புலிகாட் - பழவேற்காடு
----------------------------------------------------------------------------------------------
‘என்னங்க இது, இங்க புலியையும் காணோம், காட்டையும் காணோம், வெறும்
தண்ணியும் , பழைய கோட்டையும் இருக்கு,எதுக்கு இதுக்கு"புலிகாட்”ன்னு
பேரு வச்சாங்க?'-, புலிக்காட் ஏரிக்கு சுற்றுலா வந்த பெரியவரின்
கேள்வியில் நியாயம் இருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய(உப்பு நீர்)ஏரி , ஒடிஷாவில் இருக்கும் "சில்க்கா"
ஏரி தான். அடுத்தது நம் புலிக்காட் ஏரி. கடற்கரையோரம், தமிழகத்திற்கும்
ஆந்திராவிர்க்கும் இடையே உள்ள எல்லை இந்த ஏரிதான். அறுபது கி. மி. நீளம்.
அதிகபட்ச்சமாக பதினேழு கி.மி. அகலம். உயர் ஓத நேரங்களில் ஏரியின்
பரப்பளவு நானூற்று ஐம்பது கி.மி., தாழ் ஓத நேரங்களில் இது இருநூற்றி
ஐம்பது சதுர கி.மி. யாகக் குறைந்து விடுகிறது. அதிகபட்ச ஆழம் பத்து மீ.
சராசரி ஆழம் ஒரு மீ. ஏரியின் தென்பகுதியில் உள்ள ஊரின் பெயர்
"புலிகாட்". ‘சர்வே ஆப் இந்தியா’ வரைபடத்தில் அடைப்புக்குறிக்குள்
'பழவேற்காடு ' என்று போட்டிருக்கிறார்கள்.
வேல மரங்கள் நிறைந்த பகுதி -ஆதலின்
"வேலங்காடு"-"வேல்காடு"-"வேற்காடு"-"பழைய வேற்காடு" பழவேற்காடு" என
வந்திருக்கலாம்.
மாறாக இந்த ஏரியில் மேற்கொள்ளப்பட்ட தொல் மகரந்த ஆய்வுகள்(palynology)
இங்கே சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ' சதுப்பு நிலக்காடுகள்" இருந்ததை
உறுதி செய்கின்றன.சதுப்பு நிலக்காடுகளில் பூமிக்கு வெளியே வேர்கள் பல
நீட்டிக்கொண்டிருக்கும்.ஆதலால், "பலவேர்காடு"-"பழவேற்காடு"
ஆகியிருக்கலாம்.
. சதுப்பு நில மரங்களில், பழம் கீழே விழும் முன்னரே அதில் வேர்
உருவாகிவிடும். (இல்லையெனில் பழம் கீழே நீரில் விழுந்து, அழுகிவிடும்.
பழத்திலே வேர் உருவாகி விடுவதால் , வேர் பூமியில் குத்தி, செடி
முளைக்கும். இனம் பெருகும். இவையெல்லாம் இயற்கை தந்த வரங்கள்.) எனவே “பழ
வேர் காடு" என வந்திருக்கலாம்.
"பிரளய காவேரி"-இந்த பகுதிக்கான தெலுங்கு பெயர். ஆனால் அதற்கும்
"பழவேற்காடு" என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே தோன்றுகிறது.
சரி, "பழவேற்காடு" எப்படி "புலிக்காட்" ஆனது. அல்லது இதற்கு வேறு ஏதேனும்
‘வேர்’ இருக்கிறதா? நாளை பார்ப்போம்.