ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 14 November 2025 அகரமுதல
தொல்காப்பியமும் பாணினியமும்
9
வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு
“இந்திரனுக்குப் பின்னும் பாணினிக்கு முன்னுமாக ஒருவன் பின் ஒருவராய் வந்த வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்பர். இவர்கள் ஒவ்வொருவர்க்கும் முப்பதாண்டுகளாக வைத்துக் கணக்கிடுங்கால் இந்திரனுக்கும் தொல்காப்பியம் – பாணினிக்கும் இடைப்பட்ட காலம் 1920 ஆண்டுகளாம்.” என்பது அடுத்த புரட்டாகும். ஆனால் இதை மெய்யென்று நம்பி, க.வெள்ளைவாரணார், தொல்காப்பியம்(வரலாறு) என்னும் தம் நூலில் எடுத்தாண்டுள்ளார்.
எழுத்தே உருவாக்காதவர்கள் எங்ஙனம் இலக்கண நூலை எழுதியிருக்க முடியும்? அதுவும் 64 சமற்கிருத இலக்கண நூல் உருவாகியிருக்க முடியும்? எனவே, இதுவும் தவறேயாகும். காலங்களை முன்னதாகவே கூறும் வஞ்சகத்தாலும் எதுவும் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாக நிலைநாட்டும் கயமையாலும் இவ்வாறு தவறாகக் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியர் தமக்கு முந்தைய நூற்றுக்கணக்கான புலவர்கள் கூற்றை மேற்கோளாகக் கூறுவதால், தமிழின் இலக்கண வரலாறும் அதனால் இலக்கிய வரலாறும் மொழி வரலாறும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்புகளை உடையது. இதற்குப் போட்டியாகக் கூற வேண்டுமென்பதற்காக் கட்டப்பட்ட கதையே இது.
கணிணி நிரன்மையைத் தொல்காப்பியர் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே பயன்படுத்தியுள்ளார்
தொல்காப்பியம் எழுத்து, சொல் ஆகிய இரு படலங்களும் மிகச் செம்மையாக, ஒன்றன்பின் ஒன்றாகச் செய்திகள் முறைமைப்படுத்தப்பட்டு நூற்பாக்களின் வரிசைமுறையை மாற்றிச் சிந்திக்கவேண்டிய தேவையின்றிக் கோவைப்பட அமைந்துள்ளன. கணிணியில் செய்தி நிரல்களை எழுதுவோர் பின்பற்றவேண்டிய முறைமையைத் தொல்காப்பியர் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே பயன்படுத்தியுள்ளமை பெரிதும் போற்றத்தக்கது. BNF என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இம்முறைமையைப் பாணினி கடைப்பிடித்துள்ளதாகவும், ஆகவே சமற்கிருதம் உலக மொழிகளிலேயே கணிணிப் பயன்பாட்டுக்குப் பெரிதும் உகந்தமொழி எனவும் மேலைநாட்டார் பாராட்டுவதைக் காண்கிறோம். [The Backus-Naur Form (Panini-Backus Form) or BNF grammars used to describe modern programming languages have significant similarities to Panini grammar rules] பாணினிக்கு முன்னரேயே தொல்காப்பியர் இத்தகு சீர்மையைத் தமது நூலில் பயன்படுத்தியுள்ளதை நாம் எடுத்துக்கூறத் தவறிவிட்டமையாலும், பாணினியை அவர்கள் உலகுக்கு முறையாக அறிமுகம் செய்தமையாலுமே, மேலைநாட்டார் கவனம் இங்குத் திரும்பவில்லை. தொல்காப்பியர் இலக்கண முறைமைகளைத் தொடுத்துக் கூறும் அல்லது அடுக்கி வைக்கும் பாங்கு தொன்மைமிக்க தமிழின் இலக்கணச்சீர்மையை மட்டுமின்றி, நம் முன்னோரின் சிந்தனைப்போக்கின் முதிர்ச்சியையும் ஏரணவியலின் தொன்மையையும், அறிவியல் முறைமைப்படத் தரவுகளைத் தொகுத்து வழங்கும் ஆய்வுநெறிமுறைப் பயிற்சியையும் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. தமிழைக் கணிணிமொழி என்று பெருமிதத்துடன் கொண்டாடிக் கொள்ளத் தூண்டுவது எழுத்துப் படலம், சொற்படலம் ஆகிய இருபடலங்களின் அமைப்பு முறையேயாகும். இந்தச் சங்கிலித்தொடர்ச் செய்தித்தொகுப்பின் கட்டுக்கோப்பால்தான் இடைச்செருகல் விளையாட்டுகளை இவ்விரு படலங்களிலும் தொல்காப்பியத்தின் பின்வந்தோர் நிகழ்த்த முடியவில்லை. இங்ஙனம் அமைந்துள்ள எழுத்துப்படலத்தில் இரு நூற்பாக்கள் வேற்றுமொழி இலக்கணநூலிலிருந்து இரவல் வாங்கப்படவேண்டிய தேவை என்ன? (மறைமலை இலக்குவனார் செம்மொழி ஆய்வு வளர்ச்சியில் பேராசிரியர் சி. இலக்குவனாரின் பங்களிப்பு, மதுரைக் காமராசர் பல்கலைக் ழகம் நடத்திய பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கு-15/3/2010-மையக் கருத்துரை)
தமிழிலுள்ள சிறப்புகளை ஆரியத்திற்கு அதற்கு முன்னரே இருந்ததாகக் கட்டுக்கதைவிடும் பழக்கத்தில்தான் பாணினியம் கணிணி மொழியின் சிறப்பை உடையதாகக் குறிப்பிட்டுள்ளனர். உண்மையில் அத்தகு சிறப்பு பாணினியத்திற்கு இல்லை.
