சமணர்களுக்குரிய தீபாவளி — முனைவர் தேமொழி

16 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 29, 2025, 2:45:03 AM (3 days ago) Sep 29
to மின்தமிழ்
சமணர்களுக்குரிய தீபாவளி

— முனைவர் தேமொழி



"தீமையை அழித்து நன்மை வெற்றி கொண்ட நாளை இந்தியர்கள் தீபாவளி பண்டிகையாக விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்" என்ற ஒரு புரிதல் பன்னாட்டு அரங்கில்,  பரவலாக உள்ளது. உண்மையில் தீபாவளி சமணர்களின் பண்டிகை.  தீபாவளி  என்பது வாழ்ந்து மறைந்த சமண தீர்த்தங்கரர் மகாவீரரின் மறைவு நாளையொட்டி அவர் அளித்த அறிவொளியைப் பரப்பும் நாளாகச் சமணர்கள் தொன்று தொட்டுக்  கொண்டாடுகின்றனர் என்ற  'வரலாற்று அடிப்படை'  உள்ளதாக  வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சரவிளக்குகளும், கார்கால மாதமும், முன்னோர் வழிபாடு ஆகிய மூன்றையும்  அடிப்படையாகக்  கொண்டது  இந்த விளக்கேற்றும் பண்டிகை.

வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமண சமயத்தின் 24ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறு பெற்ற தினத்தை  விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடு நாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள்  (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி)  என்பது இவர்கள் முடிவு.

முற்றும் துறந்த துறவியான தீர்த்தங்கரர் மகாவீரர் அறவுரை ஆற்றிட பல இடங்களுக்கு எழுந்தருளுவார். இதை  ‘ஸ்ரீ விஹாரம்’ என்பர். சமண தீர்த்தங்கரர்கள் முற்றுமுணர்ந்த நிலையை அடைந்த பிறகு அவர்கள் எல்லாவுயிர்களுக்கும் அற வாழ்க்கையைப் பற்றிப் போதிக்கும் இடம் சமவசரணம் எனப்படும். 'சமவசரணம்' என்ற அறவுரை  நிலையங்களில்  மகாவீரர் எழுந்தருளி அறவுரை ஆற்றி மக்களை  வழி  நடத்துவார்.  அதன் மையப்பகுதியில் அரியணை, முக்குடை முதலான சிறப்புகளோடு கூடிய இடத்தில்  இருந்து அறவுரை வழங்குவார்.  மகாவீரர் தன் இறுதி நாளில் (அக்டோபர் 15,   527 பொ.ஆ.மு) பாவாபுரி நகரின் சமவசரணமத்தில் அறவுரை ஆற்றினார்.

தனது  ஆயுள் விரைவில் முடியும் என்று உணர்ந்து அறவுரை நிலையத்தை விட்டு அகன்றார். பாவாபுரியில் மிகவும் அழகான பெரிய தாமரைக் குளம் ஒன்று இருக்கின்றது (அத் தாமரைக் குளம் இன்றும் உள்ளது).  அக்குளத்தின் நடுவில்  உள்ள  அகன்ற கற்பாறையின் மீது நின்ற நிலையில் மகாவீரர் இரு நாட்கள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார் (தற்போது அப் பாறையின் மீது ஆலயத்தை உருவாக்கி மகாவீரரின் திருவடிகளை வைத்து  வழிபாடு  நடை பெறுகிறது).  மன்னன் மற்றும்  மக்கள் பகற்பொழுதில்  வந்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். மகாவீரர் வாழ்க்கையின்  இறுதிநாள் பின்னிரவில் அவருடைய ஆயுள் முடிவுற்ற இடம் பாவாபுரி தாமரைக்குளக்  கற்பாறை.  அவர் அன்று ஆன்ம விடுதலை பெற்று ‘பரிநிர்வாணம்’ என்ற பிறவாநிலையை எய்தினார் என்பது சமண நூல்கள் தரும் செய்தி. மறுநாள் காலையில் மக்கள் வழக்கமாக மகாவீரரை வழிபட வந்தபோது அவர் பரிநிர்வாணம் அடைந்துவிட்டதை அறிந்த மக்கள் எளிதில்  பெற  இயலா ஆன்ம  விடுதலை என்னும்  பிறவாநிலையை  எய்திய மகாவீரர் உலக உயிர்களுக்கு அறிவொளியை வழங்கியதை எண்ணி அவர் நினைவாக அனைவருடைய இல்லங்களிலும் வரிசையாகப் பல விளக்குகளை ஏற்றி மகாவீரரை தம் மனதில் இருத்தி வழிபட்டனர். இதுவே  நாடெங்கும் தீபாவளி விழாவாக இந்நாள்வரை ஒளிர்கிறது.  மகாவீரர் மறைந்தாலும், அவரது ஆன்மிக ஞானம் உலகின் இருளை நீக்கி ஒளியேற்றுகிறது என்பதை விளக்குவதற்காகத் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.  மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல்.
Jain_Diwali2.jpg
 
மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த ஆண்டிலிருந்தே சமணர்களிடம் தீபாவளிப் பண்டிகை ஓர் அறிவொளி நாளாக விளக்கேற்றும் முறை வழக்கத்தில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 'தீபாவளி' என்ற சொல்  முதன் முதலில்  எழுத்து வடிவில் கிடைப்பது  சமண நூலான ஹரிவம்ச புராணத்தில்தான். சற்றொப்ப 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர்,  கிபி 783-இல் சமஸ்கிருத மொழியில் சமண சமய திகம்பர ஆச்சாரியர் ஜினசேனர் (Acharya Jinasena)  இயற்றிய நூல் 'ஹரிவம்ச புராணம்'(Harivamsa Purana) ஆகும்.

           ததஸ்துஹ் லோகஹ் ப்ரதிவர்ஷம்-ஆதரத்
           ப்ரஸித்த-தீபலிகய-ஆத்ர பரதே .
           ஸமுத்யதஹ் பூஜயிதும் ஜினேஷ்வரம்
           ஜினேந்த்ர-நிர்வாண விபுதி-பக்திபக்

என்ற வரிகளில்  மகாவீரர் மறைந்த நாளில் பாவாபுரியில்  'திபாலிகாயா' (dipalikaya) என விளக்குகள் ஏற்றப்பட்டதாக ஆச்சாரியர் ஜினசேனர் என்பவர் தான் எழுதிய ஹரிவம்ச புராணம் நூலில் குறிப்பிடுகிறார். இந்த நூலில்தான் சமணர்கள் தீபாவளி  கொண்டாடியதாக 'தீவாளி' அல்லது 'தீபாவளி'  என்ற சொல்  முதன் முதலாக இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி என்ற குறிப்பு முதல் இலக்கியத் தடயமாகச் சமண சமயத்திற்கு எட்டாம் நூற்றாண்டிலேயே கிடைக்கிறது. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  வைதீகர் கொண்டாடும் தீபாவளி  பண்டிகைக்குக்  கிடைக்கும் சான்றுகள் மிகப் பிற்காலத்தவை.  அதன் தீபாவளி  கொண்டாடப் படுவதற்கான புரணக்கதைகளும்  இயற்கைக்கு  மாறான புனையப்பட்ட  கதைகள்.

சமண நாட்காட்டியின்படி, தீபாவளி அந்த ஆண்டின் கடைசி நாளாகக் கருதப்படுகிறது. இதற்கு அடுத்த நாள், சமணப் புத்தாண்டு தொடங்குகிறது. (மகாவீரர் ஆண்டு) மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாளில், அவரது தலைமை சீடரான கணாதர் கௌதம சுவாமிக்கு, முழு ஞானம் (கேவலஞானம்) கிடைத்ததும் தீபாவளியின்போது நினைவுகூரப்படுகிறது.

பொதுவாக சமணர் எனும் சொல் தமிழ்ச் சமணர்களைக் குறிக்கும். ஜைனம், ஆருகத மதம், அனேகாந்த மதம், ஸ்யாத்வாத மதம், நிகண்ட மதம் எனப் பலவாறாகச்  சமணம் குறிப்பிடப் படுகிறது (சமணமும் தமிழும்,  பக்கம்: 1- , கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி )   தமிழகத்தில் வாழும்   மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.  சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்). பொதுவாக தமிழ்ச் சமணர் அனைவரும் திகம்பர சமணத்தைப் பின்பற்றுபவர்.  

