1. தோழர் தியாகு எழுதுகிறார் 114: முத்துக்குமார் குறித்த கலைவேலு கட்டுரை ++ 2. என் சரித்திரம் 38: என் கல்யாணம்

4 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 27, 2023, 7:05:23 PM5/27/23
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, pmaruda...@yahoo.com, muthun...@gmail.com, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsw...@gmail.com, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, palanic...@gmail.com, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com


--

தோழர் தியாகு எழுதுகிறார் 114: முத்துக்குமார் குறித்த கலைவேலு கட்டுரை

 ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      28 May 2023      அகரமுதல




(தோழர் தியாகு எழுதுகிறார் 113: நிலத்தில் அமிழும் நிலம் தொடர்ச்சி)

முத்துக்குமார் மரண சாசனம்

நமக்குக் கைகாட்டிகலங்கரை விளக்கம்!

தமிழ்நாட்டின் அரசியலை ஒரே ஓர் உயிர், ஒரே ஒரு நொடியில் முற்றிலும் மடைமாற்றி விட்டது. தமிழரின் நலனைக் காவு கொடுக்கும் தன்னலப் பதவிவெறி அரசியல் பின்னங்கால் பிடறியில் அடிவிழ ஓட்டம் பிடித்து விட்டது. வாக்கு வேட்டை அரசியல் அம்மணப்பட்டு அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறது. தமிழ் மக்களை விடுவிக்கும் தமிழ்த் தேசிய சமூக நீதி அரசியல் வீறு கொண்டு எழுகிறது. அது சுட்டெரிக்கும் சுடு நெருப்பாய் சுழன்றெரியத் தொடங்கி விட்டது. முத்துக்குமார் மூட்டிய தீ தமிழ்ப் பகையை முற்றாக அழித்தெரிக்காமல் அணையப் போவதில்லை.

ஆனாலும் ஒன்றை நாம் மறந்து விடக் கூடாது. வெற்றுணர்ச்சிக்கு ஆட்பட்டு வீணாகி விடக் கூடாது. செல்ல வேண்டிய திசைவழியிலும், சென்றடைய வேண்டிய குறியிலக்கிலும், தீர்மானிக்க வேண்டிய முடிவுகளிலும் தெளிந்த தெளிவும், ஊசலாட்டமில்லா உறுதியும் வேண்டும். முத்துக்குமாரே நமக்கு வழிகாட்டுகிறார். “கடந்த முறை நடந்தது போல், உங்கள் போராட்டத்தின் பலன்களைச் சுயநலமிகள் திருடிக் கொள்ள விட்டு விடாதீர்கள்” என எச்சரிக்கிறார். அவரின் மரண சாசனம் நமக்குக் கைகாட்டி, கலங்கரை விளக்கம்!

முத்துக்குமார் இந்திய ‘வல்லாதிக்க அரசியலை’யும் தமிழ்நாட்டின் ‘கங்காணி அரசியலை’யும் தெளிவாகப் படம் பிடிக்கிறார். ” இந்திய ஏகாதிபத்தியம்” என்ற சொல்லாடல் அவரின் சரியான அரசியலைக் காட்டுகிறது. இந்திய வல்லாதிக்கம் அண்டை நாடுகளை அரட்டி மிரட்டும், மக்களைச் சுரண்டிக் கொழுக்கும். இந்தியத் துணைக்கண்டத் தேசிய இன மக்களைத் தன் காலடியில் நசுக்கிக் கசக்கி அரத்தம் குடிக்கும். அது கையெட்டும் தொலைவில் ஒரு தேசிய இனம் விடுதலை பெற்று விடச் சம்மதிக்குமா? அது தன் சுரண்டலைப் பாதிக்கும் என்பதை உணராமல் இருக்குமா? அதனால்தான் ஈழ விடுதலைப் போராட்டத்தை எவ்வழியிலும் – முத்துக்குமரர் குறிப்பிடுவதைப் போல், “திருட்டுத்தனமாக”வேனும் –  அழித்து ஒழித்து விடத் துடிக்கிறது.

