலைக் கடக்கும் ஒரு சரக்குக் கப்பல் என்பது தெரிய வரும்.
கடலை சுலபமாகக் கடந்து செல்லும் அந்தக் கப்பல்களின் தளத்தில் மனிதர்களும் தென்பட மாட்டார்கள், மனித நடமாட்டமும் இருக்காது, கவைக்குதவாத கப்பல்களாக அவைக் கடந்து போகும். ஒவ்வொருமுறை தென்படும் கப்பலும் ஆல்வரெங்காவிற்கு புத்துணர்ச்சி அளித்து, அவரை உற்சாகத்தில் துள்ள வைத்தது. மணிக்கணக்காகக் கையசைப்பதும், குதிப்பதும், கவனத்தைக்கவர முயற்சிப்பதுமாக இருப்பார். ஒவ்வொன்றாக சுமார் 20 சரக்குக் கப்பல்கள் இவ்வாறு இவரைக் கடந்து தொடுவானத்தில் சென்று மறைந்திருக்கின்றன. இருந்தும் வெறியேற்றும், சீண்டிப்பார்க்கும் இந்தப் போராட்டம் அவருக்கு உற்சாகத்தையே தந்தது. புயல்கள் அவரது சிறிய படகை அலைக்கழித்தன, நிலத்தைவிட்டு கடலில் வெகு தொலைவிற்கு சென்ற பிறகு புயலின் அளவு சிறியதாகவும், அதன் தாக்கம் குறைவாகவும் தாங்கிக் கொள்ளும்படியும் இருந்தது.
ஆல்வரெங்கா தனது கற்பனையைக் கட்டவிழ்த்து ஓடவிட்டு, பைத்தியம் பிடிக்காதவாறு தன் மனநலத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டார். உண்மைக்குப் புறம்பானவற்றை நம்பும் வகையில் மனதை மாற்றிக் கொண்டார். வாழ்விலேயே சிறந்த உணவைத் தான் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், சிறந்த உடலுறவு இன்பத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து கொண்டார். தனது தனிமையையே ஒரு மாய உலகில் வாழ்வதாக நினைத்துக்கொள்ளும் கலையில் திறமைசாலியானார். காலை வேளைகளில் நீண்ட நடைப்பயிற்சி மேற்கொண்டார். தான் பூமியில் உலவுவதாக நினைத்துக் கொண்டு தனது படகிலேயே குறுக்கும் நெடுக்குமாக நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டார். ஓரிடத்தில் முடங்கிப்போய் சாவை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து, இவ்வாறாகக் கற்பனை செய்வதால் தான் உருப்படியாக ஏதோ செய்வதாக தன்னையே நம்ப வைத்துக் கொண்டார். தான் கற்பனையில் உருவாக்கிய குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ இருப்பதாகப் பாவித்து, எதார்த்த உலகின் கொடுமையான உண்மை நிலையில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டார்.
அவர் சிறுவனாக இருந்தபொழுது அவரது தாத்தா நிலவின் சுழற்சியை வைத்து எவ்வாறு காலத்தைக் கணக்கிடுவது என்று சொல்லிக் கொடுத்திருந்தார். தனிமையில், பறந்து விரிந்த கடலில் இருந்தாலும் எத்தனை மாதங்களாக இப்படி கடலில் தத்தளிக்கிறோம் என்பதில் அவர் தெளிவாகவே இருந்தார். முன்னர் பார்த்திராத இடத்தை நோக்கிக் கடந்த 15 நிலாவின் சுழற்சி காலமாகக் கடலோடு போகிறோம் என்பது அவருக்குத் தெரிந்தது. பயணத்தின் முடிவில் அடுத்து அவர் போய்ச் சேரப்போகும் இடம் சொர்க்கம் என்று உறுதியாக நம்பினார்.
