அனைவருக்கும் வணக்கம்,
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார் (குறள் 650) என்று,
தான் கற்றதை விரித்து உரையாதவர்களைத்
திருவள்ளுவர் திட்டுகிறார்,
தாய் தந்தையர் திட்டினாலும் தாங்கிக் கொள்ளலாம்,ஐயன் திருவள்ளுவரைத் திட்டவிடலாமா?
எனவே நான் கற்றதை இங்கே விரித்துரைக்கிறேன்,
பிழைகள் இருந்தால் கூறுங்கள் திருத்திக் கொள்கிறேன்,
நிறைவு இருந்தால் வாழ்த்துங்கள் ஏற்றுக் கொள்வேன்,
ஏற்புடையதல்ல! என்றால் விளக்குங்கள் விவாதிக்கிறேன்,
விவாதத்தில் நம்மிலும் கற்றறிந்த மூத்தோர் கூறும் முடிவுகளை விரும்பி ஏற்றுக் கொள்வேன்,
ஐயன் திருவள்ளுவன் கூறும் இறைவன் யார்? என்று உணர்ந்து கொண்டதைப் பிறருக்கு உரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்,
கட்டுரை துவங்குகிறது,
உ
பகவன் முற்றே உலகு
புலிக்கரை ஐயனார் துணை
குறள் கூறும் இறைவன்
பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார். (குறள் 10)
பிறவி என்பது பெருங்கடல் போன்றது. நாம் கடலில் நீந்துவது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பிறவியில் நல்லபடியாக வாழாதவர்கள், அதாவது நீந்தாதவர்கள் இறைவன் அடியைச் சேராதவர்கள் என்கிறார் ஐயன் திருவள்ளுவர்.
பத்தாவது குறளைச் சற்று மாற்றியமைத்துப்,
"பிறவிப் பெருங்கடல் நீந்தார் -
நீந்துவர்இறைவன்
அடிசேர் வார்" என்று கூறியிருக்கலாம்
அதாவது வாழ்க்கையை நல்லபடியாக வாழ்பவர், இறைவனடி சேர்வர்! என்று திருவள்ளுவர் திடமாகச் சொல்லியிருந்தால் அனைவரும் நல்லபடியாக வாழ ஆவலுடன் முயற்சிப்போம் அல்லவா?
ஆனால் இவ்வாறு கூறாமல் "நீந்தார் இறைவனடி சேராதார்" என்று எதிர்மறையில் (defermative) திருவள்ளுவர் கூறியிருக்கிறாரே!
அது ஏன்?
போட்டியில் கலந்து கொண்டால், தங்கப்பதக்கம் கிடைக்கும் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது! கிடைத்தாலும் கிடைக்கலாம். கிடைக்காவிட்டாலும் இல்லை. ஆனால் போட்டியில் கலந்து கொள்ளாவிட்டால் பதக்கம் நிச்சயமாக இல்லை.
இதையே வள்ளுவர் வழிநின்று
"விளையாட்டுப் போட்டியில் விளையாடுவர் விளையாடாதார்
பதக்கம் ஏதும் பெறாதார்"
என்றும் சொல்லலாம். பதக்கம் பெற வேண்டுமானால் முதலில் போட்டிக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். இலக்கு நோக்கி முனைப்புடன் விளையாடி வெற்றி பெற வேண்டும்.
இதைப் போலவே, பிறவி என்ற பெருங்கடலில் நீந்திக் கொண்டிருக்கும் அனைவரும் இறைவனடியை நிச்சயம் சேர்வார்கள் என்று சொல்ல முடியாது. இறைவனடியைச் சேர்ந்தாலும் சேரலாம். சேராமல் போனாலும் போகலாம்.
ஆனால் பிறவி என்ற பெருங்கடலில் பிறந்தபின்னரும், நீந்தவில்லை என்றால் நிச்சயமாக இறைவனடியைச் சேர முடியாது.
அதாவது. இறைவனடி சேர வேண்டுமானால்,
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாந் தலை (குறள் 47)
என்று, திருவள்ளுவர் காட்டிய வழியில் அறத்துடனும், பொருளுடனும், காமத்துடனும்
வாழ வேண்டும். அதுவும் இறைவனடி சேரும் வழியறிந்து, அதில் முனைந்து வாழ
வேண்டும்.
