"அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்" — முனைவர் தேமொழி

9 views
Skip to first unread message

தேமொழி

unread,
2:22 PM (6 hours ago) 2:22 PM
to மின்தமிழ்
"அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"

— முனைவர் ஜோதி எஸ். தேமொழி



முன்னுரை:
தமிழ் அறவியல் புலம் பரந்துபட்டது. மக்களுக்கு அறநெறி உரைக்க இந்திய மண்ணில் தோன்றிய சமயங்களையும், அயலகத்தில் தோன்றிய சமயங்களையும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதால் பல சமய நெறிகளுக்கு ஆற்றுப்படுத்தும் இலக்கிய நூல்கள் தமிழில் உண்டு என்ற சிறப்பிற்கு உரியது நம் தமிழ்மொழி.  அத்துடன் சமயக் கோட்பாடுகளை விமர்சிக்கும் சித்தர் பாடல்களுக்கும் தமிழில் இடமுண்டு. இத்தகைய தமிழ் அறநெறிச் சிந்தனையின் வளமான மரபில், மணிமேகலை காப்பியமும் திருக்குறளும் இரண்டு பெரும் தூண்களாகத் திகழ்கின்றன. இவ்விரண்டு படைப்புகளும் அறம், ஒழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள் குறித்த ஆழமான பார்வைகளை முன்வைத்தாலும், அவற்றின் தத்துவப்பின்னணிகள் வேறுபட்டவை.

பௌத்தம் கூறும் அறம்:
அறத்தின் மையம் மனிதம், இப்பூமியில் மனிதருக்கும் மனிதச் சமூகத்துக்கும் இடையே உள்ள உறவு அன்பு என்று உரைத்த பௌத்தம்; எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஏனைய பிற உயிர்களுக்குத் தீங்கு இழைக்காமல், அவ்வுயிர்களின் துயர் களைவதே அறமாகும் என்று வரையறுத்தது. பௌத்தம் காட்டும் அறம் என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகிய பண்புகளின் செயல் வடிவம்.

வள்ளுவம் காட்டும் அறம்:
மக்களுக்கு அறவழி காட்ட வந்த வள்ளுவர், தன் அறவுரைகளைச் சமய எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தவில்லை. உலக உயிர்கள் எல்லாம் அறம் என்ற குடையின் கீழ் அமைபவை என்ற கொள்கையுடன் சமயங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகில் எவருக்கும் பொருந்தும் வண்ணம் அறவழி காட்டினார். சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலை காப்பியம் முன்னிறுத்தும் பௌத்த அறநெறிக் கோட்பாடுகளையும், திருவள்ளுவர் போதிக்கும் உலகப் பொதுவான அறக் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமிழ் அறநெறிச் சிந்தனையின் இருபெரும் கிளைகளின் ஒற்றுமை, வேற்றுமை மற்றும் அவை ஒன்றுக்கொன்று துணைநிற்கும் பாங்கினை வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் மையமாகும்.

மணிமேகலை காப்பியம்:
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, பௌத்த அறிஞரான சீத்தலைச்சாத்தனாரால் இயற்றப்பட்டது. மணிமேகலை காப்பியம், சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக அமைந்திருந்தாலும், அதன் தனித்துவம் பௌத்த மெய்யியலை மையமாகக் கொண்டிருப்பதில் அடங்கியுள்ளது. உலக இன்பங்களைத் துறந்து, கருணை வழியில் பயணிக்கும் மணிமேகலை என்ற கதைநாயகியின் வழியே, பௌத்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான அறம், இரக்கம், கொடை, துறவு, அருள், நிலையாமை ஆகியவற்றை இக்காப்பியம் அழுத்தமாகப் பேசுகிறது. குறிப்பாக, பசித்தவருக்கு உணவளிக்கும் அமுதசுரபி என்னும் பாத்திரம், பௌத்த அறத்தின் செயல் வடிவமாகவும் குறியீடாகவும் விளங்குகிறது. எனவே மணிமேகலை என்றால் அறம், அறிவு, துறவு ஒருங்கிணைந்த ஓர் உருவம்.