காற்றைக்கிழித்துக் கொண்டு கடல் நீரோட்டத்துடன் மென்மையாக அவர் படகு மிதந்துகொண்டிருந்தபொழுது, திடீரென வானில் கடலோரத்தில் வாழும் பறவைகள் கூட்டம் தென்பட்டது. ஆல்வரெங்கா உற்றுப்பார்த்தார். அவரது கழுத்துத் தசைகள் இறுகின. வெப்பமண்டலத் தீவு ஒன்று மூடுபனியில் இருந்து வெளிப்பட்டது. பசிபிக் கடலின் பவளப்பாறைத் திட்டுகள், சிறிய மலையைச் சூழ்ந்த பசுமையான நிலம், அதைச் சுற்றி நீலநிற நீர் சூழ்ந்து பலவண்ணக் காட்சியாகத் தோன்றியது.
பிரமை இவ்வளவு நேரம் நீடிக்காதே, எனது வேண்டுதல்களுக்குப் பதில் கிடைத்துவிட்டதா? என்று எண்ணிய ஆல்வரெங்காவின் மனதில் வேகமாகப் பல மோசமான கற்பனைகளும் விரிந்தன. அவர் கரையில் இருந்து விலகிச் சென்றுவிடக்கூடும், கடலை நோக்கிப் பின்னோக்கி போய்விடவும் கூடும்… முன்னர் அவ்வாறுதானே நடந்தது, கரை ஒதுங்கும் நேரத்தில் மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அந்தத் தீவையே கூர்ந்து கவனித்து கடற்கரை ஓரம் தோன்றுவதை வைத்து மேலும் அதைப்பற்றிய விவரங்கள் அறிய முயன்றார். அது ஒரு குட்டித்தீவு. அவர் கணிப்பின்படி ஒரு கால்பந்தாட்ட மைதானத்தைவிடப் பெரிதானது அல்ல. அது இயற்கையுடன் ஒன்றி சாலைகளோ, ஊர்திகளோ, வீடுகளோ இல்லாமல் இருந்தது.
கத்தியைக்கொண்டு படகுடன் இணைத்திருந்த மிதவையின் நைந்து போனக் கயிற்றைத் துண்டித்துவிட்டார். அது மிகவும் துணிச்சலான ஒரு முடிவு. பரந்து விரிந்த கடலில், தேவைக்கு நங்கூரம் இல்லாத பொழுது ஒரு சாதாரண புயல் கூட அவரது படகை உடனேக் கவிழ்த்துவிடக்கூடும். ஆனால் ஆல்வரெங்காவினால் கரையைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அதனால் படகை நிலைப்படுத்துவதைவிட வேகம் மிக முக்கியமானது என்ற முடிவின் மீது பந்தயம் கட்டினார்.
ஒரு மணி நேரத்தில் தீவின் கரையோரத்திற்கு படகு ஒதுங்கியது. கரையில் இருந்து முப்பது அடி தொலைவில் இருக்கும் பொழுது நீரில் குதித்து கரையை நோக்கி ஆமை போல வேகமாக நீந்தினார். பெரிய அலை ஒன்று அவரை உயரத் தூக்கி மிதக்கும் கட்டையை கரையில் வீசுவது போல வீசியது. அலை பின்வாங்கிய பொழுது ஆல்வரெங்கா மணலில் முகம் புதைத்து குப்புறக் கிடந்தார். புதையலை அள்ளுவது போல கைநிறைய மணலை அள்ளிக் கொண்டார்.
மணலில் கம்பளமாக விரித்துக் கிடந்த ஊறிய தென்னை மட்டைகளிலும், கூரிய தேங்காய் ஓட்டுகளின் மேலும், சுவையான பூக்களின் மேலும் கொலைப்பட்டினியாக, ஆடையின்றி இருந்த ஆல்வரெங்கா தவழ்ந்து சென்றார். அவரால் ஓரிரு வினாடிகளுக்கு மேல் நிற்க முடியவில்லை. அவரது உடல் முழுவதும் உருக்குலைந்து ஒல்லியாக ஒரு மெல்லிய மரப்பலகை போல மாறியிருந்தது. அவர் உடலில் மிச்சமிருந்தது வயிறும் குடலும், எலும்பும் அதன் மேல் போர்த்திய தோலும் மட்டுமே. கைகளில் தசையில்லை, கால்கள் சுருங்கிப் போய் எலும்பும் தோலுமாக பார்க்க அசிங்கமாக இருந்தது.
