நன்றி சிறகு: http://siragu.com/?p=19985
கபீர்தாசர் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், இவர் ‘சந்த் கபீர்’ எனவும் அழைக்கப்படுவார். பொதுவாக, கபீர்தாசர் ஓர் இஸ்லாமிய நெசவாளர் குடும்பத்தில் வளர்ந்தவரென்றும், பக்தி இயக்கக் காலத்தில் இராமனந்தர் என்ற குருவினால் ஈர்க்கப்பட்டு இராமரையும் வழிபட்டார், இந்து-முஸ்லீம் ஒற்றுமை இவரது அறிவுரைகளால் மேம்பட்டது என்பதும் வரலாறு. ஆனால் இவரது பிறப்பு மீதும், வாழ்க்கையின் மீதும் எண்ணற்ற தொன்மங்களும் புனையப்பட்டுள்ளன. இந்தியவியல் ஆய்வாளர், வெண்டி டோனிகர் (Indologist, Wendy Doniger), இந்த முயற்சிகள் கபீர்தாசரை ஒரு இந்துவாக உலகின் முன்னிறுத்த உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் அவை என்றும் கூறுவார். எவ்வித ஆதாரமுமற்ற அப்புனைவுகளில், கபீர்தாசர் ஒரு பிராமணத் தாயாரால் கைவிடப்பட்ட குழந்தை என்றும், இஸ்லாமிய நெசவாளி ஒருவர் அவரை வளர்த்ததாகவும், இஸ்லாமியராக வளர்க்கப்பட்ட கபீர்தாசர் பிற்காலத்தில் இராமபக்தராக மாறினார் என்றும், அவரது குடும்பம், மனைவி, மக்கள் பற்றியும் புழங்கிவரும் கதைகள் பற்பல.
கபீர்தாசர் இந்து, இஸ்லாமியம் ஆகிய இருமதங்களின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வெறுத்து அவற்றின் மீது கேள்விகளை எழுப்பியவர். கபீர்தாசர் ராம்-ரஹீம் என்ற அடிப்படையில் ஒருவரையும் வேறுபடுத்திப் பார்த்தவர் அல்லர். இவரது சிந்தனைகளின் வெளிப்பாடுகள் இறைவனைப் பற்றிய கருத்துகள், இறைவழிபாட்டைப் பற்றிய கருத்துகள் என யாவும் இந்து-முஸ்லீம் மதக் கோட்பாடுகளை ஒருங்கிணைத்தே வெளிப்பட்டன. அவை இந்துமுஸ்லிம் நல்லுறவை வளர்க்கும் இயக்கமாகவும் விளங்கியது. இவரது பாடல்களில் சில சீக்கிய மதத்தின் ஆதிகிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன. நெசவாளராக வாழ்ந்து, சமயநல்லுறவிற்கு பெரும்பங்காற்றிய சிறந்த கவிஞரான கபீர்தாசரின் பெயரில் அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ‘சந்த் கபீர்’ என்ற சிறந்த நெசவாளருக்கான விருதை மத்திய அரசு கடந்த ஐம்பது ஆண்டுகளாக (1965இல் இருந்து) வழங்கி வருகிறது.
இக்கட்டுரையில் வழங்கப்படும் கபீர்தாசரின் மதநல்லிணக்கச் சிந்தனைகள் பற்றியக்கருத்துகள், சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற எழில்முதல்வன் அவர்களின் "கபீரின் நூறு பாடல்கள்" மொழிபெயர்ப்பு நூலில் காணப்படும் கவிதைகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றது. எழில்முதல்வன் என அழைக்கப்படும் பேராசிரியர் முனைவர் மா. இராமலிங்கம் அவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், தமிழ்த்துறைத் தலைவரும் ஆவார். இவரது "புதிய உரைநடை" என்னும் திறனாய்வு நூலுக்காக, 1982 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டு தேசிய அளவில் பாராட்டப்பட்டவர். வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் தேர்வு செய்து ஆங்கிலத்தில் மொழிபயர்த்து 1914 ஆம் ஆண்டு வெளியிட்ட, கபீர்தாசரின் நூறு பாடல்கள் என்ற நூலை, ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார் எழில்முதல்வன். இந்நூல் தாகூரின் 150 ஆவது பிறந்தநாள் ஆண்டான 2011 இல் 'தமிழ் அலை' பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. இனி கபீர்தாசரின் சமயச் சிந்தனைகள் பற்றி "கபீரின் நூறு பாடல்கள்" என்ற நூல் தரும் மொழியாக்கப் பாடல்களின் வழி தெரிந்து கொள்வோம்.