எப்படி விளையாட்டு வீரர்கள் முறையான பயிற்சி பெற்றுப் போட்டியில் கலந்து கொண்டு முனைப்புடன் விளையாடிப்; பதக்கம் பெறுகின்றனரோ அதே போன்று, வாழ்க்கையில் சரியான கடவுளை முறையாக வணங்கிப் பிறவிப் பெருங்கடலை
நீந்தி இறைவனடியைச் சேர வேண்டும்,
திருவள்ளுவர் ஒரு தெய்வப் புலவர். அவர் வணங்கிய இறைவன் யார்? அவனை அறிந்து கொண்டால்தானே திருக்குறளைக்
கற்றதனால் ஆய பயனைப் பெறமுடியும்!
குறள் கூறும் இறைவன் யார்?கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் குறட்பாக்களில்
1,பகவன்
2. வாலறிவன்
3.மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
6. பொறிவாயில் ஐந்தவித்தான்
7, தனக்குவமை இல்லாதான்
8. அறவாழி அந்தணன்
9. எண் குணத்தான்
என்று ஒவ்வொரு பண்பையும் குறிப்பிட்டு, அப்பண்பிற்கு உரியவராகக் கடவுளை வாழ்த்துகிறார் ஐயன் திருவள்ளுவர்.
மேலும்.
3ஆவது குறளில் - அடிசேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார் - என்றும்,
4ஆவது குறளில் - அடிசேர்ந்தார்க்கு யாண்டம் இடும்பை இல – என்றும்,
7ஆவது குறளில் - தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது – என்றும்,
8ஆவது குறளில் - தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீத்தல் அரிது – என்றும்,
அடி அல்லது தாள் சேர்ந்தவர்களுக்கு எவ்வாறான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்.
இக்கருத்திலிருந்து மாறுபடும் வகையில் பத்தாவது குறளில் - நீந்தார்
இறைவனடி சேராதார் - என்று முடிக்கிறார்.
முந்தைய குறள்களில் அடிசேர்ந்தபின் வாழ்க்கையும் (நீந்துதலும்). பத்தாவது குறளில் வாழ்ந்த பின்னர் (நீந்தியபின்னர்) இறைவனடி சேர்தலும் கூறப்படுகிறது.
இதனால் மற்ற குறள்களில் - பண்பாகுபெயர் - சொல்லி வாழ்த்தப்படும் கடவுளரும் 5ஆவது 10ஆவது குறளில் கூறப்படும் இறைவனும் வேறானவரோ?! என்று ஐயம் தோன்றுகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் தன் மனத்தில் எண்ணி எழுதிய இறைவன் யார்? என்பது பற்றி ஒவ்வொரு உரையாசிரியரும் வெவ்வேறு பொருள் கூறியுள்ளனர்.
இதனால், பத்தாவது குறளில் கூறப்படும்
இறைவன் யார்?
என்பது இன்றளவும் கேள்விக் குறியாகவே உள்ளது?!?

இப்பினும், இன்றைய நாளில் நாம் வணங்கும் கடவுள்களில் எந்தக் கடவுள் இக் குறட்பாவிற்கு இயைபு உடையவராய் இருக்கிறார் என அறிந்து. அவரை வணங்கி அவரது அடிசேரத் தலைப்படுவது பொருத்தமாகும் அன்றோ!
இக்குறளில் பிறவியானது பெருங்கடலுடனும், பெருங்கடலானது இறைவனுடனும் தொடர்பு படுத்தப்படுகிறது. எனவே பிறவியுடனும் பெருங்கடலுடனும் தொடர்புடைய இறைவன் யார்? என்று அறிய வேண்டியுள்ளது!
மேலும் பிறவிப்
பெருங்கடலை நீந்தார் இறைவனடி சேராதார் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இறைனடி சேர்ந்தபின்னர் நீந்தத் தேவையில்லை. என்று பொருள். அதாவது
இறைவனடி சேர்ந்தபின் வாழ்க்கை இல்லை என்பது பொருளாகிறது. எனவே நம்மைப் இப்பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுவிக்க
வல்ல இறைவன் யார் என்றும் அறிய வேண்டும்.
திருவள்ளுவர் தனது பத்தாவது குறளில் கூறிய இறைவன் யார் என்பதை இங்கே விரிவாகக் காண்போம்.