ஆல்வரெங்காவிற்கு தான் கரை ஒதுங்கிய இடம் எதுவென்று தெரியாவிட்டாலும், அவர் கரையேறிய இடம் ‘ஏபான் ஆட்டல்’ (Ebon Atoll) தீவுக்கூட்டத்தின் ஒரு குட்டித்தீவான ‘டைல் ஐலெட்’ (Tile Islet) என்பதாகும். இது ‘ரிபப்ளிக் ஆஃப் தி மார்ஷல் ஐலண்ட்ஸ்’ (Republic of the Marshall Islands) க்கு உரிய 1,156 தீவுக்கூட்டத்தின் தென் முனையில் உலகின் பிற இடங்களுடன் தொடர்பற்ற தொலைவில் இருந்தது. ஏபான் தீவில் இருந்து ஒரு படகில் நிலத்தைத்தேடிச் செல்பவர்கள் 4,000 மைல்கள் வடகிழக்கில் பயணம் செய்து அலாஸ்க்காவையோ, அல்லது 2,500 தென்மேற்காகப் பயணம் செய்து பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா (Brisbane, Australia)வையோ அடைய வேண்டியிருக்கும். ஆல்வரெங்கா ஏபான் தீவை தவறவிட்டிருந்தால் ஆஸ்திரேலியாவின் வடபகுதி நோக்கி மிதந்து சென்று ‘பப்புவா நியூ கினி’ (Papua New Guinea)யை அடைந்திருப்பார். ஆனால் மேலும் 3,000 மைல்கள் பயணித்து ‘பிலிப்பைன்ஸ்’ (Philippines)ன் கிழக்குக் கடற்கரையையும் அடைய வாய்ப்பிருந்திருக்கும்.
அவர் புதர்களின் ஊடே தடுமாறி நடந்த பொழுது, திடீரென ஒரு சிறுவாய்க்கால் தோன்றியது. அக்கரையில் ‘எமி லிபாக்மேட்டோ’ (Emi Libokmeto)வும் அவரது கணவர் ‘ரஸ்ஸல் லெய்கிட்டிரிக்’ (Russel Laikidrik)கும் வசிக்கும் கடற்கரை வீடு இருந்தது. எமி அத்தீவில் காய்ந்த தேங்காய்களின் மட்டைகளை உறிக்கும் தொழில் செய்பவர். எமி ஏறிட்டுப் பார்த்த பொழுது புதியவர் ஒருவர் அங்கு நிற்பதைக் கண்டார். பார்ப்பதற்கு சக்தியற்றவராக தோன்றும், பசியுடன் கூக்குரலிடும் ஆல்வரெங்காவை அவர் பார்த்த பொழுது, இந்த மனிதர் இங்கு நீந்தி வந்திருந்தால், நிச்சயம் ஏதேனும் ஒரு கப்பலில் இருந்து தவறி விழுந்திருப்பார் என்றுதான் முதலில் நினைத்தார்.
