கண்ணன் நடராசன், அருமையான ஓர் எழுத்தாளரை நினைவு படுத்தினீர்கள். நன்றி. திரு A V சுப்ரமணியன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு முறை கூறினார். சாலையோரப் புத்தகக் கடையொன்றில் தாம் ஏதோ நூலைத் தேடிக்கொண்டிருந்த பொழுது, பி ஸ்ரீ யின் நூல் ஒன்று கிடைத்தது என்றும், தம்மையறியாமலேயே அது கிடைத்த மகிழ்ச்சியில் 'ஆஹா' என்று தனக்குள் மகிழ்விளி கிளப்பவும், பக்கத்தில் இருந்த ஒருவர், 'என்ன சார் பி ஸ்ரீ பெரிய எழுத்தாளரா? அவருக்குப் போய் இவ்வளவு ஆர்வம் காட்டறீங்க?' என்று அலுத்துக் கொள்ள தமக்கு வந்த கோபத்தில், 'உமக்கு முதலில் பொது இடத்தில் நடந்துகொள்ளும் பண்பே தெரியவில்லை. யாரோ முன்பின் அறிமுகமில்லாத மனிதனிடம் அவனுடைய தனிப்பட்ட விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டு விமர்சிக்கிறீர்! சரி அது போகட்டும். உமக்குத் தமிழ் இலக்கியம் ஏதாவது பரிச்சயம் உண்டா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இருந்தால் பி ஸ்ரீ யைப்பற்றி இப்படி அக்கறையற்ற பேச்சு வந்திருக்காது' என்று பொறிந்து தள்ளிவிட்டார் திரு AVS.
இவர் திட்டத் திட்ட மகிழ்ந்துபோன நபர், 'அட! இவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறீரா? என்ன உவகை! நான்தானய்யா அந்த பி ஸ்ரீ என்றாராம்.'
முதுமையில் பழுத்து இருக்கும் திரு AVS வடமொழியிலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் தேர்ந்த எழுத்தாளர். ரயில்வேயில் உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். நூற்றுக்கணக்கான நூல்களின் ஆசிரியர்.
- பேச்சாளராக
- எழுத்தாளராக
- உரையாசிரியராக
- பதிப்பாசிரியராக
- விமர்சகராக
- வரலாற்று ஆசிரியராக
- பத்திரிகை ஆசிரியராக
- சமயாச்சாரியராக
- திறனாய்வாளராக
இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர் பி.ஸ்ரீ.. என்று இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பி.ஸ்ரீ.ஆச்சார்யா.