வணக்கம் நண்பர்களே. தமிழிசைப்பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமே.
தமிழிசையைப் பற்றிய மிக அருமையான நூல் ஒன்றைப் படைத்த ஆபிரகாம் பண்டிதரின் பிறந்தநாள் ஆகஸ்ட்-2 என்று தெரிந்தது.
ஆபிரகாம் பண்டிதரைப் பற்றிக் கல்லூரிக்காலத்தில்தான் தெரிந்துகொண்டேன். ஆனால் தீவிரமான ஆராய்ச்சியிலெல்லாம் ஈடுபடவில்லை. அந்தக்காலத்துத் துடிப்பு எல்லாம் … தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலும் கல்லூரியளவிலும் முதன்மையாகத் தேறவேண்டும் என்பதுவே!!! ;-)
++++++++++
பின்னணி
—————
கடந்த இரண்டு ஆண்டுகளாக இளங்கோ இராமவர்மாவின் இசையைத் தினமும் கேட்டுக்கொண்டிருப்பதால் … அவருக்கு ஒரு கேள்வியை அனுப்பினேன் — ‘மீனாட்சி மேமுதம் தேஹி’ என்ற பாட்டில் அவருடைய குரு பாலமுரளியவர்கள் ஏன் ஓரிடத்தில் இன்னவாறு பாடுகிறார்? அதற்கு வர்மா அவர்கள் அனுப்பிய பதில்: பாடலை இயற்றிய முத்துசாமி தீட்சிதர் வாழ்ந்தது 200-ஆண்டுகளுக்குமுன்; பாலமுரளியவர்கள் பாடிய காலத்துக்குள் இரண்டு ‘கமகங்கள்’ வழக்கிழந்து போயின.
புரிந்தும் புரியாமலும் இந்தக் குறுகுறுப்பில் இருந்தேன்.
அண்மையில் திடீரென்று ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கர்ணாமிர்தசாகரம் என்ற நூலைப் படிக்க ஆவல் உண்டானது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் கிடைக்கும் இந்த நூலை மேயத்தொடங்கினேன்.
ஆதி இசைகள்: “நரப்படைவாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத்தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்றாகிய ஆதி இசைகள்” என்ற பகுதியைப் படித்தபோது அசந்துபோனேன். ஆதி இசைகள் 11,991?
++++++++++
என்னைப் பொருத்த அளவில் ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிருதசாகரம் ஓர் அருமையான நூல்! எப்பவும்போல … வேறு சிலருக்கு வேறுபல மாற்றுக்கோணக்கருத்துகள் இருக்கலாம்!
ஆபிரகாம் பண்டிதரின் நூலின் உள்ளடக்கம் அனைத்தும் எனக்குப் புரியவில்லை. :-(
புரிபடும்போல இருப்பதாக நான் நினைக்கும் சில குறிப்புகளை மட்டும் இங்கே சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
++++++++++
பழந்தமிழின் ஏழிசை யாவையெனப் பலரும் அறிவர்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.
எனக்கு வியப்புத் தந்த செய்தி: இந்த ஏழிசைகள் பிறக்கும் இடங்களாக ஆபிரகாம் பண்டிதர் சுட்டியிருக்கும் இடங்களுக்கும் தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் இடங்களாகத் தொல்காப்பியர் சுட்டியிருக்கும் இடங்களுக்கும் உள்ள ஒற்றுமை!
ஆபிரகாம் பண்டிதர் குறிப்பிட்டபடி …
பழந்தமிழ் இசை — இக்காலப் பெயர் — பிறக்கும் இடம்
—————————————————————————————————
குரல் — முதல் சுரம் (ச) சட்சமம் — மிடறு
துத்தம் — இரண்டாம் சுரம் (ரி) ரிஷபம் — நா
கைக்கிளை — மூன்றாம் சுரம் (க) காந்தாரம் — அண்ணம்
உழை — நான்காம் சுரம் (ம) மத்திமம் — சிரம்
இளி — ஐந்தாம் சுரம் (ப) பஞ்சமம் — நெற்றி
விளரி — ஆறாம் சுரம் (த) தைவதம் — நெஞ்சு
தாரம் — ஏழாம் சுரம் (நி) நிஷாதம் — மூக்கு
அதோடு … பெருந்தானம் எட்டு என்கிறார்: நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு, உதடு, பல், தலை
தொல்காப்பியர்வழி வரும் வழக்கு …
உந்தியிலிருந்து பிறக்கும் காற்று, தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் ஆகிய எட்டு இடங்களில் நிலைத்து நின்று … பேசுபவரின் முயற்சியால் பேச்சொலிகளாய் வெளிவருகின்றன.
தொல்காப்பியர் குறிப்பிடும் பேச்சொலிகள் தமிழின் உயிரொலிகள் 12-உம் (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ) மெய்யொலிகள் 18-உம் (க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன). தொல்காப்பியத்தின் பிறப்பியலில் விளக்கம் காணலாம்.
++++++++++
ஓர் ஒப்பீட்டு முயற்சி
———————————-
தலை உழை (ம)
மிடறு குரல் (ச)
நெஞ்சு விளரி (த)
பல்
இதழ்
நா துத்தம் (ரி)
மூக்கு தாரம் (நி)
அண்ணம் கைக்கிளை (க)
விடுபட்டுப்போனதை என் இளைய தலைமுறையினர் தொடர்வார்களாக. நன்றி.
++++++++++
அன்புடன்,
ராஜம்