ராவணப் பதிவுகள்இரா.கலைக்கோவன்வரலாற்றாய்வாளர்
தொடர்புக்கு:
rkalaik...@gmail.comராமாயணத்தின் நாயகர்கள் இருவருள் ஒருவர் ராவணன். தமிழிலக்கிய வரலாற்றில் ராவணனை அடையாளப்படுத்துவது கலித்தொகையே. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக அறியப்பட்டாலும் காலத்தால் பிற்பட்டவை என்பது அறிஞர் முடிபு. கலித்தொகை சுட்டும் மிகச் சிலவான சிவக்கோலங்களில், ராவணன் கயிலையை அகற்ற முயன்றபோது, அம்மலையில் உமையுடன் இருந்த சிவபெருமானின் திருவடிவமும் ஒன்றாகும். ராவணன் யார், அவர் ஏன் கயிலை மலையை அகற்ற முயன்றார், அம்முயற்சியின் விளைவுகள் எப்படியிருந்தன என்ற கேள்விகளுக்கெல்லாம் கலித்தொகையில் விடையில்லை. தேவார மூவரில் காலத்தால் மூத்த அப்பர் பெருமானும் சம்பந்தருமே தங்கள் பதிகங்களில் இவ்வினாக்களுக்கான விரிவான விளக்கங்களைத் தருகின்றனர். என்றாலும், சம்பந்தரினும் அப்பர் பெருந்தகையே கயிலையை அசைத்த ராவண வாழ்க்கையைப் படக் காட்சிகளெனப் புலப்படுத்தி மகிழ்கிறார்.
அப்பரின் பதிக ராவணன்:
கடலால் சூழப்பெற்ற தென்னிலங்கை வேந்தர், பெருவீரர், குபேரனை வென்று புட்பகம் பெற்றவர் என்றெல்லாம் ராவணனைப் பெருமைப்படுத்தும் அப்பர், 'அரக்கன்' என்ற அடையானத்தையும் முத்திரையாகப் பொறிக்கத் தவறவில்லை. அப்பரின் திருமுறைகளை அடியொற்றிப் பின்பற்றினால் ராவணன் கதையைப் பெருமளவிற்கு அறிய முடியும். தன் தேரில் உலாவந்த ராவணனின் வழியில் கயிலை மலை குறுக்கிட்டது. 'கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது என்று தேர்ப்பாகன் கூற, அது கேளாது ராவணன் வீரமொழி பேசிப் பாகனை முடுக்க, தேர் கயிலையை நெருங்கி நின்றது. வழித் தடையாகும் அம்மலையைப் பெயர்த்து அகற்றக் கருதித் தேரிலிருந்து இறங்கிய ராவணன், தம் இருபது கைகளாலும் மலையைப் பற்றி அசைத்தார், மலை அசைவதும் ஆடுவதும் உணர்ந்த கயிலை வாழ் முனிவர்களும் இறைவனின் பூதப்படையும் நடுக்குற, உமையும் அஞ்சியது கண்ட சிவபெருமான் தம் கால்லிரலை அழுத்தி ஊன்றிணர்.
ராவணனின் துன்பம்:
கைகளாலும் தோள்களாலும் கயிலை மலையைத் தூக்க முயன்ற ராவணன் சிவபெருமான் தந்த அழுத்தம் தாங்காது கைகளும் தோள்களும் தலைகளும் நசுக்குறக் கண்களில் குருதி கசிய அலறித் துவண்டார். ராவணனின் இந்தத் துன்பநிலையை அப்பர் போலவே சம்பந்தரும் விரித்துரைக்கிறார். 'அலறித் துடித்தான், வாய்விட்டு அலறினான், மிகக் கடுத்து அலறி வீழ்ந்தான், இறையருள் கேட்டு மன்றாடினான்' என்றெல்லாம் ராவணன் துன்பம் காட்டும் பாடலடிகள், இறைவனிடம் அவர் மன்றாடியதையும் சொல்கின்றன.
ராவணன் என்ற பெயர்:
இழைத்த தவறுக்கு வருந்தி அழுத ராவணனைப் பொறுத்தருளும் முன், அவர் இசைவளம் கேட்க இறைவன் உளம் கொண்டார். அதை அறிந்தவராய் இறைவனைப் பாடிப் பரவிய ராவணன் தம் கை நரம்புகளையே வீணை இழைகளாகக் கொண்டு இருக்கிசைப் பாடல்களும் வேதகீதங்களும் இசைத்ததாகவும் ராவணனின் பண்திறம் கேட்டுகந்த இறைவன், அதுவரை வாளரக்கன் என்றே அறியப்பட்டிருந்த அவருக்கு ராவணன் என்ற பெயரைத் தந்ததுடன் நெடிது வாழும் சிறப்பையும் தம் கொற்றவாளையும் தந்து வாழ்த்தி அனுப்பியதாகவும் அப்பரின் பதிகப் பாடல்கள் தெளிவுறத் தெரிவிக்கின்றன.
பல்லவ ராவணச் சிற்பங்கள்:
கலித்தொகை ஐந்து அடிகளில் குறிப்பாய்ச் சுட்டும் ராவணத் தொன்மம் பதிகக் காலத்தில் பலபட விரிந்து பாடலடிகளாய் மலர்ந்து பொதுக்காலம் எட்டாம் நூற்றாண்டில் சிற்பக் காட்சிகளாய்த் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள் நுழைந்தது. பல்லவர் பகுதியான தொண்டைநாட்டில் இத்தொன்மத்தை மக்கள் பார்வைக்குக் காட்சியாக்கிய பெருமைக்குரியவர் இரண்டாம் நரசிம்மரான ராஜசிம்மப் பல்லவர். அவர் உருவாக்கிய கற்றளிகளில் முக, அகமண்டபக் காட்சியாகவோ, சுவர்க் கோட்டப் படப்பிடிப்பாகவோ ராவணன் கயிலையை அசைக்கும் முயற்சி பேரளவுச் சிற்பமாகப் பொலிந்தது. அப்பர் பதிகங்களின் விளக்கம் போலவே அமைந்த அவற்றில், சிவபெருமான் உமை இணையுடன், மலைவாழ் பூதங்கள், அடியவர்களின் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. மலையின் முன் ஒரு கால் நீட்டி, ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில் மலையை அசைக்கும் முயற்சியுடன் ராவணனைக் காண முடிகிறது. காஞ்சிபுரம் முக்தேசுவரத்தில் மட்டும் முகமண்டபத் தென்சுவரில் ராவணன் மலையை அசைப்பதும் வடசுவரில் அவர் கைநரம்புகளை மீட்டிப் பண்திறல் காட்டுவதும் படமாகியுள்ளன.
பரங்குன்றத்து ராவணத் தொடர்:
ஏறத்தாழ இதே காலத்தில் பாண்டியர் பகுதியிலும் ராவணத் தொன்மம் முத்திரை பதித்தது. மதுரைக்கு அருகிலுள்ள பரங்குன்றத்தின் வடக்கு வளாகத்தில், குன்றின் இடைப்பகுதியில், அன்னபூரணித் திருமுன்னின் வலப்புறம்'இருட்டுக்கொட்டகை' என்றழைக்கப்படும் பாறைப்பகுதி உள்ளது. மேற்றளக் கருவறைகள், முருகன், பிள்ளையார் திருமுன்களின் திருமஞ்சன நீர் வெளியேறும் வழியாக உள்ள இந்தக் கொட்டகையின் உட்புறத்தில் குன்றின் சரிவுப்பகுதியில் ராவண வரலாறு தொடர்கதை போலக் கிழக்கிலிருந்து மேற்காகச் சிற்பப் பொளிவுகளின் துணையுடன் சொல்லப்பட்டுள்ளது.