பிறவியும் பெருங்கடலும்பெருங்கடல் - என்ற சொல் திருக்குறளில் வேறு எங்கும் இடம் பெறவில்லை,
ஆனால் கடல் என்ற சொல்லும் நெடுங்கடல் என்ற சொல்லும் மற்ற குறள்களில் உள்ளன.
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின் (குறள் - 17)
மழை இல்லாவிட்டால் நெடிய கடலிலும் நீர் வற்றிவிடும் என்று வான்சிறப்பு அதிகாரத்தில் கடல் குறிப்பிடப்படுகிறது.
மற்ற குறள்களில்,
பயன்தூக்கார் செய்த உதவி .... கடலிற் பெரிது (குறள் 103),
கடல் அன்ன காமம் (குறள் 1137),
காமக் கடல் (குறள் 1164),
இன்பம் கடல் மற்று (குறள் 1166),
கடல் ஆற்றா காமநோய் (குறள் 1175),
என்று
கடலானது காமத்திற்கு ஒப்புமை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெருங்கடல் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
மேலும்,
காமக் கடும்புனல் நீந்திக் கரை காணேன்
யாமத்தும் யானே யுளேன் (1167)
என்ற குறளில் காமம் என்பது கடும்புனல் (காட்டாற்று வெள்ளப் பெருக்கு) போன்றது, அதனை நீந்திக் கரை காணேன் - என்று
காமத்தையும் கடும்புனலையும் நீந்துதலையும் ஒன்றுடன் ஒன்று இணைத்துக் கூறப்படுகிறது.
இவ்வாறாகத் திருக்குறளின் மற்ற குறள்களில் எல்லாம் கடலும் நீந்துதலும் காமத்துடனேயே தொடர்பு படுத்தப் பட்டுள்ளன. ஆனால் பத்தாவது குறளில், மட்டும் பெருங்கடலும் இறைவனடியும் தொடர்பு படுத்தப்பட்டு உள்ளன.
வாழ்க்கையும் நீந்துதலும்ஏதோ சிறிது நேரத்திற்குக் கடலில் நீந்தலாம், விளையாடலாம். ஆனால் கடலிலேயே நீந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் யார்தான் விரும்புவார்கள்?! யாரால்தான் முடியும்?!
பூமியில் மிகப் பெரியது கடல். அளவில் பெரியது, அகலமானது, மிகவும் ஆழமானது. அதனால், கடலில் நீந்திக் கொண்டே இருப்பது மிகவும் கடினமான செயல்.
அதுபோல் நம்முடைய பிறப்பில் பல துன்பங்கள் அடுத்தடுத்து வந்து அழுத்தும் வாழ்வது கடினமான செயல் - என்பது கருத்தாகும்.
பிறவியை,
வழி அறிய முடியாக் கார் இருளாகவோ? முகடு காண முடியாத மாமலையாகவோ? மீளமுடியாத அதலபாதாளமாகவோ? சுமக்க முடியாப்
பெருஞ்சுமையாகவோ? தூங்கி விழித்திடும சாக்காடாகவோ?
ஐயன் திருவள்ளுவர் ஒப்புமை செய்திருக்கலாமே!

ஒரு வேளை
குறள் இனிமைக்காகவும், உவமை நயத்திற்காகவும் பெருங்கடலானது, பிறவியுடன் ஒப்புமை கூறப்பட்டிருக்குமோ?!?

இறைவன் இருப்பிடத்தையே தவறாகக் கருதும்படி குறள் கூறுமோ ?!

தொடர்பில்லாத கடலைத் தொடர்புபடுத்தித் தெய்வப் புவலர் திருவள்ளுவர் திருக்குறள் எழுதியிருப்பாரோ ?!?
நம்மைத் தவறான இறைவனிடம் தஞ்சம்

புகும்படி குறள் கூறியிருப்பாரோ ?!?
இறைவனடியும் கடலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாய் இருத்தல் வேண்டும்.மனிதர்களைப் பிறவிப் பிணியிலிருந்து விடுவிக்க வல்ல இறைவனின் திருவடி, கடலில் இருத்தல் வேண்டும், அதனால்தான் ஐயன் திருவள்ளுவர் பிறவியைப்
பெருங்கடலுடன் ஒப்புமை செய்திருக்க வேண்டும், பிறவியானது பெருங்கடலுடன் ஒப்புமை செய்யப்பட்டதனால், வாழ்க்கையானது நீந்துதலுக்கு ஒப்புமை செய்யப்பட்டிருக்க வேண்டும் !!!
