குமரிக்கண்டம் -? (பாகம்-9)
2.ஈ .சிலம்பில் கடல்கோள்
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண் புனல் நன்னாட்டு”
என சிலம்பில் வரும் வரிகளுக்கு திருமால் மலைக்கும் குமரிக் கடலுக்கும் இடையே என பொருள் கொள்ளலாம். மாறாக
“நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும்மென்னாது பௌவம் என்றது என்னையெனின் , முதல்ஊழி இறுதியிற்கண் தென்மதுரையகத்து தலை சங்கத்துக்கண் அகத்தியனாரும் இறையானரும் குமார வேலும் முரஞ்சியூர் முடி நாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முது நாரையும் நாலாயிரித்தி நானூற்று நாற்பதிற்றியாண்டு இரி இயினார் .. காய்சினவழுதி முதல் கடுங்கோன் ஈராயுள்ளார் எண்பத்தொன்பதினமர். அவருட் கவியரங்கேறினார் எழுவர். பாண்டியருள் ஒருவன் சயமா கீர்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரிஇயினான். அக்காலத்து அவர் நாட்டு தென்பாலி முகத்திற்கு வடஎல்லையான பகுருளி எனும் ஆற்றிற்கும் குமரி எனும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக்காவதவாரும் இவற்றின் நீர்மலிவானேன மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும் , ஏழ் முன்பாலைநாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குணகரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் எனும் பன்மலை நாடும் , காடும், நதியும், பதியும் தடா நீர் குமரி வட பெருங்கோட்டின்காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமாரியாகிய பௌவம் என்றார் என்றுணர்க இது என்னை பெறுமாறினின், “ வடிவேல் எறிந்த வான் பகை பொறாது பகு றுளியாரும் பலமலையடுக்கத்து குமரிகோடும் கொடுங்கடல் கொள்ள “ என்பதனானும் கணக்காயர் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும் , உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும் பிறவற்றானும் பெறுதும்,“
அதாவது தொடியோள் பௌவம் என்பதற்கு குமரிக் கடல் என நேரடியாகப் பொருள் கொள்ளாமல் “ இளங்கோ அடிகள் குமரி நதி என்று கூறாமல் குமரிக்கடல் என ஏன் கூறினார் என்றால் பகுருளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையே இருந்த நாற்பத்தொன்பது நாடுகளை கடல் விழு ங்கி விட்டது. இதைத்தான் “பகுறுளியாரும் பலமலையடுக்கத்து குமரிக்கோ டும் கொடுங்கடல் கொள்ள” என புலவர் கூறியுள்ளார்” என்று இளம்பூரணார் உரையைக் காட்டி அடியார்க்கு நல்லார் விளக்கம் தருகிறார்.
இனி,
அடியிற்றன்னளவு அரசர்க்கு உணத்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பகுறுளியாரும் பன்மலையடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயுமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி..
கடலானது குமரிக்கோட்டையும் பகுருளியாற்றையும் கவர்ந்து விட்டதால் இமயத்தையும் கங்கையையும் தென்னவன் வென்றான். இதுதான் பொருள் அல்லவா? இங்கே நீங்கள் கலித்தொகை வரிகளின் பொருளை ஒப்பிட்டுப் பாருங்கள்.
அலைகள் மெல்ல ஊர்ந்து வந்து தனது நிலப் பரப்பை ஆக்ரமித்துக் கொண்டதால் , தென்னவனான பாண்டியன், மேற்கே சென்று சோழ சேர நாடுகளை வென்றான்.
சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது உண்மை. காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது மிகை.
தொடர்ந்து
“பகுறுளியாரும் பன்மலையடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” எனும் தொடரை அலசுவோம்.
குமரிக்கண்டம் -? (பாகம்-10)
2.ஈ .சிலம்பில் கடல்கோள்
குமரிக் கோடு .
“வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்”
(தொல்காப்பியம்)
“குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கெல்லையில்” (நன்னூல்) “பகுறுளியாரும் பன்மலையடுக்கத்து
“குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” (சிலப்பதிகாரம்).
பழந்தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் குமரி எனும் சொல் காணப்படுவதால் , இது நீண்ட காலமாக வழக்கிலிருந்து வரும் சொல் என அறியலாம்.
கச்சியப்ப சிவாச்சாரியா (1350-1420) எழுதிய ஸ்கந்தபுராணம் புராணம் கூறும் கதை இது.
