இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஸ்ரீதியாகப்பிரும்ம ஆராதனை நிகழ்த்தினார்கள். தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்தார்கள்.
அந்த விழாவின் போது பெங்களூர் நாகரத்தினம்மா பற்றிப் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. பொதுவாக எனக்கு மேடையில் பேசத் தெரியாது. உளறிக் கொட்டுவேன். அதனால் எழுதி வைத்துக் கொண்டு படித்து விடுவேன். (இதுவும் பல சமயங்களில் உளறலாக இருக்கும்).
இந்த நாளில் பெங்களூர் நாகரத்தினம்மா பற்றிப் பேசியதை உங்களுடன் நினைவு கூரலாம் என்று நினைத்தேன். நான் பேசியது இதோ
என்னுடைய உரை -
அனைவருக்கும் வணக்கம்.
ராகதேவன் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் அவருடைய பஞ்சரத்னக் கீர்த்தனைகளைக் கூட்டிசையாக இசைக்க வந்திருக்கும் அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள்.
இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கும் அதன் செயலர் மற்றும் அனைத்து செயற்குழு நண்பர்களுக்கும் என்னுடைய இசை மணம் கமழும் வாழ்த்துக்கள்.
இசைக்கலைஞர்கள் சக்ரபாணி போன்றவர்களை வாழ்த்துகின்ற வயதும் ஞானமும் எனக்கு உண்மையிலேயே இல்லை. இது போன்ற ஒரு நிகழ்வை தலைநகரில் இரண்டாம் முறையாக தில்லித் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருப்பது மிகவும் பெருமை தரும் விஷயம். நீங்கள் அனைவரும் இசையால் அஞ்சலி செலுத்தும் போது இசையறியாத நான் என்னுடைய பாணியில், திருவையாற்றில் நடக்கும் ஆராதனை குறித்த வரலாற்றை மிகச் சிறிய அளவிலும், அந்த ஆராதனைகள் மற்றும் இன்று நீங்கள் பாடப்போகும் பஞ்சரத்னக் கீர்த்தனைகளை ஒரு அஞ்சலியாகப் பாடுகின்ற மரபின் துவக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். அதே போல, திருவையாற்றில் தியாகராஜன் சமாதியைப் புதுப்பித்து அங்கு ஆராதனை வழிபாடுகளை ஏற்படுத்திய தேவதாசி பெங்களூர் நாகரத்தினம்மாளின் நினைவைப் போற்றியும் அவரைப் பற்றி இங்குப் பேசுவதால் மட்டுமே இந்த நிகழ்வு பூரணம் அடையும் என்று நினைக்கிறேன்.
இங்குள்ள இளம் இசைக்கலைஞர்களுக்கு இந்தத் தகவல்கள் சற்று உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தியாகராஜருடைய மரணத்தைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு ராமரே நேல் தோன்றி அவருக்குச் சொன்னதாக செய்திகள் இருக்கின்றன. தியாகராஜர் சமாதி அடைவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் ஒரு குன்றில் அமர்ந்து கொண்டு ஸ்ரீராமர், இந்த பூமியில் தியாகராஜன் காலம் முடிவடையும் நாள் நெருங்கி விட்டது என்றும் சொல்கிறார். சஹானா ராகத்தில் அமைந்த கிவை என்கிற கீர்த்தனை இந்த செய்தியை சொல்கிறது. பின்னர் அவர் சன்னியாசத்தை ஏற்றுக்கொண்டு நாதபிரம்மானந்தர் என்று பெயர் சூடிக்கொண்டார்.