திருக்குறள்:
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் அறநெறி மரபில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்று, 'உலகப் பொதுமறை' என்று போற்றப்படுகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட சமயம், இனம் அல்லது காலச் சூழலுக்குள் தன்னை வரையறுத்துக் கொள்ளாமல், மானுடப் பொதுமைக்கான அறக் கோட்பாடுகளைத் திருக்குறள் முன்வைக்கிறது.

[அ] அற விழுமியங்களில் ஒற்றுமையும் வேற்றுமையும்
திருக்குறளின் உலகப் பொது நெறியும், மணிமேகலையின் பௌத்த மெய்யியலும் பல முக்கிய அற விழுமியங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. அன்பு, இரக்கம், நிலையாமை மற்றும் வினைப்பயன் போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் காணப்படும் ஒற்றுமைகள், தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஆழமான பொது நீரோட்டத்தை வெளிப்படுத்துகின்றன.  இந்த ஒப்பீட்டு ஆய்வில், திருக்குறளின் அறக்கருத்துக்கள், மணிமேகலையின் பௌத்த அறநெறிகளுடன் ஒத்திருக்கும் இடங்களிலும் நுட்பமாக வேறுபடும் இடங்களிலும் ஓர்
ஒப்பீட்டு அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பௌத்த அறக் கருத்துக்களுக்கு இணையான அல்லது மாற்றான வள்ளுவரின் சிந்தனைகள், தமிழ் அறநெறி மரபின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

அறத்தின் ஆற்றல்: இரு நூல்களிலும் 'அறம்' என்ற கருத்தாக்கம்
மணிமேகலை மற்றும் திருக்குறள் ஆகிய இரு நூல்களுக்கும் 'அறம்' என்ற கருத்தாக்கமே மைய அச்சாக விளங்குகிறது. அறம் என்பது வெறும் நீதி அல்லது சட்ட விதிகளை மட்டும் குறிக்காமல், அது அடிப்படை வாழ்வியல் கொள்கையாகப் பார்க்கப்படுகிறது. இவ்விரு படைப்புகளும் அறத்தை வரையறுக்கும் விதத்தினை ஆராய்வது, அவற்றின் தத்துவ அடித்தளத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பௌத்த மரபில் அறம் என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த வடிவமாகும். அறம் எங்கிருக்கிறதோ அங்கு அன்பு, இரக்கம் ஆகியன தாமாகவே குடிகொண்டுவிடும் என்பது பௌத்த அறத்தின் உள்ளடக்கம். அறம் என்பது விதிகளின் தொகுப்பு அல்ல; அது அனைத்து உயிர்கள் மீதும் காட்டப்படும் பேரன்பின் வழியே பற்றற்ற நிலையை அடைய உதவும் மெய்யியல் பாதையாகும். மணிமேகலையின் செயல்கள் துறவற வாழ்க்கை ஆகிய அனைத்தும் இந்தப் பேரறத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. மணிமேகலை அன்பை, அறத்தின் உள்ளார்ந்த வெளிப்பாடாகக் காண்கிறது. துறவறம், தவம் ஆகிய வழிகளைத் தேர்வு செய்து அறம் என்பதைச் செயல்படுத்துகிறது.
     "மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை
     மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
     உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே"
          [மணிமேகலை - பாத்திரம் பெற்ற காதை: 94-96]

உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை, இந்த நிலவுலகில் வாழ்வோர்க்கெல்லாம் உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர் என்கிறது மணிமேகலையின் பௌத்தம். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பதைச் சங்ககாலப் புலவரான குடபுலவியனார் பாடிய புறநானூற்றுப் பாடலும் (பாடல் எண் 18) கூறும் முறைமையால் இக்கருத்தாக்கம் தமிழ் மண்ணின் பண்பாகவும் இருந்ததை அறிய முடிகிறது.