அதிகாரவர்க்கம் பற்றியும் ஆழமான புரிதலை முத்துக்குமார் கொண்டுள்ளார். “பயங்கரவாதமென்பது, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரசுபரப் புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று” என்கிறார். பாக்கித்தானும் இந்தியாவும் சேர்ந்து உருவாக்கியதோ இல்லையோ, பயங்கரவாதம் என்பது இன்று உலகளவில் வல்லாதிக்க ஆற்றல்கள் தங்கள் நலன்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளப் பயன்படுத்தும் சூத்திரமாய் உள்ளது. வல்லாதிக்கம் தொடர்ந்து நிலைபெற எப்பொழுதுமே அதற்கு ஓர் எதிரி தேவை; எதிரி இல்லையென்றாலும் அது எதிரியை உருவாக்கிக் கொள்ளும். 9/11 நிகழ்வுக்குப் பிறகு அமெரிக்க வல்லாதிக்கம் இராக்கு, ஆபுகானித்தான் பயங்கரவாதங்களைத் தோற்றுவித்தது. வெனிசுலா, ஈரான், வடகொரியா என அப்பட்டியலை நீட்டிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய வல்லாதிக்கத்திற்கு பாகித்தான் பயங்கரவாதம், காசுமீர் பயங்கரவாதம், அசாம் பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலப் பயங்கரவாதம், மாவோயிசப் பயங்கரவாதம் எனப் பல பயங்கரவாதங்கள் தேவைப்படுகின்றன. இப்பட்டியலில் விடுதலைப்புலிப் பயங்கரவாதம் இப்பொழுது முன்னிலை பெறுகிறது. கூடிய விரைவில், தமிழ்த் தேசியப் பயங்கரவாதமும் இதில் இடம்பெறலாம். “நாளை நம் மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?” என்ற முத்துக்குமாரின் கேள்வி இதையே நம்மிடம் எச்சரிக்கையாய் முன்வைக்கிறது.

இந்திய வல்லாதிக்கம் பற்றிய புரிதலுக்கு இந்தியக் கட்டமைப்புப் பற்றிய தெளிவு வேண்டும். முத்துக்குமாரிடம் இந்தத் தெளிவும் புரிதலும் இருந்திருக்கின்றன. இந்தியா ஒரு நாடன்று: ஒரு துணைக்கண்டம். அங்குப் பல்வேறு தேசிய இன மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் நாடுகள் “மாநிலங்களாக” இந்தியச் சிறைக்குள் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன. முத்துக்குமாரிடம் பிழையற்ற இந்த வரலாற்றறிவு இருந்ததனால்தான். “அரசுகளில் அங்கம் வகிக்கக் கூடிய உங்கள் தேசிய இனங்கள்” என்று எழுத முடித்துள்ளது. தனித்தனி தேசிய அரசுகளைக் கொண்டிருக்க வேண்டிய தேசிய இனங்கள் என்பதைத் தவிர இதற்கு வேறென்ன பொருள்? “ஈழத்திலிருக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்தித்தான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள்” என்னும் தொடரில் உள்ள “இந்தியர்”, “நம் அரசால்” ஆகிய சொற்கள் நாம் இந்தியர் இல்லை, இது நம் அரசன்று என்று சொல்லாமல் சொல்கின்றன. இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களிடையேயும் இத்தகைய புரிதல் இருக்க வேண்டும் என முத்துக்குமார் விழைகிறார். இந்தப் புரிதல்தான் “எதிர்காலத்தில் ஒரு நவநிர்மாண் சேனாவோ, சிரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும்” என ஆணி அடித்தாற்போல் சொல்கிறார். இங்கு அவர் தமிழ்நாட்டிற்கு எதிர்வரும் ஆபத்தைத் தனித்துச் சுட்டினாலும், இந்தியத் துணைக்கண்டத்தில் அடிமைப்பட்டுக் கிடக்கும் அனைத்துத் தேசிய இனங்களையுமே எச்சரிக்கிறார். இந்துத்துவாவின் அகண்ட பாரதக் கனவைத் தகர்க்க இதுவே வழி.

“காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!” “தேர்தல் காலத் தமிழர் கலைஞர் “தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காகச் சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய சூரப்புலி” என்கிற முத்துக்குமாரின் கருத்துச் செறிவுமிக்க தொடர்கள் எத்தனை எத்தனை உண்மைகளைத் தொட்டுக் காட்டுகின்றன! இங்கே அவர் கருணாநிதியை மட்டுமா சாடுகிறார்? இல்லை, இல்லை. செயலலிதா தொடங்கி விசயகாந்து, சரத்துகுமார் முடிய உருப்படியாய் எந்த அதிகாரமும் இல்லாத முதல்வர் நாற்காலிக்காய் நாக்கைத் தொங்கப் போட்டலையும் எல்லா அரசியல் களவாணிகளையும் தோலுரிக்கிறார். பதவி பெற வேண்டும். பெற்ற பின் ‘டெல்லிக்குச் சலாம்’ போட்டு, தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சுருட்டிக் கொள்ள வேண்டும். இதுதானே தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல்காரர்களின் கொள்கை, குறிக்கோள், இட்சியம் எல்லாமே.

தமிழ்நாட்டில் இன்று போராட்ட அரசியல் பழங்கதையாகி விட்டது. போராட்ட அரசியலைப் புதைகுழிக்கு அனுப்பிய பெருமை திராவிடக் கட்சிகளுக்கு, குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, அதிலும் குறிப்பாகத் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞருக்கே உண்டு. தன் கட்சியை மாநாடுகள் மட்டுமே நடத்தும் கட்சியாகத் தீர்மானம் நிறைவேற்றி தில்லிக்கு மனுப்போடும் கட்சியாக, மக்களை ஏமாற்ற மாபெரும் பேரணிக் காட்சிகள் காட்டும் கட்சியாகச் சிதைத்து போராட்ட அரசியல் என்ற சொல்லாடலையே ‘கழக’ அகராதியிலிருந்து நீக்கி விட்டார். மாற்றாக ‘வாரிசுப் போராட்ட அரசியல்’ என்ற சொல்லைச் சேர்த்துக் கொண்டார். தன்னையும் தன் கட்சியையும் மாற்றிக் கொண்டதோடு நிற்காமல், முத்துக்குமார் அடங்காச் சினத்துடன் கட்டிக் காட்டுவதைப் போல், “தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகசர் கொடுக்கும் சாதியாக” மாற்றி விட்டார். முத்துக்குமார் அறைகூவி அழைக்கிறார், “அந்த மரபை அடித்து உடையுங்கள்!”

கூட்டங்கள், மாநாடுகள், தீர்மானங்கள், பேரணிகள் எல்லாமே வேண்டும்தான். மக்களிடையே கருத்துப் பரப்புரை செய்ய அவை பெரும் அளவில் உதவும். ஆனால், அவற்றோடு நின்று விடக் கூடாது. கருத்தால் எழுச்சி பெற்ற மக்களை ஒன்றுதிரட்டி நம் நோக்கத்திற்காய்ப் போராட வேண்டும். போராட்டம், போராட்டம், தொடர்ந்து போராட்டம். போராட்டம் மட்டும்தான் நம் இறுதி இலக்கிடம் கொண்டு சேர்க்கும்; போராட உள்ள உறுதி வேண்டும். கொள்கைப் பிடிப்பு வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக அருப்பணிப்பு உணர்வு வேண்டும். போராட்டத்தை வெற்றிக்கு இட்டுச் செல்லக் கட்டுக் கோப்பான அமைப்பு வேண்டும். போராட்ட அரசியல் தேவையை முத்துக்குமார் உணர்ந்திருந்ததால்தான், “தன் பிணத்தைக் கைப்பற்றி அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக” வைத்துப் போராடும்படி அவரால் அறைகூவல் விடுக்க முடிந்துள்ளது.

ஆனால், தமிழ் மக்கள் தமிழர்களாய் ஒன்றுதிரளப் பெருந்தடையாக இருப்பது முதலில் சாதி, அடுத்தது மதம். பார்ப்பனியம் நம்மை ஒன்றன் மேல் ஒன்றான சாதி அடுக்குகளாகப் பிரித்து, எல்லா அடுக்குகளுக்கும் மேலடுக்காய்ப் பார்ப்பனரை உட்கார வைத்து நாம் சமமாய் ஒன்றுசேர்வதற்கான எல்லா வழிகளையும் அடைத்து விட்டுத் தொடர்ந்து கோலோச்சுகிறது. சாதிகளைக் கடந்து தமிழர்களை ஒன்றுதிரட்டத் திணறுகிறோம். சாதிப் பகைமையில் தமிழர்கள் வெந்து போவதைக் கண்டு நொந்து போகிறோம். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ஒவ்வொருவரும் அவரவர் வழியில் போராடி வருகிறோம். இதோ தன்னேரில்லாத் தனிப்பெரும் ஈகி முத்துக்குமார் வழிகாட்டுகிறார். ”நமக்குள்ளிருக்கும் சாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக் கொள்ள இதுதான் தருணம்.” என்ன தருணம் இது? ஒட்டுமொத்தத் தமிழர் நலனுக்காய்ப் போராடும் தருணம். ஈழத் தமிழர் நலனுக்காய் மட்டுமின்றி இங்குள்ள தமிழர் நலன் நோக்கியும் போராடும் தருணம்.

ஈழத் தமிழனுக்காய், காவேரி, முல்லைப் பெரியாறு, பவானி, பாலாறு ஆற்று உரிமைகளுக்காய், மொழி உரிமைகளுக்காய் என இவ்வாறு தமிழர் பொது நலன்களுக்காய்ப் போராடுவதன் மூலமே சாதியைத் தகர்க்க முடியும்; தமிழனாய்த் தலை நிமிர முடியும். இவ்வாறு ஒன்றுதிரண்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் இங்கு சாதி உணர்வுகள் தூண்டித் தூபமிட்டு வளர்க்கப்படுகின்றன. முத்துக்குமார் இதைச் சரியாகவே புரிந்து கொண்டிருப்பதால்தான் “மாணவர்களின் தமிழின உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு, இந்திய உளவுத்துறை சாதிய உணர்வைத் தூண்டி விட்டு, அம்பேத்துகர் சட்டக் கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம்” என எழுதுகிறார்.

இந்தியத் துணைக்கண்டத்துச் “சகோதரத்” தேசிய இனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் முத்துக்குமார் அன்பிற்குரிய சருவதேசச் சமூகத்தின் மனசாட்சியையும் நம்பிக்கைக்குரிய ஒபாமாவின் மனசாட்சியையும் நோக்கிக் கேள்வி தொடுக்கிறார். வெள்ளை இனத்திமிருக்குக் குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொற்களாலேயே சாட்டையடி கொடுக்கிறார். “என் சருமத்திலிருக்கும் கொஞ்சம் வெண்மையும் கற்பழிப்பின் மூலமாக வந்திருக்கும்” என்று.

ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைக்குக் காரணமாயிருக்கும் சருவதேசச் சமூகத்தின் மௌனம் எப்பொழுது உடையும்? எனக் கேள்வி தொடுத்து விட்டு அன்பின் திருவுருவமாம் முத்துக்குமார் இப்படி எழுதுகிறார்: “நியாயத்தின்பால் பெருவிருப்புக் கொண்ட ஒரு மக்கள்சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிசின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால் எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டு விடச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.” கல்லையும் கனியவைக்கும் முத்துக்குமாரின் உருக்கமான இந்த வேண்டுகோள் சருவதேசச் சமூகத்தின் மவுனத்தைக் கலைத்து உறுதியாய்ப் பேச வைக்கும்.

இவ்வாறு, முத்துக்குமார் உள்ளூர் அரசியல் தொடங்கி பன்னாட்டு அரசியல் முடிய ஆழந்தகன்ற அரசியல் புரிதல்களோடு தம் கடிதத்தை எழுதியுள்ளார். சிங்களப் பத்திரிகையாளர்களையும் சிங்களத் தம்பதியரையும் பாதுகாக்கும்படி அவர் வேண்டுவது அவரது மனிதநேயப் மாண்பை வெளிப்படுத்துகிறது. கடிதத்தில் ஒரு சில இடங்களில் அவர் புரிதலில் குறைகள் இருக்கலாம். இராசீவு கொலை பற்றி எழுதி இருப்பது, இந்திரா, எம்ஞ்சியார் ஆகியோரைத் தமிழீழத்தின் சிறு தெய்வங்களாக அவர் வருணித்திருப்பது காங்கிரசிலுள்ள சீர்காழி இரவிச்சந்திரன் போன்ற உண்மை இன உணர்வாளர்களை வென்றெடுக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கலாம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் முத்துக்குமாரின் பார்வை தெளிவானது; சரியானது. தமிழீழ மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதின் விளைவாய்த் தோன்றியதே தமிழீழ விடுதலைப் போராட்டம். முத்துக்குமாரின் சொற்களில் கூறுவதென்றால், “புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர காரண கர்த்தாக்கள் அல்லர். (They are not the reason, just an outcome)” எனவே போரை நிறுத்து எனக் கோரிக்கை வைப்பதும், அதுவும் போரை நடத்துகின்ற இந்தியாவிடமே கோரிக்கை வைப்பதும் திசை திருப்பும் முயற்சிகள். அதே போலப் புலிகளை ஆயுதங்களைக் கைவிட வலியுறுத்துவதும் வஞ்சக வலைவிரிப்புதான். ஈழத் தமிழரின் உரிமைகள் முழுதாய் மீட்டெடுக்கப்படும் போது, தாங்கள் விரும்புகின்ற ஆட்சியை அமைத்துக் கொள்ளும் அதிகாரத்தைப் பெறும் போது போர் முடிவுக்கு வரும்; அப்போது புலிகளின் ஆயுதங்களுக்கு வேலை இருக்காது.