எச்சரிக்கையுடன் உத்தேசமாக ஒருவரை ஒருவர் எதிர் கொண்ட பிறகு எமியும் ரஸ்ஸலும் அவரை தங்கள் வீட்டிற்கு வரவேற்றனர். ஆல்வரெங்கா ஒரு படகையும், ஒரு மனிதனையும் ஒரு கடற்கரையையும் வரைந்து காட்டினார். பிறகு அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார். எப்படி அவரால் 7,000 மைல்கள் கடலில் மிதந்து வந்ததைக் குச்சி மனிதர்கள் படம் வரைந்து விளக்க முடியும்? அவரது பொறுமை குறைந்தது, அவர்களிடம் மருந்து கேட்டார், மருத்துவரிடம் போக வேண்டும் என்றார். எல்லாவற்றுக்கும் எமியும் ரஸ்ஸலும் புன்னகையுடனும் அன்புடனும் தலையசைத்தார்கள். ஒருவருக்கொருவர் அடுத்தவர் பேசும் மொழி புரியாவிட்டாலும் ஆல்வரெங்கா பேசிக்கொண்டே இருந்தார். அவர் அதிகம் பேசப் பேச எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எமியும் ரஸ்ஸலும் ஏன் சிரித்தார்கள் என்பது தெரியாவிட்டாலும், ஆல்வரெங்கா தான் உயிர் பிழைத்ததற்காக சிரித்தார்.
கடலில் இருந்து பிழைத்து வந்தவரை நன்கு உபசரித்த பிறகு, மறுநாள் காலை ரஸ்ஸல் தனது படகில் அந்தக் காயலைக் கடந்து துறைமுகமும் பெரிய நகருமான ஏபான் நகரின் நகராட்சி தலைவரைச் சந்தித்து உதவிக் கேட்கச் சென்றார். சிலமணி நேரங்களில் காவல் துறை, மருத்துவத் தாதியர் என ஒரு குழு சேர்ந்து ஆல்வரெங்காவை மீட்க வந்தார்கள். ஆல்வரெங்காவை படகில் ஏற்றி தங்களுடன் ஏபானுக்கு அழைத்துப் போக அவரை சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. காட்டுமிராண்டி தோற்றத்துடன் இருந்த ஆல்வரெங்காவிற்கு சிகிச்சை அளித்தபடி அவரிடம் மேலும் அவர் பயணம் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்த பொழுது, நார்வேயில் இருந்து அங்கு வந்திருந்த பயணியான மானிடவியலாளர் ஒருவர் ‘மார்ஷல் ஐலண்ட்ஸ் ஜர்னல்’ பத்திரிக்கைக்குச் செய்தி கொடுத்தார்.
ஏ எஃப் பி (Agence France-Presse – AFP) செய்தி நிறுவனத்தின் ‘கிஃப் ஜான்சன்’ (Giff Johnson) என்பவர் எழுதிய ஆல்வரெங்கா தப்பிப்பிழைத்த விவரங்களைக் கொண்ட முதல் சிறப்புச்செய்தி ஜனவரி 31 அன்று வெளியானது. ஹவாய், லாஸ் ஏஞ்சலஸ், ஆஸ்திரேலியாவில் இருந்து பல பத்திரிக்கை நிருபர்கள் அந்தத் தீவிற்கு வந்து, தப்பிப்பிழைத்ததாகக் கூறப்படும் ஆல்வரெங்காவை பேட்டி எடுக்கக் குழுமினர். பத்திரிக்கையாளர்கள் பலரும் ஆல்வரெங்காவைப் பற்றிய சுவையான தகவல்களைச் சேகரிக்க முயன்ற பொழுது, ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு மட்டுமே இருந்த அந்தக் குட்டித்தீவின் தொலைபேசி ஒரு போர்க்களமானது. ஆல்வரெங்கா கூறியவை யாவும்; தொடக்கத்தில் அவர் தொலைந்ததாகக் கூறப்பட்ட அறிக்கை, கடலில் நடத்திய மீட்புப் பணி தேடல் அறிக்கை, கடல்நீரோட்டத்தின் திசையில் அவர் பயணித்திருப்பது, அவர் மிகவும் சக்தியற்ற நிலையில் இருப்பது போன்ற உறுதியான சான்றுகளின் காரணமாக அவர் கூறிய கதை நம்பக்கூடியதாகவே இருந்தது.
ஆனாலும் இணையத்திலும், உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கை அலுவலகங்களிலும் விவாதங்கள் வெடித்தன. ‘எர்னஸ்ட் ஷாக்கெல்டன்’ (Ernest Shackleton) என்ற கடலில் தப்பிப் பிழைத்த கடலோடியின் தீரச் செயலுக்குப் பிறகு ஆல்வரெங்காவின் பயணம்தான் குறிப்பிடத்தக்கதா, அல்லது ‘ஹிட்லர் டைரி” என்ற மோசடியைப் போல உலக மகா மோசடியா என்ற கேள்விகள் தொடங்கின. அதிகாரிகள் ஆல்வரெங்காவின் முதலாளியை விசாரித்ததில், நவம்பர் 17, 2012 அன்று துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் துவக்கி தொலைந்து போன படகின் பதிவு எண்ணும், ஆல்வரெங்கா கரையொதுங்கிய படகின் பதிவு எண்ணும் ஒன்றே என்று உறுதி செய்தார். கார்டியன் பத்திரிக்கையின் செய்தியாளர் ‘ஜோ டக்மேன்’ (Jo Tuckman) மெக்சிகோவின் கடலோர மீட்புப் பணிக் குழுவினரிடம் விசாரித்த பொழுது, அதன் தலைமை அதிகாரி ‘ஹெய்மி மார்க்குவின்’ (Jaime Marroquín) ஆல்வரெங்காவையும் கோர்டபாவையும் காப்பாற்ற எடுத்த முயற்சியையும், பலனற்றுப் போன மீட்புப்பணிதேடலையும் பற்றி விவரமாக எடுத்துரைத்தார். காற்று மிகப் பலமாக இருந்தது, இருநாட்களுக்குப் பிறகு தெளிவாகக் காணமுடியாத அளவிற்கு ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் தேடும் விமானங்களையும் நிறுத்த வேண்டியதாயிற்று என்று விவரித்தார்.
மெக்சிகோவின் கடலோரப் பகுதி மக்கள் விசாரிக்கப்பட்டார்கள், மருத்துவ அறிக்கைகளும், கடலின் வரைபடங்களும் ஆராயப்பட்டன. கடலில் இருந்து மீண்டவர்களிடமும், அமெரிக்கக் கடலோரக் காவற்படையினரிடமும், கடற்படை வீரர்களிடமும் (US Coast Guard and The Navy Seals), பசிபிக் கடலின் குறுக்காகப் பயணம் மேற்கொண்டு தீரச்செயல் செய்த ‘ஐவான் மெக்ஃபெடியன்’ மற்றும் ‘ஜேசன் லூயிஸ்’ (Ivan MacFadyen and Jason Lewis) ஆகியோரிடமும் கடல்பயணம் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியை நன்கறிந்த கடல் ஆய்வாளர்களிடமும், வணிகமீனவர்களிடமும் இருந்து செய்திகள் திரட்டப்பட்டன. அனைவரும் ஆல்வரெங்கா தனது கடல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் விவரங்களில் இருந்து அவர் கூறுவது உண்மையாக இருக்கவே வாய்ப்புள்ளது என்றும், அவரது கடல் அனுபவம் அவர்கள் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுடன் ஒத்திருப்பதாகவும் உறுதி செய்தார்கள். ஆல்வரெங்கா மார்ஷல் தீவுகளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபொழுது அவரைச் சந்தித்து பேசிய அமெரிக்க தூதரக அதிகாரி அவரது காயங்களையும் அவரது நிலையையும் பார்த்தார். அவரது நைந்து போன உடலில் இருந்த பல காயங்களின் வடுக்கள் அவர் கடலில் வெகுநாட்கள் தத்தளித்ததைக் காட்டுவதாகவே கூறினார்.
