(வெருளி நோய்கள் 489-493: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 494-498
எதிரொளிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிரொளிப்பு வெருளி.
கண்ணாடி தவிர, நீர்ப்பகுதி, பளபளப்பான பகுதி முதலிய பிறவற்றில் எதிரொளிப்பது குறித்து மிகை பேரச்சம் கொள்கின்றனர்.
00
எதிர்காலம் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது எதிர்கால வெருளி.
பேரிடர், நேர்ச்சி போன்றவற்றால் யாரையோ எதையோ இழந்தவர்களுக்கு எதிர்கால வெருளி மிகுதியாக வருகிறது.எதிர்காலம்பற்றிய அச்சம், நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கையின்மை போன்றவற்றால் எதிர்கால வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
எதிர்ம எழுது பலகை(boogieboard) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எழுது பலகை வெருளி.
எதிருரு ஒளிர்வுக் காட்சி முறையில் எழுதப்பெறும் பலகையே இங்கு எதிர்ம எழுது பலகை எனக் குறிக்கப் பெறுகிறது.
அலை பலகையும் ‘Boogieboard’ என அழைக்கப்பெறுகிறது.
00
எதிர்மறை எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிர்மறை எண் வெருளி.
இலத்தீனில் negans என்றால் எதிர்மறை, numerus என்றால் எண் எனப் பொருள்.
00
எந்திரங்கள்/இயந்திரங்கள் குறித்த தேவையற்ற அச்சம் எந்திர வெருளி.
எந்திரங்களை விழிப்புடன், எச்சரிக்கையுடன் கையாளாமல் எந்திரத்தில் கை, கால் சிக்கி விடுமோ, எந்திரத்தால் இடர் வருமோ, இன்னல் வருமோ, உறுப்பு இழப்பு வருமோ, உயிருக்குக் கண்டம்/ஆபத்து வருமோ என்றெல்லாம் தேவையற்று அஞ்சுவோர் சிலர் உளர்.
mechano என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எந்திரம் / இயந்திரம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 2/5
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference Call – பன்முகஅழைப்பு : தொடர்ச்சி)
‘என’, இனி’ அடுத்து வல்லினம் மிகும்
. .என தெரிவிக்கிறேன்’
என்று உள்ளது
“என’ என்னும் இடைச்சொல் அடுத்து வல்லின எழுத்து மிகுதியாய் வரவேண்டும். இவ்வாறு அடிக்கடி வருமிடங்களை நினைவில் கொண்டால் தவறின்றி எழுதலாம்.
எனத் தெரிவிக்கிறேன்
எனக் கூறினான்
எனச் சொல்லேன்
எனப் படிக்க வேண்டும்
எனத் திட்டமிடு
எனத் தெளிவாகக் கூறு
எனத் தெரிவித்துக் கொள்கிறேன்
எனப் பாராட்டினார்
எனக் குறிப்பாணையில் குறிக்கப்பட்டுளளது
எனச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனப் பெருந்தலைவர் தெரிவித்தார்
எனக் கேட்டார்
எனப் பார்த்தேன்
எனச் சொன்னார் எனச் சொல்லப்பட்டது
எனப் ‘பிரதமர்’
எனத் தலைமையமைச்சர்
எனப் பாதுகாப்பு அமைச்சர்
எனத் துறைத் தலைவர்
எனத் துறைத் தலைமைக் கண்காணிப்பாளர்
எனத் திட்டவட்டமாக
எனத் தகவல்
எனப்பொதுப்பணித்துறை அமைச்சர்
எனக் கல்வியமைச்சர்
எனச்சொன்ன உயர்நீதிமன்றம்
எனச் சிந்திக்க வேண்டும்.
இவற்றின் அடிப்படையில் என்பதை என்னும் சொல்லிற்கு அடுத்து வல்லினம் மிகும்
இச்சொல் அடிக்கடிச் செய்திகளில் இடம் பெறுவதால் நினைவில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
என்பதைத் தெரிவிக்கிறேன்
என்பதைக் கேட்டுக் கொள்கிறேன்
என்பதைப் பாராட்டினார்
என்பதைச் சொன்னார்
என்பதைப் பகர்ந்தனர்.
இதைப்போல் “இனி’ என்னும் இடைச்சொல்லிற்குப் பின்னும் வல்லினம் மிகும்.
இனிக் கடிந்து பேசாதே
இனிச் சரியாகச் செய்
இனித் திட்டமிட்டுச் செயலாற்று
இனிப் பாடலாம்
இனிப் பின்பற்ற வேண்டும்
இம்முகவரியில்
பெரியக்குளம்
எனக் குறிக்கப்பட்டுள்ளது தவறாகும்.
பெரியகுளம் என்பதே சரி
சிறிய. பெரிய. சிறு என்பனவற்றின் பின் வல்லினம் மிகாது.
சிறிய திட்டம் சிறுசேமிப்பு
சிறு பாசனம் சிறு பேழை
பெரிய பதவி பெரிய குடிசை
சிறு கடை பெரிய துறை
சிறு பெட்டிக்கடை சிறு தெய்வ வணக்கம்
பெரிய பண்ணை
பெரிய தொல்லை
என்பன போல் வரும்.
இவைபோல் நல்ல. கெட்ட என்பவற்றின் பின்னும் வல்லினம் மிகாது
நல்ல தலைமைநல்லதிட்டம்
நல்ல புத்தகம் கெட்ட கனவு
நல்ல பாம்பு நல்ல பயிர்
நல்ல துறை கெட்ட குவளை
காசாளரோ அல்லது கணக்கரோ பொறுப்பேற்க வேண்டும் என இவ்வலுவலக ஆணையில் உள்ளது.
இங்கு “ஓ’ அல்லது என்னும் பொருளில் கையாளப்படுகிறது. எனவே அல்லது என்பதைச் சேர்க்க வேண்டா.
காசாளரோ கணக்கரோ பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டால் போதும். இல்லையேல்இ “காசாளர் அல்லது கணக்கர் பொறுப்பேற்க வேண்டும்’
எனல் வேண்டும்
எனவே.
செயலரோ துணைச் செயலரோ
ஊதிய விடுப்போ ஊதியபின் விடுப்போ
மாற்றுப் பணியிலோ பசுரப் பணியிலோ
தட்டச்சரோ சுருக்கச்சரோ
இசைவுடனோ இசைவின்றியோ
ஆசிரியப் பணியாளரோ ஆசிரியரல்லாப் பணியாளரோ
பிணையிலோ பிணையின்றியோ
ஊதியத்துடனோ ஊதியமின்றியோ
என “அல்லது’ என இடையில் சேர்க்காமல் குறிப்பிடுவது முறையாகும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்