ஆனால் முத்துக்குமாரே ஓரிடத்தில் ஆயுதங்களைக் கைவிடுவது பற்றிப் பேசுவார்; “சிங்களர்கள் தாங்கள் நேர்மையாக நடந்து கொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவதன் மூலமாக மட்டுமே போராளிகளை ஆயுதத்தைக் கீழே வைக்கச் செய்ய முடியும்” என்று கூறிவிட்டு அடுத்த வரியிலே “கடந்த கால அரசுகள் எவையும் அப்படிச் செயல்படவில்லை” என்பார். தட்லி சேனநாயகா – செல்வா ஒப்பந்தம் தொடங்கி குப்பைக்குக் கூட உதவாத இந்திய – இலங்கை ஒப்பந்தம் முடிய ஒப்பந்தங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டதே இலங்கை வரலாறு. சிங்களப் பேரினவாத அரசியலில் நேர்மை, நம்பிக்கை என்பனவற்றிற்கு இடமே கிடையாது. ஈழத் தமிழர்களும் அவர்களின் அரசியல் தலைமையான விடுதலைப் புலிகளும் இதை நன்கு அறிவர். தமிழக மக்களான நாமும் ‘நம்பிக்கை’ அரசியலில் சுவனத்தோடும் விழிப்போடும் இருக்க வேண்டும்.

இல்லையெனில் கருணாதிதி மன்மோகன் சிங்கை நம்பச் சொல்லுவார். மன்மோகன் சிங்கு இராசபக்குசேவை நம்பச் சொல்லி நம்மை நடுக்கடலில் கவிழ்த்து விடுவார்.

முத்துக்குமாரின் கடிதத்தில் ஒரு சிறு செய்திப் பிழையும் உள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் தாயகம் சீனா எனக் குறிப்பிடுகிறார். அவரின் பெயரும், அவரது தோற்றமும் முத்துக்குமாரிடம் தவறான மனப்பதிவை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் காரணமாய் பான் கீ மூன் தென் கொரியாவைச் சேர்ந்தவர் என்பது மறந்து போயிருக்கலாம். ஐ.நா பொதுச் செயலாளருக்கு இந்தியக் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு உள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. அவரால் சீனாவுக்கும் ஆதரவாய் இயங்க முடியாது. ஈழப் போரையோ அல்லது உலகில் நடைபெறும் எந்தப் போரையுமோ அவரால் தடுத்து நிறுத்த முடியாது. அமெரிக்காவின் தாளங்களுக்கேற்ப ஆட மட்டுமே முடியும்.

முத்துக்குமாரின் கடிதத்தைத் தமிழக இளைஞர்களும் மாணவர்களும் சரியான புரிதலுடன் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அவரின் இறுதி விருப்பத்தை அவர்கள்தாம் நிறைவேற்ற வேண்டும். தமிழ் நாட்டில் இன்று ‘சரியான தலைமை’ இல்லை என்ற அவரின் கவலை போக்கப்பட வேண்டும். அவரே குறிப்பிடுவதைப் போல ஈழத்திற்கு வாய்க்கப் பெற்ற “உன்னதத் தலைவன் நமக்கில்லையே என்ற ஏக்கம் வேண்டாம். இது போன்ற கையறு காலங்கள்தான் அப்படிப் போன்ற தலைவர்களை உருவாக்கும்.” இன்று இளைய தலைமுறையிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி வீணாகிவிடக் கூடாது. 1965இல் ஏற்பட்ட தவறு மீண்டும் நேர்ந்து விடக் கூடாது. சுயநலமிகள் கையில் மீண்டும் தலைமை சென்று விடக் கூடாது.

இளைஞர்கள் விழிப்பாய் இருக்க வேண்டும். உணர்ச்சியின் உந்தலில் இழுபட்டு திசைமாமறி விடாமல் கவனங்கொள்ள வேண்டும். உணர்ச்சி வேண்டும். ஆனால் அது அறிவு வழிப்பட்டதாய் அமைய வேண்டும்.

அதற்குக் கொள்கையில் தெளிவு வேண்டும். கொள்கைத் தெளிவு பெற அறிவியல் பார்வை வேண்டும். வள்ளுவர் சொன்ன மெய்ப்பொருள் காணும் தேடல் கைவரப் பெற வேண்டும். அடுத்து அக்கொள்கையை வென்றெடுக்கும் உழைப்பார்வம் வேண்டும். அதற்காகத் தன்னை ஈந்து கொள்ளும் ஈக உணர்வு (அர்ப்பணிப்பு) வேண்டும். குறிக்கோளைச் சென்றடைய ஒழுங்கமைவுடன் கூடிய அமைப்பாய் ஒன்றுதிரள வேண்டும். முத்துக்குமார் விரும்பும் “சரியான தலைமை” உருவாக இதுவே வழி.

