Silambu madal 38

120 views
Skip to first unread message

Elangovan N

unread,
Mar 30, 2008, 3:11:07 PM3/30/08
to tamil-...@yahoogroups.com, minT...@googlegroups.com
முக்கிய நகர்வுகள்:

சிலப்பதிகாரத்தில் மதுரை நகர் எரியுண்டதைத் தொடர்ந்து
நிகழ்ந்த சில நகர்வுகள் மிக முக்கியமானவை.
கண்ணகி பாண்டிய மன்னனை வெல்கிறாள்.
பாண்டியனும் அவன் தேவியும் வரலாற்றிலும்
பண்பாட்டிலும் உயர்ந்து நிற்கிற மரணத்தை எய்துகிறார்கள்.
அதைக் கண்டபோதும் கூடகண்ணகிக்கு ஆற்றாமை தாழவில்லை.
அதற்குக்காரணம் பாண்டிய அரசன் மற்றும் அரசியின
்உயிர் அவளுடைய குறிக்கோள் அல்ல.
தன்னுடையஉற்ற துணையின் உயிர் பிரிந்ததை அவளால்
தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.


கோவலன் கொலை செய்யப்பட்டதை ஒரு மாலையில்
(வியாழன் மாலை என்று சொல்லலாம்) அறிகிறாள்.
இரவில் அவன் கொலையுண்டு கிடந்ததைக் கண்டு
துடிக்கிறாள். மறுநாள் பகலில் பாண்டியனிடம்
முறையிடுகிறாள். அரசனும் அரசியும் அந்தப் பகற்போதில்
மாள்கின்றனர். அதன் பின்னரும் துயரம் தாளாமல்
மதுரையை மும்முறை வலம் வருகிறாள்.
இரவில் மதுரை தீக்கிரையாகிறது, அந்தப் பகற்போதிற்கும்
தீக்கிரையான யாமத்திற்கும் இடையேமதுரையைச்
சுற்றி மும்முறை வலம் செய்தது நடந்திருக்கக்
கூடியதே. மதுரை நகரின் இன்றையப் பரப்பு அன்றையப்
பரப்பை விட மிக அதிகமானதாகவே இருக்க முடியும்.
மதுரை எரிந்து கொண்டிருக்கும் போது நடந்த முக்கியமான
விதயங்களில் மூன்றுவிதயங்கள் கூர்ந்து
கவனிக்கப் படவேண்டியவை.அதில் ஒன்று,
மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் பேசியது.
கண்ணகியிடம் சில விதயங்களைச் சொல்லி,
அவளை ஆற்றி, மதுரைத் தீயையும் அவிக்கிறது மதுராபதி அம்மன்.

"....அலமந்து
ஒருமுலை குறைந்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கை! என் குறை என......

.....மாபெருங் கூடல் மதுரா பதி என்பேன்;"

மற்றொன்று, பதிகத்தில் சொல்லியபடி,
சாத்தனார்அந்தக் காட்சியைக் கண்டது. மூன்றாவது விதயத்தைப்
பின்னர்க் காணலாம்.

"....மதுரை மூதூர்க்கொன்றையஞ்சடைமுடி மன்றப்பொதியிலில்
வெள்ளியம்பலத்து நள்ளிருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மாதெய்வம் வந்து தோன்றி...."

...சிலம்பு:பதிகம்:39-43

கண்ணகியை மதுரை அம்மன் ஆற்றிய பின்னர், தீ
கோவலனின் உடலையும் உலகில் இருந்து நீக்கியிருக்கும்
என்று எண்ணியிருக்க வேண்டும். வளையல்களை
உடைத்து விட்டு, கால் போன போக்கில் மேற்திசையில்
இரண்டு வாரங்களாக நடக்கிறாள். செங்குன்றத்தில்
தெய்வமாகிறாள்.

மதுரையில் இருந்து குணக்கோட்டம் 120 கி.மீட்டர்
தொலைவில் உள்ளது. இந்தத் தொலைவை வாடி வருந்தி,
இழந்த கணவனின் நினைவிலேயே நலிவுற்றிருந்த
நிலையில் கடக்கிறாள். மலை, புதர், பள்ளம் என்றெல்லாம்
அவள் பார்த்து நடக்கவில்லை. அதற்கு 14 நாள்கள்
ஆகியது இயல்பாகவேத் தெரிகிறது. இஃது ஒரு நகர்வு.


ஏறத்தாழ திருச்சிக்குத் தெற்கே கிடந்த தமிழகத்தை
ஆண்ட பாண்டிய அரசன் அரசியோடு இறந்து
போகிறான். இந்தச் செய்தி காற்றினும் விரைந்துபல
திசைகளையும் சென்று சேர்ந்திருக்கும் என்பது
எளிதில் நம்பக்கூடிய ஒன்று. முக்கியமாக
அந்தச்செய்தி எங்கெல்லாம் போயிருக்கும்?

நீர்ப்படைக்காதையிலும் நடுகற்காதையிலும் வெற்றிவேற்
செழியன் பற்றிய செய்தி வருகிறது. அவன் பாண்டியன்
நெடுஞ்செழியனின் வாரிசு என்றும், கொற்கையில் இருந்து
தென்பாண்டி நாட்டைக் காத்தவன் என்றும் வரலாற்று
ஆசிரியர் சொல்கின்றனர். நீர்ப்படைக் காதையில் சில
செய்திகள் முரணாக இருப்பினும், இருக்கும் செய்திகளில்
பாண்டியன் நெடுஞ்செழியன் மாள்விற்குப் பின்னர்
மதுரையை ஆட்சி செய்தவன் இவன் என்று அறிஞர்கள்
கருதுகிறார்கள்.