காவிக்கரையில் தன்னுடைய இருப்பினை மாற்றிக்கொண்டு தன் மரணத்துக்குப் பிறகு உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும், எத்தனை உப்பு சமாதியில் இடவேண்டும் என்பது போன்ற குறிப்புக்களையும் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்ட நாளில் பிராமணர்களுக்குத் தானங்கள் அளித்து, சீடர்கள் அவருடைய கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டு இருக்கும்போதே யோகநிஷ்டையில் ஆழ்ந்தார். அவருடைய சிரசில் இருந்து ஒரு பெரும் ஜோதி ஒன்று கிளம்பியது. தியாகராஜர் சமாதி அடைந்தார்.
தியாகராஜர் சமாதி அடைந்தது பிரபவ வருஷம், பூசத் திங்கள், கிருஷ்ண பட்சம், ஞாயிற்றுக்கிழமை. ஆங்கில நாட்காட்டியின் படி 1847ம் ஆண்டு ஜனவ மாதம் 6ம் தேதி.
தியாகராஜர் மறைந்து அங்கு அடக்கமான பிறகு சீடர்கள் அவரது சமாதிக்கு மேல் துளசி மாடம் ஒன்றை அமைத்திருந்தார்கள். தியாகராஜர் முக்தியடைந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பேரன் பஞ்சாபகேசய்யாவின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. அப்போதெல்லாம் அது ஒரு சிராத்தம் போல சம்பிரதாய சடங்காக எந்த இசை நிகழ்ச்சியும் இல்லாமல் நடைபெற்றது.
தியாகராஜன் பேரன் 1855ம் ஆண்டு தன்னுடைய 22 வயதில் மரணமடைய சீடர்களும் திருவையாறுக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். அவர்கள் அனைவரும் தத்தமது ஊர்களில் திதியை நடத்தினார்கள். 1903 வாக்கில் தியாகராஜன் மிகச்சில சிஷ்யர்களே மிஞ்சியிருந்தார்கள். இவர்களில் உமையாள்புரம் கிருஷ்ண பாகவதரும் சுந்தர பாகவதரும் தங்கள் குருநாதன் சமாதி சிதிலமடைந்ததை அறிந்து திருவையாறுக்கு வந்து மிகுந்த சிரமத்துக்கு இடையில் அந்த இடத்தைக் கண்டுபிடித்து புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள். சமாதியின் பின்புறம் இதைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்றையும் பதிப்பித்தனர்.
முதன் முதலாக தியாகராஜன் கீர்த்தனைகளைப் பாடி அவருக்கு அஞ்சலி செலுத்தும் முறை 1908ல் மார்ச் மாதம் சென்னை தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளியில் பல இசைக் கலைஞர்களைக் கொண்டு தொடங்கியது.
1908ல் சென்னையில் நடைபெற்ற பின்னரே 1909ல் திருவையாறில் இதுபோன்ற இசை அஞ்சலியை நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு ஐந்து நாட்கள் இசைவிழாவுடன் தியாகராஜ ஆராதனையும் நடைபெற்றது. 1909ல் திருவையாறில் துவங்கிய இந்த அஞ்சலி மரபு, தமிழர்களின் வழக்கப்படி பல கட்சிகளாகப் பிந்து பல ஆண்டுகள் நீதிமன்ற வழக்குகளை சந்தித்து, பல கோஷ்டிகள் தனித்தனியாகக் கட்சி சேர்த்துக்கொண்டு அஞ்சலி செலுத்தி வந்தனர். பெய கட்சி என்றும் சின்னக் கட்சி என்றும் கோஷ்டிகள் அமைத்துக் கொண்டு தனித்தனியாக பூஜைகள் செய்து வந்தார்கள்.