கலை வேலு, தமிழ்த் தேசம் ஏட்டில் (2009 பிப்ரவரி)

தரவு: தாழி மடல் 84

++

என் சரித்திரம் 38: என் கல்யாணம்

 


ஃஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      28 May 2023      அகரமுதலt


(உ.வே.சா.வின் என் சரித்திரம் 37: சிதம்பர உடையார் – தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 22
என் கல்யாணம்

கல்யாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் மாளாபுரத்தில் நிகழ்ந்தன. பந்து சனங்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடினர். இரெயில் வண்டியின் வேகம், வண்டியின் வேகம் முதலியவற்றைக் கண்டறியாத அந்நாட்களில் கல்யாண ஏற்பாடு விரைவில் நடைபெறாது; மெல்ல மெல்ல நடைபெறும். கல்யாணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வேண்டிய காரியங்கள் ஆரம்பமாகிவிடும். ஒரு மாதத்துக்கு மேல் குடும்பம் கல்யாண முயற்சியில் ஈடுபட்டிருக்கும்.

இன்றும் அன்றும்

இக்காலத்திலோ எல்லாம் வேகம், முதல்நாள் கல்யாணம் நிச்சயமாவதும் மறுநாள் கல்யாணம் நடைபெறுவதும் மூன்றாம் நாள் கல்யாணம் நடைபெற்ற அடையாளமே மறைவதும் இந்த நாட்காட்சிகள். முகூர்த்த பத்திரிகையில் சம்பிரதாயத்திற்குக்கூட நான்கு நாள் முன்னதாக வரவேண்டுமென்று எழுதுவதில்லை. கல்யாணமே ஒரு நாளில் நிறைவேறும்போது விருந்தினர்கள் நான்கு நாள் வந்து தங்கி என்ன செய்வது?

அக்காலத்தில் ஒரு குடும்பத்தில் கல்யாணம் நடப்பதாயிருந்தால் ஒரு மாதத்துக்கு முன்பே சில பந்துக்கள் வந்து விடுவார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு பலர் வருவார்கள். வந்தவர்கள் தாங்கள் உபசாரம் பெறுவதில் கருத்துடையவர்களாக இருக்கமாட்டார்கள். தங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வலிந்து செய்வார்கள். பந்தற்கால் நடுவது, பந்தல் போடுவது, பந்தலை அலங்கரிப்பது முதல் கல்யாணமான பிறகு பந்தல் பிரிக்கும் வரையில் நடக்கும் காரியங்களில் ஊரினரும் கல்யாணத்திற்காக வந்தவர்களும் கலந்து உதவி புரிவார்கள். கல்யாண வீட்டின் அகலத்திற்குத் தெருவையடைத்துப் பந்தல் போடுவார்கள். பெண்மணிகள் சமையல் செய்தல், பரிமாறுதல், ஒருவரையொருவர் அலங்கரித்தல் முதலிய உதவிகளைச் செய்வார்கள். ஆதலின் வேலைகளைச் செய்வதற்காக வேறு மனிதர்களைத் தேடி அலைய வேண்டிய சிரமம் இராது. எல்லோரும் சேர்ந்து ஈடுபடுவதனால் எவரும், “எனக்கு உபசாரம் செய்யவில்லை” என்று குறைகூற இடமிராது. ஆயினும் சம்பந்திகளுக்கிடையே மனத்தாபம் நேர்வது எங்கும் இருந்தது. கல்யாண மென்றால் சம்பந்திச் சண்டையும் ஒரு நிகழ்ச்சியாக ஏற்பட்டுவிட்டது.

கிராமத்தாருடைய ஒற்றுமையும் உபகார சிந்தையும் கல்யாணத்தைப் போன்ற விசேட காலங்களில் நன்றாக வெளிப்படும். பணச்செலவு இந்தக் காலத்திற்போல அவ்வளவு அதிகம் இராது. இக்காலத்திற் செலவுகளுக்குப் புதிய புதிய துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. உணவுவகைகளில் இப்போது நடைபெறும் செலவைக்கொண்டு அக்காலத்திலும் கல்யாணங்கள் பலவற்றை நடத்திவிடலாம். கிராமங்களில் விளையும் காய்கறிகளும் பழவகைகளும் விருந்துக்கு அக்காலத்தில் உபயோகப்பட்டன. இப்போதோ, இங்கிலீசு பெயரால் வழங்கும் காய்கறிகளும் இந்துத்தானிப் பெயரால் வழங்கும் பட்சிய வகைகளும் மேல்நாட்டிலிருந்து தகரப்பெட்டிகளில் அடைத்துவரும் பழங்களும் கல்யாண விருந்துக்கு இன்றியமையாத பொருள்களாகி விட்டன. மற்ற விசயங்களில் பல தேச ஒற்றுமை தெரியாவிட்டாலும் பணம் செலவிட்டு வாங்கும் பொருள்களில் பல நாடுகளும் சம்பந்தப்படுகின்றன.