உரைபெறு கட்டுரையில் வெற்றிவேற்செழியன்
பற்றிசெய்தி இருந்தாலும், உரைபெறு கட்டுரை ஒரு செருகல்
என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள். அஃது ஒரு பதிப்புரையாக
இருந்திருக்கக் கூடும்.

கண்ணகி மதுரையை விட்டு நீங்கிச் செங்குன்றில்
தெய்வமாகியவரைக்குமான 14 நாள்களுக்குள், பாண்டியன்
மாள்வு பற்றிய செய்தி கொற்கைக்கும், வஞ்சிக்கும்,
தஞ்சைக்கும் சென்று சேர்ந்து இருக்கும். மதுரையில்
இருந்து சுமார் 140 கி.மீ தொலைவில் இருக்கும்
கொற்கைக்குச் செய்தி ஒரு நாளில் சென்று சேர்ந்து,
அடுத்த ஓரிரு நாள்களில் வெற்றிவேல் செழியன்
மதுரைக்கு வந்திருக்க வேண்டும். அஃது ஒரு நகர்வு.

இந்த நகர்வு ஏன் முக்கியம் பெறுகிறதென்றால், செழியன்
மதுரை நோக்கி நகரவில்லை என்றால், மற்ற அரசர்கள்
அல்லது குறுநில மன்னர்கள் நகர்ந்திருப்பார்கள்!

மதுரையில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சைக்கும்,
சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ளவஞ்சிக்கும் செய்தி போய்,
சோழனும் சேரனும் தலையிடுவதற்கு முன்னரே கொற்கையில்
இருந்துசெழியன் மதுரைக்குச் சென்று விட்டிருக்க வேண்டும்.

சிலப்பதிகார காலம் சேரர்கள் வலுவோடு இருந்த காலம்.
காப்பியத்தின் பிற்பகுதியில் நடுகற்காதையில் பாண்டியனும்
சோழனும் செங்குட்டுவன் சீற்றமுறு வகை
நகையடிக்கின்றனர். சேர வல்லரசின் வல்லாண்மைக்கு
அஞ்சி அவர்கள் அடங்கியிருந்ததைக் காட்டும் அதே
வேளையில், அந்த அடக்கம் அதனால் மட்டும்தான்என்பதை உணர்த்துவதாகவே அஃது இருக்கிறது.

"வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து,
கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை
வெல் போர்க் கோடல் வெற்றம் அன்று' என,
தலைத் தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன்,
சிலைத் தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை..."

"தவப் பெரும் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது' என்றனன் போர் வேல் செழியன்' என்று..."

.....சிலம்பு:நடுகற்காதை:91-95, 104-107

(சோழனும் பாண்டியனும் சொன்ன மேற்கண்ட செய்திகள்,
கங்கைப் பகுதியில் மறம் செய்தவர்கள் தவ வேயம்
இட்டிருந்ததாகச்சொல்கின்றன. இன்றைய நாள்களிலும் கங்கைப் பகுதி
அரசியலில் இருந்து நாக்கை அறு, கழுத்தை வெட்டு என்று மறம் பேசுபவர்கள்
தவ வேயம் பூண்டிருப்பதுக்கவனிக்கத்தக்கது!)

ஆக, மூவேந்தர்களும் ஒருவர் அயர்விற்கு மற்றவர்
காத்தே இருந்திருக்க வேண்டும்.

அந்த வகையில்,
கண்ணகியின் மதுரையில் இருந்து
குணக்கோட்டத்தில் உள்ள செங்குன்றத்திற்கான நகர்வு,
அதன்பின்னர் செழியனின் கொற்கையில் இருந்து
மதுரைக்கான நகர்வு என்ற இரண்டையும் அடுத்த
மிக முக்கிய மூன்றாவது நகர்வு சேரன் செங்குட்டுவன்
வஞ்சியில் இருந்து குணக்கோட்டத்திற்கு நகர்ந்தது.

"மாநீர் வேலிக் கடம்பு எறிந்து, இமயத்து
வானவர் மருள, மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மாளுடன் இருந்தருளி
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என
பைந் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு
ஈண்டிவஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்....."

....சிலம்பு:காட்சிக்காதை:1-9

வஞ்சி அரண்மனையிலே பட்டத்தரசி வேண்மாளுடனும்,
அவன் இளவலுடனும் இருக்கும் பொழுது, மலை காணச்
செல்வோம் என்கிறான் செங்குட்டுவன்.

"மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம்..." என்று
(மஞ்சு = மேகம்) அரசன் சொல்ல அப்பொழுது என்ன தேவை?

"மலை காண்குவம்..." என்று சேரன் சொன்னது
எப்படிச் சில ஆசிரியர்களால் மலை வளம் காணப்புறப்பட்டான்
என்று சொல்லப்பட்டது?

மலை காண்குவம் என்பதும் மலை வளம் காண்குவம்
என்பதும் வேறுபடுத்திக் காட்ட முடிந்தவை.

மதுரை எரிந்த காலம் வேனிற்காலம். வெயில் தாங்காமல்
தற்போது உதகை, கோடை போன்ற இடத்திற்குச் செல்வது போல,
ஓய்வு எடுக்கச் சேரன் கிளம்பினானா?
அப்படி என்றால் அதுஒத்து வரக் கூடியதே.

ஆனால், அது ஆடிமாதம். ஆடிமாதம்; முதுவேனிற்காலம்.
சித்திரை வைகாசி இளவேனில்; ஆனி ஆடி முதுவேனில்.
வெயில் காய்ந்து ஓயும் வேளையில் இவன் தேக்கடிப் பக்கம் போய்
ஓய்வெடுக்கச் சென்றான் என்பது நம்பத்தக்கது இல்லை.
மலைஇன்பம் வேண்டுமெனில் அவன் அதற்குச் சென்றிருக்க வேண்டிய காலம்
சித்திரை வைகாசி.

