
சித்தா, ஆயுர்வேதா போன்ற மருத்துவ வகைகளில் பக்கவிளைவுகள் இல்லை என்பது ஒரு மித் (myth). தமிழில் சொல்வதென்றால் கட்டுக்கதை. அது எந்த மருத்துவ வகை என்றாலும் ஒரு மருந்திற்கு விளைவு என்று ஒன்று இருந்தால் பக்கவிளைவுகள் இருக்கும். ஒரு மருந்திற்குப் பக்க விளைவு இல்லையென்று யாராவது சொல்கிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் உண்டு.
ஒன்று, அந்த மருந்திற்கு குறிப்பிடத்தக்க எந்த விளைவும் இல்லை. அதற்கு எந்த நோயையும் குணப்படுத்தும் வீரியம் இல்லை. அதனால் எந்த பக்கவிளைவையும் உருவாக்கும் வீரியமுமில்லை. பரவலான விளைவுகள் இருக்கலாம். மொத்தத்தில் அந்த மருந்து ஒரு டுபாக்கூர். ஆங்கிலத்தில் as good as placebo என்பார்கள் (placebo-வால் குணமாவதும் ஆண்டவரை வேண்டிக் குணமாவது போலச் சிலருக்கு நடக்கும். இதுவும் அறிவியல் உண்மை. அதனால் எல்லா மருத்துவ ஆராய்ச்சியிலும் இந்த Placebo கொடுத்து அதன் விளைவுகளைப் புள்ளியில் அடிப்படையில் கழிப்பார்கள்.)
இரண்டாவது, அந்த மருந்து ஏதாவது வியாதியைக் குணமாக்கும் பட்சத்தில் அதற்குப் பக்கவிளைவுகள் இல்லையென்றால் அப்படிச் சொல்வது டுபாக்கூர். அதன் பக்கவிளைவுகளை முறையாக ஆராய்ந்து ஆவணப்படுத்தவில்லை என்று அர்த்தம். விழலுக்கு இறைக்கும் நீர் போல இதை ஏன் என்றும் சொல்கிறேன்.
மனித உடலுக்குள் மருந்துகள் வேலை செய்ய வேண்டுமென்றால் அந்த மருந்திலுள்ள (எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி) மூலக்கூறுகள் நம் உடலிலுள்ள அந்த வியாதி சம்பந்தப்பட்ட புரோட்டீன்களில் பூட்டில் சாவி பொருந்துவது போலப் பொருந்த வேண்டும். இதை molecular docking என்பார்கள். வெளியே இருந்து வந்த அந்த மூலக்கூறுகள் படகு கரையில் கட்டப்படுவது போல நம் உடலிலுள்ள குறிப்பிட்ட புரோட்டீன்களுடன் கட்டப்பட வேண்டும். எத்தகைய புரோட்டீன்களுடன் அந்த மருந்திலுள்ள மூலக்கூறுகள் கட்டப்படுகிறது என்பதைப் பொறுத்து அது குணமாக்கும் வியாதிகள் அமையும். இது நடக்காவிட்டால் நல்ல விளைவோ, பக்க விளைவோ எதுவுமே நடக்காது. உடலுக்கு உள்ளே வந்த மருந்து அப்படியே டூர் அடித்துவிட்டு மூத்திரத்திலோ, மலத்திலோ வெளியே போய்விட வேண்டியதுதான். உதாரணமாக பச்சைக்கீரைகளை முழு உணவாகச் சாப்பிட்டால் மலமும் பச்சை பச்சையாகப் போகும். ஏன் என்றால் அதில் பெருமளவு இருக்கும் பச்சையம் என்ற செல்லுலோஸைச் சிதைத்து இரத்தத்திற்குள் அனுப்ப புரோட்டீன்கள் மனித செரிமான மண்டலத்தில் கிடையாது. அந்த கீரைக்குள் இருக்கும் வெகுசில மூலக்கூறுகளே புரோட்டீன்களால் ஒட்டப்பட்டு சிதைக்கப்படும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உள்ளே சென்று ஏதாவது வேலை இருந்தால் செய்யும். இது ஆறாங்கிளாஸ் அறிவியல் என்பதால் இந்த கீரை உதாரணத்தைக் கொடுத்திருக்கிறேன். இதேபோல் உடலால் உறிஞ்சப்படக்கூடிய, உறிஞ்சப்பட இயலாத லட்சக்கணக்கான மூலக்கூறு வகைகள் சாதாரண உணவிலேயே உள்ளன. மருந்துகளைப் பொருத்தவரை இது மிக முக்கியம். அதிலும் அந்த மூலக்கூறுகள் கொழுப்பில் கரையுமா, நீரில் கரையுமா, அவற்றின் பகுப்பு என்ன என்று பல காரணிகள் அவை இரத்த ஓட்டத்திற்குள் செல்வதை நிர்ணயிக்க உள்ளன.