கபீர்தாசர் பிறந்து வளர்ந்த சூழலின் பின்னணியின் தாக்கம், அவரது சிந்தனைகளை சமயச்சார்பற்ற நோக்கில் இறைவழிபாட்டை அணுகச் செய்துள்ளது. அவரது பாடல்கள் பல இந்துசமய, இஸ்லாமிய கருத்தாக்கங்களையும் அரவணைத்தே அறிவுரைகளை முன்வைக்கின்றன. தனது சிந்தனைகளை இருசமயத்தாரையும் நோக்கியே எடுத்துக் கூறுகிறார் கபீர்தாசர். அவர் பார்வையில் மதவேறுபாடுகள் மறைந்து போகின்றன. இறைவன் ஒருவனே, உருவமற்ற அவனை உணரச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தேவையில்லை, இறைவனை வெளியில் தேடுவது அறியாமையின் விளைவு. இறைவன் நம்முள்ளேதான் இருக்கிறான், அங்குத் தேடினாலே அடைய முடியும் என்ற கருத்துக்கள் பல பாடல்களிலும் வெளிப்படுகின்றன.
ஓ! பணியாளனே, என்னை நீ எங்கே தேடுகிறாய்?
இதோ, நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.
நான் திருக்கோயிலிலும் இல்லை; மசூதியிலும் இல்லை;
காஃபாவிலும் இல்லை; கைலாயத்திலும் இல்லை.
நான் சடங்குகளிலோ அவை சார்ந்த சம்பிரதாயங்களிலோ இல்லை.
யோகப் பயிற்சியிலோ துறவிலோ இல்லை.
நீ என்னை நாடும் உண்மை ஆர்வலனாக இருப்பின்
உடனடியாகக் காணமுடியும்.
கண்ணிமைப் போதிலோ கைநொடிப் போதிலோ
என்னைச் சந்திக்க முடியும். ..... (பாடல் - 1)
என்ற பாடலில் இறைவனே அறிவுரை கூறுவது போலப் பாடல் புனைந்துள்ளார்.
மதகுருவும், போர் வீரனும், வியாபாரியும்,
மற்றுள்ள முப்பத்தாறு சாதியினரும் -
ஒன்று போலவே இறைவனை நாடுகிறார்கள்.
அந்த ஞானி என்ன சாதியாக இருப்பான்
என்று கேட்பது மூடத்தனம்.
முடி திருத்தும் நாவிதனும்
இறைவனைத் தேடியிருக்கிறான்.
துணி துவைக்கும் வண்ணாத்தியும்,
மரங்கொல் தச்சரும் இறைவனைத் தேடியிருக்கிறார்கள். ..... (பாடல் - 2)
என்ற பாடலில், 'மதகுருவும்', 'போர் வீரனும்', 'வியாபாரியும்', மற்றுள்ள 'முப்பத்தாறு சாதியினரும்' என 'வருணாசிரம தர்மம்' பிரித்துரைக்கும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு பிரிவுகளையும் சுட்டுகிறார். இவர்களில் ஒரு பிரிவினர் மட்டும் இறைவனைத் தேட விரும்புவதில்லை. அனைத்துப் பிரிவு மக்களின் ஆர்வமும் இறைவனை அடைய விரும்புவதே என்றும் குறிப்பிடுகிறார். இதன் மூலம் சாதி சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது இறைவழிபாடு என்ற கபீர்தாசரின் பரந்துபட்ட எண்ணம் வெளிப்படுகிறது.
சமயம் கடந்த இறைபோற்றும் பார்வை:
கபீர்தாசரின் பல பாடல்களில் சமயசார்பற்ற இறைவணக்கமுறைக் கருத்துகளும் விரவியுள்ளன.
If God be within the mosque, then to whom does this world belong?
If Ram be within the image which you find upon your pilgrimage,
then who is there to know what happens without?
Hari is in the East, Allah is in the West.
Look within your heart, for there you will find both Karim and Ram;
All the men and women of the world are His living forms.
Kabir is the child of Allah and of Ram: He is my Guru, He is my Pir.
— Kabir, III.2, Translated by Rabindranath Tagore
ஆண்டவன் மசூதியின் உள்ளேதான் இருக்கிறானெனில்
இந்த உலகம் யாருக்குச் சொந்தமானது?
