திராவிடம்....

454 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 7, 2021, 5:17:50 PM7/7/21
to மின்தமிழ்

திராவிடம்.... 

-- மா.மாரிராஜன்


திராவிடம் என்பது தமிழின் அடையாளப் பண்பாட்டுச் சொல்.... 
தமிழை மட்டுமே குறிப்பிடும் ஒரு சொல்.... 
வேற்று மாநிலத்தவர்கள் தமிழர்களைக் குறிப்பிடப் பயன்படுத்திய ஒருசொல்.... 
இப்பெருமைமிகு சொல்லை.... 
இன்றைய அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கொத்துக்கறி போடுகிறார்கள்.... 

ஏதோ கால்டுவெல் வந்துதான் இச்சொல்லைக் கண்டுபிடித்து தமிழர்களை வஞ்சித்தார் என்று ஒரு வாதம்!!  இச் சொல்லின் தோற்றம் எங்கே? எப்போது?

தமிழ் மொழியைத் தமிழ் என்று சங்க  இலக்கியங்கள் கூறும்.  ஆனால்  வடநாட்டார் எவ்வாறு கூறுவார்கள்? 
சிறப்பு "ழ" தமிழில் மட்டுமே உண்டு. ஆகவே அவர்கள் தமிழை... 
தமிள, தமிட, த்ரமிள, த்ராவிட  என்றார்கள்.  

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் இருந்தது.  அது தமிழை மட்டுமே குறித்தது. பழம் பெருமைச் சொல்..
ஆரியம் என்னும் சித்தாந்த கோட்பாட்டிற்கு எதிர்வினையாற்ற பெரியார்.  திராவிடம் என்னும் சித்தாந்தத்தை முன் மொழிந்தார்.  இந்தத் திராவிடம் என்னும் சொல் தெலுங்கரையோ கன்னடரையோ குறிக்கவில்லை. தமிழரை மட்டுமே குறித்தது.

இன்றும் எந்த ஒரு கன்னடரோ, தெலுங்கரோ, மலையாளியோ  தம்மைத் திராவிடர் என்று கூறுவதில்லை.  ஆனால், தமிழர்கள் மட்டுமே தன்னை ஒரு திராவிடர்  என்று  கூறுவார்கள்.  இவ்வாறு கூற தமிழருக்குத்தான்  உரிமையும் உண்டு, பாரம்பரியப் பெருமையும் உண்டு.  தென்னகத்து மொழிகள் என்ற பொதுப்பிரிவில் இம்மூன்றும் தமிழுடன் சேர்ந்து திராவிட மொழிகள் என்றழைக்கப்பட்டது.  ஆனால், திராவிடம் என்பது தமிழ் மட்டுமே, எப்போதிருந்து..?

தேவநேயப் பாவாணர் கூறுகிறார்;
வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ர ப்ர எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். 
எ-டு: படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம். இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம், எனத் திரிந்தது. 
ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது (திராவிடத்தாய் - பக்கம் 8). 

mari6.jpeg

மேலும் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.

தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும்.  தமிழம் என்பது தமிள - தவிள - தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர்  கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர்.  எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை (ஒப்பியன் மொழி - பக்கம் 28).

mari5.jpeg
 
ஆக திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் ஒரு சொல்.... 
திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு; மற்றும் தமிழ் மொழியை வேறு இனத்தவர்கள் எவ்வாறு அழைத்தார்கள்? 
இதன் பழமையும் பெருமையும் எங்கெல்லாம் உள்ளது?
வரலாறு மற்றும் தொல்லியல் சான்று என்ன?
ஒரு நீண்ட பட்டியலே உள்ளது .... 

அத்திக்கும்பா கல்வெட்டு, ஒரிசா புவனேசுவரம் அருகே உதயகிரி குடவரை ஒன்றில் அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்டது  அத்திக்கும்பா கல்வெட்டு. அக்கல்வெட்டில்  கலிங்க அரசன் காரவேலன் பற்றிய சாதனைகளைக் கூறும்போது கல்வெட்டின் 11வது வரி.... 

