(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ 14 தொடர்ச்சி)
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -15
வானளாவியும் அகன்றும் உருவாக்கிய பழந்தமிழர் கட்டடப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக நெடுநல்வாடை என்னும் இலக்கியச் சான்றை முன்னர்ப் பார்த்தோம். கட்டுமானப் பணி சார்ந்த தச்சுப்பணியைப் பற்றிய குறிப்பை இப்பொழுது காண்போம்.
கட்டடம் கட்டும்பொழுது முதலில் வாயில் நிலைகளை அமைத்தல் இப்போதைய வழக்கம். இப்பழக்கம் காலங்காலமாக நம்மிடம் இருந்து வந்துள்ளது. எனவே, முதலில் உயர்ந்த வாயிலுக்கான நெடுநிலை அமைப்பது குறித்து ஆசிரியர் நக்கீரனார் பின்வருமாறு கூறி உள்ளார்:-
பருஇரும்பு பிணித்துச், செவ்வரக்கு உரீஇத்
துணைமாண் கதவம் பொருத்திஇணைமாண்டு
நாளொடு பெயரிய கோள்அமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி கால்அமைத்து
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பில்
கைவல் கம்மியன் முடுக்கலில் புரைதீர்ந்து
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை (நெடுநல்வாடை 80-86)
உயரமும் அகலமும் உடைய வாயில்களுக்கு – ஒற்றைக் கதவுகளாக இல்லாமல் இருபுறமும் மூடும் வகையில் – இரட்டைக் கதவுகளே அமைக்கப்பட்டன. மிக அகலமான வாசல்களுக்கு மடக்கி மூடும் கதவுகள் அமைக்கப்பட்டன (துணைமாண்கதவம்). அவ்வாறு அமைக்கும் பொழுது அவற்றைப் பிணிப்பதற்கு ஆணி முதலான இரும்புப் பொருள்கள் பயன்படுத்தப் பெற்றன. மரக் கதவுகளுக்கு நிறம் ஊட்டுவதற்குச் செவ்வரக்கு (சாதிலிங்கம்) பூசப்பட்டது,
அழகிய வேலைப்பாடு, உறுதி, தோற்றப் பொலிவு முதலியவற்றால் சிறப்பு பெற்றனவாய் அவை அமைந்தன. பல இணைப்புகளாகக் கதவுகள் உருவாக்கப்பட்டாலும் இணைக்கப்பட்டதற்கான அடையாளம் தெரியாதவகையில் மாட்சிமை மிக்கதாக (இணைமாண்டு) அக் கதவுகள் அமைந்தன. உத்தரம் என்பது ஒரு விண்மீனின் பெயர். கதவு நிலையில் மேல் இடப்படும் பாவுகல்லின் பெயர் உத்தரக்கற்கவி என்பதாகும். எனவே, உத்தரம் என்னும் விண்மீன் பெயர் உடைய உத்தரத்தில்(நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து) குவளைப் பூ வடிவிலான புதுமையான பிடியைப் பொருத்தினர் (போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்து); கதவின் பகுதியாகவே தாழ்ப்பாளைப் பொருத்தினர்; கைத்திறன் மிகுந்த கம்மியர்கள் நன்கு முடுக்கினர்; இடைவெளி தெரியாத அளவில் (புரை தீர்ந்து) ஒற்றைக் கதவுபோல் உருவாக்கினர்; வெண்சிறுகடுகினை (ஐயவி)யும் நெய்யையும் அதில் பூசினர். இவ்வாறு வாயிலுக்குரிய நெடிய நிலையினை அமைத்தனர்.
இவ்வாறு கதவுகளில் வெண்சிறுகடுகையும் நெய்யையும் கலந்து கதவுகளில் பூசும் வழக்கத்தை ஆசிரியர் மாங்குடி மருதனார்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மாடம் (மதுரைக்காஞ்சி : 253-255)
எனக் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் உறையூர் கதுவாய்ச் சாத்தனார்
நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்கு நகர் விளங்க (உறையூர் கதுவாய்ச் சாத்தனார் : 370.3-4) என்கிறார்.
நெய் என்பதைப் பாலில் இருந்து பெறும் நெய்என்றே அனைவரும் பொருள் கொண்டுள்ளனர். அவ்வாறு பொருள் கொண்டதால் தெய்வ வணக்கத்திற்காக நெய் பூசியதாகத் தவறாகக் கருதி உள்ளனர். எள்ளில் இருந்து பெறப்படுவதை எள் நெய் என்பது போல் நெய் என்பது பொதுச்சொல். கதவுகளுக்கு மெருகேற்றப் பயன்படுத்திய நெய்யை – மெருகெண்ணெய்யை – நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்.
கதவுகளை அமைக்கும் பொழுதே சீரும் சிறப்புமாகவும் உலுத்துப் போகாமலும் அரிக்கப்படாமலும் நிலைத்து நிற்கும் வகையில் சிறந்த மரத்தால் (விழுமரத்து) அமைத்ததுடன் மெருகுநெய்யும் பூசிப் பாதுகாத்து உள்ளனர் என்பதே சரியானதாகும்.
இவற்றின் தொடர்ச்சியான சிறப்பை அடுத்தும் காண்போம்.