சேரன் வஞ்சியில் இருந்து புறப்பட்டுக் குணக் கோட்டம்
வந்து அமைவது வரையிலான காப்பிய வருணனைகள் மயக்கம் தருபவை.

"விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்
பொலம் பூங்காவும் புனல்யாற்றுப் பரப்பும்
இலங்கு நீர்த்துருத்தியும் இளமரக் காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி
ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த
பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று
கோங்கம் வேங்கை தூங்கு இணர்க் கொன்றை
நாகந் திலகம் நறுங்கா ழாரம்
உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து
மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை
இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப"

....சிலம்பு:காட்சிக்காதை:11-23

இந்திரன் தான் மகிழ்வுற்று இருக்க 140 யோசனைகள்
பரப்பிற்கு பல வசதிகள் கொண்ட அரங்கம் அமைத்து
இயற்கையோடு தங்கியது போல செங்குட்டுவன் வந்து
இருந்தான் என்று சொல்லிப் படிப்போரை மயக்கி
விடுகிறார் அடிகளார். இந்த மயக்கத்திலே நாமும்
செங்குட்டுவன் வந்தது மலைவளம் கண்டு, குணக்கோட்ட
மக்களுக்குக் காட்சி அருளிச் செல்லவே என்று
எண்ணுகிறோம்.

ஆனால், ஒரு பேரரசன், தனது பக்கத்து நாட்டு அரசன்
தனது அரசியோடு, வியத்தகு மரணம் அடைந்து, அவனது
தலைநகரமும் தீக்கிரையாகிப் போய்க் கிடக்கையில்,
மலைவளம் கண்டு சுவைக்கவந்திருப்பானா?

மதுரையில் இருந்து வஞ்சி 260-270 கி.மீ தொலைவு.
அன்றையப் பகலில் பாண்டியன் மறைந்ததும்,
உளவுச் செய்தி காற்றெனப் பரிமிசை அதிக பக்கம்
இரண்டு நாள்களில் சேரனைச் சென்றடைந்திருக்கும்.

அன்றைய யாமத்தில் மதுரைத் தீக்கிரையாகி
அலமந்தசெய்தி அதற்கு அடுத்த நாளிற்குள்
சேரனுக்குச் சென்று சேர்ந்திருக்கும்.

இப்படி இருக்க ஒன்றுமேதெரியாதப் பச்சைக் குழந்தையாய்ச்
சேரன் கிழக்குவாசலுக்கு மகிழ்வுலா வருவானா?

அத்தோடு, வஞ்சிக்குச் செய்தி கொண்டு போன
உளவாளிகளுக்குக் கண்ணகியின் வஞ்சினமும் கதையும்
அவள் உயர்வும் தெரிந்திருக்க ஞாயமில்லை. ஆகையால்
வஞ்சியில் இருந்து புறப்படு முன்னர்,
கண்ணகியைப் பற்றிக் குட்டுவனுக்கு எதுவுமே தெரியாது.

ஆனால், அவன் புறப்படும் முன் மதுரையில் அரசன்இறந்ததும்
தீக்கிரையானதும் தெரியும். கண்ணகி தெய்வமான பின்னரே
சேரன் குணக்கோட்டம் வந்திருக்கிறான் என்பது அங்கே மக்கள் அவனிடம் இந்தச்
செய்தியைச் சொல்வதை சிலம்பே சொல்கிறது.

கண்ணகியின் மறைவு மதுரை அழிவிற்குப் பதினான்கு
நாள்கள் கழித்தே. இந்தப் பதினான்கு நாள்களுக்குள்
சேரன் விதயம் அறிந்து, வஞ்சியில் இருந்து 150/160 கி,மீ
தொலைவில் இருக்கிறக் கிழக்கு வாசலுக்குப்
புறப்பட்டிருப்பான் என்பது எளிதில் நம்பக்கூடியதே.

மதுரை நேய அரசாகத்தான் இருந்திருக்கிறது.
அதனால்மாற்றார் யாரும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி விடக்
கூடாது என்று கருதி வந்திருக்கலாம்!

இயல்பாகவே பக்கத்து நாட்டில் சரவல் இருக்கும் போது
அரணக் காவலை மேம்படுத்த வேண்டி வந்திருக்கலாம்!

வாய்ப்பிருந்தால், மதுரையை தனது நேரடி ஆட்சிக்குக்
கொண்டு வந்துவிடலாம் என்று வந்திருக்கலாம்!

அல்லது பாண்டியர்களுக்கு உதவ வந்திருக்கலாம்!
செங்குட்டுவனின் சீற்றமிகு மறத்தினை அவனது பல்வேறு
போர்களில் சிலம்பும் பதிற்றுப் பத்தும் காட்டும்
பாடல்களில் இருந்து பார்க்கும் போது, செங்குட்டுவனின்
குணக்கோட்ட வரவு அரண வரவுதானே தவிர
மகிழ்வுலாவாக இருக்கவே முடியாது.

அப்படி இருப்பினும், அடிகளாரின் சேரனின் குணக்கோட்ட
வரவை வருணிக்கும் வரிகள் ஒரு இன்பச்சூழலைக்
காட்டுகிறதென்றால், அதுதான் காப்பியப் பண்பாடு!

காப்பியம் காட்டும் உயர் பண்பாடுகளில் இஃது ஒன்று!
சிலப்பதிகாரம் நெஞ்சை அள்ளுவதற்கானக்
கரணியங்களில் இஃதும் ஒன்று என்றுதான்
சொல்லவேண்டும். அடிகளார் உயர்ந்து நிற்பது
இதனாலும்தான்.