அப்படி இரத்த ஓட்டத்தில் மருந்திலுள்ள அந்த மூலக்கூறுகள் கலந்தபின்னும் நேரடியாக அவை வேலை செய்ய வேண்டிய இடத்திற்குச் செல்லமுடியாது. இரத்தத்திலுள்ள புரோட்டீன்கள் உடனே வந்து அவற்றை உடைக்கும். உடைத்து எவ்வளவு சீக்கிரமாக அவற்றை வெளியே அனுப்ப வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்பவேண்டிய வகையில் அந்த மூலக்கூறுகளின் கட்டமைப்பை மாற்றும். சிறுநீரில் அவை எளிதாகக் கரையும் வகையில் மாற்றும். மருந்திலிருந்து உடலுக்குள் நுழையும் மூலக்கூறு வேறு, அதை நம் இரத்தம் மாற்றுவது வேறு. பல மருந்துகளில் இந்த மாற்றப்பட்ட மூலக்கூறுகள்தான் மருந்துகளின் வேலையைச் செய்யும். உதாரணமாக, வேப்ப இலை ஜூஸ், அருகம்புல் ஜூஸ் குடித்தால் அதிலிருந்து இரத்தத்திற்குள் செல்லும் மூலக்கூறுகளில் பல இரத்தத்தால் உடனே உருமாற்றப்பட்டுவிடும். இந்த உருமாறிய மூலக்கூறுகள் உடலுக்குள் ஏதாவது வேலை செய்யும். அந்த இலைகளில் இந்த மூலக்கூறுகள் இருக்காது. அவற்றை வைத்துக் கொண்டு நம் இரத்தத்தால் உருவாக்கப்படும் புதிய மூலக்கூறுகள் உடலுக்குள் வேலை செய்யும். சில மருந்துகளில் இந்த உருமாற்றும் வேலையை நம் செரிமானக் குழாய்களிலுள்ள நுண்ணுயிரிகள் செய்யும். கற்றாழை ஜூஸ் உடலில் எப்படி வேலை செய்கிறது என்றால் குடலிலுள்ள பூஞ்சைகளிலுள்ள புரோட்டீன்கள் கற்றாழையிலுள்ள ‘அலாயின்’ என்ற மூலக்கூற்றுடன் இன்னொரு மூலக்கூறைக் கட்டிவிடும். இந்த பூஞ்சையினால் பிரசவமான புதிதாகப்பிறந்த மூலக்கூறு மலமிளக்கி வேலையைக் குடல் புரோட்டீன்களுடன் சேர்ந்து துரிதப்படுத்தும். இந்த பூஞ்சை நம் குடலில் இயற்கையாக வளர்ந்திருக்கவில்லையென்றால் கற்றாழையால் மலமிளக்கும் வேலையைச் செய்ய முடியாது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் பக்கவிளைவுகள் பற்றிப் புரிந்து கொள்ள உடலுக்குள் செல்லும் மருந்துகளை (எந்த மருத்துவமாக இருந்தாலும்) நம் உடல் என்ன செய்கிறது என்ற சிக்கலான, இன்று அறிவியலால் தெரிந்துகொள்ளப்பட்ட பாதைவழிகள் (pathways) பற்றிய அடிப்படைகள் அவசியம். இது ஒரு பாதிதான். அடுத்தபாதி இந்த மூலக்கூறுகள் இரத்தத்தில் புகுந்து உடலை என்ன செய்கின்றன என்பது.