இதற்கிடையில், அங்கே மார்ஷல் தீவுகளில் ஆல்வரெங்காவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் மோசமடைந்தது. அவரது கால்களும் பாதங்களும் வீங்கிப் போயின. அவரது திசுக்கள் நீரின்றி பலநாட்களாக வறண்டு போயிருந்ததால், கிடைக்கும் நீரை எல்லாம் அவை இப்பொழுது அப்படியே உறிஞ்சுவதால் இவ்வாறு வீங்கலாம் என அவர்கள் சந்தேகித்தனர். ஆனால் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு ஆல்வரெங்காவின் உடல்நிலை தேவையான அளவு தேறி நிலையாகிவிட்டது என்று முடிவு செய்து எல் சல்வடோரில் உள்ள அவரது குடும்பத்தை சந்திக்கும் பயணத்தை மேற்கொள்ள அனுமதித்தார்கள்.
ஆல்வரெங்காவிற்கு இரத்த சோகை அதிகமாக இருந்தது. பச்சையாக(சமைக்காத) ஆமைகளையும், பறவைகளையும் அவர் உண்டதால் அவரது ஈரல்களில் ஒட்டுண்ணிகள் தொற்றியிருப்பது இதற்குக் காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் எண்ணினார்கள். ஆல்வரெங்கா அந்த ஒட்டுண்ணிகள் அப்படியே மேலேறி தனது மூளையைத் தாக்கக் கூடும் என நம்பினார். ஆழ்ந்து தூங்க முடியாமல் கோர்டபா இறந்து போன நினைவுகளால் அவர் அலைக்கழிக்கப்பட்டார். தனியாக ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததை உற்சாகமாகக் கொண்டாட இயலவில்லை. உடல்நிலை தேறியதும், தான் ஒப்பந்தம் செய்து கொண்டபடி கோர்டபாவிற்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மெக்சிகோவிற்குப் பயணமானார். கோர்டபாவின் அம்மா ‘ஆநா ரோசா’ (Ana Rosa) அவர்களிடம் கோர்டபா சொல்லச் சொன்ன செய்தியைச் சொன்னார். அந்த அம்மையாருடன் இரண்டு மணிநேரம் செலவிட்டு அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார்.
நிலத்திற்குத் திரும்பியும் அவரது வாழ்வில் நிம்மதியில்லை. பல மாதங்களுக்கு ஆல்வரெங்கா அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. கடல்மீது மட்டுமல்ல நீரைப் பார்ப்பதற்கே அவருக்கு உள்ளூர பயம் தோன்றியது. விளக்குகளை எரியவிட்டே தூங்கினார், தனிமையைத் தவிர்க்க எப்பொழுதும் அவருக்கு ஒரு துணை தேவையாக இருந்தது. கரைக்குத் திரும்பிய உடனேயே, உலகம் முழுவதுமிலிருந்து வரும் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு வழக்கறிஞரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார். பிறகு சிலநாட்களில் அவரை நீக்கிவிட்டு வேறொருவரைத் தேர்ந்தெடுத்தார். நீக்கப்பட்ட வழக்கறிஞர் ஆல்வரெங்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கூறி, மில்லியன் டாலருக்கு இழப்பீடு கேட்டு அவர் மீது வழக்கொன்றைப் பதிவு செய்தார்.
ஓராண்டுக்குப் பிறகு, அவரது குழப்பங்கள் ஓரளவு குறைந்த பிறகே வரைபடத்தில் தான் எவ்வளவு தொலைவு பசிபிக் கடலில் மிதந்து சென்றோம் என்று அவரால் பார்க்க முடிந்தது, தான் செய்த அசாதாரணக் கடல்பயணத்தைப் பற்றி வியந்து போகவும் முடிந்தது. மனநிலையைப் பாதிக்கும் விளிம்பு வாழ்க்கையில் அவர் 438 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். பசி, தாகம், தனிமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டாலும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு மட்டும் அவர் போகவில்லை. ஆல்வரெங்கா அனைவருக்கும் சொல்ல விரும்புவது”உங்களுக்கு வாழ்வதற்கு ஒருமுறைதான் வாய்ப்பு கிடைத்துள்ளது – அதனால் அதனைப் போற்றுங்கள்”.
(ஜானதன் ஃபிராங்க்ளின் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)
—————————————————————-
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.