(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-16 தொடர்ச்சி)
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17 (மழைமானி)
கட்டடச் சிறப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கட்டடக்கலையுடன் பிற அறிவியல் துறைகளின் சிறப்பும் இணைந்து விளங்குவதையும் காண்கிறோம். அத்தகைய அறிவியல் செய்தியில் ஒன்று, உயர்ந்த கட்டடங்களில் மழை அளவை அறிவதற்காக மழைமானியைப் பொருத்தி இருந்துள்ளனர் என்பதாகும்.
கிரேக்கத்தில் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் மழைஅளவைப் பதிந்து வைத்ததாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன. அதற்குப் பின்னர் கி.பி.நூற்றாண்டுகளில், கொரியா அல்லது சீனாவில் மழையை அளப்பதற்கான அளவி ஒன்றை (rain gauge) உருவாக்கியதாகவும் கூறுவர். தொடர்ந்து 1662 இல் கிறிசுடோபர் ரென் (Christopher Wren) என்னும் அறிவியலறிஞர் முதலில் வாளியக மழைமானியைக் (tipping-bucket rain gauge) கண்டுபிடித்தார். மழை வளைமானி (udometer), என்பனபோல் பல்வகை மழைமானிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை எல்லாம் பேரளவினதாகவே இருந்தன. சைமன் (George James Symons) என்னும் அறிவியலறிஞர் 1863 இல் பிரிட்டன் வானிலை ஆராய்ச்சிக் கழகத்திற்குத் (British meteorological society) தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து 1890 வரை மைக்கேல் பாசுடர் வார்டு (Colonel Michael Foster Ward) என்பார் துணையுடன் தரப்படுத்தப்பட்ட எளிய மழைமானியை உருவாக்குவதற்காகப் பல்வகை ஆய்வுகளை மேற்கொண்டார். இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இப்பொழுது பயன்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட எளிய மழைமானி உருவாக்கப்பட்டது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே மழையை அளப்பதற்கான சிறிய கருவியை – மழைமானியைப் பழந்தமிழர் பயன்படுத்தி உள்ளனர்; அவற்றை உயரமான வீடுகளிலும் பொருத்தி இருந்துள்ளனர் என்பது சிறப்பான வானிலைஅறிவியல் செய்தி அல்லவா?
கட்டடங்கள் அமைக்கும் பொழுது நீண்ட முடியை உடைய கவரிமான் (நெடுமயிர் எகினம்), குறுங்கால்களை உடைய அன்னம் ஆகியவை தாவித்திரியும் அகன்ற பரப்பு உடையதாக வாசலின் முகப்பில் முன்னிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஆசிரியர் நக்கீரனார்,
நெடுமயி ரெகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோடு உகளும் முன்கடை(நெடுநல்வாடை : 91-92)
என்கிறார்.
கட்டடத்தின் மண்தள முகப்பைக் கூறும் ஆசிரியர் அதன் உயர் பரப்பான மேல்நிலை முற்றத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.
நிலவுப்பயன் கொள்ளும் நெடுவெண் முற்றத்துக்
கிம்புரிப் பகுவாய் அம்பணம் (நெடுநல்வாடை : 95-96)
இவ்வரிகள் மூலம், நெடிய மாடியின் உயர்தளமாக, வெண்ணிலவின் ஒளியில் மகிழும் வண்ணம் அமைக்கப்பட்ட நிலா முற்றத்தில் (மொட்டைமாடியில்) மீனின் வாய்போன்று பகுக்கப்பட்டு-பிளக்கப்பட்டு- அமைக்கப்பட்ட அம்பணம் என்னும் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார். (இதில் நிறைந்து வழிந்து கீழே விழும் மழைநீர் ஓசை அருவி ஓசைபோல் இனிமையாய் இருப்பதைக் கூறுவதற்காக இதனை இந்த இடத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் நக்கீரனார்.)
ஆமைவடிவில் உள்ள முகத்தல் அளவைக் கருவிக்கு அம்பணம் என்று பெயர். அந்த அளவில் சிறியதாக உள்ள மழைமானிக்கும் அம்பணம் என்று பெயரிட்டுள்ளனர். எனவே, பிற நாட்டார் தொட்டி, வாளி போன்ற அளவில் மழை நீர் சேர்த்து மழை அளவை அறிந்திருந்த காலத்திற்கு முன்னரே நம் தமிழ் முன்னோர், சிறிய அளவிலான மழைமானியைப் பயன்படுத்தி உள்ளனர் என்பதும் அதனை உயரமான வீடுகளில் பயன்படுத்தும் வண்ணம் பொதுமக்களும் அதன் பயன்பாட்டு முறையை அறிந்திருந்தனர் என்பதும் கட்டடக் கலையுடன் இணைந்த வானிலை ஆராய்ச்சி அறிவியல் கலையாகிறது. கணந்தோறும் மாறும் வானிலையையும் ஆராய்ந்தறிந்த வண்டமிழர் வஞ்சகர் மனநிலையை அறியாமல் நம்பக்கூடாதவர்களை நம்பி அழிந்து கொண்டுள்ளனரே! என்னே அவலம்!
இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு 05.05.2011
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 86
அதே நேரம் இந்து மதம் என்பது குறித்த சிக்கலையும் பார்க்க வேண்டும். தமிழர்கள் இந்துக்கள் அல்லர். வடக்கே இருந்த ஆரியச் சமயத்தில் ஆட்கொள்ளப்பட்டார்கள். எனவே வடக்கே இருந்த இந்து சமயமாகத் திரிக்கப்பட்ட ஆரிய/இந்து சமயத் தவறான கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மீதும் ஏற்றப் பெற்றன. எனவே, இவர்களைத் தமிழர் சமயத்தவர் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் இந்து வேறு தமிழர் சமயம் வேறு என்று சொல்லி விடுவார்கள். எனவே, வட இந்து என்றும் தமிழ் இந்து அல்லது தென்னக இந்து என்றும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு சொன்னால்தான் தென்னிந்துக்களுக்கு வட இந்துக்களின் சனாதனம் பிடிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். தென்னிந்துக்களுக்குக் கடவுள் ஒன்றே, ஆனால், பல்வேறு உருவங்களாக வரையறுத்து வணங்குகின்றனர், பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் உதவ வேண்டும், அன்னதானம் அனைவருக்குமே அல்ல, பிராமணர்களுக்கு மட்டும் என்னும் வட இந்துக்கொள்கை இவர்களுக்கு உடன்பாடில்லை, இல்லாதவர்க்கு உதவ வேண்டும் என்பது தென்னவர் கொள்கை, பிராமணர்க்கு மட்டுமே உதவ வேண்டும் என்பதே வடவர் கொள்கை. எனவே வட இந்துக் கொள்கை எதிர்ப்பாளர்களை ஒட்டு மொத்த மத எதிர்ப்பாளர்களாகச் சிலர் கருதுகிறார்கள். வடவர் என்பதை வட இந்துவில் மேலாதிக்கம் கொண்ட பிராமணர் என்றே தெளிவாக அறிய வேண்டும். தென்னவர் கொள்கை என்பது தமிழ் நெறி. எனவே, இந்து மதத்தில் உள்ள இந்த முரண்பாடும், தென்னவருக்கு இருக்கும் ஒத்துப்போதல் உணர்வும் வெளிப்படையான எதிர்ப்பிற்குத் தடையாக உள்ளது. ஆனால் இவற்றில் சீர்திருத்தம் வேண்டும் எனக் கருதுபவர்களும் நல்லிணக்க உணர்வாளர்களும் மதப் பகைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். அதேபோல்தான் சனாதனக் கேடுகளைச் சுட்டிக்காட்டும் மத நம்பிக்கையாளர்கள், இந்து மதப்பகைவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.
தமிழர்கள் மட்டுமல்லர். இந்துவாகத் திணிக்கப்பட்ட மண்ணின் மதத்தினருக்கும் சனாதனம் என்பது விரும்பாத ஒன்றே. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சீக்கியம், பிற அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் இந்து சமயம் என்பதற்குள் இந்திய அரசு அடக்கி விட்டது. இவற்றுள் ஆரியத்தை எதிர்க்கும் பெளத்தம் முதலியவற்றையும் அடக்கியதுதான் விந்தை. முசுலிம், கிறித்தவர், பார்சி அல்லது யூதர் அல்லாத ஒவ்வொருவரும் சட்டப்படி இந்து ஆவார் என்பதுதான் கொடுமை. இவ்வாறு இந்துவாகத் திணிக்கப்பட்ட இவர்களில் பெரும்பான்மையருக்குச் சனாதனத்தின் மீது வெறுப்புதான் உள்ளது. எனவே, சனாதன எதிர்ப்பு இந்தியா முழுமையும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. எனினும் இந்துக்களாகவே அறிமுகப்படுத்தப்பட்டு வாழும் புதிய தலைமுறை யினருக்குச் சனாதனம் குறித்து விருப்போ வெறுப்போ இல்லை.
தவறாக வரையறுக்கப்பட்டவாறு சனாதனம் என்பதை இந்து எனக் கருதாமல் பார்த்தால் சனாதன எதிர்ப்பு என்பது மத எதிர்ப்பு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, நாட்டுச் சமயங்களை உரியவாறே குறிக்கவும் எல்லாரையும் இந்துக்களாகக் காட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசியல் யாப்பு திருத்தப்பட வேண்டும்.
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 120-122