தமிழ் அறிவோம்!—ஆ.தி.பகலன்

19 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 8, 2025, 5:51:45 PM (6 days ago) Nov 8
to மின்தமிழ்
" தங்கக்காசில் இடம்பெற்ற திருவள்ளுவர் "

valluvar coin.jpg
வணிகம் செய்யவும், சமயம் பரப்பவும் வந்த அயல்நாட்டினரில் சிலர், தமிழின் அருமை பெருமைகளை அறிந்து தமிழைப் போற்றி வளர்த்தனர். அவர்களில் ஒருவர்தான் எல்லீசு. அவர்  கி.பி.1796 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியில் எழுத்தராகச் சேர்ந்து , படிப்படியாக உயர்ந்து 1810 இல் சென்னையின் ஆட்சியர் ஆனார். தமிழை நன்கு கற்று செய்யுள் எழுதும் அளவுக்குத் தனது மொழி ஆற்றலை வளர்த்துக் கொண்டதுடன், தமிழ் மீது கொண்ட காதலால் தனது பெயரை எல்லீசன் என தமிழ்ப்படுத்திக் கொண்டார்.  இவர் தமிழ் கற்ற காலத்தில் திருக்குறளைக் கற்றறியும்  வாய்ப்பு கிடைத்தது. திருக்குறளைக் கற்ற நாள்முதல் திருவள்ளுவரின் தொண்டராகிவிட்டார் எல்லீசு. இரண்டே இரண்டு அடிகளில் இந்த மனிதர் எவ்வளவு அரிய பெரிய கருத்துகளை எல்லாம் சொல்லிவிட்டார் என்று வியந்தார்.  இதை ஆங்கிலேயர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1812இல்  ஆங்கில மொழிபெயர்ப்பில் அவர்  வெளியிட்ட  அறத்துப்பால்தான், திருக்குறளின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகும். திருக்குறளுக்கு ஓர் எளிமையான விளக்கவுரையையும் எழுதினார்.

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது நாணயச்சாலையின் தலைவராகவும் இருந்ததால், திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து அவர் உருவம் பொறித்த தங்கக் காசுகளை வெளியிட்டார். இங்கிலாந்து மகாராணிகளான விக்டோரியா; எலிசபெத் ஆகியோர் உருவங்கள் மட்டுமே பதித்து வரும் அந்தக் காலக் கட்டத்தில் திருவள்ளுவர் உருவம் பதித்த தங்கக்காசுகளை வெளியிட்டு பெரும் புரட்சி செய்து இருக்கிறார்.  இவர் மட்டும் இந்தியாவின் ஆளுநராக இருந்திருந்தால் இந்தியா முழுவதும் வெளியிடப்படும் காசுகளில் எல்லாம்  திருவள்ளுவர் உருவத்தையே பொறித்திருப்பார்.  இந்தத் தங்கக்காசின் ஒரு புறம் திருவள்ளுவரின் உருவமும், மற்றொரு புறம் விண்மீனும் பொறிக்கப்பட்டுள்ளது. தங்கக்காசின் முன்புறத்தில் ஒரு பீடத்தின் மீது தியான நிலையில் திருவள்ளுவர் அமர்ந்திருக்கிறார்.  வலக்கை தொடை மீதும், இடக்கை ஒரு சுவடியை ஏந்தியும் உள்ளது.  இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும் , இடப்பக்கத் தோளில் மடித்துப் போட்ட துண்டும் அணிந்துள்ளார். மழித்த தலை; தலைக்கு மேலே ஒரு, குடை. பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரம் காணப்படுகிறது.  மொத்தத்தில் முனிவர் தோற்றத்தில் வள்ளுவரை வடிவமைத்திருந்தார் எல்லீசன்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ ஆகிய 7 மொழிகளும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், அம்மொழிக் குடும்பத்துக்குத் "தென்னிந்திய மொழிக் குடும்பம்"  எனவும் பெயரிட்டார். தமிழில் இருந்துதான் இம்மொழிக் குடும்பம் தோன்றியது என்றார். வட மொழிச் சேர்க்கையால் தமிழ்மொழி தோன்றவில்லை என முதன்முதலில் கூறியவரும் இவரே.
எல்லீசுக்குப் பிறகே அயர்லாந்து சமயத் துறவியான கால்டுவெல் தனது "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) " என்ற நூலில் தென்னிந்திய மொழிக் குடும்பத்துக்கு "திராவிட மொழிக் குடும்பம்"  எனப் பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  
இம்மொழிகளுக்கு தமிழ்தான் மூலம் என்பதால் இம்மொழிக் குடும்பத்தை தமிழ்மொழிக் குடும்பம் எனக்கொள்வதே பொருத்தமானதாகும் என்றார் எல்லீசன்.
"திராவிட மொழிக் குடும்பம் " என்று பெயரிட்ட கால்டுவெல் போற்றப்பட்டார்.
"தமிழ் மொழிக் குடும்பம்” என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்திய எல்லீசன் புறக்கணிக்கப் பட்டார்.  இது ஒருவகையான அரசியல் ஆகும்.

" தண்டா மரையின் உடன்பிறந்தும்     தண்தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத் திடையிருந்தும்
 வந்து கமல மதுஉண்ணும்
பண்டே பழகி இருந்தாலும்
 அறியார் புல்லர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித்
 தம்மின் கலப்பர் கற்றோரே! "

( விவேக சிந்தாமணி - 08)

குளிர்ச்சியான தாமரை மலரோடு (ஒரே நீர் நிலையில்) பிறந்திருந்த போதிலும் தவளைகள் அம்மலரிலுள்ள குளிர்த் தேனைப் பருகா. வண்டுகளோ காட்டுக்கு நடுவே வசித்திருந்த போதிலும் தேடிவந்து அந்தத் தாமரைப் பூவிலுள்ள தேனைப் பருகும். அவ்வாறே கீழோராகிய மடையர்கள், முன்னமேயே பழக்கங்கொண்டிருந்த போதிலும் நல்லோரின் சிறப்பை அறியமாட்டார்கள். ஆனால் மேலோராகிய கற்றவர்களோ முன்னமேயே பழக்கம் இல்லாவிட்டாலும் கூட நல்லோரை இனங்கண்டு அப்போதே அவரோடு நட்பு கொண்டு மகிழ்வர் . அவர்களோடு என்றும் இணைந்திருப்பர்.

இந்தப் பாடலுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்தான் தமிழறிஞர் எல்லீசன் அவர்கள். எங்கோ பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்கற்று திருக்குறளின்பால் ஆர்வமுற்று தன் இறுதிக்காலம்வரை தமிழுக்காகவும், திருக்குறளுக்காகவும் வாழ்ந்தார். தன் சொத்துகளை விற்று அந்தப் பணத்தில்   தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவித் தமக்குக் கிடைத்த சுவடிகளை எல்லாம் அச்சிட்டு வெளியிட்டார்.  சென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் பெரிய பெரிய அறைகளில் மலைபோல் குவிந்து கிடந்தன. அவர் இறப்புக்குப்பின் அவற்றை ஆங்கிலேய அரசு ஏலம் விடுவதற்கு முடிவு செய்தது. அந்த ஓலைச் சுவடிகளின் அருமையைத் தமிழர்கள் யாரும் அறியவில்லை போலும். எவரும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. அந்த ஓலைச் சுவடிகள் சும்மா கிடந்தன. அதனால் சில திங்கள்களில் செல்லரித்துவிட்டன. தமிழர்களின்  அறியாமையால் தமிழ் அழியும் போதெல்லாம் எல்லீசன் போன்ற நல்லோர்கள்தான் தமிழ்மொழியைக் காப்பாற்றுகிறார்கள்.

தமிழ் வளர்த்த எல்லீசன் எனும் ஓர் ஆங்கிலேயரின் கனவு அந்தச் சுவடிகளோடு ஒரு சுவடியாய் எரிந்து சாம்பலாகிவிட்டது. இருந்தாலும் தமிழக மக்கள் அவரை மறக்கவில்லை. அவரின் நினைவாக அண்ணாசாலைக்கு அருகில் எல்லீசு நகர் என்று ஒரு குடியிருப்புப் பகுதிக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள்.  இவரின் தமிழ் ஆய்வுப் பணிகளுக்காகச் சென்னையில் ஒரு சாலைக்கு அவரின் (எல்லீசு சாலை) பெயர் வைக்கப்பட்டது. ஒரு தமிழ் முன்னோடியைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒரே ஓர் அடையாளமாக அந்தச் சாலை மட்டுமே உள்ளது. அண்ணா சாலைக்கு அருகில்தான்  அந்தச் சாலை உள்ளது. இந்திய பணத்தாளில் மகாத்மா  காந்தியின் புகைப்படம் அச்சிடும்போது காந்தி உயிரோடு இல்லை.  காந்தி மட்டும் அப்போது  உயிரோடு இருந்திருந்தால் "என் புகைப்படத்தைப் போடாதீர்கள். திருவள்ளுவரின் புகைப்படத்தைப் போடுங்கள். அவர்தான் இந்தியாவின் உண்மையான அடையாளம் "  என்றுதான் கூறியிருப்பார். காரணம் திருக்குறள் மீதும்,  திருவள்ளுவர் மீதும் அளவிற்ற பற்று கொண்டவர்தான் மகாத்மா காந்தி. எல்லீசன் போல, காந்தியைப் போல எண்ணற்ற அறிஞர்கள் எங்கெங்கோ பிறந்திருந்தாலும் தாமரையைத் தேடிவரும் வண்டைப்போல தமிழகத்தைத் தேடி வருகிறார்கள். தமிழுக்குத் தொண்டு செய்கிறார்கள். ஆனால்,  தமிழர்களோ தமிழ் நாட்டிலே பிறந்து, தமிழோடு வாழ்ந்து தமிழின் அருமை அறியாத கிணற்றுத் தவளைகளாய் இருக்கிறார்கள். என்றாவது ஒருநாள் அறிவார்ந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாறும்.  அன்று இந்திய  பணத்தாளில் திருவள்ளுவர் இடம் பெறுவார். இது நடக்கும்.  நடந்தே தீரும்.

இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
செங்கல்பட்டு மாவட்டம்.
( அலைப்பேசி - 9965414583)

தேமொழி

unread,
Nov 13, 2025, 2:18:22 AM (yesterday) Nov 13
to மின்தமிழ்

" திண்தேர் வளவற் கொண்ட கூற்றே!"

சோழன் கிள்ளிவளவன் குளமுற்றம் என்னும் இடத்தில் இறந்தான். அவன் இறந்ததைக் கேள்வியுற்ற மாறோக்கத்து நப்பசலையாரால் அவன் இறந்தான் என்பதை நம்ப முடியவில்லை. “கிள்ளிவளவன் ஆண்மையும்,  வலிமையும் மிகுந்தவனாதலால், கூற்றுவன் கிள்ளிவளவனிடம் பகைமை காரணத்தாலோ, சினத்தாலோ அல்லது நேரில் வந்தோ அவன் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியாது. பாடுவோர் போல் வந்து தொழுது பாராட்டி வஞ்சகமாகத்தான் கிள்ளிவளவனின் உயிரைக் கொண்டு சென்றிருக்க முடியும்.” என்று கருதினார். அதை ஒரு பாடல் மூலமாக  மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.

"செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும்; பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே! "

( மாறோக்கத்து நப்பசலையார். புறநானூறு - 226)

" பொன்மாலையையும்,  கடும்போரில் பகைவரை எதிர்நின்று அழிக்கும் படையையும், திண்மையான தேரையும் உடைய கிள்ளிவளவனின் உயிரைக் கொண்டு சென்ற  கூற்றுவனே! பகைமை உணர்வோடோ, சினங்கொண்டோ அல்லது நேரில் வந்து கிள்ளிவளவனிடம் போரிட்டோ அவன் உயிரைக் கொண்டு செல்ல முயன்றிருந்தால் நீ தப்பியிருக்க வழியில்லை. பாடுவோர் போல் வந்து தொழுது வணங்கி அவனை இரந்து கேட்டுத்தான் அவன் உயிரை நீ கொண்டு சென்றிருக்க வேண்டும்." என்கிறார் மாறோக்கத்து நப்பசலையார் . கிள்ளிவளவனின் உயிரைக் கூற்றுவன் போர்புரிந்து கொண்டு சென்றிருக்க முடியாது என்பதன் மூலமாக அவன் படைத்திறத்தை அறிந்து கொள்ளலாம். பாடுநர் போல வந்து கைதொழுது ஏத்தி இரந்துதான் கிள்ளிவளவனின் உயிரைக் கூற்றுவன் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதன் மூலமாக அவன் கொடைத்திறத்தை அறிந்து கொள்ளலாம்.
Reply all
Reply to author
Forward
0 new messages