நச்சினார்க்கினியர்‌ குறிப்பிடும்‌ நிழலற்ற நாள்‌ — முனைவர் தேமொழி

31 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 1, 2024, 1:23:57 AM (2 days ago) Jul 1
to மின்தமிழ்
நச்சினார்க்கினியர் குறிப்பிடும் நிழலற்ற நாள்

 — முனைவர் தேமொழி


தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இருந்து நாடாளும், அரண்மனையும்  பெருங்கோட்டையும் எவ்வாறு கட்டப்பட்டது என்று விளக்கும் பாடல் வரிகள் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை நூலில் இடம்பெறுகிறது.  இப்பாடலில் 'நிழலற்ற நாளில்' அக்கோட்டையின் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றதாகக் குறிப்பு உள்ளது.

     "... ... ... ...மாதிரம்
     விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
     இருகோல் குறிநிலை வழுக்காது, குடக்கேர்பு
     ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து"
              (நெடுநல்வாடை, 72-75)
"இரு கோல் குறிநிலை" என்ற சொற்றொடர் நிழலற்றநாளை அறியும் முறையைக் குறிக்கிறது

இப்பாடலுக்கு விளக்கம் கூறும் நச்சினார்க்கினியர்;
     "திசைகளிலே விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற
     இடத்தை உடைய ஞாயிறு மேற்றிசைக்கட் சேறற்கெழுந்து
     இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் சாயா
     நிழலால் தாரை போக ஓடுகின்ற நிலையைக் குறித்துக்
     கொள்ளுந் தன்மை தப்பாதபடி தான் ஒரு பக்கத்தைச்
     சாரப் போகாத சித்திரைத் திங்களின் நடுவிற்
     பத்தினின்ற யாதோர் நாளிற் பதினைந்தா நாழிகையிலே
     அங்குரார்ப்பணம் பண்ணி"
என்று விளக்கம் தருகிறார்.

சித்திரை மாதத்து இடைப்பத்து நாட்களில் (அதாவது சித்திரை 11 முதல் - சித்திரை 20 நாட்களுக்குள்) அப்பகுதியில் எது நிழலற்ற நாளோ அந்த ஒருநாளின் நண்பகலில்  பதினைந்தாவது  நாழிகையில் அடிக்கல் நாட்டுவிழா நடை பெற்றதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது.

"இரு கோல் குறிநிலை" என்ற சொற்றொடருக்கு  விளக்கம் தரும் முனைவர் பாண்டியராஜா, இரு கோல் கொண்ட ஒரு வட்டவடிவமான கருவி காலம் காட்ட உதவியுள்ளது. இந்த  வட்டமான கருவியின் விட்டத்தில், அதன் விளிம்புகளில் எதிர் எதிராக இரு கோல்கள் நடப்பட்டு, அக்கோல்கள் வடக்கு தெற்காக இருக்குமாறு தரையில் வைக்கப்படும்.  சூரியன் நகர்விற்கு ஏற்ப கோல்களின் நிழல் நகரும், உச்சி வெயில் நேரம் அவற்றின்  நிழல்கள் ஒரு ஒழுங்கில் அமையும் நேரம் நண்பகல் என்று குறிப்பிடுகிறார். மேலும், இந்த வானியல் கருவி சிந்துவெளியில் கிடைத்த ஒரு நேரம் காட்டும் தொல்லியல் சான்று போன்ற அமைப்பில் இருந்திருக்கக் கூடும் என்று விளக்கமளிக்கிறார்.  
zsd 1.jpg
 ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள், 15 நாழிகை என்பது 15 X 24 = 360 நிமிடங்கள் அல்லது இன்றைய கணக்கில் 6 மணி நேரங்கள்.  எனவே பொழுது புலர்ந்ததில் இருந்து 15 ஆம் நாழிகை என்றால்; காலை 6 மணியில் இருந்து, 6 மணி  நேரம் கடந்த பிறகு, அதாவது நண்பகல் 12 மணிக்கு சூரியனின் நிழல் தரையில் விழாத நிழலற்ற நாளின் நண்பகலில் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது.  