நீ மேற்கொண்ட புனித யாத்திரையில்
காண நேர்ந்த கற்சிலைதான் இராமனெனில்,
உலகத்தில் நிகழ்வனவற்றை அவனல்லாமல் அறிவான் யார்?
ஹரி கீழ்த்திசையில் இருக்கிறான்,
அல்லா மேற்றிசையில் இருக்கிறான் என்கிறாயே,
நீ உன் இதயத்தை உள்நோக்கிப்பார்.
அங்கே கறீம் ராம் இருவரையும் காண்பாய். ..... (பாடல் - 69)
காஜியார் திருக்-குர்-ஆனில் சொற்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
இது இப்படி, அது அப்படி என்று
மற்றவர்களுக்கு வாய்கிழிய உபதேசிக்கிறார்.
அவரது இதயம் அன்பில் நனையவில்லையெனில்,
அவர் மற்றையோர்க்கு ஆசானாக இருந்து என்ன பயன்?
யோகி தன் ஆடையைக் காவியில் தோய்த்து நிறமேற்றுகிறார்.
ஆனால், அன்பின் நிறம் இன்னது என அவர் அறியார்.
அவ்வாறாயின், இவர் ஆடை
வெள்ளாடை ஆயின் என்? கல்லாடை ஆயின் என்? ..... (பாடல் - 54)
இறைவனின் அருட்செயல்கள்
இத்தன்மையது என நான் எங்ஙனம் அறிவேன்?
முல்லா அவனை உரத்த குரலில் கூவியழைக்கிறார்.
ஏன்? உன் தேவன் செவிடனா?
சின்னஞ்சிறு பூச்சியின் காலில் மணி கட்டியிருந்தாலும்,
அது இயங்கும்போது ஒலிக்கும் ஓசையைக்
கூட அவன் கேட்க வல்லவன் ஆயிற்றே!
ஜெபமாலையை உருட்டு;
நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கொள்.
தலைநிறைய கற்றைச் சடாமுடியை
நீள வளர்த்து அலங்காரமாகத் தூக்கிக் கட்டிக்கொள்.
என்ன செய்தால் என்ன? உன் நெஞ்சில் ஈரம் இல்லை.
அன்பு இல்லை. நீ எப்படி இறைவனை அடைவாய்? ..... (பாடல் - 67)
ஆகியப்பாடல்கள், இந்துக்களையும், இஸ்லாமியரையும் பாகுபாடின்றி அழைத்து அவர்களது இறைவணக்க முறைகளின் மீது கேள்விகளை எழுப்புகிறது.
சடங்குகளும் சம்பிரதாயங்களும்:
இறைவழிபாட்டிற்கான சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் உடன்பாடில்லாதவர் கபீர்தாசர். இறைவன் நம் உள்ளேதான் உள்ளார். அவரை வெளியில் தேடுவது அறிவீனம் என்பதைப் பல பாடல்களிலும் குறிப்பிடுகிறார். அன்பின் வழியே இறைவனை அடையும் வழி என்பது கபீர்தாசரின் இறைக்கொள்கை. அன்பின் பேரொளியை கண்டவரே உய்வு பெற இயலும் என்றும் குறிப்பிடுகிறார்.
பூந்தோட்டத்திற்கு நீ போக வேண்டாம்.
என் நண்பனே, அங்கே போகாதே.
உன் உடம்பிலேயே மலர்வனம் உள்ளது.
ஆயிரம் இதழ்த் தாமரை மீது நீ அமர்ந்து கொள்.
அங்கிருந்தபடியே எல்லையற்ற பேரழகை
அகக்கண்ணால் கண்டு நீண்ட நேரம் உற்று நோக்கு ..... (பாடல் - 4)
ஒவ்வொரு பக்தனும் தனக்கென
ஒரு கடவுளை உருவாக்கிக் கொண்டு வழிபாடு செய்கிறான்.
முழுமுதற் கடவுளான பிரமத்தை யாரும் தேடுவாரில்லை.
அவர்கள் அவதாரங்களை நம்புகிறார்கள்.
எந்த அவதாரமும் பரம்பொருள் ஆகா.
ஏனெனில் அவர்கள் தத்தம் வினைப்பயனைத் துய்த்தே கழிக்கவேண்டியுள்ளது.
எனவே, இவையல்லாத வேறொன்றே பரம்பொருள் ஆதல் வேண்டும். ..... (பாடல் - 13)
உன் தேவன் உன்னருகே இருக்கிறான்.