மதுரையின் நிலை அறிந்து அவசர அவசரமாகச்
செங்குட்டுவன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றப்
படைதிரட்டி நின்றான் என்று காப்பியம்
சொல்லியிருக்குமானால், அல்லது பாண்டியன் மாள்வைத்
தொடர்ந்து மதுரையில் ஏற்பட்டப்
பெருங்கலகத்தை அடக்க சேரன் புறப்பட்டான் என்று காப்பியம்
சொல்லியிருக்குமானால், சிலப்பதிகாரம், அரசியலும்
போரும் மறமும் பெருத்த காப்பியமாக ஆகியிருக்கும்.

போர் முரசுகளின் ஒலியில் ஒப்பற்றப் பாண்டிய அரசனும் அரசியும்
உலகுக்கு உணர்த்திய பண்பாட்டொளியும், ஒப்பற்றக் கண்ணகியின்
ஒளியும் சற்றேனும் மறைக்கப்பட்டிருக்கும்.
அதனாலேயே அடிகளார் அப்படிச் சொல்லவில்லை.

இந்த உயர்ந்த இலக்கியப் பண்பாடு உயர்ந்த
படைப்பாளிகளிடம் இன்றைக்கும் இருக்கிறது.
நமது குமுகத்தில் அதற்குச் சான்றாக இரண்டு
படைப்பாளர்களை/படைப்புகளைச் சொல்லலாம்.

அமரர் கல்கி தனது புகழ்பெற்ற பொன்னியின் செல்வன்
புதினத்தில் கடைசிவரை ஆதித்த கரிகாலனைக்
கொன்றவர் யார் என்று சொல்லவேயில்லை. அது ஒரு
நல்ல பண்பாட்டுக் காரணம்.

இன்னொன்றை, வீரபாண்டி கட்டபொம்மன்
திரைப்படத்திலேக் காணலாம். வெள்ளையத்
தேவன்போரில் சுடப்பட்டு மாள்வது போலக் காட்டியிருப்பார்கள்.
ஆனால் வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி.

வெள்ளையத் தேவன் கட்டபொம்மனைப் போல மறைந்து வாழ்கையில்,
1000 பொன் பரிசுக்கு ஆசைப்பட்ட அவனது
தாய்மாமனாலேயே வெள்ளையர்களிடம் காட்டிக்
கொடுக்கப் பட்டான்.

வரலாற்றைத் திரிப்பதுபடைப்புகளின் நோக்கம் அல்ல.
ஒரு வரலாற்றில் இருந்து எத்தனையோ படைப்புகள் வரலாம்.
ஆனால், எடுத்துக் கொள்ளப்படும் குறிக்கோள்களை மட்டும் உயர்த்தி
வைப்பதாக இருக்கும்.

அப்படித்தான் அடிகளார் காப்பியத்தை அமைத்திருக்கிறார்.

மலை காண்குவம் என்று வரும் குட்டுவன்வருகை,
வரும் அழகைப் பற்றி மட்டும் சொல்லப்படுவதால்,
அது அவன் மலை "வளம்" காணு வருகையாக நமக்குத் தெரிகிறது.

ஆயினும் அடிகளார் ஒரு குறிப்பை மட்டும் அழற்படு
காதையிலேயே கொடுத்திருக்கிறார் என்பது, மதுரை
தீக்கிரையான போது கவனிக்க வேண்டிய முக்கியமான
விதயங்களில் மூன்றாவது.

"ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர்
காவிதி மந்திரக்கணக்கர் தம்மொடு
கோயில் மாக்களும் குறுந் தொடி மகளிரும்
ஓவியச் சுற்றத்து உரை அவிந்து இருப்ப..."

"காழோர் வாதுவர் கடுந் தேர் ஊருநர்
வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயில் கொற்ற வாயில்
தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள.."
....சிலம்பு:அழல்:8-15

பாண்டியன் அரண்மனையில் அலுவலர்கள்
அனைவரும் செயல் நடப்பு ஏதும் அறியாது
இருக்கின்றனர்.

பல்வேறு காவற்படையினரும் தீமுகம் கண்டு
கோட்டையை விட்டு அகன்று போகின்றனர்.

குமுகத்திற்கு எந்தத் தீங்கு ஏற்பட்டாலும் அதில்
இருந்து மக்களைக் காப்பது காவலர்/படையினர்கடமை.
அவர்களே வெளியேறி விடுகிறார்கள்
என்றால் தலைநகரம் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்றுதானே பொருள்?

அரசியலில் பிற நாட்டிற்கு இது ஏது அல்லவா?
ஆகவே, குட்டுவனின் குணக்கோட்ட வருகை
என்பது அரண வருகை. அது இன்ப உலா அல்ல.

பாண்டிய நாடு அல்லல் பட்டு இருக்கிற போது
சேர நாட்டின் கிழக்குப் பாசறையான குணக்கோட்டத்தில்
வந்து அமர்ந்த சேரன், பின்னர்ப் பாண்டிய நாட்டில்
அரசியல் குழப்பம் ஏதுமில்லை என்பதை உறுதிசெய்த பிறகே,
மதுரை அழிந்ததால் சேரநாட்டுக்கும்
பகைவரால் சரவல் வர வாய்ப்பில்லை என்று உறுதி
செய்த பின்னரே அவன் நீண்ட காலம் பிடிக்கக் கூடிய
வடநாட்டுப் படையெடுப்பு என்று முடிவை
குணக்கோட்டத்தில் எடுக்கிறான்.

வெறும் மலைவளம் காணு வருகையாக அது இருந்திருந்தால்
அங்கே அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்காது.

