ஒரு மலைப்பாதையில் பயணம்செய்யும்போது மிகப்பெரும்பாலும் ஏற்றமான பாதைகளே இருக்கும். அப்பொழுதுதான் விரைவில் உச்சியை அடையமுடியும்.
சில இடங்களில் பாதை மிகக் கடுமையான ஏற்றத்துடன் இருக்கும். அதில் ஏறும்போது வண்டிகள் திணறும். முக்கி, முணங்கி, முதல் கியரில் நூறு மீட்டர் செல்வதற்குக் கால்மணிநேரம்கூட ஆகும்.
மிகச் சில இடங்களில், அவ்வாறு மிகக் கடுமையான ஏற்றத்துக்குப் பின்னர் கொஞ்சதூரத்திற்கு இறக்கமான பாதை வரும்.
அதுவரை சிரமப்பட்டு ஏறிவந்த வாகனம், இப்போது மிக எளிதாக கடகடவென்று அந்தத் தொலைவைச் சீக்கிரத்தில் கடந்துவிடும்.
ஆமாம், இதற்கும் தொடரடைவுக்கும் என்ன உறவு என்கிறீர்களா?
இருக்கிறது.
நான் தற்போதுதான் ஒரு நூலுக்கான தொடரடைவை முடித்துள்ளேன்.
இதற்கு முந்தைய தொடரடைவு நாநார்த்த தீபிகை என்ற நூலுக்கானது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலித்துறை செய்யுள்களைக் கொண்டது.
ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு அடிகள். அதுமட்டுமல்ல. சில செய்யுள்களில் எட்டு அல்லது ஒன்பது சீர்கள்.
எனக்குக்கிடைத்த இணையதளப் பதிப்பில் செய்யுள்கள் சீர் முறையில்தான் இருந்தன. அந்தச் சீர்களிலும், புணர்ச்சி விதிகளிலும் ஒளிந்துகொண்டிருக்கும் சொற்களைத் தனியாகப் பிரித்தெடுப்பது மலையேற்றத்தைப் போன்றது. நல்லவேளை இதற்கு உரையும் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு இந்த மலையேற்றத்தைக் கடக்க எனக்கு நாற்பது நாள்கள் ஆயின.
அடுத்து நான் எடுத்துக்கொண்டது வேதகிரியார் சூடாமணி நிகண்டு.
ஏற்கனவே மண்டலபுருடர் என்பவர் இயற்றிய சூடாமணி நிகண்டு என்று ஒன்று உண்டு. அதினின்றும் வேறுபடுத்திக்காட்ட, பதிப்பாளர்கள் இதை இதன் ஆசிரியர் பெயரால் அழைத்தனர்.
இந்நூலில் மொத்தம் 583 செய்யுள்கள்தான். ஒவ்வொன்றிலும் அளவான சீர்கள்தான். அதிலும், சொற்களாகப் பிரிக்கப்பட்ட ஒரு பதிப்பு எனக்கு இணையதளத்தில் கிடைத்தது. அப்புறம் என்ன? கரும்பை வெட்டி, தோலை நீக்கி, துண்டுதுண்டாக எடுத்துக்கொடுத்ததைப்போல் - மளமளவென்று வேலை முடிந்தது. ஐந்தே நாள்களில் தொடரடைவுப் பணி முடிந்தது. இதுதான் நான் குறிப்பிட்ட மலையேற்றத்தில் இருக்கும் இறங்குபாதை.
அந்த நேரத்தில், வாகனத்துக்கு உயிர் இருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருக்குமோ, அந்தளவு நான் மகிழ்ந்தேன்.
இந்த வேதகிரியார் சூடாமணி நிகண்டு என்ற நூலுக்கான தொடரடைவு எனது tamilconcordance.in என்ற இணையதளத்தில் தொடரடைவுகள் -- > நிகண்டுகள் என்ற தலைப்பின் கீழ் கிடைக்கும்.
இது தொடரடைவுக்கான 13-ஆவது நிகண்டு; மொத்தத்தில் 115-ஆவது நூல்.
இனி அடுத்த தொடரைவுக்கான செய்தியுடன் சந்திக்கிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா