பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம் — முனைவர் தேமொழி

14 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 30, 2025, 11:09:23 PM (2 days ago) Sep 30
to மின்தமிழ்
பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்

 —   முனைவர் தேமொழி



கட்டுமானங்களின் தனிச்சிறப்பு என்ற அடிப்படையில் இன்றைய உலகில் பல பாலங்களுக்குப் பற்பல சிறப்புகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதையும் இருக்கும்.  அவ்வாறான சிறப்புப் பெற்ற பாலங்களுள் ஒன்றுதான் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றின்  குறுக்கே கட்டப்பட்டுள்ள  வாட்டர்லூ  பாலம் (Waterloo Bridge).  இதன் சிறப்பு, இப்பாலத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையோர் (70 விழுக்காட்டினர் அல்லது சற்றேறக்குறைய 350 பணியாளர்கள்) பெண்கள் என்பதுதான். எனவே, இது பலகாலம் 'லேடீஸ் பிரிட்ஜ்' (The Ladies Bridge) என்றே அழைக்கப்பட்டு வந்தது.  தேம்ஸ் ஆற்றின் படகோட்டிகளும், பயணிகளும் லேடீஸ் பிரிட்ஜ் என்றே அழைத்தாலும், இது பெண்களால் கட்டப்பட்டப் பாலம் என்ற வாய்மொழிக் கதை மக்களிடையே இருந்தாலும்,  இதற்கு வரலாற்றுச் சான்றுகள் தரப்படாத காரணத்தால் இது ஒரு கட்டுக்கதை என்ற எண்ணமே மக்களிடையே நிலவி வந்தது. அண்மையில் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் இப்பாலத்தின் கட்டுமானப் பணியில் பெண்கள் பங்கேற்றனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
.1waterloo bridge3.1.jpg
waterloo bridge3.jpg
இந்தப் பாலத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்தப் பாலத்தின் தொடக்கம் 19ஆம் நூற்றாண்டு. லண்டனின் ஸ்ட்ரான்ட் பகுதியில் 'ஸ்ட்ரான்ட் பிரிட்ஜ்' (the Strand Bridge) என்ற பெயரில் 1810–1817 காலகட்டத்தில் போக்குவரத்துப் பயணிகளிடம் பயன்பாட்டிற்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்துடன் இப்பாலம் கட்டப்பட்டது.  ஒன்பது வளைவுகளைக் கொண்டதாக, சற்றொப்ப 2500 அடிகள் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட பாலம் இது.   ஆனால் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பொழுது இங்கிலாந்து நாடு ஃபிரெஞ்ச் நாட்டு ஆட்சியாளர் நெப்போலியனை வாட்டர்லூ போரில் 1815ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருந்தது. எனவே அதைக் கொண்டாடும் இரண்டாம் ஆண்டு விழாக் காலத்தில்,  1817இல் பாலம் திறக்கப்பட்டபொழுது வெற்றியைச் சிறப்புச் செய்யப் பாலத்தின் பெயர் வாட்டர்லூ பிரிட்ஜ் என மாற்றப்பட்டது.  

காலப்போக்கில் ஆற்றின் நீரோட்டத்தால் சற்றேறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பாலத்தின் அடிப்பகுதியின் கட்டுமானம் அரிக்கப்பட்டு பாலம்  வலுவிழந்து மறுசீரமைப்பு  செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.  கில்பர்ட் ஸ்காட் (Sir Giles Gilbert Scott) என்பவர் புதிய பாலத்தை வடிவமைத்தார்.  பாலத்தின் கட்டுமானம் தொடங்கிய பொழுது அதன் அருகே இணையாக ஒரு தற்காலிக இரும்புக் கிராதி பாலம் எழுப்பப்பட்டு, வாட்டர்லூ  பாலத்தின் பகுதிகளையே மீண்டும் மறுசுழற்சி செய்யும் திட்டத்துடன் பழைய பாலத்தின் கட்டுமானம் தகர்க்கப்பட்டது.  இந்நேரத்தில்தான் எதிர்பாராத விதமாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த  ஆண்கள் யாவரும் போர்முனைக்கு அழைக்கப் பட்டார்கள்.  ஆனால், கட்டுமானப் பணிகளும் நடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

வேறுவழியின்றிப் பெண்களைக் கட்டுமானப் பணிக்கு அமர்த்தினார்கள்.  இந்த நிலை உலகம் முழுவதுமே போரில் ஈடுபட்ட நாடுகளின் நிலையாக அக்காலத்தில் இருந்தது.  வழக்கமான போர்க்காலப் பணியாக மருத்துவச் செவிலியர், தொலைபேசி இணைப்பாளர், அலுவலகச் செயலாளர்  போன்ற பணிகளைத் தவிர்த்து ஆண்களின் பணியாகக் கருதப்பட்ட தொழிற்சாலைப் பணியாளர், கட்டுமானப் பணியாளர், ஊர்திகள் இயக்குபவர், விமானம் ஓட்டுபவர் போன்ற புதிய பணிகளில் எல்லாம் பெண்கள் பங்கேற்றனர். அக்காலகட்டத்தில் இங்கிலாந்தில் மட்டும் 25,000 மகளிர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தரவுகள் சொல்கிறது. அதாவது, கட்டுமானப் பணியில் மூன்று விழுக்காட்டினர் அளவில் பெண்கள் பங்கேற்று இருந்தனர்.  இவர்கள் வெல்டிங், கான்கிரீட் கலவை தயாரித்தல் போன்ற வேலைகளையும் செய்தனர்.  இக்காலத்தில் சராசரியாகக் கட்டுமானப் பணியில் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள் ஈடுபடுவதுடன் இதை ஒப்பிட்டால், சென்ற நூற்றாண்டில் கட்டுமானப் பணியில் மகளிர் பங்களிப்பின் தீவிரம் புரியும்.  

பணியில் அமர்த்தப்பட்ட பட்ட பெண்களுக்கு நீண்ட நேர வேலை, கழிப்பிடம் ஓய்வறை போன்ற வசதிகளும் குறைவு. இருப்பினும், ஆண்களைவிடக் குறையான ஊதியம் என்பது மட்டுமல்ல, போர் முடிந்து ஆண்கள் நாடு திரும்பினால் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வீடு திரும்ப வேண்டும் என்ற உண்மையையும் அவர்கள் அறிந்தே இருந்தனர்.  போர் தொடர்ந்தது, ஒரு முறை வாட்டர்லூ பாலமும் நாஜிப் படையின் குண்டு வீச்சிற்கு  உள்ளானது. இருந்தும்  கட்டுமானம் தொடர்ந்தது. தொடர வேண்டியது நாட்டின் கௌரவம், அது  மக்களுக்கு நம்பிக்கை தருதல் போன்றவற்றுடன், அப்பாலம்  போர்க்கால இராணுவத்திற்குத் தேவையானதாகவும் இருந்தது,  பெண்கள்  தொடர்ந்து பணி புரிந்தனர்.  இக்கட்டுமானப் பணி 1937இல் தொடங்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரினால் பணி சற்றே தொய்வடைந்து 1945ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.  ஆனால், அங்குதான் ஒரு கசப்பான திருப்பம்.  
waterloo bridge pictures.jpg

பாலம் மீண்டும் திறக்கப்பட்ட பொழுது விழாவில் பங்கேற்ற இங்கிலாந்தின் துணை முதல்வர் ஹெர்பர்ட் மோரிசன் (Herbert Morrison) அவ்விழாவில் ஆற்றிய உரையில்,  பாலம் உருவானதில் பெண்களின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிடப் படவே இல்லை. ஆண்களுக்குப் பாராட்டு கூறப்பட்டது. அவ்வாறே எங்கும் இப்பாலக் கட்டுமானத்தில் மகளிர் பங்கேற்றதற்கான எந்த ஒரு வரலாற்றுக் குறிப்பும் இடம் பெறவில்லை.  கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனம் பீட்டர் லிண்ட் அண்ட் கம்பெனி  (Peter Lind & Company) அதை மூடிவிட்டு, தங்கள் வர்த்தகத்தையும் முடித்துக் கொண்டு நிறுவனத்தைக் கலைத்தவுடன் அதில் இருந்த ஆவணங்களும்  மறைந்து போயின.  