இந்த விளக்க உரையில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான கருத்துகள்:  
நிழலற்ற நாள் நிகழ்வது சூரியன் நகர்விற்கு ஏற்ப இடத்திற்கேற்றபடி மாறும். சூரியன்  வடதிசைச் செலவு மற்றும்  தென்திசைச் செலவில், என்று சூரியன் நம் தலை உச்சிக்கு நேர்  மேலே வருகிறதோ, அந்த இடத்தில் அன்று நிழலற்றநாள்  ஏற்படும். கடகரேகை, மகர ரேகைக்கு இடைப்பட்ட வெப்ப மண்டலப்பகுதியில் ஆண்டுக்கு இருமுறை நிழலற்றநாள் ஏற்படும்.  
எனவே, நிழலற்ற நாள் ஆண்டின் இரு நாட்களில் தமிழகத்தின் பகுதிகளில் நிகழும். ஒன்று சூரியன் வடதிசைச் செலவாக கடக ரேகை நோக்கி நகரும் பொழுது சித்திரை மாதத்தில் ஒரு முறை (ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 25 தேதி வரை; குமரி- திருவேங்கடம் எல்லைக்குள்).  

மற்றொன்று, சூரியன் தென் திசைச் செலவாக மகர ரேகையை நோக்கி தமிழகத்தைக் கடக்கும் பொழுது ஆவணி மாதத்தில் ஒரு முறை (ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை;  குமரி- திருவேங்கடம் எல்லைக்குள்).  

 zsd 2.jpg

நெடுநல்வாடையில் குறிப்பிடப்படும் அந்த நிழலற்ற நாள் எந்த மாதத்தின் நாள்? பாடல் குறிப்பிடுவது சித்திரையா அல்லது ஆவணியா எந்த மாதத்தின் நிழலற்ற நாள் என்று நக்கீரரால் குறிப்பிடப் படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  

அது சித்திரை மாதத்து நிழலற்ற நாள் என்று இங்குக் குறிப்பிடுபவர் உரைகாரர் நச்சினார்க்கினியர். அவரது சித்திரை மாதம் என்ற அந்தத் தேர்வுக்குக் காரணம் வழக்கமாக கட்டுமானங்கள் தொடங்கப்படும் காலம் என்ற மரபாகக் கூட இருக்கலாம்.  மழையற்ற நாளில் கட்டுமானங்கள் தொடங்கப்பட  வாய்ப்புண்டு.  ஆவணியில் மழைக்காலம் தொடங்கிவிடும் என்பதால் தவிர்க்கப் பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.  எப்படி இருப்பினும் சித்திரைத் திங்களின் நிழலற்ற நாள்  என்பது நச்சினார்க்கினியர் கருத்து, நக்கீரர் கூற்று அல்ல.

அடுத்த கட்டமாக, நச்சினார்க்கினியர் "சித்திரைத் திங்களின் நடுவிற் பத்தினின்ற யாதோர் நாளில்"  என்று குறிப்பிடுகிறார். அதன்படி கணக்கிட்டோம் என்றால், சித்திரையின் முதல் பத்து நாட்களையும், இறுதி பத்து நாட்களையும் தவிர்த்துவிட்டு, இடையில் உள்ள பத்து நாட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது சித்திரை 11இல் இருந்து சித்திரை 20 நாட்களுக்குள் ஏதோ ஒரு நாள் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆண்ட மதுரையில் நிழலற்ற நாள் அமைய வேண்டும்.