ஊர்வலம் நடத்துவதில் எத்தனை செலவு! மோட்டார் வாகனத்தையே புட்பவாகனமாக மாற்றிவிடுகின்றனர்! சில மணிநேரம் புறத்தோற்றத்தை மாத்திரம் தரும் அந்த வாகனத்திற்கு எவ்வளவு அலங்காரங்கள்! எவ்வளவு பேருடைய உழைப்பு! கோவில்களில் உத்சவ மூர்த்திகளுக்குச் செய்யும் புட்பாலங்காரம் கல்யாணத்திற் செய்யப்படுகின்றது! அதற்கு மேலும் செய்கிறார்கள்.

இவ்வளவு செலவு செய்து நடைபெறும் கல்யாணத்தில் விருந்தினர்கள் வருவதும் போவதும் வெறும் சம்பிரதாயமாகிவிட்டன. கல்யாணம் எல்லாம் நிறைவேறிய பிறகு கணக்குப் பார்க்கும்போது தான் வயிறு பகீரென்கிறது. சந்தோசத்தை மேலும் மேலும் உண்டாக்க வேண்டிய கல்யாணமானது சில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் பணச்செலவு காரணமாகக் கடனையும் அதனால் துன்பங்களையும் விளைவிக்கின்றது. கல்யாணத்தாற் கட்டத்தை விலைக்கு வாங்கிக்கொண்ட குடும்பங்கள் இத்தமிழ் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.

அக்காலத்தில் சிலவகையான செலவுகள் குறைந்திருந்தன. முதல்நாள் நிச்சயதாம்பூலம் வழங்கப்பெறும். முதல்நாள் இரவு கல்யாணம் சொல்வதும் மாப்பிள்ளையை அழைப்பதும் அவை காரணமாக நேரும் செலவுகளும் பெரும்பாலும் இல்லை. கல்யாணத்திலும் பந்தற் செலவு, பூரி, தட்சணை, மேளம் முதலிய செலவுகளில் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் பாதிப்பாதி ஏற்றுக்கொள்வார்கள். நான்காம் நாள் நடைபெறும் கிராமப் பிரதட்சணச் செலவு முழுவதும் பிள்ளை வீட்டாருடையது.

போசனக் கிரமம்


காலையில் காப்பி என்பது அக்காலத்தினர் அறியாதது. துவரம்பருப்புப் பொங்கலும் பரங்கிக்காய்க் குழம்புமே காலை ஆகாரம்; கருவடாம், அப்பளம், வற்றல்கள் இவை அந்த ஆகாரத்துக்குரிய வியஞ்சனங்கள். சிலர் பழையதும் உண்பதுண்டு. ஆண்டில் இளைய பெண்மணிகளும் அவற்றை உண்பார்கள். பிற்பகலில் இடைவேளைச் சிற்றுண்டி உண்ணும் வழக்கமும் அக்காலத்தில் இல்லை. குழந்தைகள் பசித்தால் அன்னம் உண்பார்கள். மத்தியான விருந்துக்குப் பின் இராத்திரிப் போசனந்தான். பன்னிரண்டு மணிக்குப் பிறகே பகற்போசனம் நடைபெறும். பெரியவர்கள் தாங்கள் செய்யவேண்டிய பூசை முதலியவற்றை நிறைவேற்றிய பின்பே இலை போடுவார்கள். எல்லாரும் ஒருங்கே உண்பார்கள். இக்காலத்தைப்போல வந்தவர்கள் தங்கள் தங்கள் மனம் போனபடி எந்த நேரத்திலும் வருவதும் உள்ளே சென்று இலை போடச்செய்து அதிகாரம் பண்ணுவதும் இல்லை. அப்பளம், ஆமவடை, போளி என்பவையே அக்காலத்துப் பட்சியங்கள்.