பதிற்றுப்பத்துக் கூறும், குட்டுவனின் மோகூர் வெற்றி உள்ளிட்ட
பல வெற்றிகளில் குட்டுவனின் சீற்றமிகு போர் மற்றும் அரசியல் திறனைக்
காணும்போது செங்குட்டுவனின் குணக்கோட்ட வருகை
இன்ப உலா வருகை என்று எண்ணுவது தவறு.

முந்தைய கட்டுரைகளில் விளக்கியது போல,
அப்பேர்ப்பட்ட மறம் மிகுந்த திறன் மிகுந்த
மூத்தவன் குட்டுவன் இருக்கும் போது,
அவனுக்காக இளையவன் இளங்கோ
அரசைத் துறந்து ஈகை அல்லது தியாகம் செய்தான்
என்பது பெரும் தவறு.

அன்புடன்
நாக.இளங்கோவன்

வேந்தன் அரசு

unread,
Mar 30, 2008, 5:00:27 PM3/30/08
to minT...@googlegroups.com
இராமாயணம், பாரதம், சிலப்பதிகாரம் எல்லாவற்றிலும் நூலாசியரும் கதையில் கலந்து கொள்வர்.
 
அது அக்காலத்திய மரபு.
 
அதனால் இளங்கோ காலத்தில்தான் கண்ணகி கதை நடந்தது என்று கொள்ள முடியாது
 
வஞ்சியில் பறை அடித்தால் வடநாட்டு மன்னர்களின் ஒற்றர்கள் தம் அரசுக்கு தெரிவிப்பர் என்றால் மதுரை எரிந்தது முதல்  நடந்தது யாவும் சேரனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். ஆனால் அவருக்கு தெரியவில்லை.  சாத்தனார்தான் நடந்த கதையை சொல்லுகிறார்.
 
எனவே குறவர்களின் செவிவழி கதையை இளங்கோ காப்பியம் ஆக்கி இருக்கலாம்.
 
 
 


 
2008/3/30 Elangovan N <nela...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Mar 30, 2008, 7:58:07 PM3/30/08
to minT...@googlegroups.com
2008/3/31 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>
> எனவே குறவர்களின் செவிவழி கதையை இளங்கோ காப்பியம் ஆக்கி இருக்கலாம்.
>

மிக சுவாரசியமான நாக.இளங்கோவனின் கதையாடல் எனக்கு நான் முன்பு பார்த்த
ஒரு ஆங்கிலப்படத்தை நினைவுபடுத்தியது. இயக்கம் இத்தாலியப் பெயர் கொண்ட
ஒருவர். கதை இயேசு மறைந்த சில வருடங்களில் நடப்பது. இயேசு என்கின்ற நபர்
உண்மையிலேயே இருந்தாரா? என அறிய முயலும் ஒருவன் தேடித்தேடி கடைசியில்
அப்படி ஒருவர் இருந்தார் என்று யோகிக்க முடிகிறதே தவிர
நிரூபிக்கமுடியவில்லை என்று முடியும். மிக நேர்த்தியான படம்.

இளங்கோவடிகளுக்கு கதை வருவதற்குள் கண்ணகி தெய்வமாகிவிடுகிறாள்.
சரித்திரம் நாம் நினைப்பதைவிட வேகமாக நகர்கிறது.

இக்காப்பியம் தோன்றிய காலமும் ஏறக்குறைய இயேசு காவியம் தோன்றிய காலக்கட்டம்தானே!

கண்ணன்

venkatram dhivakar

unread,
Apr 2, 2008, 12:35:58 AM4/2/08
to minT...@googlegroups.com
இளங்கோ அவர்களே,
 
நீங்கள் அந்தக் கால மெய்யான இளங்கோதான். அதில் சந்தேகமே இல்லை.
எத்தனை ஆழமான, நேர்த்தியான கால-தொலைவு பற்றிய அளவு ஆராய்ச்சி? பாராட்டுகள். ரசித்துப் படித்தேன்.
 
செய்திகள் பரவுவது என்பது அந்தக் காலத்தில் மிக மிக அரிதுதான். செவி வழிச் செய்திகளில் ஏகப்பட்ட அதிகரிப்புகள் இருப்பது இயற்கைதான். பொதுவாக மூவேந்தர் தேசங்களை மலைகளும் காடுகளும் பிரித்திருப்பதை சிலம்பில் வெகு அழகாக இளங்கோ கோடி காண்பிதுள்ளார். கவுந்தி அடிகள் கோவலனையும், கண்ணகியையும் மதுரைக்கு அழைத்து வரும் படலத்திலேயே இந்த தொலைவுக் கணக்கும், போகும் பாதகளின் கடினமும் இளங்கோ அழகாகவே சொல்வது புரிகிறது.
 
ஆனால் சேரநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையே உள்ள மலைத்தொடர், காடு இவைகளைக் கணக்கில் எடுக்கும்போது, சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் இடையே உள்ள கால-தொலைவு வேற்றுமை சற்று குறைவுதான். ஆகையினால் சென்குட்டுவனுக்கு பாண்டியன் மறைந்த செய்தி செல்வதற்கு அதிக நாட்கள் பிடித்திருக்கும். உண்மைதான்.
 
வாழ்க உங்கள் தமிழ்ப்பணி!
 
அது சரி! கண்ணகி வளையல் உடைத்ததை எழுதி இருக்கிறீர்கள்! கணவன் இறந்தபிறகு மனைவி வளையல் உடைப்பது என்பது அப்போதே உள்ளதோ?
 
திவாகர்.

Elangovan N

unread,
Apr 2, 2008, 1:33:16 PM4/2/08
to minT...@googlegroups.com
அன்பின் திவாகர் அவர்களுக்கு,

தங்கள் கனிவான் சொற்களுக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி (அதற்குத் தகுதி உடையவன் அல்லன் என்ற போதிலும் );

2008/4/2 venkatram dhivakar <venkdh...@gmail.com>:  
 பொதுவாக மூவேந்தர் தேசங்களை மலைகளும் காடுகளும் பிரித்திருப்பதை சிலம்பில் வெகு அழகாக இளங்கோ கோடி காண்பிதுள்ளார். கவுந்தி அடிகள் கோவலனையும், கண்ணகியையும் மதுரைக்கு அழைத்து வரும் படலத்திலேயே இந்த தொலைவுக் கணக்கும், போகும் பாதகளின் கடினமும் இளங்கோ அழகாகவே சொல்வது புரிகிறது.
 

ஆமாம் - இதனை அடிகளார் வருணிப்பது மயக்கம் தருவதாக இருக்கும். சிலப்பதிகாரக் காப்பியத்தின்
சிறப்பே அதன் மூலக்கதை மட்டுமல்ல. இம்மாதிரி அவர் அக்காலத்திய குமுகத்தை அப்படியே
எடுத்து கண்காட்சி போல் வைத்து விடுகிறார்.

அது சரி! கண்ணகி வளையல் உடைத்ததை எழுதி இருக்கிறீர்கள்! கணவன் இறந்தபிறகு மனைவி வளையல் உடைப்பது என்பது அப்போதே உள்ளதோ?

ஆமாம் இந்தப் பழக்கம் தொன்று தொட்டு நம்மிடம் இருப்பதாகவேப் படுகிறது.
அதுவும் கண்ணகி கோவலன் மாண்டதும் உடைக்கவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் அவளை
ஆற்றி, தீயையும் அவித்த பின்னர், நகரை நீங்கும்போது உடைக்கிறாள்.
அதுவும் கொற்றவை கோயில் வாசலில் (அம்மன் கோவில் முன்னர்).

"கொற்றவை வாயில் பொந்தொடித் தகர்த்துக்
 கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேல்திசை வாயில் வறியேன் பெயர்கு"
.....சிலம்பு:கட்டுரை காதை:181-183

மங்கல அணிகள் நீத்தல் என்பது பழக்கமாக இருந்திருக்கிறது.
தற்காலத்தில் தாலி, மூக்குத்தி, திலகம், வளையல், கொலுசு, மெட்டி போன்றவை
மங்கல அணிகளாகக் கருதப்படுவதைக் காணலாம்.

மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்



 

Elangovan N

unread,
Apr 2, 2008, 1:36:57 PM4/2/08
to minT...@googlegroups.com
2008/3/31 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
வஞ்சியில் பறை அடித்தால் வடநாட்டு மன்னர்களின் ஒற்றர்கள் தம் அரசுக்கு தெரிவிப்பர் என்றால் மதுரை எரிந்தது முதல்  நடந்தது யாவும் சேரனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். ஆனால் அவருக்கு தெரியவில்லை.  சாத்தனார்தான் நடந்த கதையை சொல்லுகிறார்.
 
எனவே குறவர்களின் செவிவழி கதையை இளங்கோ காப்பியம் ஆக்கி இருக்கலாம்.
 

அன்பின் நண்பர் வேந்தன்,

குறவர்கள் கண்ணகி வானகம் சென்ற விதயத்தையும், சாத்தனார் அவளின் புகார்வாழ்வு மற்றும் மதுரை நிகழ்வு
பற்றியும் சொல்வதாக அமைந்திருக்கிறது. அதோடு மாடலன் என்பானும் பல செய்திகளைச் சொல்கிறான்.
சாத்தனாருக்கும் மாடலனுக்கும் எப்படியேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் பார்க்க இருக்கிறது.
மெதுவே இது குறித்து உரையாட்லாம்.

நன்றி.

Elangovan N

unread,
Apr 2, 2008, 1:40:24 PM4/2/08
to minT...@googlegroups.com


2008/3/31 Narayanan Kannan <nka...@gmail.com>:



இக்காப்பியம் தோன்றிய காலமும் ஏறக்குறைய இயேசு காவியம் தோன்றிய காலக்கட்டம்தானே!

கண்ணன்

அன்பின் நண்பர் கண்ணன்,

உண்மையில் இந்தக் கால கட்டம் மிக முக்கியமாக இருக்கிறது. இராம.கி ஐயாவின் சிலம்பில் வரலாறு - பகுதி 1
இப்படித்தான் இந்தியா முழுவதும் தேடுகிறது, இது மேலும் விரிந்து சுவை கூட்டும்.

Kannan Natarajan

unread,
Jul 19, 2008, 7:30:16 PM7/19/08
to minT...@googlegroups.com
தென்னவன் தீதிலன்!
 
சிலம்பில் தவறிழைத்தானா தென்னவன் - மதுரைக் காவலன் - பாண்டிய நெடுஞ்செழியன்?
 
கோவலனைக் கொலைபுரிந்தனர் கொடியவர் எனக் கேள்விப்பட்ட கண்ணகி அப்படித்தான் சொல்லுகிறாள். இச்செய்தி கேட்டு திங்கள் வீழ்ந்தது போல் வீழ்ந்தாள். அவலம் கொண்டு கீழ்வருமாறு கூறுகிறாள்:
 
* மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறிழைப்ப (மக்கள் எல்லாம் பழி தூற்றுமாறு பாண்டியன் தவறு செய்ய);
 
* செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறிழைப்ப (பாவத்தினைப் பின்பற்றித் செல்லும் கொடுங்கோலனாகிய பாண்டியன்
  தவறிழைப்ப);

* மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறிழைப்ப (நீதியினின்றும் நீங்கிய கோலையுடைய பாண்டியன் தவறு செய்ய);

* முறைஇல் அரசன் (நீதியற்ற இவ்வரசன்);

* பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறிழைப்ப (பாரோர் பழிச்சொல் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவறிழைப்ப);

* தேரா மன்னா! (ஆராய்ச்சி இல்லாத மன்னனே!);

இவ்வாறெல்லாம் மதுரை நகர் வழியே வரும்போதும் பாண்டியனைச் சந்தித்த போதும் நேரிடையாகவே சாடுகிறாள்; வசை பாடுகிறாள். ஆனால் வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதையிலே,

 
"தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
  நல்விருந்து ஆயினன்; நான் அவன் தன் மகள்."
 
என்று கண்ணகி கடவுள் தன்மை பெற்றவுடனே கூறுவதைப் பார்த்தால் சற்று வியப்பாக இருக்கும். கண்ணகி கூற்றுப்படி வையைக் கோன் - தேவர் கோன் தன் கோயில் நல்விருந்து ஆயினன் என்பதைக் கேட்கும் போது வியப்பாக உள்ளது.
 
இந்த மாற்றம் அவளிடத்திலே எதனால் உண்டானது அல்லது எப்படி நிகழ்ந்தது? சிலப்பதிகாரத்தில் விடைகாண முடியாத விஷயம் இது.

அந்தத் தென்னவனை - மன்னவனை - பாண்டியனை - அரசனை - அக்கொற்கைவேந்தனை, தன் தந்தையாகத் தத்து எடுத்துக் கொள்கிறாள். தான் அவன் தன் மகள் என்று பெருமையாகச் சொல்லுகிறாள். இளங்கோ அடிகள் செய்த மாபெரும் புரட்சி இது. பெரியவர்கள், சிறியவர்களைத் தத்து எடுத்துக் கொள்வதுதான் மரபு. ஆனால் வயதிலே சிறியவளான கண்ணகி இறந்துபோன ஒருவனை தன் தந்தையாக தத்து எடுத்துக் கொள்வது-மரபை மீறிய செயல்.

இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன என்று பார்ப்பதற்கு முக்கியமான இடம் வழக்குரை காதை. கண்ணகியும் - பாண்டியனும் முதல் முதல் சந்திக்கின்ற நிகழ்வு. இது போன்ற ஒரு காட்சியை இது வரைக்கும் உலகத்திலுள்ள எந்த ஒரு காப்பிய ஆசிரியரும் செய்தது கிடையாது. இனிமேல் செய்யவும் முடியாது. முதன் முதலாக கண்ணகியை அரண்மனையிலே பார்த்த உடனேயே அவனுக்குள் ஏற்பட்ட மாற்றம் என்ன?

 
"மெய்யில் பொடியும்; விரித்த கருங்குழலும்
  கையில் தனிச்சிலம்பும்; கண்ணீரும் வையைக்கோன் கண்டளவே தோற்றான்."

தூசு படிந்த மேனியைப் பார்த்தான் - விரித்த கருங்குழலைப் பார்த்தான் - அவள் கையில் ஒற்றைச் சிலம்பைப் பார்த்தான் - கண்களைப் பார்த்தான்-அந்தக் கண்களில் இருந்து பெருகி வரும் கண்ணீரைப் பார்த்தான். இத்தனையும் பார்த்தவுடன், தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்டான்.

மேலும் அவளைப் பார்த்து "நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரையோ நீ மடக் கொடியோய்," என்று மிகவும் அடக்கமாக, அரசன் என்கிற அதிகாரத் தோரணை இல்லாமல் அவளிடத்திலே கேட்கிறான். இதைக்கேட்ட கண்ணகிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கோபம் வந்தது. காரணம் பழக்கத்தின் காரணமாக, தன்னைப் பன்மையிலே விளித்தவனை - எம்முன் என்று சொன்னவனைப் பார்த்து உடனேயே "தேரா மன்னா," என்றுதான் அவனை அவள் விளித்தாள்.

தன் ஊர், தன் பெயர், தான் வந்த காரணம் மற்றும் தான் பெற்ற துன்பத்தைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியவள், அதைச் சொல்வதற்கு முன்பாக தான் வாழ்ந்த பகுதியின் மன்னன் வழங்கிய இரண்டு தீர்ப்புகளை மேற்கோளாகக் கூறிவிட்டு பிறகுதான் அவ்வூரில் பிறந்தவள் என்றும் மற்றவற்றையும் சொல்லுகிறாள். இந்தத் தீர்ப்புகள்தான் பாண்டியனைச் சிந்திக்க வைத்தது. தீர்ப்பைக் கேட்ட பாண்டியன், அந்தத் தீர்ப்பைப் பற்றியே சிந்தித்துக் கொண்டுதான் முழுவதும் பேசுகிறான். அப்படிப்பட்ட அந்த தீர்ப்புகள்தான் என்ன?

முதலாவதாக,

 
"எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
  புள்ளுறு புண்கண் தீர்த்தோன்,"   என்று சிபிச் சக்கரவர்த்தி நிலைநாட்டிய நீதியையும்,

இரண்டாவதாக,

 
"வாயிற் கடைமணி நடுநா நடுங்க
 ஆவிற் கடைமணி உகு நீர் நெஞ்சு சுடத்தான் தன் அரும் பெறல்
 புதல்வனை ஆழியின் மடித்தோன்," என்று மனுநீதிச் சோழன் தந்த தீர்ப்பையும் மேற்கோள் காட்டுகிறாள் கண்ணகி.

மனுநீதிச் சோழனின் தீர்ப்பு பாண்டியனை மிகவும் பாதிக்கிறது. ஆறறிவு பெறாத அந்தத் தாய்ப்பசுவுக்கு, ஆராய்ச்சி மணியை அடித்தால் மன்னன் வெளியே வருவான், நீதி தருவான் என்று தெரிந்திருக்கிறதே; கன்றை உயிருடன் மீட்டுச் செல்ல முடியாது என்பது தெரிந்தும் வேறு எந்தக் காரணத்துக்காக ஆராய்ச்சி மணி அடித்தது. தனக்குத் துன்பம் இழைத்தவன் தன் கன்றைப் போலவே சாகவேண்டும் என்கிற பழிவாங்கும் எண்ணம் அத்தாய்க்கு எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட சோழன் தன் மகனைக் கொன்றான்.

இந்தத் தீர்ப்புகள்தான் பாண்டியனை நிலைகுலையச் செய்தன. தான் தவறு செய்துவிட்டதாகவே வைத்துக் கொண்டாலும் தன் கணவனை மறுபடியும் உயிர்ப்பித்து கூட்டிச்செல்ல கண்ணகி வரவில்லை. பழிக்குப்பழி என்கிற ஓர் எண்ணம் அவள் இதயத்திலே எங்கோ ஓரத்திலே இருப்பதை உணர்ந்தான்.

திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மனுநீதிச் சோழனது நாட்டின் பெண்தானே அவள்! இப்போது பாண்டியன் ஒரு முடிவுக்கு வருகிறான். தான் மடியவேண்டும் அவள் கணவன் கோவலனைப் போல, தான் மன்னனானபடியால் தண்டனையை யார் நிறைவேற்றுவார்கள்? தனக்குத்தானே தண்டனையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று தன் ஆன்மாவுக்கு ஆணையிட ஆயத்தம் ஆகிறான். வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு கடமைக்காக இரண்டொரு வார்த்தைகள் பேசுகிறான்.

 
"பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
  யானோ அரசன்! யானே கள்வன்."

தன்னைக் கள்வன் என்று குற்றம் சுமத்த வேண்டும். அப்போதுதான் அவன் நாட்டின் சட்டம் "கள்வனை கோறல் வெள் வேல் கொற்றம்," நிறைவேற்ற முடியும் என்று முதலிலேயே சொன்ன தண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்கிறான்.

 
"மன்பதை காக்கும் தென்புலம் காவல்
 என்முதல் பிழைத்தது-கெடுக என் ஆயுள் என
 மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே."
  • இருபத்தைந்து வரிகளில் வழக்கு முடிகிறது,
  • ஏழு எட்டு வரிகளிலே குற்றம் ஒத்துக்கொள்ளப்படுகிறது,
  • இரண்டே வரிகளிலே தண்டனை அறிவிக்கப்பட்டு அதுவும் நிறைவேற்றப்படுகிறது.

மன்னனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவள் கோப்பெருந்தேவி. தென்னவன் மாண்டு வீழ்ந்தான். அவன் மனைவி கோப்பெருந்தேவி குலைந்தனள். "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்," என்று இணையடி தொழுது வீழ்ந்தனள்.

கண்ணகி, வழக்காடினாள் - வழக்கின் முடிவிலே மன்னன் மடிந்தான். இப்போது தன்நிலை திரும்புகிறாள். கோப்பெருந்தேவி வீழ்ந்ததைப் பார்த்து அவள் இறந்துவிட்டாள் என்பதைத் தெரியாத கண்ணகி, பேரரசனான பாண்டியன் தேவியே! கணவனை இழந்த தீவினை உடைய நான், இப்போது ஒன்றையும் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். எனினும் ஒன்றை மட்டும் உணர முடிகிறது. பிறன் ஒருவனுக்கு முற்பகலில் கேடு செய்தவன், தன் கேட்டினை அன்றைப் பிற்பகலே காண்பான் என்று சொல்லுகிறாள்.

"பதிகத்திலே சொன்ன" ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதை புரிந்து கொண்டவளாக படைக்கப்படுகிறாள் கண்ணகி. தனது கணவன் இறந்தது பாண்டியன் தவறிழைத்ததனால் இல்லை, அது அவன் முன் வினைப்பயன், என்று மேலும் பண்டைச் சாபம் பலித்ததன் விவரங்களைச் சொல்லுகிறாள். மேலும் செம்மையில்லோர்க்குச் செய்தவம் உதவாது என்றும் சொல்லுகிறாள்.

 
"உம்மை வினை வந்துருத்த காலைச்
 செம்மை யிலோர்க்குச் செய்தவம் உதவாது."

முற்பிறவியில் செய்த தீவினை பயன் தரும் காலம் வந்தால், செம்மையான உள்ளம் இல்லாதவர்க்கு செய்த தவமும் உதவாது என்று சொல்லுகிறாள்.

 
பெண்மையின் மென்மை எப்போது சிதைக்கப்படுகிறதோ அப்போதே அவள் கொற்றவை ஆகிறாள். தன்னை மறப்பாள், தன் நிலையை மறப்பாள். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கண்ணகி பாண்டியனை தவறிழைத்தான் என்று கூறுகிறாள். பிறகு தன்னிலை மறுபடியும் அடைந்தவுடன் அதே பாண்டியனை "தென்னவன் தீதிலன் நான் அவன் தன் மகள்" என்று கூறுகிறாள். அதனால் தென்னவன் என்றும் தீதிலன் - இது கண்ணகி கூற்று மட்டுமல்ல... இங்கே இளங்கோவடிகளின் தீர்ப்பும் கூட அதுதான்!
 
ஜி.கோபாலன் (தலைவர், இளங்கோவடிகள் இலக்கிய மன்றம், கோவை)
 

Reply all
Reply to author
Forward
0 new messages