நீயோ அவனைப் பார்ப்பதற்காகப் பனைமரத்தில் ஏறுகிறாய்.
பிராமண குரு வீடு வீடாகப் போய் இறை நம்பிக்கையை விதைக்கிறான்.
மக்களைத் தன்பால் ஈர்க்கிறான்.
வாழ்வின் நிஜமான நீரூற்று உன்னருகே உள்ளது.
நீயோ வழிபாடு செய்வதற்காக ஒரு கல்லை நட்டு வைத்து, எதிரே முணுமுணுக்கிறாய்.
'என் தேவன் எவ்வளவு இனியன் என்று நான் ஒருபோதும் கூறேன்.
மூச்சை அடக்கி யோகம் செய்வதும், ஜெபமாலை உருட்டுவதும்,
புண்ணியம் பாவம் என்பதும் எல்லாமே வீண்.
பயன்படாது. வெறும் அபத்தம். ..... (பாடல் - 21)
குறிப்பாக இப்பாடல்,
"நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"
என்று 'சிவவாக்கியர்' குறிப்பிட்டதையே குறிப்பிடுகிறது.
நான் திருக்கோயில் மணியை அடிக்கவில்லை.
எந்தப் பீடத்திலும் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்யவில்லை.
எந்தப் பதுமைகளையும் பூக்களால் அலங்கரிக்க வில்லை.
ஊனினை வருத்தும் எந்தக் கடுந்துறவும் இறைவனுக்கு உவப்பாகா.
ஆடைகளைக் களைந்து உணர்ச்சிகளை
ஒடுக்குவது மட்டுமே இறைவனை மகிழ்விக்காது.
அன்பின் வழியது உயிர்நிலை என்பதை அறிந்தவன்,
நேரிய வழியினின்றும் பிறழாது நடப்பவன்,
உலக நடவடிக்கைகளின் ஊடேயும்
தெளிந்த சிந்தையனாய்த் திகழ்பவன்,
மன்னுயிர்களையும் தன்னுயிர்போல் நேசிப்பவன் எவனோ,
அவனே அழிவில் பொருளாம் ஆண்டவனை அடைகிறான்.
அவனோடு மெய்ப்பொருளாம் இறையும் என்றென்றும் உறைகிறது. ..... (பாடல் - 65)
வாய்மையைப் போற்றுபவர், செருக்கும் வஞ்சனையும் அற்றவரே இறைநிலையை அடையமுடியும் என்பது கபீர்தாசர் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டும் இறைவழிபாட்டு முறை.
[தொடரும் .....]
அன்பின் வழியது உயிர்நிலை என்பதை அறிந்தவன்,
நேரிய வழியினின்றும் பிறழாது நடப்பவன்,
உலக நடவடிக்கைகளின் ஊடேயும்
தெளிந்த சிந்தையனாய்த் திகழ்பவன்,
மன்னுயிர்களையும் தன்னுயிர்போல் நேசிப்பவன் எவனோ,
அவனே அழிவில் பொருளாம் ஆண்டவனை அடைகிறான்.
அவனோடு மெய்ப்பொருளாம் இறையும் என்றென்றும் உறைகிறது. ..... (பாடல் - 65)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
...
--
துறவறம் தேவையற்றது:
இறைவனை அடையத் துறவறம் மேற்கொள்வதை கபீர்தாசர் ஆதரிக்கவில்லை. இல்வாழ்வில் முறைப்படி வாழ்ந்தே இறைவனை அடையமுடியும் என்பதை அவர் ஆணித்தரமாக நம்பியதும் அவரது பலபாடல்களின் வழி தெரிகிறது.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (குறள்: 48)
அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் ஆற்றுப்படுத்தி வாழும் வாழ்வு துறவற நோன்பைவிட மேலானது என்ற குறளின் கொள்கை கபீர்தாசரின் பாடல்களிலும் எதிரொலிக்கக் காணலாம்.
குறிப்பிட்ட நோக்கமின்றி வெளியே அலைந்து திரிபவனை
அவனது இல்லத்திற்குத் திரும்ப அழைப்பவனே
உண்மையில் எனக்குப் பிரியமானவன்.
வீட்டில்தான் அன்பின் சங்கமம்.
வீட்டில்தான் வாழ்வின் நுகர்ச்சி.
உண்மை அவ்வாறிருக்க, நான் ஏன் வீட்டைத் துறந்து காட்டில் அலைய வேண்டும்?