Hathigumpha inscription.jpg
mari1.jpeg
"ஜநஸத பாவநம் சதேரஸஸ ஸதகதம் பித்தி தமிர தேஹ ஸங்காதம்"

தன் நாட்டுக்குத் தொல்லையாக இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை ஒழித்தான்.
(Epigraphia Indica. Vol. 20.No. 7 )

'தமிழ்' என்னும் சொல்லை 'தமிர' என்று கல்வெட்டுக் கூறுகிறது.  தமிழ் மொழி பற்றி பிறமொழி ஆவணங்கள் குறிப்பிடும் காலத்தால் மிக மூத்த தொல்லியல் சான்று இது.  இக்கல்வெட்டின் காலம் கி.மு.2.

mari3.jpeg

பாண்டியன் பராந்தகன் வீரநாரயணின் தளவாய்புரம் செப்பேடு.  காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு.  செப்பேட்டின் வாசகங்களை இயற்றிய ஒருவரை  வடமொழிப்பகுதி 'பாண்டிய த்ரமிடர்' என்கிறது. அவரையே தமிழ்ப் பகுதி தமிழ் பாண்டியன் என்கிறது. ஆக,  வடமொழியில் த்ரமிட என்றால் தமிழ் என்பதே உறுதியாகிறது.

mari2.jpeg

mari4.jpeg

அதே செப்பேட்டில் வாசகங்களைச் செதுக்கிய தச்சரை வடமொழியில் 'திரமிளா பரணன்' என்றும், தமிழ்ப்பகுதியில் தமிழாபரணன் என்றும் செப்பேடு கூறுகிறது (பாண்டியர் செப்பேடுகள் பத்து) 

ஆக, த்ரமிட, திரமிளா  என்னும் வடமொழிச் சொற்கள் தமிழ் மற்றும் தமிழர்களையே குறிப்பிடுகிறது.

வடமொழியில் தமிழ் எவ்வாறு  குறிக்கப்பட்டது என்பதை  ஒரு சில தரவுகள் மூலம் பார்ப்போம்..

1.காமிகாகமம்
என்னும் ஆகம  நூல்..
அர்ச்சனா விதி படலம்...

தினசரி பூஜையைத் திராவிட பாஷையிலும்( தமிழ்)  அதன்பிறகு சமஸ்கிருத மொழியிலும், பிறகு மற்ற மொழிகளிலும்  பாடல் ஆடல் முதலியவற்றை நிகழ்த்த வேண்டும்.
"ஊர்த்வம் த்ராவிட பாஷாங்கம் கானம் ந்ருத்தயுதம் து வா
ஸம்ஸ்க்ருதாத் அனபப்ரம்சம் நானா ஸ்வர ஸமன்விதம்
யத் அஷ்டாதச பாஷோத்தம் கானம் வா பரிகல்பயேத்"

ஆகமநூல் குறிப்பிடும் திராவிட பாஷா என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது..

2. சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பௌத்த நூலான  'லலிதாவசுத்திர' என்னும் நூல் குறிப்பிடும் 'திராவிட லிபி' என்பது  தமிழ் எழுத்துகளைக்  குறிக்கிறது.

3. சமண இலக்கியமான சமயவங்க சுத்தா என்னும் நூல் 18 வகை எழுத்துருக்களைக் குறிக்கிறது. இந்நூல் குறிப்பிடும் தாமிலி என்னும் எழுத்துரு தமிழைக் குறிக்கிறது.

4. பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்னும் நூலில் தமிழைக் குறிக்க  "தமிள" என்னும் சொல் பயன்பட்டுள்ளது.

5.  ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்ட ஸ்வேதாம்பர சைனர் என்னும் நூலில் "தமிட" என்னும் சொல் தமிழைக் குறிக்கிறது. 

6. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்னும் முனிவர் மதுரையில் ஒரு சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் பெயர் திராவிட சங்கம். தமிழ்ச் சங்கம் என்பதை வடமொழியில் 'த்ராவிடா  ஸங்கா' என்கிறார்.

7. கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி தூண் கல்வெட்டு தமிழர்களை 'த்ரமிள' என்கிறது.

8. சைனக் கணங்கள் என்னும் நூல் தமிழை 'த்ராவிள' என்கிறது.

9. தமிழ் திருவாய்மொழியின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தமிழ் 'த்ரமிட' என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.

10. கி.பி. 3 ஐ சேர்ந்த பௌத்த மகாயான லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற மொழிகளில் ஐந்தாவது மொழியாக "த்ராவிடி" என்னும் மொழி கூறப்படுகிறது. இது தமிழையே குறிக்கிறது.

11. கி.பி.6. ஆம் நூற்றாண்டு. வராகமிகிரர் எழுதிய நூலில் தமிழை "த்ரவிட" என்று கூறுகிறார்.

12. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. குமரிலப்பட்டர் எழுதிய தந்திரவர்த்திகா என்னும் நூல் தமிழ் மொழியை, திராவிடாந்திரா பாஷா என்கிறது.

13. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. பட்டபாணான் எழுதிய காதம்பரி என்னும் உரைநடை காவியத்தில் ஒரு பெண் காளிகோவிலில் ஒரு தமிழ் துறவியைச் சந்தித்ததை, "ஜரத் த்ரவிட தார் மிகஸ்ய" என்பதில் 'த்ரவிட' என்பது தமிழைக் குறிக்கிறது.

14. ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்கிறார்.

15. ஆழ்வார்களின் பாடல்களில் தமிழ் பாசுரங்களை  "திராவிட வேதம்" என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர்.

16. கி.பி.10. புலவர் நாகவர்மா எழுதிய சாந்தோம்பதி என்னும் கன்னடக் கவிதை நூலில் தமிழை " திராவிடந்திர பாஷா " என்கிறார். ஒரு கன்னட நூல் தமிழ் மொழியை இவ்வாறு கூறுகிறது.

17. கி.பி.13 பால்குரி சோமநாதப் புலவர் எழுதிய தெலுங்கு காவிய நூலான பண்டீதராத்ய சரிதம் என்னும் நூலில்,  "அருதெந்னட்லியம் பரவ தேசம்பு வருசயி த்ராவிட பாஷா சாங்கமுக" என்று ஸ்ரீ சைலத்துக்குச் செல்லும் தமிழகப் பக்தர்கள் தமிழ் மொழியில் பாடிக்கொண்டு சென்றார்கள். ஒரு தெலுங்கர், தான் எழுதிய தெலுங்கு மொழியில் தமிழைத் திராவிடா பாஷா என்கிறார்.

18. கி.பி.14.ஆம் நூற்றாண்டில் கங்காதேவி எழுதியது 'மதுரா விஜயம்' என்னும் சமஸ்கிருத நூல். தமிழகத்தை 'த்ராவிடதேசம்' என்று கூறுகிறது.  கங்காதேவி ஒரு தெலுங்கர். அவர்  தமிழகத்தைத் திராவிட தேசம் என்கிறார்.

19 . கி.பி.10  ஆம் நூற்றாண்டு சமண ஆகம நூலான சுருதாவதாரம் என்ற நூலில் அதன் ஆசிரியர்,  பூதபலி என்பவரைக் குறிப்பிடும்போது "தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ராவிட தேஸான்",  அதாவது, திராவிட தேசமான மதுராவிலேயே (மதுரை) பூதபலி தங்கி இந்நூலை இயற்றினான் என்கிறார். மதுரையை  த்ராவிட தேசம் என்று நூல் தெளிவாகக் கூறுகிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மதுரையை திராவிடதேசம் என்றழைக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழி இலக்கியங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் தமிழர்களைத் திராவிடர் என்றுதான் குறிப்பிட்டனர். திராவிடம் என்பது தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகொண்ட ஒரு சொல். இதை ஏற்காதவர்கள் தமிழின் வரலாற்றுப் பெருமையும் ஏற்க மறுக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய வரலாற்றுச் சொல்லைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது தமிழன் ஒவ்வொருவரின் கடமையாகும்.


References:
1.தேவநேயப் பாவாணர்; திராவிடத்தாய்.
2. ப.சண்முகசுந்தரம். உலகமொழிகளில் தமிழ்ச்  சொற்களும் இலக்கணக் கூறுகளும்.
3. Epigrphia Indica Vol. 20.
4. பாண்டியர் செப்பேடுகள் பத்து.
5. தொல்லியல் ஆய்வாளர் சு.இராஜவேலு உரையாடலில்  - திராவிடக்குறிப்பு

---

தேமொழி

unread,
Sep 2, 2021, 11:41:44 PM9/2/21
to மின்தமிழ்
source  -  https://www.facebook.com/kuganathanVE/posts/901375550432089



`திராவிடம்` என்றால் என்ன?

`திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது, `திராவிடம்` என்பது தென்னிந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைக் குறிப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இச் சூழ்நிலையில் உண்மையில் `திராவிடம்` என்பது என்ன? அச்சொல் வரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

`#திராவிடம்` என்பது உண்மையில் தமிழினைக் குறிக்கும் ஒரு திசைச் சொல்லாகும். எளிமையாகச் சொன்னால் தமிழினை ஆங்கிலத்தில் `தமிழ்` என ஒலிக்க முடியாமல் `Tamil ` என்கின்றோம் அல்லவா, அது போன்று தமிழ் குறித்த ஒரு திசைச் சொல்லே திராவிடமுமாகும். `தமிழ்`என்பது ஒரு இயல்புச் சொல் (Endonym ) , அது குறித்த ஒரு திசைச் சொல்லே (Exonym ) `திராவிடம்` என்பதுமாகும். இதோ பாவாணர் குறிப்பிடுகிறார்:
"இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்' என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே” [சான்று: ஒப்பியன் மொழி நூல், பக்கம் 15].