பின்னாளில் நேர்ந்த கட்டமைப்பு மாற்றங்களால் எழிலார்ந்த இந்தச் சிற்பத்தொடர் பல நிலைகளில் மறைக்கப்பட்டிருந்தாலும், இறைவன் கால்விரல் அழுத்தத்தால் மலையின் கீழ் நசுக்குண்டு ராவணன் வாய்விட்டு அலறும் காட்சி, பாண்டியர் கைநேர்த்தியில், அப்பர் பாடலடிகளை அப்படியே கண் முன் நிறுத்துகிறது. ராவணனின் வலப்புறத்தும் இடப்புறத்தும் அவனை எதிர்க்கும் பேரளவிலான கயிலைப் பூதங்கள். தமிழ்நாட்டின் வேறெந்தப் பகுதியிலும் ராவணத் தொன்மத்தில் இத்தகு வீரப் பூதங்களைக் காணக் கூடவில்லை. உருள்பெருந்தடி, கேடயம், ஈட்டி, வில், அம்பு, கல் என அக்காலத்திய அனைத்து விதமான போர்க் கருவிகளையும் ஏந்திப் பெருவீரத்துடன் ராவணனைக் குறிபார்க்கும் பரங்குன்றப் பூதங்கள் பேரெழிலின. இறைவனைத் தம் இசையால் மகிழ்வித்த ராவணனுக்கு வாளும் வாழ்நாளும், பெயரும் அளித்து உகந்த இறைவனை இங்கு காண முடியவில்லை என்றாலும், இறையருள் பெற்ற ராவணன் தேரில் செல்லும் காட்சி தென்முகப் பாறையில் ஒளிர்கிறது. இடக்கையை மார்பருகே கொண்டு வலக்கையால் இறைவனைப் போற்றியவாறே செல்லும் ராவணனின் தேருக்குள் இறைவன் அளித்த கொற்ற வாளையும் மறக்காமல் காட்டியிருக்கிறார் பாண்டியச் சிற்பி. ராவணனுக்கு இந்தத் தேரையும் இறைவனே அளித்ததாகச் சம்பந்தரின் பதிகம் ஒன்று கண்சிமிட்டுகிறது.
சோழப் பதிவு:
பத்திமைக் காலத்திற்குப் பின் வந்த ஆகமங்கள் இந்தத் தொன்மத்தைச் சில பல வேறுபாடுகளுடன் பதிவுசெய்து, ராவணனுக்கு அருளியவராய்ச் சிவபெருமானைப் போற்றுகின்றன. பல்லவ, பாண்டியர்களைத் தொடர்ந்த சோழர்களும் இந்தத் தொன்மத்தைக் கைவிடவில்லை. பேரளவுச் சிற்பங்களாய் இல்லாவிடினும் சிற்றுருவச் சிற்பங்களாய் ராவண அருளராய்ச் சிவபெருமான் சோழர்களால் தொடர்ந்து அடையாளப்பட்டார்.
சோழர் பதிவுகளில் சற்றே மாறுபட்ட ராவண அருள் மூர்த்தி வடிவத்தைத் திருப்பூந்துருத்திக் கோபுரத்தில் காண முடிகிறது. இங்கு ராவணனை விரட்டப்புதிய முயற்சியொன்றில் பூதமொன்று ஈடுபட்டதைக் காட்டியுள்ளனர். இந்தியாவின் வடபகுதிகளில் காணப்படும் பெரும்பாலான ராவண அருள்மூர்த்தி சிற்பங்களில் பூதங்கள் இரண்டு ராவணனின் இருபுறத்தும் குனிந்து நின்முதம் வயிற்றுக் காற்றைப் பின் வழி வெளியேற்றி அவனைத் திக்குமுக்காடச் செய்வதைக் காண முடிகிறது. பூந்துருத்திச் சிற்புத் தொகுதியின் மேற்பகுதியிலோ ராவணனுக்காய்த் திரும்பி நிற்கும் பூதமொன்று காற்றுக்குப் பதில் வயிற்றுக் கழிவை வெளித்தள்ளித் தன் வெறுப்பையும் சினத்தையும் புலப்படுத்துகிறது.
கலித்தொகைத் தொன்மம் ஒன்று பக்திக் காலத்தில் பதிக வாழ்க்கை பெற்றுப்பேரரசுக் காலங்களில் சிற்பங்களாகப் பதிவாகி சிவபெருமானின் அருள்பெற்ற தென்னிலங்கை ராவணனை மக்கள் உள்ளங்களில் நிலைபேறு கொள்ளச் செய்துள்ளமை கலையும் இலக்கியமும் கையிணைக்கும்போது நிகழும் பேரதிசயங்களுள் ஒன்றெனலாம்.