இதனால், இறைவன் பெருங்கடலில் உள்ளார் என்பதும், நாம் பெருங்கடலில் நீந்துவது போல நமது வாழ்க்கையை நடத்தி அவனது திருவடியைச் சேர வேண்டும் என்பதும்,
அவ்வாறு சேர்ந்த பின்னர் மீண்டும் பிறவி இல்லை என்பதும்
கருத்தாகிறது.
அப்படியானால் இன்று நாம் வழிபடும் கடவுள்களில் கடலுடன் தொடர்புடைய இறைவன் யார் ?
திருப்பாற் கடல் என்றழைக்கப்படும் பெருங்கடலில் பள்ளி கொண்டுள்ள ஆதிசேது என்ற ஆதிகேசவப் பெருமாள் ஒருவரே கடலின் நடுவே பாம்பின் மீது பள்ளி கொண்டுள்ளவராகக் காட்சியளிக்கிறார் !
பரமபதம் என்று அழைக்கப்படும் இவ்விறைவனடியை அடைந்து விட்ட பின்னர் பிறவி என்பது இல்லை என்று வேதங்கள் கூறுவதாகக் கூறுகின்றனர்,
இக் கடவுள் ஒருவரே பிறவித் தொடரை நீக்கவல்லவராகவும் சொக்கவாசலுடன் தொடர்பு உடையவராகவும் உள்ளார். எனவே
இவரது திருவடியைச் சேர்ந்தபின்னர், பிறவி என்ற பெருங்கடலில் நீந்தத் தேவையில்லை.
இவ்வாறாகக் கடலுடனும், பிறவி முடிந்தபின்னர் நாம் செல்லவிரும்புகிற சொர்க்கத்துடனும் தொடர்புடைய இறைவனாக உள்ளவர் அனந்தசயனன் ஒருவனே.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த இறைவனை நினைந்து இக்குறளை ஐயன் திருவள்ளுவர் இயற்றினார் என்பதை யாரும் அறியார் !
ஆனால் திருவள்ளுவர் கூறியது போல் பிறவிப் பெருங்கடலில் நீந்திச் சென்றால், அடையக் கூடியவராக உள்ள ஒரே இறைவன் ஆதிசேது என்ற ஆதிகேசவன் மட்டுமே.
இவனடி சேர்ந்து விட்டால் (தங்கப்பதக்கம்) சொர்க்கம் கிடைத்து விடும். மீண்டும் பிறவி யில்லை.
பிறவி என்ற பெருங்கடலில் நாம் அனைவரும் பிறந்துள்ளோம், எனவே அரிதினும் அரிதான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம். தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய அறத்தின் வழியில், பொருளையும். பொருளின் வழியில், காமத்தையும் துய்த்து, இல்லறத்தையே நல்லறமாகக் கொண்டு வாழ்வோம், அறவாழி என்ற கடலில் முனைப்புடன் நீந்துவோம்.
எவ்வளவு காலம்தான் நீந்திக் கொண்டே இருப்பது ?
மீண்டும் நீந்தாமமல் கரைசேர வேண்டும் அல்லவா ?
கற்றீண்டு மெய்ப்பெருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி (356)
என்ற குறளுக்கு ஏற்ப மீண்டும் பிறவி என்ற கடலில் பிறந்து விடாமல் இருக்கப் பெருமாளை வழிபடுவோம்,
வரும் மார்கழி மாதம் 2ஆம் நாள், (17-12-2010) அன்று சர்வ வைகுண்ட முக்கோடி ஏகாதசி.
அன்று
சொர்க்க வாசல் திறப்புநாள், அன்று திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள ஆதிசேது என்ற ஆதிகேசவப் பெருமாளைக் குடும்பத்தினருடன் சென்று வணங்கி அவன் திருவடி சேரத் தலைப்படுவோம்.
பிறவிப் பெருங்கட னீந்துவோம் நீந்திப்பெருமா ளடிசேர் வோம்,
அனந்தசயனத்தின்
அடிசேர்வோம்
அன்பன்
கி, காளைராசன்