(வெருளி நோய்கள் 326 – 330 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 331 – 335
331. இருக்கை வார் வெருளி – Zoniasfaleiaphobia
இருக்கை வார்(Seat belt) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இருக்கை வார் வெருளி.
Zonia sfaleia என்பது பாதுகாப்புப் பகுதி என்னும் பொருள் கொண்ட கிரேக்கச்சொல். பாதுகாப்பிற்காக அணியப்பெறும் இருக்கை வாரை இந்த இடத்தில் குறிக்கிறது.
00
332. இருட் சுவர் வெருளி – Drkronphobia
இருண்ட சுவர் குறித்த வரம்பற்ற பேரச்சம் இருட் சுவர் வெருளி.
இருட்டு வெருளி, இரவு வெருளி உள்ளவர்களுக்கு இருட்சுவர் வெருளி வரும் வாய்ப்ப உள்ளது.
00
333. இருட்டடிப்பு வெருளி – Nonamophobia
எதிர்பாராத் திடீர் மின்தடையால் இருட்டு ஏற்படுவது குறித்த அளவு கடந்த பேரச்சம் இருட்டடிப்பு வெருளி.
சிறுவர் சிறுமியருக்கும் நோயருக்கும் இருட்டடிப்பு வெருளி மிகுதியாக உள்ளது. இரவு நேர இருட்டு, அறிவிக்கப்படும் மின்தடை நேர இருட்டு போன்றவற்றிற்கு அஞ்சுவோரும் இருட்டடிப்பு வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
334. இருத்தல் உணர்வு வெருளி – Synaiphobia
இருத்தல் உணர்வு குறித்த வரம்பற்ற பேரச்சம் இருத்தல் உணர்வு வெருளி.
00
335. இருநூறாம் எண் வெருளி – Bicentumphobia
இருநூறாம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் இருநூறாம் எண் வெருளி.
centum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் 100. Bi இரண்டைக் குறிக்கிறது. எனவே, Bi centum 200-ஐக் குறிக்கிறது.
எண் 2 வெருளி உள்ளவர்களுக்கும் இருநூறு குறித்த வெருளி உள்ளவர்களுக்கும் வெருளி 200 வருவது இயற்கை.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
(வெருளி நோய்கள் 331 – 335 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 336 – 340
336. இருகாட்சி வெருளி – Diplophobia
காண்பது இரட்டையாகத் தெரிவது குறித்த பேரச்சம் இருகாட்சி வெருளி.
பெரியவர்கள் தங்களுக்கு இரண்டு இரண்டு உருவமாகத் தெரிவதாகக் கூறும் பொழுது அதைக்கேட்கும் சிறுவர்கள் தங்களுக்கும் அவ்வாறு தெரிவதாகக் கருதிப் பேரச்சத்தை வளர்த்துக் கொள்வர். நாளடைவில் இப்பேரச்சம் வளர்ந்து வெருளியாக மாறும்.
diplos என்றால் இரட்டை எனப் பொருள்.
00
337. இருபடிச் சமன்பாட்டு வெருளி-Quadrataphobia
இருபடிச்சமன்பாடு குறித்த அளவுகடந்த பேரச்சம் இருபடிச்சமன்பாட்டு வெருளி.
Quadrata என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இருபடி.
00
338. இருபால் உறவு வெருளி – Biphobia
இருபால் உறவு பற்றிய காரணமற்ற பேரச்சம் இருபால் உறவு வெருளி.
இருபாலீர்ப்பு (Bisexuality) என்பதனையே அதன் சுருக்க வடிவமான Bi குறிக்கிறது.
ஆண் ்அல்லது பெண்ணிற்குத் தற்பாலுடனும் எதிர்பாலுடனும் என இரு பாலினருடனும் ஏற்படும் ஈர்ப்பு அல்லது உறவு.
தற்பாலுறவு வெருளி உள்ளவர்களுக்கும் உறவு வெருளி உள்ளவர்களுக்கும் இரு பாலுறவு வெருளி வருவது இயற்கை.
