திருப்பதி சென்று திரும்பி வந்தால், ஓர் திருப்பம் நேருமடா.
திருப்பம் நிகழும், வாழ்வு மலரும் என்று நம்பித்தான், நண்பர்கள் பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து, தஞ்சைக் கரந்தையில் இருந்து, ஒரு வேனில் திருப்பதி புறப்பட்டனர்.
வழியில் ஒரு திருப்பம் வந்தது.
வெகுவேகமாய் ஒரு பேருந்தும் வந்தது.
ஒரு சில நொடிகள்தான், வேன் முற்றாய் உருக்குலைந்து போனது.
ஒருவர் அவ்விடத்திலேயே, தன் வாழ்வை இழந்தார்.
பலருக்கும் படுகாயம்.
ஒருவருக்கு முதுகின், தண்டுவடத்தில் டி5 மற்றும் டி6 என்னும் இரண்டு எலும்புகள் சுத்தமாய் நொறுங்கிப் போய்விட்டன.
குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர்.
கும்பிடாத தெய்வமில்லை.
வேண்டாத சாமி இல்லை.
செல்லாத ஊரில்லை.
பார்க்காத மருத்துவர்கள் இல்லை.
திருப்பதி பெருமாளோடு சேர்ந்து, மருத்துவர்களும் கை விரித்துவிட்டனர்.
நெஞ்சுக் கூட்டிற்கும் கீழே, உடல் முழுமையாய் செயல் இழந்து விட்டது.
உணர்வினை முற்றாய் இழந்து விட்டது.
சிறு வயதிலேயே, தன் தந்தையை இழந்து, குடும்பப் பாரத்தை சுமந்தவரின் கால்கள், உடலைக்கூட சுமக்க வழியின்றி, வலுவிழந்து துவண்டு போய்விட்டன.
அரசுப் பேருந்தில் நடத்துநராய் பணியாற்றி, தன் ஊதியத்தைச் சிறுகச் சிறுகச் சேர்த்துச் சேர்த்து, தன் சகோதரிகளைக் காத்து கரையேற்றியவர், கரை ஒதுங்கக்கூட வழியின்றி நான்கு சுவர்களுக்குள் முழுவதுமாய் முடங்கிப் போனார்.
நண்பர்கள் தொடர்ந்து வந்தனர்.
பேசிப் பேசி, உடலைப் போல் உள்ளமும் துவண்டு போகாமல், தூக்கி நிறுத்தினர்.
படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார்.
உள்ளத்தை அறையை விட்டு வெளியே ஓட விட்டார்.
நண்பர்கள் கொடுத்த நூல்களை மெல்ல மெல்லப் புரட்டத் தொடங்கினார்.
படிக்கத் தொடங்கினார்.
படிக்கப் படிக்க உள்ளம் சிறகு விரித்து, வானில் பறக்கத் தொடங்கியது.
பறக்கப் பறக்க, மனம் படிப்புலகில் இருந்து தாவி, எழுத்துலகில் போய் அமர்ந்தது.
ஏடெடுத்து எழுதத் தொடங்கினார்.
தன் வாழ்வையே கதையாக்கி,
தான் எதிர்கொண்ட, விபத்தினையே, கதையின் கருவாக்கி,
கற்பனையூரில் இருந்து அழைத்து வந்த கண்ணம்மாவை, தன் உள்ளம் கவர் காதலியாக்கி, முதல் நாவலை எழுதினார்.
இப்படிக்கு கண்ணம்மா.
நாவலைப் படித்தவர்கள் எல்லாம் மனம் கலங்கித்தான் போனார்கள்.
அன்று முதல் எழுதுகோலே, இவரது ஊன்றுகோலாய் மாறிப்போனது.
தொடர்ந்து எழுதத் தொடங்கினார்.
சிறுகதைகள்.
குறு நாவல்கள்.
நாவல்கள் என எழுதிக் கொண்டே இருக்கிறார்.