கல்யாணம் நடைபெறும் நான்கு நாட்களிலும் ஒவ்வொரு வேளையிலும் போசனத்திற்கு ஊரிலுள்ள எல்லாரையும் அழைப்பார்கள். யாவரும் குறித்த நேரத்தில் வந்துவிடுவார்கள்.

நலங்கு முதலியன

காலை, மாலை நடக்கும் ஊஞ்சலிலும் பிற்பகலில் நடைபெறும் நலங்கு முதலிய விளையாட்டுகளிலும் பெண்மணிகள் குதூகலத்துடன் ஈடுபடுவார்கள். முதிர்ந்த பிராயமுடையவர்கள் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு பார்த்துக் களிப்பார்கள். பெண் கட்சியிற் பாடுபவர்களும் பிள்ளையின் கட்சியிற் பாடுபவர்களும் வழக்கமாகப் பாடிவரும் கிராமப் பாட்டுக்களைப் பாடுவார்கள். பெரும்பான்மையான பாட்டுக்கள் தமிழாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் பன்னாங்குப் பல்லக்கில் (வளைவுப் பல்லக்கில்) ஊர்வலம் நடைபெறும். கடைசிநாள் ஊர்வலத்தில் மத்தாப்பும் சீறுவாணமும் விடுவார்கள். சிறுபிள்ளைகளே அவற்றை விடுவார்கள். ஊர்வலத்தின்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தாம்பூலம் அளிப்பார்கள். ஒரு வீட்டிலுள்ள குடித்தனத்திற்கு ஏற்றபடி கொட்டைப் பாக்கைக் கணக்குப் பண்ணிப் போடுவார்கள். அதற்குத் திண்ணைப் பாக்கு என்று பெயர். அதனை வழங்காவிட்டால் வீட்டுக்காரருக்குக் கோபம் வந்துவிடும். முகூர்த்த காலத்தில் பழமும் வெற்றிலைபாக்கும் தருவார்கள். மரியாதைக்கு ஒரு மஞ்சள் பூசிய தேங்காயைத் தாம்பாளத்தில் வைத்திருப்பார்கள். தாம்பூலத்தைப் பஞ்சாதி சொல்லிக் கொடுப்பார்கள். கொடுக்கும்போது மஞ்சள் தேங்காயைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள். தேங்காயை எடுத்துக்கொள்ளும் வழக்கமில்லை. உபநயனத்தில்தான் ஒவ்வொருவருக்கும் தேங்காய் வழங்குவது பெரும்பான்மையான வழக்கம். சிறுபையன்கள் கொட்டைப்பாக்குகளை ஒருவரும் அறியாமல் திருடிக்கொண்டுபோய் மாம்பழக்காரியிடம் கொடுத்து மாம்பழம் வாங்கித் தின்பார்கள். இந்தக் கொட்டைப்பாக்கு வியாபாரத்தை எதிர்பார்த்தே சில மாம்பழக்கூடைக்காரிகள் கல்யாண வீட்டுக்கு அருகில் வந்து காத்திருப்பார்கள்.
நான்காம் நாள் இரவில் நடைபெறும் ஆசீர்வாதத்திற்குப் பந்துக்களிலும் ஊரினரிலும் அனைவரும் வரவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால் பெரிய மனத்தாபங்கள் நேரும். அதனால் சிலர் வரவை எதிர்பார்த்து ஆசீர்வாதத்தைத் தாமதப்படுத்துவார்கள்.

விநோத நிகழ்ச்சிதான்

எனக்கு அப்போது பதினான்காம் பிராயம் நடந்து வந்தது. கல்யாணப் பெண்ணின் பிராயம் எட்டு. கல்யாணப் பெண்ணைக் கல்யாணத்திற்கு முன்பு பிள்ளை பார்ப்பதென்ற வழக்கம் அக்காலத்தில் பெரும்பாலும் இல்லை. எல்லாம் பெரியவர்களே பார்த்துத் தீர்மானம் செய்வார்கள். நான் கல்யாணப்பெண்ணை அதற்குமுன் சாதாரணமாகப் பார்த்திருந்தேனேயன்றிப் பழகியதில்லை; பேசியதுமில்லை. எங்கள் இருவருக்கும் கல்யாணம் ஒரு விநோத நிகழ்ச்சியாகத்தான் தோன்றியது. எங்களுக்கு உண்டான சந்தோசத்தைவிட அதிகமான சந்தோசம் எங்களை ஆட்டிவைத்து வேடிக்கை பார்த்த விருந்தினர்களுக்கு உண்டாயிற்று.

(தொடரும்)

என் சரித்திரம், .வே.சா


அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages