சங்க இலக்கியங்கள் இத்தகைய ஆன்ம நேயத்திற்கு முதன்மை அளித்துப் பேசுகின்றன. இதற்குப் பல இலக்கியச் சுவை நிறைந்த சங்கப் பாடல்களைச் சான்றாகக் காட்ட முடியும். ஆன்ம நேயத்தை சங்ககால மக்கள் எவ்வாறு போற்றினர் என்பதை ஒரு நற்றிணைப் பாடல் வழி காணலாம்.
ஒரு சிறுமி. அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். கடற்கரை மணலில் "கீச்சுக் கீச்சுத் தாம்பலம்" என்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாள். அதாவது, ஒரு சிறுமி ஒரு புன்னைக் காயை எடுத்து மணலில் புதைத்துவிடுவாள். பிறகு அதன் மீது ஒரு அடி நீளத்திற்கு மணலால் அணைபோல மூடிவிடுவாள். இப்போது, மற்றொரு சிறுமி தன் இரு கை விரல்களையும் கோர்த்துக் கொண்டு, எந்த இடத்தில் காய் புதைக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் கைகளைப் பதித்துக் காய்களைக் கண்டு பிடிக்க வேண்டும். இதுதான் அந்த விளையாட்டு.

அப்புன்னனைச் செடியை அகழ்ந்து எடுத்துக் கொண்டுபோய்த் தன் தோட்டத்தில் வைத்து வளர்த்துக் கொண்டுவருகிறாள். புன்னைச் செடி வளர்ந்து மரமாகி விடுகிறது. அவளும் வளர்ந்துவிடுகிறாள். அவளுக்குத் திருமணம் நடைபெறுகிறது. அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அவளிடம், தான் விளையாட்டாக வைத்து வளர்த்த புன்னை மரத்தை அறிமுகம் செய்து வைக்கிறாள். என்னுடைய முதல் குழந்தை இப்புன்னை மரமே ஆகும். எனவே, இது உனக்கு அக்காவைப் போன்றது.
அன்னையின் சொல்லைக் கேட்ட அப்பெண் அப்புன்னை மரத்தை அக்காவாகவே நினைத்து அதன் மீது நேசம் கொள்கிறாள்.
ஒருநாள், அந்தப்பெண் அவளுடைய அன்பிற்குரிய காதலனை அந்த மரத்தின் கீழ் சந்திக்கிறாள். அவன் அவளுடன் அன்பு மொழி பேச முற்படுகிறான். அவள் பேச மறுக்கிறாள். அதற்குக் காரணம் சொல்கிறாள்.