மறுபுறம், திருக்குறள், அறத்தை உலகியல் வாழ்வோடு இணைத்து, ஒரு நடைமுறை ஒழுக்கக் கோவையாக முன்வைக்கிறது.
     "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
     பிறன்பழிப்ப தில்லாயின் நன்று" (குறள்: 49)
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும் என்று இல்லறமே அறம் என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர். தொடர்ந்து;

     "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
     தொகுத்தவற்றுள் எல்லாந் தலை (குறள்: 322)
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும் என்று கூறும் வள்ளுவர் மணிமேகலை காட்டிய பல்லுயிர் ஓம்புவது என்கிற தலையாய அறத்தை இல்லறம் வழிச் செயல்படுத்த அறிவுறுத்துகிறார் என்பதைக் காணமுடிகிறது. திருக்குறள் துறவறம், தவம் ஆகியவற்றை விவரித்தாலும், அறத்தை இல்லற வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மைக் கடமையாக வரையறுக்கிறது.

அத்துடன் தீய குணங்களிலிருந்து விலகி இருப்பதே அறத்தின் அடிப்படை என்கிறார் அவர்:
     "அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
     இழுக்கா இயன்றது அறம். (குறள்: 35)
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு தீய குணங்களையும் விலக்கி வாழ்வதே அறம் என்பது இதன் பொருள். எனவே, திருக்குறள் தீயவற்றை நீக்குவதே அறத்தின் இயல்பு என ஒரு வாழ்வியல் நெறியை வரையறுப்பதுடன், இல்லறம் போற்றி அனைவருக்கும் உதவ அறிவுரை கூறுகிறது.

[ஆ] பொதுவான அற விழுமியங்கள்: அன்பும் இரக்கமும் அருளும் நன்னெறிகளும்
அன்பு, இரக்கம், நிலையாமை மற்றும் வினைப்பயன் போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் ஒத்துக் காணப்படும் திருக்குறளும் மணிமேகலையும் தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஆழமான பொது நீரோட்டத்தை வெளிப்படுத்துகின்றன.
     "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
     என்புதோல் போர்த்த உடம்பு. (குறள்: 80)
அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும் என்பது இதன் பொருள். அத்துடன்,

     "அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு" (குறள்: 72)
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிச் செயல்படுபவர்கள் என்று அத்தகையவர்கள் பண்பையும் குறள் சுட்டுகிறது. குறளின் அதிகாரங்கள் பலவும், பௌத்தப் பஞ்சசீலக் கொள்கைகளான 1. கொல்லாமை, 2. கள்ளாமை, 3. காமத்தில் தவறாமை, 4.பொய்யாமை, 5. கள் உண்ணாமை ஆகிய ஐந்து நல்லொழுக்கக் கொள்கைகளையும்; அத்துடன் பௌத்தம் போதிக்கும் ஈகை, நிலையாமை, அவா அறுத்தல், அன்புடைமை, அருளுடைமை, ஒழுக்கமுடைமை, ஊழ் போன்ற நெறிகளையும் அதிகார அளவில் விளக்கும் குறட்பாக்களைக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. அத்துடன், திருக்குறள் முன்வைக்கும் 'ஒழுக்கம்' என்பது எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் சாராத, மனிதர் அனைவருக்கும் பொதுவான ஒரு வாழ்வியல் நெறியாகும்.

     "ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
     உயிரினும் ஓம்பப் படும்" (குறள்: 131)
ஒழுக்கம் உயிரை விட மேலானது என்பது திருக்குறளின் துணிபு. திருக்குறளில் வலியுறுத்தப்படும் 'ஒழுக்கம்' என்பது மதம், இனம், மொழி கடந்து அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய ஓர் உலகப் பொதுவான அறநெறியாகும்.

[இ] உயிர்கள் அனைத்தையும் சமமாகக் கருதுதலும் ஈகையும்
மணிமேகலையின் ஆபுத்திரன் கதை மக்களிடம் உயர்வு தாழ்வு பேசுவதை மறுப்பதற்கும், அனைத்து உயிர்களையும் கருணையுடன் போற்றவதை வலியுறுத்தவும் படைக்கப்பட்டுள்ள கதாபாத்திரம். பிறந்த பின் அனாதையாக விடப்படும் ஆபுத்திரன், பார்ப்பனர் வேள்வியில் உயிர்ப்பலியைத் தடுப்பவனாகவும், அமுதசுரபி உதவியுடன் வறியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவளிக்கும் இரக்கமுள்ளவனாகவும் காட்டப்படுகிறான்.

     "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
     செய்தொழில் வேற்றுமை யான்" (குறள்: 972)
எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும் என்று கூறும் குறளும்;

     "அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
     உயிர்செகுத் துண்ணாமை நன்று" (குறள்: 259)
அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது என்று கூறும் குறளும்;

     "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
     குறியெதிர்ப்பை நீர துடைத்து" (குறள்: 221)
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது என்று கூறும் குறளும் அனைவரும் சமம், பிறப்பில் பேதமில்லை என்று கூறுகிறது.

மணிமேகலையின் அறவியல் கட்டமைப்பு, பௌத்தத்தின் தத்துவார்த்த இலக்கான 'நிப்பானம்' (நிர்வாணம்/முக்தி) என்ற வீடுபேற்றை அடைவதோடு பிரிக்கமுடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. மணிமேகலை கூறும் அறங்கள் அனைத்தும் பிறவித் துன்பச் சங்கிலியை அறுக்கும் கருவிகளாகும். இதற்கு மாறாக, திருக்குறள் ஓர் உலகப் பொதுவான, சமயச் சார்பற்ற அறவியல் அமைப்பை முன்வைக்கிறது. அதன் நோக்கம், இவ்வுலகில் ஒரு சீரான, இணக்கமான, அறம் சார்ந்த வாழ்வை வாழ்ந்து சிறப்படைவதே ஆகும்.

     "நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
     இல்லெனினும் ஈதலே நன்று" (குறள்: 222)
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறருக்குக் கொடுப்பதே சிறந்தது. நன்னெறி என்பதற்காக மட்டுமே அறம் செய்தல் சிறப்பாகும். மாறாக; முக்தி அடைதல், மேலுலகம் அடைதல் போன்ற நோக்கில் இல்லாமல், அதை எதிர்பார்க்காமல், பலன் எதிர் பார்க்காமல், அறவிலை வணிகம் செய்யாமல் நன்னெறி என்பதற்காகவே தேவையானவருக்கு உதவ வேண்டும் என்கிறது. இவ்வகையில், எந்த ஓர் உயிருக்கும் தீங்கு செய்யாமை, பல்லுயிர் ஓம்புதல் என்ற கொள்கையில் இவ்விரு நூல்களும் மிக வலுவாக ஒன்றிணைகின்றன. இது இவ்விரு அறவியல் மரபுகளுக்கும் இடையேயான ஒரு முக்கிய ஒற்றுமைப் புள்ளியாகும்.

மணிமேகலை, ஈகையைத் துறவறத்தின் ஒரு கடமையாகச் சித்திரிக்கிறது. திருக்குறளோ, அதை ஒரு சமூக மற்றும் தனிமனித அறமாக, ஒரு செம்மையான இல்லற வாழ்வின் இன்றியமையாத அங்கமாகக் கருதுகிறது. திருக்குறள் ஈகையை இல்லறத்தாரின் தலையாய கடமைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. துறவறம் போற்றவும் இல்லற வாழ்வினர் மேற்கொள்ளும் ஈகை உதவுகிறது என்று காட்டுகிறது.

முடிவுரை:
திருக்குறள் மணிமேகலை ஆகிய இவ்விரு நூல்களிலும் அறம் அடித்தளமாக விளங்குவதையும், அவ்வறச்சிந்தனைகளை இருவேறு கோணங்களில், ஆனால் ஒரே குறிக்கோள் நோக்கி வெளிப்படுத்துவதையும், இரு நூல்களும் அறம், அன்பு, அருள், கருணை, கொல்லாமை, நிலையாமை, ஊழ்வினை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளில் ஆழமான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளமையையும், அவை மானுட வாழ்வின் மேன்மைக்கு அறமே அடித்தளம் என்பதை ஒருமித்த குரலில் பறைசாற்றுகின்றன என்பதையும் இந்த ஒப்பீட்டு
ஆய்வானது எடுத்துரைக்கிறது.

குறள் சொல்லும் சமயம் கடந்த பொது நன்னெறி கோட்பாடுகளை விளக்க, அவற்றைக் கதைவடிவில் மக்களிடம் கொண்டு செல்ல ஒரு புனைவு எழுதப்படுமானால், ஒரு பௌத்தப் படைப்பாளரின் கருத்துரிமை அடிப்படையில் உருவான காப்பியமாக, மணிமேகலையாக அது திகழ்கிறது எனலாம். "பொய்யில் புலவன் பொருள்உரை தேறாய்" (மணிமேகலை - 22; சிறைசெய் காதை) என்று சீத்தலைச் சாத்தனார் வள்ளுவரை மேற்கோள் காட்டும் வரிகள் மேகலை ஆசிரியருக்கு வள்ளுவம் கொடுத்த தாக்கத்திற்கும் சான்றாக அமைகிறது.

மணிமேகலையின் கதை வடிவ விளக்கமும், திருக்குறளின் கோட்பாட்டு விளக்கமும் ஒரே அறத்தின் இருவேறு வெளிப்பாடுகளாகும். ஆக, மணிமேகலை ஓர் ஆன்மீகத் தலைவியாக மட்டுமின்றி, சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்கிறாள். உலக இன்பங்களைத் துறந்து, ஞானத்தைத் தேடி, மனிதக்குலத்திற்குச் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆழமான ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்கிறாள்.

இருப்பினும், அவற்றில் நுட்பமான சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன. மணிமேகலை, பௌத்த மெய்யியலின்படி, பற்றுகளை அறுக்கும் துறவு நெறியை வீடுபேற்றுக்கான வழியாக முன்வைக்கிறது. மேலும், ஆன்மா குறித்த அதன் அனாத்மா பார்வை, இந்திய மெய்யியலின் பிற மரபுகளிலிருந்து தனித்து நிற்கிறது. மறுபுறம், திருக்குறள் இல்லறத்தை மையமாகக் கொண்ட ஓர் உலகப் பொது நெறியை வகுத்து, அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை வலியுறுத்துகிறது வையத்தில் வாழ்வாங்கு வாழ
அறிவுறுத்துகிறது.

இறுதியாக, இந்த இரு பெரும் நெறிகளும் முரண்பட்டவை அல்ல, மாறாகத் தமிழ் அறநெறிச் சிந்தனையின் ஒருங்கிணைந்த பார்வையை வழங்கும் இருவேறு கிளைகள் என்பது நிறுவுகிறது. 'தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை' என்ற பார்வையில் மணிமேகலையில், அறம் என்பது ஆன்மிக விடுதலையை நோக்கிய ஒரு பயணம்; திருக்குறளிலோ, அறம் என்பதே மனிதராக வாழ்வதன் இலக்கணம். இந்த இரு பெரும் மரபுகளும் இணைந்து தமிழ் அறநெறிச் சிந்தனையை வளப்படுத்தி, உலகிற்கே வழிகாட்டும் ஒருங்கிணைந்த பார்வையை வழங்குகின்றன.

சான்றாதாரங்கள்:
1. ஔளவை சு. துரைசாமிப் பிள்ளை (ஆசிரியர்), ந.மு. வேங்கடசாமிநாட்டார் (ஆசிரியர்).  மணிமேகலை (மூலமும் உரையும்), கௌரா பதிப்பகம், சென்னை, 2019

2. வரதராஜன்.மு, திருக்குறள் உரை விளக்கம், திருவள்ளுவர் நிலையம், திருச்சி, 1954.

"அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"
— முனைவர் ஜோதி எஸ். தேமொழி
செயலாளர், தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
சான் பிரான்சிஸ்கோ, யூ.எஸ்.ஏ
-------

madurai lady doak college international conference 2026.jpg
தமிழ் உயராய்வு நடுவம், டோக் பெருமாட்டி கல்லூரி. . .
டோக் பெருமாட்டி கல்லூரி-மதுரை, தமிழ் உயராய்வு நடுவம்
24.02.2026 அன்று நடத்திய
'தமிழ் இலக்கியங்களில் பன்முகத்தன்மை'— என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில்
"அறவியல் நோக்கில் வள்ளுவமும் மேகலையும்"
என்னும் தலைப்பில் முனைவர் ஜோதி எஸ். தேமொழி வழங்கிய கட்டுரை
கருதரங்க மலர் - ISBN: 978-93-47702-06-8
Reply all
Reply to author
Forward
0 new messages