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 83. 84
? 83. சனாதன் என்றால் புனிதம் என்பது சரியா?
சனாதன் (சனாதனம்) என்ற சமற்கிருதச் சொல்லின் பொருள், மதத்தை விட்டுவிட்டுப் பொருள் தேடினால் புனிதமான, பழங்கால, மறையாத, நீண்டு நிலைக்கும், என்றைக்கும் பொருத்தமான என்ற துணைச்சொல் என்று விளக்கம் தருகிறார்களே!
சனாதனக் குறள், சனாதன இசுலாம் என்று கூடக் கூறலாம். . . . புனித சேவியர், தூய மேரி எனக் கிறித்துவர் சேர்க்கும் துணைச்சொல்தான் ‘சனாதன்’ சுருக்கம். – குருசாமி ஆறுமுகம் என்பவர் கோரா தளத்தில் இவ்வாறு கூறுகிறார். சரிதானா?
சனாதனம் என்பது இந்து மதத்தில் மட்டும் இருக்கும் பொழுது சனாதன இசுலாம் என்றெல்லாம் சொல்வது பிற சமயத்தவரையும் இழிவு படுத்துவதாகும்.
அனைவரையும் பாகுபடுத்தாத இழிவுபடுத்தாத தூய உள்ளத்திற்கு எதிரான சனாதனத்தைத் தூய என்ற அடைமொழிப் பொருளாகக் கூறுவதும் கொடுமைதான்.
உண்மையான பொருளுக்கு அதன் தீமை உணர்ந்து எதிர்ப்பு வருகையில் இல்லாத நல்ல பொருள்கள் இருக்கின்றன எனக் கற்பிதம் செய்து மக்களை ஏமாற்றுவது ஆரியர் வழக்கம். அதற்கிணங்கவே இப்போதும் தூய்மையான என்பதுபோன்ற பொருள்களைத் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இத்தகைய பொய் விளக்கத்தில் அறிவுள்ள மக்கள் நம்ப மாட்டார்கள். சனாதனுக்கு எதிரான திருக்குறளையும் பிற சமயங்களையும் சனாதனமாகத் திரித்துக் கூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள். எனவே, இத்தகைய விளக்கங்களை யெல்லாம் பொருட்படுத்தாமல் தூர எறிய வேண்டும்.
? 84 சனாதனத்திற்கு ஆதரவாகப் பலரும் எழுதி வருகின்றனரே!
வானவில் க.இரவி, செயக்குமார், சீனிவாசன் பி.ஆர்.மகாதேவன், அரவிந்தன் நீலகண்டன், பிரம்மரிசியார், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சோபனா இரவி, இளங்கோ பிச்சாண்டி, கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், எல்.முருகன், வ.மு.முரளி, காம்கேர் கே.புவனேசுவரி, தருமபூபதி ஆறுமுகம், இராமகிருட்டிணன், சிவசங்கரன், பத்துமன், கோதை சோதிலட்சுமி, செங்கோட்டை சிரீராம், பி.ஆர்.மகாதேவன், ஆர்.என்.இரவி, சத்துகுரு சக்கி வாசுதேவு, மரபின்மைந்தன் முத்தையா, கோவை இராதாகிருட்டிணன், கே.சி.சவர்லால், நந்தலாலா, பி.ஏ.கிருட்டிணன், சடாயு, பா.இந்துவன், திருநின்றவூர் இரவிகுமார், ச.சண்முகநாதன், கோ.ஆலாசியம், ப.கனகசபாபதி, வேதா சிரீதர், பால.கௌதமன், வித்தியா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், இரா.சத்தியப்பிரியன், கிருட்டிண.முத்துசாமி, சி.எசு.பாலாசி, செ.செகன், எசு.எசு.மகாதேவன், அ.பொ.இருங்கோவேள், இராசசங்கர் விசுவநாதன், சுவாமி விமூர்த்தானந்தர், கோ.சேசா, என்.ஆர்.சத்தியமூர்த்தி, எசு.ஆர்.சேகர், நீதிபதி சேசசாயி, சந்தீபு ஆத்துவர்யூ, இராம் மாதவு, நிர்மலா சீதாராமன், வ.ச.சிரீகாந்து, குரு.சிவகுமார் ஆர்.இராசசேகரன், வைரவேல் சுப்பையா, மாதா அமிர்தானந்தமயி, தேவி, ஏகநாத்து இரானடே, டேவிட்டு ஃபிராலே சுவாமி சின்மயானந்தர்,சுவாமி அபேதானந்தர், இராமகிருட்டிணர், சாய்பாபா முதலிய பலரும் சனாதனத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளனர். அனைத்திலும் அடிப்படையாக உள்ளமை இங்கே நாம் பார்த்துள்ள தொன்மை, சமத்துவம் முதலியவற்றிற்கான விளக்கங்கள்தாம். அவற்றை மீண்டும் தெரிவிப்பின் கூறியது கூறலாகும் என்பதால் இங்கே எடுத்துரைக்கவில்லை. இவர்களுள் சிலர் மழுப்பலாக எழுதியுள்ளனர். இருப்பினும் சனாதனம் என்பது தீங்கானது என்பதும் அதற்கான விளக்கங்கள் தவறானவை என்பதுமே உண்மை.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்