சத்திய தரிசனம் காண பிரம்மம் எனக்கு உதவுமானால்,
நான் வீட்டிலேயே தளையையும் விடுதலையையும் காண்பேன். ..... (பாடல் - 40)
உண்மையான ஞானி யார் என்று கொஞ்சம் கடினமாகவே அறிவுறுத்துகிறார் மற்றொரு பாடலில்,
வடிவமற்ற இறைவனின் வடிவத்தை
இந்த ஊனக் கண்களுக்குப் புலப்படச் செய்பவர் யாரோ,
அவரே உண்மையான ஞானி.
அவர் இறைவனை அடையும் எளிய வழியைப் போதிக்கிறார்.
அது சடங்குகளுக்கும் சம்பிரதாயங் களுக்கும் அப்பாற்பட்ட வழி.
‘பொறிபுலன்களாம் கதவுகளை அடைத்து வை;
மூச்சை அடக்கு; உலகத்தைத் துறந்து போ’
என்று அவர் ஒருபோதும் கூறமாட்டார்.
நீ எந்த ஒன்றுள் தோய்ந்திருந்தாலும்,
அந்நிலையிலும் அவர் தெய்வமென்னும்
ஒண்பொருளைக் கண்டறியக் கற்பிக்கிறார்.
உலகின் போகநுகர்ச்சிக்கு இடையேயும்
இறைவனோடு இணைந்து நிற்கும்
பேரின்பத்தைக் கற்றுத் தருகிறார். ..... (பாடல் - 56)
ஐம்புலன்களை அடக்கி, மூச்சடக்கி, துறவறம் மேற்கொள்ளாது, உலக வாழ்விலேயே இறைவனை அடைய வழிகாட்டுபவரே உண்மையான ஞானி என்பது கபீர்தாசரின் கருத்து என்பது இதிலிருந்து புலனாகிறது.
கபீர்தாசர் இறைவனை ஆண்வடிவில் காண்கிறார். இறைவனை அடையும் விரும்பும் தன்னை இறைவனின் நாயகியாக உருவகித்துக் கொள்கிறார். இவர் பாடல்கள் பெரும்பாலும் நாயக-நாயகி பாவத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. நாயகனான இறையை அடையவிரும்பும் நாயகியான தன்னை, நாயகனுடன் இணைந்துவிடத் துடிக்கும் காதலியாகவும், மனைவியாகவும் கற்பிதம் செய்து கொள்கிறார். இவர் தனது இறைக்காதலை வெளிப்படுத்தும் பாடல்கள் பலவற்றை, அவற்றின் உட்பொருளை உணராது படித்தால் காதல் பாடல்களாகவே தோற்றம் தருகின்றன.
உன்னை நினைத்தே என் உடம்பும் மனமும் ஏங்குகிறது.
என் ஆருயிர்க் காதலனே! என் இல்லத்திற்கு எழுந்தருள்.
உன்னை மணந்து கொள்ளப் போகிறவள் நான்தான் என்று
மற்றவர்கள் சொல்லும்போது
எனக்கு ஒரே நாணமாக இருக்கிறது.
ஏனெனில் இந்த வினாடி வரை உன் இதயத்தை
என் இதயத்தால் நான் தொட்டதே இல்லை.
அவ்வாறானால், என் காதலுக்கு என்னதான் பொருள்?
பாலும் கசந்தது; என் படுக்கையும் நொந்தது.
வீட்டின் உள்ளே இருந்தாலும் புறத்தே நின்றாலும்
என்மனம் அமைதியின்றி அலைகிறது.
தாகம் தீரத் தண்ணீர் தேவை.
மணப்பெண்ணுக்கு மணாளனே தேவை.
யார் அங்கே?
என் காதலனுக்கு நான் விடுக்கும் மடலைக்
கொண்டு சேர்க்க வல்லார் யார் இருக்கிறார்கள். ..... (பாடல் - 35)
என்ற பாடலில் தன்னைக் காதலியாக எண்ணிக்கொண்டு, காதலனான இறைவனை அடைய விரும்புவதை அவருக்கு மடல் எழுதித் தெரிவிக்கிறார். இதில் எங்குமே இது இறைவனை நோக்கிக் கூறப்பட்ட பாடலாகத் தெரியாமல், ஒரு காதல்வயப்பட்ட காதலி ஒருத்தியின் பாடலாகவே இப்பாடல் அமைந்திருப்பதைக் காணலாம்.