உலகிலுள்ள ஒவ்வொரு மொழியும் ஒரு சிறப்பான தன்மையைப் பெற்றிருக்கும். அச்சிறப்பு மக்கள், அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அமைந்திருக்கும். இதே வகையான நிலை தமிழுக்கும் இருந்தாலும் மற்ற மொழி பேசுவோர் சிந்தித்ததைவிடப் பழந்தமிழர் மேலும் அதிகமாகச் சிந்தித்துள்ளார்கள். இதனாலேயே மற்றைய உலக மொழிகளுக்கு இல்லாத பெருமை தமிழுக்கு இருக்கின்றது. இதனாலேயே உலக அளவில் அறிஞர் பெருமக்கள் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பாராட்டுகின்றார்கள்.
தமிழுக்கு அந்தப் பெருமை வருவதற்கான காரணம் மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்ததேயாகும். பொதுவாக, உலகிலுள்ள பழமையான மொழிகளில் காலந்தோறும் இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. மொழியின் எழுத்து, சொல், தொடர் பற்றியே அவை விளக்குகின்றன. இம்முறை தொல்காப்பியம் முதலான எல்லாத் தமிழ் இலக்கணங்களிலும் காணப்படுகின்றது. கூடுதலாகப் பழந்தமிழ்ச் சான்றோர் அவர்கள் வாழ்ந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இலக்கணம் எழுதி வைத்துள்ளனர்.
தொல்காப்பியர் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்குகின்றார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பழந்தமிழ் மக்களின் அக, புற வாழ்வியலை மிகவும் தெளிவாக வரையறை செய்து விளக்குகின்றார். இவ்வகையான ஒரு வாழ்வியல் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை எனத் தமிழ் அறிந்த உலக அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
தமிழ்மொழிக்குத் தற்போது கிடைத்துள்ள தரவு அடிப்படையில் பார்க்கும்போது ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. தொல்காப்பியமே தமிழுக்குக் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாகும். பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் தொன்மையான இலக்கியங்கள் ஆகும். இந்நூல்கள்வழி ஒரு செழுமையான இலக்கண – இலக்கிய மரபை அறிந்துகொள்ள முடிகின்றது, இவ்வகையான ஒரு செழுமை கிடைத்துள்ள நூல்களில் இருப்பதற்குக் காரணம் அவற்றுக்கு முன் ஒரு செழுமையான மரபு இருந்ததேயாகும்.
தமிழ் இலக்கியங்கள் வழியும் தொல் பொருட் சான்றுகள் வழியும் ஆழிப் பேரலையால் பழந் தமிழகத்தின் தெற்கிலும் கிழக்கிலும் நிலப்பகுதி கடல் கொண்டதை அறிய முடிகின்றது. பழந்தமிழர் மூன்று சங்கங்களை நிறுவித் தமிழை வளர்த்துள்ளார்கள். முதல் இரண்டு சங்கங்கள் இருந்த பகுதி கடல் கோளால் அழிய அக்காலங்களில் தோன்றிய இலக்கண இலக்கியங்களும் அழிந்து விட்டன. தொல்காப்பியத்தில் என்ப, மொழிப, என்மனார் எனக் குறிக்கப்படும் சொற்களைக் கொண்டே தமிழில் இப்போது கிடைத்துள்ளவற்றுக்கு முன்னுள்ள மரபை அறிந்துகொள்ளலாம்.
“தொல்காப்பியம்தான் உலகின் முதல் இலக்கண நூல். உலக இலக்கண நூல்களிலெல்லாம் சிறந்ததும் தொல்காப்பியம்தான். மாந்தர் அனைவரும் உயர்திணை, மற்றெல்லாம் அஃறிணை என்று வகுத்தது தொல்காப்பியம்தான். இத்தகைய திணைப் பெருமை வேறு எந்த மொழி இலக்கண நூலுக்கும் இல்லை. ..வடமொழி இலக்கண நூலான பாணினிக்கு முந்தையது தொல்காப்பியம். ஆனால் பாணினி குறித்து ஆங்கிலத்தில் 100 நூல்கள் உள்ளன. தொல்காப்பியம் குறித்து குறைந்த அளவு நூல்களே ஆங்கிலத்தில் உள்ளன. தொல்காப்பியரின் புகழும், தொல்காப்பியத்தின் சிறப்பும் உலகம் அறியும் வகையில், உலக மொழிகள் அனைத்திலும் தொல்காப்பியத்தை மொழி பெயர்க்க வேண்டும்” என்கிறார் ச.வே.சுப்பிரமணியம்(தொடக்கவுரை, தொல்காப்பியர் சிலை திறப்பு விழா)
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்