அந்த நேரத்தில்தான் பெங்களூர் நாகரத்தினம்மாவின் வரவு மிகவும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. 1878ம் ஆண்டு நவம்பர் மாதம் மைசூரைச் சேர்ந்த வக்கீல் சுப்பராவுக்கும் அதே ஊல் தேவதாசி குலத்தவரான புட்டுலக்ஷ்மிக்கும் பிறந்தவர் நாகரத்தினம். பிறந்த சில நாட்களிலேயே பெற்றோர் பிந்து விட தாயும் குழந்தையும் வறுமையில் வாடியிருக்கிறார்கள். மைசூர் அரசவையை சேர்ந்த சமஸ்கிருத பண்டிதரான கிபட்ட திம்மய்ய சாஸ்தி என்பவர் புட்டுலக்ஷ்மிக்கு அடைக்கலம் அளித்தார். அவர் நாகரத்தினத்துக்கு சம்ஸ்கிருதம் கற்பித்தார். நாகரத்தினத்தின் பல்கிப் பெருகிய சம்ஸ்கிருதப் புலமை கிபட்டருக்குப் பிடிக்காது அவருக்கு 9 வயது நடக்கும்போதே தாûயுயம் மகளையும் வீட்டை விட்டுத் துரத்தினார். புட்டுலக்ஷ்மி அம்மாளும் வாழ்க்கையை ஒரு பெரும் போராட்டமாகத் தொடர்ந்திருக்கிறார்கள்.
அரும்பாடுபட்டு மைசூன் பெய வித்துவானான பிடாரம் கிருஷ்ணப்பாவிடம் சங்கீதம் கற்றுத்தேறினார்.
கிருஷ்ணப்பா வீணை சேஷண்ணாவிடம் சங்கீதம் பயின்றவர். சேஷண்ணா, மைசூர் சதாசிவராவ் அவர்களின் சீடர். சதாசிவ ராவ், வாலாஜா பேட்டை வெங்கடரமண பாகவதடம் சங்கீதம் கற்றவர். வாலாஜாபேட்டை வெங்கடரமண பாகவதர் தியாகராஜன் நேரடி சிஷ்யர். இப்படியாக நாகரத்தினமும் தியாகராஜன் இசைப்பரம்பரையில் ஒருவர் ஆனார்.
வீணை சேஷண்ணா வீட்டில் நாகரத்தினம்மா நடத்திய ஒரு கச்சேரி பற்றி மைசூர் மகாராஜா சாமராஜேந்திர உடையார் தன்னுடைய மகள் ருதுவானபோது இசைநிகழ்ச்சி நடத்த அவரை அழைத்தார். அதன் பின்னர் மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்துவானாக நியமிக்கப்பட்டார் நாகரத்தினம்மா.
1903ல் இசைத்தட்டு உலகில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டவர் நாகரத்தினம்மா. நாகரத்தினம்மாவுக்குப் பெருகிய புகழ் அவரை சென்னைக்குக் குடியமர்த்தியது. நாகரத்தினம்மா வீட்டுக் கிரகப் பிரவேசத்துக்குப் பாடிய பிடாரம் கிருஷ்ணய்யாவுக்கு வைரமோதிரம் பரிசளித்தார் நாகரத்தினம்மா. தனது பணத்தை நல்ல வகையில் முதலீடு செய்ததால் அவருக்கு வருமானம் பெருகியது. இந்தியாவிலேயே வருமான வரி செலுத்திய முதல் பெண்மணி என்னும் பெருமையை அடைந்தவர் நாகரத்தினம்மா. சதிர்க்கச்சேரிகளை நிறுத்திவிட்டு ஹகதா காலட்சேபமும் கர்நாடக சங்கீதமும் நிகழ்த்தினார்.
சமஸ்கிருதத்தில் மிக்க புலமை வாய்ந்தவராக இருந்தார் நாகரத்தினம்மா.
ராஜமுந்தியில் நடந்த சமஸ்கிருத மாநாட்டில் அவர் சிறப்பிக்கப் பட்டார். அங்கு நடந்த விவாதம் ஒன்றில் ஆண்டாளின் திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்தது முத்துப்பழனி என்னும் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத பண்டிதர் என்று அறிஞர்கள் குறிப்பிட்டனர். அவர்கள் அறியாமையைக் கண்டு பெரும் வியப்படைந்த நாகரத்தினம்மா அந்த மொழிபெயர்ப்பை செய்தவர் 18ம் நூற்றாண்டில் தஞ்சாவூன் மராட்டிய மன்னர் பிரதாபசிம்மனின் ஆசைக்கிழத்தியான முத்துப்பழனி என்னும் தேவதாசிதான் என்பதை நிரூபித்தார். அவர் ஒரு தமிழ்ப் பெண்மணி. சென்னை வந்ததும் முத்துப்பழனியின் இன்னொரு நூலான காமரசம் நிரம்பிய ராதிகா சாந்த்வனமு என்கிற நூலை வெளியிட்டு தன்னைப்போன்ற தேவதாசிகள் பலரும் பெரிய சம்ஸ்கிருத விற்பன்னர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை நிரூபித்தார் நாகரத்தினம்மா.
அப்போது ராதிக சாந்த்வனமு பிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. 1947ல்தான் இந்தத் தடை நீங்கியது.
நாகரத்தினம்மாள் தத்து எடுத்து வளர்த்த ஒரு பெண்ணே அவருக்கு விஷம் கொடுக்க முயற்சித்ததாக சந்தேகப்பட்டார். அந்தப் பாலை அவர் அருந்தவில்லை. அந்தப் பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
அன்று அவருக்கு ஒரு தியாகராஜன் உருவப்படம் கிடைத்தது. அந்தப் படத்தை வழிபட ஆரம்பித்து இருக்கிறார் நாகரத்தினம்மா. தியாகராஜர் ஒருமுறை அவருடைய கனவிலும் வந்தார். தன்னை அந்த விஷப்பாலில் இருந்து காப்பாற்றியவர் தியாகராஜர்தான் என்று உறுதியாக நம்பினார் நாகரத்தினம்மா. அந்த வேளையில் அவருடைய குருநாதர் பிடாரம் கிருஷ்ணப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் திருவையாற்றில் தியாகராஜர் சமாதி மிகவும் க்ஷீணமான நிலையில் இருப்பதைக் குறித்துக் கடிதம் எழுதியிருந்தார். உடனே திருவையாறு விரைந்தார் நாகரத்தினம்மா.
தியாகராஜருடைய சமாதி இருந்த இடம் ராமண்ணாஜி சூர்வே என்கிற மராட்டியர் வசம் இருந்தது. நாகரத்தினம்மா அவடம் பேசி, தன் சொத்துக்களை விற்றும் நிலங்களை அடகு வைத்தும் அந்த இடத்தின் உமையை பொது சொத்தாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தார். தன்னுடைய செலவிலேயே சிலை ஒன்றை செய்து அதை பிருந்தாவனத்தின் முன்பு பிரதிஷ்டை செய்தார். அப்போது கட்சி கட்டிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டிருந்த பிராமணர்கள் யாரும் அதை விரும்பவில்லை. பிருந்தாவனத்தை விக்கிரகம் மறைப்பதாக இன்றுவரை சர்ச்சைகள் தொடர்ந்தன. (இன்றும் தொடர்ந்து வருகிறது என்று கேள்விப்பட்டேன். உண்மையா என்பது தெரியவில்லை.
சமாதியின் மீது கோயில் எழுப்புவதற்கான அடிக்கல் 1921ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாட்டப்பட்டது. அப்போது இருந்த பெய கட்சி ஐந்து நாட்களும் சின்ன கட்சி நான்கு நாட்களுமாக திருவையாறு மக்களுக்கு ஒன்பது நாட்களுக்கு ஆராதனையும் இசைவிருந்தும் கிட்டின.
பெரிய கட்சிக்கும் சின்ன கட்சிக்கும் இருந்த பூசலை ஒழிக்க பலமுறை முயற்சித்தார் நாகரத்தினம்மா. இருசாராரும் அவரை உதாசீனம் செய்தார்கள். ஆனால் சமாதி இருக்கும் இடத்தை அவர் விலைக்கு வாங்கி விட்டதால் அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1927ம் ஆண்டு இரு கட்சிகளின் ஆராதனையும் வேண்டாம் என்று தானே தியாகய்யரின் சமாதிக்குப் பாடப்போனார் நாகரத்தினம்மா.