திராவிடம் என்பதனை முழுமையாக அறிந்துகொள்ள நாம் அதற்கு எதிரான `#ஆரியம்` என்ற சொல்லினையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சிந்து வெளி நாகரிக வீழ்ச்சிக்குச் சற்றுப் பின்னரான காலப் பகுதியில் கைபர் கணவாயினூடாக கால்நடை மேய்ப்போராக நாவலந்தேயத்தினுள் (இன்றைய இந்தியப் பெரு நிலப் பரப்பு /துணைக் கண்டம்) வந்து சேர்ந்தவர்களே ஆரியர்கள் ஆவார்கள். ஆரியர் என்ற சொல் சமற்கிரத மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய ( arya ) எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாகக் கருதப்படுகிறது { ஆர்ய என்ற சொல் அய்ரிய என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும்}. ஆரியர் ( Arya ) என்ற சொல் ரிக் வேதத்தில் 36 தடவைகள் இடம்பெற்றுள்ளது. ரிக் வேதத்தில் `மதக் கருத்துகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்போர்/ உயர்ந்தோர்` என்ற பொருளில் `ஆரியர் ` என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ரிக் வேத காலத்தில் சைவ-வைணவ மதங்களோ/ இந்து என்ற சொல்லோ இல்லை. அப்போதிருந்தது எல்லாம் `பிராமணியம்` என்ற மதமே { இதனைச் சங்கரச்சாரியான சரசுவதி சுவாமிகள் முதல் சோ வரைக் கூறியுள்ளார்கள்}. எனவே பிராமணியத்தினை உயர்வாகக் கடைப்பிடிப்பவர்களையே `ஆரியர்கள்` என ரிக் வேதம் கூறுகின்றது. நமது பழந் தமிழ் நூல்கள் `ஆரியர்` யார் என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றன.
................................................................................................
“ஆரியர் அலற தாக்கி பேர் இசை
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து
வெம் சின வேந்தரை பிணித்தோன்
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே”
............................................................................................................................
மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (396:16–19 ) ஆரியர்கள் அலறும்படி அவர்களைத் தாக்கி, இமயமலையின் மீது வளைவான வில்லினைப் பொறித்த செய்தி கூறப்படுகின்றது. இப் பாடலின் படி இமய மலைச் சாரலில் அப்போது ஆண்டவர்கள் ஆரியர் எனக் குறிப்பிடப்படுகின்றார்கள்.
..........................................................................................................................
“மாரி அம்பின் மழை தோல் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை
ஆரியர் படையின் உடைக என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே”
.......................................................................................................
மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (336: 20–23) சோழரது விற்படை செறிந்துகிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல்காட்டில் வந்தடைந்த ஆரியரின் படையைத் தோற்கடித்த செய்தி சொல்லப்படுகின்றது. இன்னமும் பல சங்க காலப் பாடல்களில் வடக்கேயிருந்தவர்களை ஆரியர் எனக் குறிப்பிடப்படுவதுடன், தமிழருக்கும் ஆரியர்களுக்குமிடையே தீராத பகை காணப்பட்ட செய்திகளும் கூறப்படுகின்றன { நற்றிணை170, குறுந்தொகை 7, பதிற்றுப்பத்து 11, அகநானூறு 276, , அகநானூறு 398, ..}. ஆரியர் மரபணுக்களினடிப்படையில் அடையாளப்படுத்தப்படுவதனைப் பல்வேறு ஆய்வுகள் வேறு உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய `ஆரியர்` அல்லாதோரைக் குறிக்கவும் `திராவிடர்` என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலத்தில் `திராவிடம்` என்ற சொல்லினை ஒப்பியல் நோக்கில் முதன் முதலில் குறிப்பிட்டவர் கால்டுவெல் (Robert Caldwell ) அடிகள் ஆவார். அவரது காலத்தில் சங்க இலக்கியங்களோ/ தொல்காப்பியமோ கண்டுபிடிக்கப்பட்டிருக்காமையால், அவர் தவறாகத் `திராவிடம் என்ற சொல்லே தமிழாகத் திரிந்தது` எனக் கூறியிருந்தார். அதனைக் கால்டுவெல் அடிகளுக்குரிய மரியாதையுடன் மறுத்துத் தமிழிலிருந்தே `திராவிடம்` என்ற சொல் திரிந்தது என நிறுவியவர் பாவாணரே ஆவார். பாவாணர் `திரவிடத்தாய்` எனும் நூலில் எட்டாம் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருப்பார்.
தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம்
"பவளம்" என்பது "ப்ரவளம்" என்று வட மொழியில் திரிந்தது போலவே தமிழம்(தமிழ்) என்னுஞ் சொல் த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம் என்றாகி, பின் தமிழில் வந்துவழங்கும் போது மெய் முதலெழுத்தாக விதி இல்லாததால் திரவிடம் >> திராவிடம் என்று தமிழில் வழங்கும் என்றும், ஆகையால் தமிழினின்றே "திராவிடம்" எனுஞ் சொல் தோன்றிற்று"
:சான்று- திராவிடத்தாய், பக்கம் 8.

பாவாணர் இவ்வாறு அழுத்தம் திருத்தமாகக் கூறிய முதல் அறிஞர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் அதற்கு முன்னரே சில கருத்துகள் தமிழும் திராவிடமும் ஒன்றே எனக் காட்டும்.
தமிழ் குறித்த திசைச் சொல்லே `திராவிடம்` என்றோம். தமிழ் குறித்த திரிபுச் சொல் முதன் முதலில் கிடைப்பது `#அத்திக்கும்பா` கல்வெட்டில் (Hathigumpha inscription, "யானைக்குகை" கல்வெட்டு )ஆகும். அத்திக்கும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டில் {BCE 2nd cent} பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். இக் கல்வெட்டின் 13 வது வரியில் 113 ஆண்டுகள் 1300 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலிருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியினை காரவேலன் முறியடித்த செய்தி கூறப்படுகின்றது. இங்கு தமிழர் கூட்டணியினைக் குறிக்கும் திரிபுச் சொல்லாக `த்மிர தேக சங்காத்தம் ` {Dramira } பயன்படுத்தப்படுகின்றது. அதே போல கிரேக்கக் குறிப்புகளில் சங்ககாலத் தமிழகம் `Damirica ` எனக் குறிக்கப்படுகின்றது. இவைதான் தமிழ் குறித்துக் கிடைக்கும் முதலாவது திரிபுச் சொற்களாகும். `தமிழ்` என்று சொல்ல முடியாத பிற மொழியிலாளர்கள் திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருந்தார்கள். அவற்றினை எல்லாம் பொதுமைப்படுத்திய ஒரு திசைச் சொல்லே `திராவிடம்` {Dravida } எனலாம்.

பவுத்த நூலான லலிதாவசுத்திர ` Lalitavistara` ( translated into Chinese in 308 CE) தமிழ் எழுத்துகளை `#திராவிட_லிபி` ( Dravidalipi ) என அழைக்கின்றது. இதுவே `திராவிடம்` என்ற சொல் தமிழினைக் குறிப்பதற்கான நேரடியான முதலாவது சான்றாகும். ஏறக்குறைய அதே காலப்பகுதியினைச் சார்ந்த சமயவங்கா ("Samavayanga Sutta" )என்றொரு சமண நூலில் அக்காலத்தில் வழக்கில் இருந்த 18 மொழிகளின் பட்டியலில் சமசுக்கிருதம் குறிப்பிடப்படவில்லை. அதில் `தாமிலி` / `தமிழி` ( Damilli ) ஒரு எழுத்து வடிவமாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனாலேயே பிற்காலத்தில் கமில் சுவெலபில் ( Kamil Zvelebil ) என்ற அறிஞர் `தமிழ்` என்ற சொல்லைக் குறிக்கும் ஒத்த சொற்களாக `தமிழி `, `திராவிடம்` என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். 

மேலே குறிப்பிட்ட நூல்கள், கல்வெட்டு என்பன பிராகிரத மொழியிலேயே இடம் பெற்றிருந்தன. எனவே `திராவிடம்` என்பது சமற்கிரதச் சொல் அன்று என்பது தெளிவாகின்றது.

காலத்தால் திராவிடத்துக்கான அடுத்த சான்றாக, சமண முனிவரான வச்சிரநந்தி அவர்கள் பொது ஆண்டு 470 இல் {CE470 } ஏற்படுத்தப்பட்ட `#திராவிட_சங்கம்` என்பதனைக் கூறலாம். வச்சிர நந்தி நிறுவிய சங்கத்திலும் தமிழ் சார்ந்த நூல்கள் இயற்றப்பட்டிருந்தன (இவை சங்க கால நூல்களன்று, அவற்றுக்குப் பின்னரானவை), இதனால் இந்த திராவிட சங்கத்தினை `தமிழ்ச் சங்கம்` என்றும் அழைப்பர் [சங்ககாலச் சங்கம் வேறு, இது வேறு]. எனவே வச்சிரநந்தி நிறுவிய சங்கமும் `தமிழ்ச்சங்கம்`, `திராவிட சங்கம்` என இரு பெயர்களிலும் அழைக்கப்பட்டமையிலிருந்து; தமிழ், திராவிடம் ஆகிய இரண்டும் ஒன்றே என்பது தெளிவாகின்றது. இதற்குப் பின்னரான காலத்துக்கு வருவோம். குமாரிலபட்டர் (Kumārila Bhaṭṭa} என்பவர் 7ம் நூற்றாண்டில் எழுதிய `மீமாம்சா சுலோக வார்த்திகம்` என்ற நூலில் திராவிடம் என்ற சொல் தமிழைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு பாவாணர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. தெலுங்கு ஒழித்த ஏனைய மொழிகளையே (கன்னடம்,துளு,தமிழ் ஆகியவற்றினையே, மலையாளம் குமாரிலபட்டர் காலத்தில் பிரிந்து போகவில்லை) குமாரிலபட்டர் `திராவிடம்` எனக் குறிப்பிடுகின்றார் எனப் பாவாணர் கூறுகின்றார். இங்கு தெலுங்கு தமிழிலிருந்து பிரிந்து அதிக தூரம் சென்றமையாலேயே பாவாணர் தெலுங்கினைத் திராவிடத்துக்குள் உள்ளடக்கவில்லை. எனவேதான் திராவிடம் என்பது தெலுங்கினைக் குறிப்பது என்ற பொய்ப் பரப்புரை இங்கு அடிபட்டுப் போகின்றது. 

“தெலுங்கினையும் சேர்த்துக் குறிக்க ` ஆந்திர திரவிட பாஷை' என்னும் இணைமொழிப் பெயரால் அழைத்தனர் வடநூலார்” எனவும் பாவாணர் #திராவிடத்தாய் எனும் நூலின் 15வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார் {ஆந்திர= தெலுங்கு, திராவிட= தமிழ்+கன்னடம்+துளு}.

அடுத்ததாக திருஞான சம்பந்தரினைத் `#திராவிட_சிசு` என ஆதிசங்கரர் அழைத்த நிகழ்வினைக் குறிப்பிடலாம். இதனைக் கொண்டே , திராவிடர் என்பது தென்னிந்திய பிராமணரைக் குறிக்கும் எனச் சிலர் சொல்லுகின்றார்கள்; அது உண்மையில் தவறு. சம்பந்தர் தமிழில் பாடி இறைவனை வழிபட்டிருந்தமையாலும், உருவ வழிபாடு செய்தமையாலும்தான் ஆதிசங்கரர் அவரினைத் `திராவிட சிசு` என அழைத்திருந்தார். எனவே இங்கும் `திராவிட` என்ற சொல் தமிழ் குறித்தே பயன்படுத்தப்படுகின்றது. தாயுமானவர் பாடல் ஒன்றினைப் பார்ப்போம்.
......................................................................................
"வடமொழியிலே
வல்லா னொருத்தன் வரவுந் திராவிடத்திலே
வந்ததா விவகரிப்பேன்;
வல்ல தமிழறிஞர் வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன்"
...........................................................................................................
மேலுள்ள பாடலிலும் தமிழ், திராவிடம் ஆகிய இரண்டும் ஒன்றே என்ற பொருளினைக் காணலாம். 

சிங்களத்தில் `திராவிட பாஷா` எனத் தமிழ் மொழியினை அழைப்பார்கள். எனவே `திராவிடர்` என்பது தமிழரையே ஆதி காலத்தில் முற்று முழுதாகக் குறித்தது. இன்று தமிழர் உட்பட மலையாளிகள், தெலுங்கர், கன்னடர் போன்ற பிற திராவிட மொழியினர் எல்லோரையும் குறிப்பிட்டாலும்; இன்றும் சிறப்பாகத் தமிழரையும் குறிக்கும் { காலப்போக்கில் பிற மொழிகளும் தமிழிலிருந்து பிரிந்துவிட்டமையால் இன்று தெலுங்கும் திராவிடம் என்ற வகைக்குள் வந்துவிட்டது}.

பின்னரான ஆங்கிலேயர் ஆட்சிக் காலப்பகுதியில் பார்ப்பனர்கள் பிறரினைச் `சூத்திரர்` என இழிவு செய்தமையால், அவர்களது ஆதிக்கத்தினை எதிர்க்க `பார்ப்பனரல்லாதோர்` என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் `பார்ப்பனரல்லாதோர்` என்ற எதிர்மறைச் சொல்லுக்குப் பதிலாகத் `திராவிடர்` என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மாற்றத்தினை அயோத்திதாசப் பண்டிதர், பெரியார் போன்றோர் தொடக்கி வைத்திருந்தார்கள். இப்போது `திராவிடர்`என்பது தமிழர் உட்பட்ட தென்னிந்தியர் எனப் புவியியல்ரீதியிலும், மொழிக் குடும்பம் என்ற வகையிலும், சமூக நீதிச் சொல் என்றும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டாலும்; அதன் அடி வேர் தமிழேயாகும். மேலும் அச் சொல் மேலே குறிப்பிட்டவாறு ஒரு வரலாற்றுப் பெருமை மிக்க ஒரு திசைச் சொல்லேயாகும்.

#முடிவாக, `திராவிடம்` என்பது `தமிழ்` என்பதன் ஒரு திசைச் சொல்லாகும். எனவே குறுகிய வாக்குப் பொறுக்கும் அரசியலுக்காகத் தமிழரை `டம்ளர்` எனக் கொச்சைப் படுத்துவதும், திராவிடம் என்பதனை `திருட்டுத் திராவிடம்` என்பதும் எமது கண்ணை நாமே குத்துகின்ற செயலினை ஒத்த செயலாகும்.


KJ

unread,
Sep 3, 2021, 8:57:06 AM9/3/21
to மின்தமிழ்
இங்கே தமிழைத் "திராவிடம்" என்று அழைக்கும் எடுத்துக்காட்டுகள் எல்லாமே பிறமொழியாளர்களின் உபயோகம். 
தமிழர் எங்கள் மொழியைத் திராவிடம் என்று அழைக்கவில்லை.

பிறமொழியாளர்கள் சங்கத் தமிழ் நூல்களைத் தொகுத்து திராவிடக் களஞ்சியம் என்று பெயரும் வைக்கட்டும், அது அவர்கள் மொழியில் இருக்கும் ஒரு இலக்கிய மொழி பெயர்ப்பாக இருக்கும். நாம், எமது நூல்களைத் தொகுக்கும் முயற்சி எடுக்கும் போது, இருக்கும் பெயரை விட்டு விட்டுப் புதிதாக யாரோ எம்மை அழைக்கும் சொல்லைக் கையாள்வது கேலிக்குரியது.

"சிங்களத்தில் `திராவிட பாஷா` எனத் தமிழ் மொழியினை அழைப்பார்கள்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களத்தில் தமிழை "தெமில" என்று தான் அழைப்பார்கள்.

தேவையில்லாத ஒரு சொற் பிரயோகத்தைக் கொண்டு வந்து விட்டு ஏன் இவ்வளவு ஆய்வுகளும், சான்றுகளும்?

திராவிட மொழிக் குடும்பம் என்பது, ஒரு குறிப்பிட்ட இயல்புகளைக் கொண்ட மொழிகளைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர். இந்த மொழிக்குடும்பத்தில், தென்னிந்திய மொழிகள் உள்ளன. சில அறிஞர்கள், பின்லாந்து மொழி, கொரியன், சில வட இந்திய மொழிகள் என்பனவும், திராவிடக் குடும்ப மொழிகள் என்று கூறுவார்கள்.

ஆக, திராவிடம் என்பது
1. மொழிக் குடும்பம்
2. தமிழரல்லாதோர் பண்டைக்காலத்தில் தமிழரை(தமிழை) அழைத்த பெயர்

நம்மை நாம் தமிழர் என்போம், எமது மொழி தமிழ்.

தற்கால மொழிகளில், தமிழ் என்பதை எப்படி அழைக்கிறார்கள் என்று ஆய்வு செய்து, பெயர் சூட்டலாமா? Tamil, Tamol, Tamilu, Themila, .......


Jeyapal
Reply all
Reply to author
Forward
0 new messages