மக்கள் வழக்கில் மட்டும் காரணம் தெரியாத வகையில் லேடீஸ் பிரிட்ஜ்  என்ற பெயர் உள்ளதைக் கவனித்த வரலாற்று ஆய்வாளர் கிறிஸ்டின் வால் (Christine Wall) அருங்காட்சியகத்தின் (The Archives of The National Science and Media Museum) சேமிப்பில் இருந்த பழைய திரைப்படங்களையும் படங்களையும் தேடிப் பார்த்து,  பாலத்தின் பணியில் ஈடுபாடிருந்த சில பெண்களின் படங்களைக் கண்டெடுத்தார். அதில் பெண்கள் வெல்டிங் வேலை செய்யும் படங்கள் கிடைத்தன. அப்பெண்களில் ஒருவரின் பெயர் 'டாரத்தி' (Dorothy) என்றும் அடையாளம் காணப்பட்டது.  இதனால் லேடீஸ் பிரிட்ஜ்  என்று வாட்டர்லூ  பாலம் அழைக்கப்பட்ட காரணமும், அதன் கட்டுமானப் பணியில் பெண்கள் ஈடுபட்டு இருந்ததும் கட்டுக்கதையல்ல உண்மை என்பது நிறுவப்பட்டது. வரலாற்றில்  மறைந்து போன, மறைக்கப்பட்ட மகளிரின் பங்களிப்பு மீண்டும் வெளிப்பட்டது இப்பாலத்தின் சிறப்பு.

இதன் வரலாற்றுச் சிறப்பிற்கு மதிப்பளிக்க, பாலத்தில் இங்கிலாந்தின் வரலாற்றுச் சின்னம் பொறிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தின் பள்ளி பாடத் திட்டங்களில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதத் துறையில் பெண்களின் பங்களிப்புகள் (STEM-courses) மறைக்கப்படுவதைக் கண்டித்து இங்கிலாந்து பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்த பொழுது,  லேடீஸ் பிரிட்ஜ் பாலத்தில் பதாகைகளுடன் எதிர்ப்பைக் காட்டி அடையாளப்  போராட்டமாக ஊர்வலம் சென்றனர்.  

waterloo bridge art.jpg
புதியதாக எழுப்பப்பட்ட வாட்டர்லூ  பாலத்திற்கு  முன்பிருந்த பழைய பாலத்தை 1810  இல் ஜான் ரென்னி (John Rennie) வடிவமைத்திருந்தார். புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர் கிளாட் மோனெ (claude monet)  1903இல்  அப்பாலத்தை வரைந்த வண்ண ஓவியம் இன்று அனைவராலும் பாராட்டப்படும் ஓவியமாக விளங்குகிறது.  

waterloo bridge monet.jpg
அதிகாலை மூடுபனியின் இடையே பாலத்தின் தோற்றமானது  கனவுலகில் காணும் பாலம் போல அந்த ஓவியத்தில் தோற்றமளிக்கும்.  அதே பழைய  வாட்டர்லூ  பாலத்தின் அமைப்பின் அடிப்படையில்தான் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலம் கட்டப்பட்டது.


சான்றாதாரங்கள்:
1.  The original Waterloo Bridge
https://www.thehistoryoflondon.co.uk/the-original-waterloo-bridge/

2.  The story behind the iconic 'Ladies' Bridge' in London
https://www.ice.org.uk/news-views-insights/inside-infrastructure/the-story-behind-the-bridge-in-london-known-as-the-ladies-bridge


பெண்களால் கட்டப்பட்ட வாட்டர்லூ பாலம்
 — முனைவர் தேமொழி
https://archive.org/details/sakthi-october-2025/page/71/mode/2up
நன்றி: சக்தி அக்டோபர் 2025 (பக்கம் :72-77)


Reply all
Reply to author
Forward
0 new messages