“ஏராளமான உலகங்கள் உள்ளன..ஒவ்வொரு உலகத்திலும் ஏராளமான கண்டங்கள். ஒவ்வொரு கண்டத்திலும் ஏராளமான நாடுகள். அத்தகைய நாடு ஒன்றை பரதன் எனும் மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு எட்டு மகன்கள், ஒரே மகள். தன நாட்டை ஒன்பதாகப் பிரித்து எட்டு மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் பகிர்ந்தளித்தான். மகள் பெயர் குமாரி . அவள் ஆண்ட நாடு KUMARIKA KHANDA (குமாரி கண்டம்) என வழங்கப் பட்டது. அதுவே பூமி. அங்கே பிராமணர்களும் வாழ்ந்தனர் சிவனை வழிபட்டனர். வேதங்கள் முழங்கின. மற்றவை மிலேச்ச நாடுகள்.”
அடுத்து “தமிழகம்” எனும் நூலில் நாவலர் சோம சுந்தர பாரதி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
“மனு என்பவன் ஒரு தமிழ் வேந்தன். இவனுக்கு இளை என்னும் ஒரு பெண் மகவும் இயமன் என்னும் ஆண் மகவும் இருந்தனர். மனு தான் ஆண்டுவந்த நாட்டின் தென் பகுதியை இயமனுக்கும், வட பகுதியை இளைக்கும் அளித்தான். இயமன் ஆண்ட தென்னாடு கடல்வாய்ப்பட்டது. இதுபற்றியே இயமனுடைய உலகம் தெற்கில் உள்ளது என்னும் கோட்பாடு இன்று வரையும் உள்ளது. . வடக்கே இருந்த நாடு பெண்ணால் ஆளப்பட்டமையின் குமரி நாடு என்று வழங்கப்பட்டது. இளையின் நாடு பெண்களால் ஆளப்பட்டுவந்தது. தமிழகத்தின் ஒரு பகுதியாகிய தமிழ்நாட்டில் அரசி மனு நாட்டுக்குரியவள்; அவளுக்குப் பதில் ஆளாக அவள் உடன் பிறந்தான் நாட்டை ஆளுகின்றான். அரசுரிமை பெண்வழியாக வருகின்றது. மலையாளத்தில் பெண்களே சொத்துக்கு உரியோர். அவர்கள் ஆடவரிலும் சிறப்பாகவும் மேலாகவும் மதிக்கவும் நடத்தவும்பட்டு வருகிறார்கள்.” ஆக, குமரி எனும் பெயர் வந்ததற்கு கதைகள் பல உள . |
இனி, குமரிக் கோடு எனும் தொடரில் கோடு எனும் சொல்லிற்கு மலை எனப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவும் உரையாசிரியர்கள் காலத்தில் நடந்திருக்க வேண்டும். ஆக கோடு மலையானது. அந்த மலை இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த தமிழ் அறிஞர்களின் சிந்தையில் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. பாவாணர்
|
|
ஆக, கோடு 2500 கல் நீளமுள்ள பெரும் மலைத் தொடராக உருவெடுத்துவிட்டது. நம் தமிழ் நாட்டில் எத்தனை மலைகள் “கோடு” என்று அழைக்கப் படுகின்றன.? எத்தனையோ ஆண்டுகள் எத்தனையோ மலைகளில் சுற்றித்திரிந்தவன் எனும் அளவில் கோடு என்று திருச்செங்கோடு தவிர தவிர வேறு எந்த மலைக்கும் பெயர் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. திருச்செங்கோட்டில் |
சாம்பல் நிற நைஸ் பாறைகளில் இளம்சிவப்பு நிற (POTASH RICH) கிரானைட் பாறை கோடு போல் ஊடுருவியுள்ளதால் அது திருச்செங்கோடு எனப்படுகிறது. v
ஒருமுறை ஆதிசேஷனுக்கும்,வாயுபகவானுக்கும் போட்டி – யார் பலசாலி என்பதில். வாயு பகவான் மேரு மலையை ஒரு உலுக்கு உலுக்கினார். ஆதிசேஷன் தன் படத்தால் அழுத்திப் பிடித்துக் கொண்டார். மேரு மலையின் சில பகுதிகள் சிதறி எங்கோ சென்று விழுந்தன. அதில் நாகத்தின் ரத்தம் ஒட்டிக் கொண்டது. திருச்செங்கோட்டில் உள்ள செந்நிறம் பாம்பின் ரத்தம். இம்மலையில் நிறைய நாக சிற்பங்கள் உள்ளன. இதற்கு நாக மலை , நாககிரி , வாயுகிரி போன்ற பெயர்களும் உண்டு. இது புராணக் கதை. நம்புபவர்கள் நம்பட்டும்.
“கோடு” என்பதற்கு கரையெனப் பொருள் கொள்வார் அரும்பதவுரையாசிரியர் என்று வேங்கடசாமி நாட்டார் குறிபிடுகிறார். அனைவரும் ஏற்கத்தக்க உரை அரும்பதவுரையாசிரியர் உரையே என்பது குறிப்பிடத்தக்கது.
கோடு என்பதற்கு வேறு பொருள் ஏதும் உளதா/...நாளை.