ராஜாவும் சுந்தரியும் தம்பதியர். ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிகின்றனர்.
ராஜா செய்திதொகுப்பாளர். அதாவது செய்திகளை எழுதித்தருகிறவர்.
சுந்தரி செய்தி வாசிப்பாளர்.
அவர்கள் வீட்டுக்குள் உரையாடிக்கொள்வதை நான் ஒட்டுக்கேட்க நேர்ந்தது.
இதோ, அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
--------------------------------------------------------------
ராஜா: சுந்தரிம்மா, இன்னக்கி காலைல என்ன டிபன்?
சுந்தரி: இட்லி மற்றும் சாம்பார்.
ரா: என்னம்மா, தினம் இட்லி மற்றும் சாம்பார்தானா?
சுந்: இல்லையே. நேற்று மற்றும் முந்தாநாள் மட்டும்தான் இட்லி மற்றும் சாம்பார் செய்தேன். அதுக்கு முன்னால பொங்கல் மற்றும் வெங்காயக்குழம்பு வைக்கலியா?
ரா: அப்ப ஒண்ணு செய். நாளைக்கி மற்றும் நாளைக்கழிச்சுக்கு தோசை மற்றும் சட்னி செய்யேன்.
சுந்: அப்படியே செஞ்சுரலாம். உங்களுக்கு மற்றும் எனக்கு நல்லதாப்போச்சு.
ரா: சுந்தரிம்மா, இன்னக்கி நீ மற்றும் நான் வேலைக்கு வெள்ளென போகணும். அதனால நீ முதல்ல குளிச்சிரு. அப்புறம் எனக்கு துண்டு மற்றும் பனியன் எடுத்துவச்சுரு.
சுந்: இந்தாங்க நான் குளிச்சுட்டேன். நீங்க போய்க் குளிங்க.
ரா: சரி. நான் குளிச்சுட்டு வந்ததும் போட்டுக்க, சட்டை மற்றும் பேண்ட் எடுத்து வச்சுரு.
அன்று இரவு. படுக்கப்போகும் முன்.
சுந்: இந்தாங்க, இந்த செய்தி தொகுப்பு மற்றும் வாசிப்பு வேலையா நான் மற்றும் நீங்கள் விட்டுடலாமா?
ரா: ஏன்’மா? உனக்கு மற்றும் எனக்கு வேற வேலை கிடைக்குமா?
சுந்: அது கிடைக்கும்போது கிடைக்கட்டும். இந்த ‘மற்றும்’ தொல்லை தாங்கல.
ரா: அது சரித்தான். அப்பத்தான் நான் மற்றும் நீ இயற்கையாப் பேசலாம்.
சுந்: நானும் நீயும் இயற்கையாப் பேசலாம்’னு சொல்லுங்க.
ப.பாண்டியராஜா மற்றும் அவர் மனைவி உங்களை வாழ்த்துகிறார்கள்.
(இப்போது எனக்கு ‘அது’ தொற்றிக்கொண்டது)