நாம் சாப்பிடும் இந்த மருந்திலுள்ள மூலக்கூறுகள் சில அப்படியே ரத்தத்திலும், பல ரத்தத்தால் உருமாற்றப்பட்டும் இரத்தத்தில் சுற்றும். நம் இரத்தம் உத்தேசமாக ஒரு நிமிடத்தில் உடலை முழுவதும் சுற்றிவரும். அதாவது இரத்தில் கலந்த மருந்திலுள்ள (சித்த, ஆயுர்வேத, அலோபதி . . . எந்த மருத்துவமுறை மருந்தாக இருந்தாலும்) மூலக்கூறுகளும் இரத்தத்துடன் சேர்ந்து உடலில் சுற்றும். அவற்றின் மூலக்கூறு அமைப்பில் பொருந்தக்கூடிய வகையில் புரோட்டீன் ஏதாவது போகும் வழிகளிலுள்ள செல்களில் தென்பட்டால் அவற்றில் ஒட்டிக்கொள்ளும். உதாரணமாக, இன்சுலினைச் சுரக்கச்செய்யும் புரோட்டீனுடன் இப்படி மருந்திலிருந்து நுழைந்த, அல்லது உருமாற்றப்பட்ட ஒரு மூலக்கூறு பொருந்தி ஒட்டிக் கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அது எந்த வகையில் பொருந்தியிருக்கிறது என்பதைப் பொருத்து அதன் விளைவு இருக்கும். ஒருவகைப் பொருந்தல் அந்த புரோட்டீனை அதிக இன்சுலீனைச் சுரக்கச் செய்யும். இன்னொரு வகைப்பொருந்தல் அந்த புரோட்டீன் இன்சுலீனைச் சுரப்பதை நிறுத்திவிடும். அதாவது ஒரு பைப்பை அடைப்பது, அல்லது திறந்துவிடுவது போல. இது அதில் பொருந்தும் மூலக்கூற்றின் கட்டமைப்பைப் பொறுத்தது. (ஆல்கஹால் மூளைக்குள் சென்றால் டோப்பமினைச் சுரக்கும் புரோட்டீன் பைப்புகளைத் திறந்துவிடும். சர்க்கரையைச் சாப்பிட்டாலும் இதே பைப்பு திறப்பு மூளையில் நடக்கும். கொஞ்சம் குறைந்த அளவில் நடக்கும். அந்த டோப்பமின் இன்னும் சில பைப்புகளைத் திறந்து நம்மை ஹையாக்கும்.)
இப்போது இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நம் உடலில் ஒரே மாதிரி புரோட்டீன்கள் பல வேலைகளைச் செய்யும். உதாரணமாக, ஒரு புரோட்டீன் கணையத்தில் இன்சுலீனைச் சுரக்க உதவிசெய்தால் அதே புரோட்டீன் மூளையில் ரத்த அழுத்தத்தைக் கூட்டிக் குறைக்கும் வேலையையும் செய்யலாம். ஆனால் இந்த மருந்துகளால் உடலுக்குள் நுழையும் மூலக்கூறுகளுக்கு (எந்த மருத்துவமுறை மருந்தாக இருந்தாலும்) அவை பொருந்தும் வகையில் புரோட்டீன் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பொருந்திவிடும். அவை ஒன்றும் ஆறறிவு படைத்த உயிரினங்கள் அல்ல. கார்பன், ஹைட்ரஐன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் எல்லாம் பிணைந்த கெமிக்கல் மூலக்கூறுகள். வேதியியல், இயற்பியல் விதிகளின் படி பொருந்திவிடும். அதனால் என்ன ஆகும்? கணையத்தில் இன்சுலீனைச் சுரக்க வைக்கும் அதே நேரத்தில் தலையில் லேசாகத் தலைவலியையும் உருவாக்கலாம். இன்சுலின் சுரந்து சர்க்கரை குறைவது விளைவு என்றால், தலைவலிப்பது பக்க விளைவு என்று நாம் பெயர் வைப்போம். இரண்டுமே விளைவுகள்தான். இரண்டின் வீரியமும் அவை எந்த அளவுக்கு அங்குள்ள புரோட்டீன்களில் பொருந்துகிறது என்பதை, அந்த உடலில் அந்த புரோட்டீன்கள் எந்த அளவுக்கு அந்த பகுதிகளில் செரிந்திருக்கிறது என்பதையெல்லாம் பொறுத்தது.