மற்றொரு பாடல், தமிழிலக்கியங்களில் காணப்படும் தலைவிக்குத் தோழி கூறும் அறிவுரைப்பாடல்கள் போல அமைந்துள்ளது.
தோழியே எழு! இன்னுமா உறங்குவாய்? எழு.
இராப்பொழுது வறிதே கழிந்தது;
பகல் நேரத்தையும் நீ பறிகொடுக்கப் போகிறாயா?
விழித்திருந்த எல்லாரும் விலைமதிப்பற்ற அணிகலன்களை
வெகுமதியாகப் பெற்றார்கள்.
பேதைமகளே!
நீ தூங்கியே அனைத்தையும் தொலைத்துவிட்டாய்.
உன் காதலன் புத்திசாலி, நீ முட்டாள் பேதாய்!
நீ உன் கணவனுக்காக மஞ்சத்தை
விரித்து மலர் தூவினாயல்லை.
சிற்றில் இழைத்தும் தெருமணலில் ஆடியும்
உன் பொன்னான நேரத்தைப் போக்கடித்து விட்டாய்.
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்தே கவிழ்ந்தாற்போல்
உன் இளமை வீணே கழிந்தது.
நீ உன் தலைவனை அறிந்தாயில்லை.
விழித்தெழுந்து பார். உன் படுக்கை வெற்றிடமாக இருப்பதைப் பார்.
பாதி இரவிலேயே அவர் எழுந்துபோய்விட்டார். ..... (பாடல் - 36)
இப்பாடலும் தலைவன் என்பது இறைவன் என்றக் குறிப்பின்றியே, நாயகனை அடைய நாயகிக்குத் தோழி கூறும் அறிவுரைப் பாடலாக அமைந்துள்ளதையும் காணலாம்.
மற்றொருபாடல், தலைவி தோழியிடம் காதல்வயப்பட்ட தனது நிலையைக் கூறுவதாகவும் அமைந்துள்ளது.
என் காதலரிடமிருந்து நான் பிரிந்திருக்கிற போது,
என் நெஞ்சம் கையறு நிலையில் கலங்கி நிற்கிறது.
பகலில் அமைதியில்லை.
இரவில் தூக்கமும் தொலைந்தது.
என் துயரை யாரிடம் எடுத்துரைப்பேன்?
இரவு கருமையை அள்ளிப் பூசிக்கொண்டு நிற்கிறது.
ஒவ்வொரு நாழிகையும் மெல்ல மெல்லக் கழிகிறது.
என் காதலர் என்னோடு இல்லை.
நான் அச்சத்தால் நடுங்கி எழுகிறேன். ..... (பாடல் - 52)
வாழ்வியல் அறிவுரைகள்:
கபீர்தாசரின் பாடல்கள் வாழ்வியல் அறிவுரைகள் பலவற்றையும் எளிய வகையில் கூறிச்செல்கின்றன.
'நான்' என்னும் அகங்காரமும் 'எனது' என்னும்
மமகாரமும் இருக்கும் வரை,
செய்யும் வினைகள் பயனின்றியே ஒழியும்.
செருக்குணர்வும், உடைமைப் பற்றும் மரணிக்கும்
போது செயல் முடிவுக்கு வருகிறது ..... (பாடல் - 6)
பார்! வாழ்வையும் மரணத்தையும் பார்!
அவற்றுக்கிடையே பேதமில்லை; பிரிவினை இல்லை.
வலக்கையும் இடக்கையும் ஒன்றுதான். ஒன்றேதான். ..... (பாடல் - 17)
ஞாயிறு கண்விழிக்கும் போது இரவு மறைகிறது.
நேரம் இரவாயின், சூரியன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொள்கிறது.
அறிவுள்ள இடத்தில் அறியாமை ஆட்சி முடியுமா?
அறியாமை நீடிக்கும் இடத்தில் அறிவு மரணிக்கும். ..... (பாடல் - 37)
தவறுகள் கதவை அடைக்கின்றன.
அப்பூட்டினை அன்பெனும் சாவியால் திற. ..... (பாடல் - 38)
மரணமிலாப் பெருவாழ்வு என்னும் ஆழ்கடலில்
அலைந்து திரியும் அந்த இன்பானுபவம்
என் வேண்டுதல்களையெல்லாம் அடியோடு அகற்றிவிட்டது.
