தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழனையும், சேரனையும், ஐந்து குறுநில மன்னர்களையும் வென்று, தமிழகம் முழுவதையும் ஆண்டதாக வரலாறு கூறுகிறது. அவனுடைய அவைக்களப் புலவராக இருந்த மாங்குடி மருதனார் என்பவர் அவனுடைய குடிச்சிறப்பு, வீரம், வெற்றிகள், படைவலிமை, ஆட்சித்திறன், சான்றாண்மை, பாண்டிய நாட்டின் வளம், மதுரை நகரத்தின் சிறப்பு, மதுரையில் இரவும் பகலும் நடைபெறும் நிகழ்ச்சிகள், வாழ்க்கை நிலையாமை ஆகியவற்றை, 782 அடிகளைக்கொண்ட மதுரைக்காஞ்சி என்ற பாடலில் மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஒரு சிறந்த சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.