இதெல்லாம் அடிப்படை அறிவியல். எந்த மருத்துவ மருந்தைச் சாப்பிட்டாலும் அவற்றிற்கும், உடலுக்கும் நடக்கும் காதல், மோதல் எல்லாம் இப்படிப்பட்ட பாதைவழிகளில்தான் நடக்கும். மருந்தின் மூலக்கூறுகள் உடலின் புரோட்டீன்களில் பொருந்துவது ஒரு non-specific binding என்பார்கள். அந்த மூலக்கூறுகளுக்குத் தெரியாது அந்த புரோட்டீன் இரைப்பையில் இருக்கிறதா, மூளையில் இருக்கிறதா, சிறுநீரகத்தில் இருக்கிறதா, கல்லீரலில் இருக்கிறதா என்று. எங்கெங்கெல்லாம் பொருந்துகிறதோ அங்கெல்லாம் பொருந்தி அதற்கேற்ற விளைவுகளை ஏற்படுத்தும். அவை நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களில் வியாதி குணமாகும். மற்ற இடங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். (இன்றைய நவீன மருத்துவத்தின் பல ஆராய்ச்சிகள் அவற்றின் டார்கெட்டுக்கு மட்டும் இந்த மூலக்கூறுகளைப் பிரித்து அனுப்புவது எப்படி என்பது.)
பாரசிட்டமாலை எடுத்துக் கொண்டால் அதில் இருக்கும் ஒரே செயல்படும் மூலக்கூறு பாரசிட்டமால் மட்டும்தான். ஏனென்றால் அதை மாத்திரைக்குள் வைத்தது நாம்தான். அதனால் அந்த பாரசிட்டமால் என்னவெல்லாம் இரத்தத்தால் உருமாற்றப்படும், அவை எந்தெந்த புரோட்டீன்களில் உடலில் எங்கெல்லாம் பொருந்தும், என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று எல்லாம் தெரியும். அவற்றை ஆராய்ந்து, அதைச் சாப்பிட்டவர்களின் தரவுகளைச் சேர்த்து என்னென்ன விளைவுகள், எத்தனை சதவீதம் அந்த விளைவுகளுக்கான சாத்தியக்கூறுகள் எல்லாம் பட்டியலிட்டுவிடுவார்கள். இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய ஒரு புரோட்டீனில் பொருந்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அதையும் உஷாராக இருக்கச் சொல்லிச் சேர்த்துவிடுவார்கள். இது அறிவியல்.
இதில் சித்தா, ஆயுர்வேதா மருத்துவத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால் இந்த மருந்துகளால் ஏகப்பட்ட மூலக்கூறுகள் உடலுக்குள் நுழையும். ஒரு வேப்பிலை ஜூஸ் குடித்தால் உடலுக்குள் குறைந்தபட்சம் உடலில் ஏதாவது ஒரு வேலையைச் செய்யக்கூடிய பத்து, பதினைந்து மூலக்கூறுகள் நுழையும். (ஒழுங்காகக் கழுவாமல் ஜூஸ் போட்டால் பாக்டீரியாக்களும் நுழையும்.) எது எது எத்திசைக்குப் போகிறது என்ன விளைவுகளை, எந்த அளவுகளில் ஏற்படுத்துகிறது என்பதெல்லாம் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் எளிதாக அவற்றிற்கு எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்று சொல்லிவிடலாம். அது வயிற்றுப் பூச்சியைக் கொல்லும், ஆன்டிஆக்ஸிடன்டை அதிகப்படுத்தும் போன்ற அதில் அதிகமுள்ள மூலக்கூறுகள் பெரிதாக எல்லோருக்கும் வெளிப்படும் விளைவுகளை வைத்து அதன் உபயோகத்தைத் தீர்மானித்துவிடுகிறார்கள். தூற்றுவதற்கில்லை. ஆனால் பக்கவிளைவுகள் பற்றி நவீன மருத்துவ மருந்துகள் அளவுக்கு ஆராயப்படவில்லை என்பதுதான் உண்மை. பக்கவிளைவுகள் சிறிய அளவில் பலருக்கு, அல்லது பெரிய அளவில் சிலருக்கு ஏற்படுபவை.