அங்கு பல ஆண்டுகளாக இரு தடைகள் இருந்தன. ஒன்று தியாகராஜரின் சமாதியின் முன்பு பெண்கள் பாடக்கூடாது என்றும் நாதஸ்வரக் கலைஞர்கள் அங்கு வாசிக்கக் கூடாது என்றும் தடை இருந்தது. தடையை மீறிய நாகரத்தினம்மாள் தானே தியாகராஜ ஆராதனையைத் தனியாகத் துவங்கினார். தியாகராஜரின் சமாதிக்குப் பின்புறம் மேடை அமைத்துப் பாடத் துவங்கினார்.
சென்னையில் தனக்கு இருந்த மாளிகை போன்ற வீட்டை விற்று ஆராதனைகள் நடத்தினார். 1930ல் நிரந்தரமாக திருவையாறில் குடியேறினார். பெய கட்சி, சின்ன கட்சி நடத்திய ஆராதனையை விட நாகரத்தினம்மாளின் ஆராதனை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. நாகரத்தினம்மாளே ஊர் ஊராகச் சென்று நிதி திரட்டி ஆராதனை நடத்தினார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை போன்ற நாடகக் கலைஞர்களும் அதில் கலந்து கொண்டனர். 1938ல் நாகரத்தினம்மாள் தியாகராஜன் சமாதியைச் சுற்றியுள்ள நிலங்களை விலைக்கு வாங்கி தியாகராஜ ஆராதனை நடத்தினார். பெரிய கட்சியும் சின்ன கட்சியும் சேர்ந்து ஆராதனைகள் நடத்த எடுத்து வந்த முயற்சிகள் பலனளிக்கத் துவங்கின.
1940 ஜனவரி மாதத்தில் தியாகராஜ பிரம்மோற்சவ சபா துவங்கப்பட்டது. அந்த ஆண்டு எல்லாக் கட்சிகளும் இணைந்த ஆராதனை நடத்தப்பட்டது. ஹகேசவநல்லூர் முத்தையா பாகவதர் முதன்முதலாக கச்சேயில் கலந்து கொண்டார். சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் ஹகதை நடத்திக்கொண்டிருந்தபோது நாகரத்தினம்மாள் அவருக்கு இணையாக பக்கத்தில் மேடையில் அமர்ந்தார். கூடியிருந்த இசை ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்கள். அன்று தியாகராஜர் சமாதியில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. இன்று பெண் கலைஞர்கள் தியாகய்யன் சமாதியிலும் வேறு இடங்களிலும் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளைப் பாடி அஞ்சூலி செலுத்துவதற்கான முதல் பாதையைப் போட்டவர் பெங்களூர் நாகரத்தினம்மாள். நாதஸ்வர வித்வான்களை அனுமதிக்காதது குறித்து திருவாவடுதுறை என்.ராஜரத்தினம் பிள்ளை தன் கடுமையான எதிர்ப்பைக் காட்டியதால் அந்தத் தடையும் நீக்கப்பட்டது.
1941ல்தான் தியாகராஜரின் சமாதிக்கு முன்பு பஞ்சரத்னக் கீர்த்தனைகளை அனைவருமாகப் பாடும் முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு பல்லடம் சஞ்சீவராவ் பைரவி ராகத்தில் அமைந்த சேதுலரா வை மட்டும் வாசிப்பார். இந்த மரபு இன்றும் தொடர்கிறது. இன்றும் கூடப் பஞ்சத்ன கீர்த்தனைகளைப் பாடத் துவங்குவதற்கு முன்பு புல்லாங்குழல் கலைஞர்கள் அந்தக் கிருதியை இசைப்பார்கள்.
திருவையாற்றைத் தனது இருப்பிடமாக மாற்றிக்கொண்ட நாகரத்தினம்மாள் தனது நாட்களை தியாகராஜரை தியானிப்பதிலேயே கழித்தார். உள்ளூர் மக்கள் அவரை ஒரு ரிஷியைப் போலப் பார்த்திருக்கிறார்கள்.
1946ல் சித்தூர் வி.நாகையா அவர்கள் தியாகராஜன் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து அந்தப் படத்தின் வருமானத்தை நாகரத்தினம்மாளின் வேண்டுகோளுக்கு இணங்க தியாகராஜ நிலையம் என்ற சத்திரத்தைக் கட்டினார். ஆராதனைக்கு வரும் பக்தர்கள் இலவசமாகத் தங்கும் பொருட்டு அந்த சத்திரம் அமைக்கப்பட்டது.
1948ம் ஆண்டு ஜனவரி மாதம் நாகரத்தினம்மாள் தன் உயிலை எழுதினார். அவருடைய அனைத்து சொத்துக்களையும் நகைகள் உட்பட தியாகராஜ சமாதியின் மேம்பாட்டுக்காக எழுதி வைத்தார். எக்காலத்திலும் பெண் கலைஞர்கள், தேவதாசிகள் உட்பட சமாதியின் முன்பு நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தடை செய்யக்கூடாது என்ற நிபந்தனையை விதித்தார். 1949ல் விஜயநகரம் மகாராணி அவருக்கு தியாகராஜ சேவா சந்தா என்கிற பட்டத்தை வழங்கினார்.
1952ம் ஆண்டு மே மாதம் 19ம்தேதி பெங்களூர் நாகரத்தினம்மா தன் குருநாதர் தியாகராஜன் திருவடியை அடைந்தார்.
அவரது உடல் ஊர்வலமாக தியாகராஜர் சமாதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு அதன் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஒரு மண்டபம் கட்டப்பட்டு தியாகராஜன் சமாதியைப் பார்த்து இருக்கும்படி அவருடைய சிலை ஒன்று வைக்கப்பட்டது. இந்த மண்டபத்தின் எதில்தான் இன்று வித்வான்கள் ஆராதனையை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகத்தை சேர்ந்த தேவதாசி ராஜம்மாள் என்பவர் தியாகராஜன் சமாதிக்கு மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தார்.
தியாகராஜரின் ஒப்பற்ற கிருதிகளை ஓலைச் சுவடிகளில் இருந்து ஏட்டுச் சுவடிகளில் படியெடுத்து உலகத்துக்குத் தந்தவர்கள் வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் மற்றும் அவருடைய குமாரர். தியாகய்யன் ஓலைச்சுவடிகள் மாத்திரமல்லாது அவர் பயன்படுத்திய பூஜைப் பொருட்களை எல்லாம் சேகத்து வைத்தவர்கள்.
தியாகராஜரின் சமாதியைப் புதுப்பித்து, எவ்வித சுயநோக்கும் இன்றி ஆராதனைகள் நடத்தும் முறைகளை ஒழுங்கு படுத்தி அங்கே பெண்களும் ஒதுக்கப்பட்டவர்களும் பாடுவதற்கான உரிமையை மீட்டுக்கொடுத்தவர் பெங்களூர் நாகரத்தினம்மா.
இவர்கள் அனைவருக்கும் நம் தலைவணக்கங்கள்.
இன்று தில்லியில் தமிழர்களாகிய நாம் கூடி நடத்தும் இந்த பஞ்சரத்னக் கூட்டிசைப்பு விழா இவர்களின் நினைவினைப் போற்றி சமர்ப்பணம் செய்யும் ஒரு அற்புத நிகழ்வாக அமையட்டும்.
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
பென்னேஸ்வரன்
--
http://www.vadakkuvaasal.com/