00
339. இருப்பின்மை வெருளி-Destirpephobia
தேடும் அல்லது தேவைப்படும் பொருள் இருப்பில் இல்லை என்பது தொடர்பான அளவு கடந்த பேரச்சம் இருப்பின்மை வெருளி.
தேவைப்படும் பொருள் ஒன்று இருப்பில் இல்லை என்னும் பொழுது அதனால் மேற்காெள்ள திட்டமிட்டுள்ள செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமைக்கும் அதனால் விளையும் பயன் இன்மைக்கும் பெருங்கவலையும் பேரச்சமும் கொண்டு இவ்வெருளி வருகிறது.
stirpe என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இருப்பு. Destirpe என்றால் இருப்பின்மை.
00
340. இருப்பு அகநிலை வெருளி – Pnevmaphobia
இருப்பு அகநிலை(spiritual plane of existence) குறித்த வரம்பற்ற பேரச்சம் இருப்பு அகநிலை வெருளி.
Pnevma என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆன்மா/ஆதன்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
(ரு. பெரியார் கூற்றும் தமிழர் நிலையும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
௬. புலமையார்: அன்றும் இன்றும்
‘புலம்’ என்றால், ‘அறிவு’ எனப்பொருள். அது பல்துறை அறிவையும் குறிக்கும். ஆனால் ஈண்டு யாம் எடுத்துக் கொண்டது தமிழ்ப் புலமை பற்றியதேயாம்.
பண்டு தமிழ்ப் புலமை தமிழறிவைப் பெருக்கிக் கொள்வதற்கென்றே பெறப்பட்டது. பிறமொழிக் கலப்பே தமிழில் உண்டாகாத காலம் அது. தமிழ்ப் புலமையாளரும் அன்று மிகக் குறைவு. இன்று போல் அச்சிட்ட நூல்கள் அன்று இல்லை. எழுத்தாணியால் ஓலையில் எழுதப்பட்ட சுவடிகளே இருந்தன. ஓர் ஊரில் படித்தவர் ஒருவர் அல்லது இருவர் இருப்பர், அவரிடம்தாம் தமிழ்ச்சுவடிகள் சில இருக்கும். பல ஊர்களுக்கு ஒரு தமிழ்ப் புலமையர் இருப்பர். அன்று – படித்தல், எழுதுதல், கணிதம் ஆகிய மூன்றும் தமிழில்தான் இருந்தன.
வேற்றுமொழி கலவாத இருந்தமிழே பெருவழக்காய் இருந்தது. கரும்பு இருக்குமிடம் தேடி எறும்பு செல்வது போன்று, தமிழறிஞர் இருக்குமிடம் தேடித் தமிழ் பயில விரும்புவோர் செல்வர். அரசுப் பள்ளிகள், பிற பள்ளிகள் அன்று இல்லை, ஆனால், தமிழறிஞர் நன்கு மதிக்கப் பெற்றனர். அவர்தம் அறிவுரை – ஆய்வுரை நாடி மக்கள் எப்பொழுதும் அவரைச் சூழ்ந்திருப்பர். அறிவுச் சுற்றம் அவரையே நாடும்.
புலவர் பெருமக்கள், உயரிய பண்பாடும் -நாகரிகமும்-சீரிய கோட்பாடும் உடையராய் மிளிர்ந்தனர்! தற்புகழ்ச்சி தற்செருக்கு – ஆணவம் – இறுமாப்பு அற்று, ஆரவாரமின்றி எளிமையாக வாழ்ந்தனர். நூலறி புலவரும் – நூலெழுது புலவரும், தூய தமிழ்நடையையே பேச்சிலும் – எழுத்திலும் பின்பற்றினர். சாதி – சமய வேறுபாடு கருதாக் கண்ணியராக விளங்கினர்.
“தமிழுக்கு அமிழ்தென்று பேர் – அந்தத்
தமிழ்இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்”
என்றுன்னிச் செம்மாந்து வாழ்ந்தனர்.
பொறாமை, கரவு, பூசலின்றி ஒருவருக்கொருவர் நட்பும்-பெட்பும்-நன்னோக்கும் கொண்டு உறைந்தனர். அன்று பேச்சும், மூச்சும் பைந்தமிழாகவே இருந்தது. ஒருவருடைய தமிழறிவை அளந்தறியும் கருவி, அவர் பாடம் கேட்ட புலவர் பெருமானைப் பொறுத்ததாயிருந்தது. ஒருவருடைய தமிழ்ப்புலமையை அறிய, ‘நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்? என்று உசாவுவது வழக்கமாயிருந்தது. இங்ஙனம் தலைமுறை தலைமுறையாகப் பாடம் கேட்கும் முறையே அன்றிருந்தது.
அக்காலப் புலவர், ‘அம்’ என்று தொடங்கி ஆயிரம் பாடலும், ‘இம்’ எனத் தொடங்கி எழுநூறு பாடலும் இயற்றவல்ல திறன் பெற்று விளங்கினர். அவரெல்லாம் தமிழுக்காகவே தமிழ் கற்றவர். நினைத்தவுடனும் – பிறர் சொன்னவுடனும் பாடலியற்றும் வன்மை பெற்றவராயிருந்தனர். புகழேந்தி- ஒட்டக்கூத்தர்- கபிலர்- பரணர்- ஒளவையார்-வில்லிபுத்தூரார் – கம்பர் முதலியோர் அத்தகையோருள் அடங்குவர். இன்றோ பலர், வயிற்றுப் பிழைப்புக்காகவே தமிழ் கற்றவராயுளர்.தமிழுக்காகத் தமிழ் கற்றவர் இல்லையென்பதும் மிகையன்று. தமிழில் புலமை நிரம்பாதவராகவும், ஒரு செய்யுள் யாக்கும் திறனற்றவராகவும் பலருளர்.
‘பாடுக’ என்றதும், பாடும் வன்மை இன்றில்லை! தமிழைப் பிழையின்றிப் பேசவும்-எழுதவும் கூடச் சிலருக்கு முடியவில்லை. வேற்று மொழி கலவாது பேசவும்-எழுதவும், பலருக்குத் தெரியவில்லை. தமிழால் பிழைக்கும் தமிழ்ப் புலவர்கட்குத் தமிழ்ப்பற்று கிடையாது. அவர்கட்குப் பணப்பற்றும் – சோற்றுப்பற்றும்தாம் குறி.
உயர்பள்ளிகள்- கல்லூரிகளில் பணியாற்றும் தமிழ்ப்புலமையர், பிறருடன் தமிழில் பேசுவது இழுக்கென்று எண்ணி ஆங்கிலத்தில் பேசுகின்றனர். அதுதான் பெருமையென்றும் எண்ணுகின்றனர். அவ்வாறு எண்ணுவோர், முழுமையும் ஆங்கிலத்திலோ, பிற மொழியிலோ பேசினால் கூடக் குற்றமின்று! ஒரு தமிழ்ச்சொல் – ஓர் ஆங்கிலச் சொல் – ஒரு வேற்றுமொழிச்சொல் – என்ற முறையில் கலந்தன்றோ தமிழ்க்கொலை புரிகின்றனர்.
இன்று தமிழாசிரியராக வருபவர், கல்லூரியில் சேர்ந்து படித்தவர் – அஞ்சல்வழிப் பயின்றவர் – தன் முயற்சியால் படித்தவர் – பயிற்றுக் கல்லூரிகளில் சேர்ந்து படித்தாலும், இலக்கிய இலக்கணங்களை ஐயம் – திரிபு – அறியாமை நீங்கக் கற்கின்றார்களா? ஏதோ சில வினா – விடைப் புத்தகங்களை வாங்கிப் படித்து – மனப்பாடம் செய்து தேறிவிடுகின்றனர். தனியே படிப்பவர்களும் இம்முறையையே கையாளுகின்றனர். சிலர் வினாத்தாள்களைக் காசு கொடுத்து வாங்கிப் படித்து வெற்றி பெறுகின்றனர்.
எல்லாரும் இலக்கிய இலக்கணங்களை முறையாகப் பயிலாமல், எளிதாகக் குறுக்கு வழிகளில் தேறவே முற்படுகின்றனர். எவ்வாறேனும், புலவர் பட்டம் பெற முயலுகின்றனரே அன்றிப் புலமைப் பட்டம் பெற முயல்வதில்லை. நிரம்ப ஊதியம் பெற முனைகின்றார்களே தவிர, நிரம்ப அறிவு பெற முயல்வாரிலர். இம்முறையில் புலவர் பட்டம் பெற்றோரே, இன்றுள்ள பெரும்பான்மையினரான தமிழ்ப்புலவர்கள். இன்று சிலர், ‘கவிஞர்’ (பாவலர்) ஆக முயல்கின்றனர். முறையாக யாப்பிலக்கணம் பயிலாது, சிலர் பாடிய வண்ணச்சந்தப் பாக்களை அடியொற்றி – ஓரிரு பாக்கள் எழுதி – தம் பெயருக்குமுன் ‘கவிஞர்’ என்று பொறித்துத் தாளிகைக்கட்கு விடுத்து விடுகின்றனர்!
எழுத்துப் பிழை – இலக்கணப் பிழை – கருத்துப் பிழை முதலியன மலிந்து காணப்படுகின்றன! அவர்களுடைய ஆர்வமெல்லாம் தங்கள் பாடல்கள் ‘கவிஞர்’ என்ற பட்டத்துடன் வெளிவர வேண்டும் என்பதிலுள்ளதேயன்றி, யாப்புப் பயில வேண்டுமென்பதில்லை. இவர்களாலெல்லாம் தமிழ் வளம் பெறும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றமே! நற்றமிழை எழுதவும் – நவிலவும் அறியாத அரைகுறையாளர் எங்ஙனம் தம் வயமாகத் தமிழ் கற்பிப்பர்?
ஆனால், இன்று தமிழ் உரைநூல்கள் அவர்கட்குத் துணைபுரிகின்றன. அவையும் செம்மையானவையல்ல! சில பள்ளிகளில், உரைநூல்கள் வாங்கும்படி மாணாக்கர்களை வற்புறுத்துகின்றனர். தமிழ் படிக்கத் தமிழ்த் துணைவன்கள் இருக்கும்போது, தமிழாசிரியர்கள் துணை, மாணவர்க்குத் தேவையா? தமிழ் வளர – தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் சில நெறிமுறைகளைப் பின்பற்றல் நன்று. அவற்றுள் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே!
அனைவருக்கும் பிடித்த பாடல், (1857 இல் எழுதப்பெற்ற) “Jingle Bells” என்பதாகும். இந்த மெட்டிலான பின்வரும் பாடலைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்; தாருங்கள்; தமிழ்ப் பாலையும் கலந்து ஊட்டுவதாக அமையும்.
எண்ணுக எண்ணுக தமிழில் என்றுமே!
எழுதுக எழுதுக தமிழில் எதையுமே!
பேசுக பேசுக நல்ல தமிழிலே!
பயிலுக பயிலுக நமது தமிழிலே!
மொழியை மறந்தாலோ
வாழ்வை இழப்போமே!
வாழ்வை இழந்தாலோ
நாமும் இல்லையே!
நம் இனமும் இல்லையே!
போற்றுவோம் போற்றுவோம் – அன்னைத் தமிழையே!
பேணுவோம் பேணுவோம் அருமைத் தமிழையே!
நம் உரிமைத் தமிழையே!
தமிழை மறந்தால் தமிழினம் அழியும் என்பதை இப்பாடல் மூலம் நம் பிள்ளைகளுக்கு உணர்த்துவோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்