இவற்றை நுட்பமாக ஆராய்ந்து, அவற்றிற்கான அறிவியல் பூர்வமான ட்ரையல்கள் செய்து அலசினாலேயொழிய பட்டியலிட முடியாது. அல்லது அவற்றைச் சாப்பிட்ட எல்லோரிடமும் கேட்டு உங்களுக்கு என்னவெல்லாம் ஆனது என்று தரவுகளைச் சேர்த்து, ஆவணப்படுத்தி புள்ளியியல் அடிப்படையில் ஆராய்ந்து அவற்றின் noice போன்றவற்றை ஒழித்து, signal-களைக் கண்டுபிடித்து (புள்ளியியல் படித்தவர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்று தெரியும்) ஆயிரத்தில் ஒருவருக்கு என்ன ஆனது, லட்சத்தில் ஒருவருக்கு என்ன ஆனது என்றெல்லாம் பட்டியலிட வேண்டும். அப்போதுதான் இந்த பக்கவிளைவுகள் பற்றிய உண்மை நிலவரம் தெரியும். இதெல்லாம் நவீன மருத்துவ மருந்துகளுக்கு கட்டாயம் செய்து பட்டியலிட வேண்டும். அதனால் இது மிகவும் வெளிப்படையாக, பொதுவெளியில் இருக்கிறது. ஏதாவது புதிதாகத் தரவுகள் வெளிவந்தால் உடனே ஆராய்ந்து தரவுகள் உண்மையென்றால் ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கேஸ் போட்டுவிடுவார்கள்.
இந்த கட்டுப்பாடுகளிலிருந்து மரபு மருத்துவ வகைகள் வெகு தூரத்தில் இருக்கின்றன. இந்திய அரசு கடந்த சில வருடங்களில் ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்ற மருந்துகளின் பக்க விளைவுகளைக் கண்டுபிடிக்க pharmacovigilance போர்ட்டல் ஒன்றை ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் நிறுவியிருப்பது பாராட்டுக்குரியது. அறிவியலின் கீழ் இவற்றைத் தீவிரமாகக் கொண்டுவந்தால்தான் நன்மை, தீமைகள் எல்லாம் வெளிப்படையாக வரும். அவைதான் இத்தகைய மருத்துவங்களை உலகளவில் எடுத்துச் செல்ல உதவும். போகிற போக்கில் பக்கவிளைவுகள் இல்லையென்றால் சொல்கிறவர் கடவுளாகவே இருந்தாலும் அவர் அதைத் தரவுகள், ஆராய்ச்சிகள் அடிப்படையில் பலப்படுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் கொடுக்கும் மருந்தை மட்டுமல்ல, அவரையும் சேர்த்து மேலேயும் கீழேயும்தான் பார்ப்பார்கள்.
உடற்கூறியல், மருந்தியல் பற்றித் தெரிந்து கொள்ள மிக நல்ல எளிமையான புத்தகங்கள் உள்ளன. Lippincott Illustrated Reviews: Pharmacology பாடப்புத்தகம் என்றாலும் முதலில் ஆரம்பிப்பவர்களுக்கு மிக அருமையான புத்தகம். இல்லை நவீன மருத்துவத்தைத் திட்டியே தீரவேண்டும் என்றால் Ben Goldacre போன்றவர்கள் எழுதிய விமர்சனப் புத்தகங்களை வாசிக்கவும். அவை நவீன மருத்துவத்தின் குறைகளை அறிவியல்பூர்வமாக விவாதிக்கவாவது உதவும்.
குறிப்பு: அருள் மெர்வின் வாட்சப் குழுவில் பகிர்ந்தது . . .