சமணர்களின் தீபாவளி கடைப்பிடிக்கப்படும் முறைகள் வைதீகர்  கொண்டாடும் தீபாவளி  நடைமுறை வழக்கத்திலிருந்து மாறுபட்டது. சமணர்களின் மிக முக்கியமான கொள்கையாக உயிர்களைத் துன்புறுத்தாமை (அகிம்சை) என்பதைக் கடைப்பிடிப்பதன் காரணமாக, பட்டாசுகள் வெடிப்பதால் பல உயிரினங்கள் துன்பத்திற்கு உள்ளாகும் என்பதால் தீபாவளியன்று அவர்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை. மகாவீரரின் துறவற வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக சமணர்களில் சிலர் தீபாவளியன்று நோன்பு மேற்கொள்வதுண்டு.

பல சமணர்களில் சிலர் மகாவீரர் முக்தி பெற்ற பீகார் மாநிலத்திலுள்ள பாவாபுரிக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு அங்கு வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். அடிப்படை நோக்கமாக, மகாவீரரின் ஆன்மிக வெற்றியைக் கொண்டாடும் ஒரு புனிதமான, அமைதியான பண்டிகையாக ஆரவாரமின்றித் தீபாவளியைச் சமணர்கள் கொண்டாடுவர். வெவ்வேறு பகுதியில் வாழும் சமணர்களிடமும், சமண சமயப் பிரிவுகளிடையேயும்,  பண்டிகை  வழக்கங்களில் வெவ்வேறு பாரம்பரிய முறைகளின் காரணமாகச் சிற்சில வேறுபாடுகளும் உண்டு.

 Pawapuri.jpg

சமணக் கோவில்களில் மகாவீரருக்கு, நிர்வாண லட்டு எனப்படும் ஓர் இனிப்பு வகை பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.  இது தமிழ்ச் சமணர்களுக்கு வடக்கிலிருந்து இங்கு வந்தவர்களிடமிருந்து வந்த  புது வரவு.   மகாவீரர் முக்தியடைந்த நாளில் சமணர்கள் ஆலயத்தில் (ஜினாலயம்)   மாவிளக்கேற்றி வழிபாடு இயற்றுவர்.  இதற்கென சிறப்பாகப்  பச்சரிசியைக் கழுவி  பதமாக உலர்த்தி இடித்து அந்த மாவைக்கொண்டு அகல்போன்ற விளக்கைச் செய்து, இதற்கென தனியே நெய்யைச் சேகரித்து வைக்கப்பட்ட தூய நெய்விட்டு விளக்கேற்றுவார். தற்போது மாவிளக்கு மற்றும் நிர்வாண லட்டு ஆகிய இரண்டும் வழிபாட்டில் இடம் பெறுகிறது.

மகாவீரரின் அறிவுரைகளை நினைவுகொள்ளும் விதமாக, வழிபாடுகளிலும், சிறப்புச் சொற்பொழிவுகளிலும் நிகழ்த்தப்படும்.
Jain_Diwali5.jpg
 
தமிழ்ச் சமணர்கள் தமிழகத்தின் ஜினாலயங்களில் (ஜினர் ஆலயம்) விடியற்காலையில் வரிசையாக  அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவர்.   மகாவீரர் வரலாற்றைப் படிப்பார்கள் (இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் வரலாற்றைக் கூறும் 'ஸ்ரீபுராணம்' எனும் நூலில் உள்ள மகாவீரர் வரலாறு படிக்கப் பெறும்).  இதுமட்டுமின்றி  சித்தபக்தி, பரிநிர்வாண பக்தி  எனும் போற்றிப் பாடல்கள் (தோத்திரங்கள்) ஓதப்படும். பாவாபுரியில் உள்ள தாமரைக் குளம் போன்ற  அமைப்பைச் சிறிய அளவில் அமைத்து அதில்  மகாவீரர் திருவடிகளை வைத்து  சில இடங்களில் வழிபடுவர்.  தமிழ்ச் சமணர்களும்  ஆடவரும்  மகளிரும் விரதம் ஏற்பர்.

மகாவீரர் முக்தி பெற்ற  நிகழ்வு முதன்மையானது என்றாலும், மற்றும் சில சமண சமூகத்தினர் அவருடைய தலைமைச் சீடரான கௌதம சுவாமி, மகாவீரரின் மறைவுக்குப் பின் ஞானம் பெற்றதையும் முக்கியமாகக் கருதுகின்றனர்.  சுவேதாம்பர பிரிவு சமணர்கள், மகாவீரரின் இறுதித் தவத்தை நினைவுகூரும் வகையில், தீபாவளிக்கு முந்தைய மூன்று நாட்கள் நோன்பு இருப்பதுண்டு.

Jain_Diwali.jpg
 
சுவேதாம்பர சமணர் ஆலயங்களில்  "உத்தரத்யாயன சூத்திரம்" போன்ற புனித நூல்களிலிருந்து சில பகுதிகளைப் படிக்கின்றனர்.  சுவேதாம்பர பிரிவு ஜைனர்களால் மகாவீரரின் பிறப்பு வரலாற்றைச் சொல்லும் கல்பசூத்திரம் என்ற புனித நூல் இந்த நாட்களில் வாசிக்கப்படுகிறது. மேலும், தீபாவளிக்குப் பிறகு ஐந்தாவது நாளில், ஞானபஞ்சமி ("அறிவின் ஐந்தாவது") என்ற விழாவைக் கொண்டாடி, கோவில்களில் வழிபாடு நடத்துகின்றனர்.

குஜராத் மற்றும் இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள பல ஜைன  (சமண) வணிகர்களுக்கு, தீபாவளி நிதி ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இவர்கள் புதிய கணக்குப் புத்தகங்களை வாங்கி, சோப்தா பூஜை எனப்படும் சடங்குடன் தங்கள் வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள். சிலர் சதர்மிக் வாத்சல்யா போன்ற சமூக சமையல் நிகழ்வுகளை நடத்தி, அனைவரும் ஒன்றுகூடி உணவைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

கொடை அளிப்பது, பரிவு ஆகியனவற்றுக்குத் தீபாவளி  நாளில் முக்கியத்துவம் அளிக்கப் படுவதால் சமூக சேவையாக உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது, ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளிப்பது  (ஆகார தானம்), குழந்தைகளுக்கான கல்விக்கு உதவுவது  (ஞான தானம்), நோயுற்றவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் இலவச மருந்துகள் அளிப்பது (ஔஷத தானம்),  உயிர் வாழும் உயிரினங்களைக் காப்பது மற்றும் ஆபத்தில் உள்ளவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது (அபய தானம்) போன்ற சமூக சேவைகளில் ஈடுபடுவதும் உண்டு.   உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கலைப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் சமண சமூகத்தினர் பங்கேற்று, உயிர்களைக் காப்பதற்கான உறுப்பு தானத்தின் தேவையை வலியுறுத்துகிறார்கள். தன்னலமற்ற தொண்டு செய்வதற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் நேரத்தையும், திறன்களையும் தானாக முன்வந்து செலவிடுவது ஒரு சிறந்த அறச் செயலாகக் கருதப்படுகிறது.

இறுதியாக, சமணர்களுக்குத் தீபாவளி என்பது வெளிச்சத்தின் திருவிழா மட்டுமல்ல, ஆன்மாவின் விடுதலைக்கான பாதையை ஒளிரச் செய்யும் ஆன்மிகப் பயணத்தின் ஒரு குறியீடு ஆகும்.  
lamps .jpg
 இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று  பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு  பண்டிகையாகத் தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது.  உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று  உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி 'இந்தியப் பண்டிகை என்றால் அது தீபாவளி' என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது.
---------------------------------


""சமணர்களுக்குரிய தீபாவளி""
— முனைவர் தேமொழி
https://archive.org/details/thamizhanangu-october-2025/page/1/mode/2up
நன்றி : தமிழணங்கு - அக்டோபர் 2025  (பக்க: 1-6)
Reply all
Reply to author
Forward
0 new messages