எல்லா வகையான பிணிகளும் ஆசையில்தான் அடங்கிக் கிடக்கிறது,
விருட்சம் வித்தினுள் அடங்கி யிருப்பது போல். ..... (பாடல் - 60)
காலப்பெட்டகம்:
கபீர்தாசர் பாடல்கள் அவர் வாழ்ந்த காலத்தின் கண்ணாடியாகவும் அக்கால சமுதாய நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் பிரதிபலிக்கின்றன. இக்காலத்தில் ஆங்கிலம் கற்பதும் பேசுவதுமே ஒருவரை அறிவாளியாக்கும் என்ற சிந்தை மயங்கிய நிலை, அக்காலத்தில் சமஸ்கிரதம் கற்பதற்கும் காரணமாக அமைந்துள்ளதும் கீழ்காணும் பாடல் மூலம் தெரிகிறது.
எல்லாரும் என்னை அறிவாளியாகக் கருதவேண்டும்
என்பதற்காகச் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டேன்.
என்ன பயன்? தாகத்தால் நாப்புலர வாடி,
ஆசை வெப்பத்தில் தீய்ந்து கருகி,
அலைப்புண்டு மிதக்கும் எனக்கு அதனால் என்ன பயன்?
செருக்கையும் படாடோபத்தையும்
காரணமில்லாமல் தலையில் சுமந்து கொள்வானேன்? ..... (பாடல் - 91)
அது போன்றே இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறுதல் என்ற பெண்கொலைகள் அக்காலத்தில் பரவலாக இருந்ததும், அச்செயலின் அவலம் புரியாது அது உயர்வாகக் கருதப்பட்ட சமூகத்தின் மனநிலையும் கபீர்தாசரின் பல பாடல்களில் வெளிப்படுகிறது. அதனைக் குறிக்கும் பாடல்களில் இரண்டு எடுத்துக்காட்டாக இங்கே ...
இறந்துவிட்ட கணவனின் உடல் அருகே
கைம்பெண் உட்கார்ந்திருக்கிறாள்
அவள் சிதையைக் கண்டு அஞ்சுவதில்லை
இந்த அற்ப உடம்பைப் பற்றிய எல்லா
அச்சங்களையும் விட்டொழிப்பாயாக...... (பாடல் - 64)
கணவனை இழந்த காரிகையிடம்,
உடன்கட்டை ஏறித் தன்னை எரித்துக்கொள்ளுமாறு
யார் சொல்லிக் கொடுத்தார்கள்?
பற்றற்ற நிலையில் பேரின்பம் காண்
என யாராவது சொல்லித்தர வேண்டுமா என்ன? ..... (பாடல் - 62)
இறைவனை அடையும் பேரின்பப் பேறு அடையும் நிலை, கைம்பெண் கணவனுடன் உடன்கட்டை ஏற்றப்படுவதுடன் ஒப்பிடப்படுவது பெண்கள் எத்தகைய துன்பம் அனுபவித்துள்ளனர் என்பதையும், எந்த அளவு மக்களின் மரத்துப்போன மனம் பெண்களின் உயிர்க்கொலையினை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ஏற்றுக் கொண்டு வாழ்ந்துள்ளது என்பதையும் இப்பாடல்கள் கண்முன் நிறுத்துகிறது.
நாயக-நாயகி பாவ பாடல்கள் மறைமுகமாகச் சொல்வது... உறவைப் பொறுத்தவரை துணையை அடைய விரும்பி ஏக்கம் கொண்டு திரியும் மனநிலை பெண்ணிற்குரியது மட்டுமே என்ற கருத்து. இதனைச் சென்ற நூற்றாண்டின் திரைப்படங்கள் வரை நாம் காணலாம். கனவுக்காட்சி, காதல் களியாட்டங்கள் திரைப்படங்களில் காட்டப்படும்பொழுது அதில் காதல் கனவு காண்பவர் கதாநாயகியாகவே காட்டப்படுவார். காதல் கனவு காண்பது காதலியின் கடமை மட்டும் போலும்!!! உலகை உய்விக்கக் கனவு காணுவது ஆணின் கடமை என்ற ஆழ்மன பண்பாட்டுச் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படும் குறுகிய சிந்தனை வட்டத்தில் விழும் சித்தரிப்புகள் அவை.