நச்சினார்க்கினியர் விளக்கத்தின் அடிப்படையில் சித்திரை 15 இல் இருந்து  ± 5 நாட்களில்  தமிழகப் பகுதியில் நிழலற்ற நாள். இன்றைய தமிழக நிலப்பரப்பில், குமரி- திருவேங்கடம் எல்லைக்குள்,  ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 25 தேதி வரை, 16 நாட்களுக்கு ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு இடத்திலும் நிழலற்ற நாள் ஏற்படும்.  இது  நச்சினார்க்கினியர் கூறுவது போல 10 நாட்கள் நிழலற்ற நாள் என்பதில் இருந்து மாறுபடுகிறது, அரை மாதத்திற்கு, அல்லது சற்றொப்ப 15 நாட்கள் போல தமிழகத்தில் நிழலற்ற நாள்கள் ஏற்படுகின்றன.
zsd 3.jpg
 

மேலும், இன்றைய நாளில் ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 25 தேதி வரை நிழலற்ற நாட்கள் என்பது வானியல் படி மிகத் துல்லியமான கணிப்பு.  எனவே, நச்சினார்க்கினியர் கூறுவது போல சித்திரை 11 ஆம் நாள் நிழலற்ற நாள் தொடங்குகிறது என்றால், இன்றைய கிரிகாரியன் நாட்காட்டிப்படி  மார்ச் மாத இறுதியில் சித்திரை தொடங்கியிருக்க வேண்டும்.   அவ்வாறு தொடங்கியிருந்தால் தான் ஏப்ரல் 9 அன்று அது சித்திரை 11 என்று இருக்க முடியும். அதுவும் வேறுபடுகிறது.  அவர் காலத்துடன் அல்லது அவர் சொல்லும் கணக்குடன் ஒப்பிட்டால் இன்றைய நாளில் சித்திரை தொடக்கம் சற்றொப்ப 14 நாட்கள் தள்ளிப் போய்விட்டது எனலாம்.

தமிழகத்தின் தெற்கு எல்லை குமரி முனையில் ஏப்ரல் 9 ஆம் தேதி நிழலற்ற நாள் தொடங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு வாரங்களுக்கு ஒவ்வொரு இடமாக நிழலற்ற நாள் ஏற்படுகிறது.  ஆனால், ஏப்ரல் 9 என்ற தொடக்கம் பங்குனி மாதத்தின் 27 ஆம் நாள்.  அது நச்சினார்க்கினியர் கூறுவது போல சித்திரைத் திங்கள் 11 ஆம் நாள் அல்ல.  

பருவகால முந்துநிலை (precession of the equinoxes) என்பதைக் கணக்கில் கொள்ளாத காரணத்தால் தமிழ் நாட்காட்டியில் கணக்கிடப்படும் நாட்கள் பருவகாலத்துடன் இணைந்து செல்லாமல் விலகிச் செல்கின்றன.  அதற்கு நச்சினார்க்கினியர் உரையும் ஒரு சான்றாக அமைகிறது.  அவர் உரை எழுதிய காலத்தில் இருந்து சித்திரை மாதத்தின் தொடக்கம் தோராயமாக 14 நாட்கள் விலகிவிட்டது.



சான்றாதாரம் :
1. நெடுநல்வாடை, நக்கீரர், வரிகள் 72-75
2. பத்துப்பாட்டு நெடுநல்வாடை, நச்சினார்க்கினியர் உரை, ப. 385.
3. இரு கோல் குறிநிலை,  முனைவர் ப.பாண்டியராஜா, ஜூன் 8, 2013, தினமணி
4. மனையுறை புறாக்கள் (நெடுநல்வாடை - விளக்கவுரை), புலவர் கா. கோவிந்தன், எழிலகம், 1991
5. பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும், நா. பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், 1992

உதவிய தளம்:
ZERO SHADOW DAY, ASI - POEC, Astronomical Society of India
https://astron-soc.in/outreach/activities/zero-shadow-day/


நன்றி :
தமிழணங்கு, ஜூலை 2024
பக்கம்: 88-92
https://archive.org/details/thamizhanangu-july-2024/page/87/mode/2up
____________________________________________________________________

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 1, 2024, 7:53:44 AM (2 days ago) Jul 1
to mint...@googlegroups.com

நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை. பாராட்டுகள்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/9711e46c-bb56-454b-a989-513e9e4030cdn%40googlegroups.com.

தேமொழி

unread,
Jul 1, 2024, 3:35:11 PM (2 days ago) Jul 1
to மின்தமிழ்
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி  ஐயா 🙏
Reply all
Reply to author
Forward
0 new messages