அதனையும் விட மோசமானது, வாழ்க்கைத் துணை இறந்த பிறகு பெண் வாழவிரும்பமாட்டாள் என்ற சிந்தனை. இவையாவும் ஆண்களின் வாழ்வியல் விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆண்களின் கோணத்தில் கபீர்தாசரால் பாடப்பட்டுள்ளது. கபீர்தாசர் வாழ்ந்தது பதினைந்தாம் நூற்றாண்டு என்பதை மனதில் கொண்டு பழங்கால பண்பாட்டுக் கூறுகளை இவற்றின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
கபீர்தாசரின் கவிதைகள் இந்தி பக்தி இலக்கியத்தில் தனியிடம் பெற்றுப் போற்றப்படுபவை.சமயசார்பற்ற கொள்கையைக் கொண்ட இந்தியாவிற்கு இன்றும் தேவைப்படுபவை மதநல்லிணக்கதை வளர்க்கும் கபீர்தாசரின் கவிதைகள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க வழியில்லை.
________________________
References:
[1]
Wendy Doniger, The Hindus: An Alternative History, Oxford University Press (2010), p. 462
[2]
கபீரின் நூறு பாடல்கள், இரவீந்திரநாத் தாகூர் பாடல்களின் மொழிபெயர்ப்பு, எழில்முதல்வன், தமிழ் அலை (2011)
[3]
Kabir
https://en.wikipedia.org/wiki/Kabir
https://ta.wikipedia.org/s/n59
[4]
Tagore, Rabindranath. Songs of Kabir, Macmillan, New York, 1915.
________________________
பார்! வாழ்வையும் மரணத்தையும் பார்!
அவற்றுக்கிடையே பேதமில்லை; பிரிவினை இல்லை.
வலக்கையும் இடக்கையும் ஒன்றுதான். ஒன்றேதான். ..... (பாடல் - 17)
--
உன் தேவன் உன்னுள் உறைகிறான்.ஏன் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டுநீ எட்டுத் திக்குகளையும் பார்க்கிறாய்?
செப்டம்பர் 14,2010 ம் தேதி கோவை, குனியமுத்தூரில் நடந்த விநாயகர் ஊர்வலம்
http://www.tamilhindu.com/2010/09/kovai-vinayaka-chaturthi-2010-happenings/
சுபா
On Sunday, April 10, 2016 at 1:14:33 AM UTC-7, Suba.T. wrote:2016-04-10 9:12 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:உன் தேவன் உன்னுள் உறைகிறான்.ஏன் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டுநீ எட்டுத் திக்குகளையும் பார்க்கிறாய்?மிக ரசித்தேன்.காண மனம் வைத்தால் தேடும் தன்னுள்ளே காணலாம் என்பதை விடுத்து இங்கு தான் காணலாம் என வரையறை வைத்து வளர்ந்தன சமயங்கள்!சமயங்கள் வளர்ந்து, சடங்குகள் வளர்ந்து, பிரிவினைகள் வளர்ந்து, பிரச்சாரஙக்ள் வளர்ந்து, வன்முறைகள் வளர்ந்து ...இபடி இன்னமும் தேவையற்ற பல விஷயங்கள் வளர்கின்றன.. தேடவேண்டியதை சரியான இடத்தில் தேடாததால்!இதன் விளைவாக ஒரு சாமி எந்தெந்த தெருவில் போகலாம் போகக்கூடாது என்ற கட்டுப்பாடுகள், எதிர்ப்புகள் இன்னபிறவேறு வழியின்றி ...அதன் விளைவாக சாமி காவல்துறையின் உதவியுடன் வீதியுலா போகும் நிலைமை.செப்டம்பர் 14,2010 ம் தேதி கோவை, குனியமுத்தூரில் நடந்த விநாயகர் ஊர்வலம்
http://www.tamilhindu.com/2010/09/kovai-vinayaka-chaturthi-2010-happenings/
வினைதீர்த்தானுக்கே (சொ வி ஐயா அல்ல) இந்த நிலை
தேவன் என்னுள்ளும் உறைகிறான்;உன்னுள்ளும் உறைகிறான்.
ஓ, அடியானே! போலிச் செருக்கை விட்டொழி.அவனை உன்னுள்ளே தேடு.
thenmozhi!nice to see that tamil reading populace is also interested in kabir (and probably Rahim's) songs. and as bharathi said, it is time that tamil scholars bring the translations of these masterly works as that alone would expand the thought-process of the tamil population.rabindra tagore did an English translation of Kabir's selected 100 songs (kabir's songs, slokas and dohe were originally spread viva-voce only as both hindus and Islamic leaders opposed his denigration of vedas and quaron, before islamists took him in his fold in 18th century when his works were finally recorded in writing.